Thursday 22 October 2020

வரலாற்றுத் தலைவர்கள் வரிசை 17: அருணா ஆசஃப் அலி

 

நமது பெரும் தலைவர்கள் வாழ்விலிருந்து :

சில சித்திரத் சிதறல்கள் -17

                                            


  அருணா ஆசஃப் அலி :

விடுதலைப் போராட்ட

1942 இயக்கத்தின் கதாநாயகி


--அனில் ரஜீம்வாலே

(நியூ ஏஜ்–அக்.18 --24, 2020)

            அருணா கங்குலி (ஆசஃப் அலி) கால்கா நகரில் ஒரு வங்காள பிரம்ம சமாஜ குடும்பத்தில் 1909ம் ஆண்டு ஜூலை 16ம் நாள் பிறந்தார்.  (கால்கா நகர் தற்போது ஹரியானாவில் உள்ள பாஞ்ச்குலா மாவட்டத்தின் இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது; அது ஹிமாச்சலப் பிரதேசத்தின் நுழைவாயில் எனவும் அழைக்கப்படும்) (வங்க மறுமலர்ச்சி காலத்தில் தோன்றிய இந்துமதச் சீர்திருத்த இயக்கமான பிரம்ம சமாஜம் 1861ல் லாகூரில் பண்டிட் நோபின் சந்திர ராய் துவக்கியது. கல்கத்தாவில் அந்த இயக்கம் 1868 ஆகஸ்ட் 20ம் நாள் ராஜா ராம் மோகன் ராய் மற்றும் திபேந்திரநாத் தாகூரால் துவக்கப்பட்டது.) தந்தையின் இரயில்வே உணவகப் பொறுப்பாளர் பணியால் அருணாவின் குடும்பம் வங்கத்திலிருந்து கால்காவிற்குக் குடிமாறியது.

            கங்குலிகளின் இரண்டு மகள்கள் மற்றும் மூன்று மகன்களில் அருணாதான் மூத்தவர். அவரும் தங்கை பூர்ணிமாவும் லாகூரில் உள்ள ‘புனித இருதய கான்வென்டி’ல் படித்தபோது அவர்களது தந்தை அங்கே பத்திரிக்கையாளரானார். பள்ளியில் அருணாவை ஐரீன் (Irene அமைதிக்கான கிரேக்கப் பெண்கடவுள்) எனக் கொண்டாடுவது வழக்கம். ஆன்மிகம் மற்றும் ‘தெரியாத சக்தி’யிடம் நம்பிக்கை கொண்ட அருணா ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையால் பெரிதும் ஈர்க்கப்பட்டது மட்டுமின்றி தன்னையொரு கிருஸ்துவக் கன்னியாஸ்திரியாகவும் நினைத்துக் கொள்வார். அவருடைய எண்ணத்தை அறிந்து கொண்ட பெற்றோர் மிகவும் அதிர்ச்சி அடைந்தவர்களாய் தங்கள் மகளை நைனிடாலுக்கு, இம்முறை புராட்டெஸ்டன்ட் பள்ளிக்கு, அனுப்பி விட்டனர். தந்தையும் அங்கே ஒரு உணவகத்தைத் திறந்தார்.

            அருணா செவ்விலக்கியங்கள், இலக்கிய நூல்கள், தத்துவம், அரசியல் என ஏராளமான புத்தகங்களைப் படிக்கும் பழக்கம் உடையவராக இருந்தார்.  வாழ்க்கைக்குத் தானே சொந்தமாகச் சம்பாதிக்க வேண்டும் என விரும்பி முதலில் திருமணம் செய்து கொள்ள மறுத்தார். நைனிடாலை விட்டு கல்கத்தாவிற்குச் சென்று, அங்கே கோகலே நினைவு பெண்கள் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்தார். இங்கிலாந்து செல்ல விரும்பிய அவருடைய வாழ்வில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது.

