Sunday 18 October 2020

கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு எந்த ஆண்டு?

 

கட்சி அமைப்பு தினம் – ஒரு வரலாற்றுப் பார்வை


--பினாய் விஸ்வம் M.P., 

                  (நியூஏஜ் ஆசிரியர் & சிபிஐ தேசியச் செயலாளர்)

           

கம்யூனிச இயக்கம் சிபிஐ, சிபிஐ(எம்) என இரண்டாகப் பிளவுபட்ட துரதிருஷ்டம் நேரிட்டு பல பத்தாண்டுகள் கடந்த பிறகு, இரண்டு கட்சிகளுக்கும் இடையேயான உறவு, குறிப்பாகச் சமீப காலங்களில், முன்பு இல்லாத அளவு தோழமையோடு வலுப்பெற்று வளர்கிறது; தேசிய, சர்வதேசியப் பிரச்சனைகளைப் பரிசீலித்து மேற்கொள்ளப்படும் அணுகுமுறைகளும் ஒத்திசைவாய் ஒன்றாய் உள்ளன. இது இயல்பானது என்பதற்குக் காரணம் இரு கட்சிகளும், சிக்கல் மிக்க இந்திய நிலைமையைப் புரிந்து கொள்வதில் மார்க்சிய-விஞ்ஞான அடிப்படை கொள்கையைப் பயன்படுத்துவதே. இந்த ஒற்றுமைப் போக்கு  கம்யூனிச அணிகளுக்கு மட்டுமின்றி ஜனநாயகச் சக்திகளுக்கும் ஊக்கம் அளிப்பதாக உள்ளது; ஆனால் சிலகுழுக்களுக்கு இந்த ஒற்றுமை மகிழ்ச்சி தருவதாக இல்லை.

          இடதுசாரி தத்துவத்திற்கு எதிராகவும் அதன் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு எதிராகவும் வன்மத்தோடு இருப்பவர்கள் அவர்கள். இந்நிலையில் சிபிஐ(எம்) கட்சி மட்டும் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டதன் நூற்றாண்டைக் கொண்டாட முடிவெடுத்தது எதிரிகளுக்கு நல்ல வாய்ப்பாகவும் கொண்டாட்டமாகவும் ஆகிவிட்டது; சிண்டு முடியவும், முரண்பாட்டைக் கொளுத்திப் போடவும் முயல்கிறார்கள். [உதாரணம், மேம்போக்காக நியாயமாக இருப்பதாகத் தோன்றும் இந்து தமிழ் திசை சமஸ் கட்டுரை – ( மொழிபெயர்ப்பாளர் சேர்த்தது ) ].

          இதில் இரகசியம் ஏதும் இல்லை, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளிடையே எப்போது கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது என்பது உள்பட, சில பிரச்சனைகளில் மாறுபட்ட பார்வைகள் நீடிக்கிறது – இது வெளிப்படையானது. கட்சிகள் இரண்டாக நீடிக்கும் வரை இந்த வேறுபாடுகளும் தொடரக்கூடும். ஆனால் ஒரு விஷயத்தைக் குழப்பத்திற்கு இடமின்றித் தெளிவாக்கி விடலாம் : சில அணுகுமுறை வேறுபாடுகளைக் காட்டி எந்த எதிர்சக்திகளும் இரு கட்சிகளையும் அரசியல் லாவணியில் தள்ளவோ; மக்களின் எதிரிகளாகிய வர்க்க எதிரியை எதிர்த்து நடத்தும் போரில், இரண்டு கட்சிகளும் ஒன்றுபடும் திசைவழியிலான பாதையைக் (குதர்க்கமாக) அவை விளக்கமளிக்கவோ இடம் தராது. இதைத் தெளிவாக்கி விடலாம்.

