Friday 9 October 2020

வரலாற்றுத் தலைவர்கள் வரிசை 15: பவானி சென்

 

நமது பெரும் தலைவர்கள் வாழ்விலிருந்து :

சில சித்திரத் சிதறல்கள் -15



பவானி சென் : கம்யூனிஸ்ட் இயக்கம் கட்டிய தலைவர்

--அனில் ரஜீம்வாலே

(நியூ ஏஜ் செப்.27 –அக்.3, 2020)

                பவானி ஷங்கர் சென்குப்தா 1909ம் வருடம் ஜனவரி 26ம் நாள் தற்போது பங்களாதேசம் பைரவ் ஆற்றுப்படுகையில் அமைந்த பைகிராம் கிராமம், தானா பௌல்தோலா, கௌல்னா மாவட்டத்தில் பிறந்தார். மிகவும் ஏழையான குடும்பம், தந்தை ஹர்ஷித் சென்குப்தா, தாய் நளினிபாலா. தொடக்கக் கல்விக்குப் பிறகு 13 வயதில் 20 கி.மீ. தொலைவில் இருந்த தனது அத்தை கிராமமான  மூல்தார் சென்றார்; 1921ல் ஹராரியா உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார்.

அரசியல் செயல்பாடுகளின் தொடக்கம்

            அது ஒத்துழையாமை இயக்கம் நடந்த நேரம்.  மக்களின் தேசிய உணர்வைக் கைத்தறியும், நூல் நூற்கும் ராட்டைச் சக்கரமும் பெரிதும் உசுப்பிவிட்ட தருணம். ஒவ்வொரு ஞாயிறும் ‘ஹிட் சாதன் சமிதி’ (மக்கள் நலவாழ்வு சங்கம்) இயக்கத்தின் தன்னார்வத் தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று ‘பிக்க்ஷை’ (பிச்சை – ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி –திருப்பாவை) எடுத்து வருவார்கள் – அதில் சிறுவன் பவானியும் ஒருவன். அந்தப் பணியில் பவானி சென்னுக்கு அலாதி ஆனந்தம். சர்க்காவில் நூல் நூற்பதில் தேர்ந்த பவானிசென் 1926ல் நூற்கும் போட்டியில் பரிசும் வென்றுள்ளார்.  

            1929ல் கௌல்னா மாவட்டத்தின் அரசியல் மாநாடு மூல்தாரில் நடைபெற்றது. தேசபந்து சிஆர் தாஸ் வரமுடியாத நிலையில் அவருக்குப் பதில் வீரேந்திரநாத் சஸ்பால் கலந்து கொண்டார். “உண்மையில் இந்தப் பொழுது, இத்தருணத்திலிருந்து புரட்சியாளர்கள் குழுவில் நான் சேர்ந்து விட்டேன்” என்பது பவானி சென்னின் வார்த்தைகள்.

            புரட்சியாளர்களின் ‘ஜெய்சொர்- கௌல்னா குழு’வைச் சேர்ந்த பிரமத் பௌமிக் உடன் பவானி, நிர்மல் தாஸ் மூலம், தொடர்பு கொண்டார். அந்தக் குழு டாக்டர் பூபேந்திரநாத் தத் அவர்களின் தாக்கத்தில் மார்க்சியத்தின் பக்கம் நின்று செயல்பட்டது. அது 1925ல், பின் 1927ல் மூல்தார் உயர்நிலைப் பள்ளியிலிருந்து மெட்ரிக் தேறிய பவானி சென், கல்வி உதவித்தொகை (ஸ்காலர்ஷிப்) பெற்று இந்து அகாதமியில் இன்டர்மீடியட் சேர்ந்தார். அங்கே அவருக்கு இலவச உணவு, விடுதி மற்றும் பள்ளிக் கட்டணத்திலிருந்து விலக்கும் கிடைத்தது.