புதிய வாழ்க்கை

            கோடை விடுமுறையைச் செலவிட அருணாவும் பூர்ணிமாவும் அலகாபாத் சென்றனர். பூர்ணிமா பேனர்ஜி ஒருவரைத் திருமணம் செய்து கொண்டார். தங்கையின் கணவரான பேனர்ஜி டெல்லியில் இளம் பாரிஸ்டரான (சாதாரண வழக்கறிஞரிலும் மேம்பட்ட, மேல்நீதிமன்றங்களில் வழக்காடும் பெரும் வழக்கறிஞர்) தனது நண்பர் ஆசஃப் அலியை அழைத்துக் கொண்டு அலகாபாத் வந்தார். ஆசஃப் அலி அங்கே அருணாவைச் சந்திக்க இருவரிடையே மலர்ந்த நட்பு பின்னர் திருமணத்தில் முடிந்தது. அவர்களுடைய திருமணத்திற்குப் பலமான எதிர்ப்பு எழுவதற்கு மத வேறுபாடு மட்டுமின்றி இருவரிடையான பெரும் வயது வித்தியாசமும் காரணம். ஆசஃப் அலிக்கு 41 வயது, அருணாவுக்கோ அப்போது வெறும் 19 வயதுதான்.

அரசியல் நுழைவு, சிறையிலும்தான்

            அதுவரை அருணா பொதுவாக அரசியலை, குறிப்பாகக் கதரை வெறுத்தார்! அந்நேரத்தில் காந்திஜி உப்புச் சத்தியாகிரக இயக்கத்தை ஆரம்பித்தார். அதில் கலந்து கொண்ட அருணா கைதானார். ஈடுபாட்டோடு பங்கேற்றவர் கூட்டத்தில் உரையாற்றி இருக்கிறார். அவரிடமிருந்து ‘நான் இனி நல்ல வகையில் நடந்து கொள்வேன்’ என்றும் அரசியலில் பங்கேற்க மாட்டேன் என்ற உறுதிமொழியை டெல்லி காவல் முதன்மை ஆணையர் பெற விரும்பினார்; உறுதியாக மறுத்துவிட்ட இளம் பெண் அருணா சிறையில் அடைக்கப்பட்டார். (மன்னிப்புக் கடிதமும் இனி அரசியலில் ஈடுபட மாட்டேன் என உறுதிப் பத்திரமும் எழுதிக் கொடுத்து வெளியே வந்தவர்களை ’வீர்’ (வீரர்) என்று அடைமொழி தந்து அழைக்கும் அவலம் நினைவுக்கு வராமல் போகாது – மொழிபெயர்ப்பாளர் இணைத்தது)

            விடுதலை ஆன அருணாவிற்கு மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது; அந்த வரவேற்பு நிகழ்வில் ‘எல்லை காந்தி’ எனப் போற்றப்படும் கான் அப்துல் காஃபர் கான் வந்திருந்து அவரைச் சந்தித்தார். அருணா மீண்டும் 1932ல் கைது செய்யப்பட்டார். அபராதக் கட்டணமாக ரூ200 செலுத்த மறுத்ததால், அவரது இல்லத்திலிருந்து விலை உயர்ந்த பட்டு சேலைகளைப் போலீசார் கைப்பற்றிச் சென்றனர்! டெல்லி சிறையில் அடைக்கப்பட்டவர், பெண் அரசியல் கைதிகளின் உணர்வுகளை மதிக்காத சிறை அதிகாரிகளுக்கு எதிராகப் போராட முயன்றார்; உடனே மிக மோசமான நிலையில் இருந்த அம்பாலாவுக்கு மாற்றி தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

விடுதலைக்குப் பிறகு சுமார் பத்தாண்டுகள் தீவிர அரசியலிலிருந்து விலகி இருந்தார்; அப்போதும் பெண்கள் மாநாடு போன்றவற்றில் விதிவிலக்காகக் கலந்து கொண்டார். டெல்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியில் அவர் தேசபந்து குப்தா மற்றும் ஆசஃப் அலி அணியை ஆதரித்தார். (தேசபந்து குப்தா என அழைக்கப்படும் ரதி ராம் குப்தா, விடுதலைப் போராட்ட வீரர், அரசியலமைப்பு நிர்ணய சபையின் உறுப்பினர், பத்திரிக்கைச் சுதந்திரத்திற்காகப் பாடுபட்டவர், பஞ்சாப் –ஹரியானா மாநிலப் பிரிப்பு மற்றும் டெல்லிக்கு மாநிலச் சட்டமன்ற அந்தஸ்து கோரியவர் : -- கூடுதல் தகவல் இணைப்பு).