          கம்யூனிஸ்ட் இயக்கம் கொள்கை அடிப்படையில் மீண்டும் ஒன்றுபட வேண்டும் என்ற நிலைபாட்டில் சிபிஐ நிற்கிறது என்பது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொருத்தவரை பளிங்கு போலத் தெளிவானது. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளிடையே வலிமையான ஒத்துழைப்பு மேன் மேலும் வளர வேண்டும் என்ற நிலைபாட்டில் சிபிஐ(எம்) கட்சி நிற்கிறது என்பது அந்தக் கட்சியைப் பொருத்தும் அதே அளவு தெளிவானது.

பிரகடனப்படுத்திய தங்கள் தங்கள் நிலைபாட்டில் நின்று மேலும் எவ்வாறு முன்னேறுவது என்பதைப் பற்றியே சிபிஐயும் சிபிஐ(எம்) கட்சியும் சிந்திக்க வேண்டும். இந்த அடிப்படை உண்மையை மறந்து விடுவதை அவர்களின் உலகப் பார்வைக்கு அடித்தளமாக விளங்கும் மார்க்ஸியம் ஒருபோதும் அனுமதிக்காது. இன்று மதசார்பற்ற ஜனநாயகம் மற்றும் உழைக்கும் மக்களின் உரிமைகளை மதவெறி பாசிசம் சூழ்ந்துள்ள மிகக்கடுமையான அபாயத்தை அவை தெளிவாக உணர்ந்தே உள்ளன.  தற்போது கம்யூனிஸ்ட்கள் இடையே முக்கியமான கோஷம் ஒற்றுமை, மேலும் பொருள் பொதிந்த ஒற்றுமையாக மட்டுமே இருக்க முடியும்.

மேற்கண்ட கடமையை மனதில் நிறுத்தி கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பு தினம் பற்றி பார்க்கலாம். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பு தினம் பற்றிய கருத்து வேறுபாடோ சர்ச்சையோ ஒன்றும் புதிதல்ல. கட்சி பிளவுபட்டது எவ்வளவு பழைமையானதோ அந்த அளவு அதுவும் பழைய சர்ச்சையே. பிளவுக்கு முன்பேகூட விவாதிக்கப்பட்டது. துவக்க காலம் தொட்டே கம்யூனிஸ்ட்கள் காலனிய அடக்குமுறைக்கு ஆளானார்கள். அந்த முன்னத்தி ஏர்கள் அக்டோபர் யுகப் புரட்சி வெற்றியால் ஆகர்ஷிக்கப்பட்ட அன்றைய இளைஞர்கள். நாட்டின் மூலைமுடுக்கெங்கும், சிலநேரம் அயல் மண்ணிலும்கூட புரட்சியாளர்கள் சோஷலிசப் பாதையைத் தேர்ந்தெடுத்து சிறு குழுக்களாகச் செயல்பட்டார்கள். பிரிட்டீஷ் ஏகாதிபத்தியம் அந்தப் புதிய எழுச்சியை அபாயமாகப் பார்த்தது. சதி வழக்குகள் புனையப்பட்டன; அப்படித்தான் லாகூர், பெஷாவர், கான்பூர் மற்றும் மீரட் சதி வழக்குகள் வந்தன. இந் நரவேட்டை அனைத்தையும் சந்தித்தாலும் கம்யூனிஸ்ட்கள் அவற்றை மீறியே இந்திய விடுதலைப் போர் நிகழ்ச்சிநிரலில் “பூரண சுயராஜ்யம்” என்ற கோரிக்கையை முதன் முதலில் இடம்பெறச் செய்தவர்கள். தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் மற்றும் எழுத்தாளர்கள் மத்தியில் புரட்சிகர அமைப்புக்களை அவர்கள் கட்டி எழுப்பினர். இப்படி எழுச்சிபெற்ற பெருந்திரள் மக்கள் இயக்கங்களுக்கு ஆற்றலும் வலிமையும் ஊட்ட, இயக்கங்களுக்கு அர்த்தமுள்ள தெளிவை வழங்கும் புரிதலோடு ‘இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி’ (கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆஃப் இந்தியா) கான்பூர் நகரில் 1925ம் ஆண்டு டிசம்பரில் நிர்மாணிக்கப்பட்டது.