            இதனிடையே அவர் லெனின், ட்ராட்ஸ்கி, (பலதுறைகளில் சிறப்புற்று விளங்கிய ஆங்கிலேயக் குடும்பமான) போஸ்ட்கேட், எம்என் ராய் முதலானோர்களின் நூல்களைப் படித்தார். பிற்காலத்தில் பங்களாதேசத்தின் புகழ்பெற்ற விவசாயச் சங்க (கிஸான்) தலைவராக விளங்கிய விஷ்ணு சாட்டர்ஜியுடன் தொடர்பு ஏற்பட்டது.

            இன்டர்மீடியட் தேர்வில் தேறிய பிறகு கல்கத்தா சென்று ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் பொருளாதார (ஹார்னர்ஸ்) பட்டப்படிப்பில் சேர்ந்தார். கல்லூரியிலும் ஸ்காலர்ஷிப் கிடைத்தது. அப்போது சிட்டகாங் ஆயுத கிடங்கு சூறையாடல் பின்னணியில் பிரமத் தலைமறைவானார். பவானியோ பிஏ இளங்கலை தேர்வுகளுக்குத் தயாராகி வந்தார். அவரை இரகசியமாகச் சந்தித்த பிரமத், பவானி சென்னை தொழிற்சங்கங்களிலும் கம்யூனிஸ்ட் கட்சியிலும் சேர்ந்து பணியாற்ற ஆலோசனை கூறினார்.

            1929ல் தொடரப்பட்ட மீரட் சதி வழக்கில் 32 தலைவர்கள் கைதாயினர். அப்போது வெளியிலிருந்த BTரணதிவே மற்றும் சில தலைவர்களைப் பவானி தொடர்பு கொண்டார். பவானி சென்னுக்கு அவரையும் அவரது சகாக்களையும் ஏனோ பிடிக்கவில்லை. 1932 மே 22ம் நாள் கைதான பவானி அலிபூர் மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டு, அடுத்த ஆண்டு 1933 பிப்ரவரி வரை அந்தச் சிறையில் இருந்தார். பின்னர் ஹிஜ்லி முகாமிற்கு மாற்றப்பட்டார். அங்கே ஜெய்சொர் –கௌல்னா குழுவின் (ஜெய்சொர், பங்களாதேசத்தின் ஒரு மாவட்டம், கௌல்னா இன்னொரு மாவட்டம்) பழைய தோழர்களைச் சந்தித்தார்; அக்குழுவில் பவானி கம்யூனிஸ்ட்களின் ஆதரவு குரலானார். அங்கே மார்க்சியம் குறித்து மிகவும் சூடான விவாதங்கள், வாதப் பிரதிவாதங்கள் ‘அனுஷிலான்’ (ஆயுதப் புரட்சி ஆதரவாளர்கள்) பிரிவைப் பின்பற்றுபவர்களுடன் நடைபெறுவது வழக்கம். அந்த விவாதங்களில் பவானி சென் மார்க்சிய அறிவாளியாகத் திகழ்ந்தார். பலரும் கம்யூனிஸ்ட்கள் ஆனார்கள்.

            பவானி சென் பிரிஸிடென்சி சிறைக்கு மாற்றப்பட்டார், அங்கே (புகழ்பெற்ற வங்க நாவலாசிரியர், மார்க்சிய எழுத்தாளர்) கோபால் ஹால்தார் (Gopal Haldar) மற்றும் சிலரைச் சந்தித்தார்.

தியோலி முகாமில்

          வெகு தொலைவில் உள்ள தியோலி முகாமிற்கு 1934ல் மாற்றப்பட்டார். அங்குப் புரட்சியாளர்கள் மற்றும் கம்யூனிஸ்ட்கள் பிரமத் பௌமிக், தரணி கோஸ்வாமி, பஞ்சு கோபால் பந்தூரி, ஜித்தன் கோஷ் (பின்னர் பங்களாதேசத்தில் செயலாற்றினார்), சரோஜ் ஆச்சார்யா சுதன்சு அதிகாரி போன்றவர்களைச் சந்தித்தார், பவானி சென்.

            மார்க்சியம் குறித்துச் சொற்பொழிவாற்றி முகாமில் தோழர்கள் மத்தியில் பவானி மிகவும் பிரபலமானார். இந்தப் புகழ் சிலருக்குப் பொறாமையை ஏற்படுத்தியது மட்டுமல்ல, அது மிகவும் கடுமையாகவும் ஆனது. சில கம்யூனிஸ்ட்கள் மூர்ச்சை அடையும் அளவு மிகக் கடுமையானத் தாக்குதலுக்கு உள்ளாயினர்; அதில் பவானி சென்னும் ஒருவர்.