            1940ல் போரை எதிர்த்து மகாத்மா காந்திஜி சத்தியாகிரகம் தொடங்கினார். அவர் தேர்ந்தெடுத்தச் சத்தியாகிரகிகளில் அருணாவும் ஒருவர். அவர் முதலில் லாகூர் சிறைக்கும் பின்னர் லாகூர் பெண்கள் சிறைக்கும் மாற்றப்பட்டார். சிறையில் அவர் பல செயல்களை ஆற்றினார். கோரிக்கை எழுப்பி சிறையில் ‘சி’ வகுப்பு பெற்று தனக்குக் கிடைத்த தனிஅறையை நன்கு அலங்கரித்தார். மற்ற பெண் கைதிகளுக்கு வாராந்திர செய்திகளைப் படித்து விவரிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

1942 : சரித்திரத்தில் இடம் பெற்றார் அருணா

            விடுதலையான பின் ஆசஃப் அலியுடன் 1942 பம்பாய் காங்கிரஸ் மாநாட்டிற்குச் சென்றார். ஆசஃப் அலி ஒரு முக்கியமான தலைவர். அருணா ஜனரஞ்சகமாக அனைவருடனும் சகஜமாகப் பேசி தனது செயல்பாட்டால் அங்கே மிகவும் புகழ் பெற்றார். அப்போது அவருடன் பேசிப் பழகிய யாரும் கற்பனை செய்துகூட பார்த்திருக்க மாட்டார்கள், மறுதினம் அருணா சரித்திரத்தின் பக்கங்களில் இடம் பெறப் போகிறார் என்று.

            மறுநாள் 1942 ஆகஸ்ட் 9ம் நாள் காலை  காங்கிரசின் முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இதைக் கேள்விப்பட்டதும், கைதிகளை ரயிலில் அழைத்துக் கொண்டு புறப்பட இருந்த, போரி பந்தர் ரயில் நிலையத்திற்கு விரைந்தார். அவரைத் தடுத்து நிறுத்த முயன்ற காவலர்களை மீறி புறப்படக் காத்திருந்த ரயில் வண்டியில் கவலை தோய்ந்த முகத்துடன் இருந்த நேரு காந்தி முதலானவர்களைக் கண்டார்.

            வெளியே பெரும் தலைவர்கள் யாருமில்லை, அவர் கோபத்தில் கொதித்துப் போயிருந்தார். கோபத்தில் அதனை அவர் “பேர்ல் ஹார்பர் முறை” என வர்ணித்தார். (1941 டிசம்பர் 7ல் ஹவாய்த் தீவில் இருந்த ஐக்கிய அமெரிக்கக் கப்பற்படைத் தளமான பேர்ல் துறைமுகத்தை ஜப்பானியக் கப்பற்படைத் தாக்குதல் நடத்திய பிறகே அமெரிக்க இராணுவம் அதிகார பூர்வமாக இரண்டாம் உலகப் போர்க் களத்தில் குதித்தது.) கடும் கோபத்தில் உந்தப்பட்ட அருணா ஆசஃப் அலி தற்போது கோவாலியா குள மைதானம் (பம்பாய்) எனப் புகழோடு அறியப்படும் இடத்திற்குச் சென்றார்; அங்கே முன்பு மௌலானா ஆஸாத் மூவர்ணக் கொடியை ஏற்றுவதாக இருந்தது. போலீஸ் அதிகாரி அங்கே கொடியை இறக்க வேண்டும் என உத்தரவிடுவதைக் கேட்டார். கூட்டத்தை விலக்கி முன்னேறிச் சென்ற அருணா மூவர்ணக் கொடியை பறக்க விட்டார். கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. கூட்டத்தினர் ஒரு பெரும் பேரணியாக மாறி காங்கிரஸ் அலுவலகம் சென்றனர். அவர்கள் சென்ற பத்து நிமிடத்தில் கொடி இறக்கப்பட்டு போலீஸ் அதிகாரியின் காலடியில் போட்டு மிதித்துத் துவைக்கப்பட்டது.

            அப்போது அந்த நிமிடமே, ‘பிரிட்டீஷ் ஆட்சி தூக்கி எறியப்படும் வரை போராடுவது’ என அருணா ஆசஃப் அலி பிரதிக்ஞை செய்தார். அங்கே போலீஸ் குண்டாந்தடி வீச்சும் துப்பாக்கிச் சூடும் நடந்தன. டெல்லி திரும்பிய அருணா உடனடியாகத் தலைமறைவானார். முழு இரண்டரை வருடம் அவர் தேசம் முழுவதும், ஒரு தலைமறைவு புரட்சியாளராகச் சுற்றித் திரிந்தார். பல குழுகளை ஏற்படுத்தி இயக்கங்களைக் கட்டினார்.

கைது செய்ய வெகுமதி

            அவரைக் கைது செய்யக் கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்குப் பிரிட்டீஷ் அரசு அந்த நாட்களிலேயே ரூ2000/= வெகுமதி அளிப்பதாக விளம்பரம் செய்தது. ஆனால் பிடிபடும் சிங்கமா அவர்? ஒரு பிரிட்டீஷ் அதிகாரி தனது மேலதிகாரியிடம் கூறினார்,அவர் (அருணா) டெல்லியின் ஒன்பது லட்சம் மக்களின் பாதுகாப்பில் தங்கி உள்ளார்!”

காங்கிரஸ் செயற்குழு தீர்மானத்திற்கு மறுப்பு

            கைதிகள் விடுதலையானதும், காங்கிரசின் மத்திய காரியக் கமிட்டிக் கூட்டம் 1945ல் நடந்தது. அதில் வெள்ளையனே வெளியேறு 1942 இயக்கம் பற்றியும் அகிம்சை குறித்தும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாட்டில் வன்முறையைத் தூண்டுவதாக வைஸ்ராய் காங்கிரஸ் மீது குற்றம் சாட்டினார். அதே நேரத்தில் வைஸ்ராய், காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் ஒருவரின் மனைவி என அருணா ஆசஃப் அலியை மறைமுகமாகக் குறிப்பிட்டு, அவர் பெருமளவில் மக்களை வன்முறையில் ஈடுபடத் தூண்டி பிரிட்டீஷ் அரசின் போர் முயற்சிகளுக்குக் குந்தகம் விளைவிக்கிறார் எனவும் குறிப்பாகச் சுட்டிக் காட்டினார்.

            வைஸ்ராயின் இந்தப் பொய்ப் பிரச்சாரத்தை எதிர்த்து அருணா ஆசஃப் அலி தக்க பதிலடி கொடுத்தார். அப்போது காங்கிரஸ் செயற்குழு தீர்மானத்தின் சில அம்சங்களை மறுத்து அவர் அறிக்கை வெளியிட்டார்; அதில் இந்தியாவின் சில இடங்களில், காங்கிரஸ் தலைவர்களின் கைதுக்குப் பிறகு, மக்கள் கூட்டம் கட்டுப்படுத்த முடியாததாகத் தங்கள் போக்கில் நடந்ததாகக் கூறுவது உண்மையல்ல; கைதாகாது மீதம் இருந்த தலைவர்கள், போதுமான அளவு காங்கிரஸ் வழிகாட்டல்களைப் பின்பற்றி நடக்கும் பொறுப்பு வாய்ந்தவர்களே. ஆனால் பல நேரங்களில் அகிம்சையைப் (பருநிலையில் அன்றி) சூக்கும நிலையில் அமல்படுத்த இயலாத சூழ்நிலையைப் போலீசின் அடக்கு முறை நடவடிக்கைகள் ஏற்படுத்தின என அவர் விளக்கம் அளித்தார். மேலும் காங்கிரஸ் காரியக் கமிட்டி தனது தீர்மானத்தில் அதற்கு முந்தைய மூன்று ஆண்டுளின் நிகழ்வுகளைக் குறைவாக எடைபோட்டு விட்டது எனவும் அறிக்கையில் சுட்டிக் காட்டினார்.

தலைமறைவு வாழ்விலிருந்து வெளியே

            அருணாவுக்கு எதிரான வாரண்ட் 1946 ஜனவரி 25ல் விலக்கிக் கொள்ளப்பட்டது. நேரே கல்கத்தா சென்ற அவர் அங்கே தேசபந்து பூங்காவில் பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். அந்த மேடை புகழ்பெற்ற நியூ தியேட்டர்ஸ் உருவாக்கிய கலை இயக்குநர் சௌரன் சென் அவர்களால் மிக அழகாகப் படைக்கப்பட்டது. அந்தக் கூட்டத்தில் இந்தியாவின் வைஸ்ராய் ஆர்ச்சிபால்ட் வேவல் பிரபுவைக் கடுமையாக விமர்சித்து, இந்தியாவின் விடுதலை நாளை இந்தியர்கள்தான் முடிவு செய்வார்களே தவிர, அதனை வெள்ளையர்கள் முடிவு செய்ய முடியாது எனவும் முழங்கினார். எனவே மக்கள் சுதந்திரத்திற்கான தங்கள் போராட்டத்தைத் தொடரவும் வேண்டுகோள் விடுத்தார்.