            மாற்றம் ஒன்றே மாறாதது என்பது போல, சூழ்நிலை விரைவில் மாறியது; எதிர் தரப்பினர் சிலர், யார் தாக்குதலுக்குத் தலைமை தாங்கியவரோ அவர் உட்பட, கம்யூனிஸ்ட்கள் ஆனார்கள்! பின்னர் முகாமில் பவானி சென்னிடம் விசாரணை நடத்திய காவலர்கள், தாக்கியது யார் என அடையாளம் காட்ட வற்புறுத்தியபோது, அவர் பெயரைச் சொல்ல மறுத்தார். இதற்காகவும் அவருக்கு மேலும் தண்டனை வழங்கப்பட்டது. கலவரத்தில் ஈடுபட்டார் எனக் குற்றம் சாட்டி அவரை ‘இருட்டறை தனிமைச் சிறை’யில் இரண்டு வாரங்கள் அடைத்தனர்!

            தியோலி சிறை முகாமில் இருந்து கொண்டே பவானி முதுகலை எம்ஏ தேர்வு எழுதினார்.

            இயற்கை அறிவியல் உட்பட, பல தரப்பட்ட நூல்களைப் பவானி படித்தார். அவர் படித்தவற்றுள் (பிரபஞ்சத்தில் பொருள்கள் தொடர்ந்து உற்பத்தியான வண்ணம் உள்ளன என்று முதலில் கண்டறிந்து கூறிய ஆங்கிலேய பௌதீக இயல் மற்றும், கணித இயலாளரும் வானியல் நூல்கள் பல எழுதியவருமான) சர் ஜேம்ஸ் (ஹாப்வுட்) ஜீன்ஸ்; (அதே துறையில் சிறந்த மற்றொரு ஆங்கிலேய விண்ணியலாளரும் ஆஸ்ட்ரோ-பிசிக்ஸ் விஞ்ஞானியுமான) சர் ஆர்தர் (ஸ்டான்லி) எடிங்டன்; (1918 பௌதீகத்தில் நோபல் பரிசு வென்ற ஜெர்மன் பௌதீகவியலாளர்) மாக்ஸ் ப்ளாங்க் (Max Planck) முதலானவர்களும் மற்றும் இந்திய தத்துவவியலாளர்களின் நூல்களும் அடங்கும். ஆங்கிலத்தில் கிடைத்த ஹெகல் (ஜெர்மன் இயக்கவியல் தத்துவவாதி)யின் நூல்கள் அனைத்தையும் பவானி சென் படித்து விட்டார் என்பது பிரமத்தின் கூற்று.

            1936 தியோலி முகாமில் கம்யூனிஸ்ட் ஒருங்கிணைப்பு குழுவில் இணைந்தார். தரணி கோஸ்வாமி, ரேவதி ராமன், பிரமத், பஞ்சு கோபால் மற்றும் 100 பேர் இணைந்தனர். நவம்பர் புரட்சி தினம் அந்த ஆண்டு முகாமில் 125 கைதிகள் பங்கேற்க அனுசரிக்கப்பட்டது. அதில் உரையாற்றியவர்களில் பவானி சென்னும் ஒருவர்.

            முகாமிலிருந்து அவரை 1937ல் கோமில்லா கிராமத்தில் (வீட்டுச் சிறையில்) அடைத்தனர்; பின்னர் 1938ல் விடுதலை செய்யப்பட்டார். தனது குடும்பத்தினர் உறவினர்களைச் சந்திக்கச் செல்லாமல் நேரே கல்கத்தா சென்று கிழக்கு வங்காள ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் கஞ்ச்ரபாரா மற்றும் லிலுவா மையங்களில் பணியாற்றத் தொடங்கினார். இரயில்வே ஊழியர்களின் கட்சி குழுவில் உறுப்பினராகி சங்கத்தின் அமைப்புச் செயலாளர் ஆனார்.