            டெல்லி செல்லும் வழியெங்கும் ரயில் நிலையங்களில் மக்கள் பெருங் கூட்டமாக அவருக்கு வரவேற்பளித்தனர்; அவருடைய பயணத்தை அலகாபாத்தில் முடித்துக் கொள்ளும்படி நேரு கேட்டுக் கொண்டார். அருணாவை வரவேற்க நேருவே ரயில் நிலையம் வந்தார்.

            வெள்ளை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட கரோல்பாக்-ல் இருந்த அவருடைய வீடு மீண்டும் திரும்பக் கிடைத்தது. போலீஸ் பறிமுதல் செய்த அருணாவின் பேபி ஆஸ்டின் என்ற காருக்கான பணமும் அவருக்குக் கிடைத்தது.

காந்திஜியுடன் சந்திப்பு

            காந்திஜியைச் சந்திக்க 1947 பிப்ரவரியில் வார்தா சென்றார். நாக்பூரில் முப்பதாயிரம் மக்கள் திரண்ட பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்தில் பேசினார். காந்திஜியைத் “தேசத் தந்தை” என்றும் ‘இந்து – முஸ்லீம் ஒற்றுமையின் சின்னம்’ என்றும் பலவாக அருணா புகழ்ந்துரைத்தார். சில பிரச்சனைகளில் அவரோடு கருத்து முரண்படவும் செய்தார். இந்திய விடுதலைப் போரில் மக்களின் சுதந்திர உணர்வை எழுச்சிபெறச் செய்த 1946 பிப்ரவரி 18ல் தொடங்கிய வரலாற்றுப் புகழ்மிக்க ’ராயல் இந்தியக் கப்பல்படை’ யின் வேலைநிறுத்த (ராயல் இந்தியன் நேவி கலகம்) போராட்டத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்ட அருணா ஆசஃப் அலிக்கு, அது குறித்த காந்திஜியின் கருத்துகளோடு கடுமையான கருத்து வேறுபாடுகள் இருந்தன.

விடுதலைக்குப் பிறகு நிகழ்வுகள்: அருணா சிபிஐ-யில் சேர்ந்தார்

          1946க்குப் பிறகு அருணாவின் வாழ்வில் பெரும் திருப்பமாக இடதுசாரி கொள்கைபால் திரும்பினார். 1947--48ல் டெல்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், 1948ல் காங்கிரஸை விட்டு விலகினார்; சோஷலிஸ்ட் கட்சியில் இணைந்து 1950ல் இடது சோஷலிசக் குழுவை அமைத்தார். (பத்திரிக்கையாளரும், சுதந்திரப் போராட்ட வீரரும், காங்கிரஸ் சோஷலிசக் குழுதலைவர்களில் ஒருவரான) எடடாட்ட நாராயணன் (Edatata Narayanan) மற்றும் ரஜினி பால்மே தத்துடன் மாஸ்கோ சென்றார். நாராயணனும் அருணாவும் சோவியத் யூனியனின் செயல்பாடுகள் மற்றும் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, அதன் பெரும் செல்வாக்கிற்கு ஆளாயினர்.

            நாடு திரும்பியதும் அருணா ஆலைத் தொழிலாளி வர்க்கம் மற்றும் பிற உழைக்கும் பகுதியினர் மத்தியில் பணியாற்றினார். பஞ்சாலைத் தொழிலாளர்கள் மத்தியில் மார்க்ஸிய படிப்பு வட்டத்தை ஆரம்பித்தார். 1953– 54ல் தமிழ்நாடு மதுரையில் நடந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூன்றாவது கட்சி காங்கிரசில் பங்கேற்ற அருணா கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 பெண்கள் இயக்கத்தில்

            வங்காளத்தில் இயங்கிய ‘மகிளா ஆத்ம ரக்க்ஷா சமிதி’யினரோடு 1950களின் துவக்கத்தில் அருணா ஆசஃப் அலிக்குத் தொடர்பு ஏற்பட்டது. 1952ல் நடந்த அந்த அமைப்பின் மாகாண மாநாட்டின் சிறப்பு விருந்தினராக அருணா பங்கேற்றார். 1953 கோபன்ஹெகன் சர்வதேச பெண்கள் மாநாட்டிலும் அவர் பங்கேற்றார்.