            கல்கத்தாவிலிருந்து 1940ல் (நாடு) கடத்தப்பட்ட பவானி சென் தலைமறைவு வாழ்வில் சென்றார். தலைமறைவு வாழ்வில் இந்திரா என்ற பெண்மணியை மணந்து கொண்டார். அவரின் மனைவி இந்திரா 1947ல் உடல் நலம் குன்றியவர், அப்படியே இறுதிவரை இருந்து இறந்தும் போனார். நோயுற்ற மனைவி, குடும்பத்தினரையும் மிகுந்த பொறுமையோடும் அக்கறையோடும் பவானி கவனித்துக் கொண்டார்; பொறுமை, நிதானம், அமைதி அவரது பிறந்த குணமாயிற்றே.

            1942ல் கம்யூனிஸ்ட் கட்சி மீதான தடை விலக்கிக் கொள்ளப்பட்டபோது, பவானி சென் மாகாணக் கட்சியின் செயலாளர் ஆனார். 1943 பாம்பேயில் நடந்த முதலாவது கட்சி காங்கிரசில் அவர் மத்தியக் குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

           
வங்கப் பெரும் பஞ்சத்தின் பின்னனியில் பவானி சென் ‘பாங்னேர் முகே பங்களா’ (
‘Bhangner Mukhe Bangla’) என்றொரு புத்தகம் எழுதினார். பின் ஆங்கிலத்தில் அந்நூல் “அழிவில் கிராமப்புற பெங்கால்” என்று வெளியானது. பஞ்சத்தின்போது மிகப்பெரிய அளவில் நிவாரணப் பணிகளை அவர் மேற்கொண்டார்.

1945 –47 இரண்டாம் உலகப்போர் எழுச்சிக்குப் பின்

            இந்தக் காலக் கட்டத்தில் அமைப்பு ரீதியாகப் பேரளவு மக்களைத் திரட்டும் சக்திமிக்கத் தலைவராகப் பவானி சென் உயர்ந்தார். வங்காளம் முழுமையும் அசைவின்றி 1946 ஜூலை 29ல் ஸ்தம்பித்தது. சில சமூக விரோத சக்திகள் கட்சி அலுவலகங்களைத் தாக்கினர். அந்த நெருக்கடியான தருணத்தை அமைதியாகக் கையாண்டார். மிகக் கொடுமையான நவகாளி படுகொலைகளை நேரில் கண்ட அவர், அதனை “மாபெரும் பாதகக் கல்கத்தா கொலைகள்” என்று சரியாகக் குறிப்பிட்டார். அவர் காந்திஜியைச் சந்தித்து, மத மோதல்களுக்கு எதிரான அவரது இயக்கத்திற்குக் கம்யூனிஸ்ட் கட்சியின் முழு ஆதரவைத் தெரிவித்தார்.

            வங்கத்தின் விவசாயிகள் போராட்ட எழுச்சியான “தேபகா இயக்க”த்தில் அவர் திறமைகள் அத்தனையும் முழுமையாக வெளிப்பட்டது. (தேபகா இயக்கம் என்பது குத்தகைதாரர்கள் நில உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டிய பங்கை ‘மூன்றில் ஒரு பங்கு’ –தேபகா—என வரையறுப்பதைக் கோரிக்கையாக முன் வைத்து நடத்தப்பட்ட இயக்கம்.) பவானி சென் அந்த இயக்கத்தின் அமைப்பாளராக, யுக்திகள் மற்றும் திட்டங்கள் வகுப்பவராக, கோரிக்கைகளை அழுத்தமாகப் பிரச்சாரம் செய்பவராக, ஒரு தலைவராக மற்றும் எழுத்தாளராகச் செயல்பட்டார்.

இரண்டாவது கட்சி காங்கிரஸ், 1948

            இடதுசாரி செக்டேரியன், தாவிப் பாய்ச்சல் சாகசப் பாதையை ஏற்றதில் BTரணதிவே தலைமையின் கீழ் அமைந்த 9 உறுப்பினர்கள் பொலிட் பீரோவில் பவானி சென்னும் ஒருவர்.

            தலைமறைவு வாழ்க்கை நாட்களில் அவரும் தோழர் என்கே கிருஷ்ணனும் கல்கத்தாவில் ஒரே ‘பதுங்கு அறை’யில் வசித்தனர். அவர்களின் அந்த வாழ்க்கையைப் பற்றிய சுவாரஸ்யமான விவரிப்புகளை என்கே தந்துள்ளார், அங்கே அவர்கள் இருவரும் பெங்காலி உணவு வகைகளைத் தயாரிப்பதில் நிபுணர்கள் ஆனார்களாம்!

            செக்டேரியன் குழுப்போக்கின் தவறுகளிலிருந்து பவானி விரைவில் மீண்டார். அவரது ‘சுய விமர்சம்’ மிகத் தெளிவானதும், ஆத்மார்த்தமானதுமாகும். 1951ல் பவானி ஓராண்டு காலத்திற்குக் கட்சி உறுப்பினர் அந்தஸ்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். மீண்டும் அடிமட்டத்திலிருந்து தனது பணிகளைத் துவக்கினார். ஆனால் கட்சித் தலைமை அவரைத் தேவையில்லாமல், தனிப்பட்ட கணக்குகளைத் தீர்த்துக்கொள்ள, தொல்லைப்படுத்தியது. மேலும் முழுநேர ஊழியர்கள் பட்டியலிருந்து அவரது பெயரை நீக்கி, தன்னைத் தானே எப்படியோ கவனித்துக் கொள்ளும்படி கைவிட்டது. கிசான் சபா அலுவலகத்தில் தங்க நேரிட்டது. பின்னர் 24 பர்க்கானா மாவட்டத்தின் பரசத் சென்று, விவசாயிகள் இயக்கத்தில் பணியாற்றினார்.

கிசான் சபாவில்

            1954ல் அகில இந்திய கிசான் சபாவின் பொதுச் செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வேளாண் துறையில் மாறிவரும் உறவுகள் பற்றி ஆழமான ஆய்வினை மேற்கொண்டு கிசான் சபா போராட்டங்களின் புதிய உத்தியை உருவாக்கினார். விவசாயம் குறித்து பல நூல்கள்


எழுதினார்; அவற்றுள் ‘இந்திய வேளாண் உறவுகளும் நிலச் சீர்திருத்தங்களும்’ என்ற நூல் பரவலாகக் கவனம் பெற்று விவாதிக்கப்பட்டது. விவசாயிகள் குறித்த கேள்விகளின் சர்ச்சைகள் விவாதங்களில் பவானி சென் முன்னே இருந்தார். விவசாயத்தில் முதலாளித்துவ உறவுகளின் பண்புகளோடு புதிய விவசாயத் தொழிலாளர்கள் வர்க்கம் ஒன்று உருவாகி வருவதை அவர் அங்கீகரித்தார். (மேற்கு வங்க) பாங்கோன் அகில இந்திய கிசான் மாநாட்டின் முக்கிய அமைப்பாளராகப் பணியாற்றினார். 1970ல் பசரத் AIKS மாநாட்டிலும் அவரே அமைப்பாளர்; மேலும் அந்த மாநாட்டில்தான் பவானி சென் அகில இந்திய கிசான் சபாவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். லட்சக் கணக்கான மக்கள் அவரது உரையைக் கேட்கக் கூடினர்.

            புதிய உலகச் சூழலை மிக விரைவாகப் பவானி சென் உள்வாங்கியதுடன், உலக கம்யூனிஸ்ட் மாநாடுகளின் புதிய மதிப்பீடுகளை உறுதியாக ஆதரித்தார்.