           


இந்திய மாதர் தேசிய சம்மேளன (NFIW) அமைப்பின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான அருணா 1967ல் அதன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 1986வரை அந்தப் பொறுப்பை வகித்தார்.

            ஜோசப் ஸ்டாலின் மீது ‘குருசேவ் அறிக்கை’ என அறியப்படும் விமர்சனங்கள் வெளியானதும் உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகள் உண்டாயின. அந்த அறிக்கை ஸ்டாலின் காலத்தில் நடந்த அதிகார துஷ்பிரயோகங்களை அம்பலப்படுத்தின. (அதனால்) அருணா மிகக் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார். அந்த விஷயங்களைப் பொறுத்துக் கொள்ளவோ அல்லது அத்தகைய அநீதிகளுடன் சமரசம் செய்து கொள்ளவோ அவரால் முடியவில்லை. கட்சி உறுப்பினர் பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து ராஜினாமா செய்தார்; ஆனால் இறுதி வரை கட்சிக்கு ஆதரவாக இருந்தார்.

டெல்லி மேயராக

            1958ல் டெல்லி மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் அருணா ஆசஃப் அலி.  எண்பது உறுப்பினர்கள் அடங்கிய டெல்லி மாநகராட்சி கார்ப்பரேஷனில் காங்கிரஸ் கட்சியோ அல்லது ஜனசங்கமோ பெரும்பான்மை பெறவில்லை. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் 8பேர்.  இந்தச் சூழ்நிலையில், அருணா ஆசஃப் அலியை ஆதரிக்க முன்வந்தது சிபிஐ -- காங்கிரசும் அதுபோல ஆதரவளிக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு. நேருவுடன் கலந்து ஆலோசித்த பிறகு காங்கிரசும் ஒப்புக்கொண்டது. முறைப்படி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் இல்லை என்ற போதிலும், இப்படியாக டெல்லியின் முதல் கம்யூனிஸ்ட் மேயரானார், அருணா.

            இதே காலகட்டத்தில் 1958லேயே மற்றுமொரு கம்யூனிஸ்ட்டும் மேயராக இருந்தார் என்பது ஆர்வத்தைத் தூண்டும் செய்தி; அவர்தான் எஸ் எஸ் மிராஜ்கர், பம்பாய் மேயராக.

‘லிங்’ மற்றும் ‘பேட்ரியாட்’ இதழ்கள்

            1958ல் பல இடதுசாரிகள், காங்கிரஸ்காரர்கள் மற்றும் சிலர் ஒன்று சேர்ந்து லிங் (Link) என்ற வாராந்திர இதழை ஆங்கிலத்தில் வெளியிட்டனர். அந்தப் பத்திரிக்கை நாட்டின் முன்னணி வாராந்திர இதழாகத் திகழ்ந்தது. அருணாவும் நாராயணனும் அதன் அமைப்பாளர்களில் முக்கியமானவர்கள். பிறகு அந்தக் குழு இந்தியாவின் முதல் இடதுசாரி நாளிதழை ‘பேட்ரியாட்’ (தேசபக்தன்) என்ற பெயரில் கொண்டு வந்தபோது, அதிலும் அருணா முக்கியப் பங்கு வகித்தார்.

            1992ல் இந்தியாவின் உயர் விருதான ‘பத்ம விபூஷண்’ வழங்கப்பட்டு அருணா ஆசஃப் அலி கௌரவிக்கப்பட்டார். அமைதிக்கான லெனின் பரிசும் 1992-ம் ஆண்டுக்கான ஜவஹர்லால் நேரு விருதும் இவருக்கு வழங்கப்பட்டன.  மேலும் இந்திய அரசின் மிக உயரிய குடிமை விருது ‘பாரத ரத்னா’ விருதும், அவருடைய மறைவுக்குப் பிறகு, 1997ல் அளிக்கப்பட்டு மாதர்குல ரத்தினத்தின் மணி மகுடத்தில் புகழ்பெற்றது.

            டெல்லியில் தனது 87வது வயதில் 1996ம் ஆண்டு ஜூலை 29ம் நாள் அருணா ஆசஃப் அலி மறைந்தார்.

            என்றும் புகழோடு ஒளிரும் பெண்கள் குல ஒளிவிளக்கு நினைவைப் போற்றுவோம்!

--தமிழில் : நீலகண்டன்,

      என்எப்டிஇ, கடலூர்     

 

 

No comments:

Post a Comment