கட்சி பிளவும் பவானி சென்னும்

            “கம்யூனிஸ்ட் முகாமில் ஏன் இந்தப் பிளவு?” என்ற சிறுநூலைப் பவானி சென் எழுதினார். அந்த நூல் மிகவும் பிரபலமாகி பல்லாயிரக் கணக்கில் விற்பனையானது. 1962ல் சீனாவின் ஆக்கிரமிப்பு படையெடுப்பு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைமையை மோசமாக்கியது. வங்கத்தின் ஒரு பெரும்பகுதி தோழர்கள் கட்சியை விட்டு வெளியேறியதும், சிபிஐ கட்சி அமைப்பை மீண்டும் சீரமைப்பது மிகவும் கடினமான பணியானது. ஒன்றுமில்லாத நிலை என்பார்களே, அப்படி ஒரு நிலையிலிருந்து, ஓர் இடிந்த ‘பிளாட் இடம்’ மற்றும் டைப்-ரைட்டரிலிருந்து உறுப்பினர்கள் வரை, கட்சியைப் பவானி சென் மீண்டும் கட்டி எழுப்பினார்! இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் அறிவார்ந்த சில தலைவர்கள் இருந்தார்கள். 1967 மற்றும் 1969ல் சிபிஐ தேர்தல்களில் போட்டியிட்டு, குறிப்பிடத்தக்க சக்தியாக மேலெழுந்தது.

கட்சி அமைப்பில்

          1956 பாலக்காடு கட்சி காங்கிரசில் பவானி சென் மத்தியக் குழு உறுப்பினராகவும், 1958 அமிர்தசரஸ் மாநாட்டில் தேசியக் குழு உறுப்பினராகவும், 1961 விஜயவாடா மாநாடு மற்றும் 1964 பம்பாய் மாநாட்டில் மத்தியச் செயற்குழு உறுப்பினராகவும், 1968 பாட்னா மாநாடு, மற்றும் 1971 கொச்சி மாநாட்டிலும் மத்தியச் செயலக உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1964ல் கட்சி மாநிலச் செயலராக இருந்த போது, 1965ல் கட்சி புத்தக நிறுவனம் ஒன்றை நிறுவினார்.

            1971ல் கட்சியின் மத்தியக் கல்வி இலாக்காவின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். மத்தியக் கட்சிப் பள்ளிகள் மற்றும் கட்சிப் பாடத் திட்டத்திற்கு வடிவம் கொடுப்பதில் உதவினார். கட்சிக் கல்வி முறைகள் வெளிநாடுகளில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை அறிந்து கொள்ள பவானி சென் சில கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணம் செய்தார்.

1971 பங்களாதேஷ் போராட்டத்தில் பெரும் பங்கு

            வங்க தேச விடுதலைப் போராட்ட இயக்கத்தில் உதவியாக அவர் ஆற்றிய பெரும் பங்கை இன்னும் வங்காளதேசத்தில் நன்கு ஞாபகம் வைத்துள்ளனர், இங்கே நமது நாட்டில்தான் அது பற்றி அதிகமாகத் தெரியாதவர்களாக இருக்கிறோம். எல்லையோர மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்து அங்கே முகாம்கள் அமைப்பது, உணவு, தங்குமிடம், ஆயுதங்கள் பெறுவது மற்றும் ஜெய்சொர், கௌல்னா முதலிய இடங்களில் பயிற்சி அளிக்க உதவுவது என அவர் ஆற்றிய பணிகள் ஏராளம். குறிப்பாக வங்காள தேசத்தில் அவருக்குப் பொறுப்பு வழங்கப்பட்டதும், அங்கே அவர் பொது மக்களிடையேயும் உரையாற்றி உள்ளார். உண்மையில் அசாதாரணமான பெரும் பணிகளைச் செய்துள்ளார்.

            கடுமையான இதய நோய் பிரச்சனைகளுக்குச் சிகிச்சை பெற சென்றிருந்தபோது,  1972 ஜூலை 10ம் நாள் மாஸ்கோவிலேயே இயற்கை எய்தினார் பவானி ஷங்கர் சென்குப்தா.

            இப்படியும் ஒரு தோழர், ‘இதம்தரு மனையின் நீங்கி, இடர்மிகு சிறைப்பட்டு,…பழிமிகுந்து இழிவுற்றாலும்’ கட்சியை விட்டகலாது செங்கொடியை உயர்த்திப் பிடித்த எம்மான், எம் தோழர் பவானி ஷங்கர் சென்குப்தா ஜிந்தாபாத்!                  

--தமிழில்: நீலகண்டன், 

என்எப்டிஇ, கடலூர் 

No comments:

Post a Comment