இந்த அமைப்பு தினம் பற்றி பிளவுபடாத கம்யூனிஸ்ட் கட்சி காலத்திலேயே சிலருக்கு வேறுவிதமான மாறுபட்ட பார்வைகள் இருந்தன. இதில் ஓர் ஒத்த கருத்து ஏற்பட இந்தோனேஷிய கம்யூனிஸ்ட் கட்சி வழி அமைத்தது. அமைப்பு தினம் பற்றி கட்சியின் நிலைபாட்டை அறிய அந்தத் தோழர்கள் விரும்பினர். அவர்களுக்கு அனுப்ப வேண்டிய  பதிலை முடிவு செய்ய கட்சியின் செயற்குழு 1959 ஆகஸ்ட் 18ல் கூடியது. அந்தச் செயற்குழுவில் அஜாய் கோஷ், பிடி ரணதிவே, பிசி ஜோஷி, எம் பசவபுன்னையா, இசட் ஏ அகமது, எஸ் ஏ டாங்கே, மற்றும் ஏ கே கோபாலன் பங்கேற்றனர்.

கூட்டக் குறிப்புக்களைத் தயார் செய்த பசவபுன்னையா தம் கைப்பட பதிவு செய்தார். விவாத முடிவில் இவ்வாறு பதிவு செய்யப்பட்டது : “கட்சி அமைப்பு நாள் – 1925”. கூட்டக் குறிப்புகளின்படி வேறு எந்தத் தேதியும் பிரஸ்தாபிக்கப்படவில்லை.  இதன் அடிப்படையில் இந்தோனேஷிய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 1959 ஆகஸ்ட் 20 அன்று அனுப்பிய பதிலில் கூறப்பட்டதாவது : “இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி டிசம்பர் மாதம், 1925ம் ஆண்டு அமைக்கப்பட்டது. அதற்கு முன்பும்கூட தனிப்பட்ட கம்யூனிஸ்ட்களும், கம்யூனிஸ்ட் குழுக்களும் நாட்டின் பல்வேறு மையங்களில் இருந்து செயல்பட்டு வந்தனர். ஆனால் நாட்டின் இந்தப் பல்வேறு கம்யூனிஸ்ட் குழுக்களின் பிரதிநிதிகளால் 1925 டிசம்பர் 26-ம்நாள் கான்பூரில் நடந்த கூட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது”. இந்தக் கடிதம் தோழர் பி.டி.ரணதிவே அவர்களால் வரைவு செய்யப்பட்டு அவரால் கையெழுத்திடப்பட்டது.

கட்சி ஆவணங்கள் மேலும் கூறுவதாவது: ஒன்றுபட்ட கட்சியில் இது மீண்டும் விவாதிக்கப்பட்டது. கட்சியின் வங்க மாநிலக்குழு கட்சியின் 40வது அமைப்பு தினத்தை 1960ம் ஆண்டில் கொண்டாட முடிவு செய்தது; இது தாஷ்கண்ட் கூட்டம் நிகழ்ந்த ஆண்டை அடிப்படையாகக் கொண்ட முடிவு. இதனையொட்டி அன்றைய ஒன்றுபட்ட கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் இஎம்எஸ் நம்பூதிரிபாட் வங்கத் தலைமைக்கு 1960 ஜூன் 10ம் தேதி எழுதிய கடிதத்தில் தெரிவித்ததாவது: “உங்களுடைய மாநிலக்குழு 1961ல் கட்சியின் 40வது அமைப்பு தினத்தை அனுசரிக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாகத் தெரிய வந்தது. (மத்திய) செயற்குழு இது பற்றி விவாதித்து, இதனைத் தேசியக் குழுவைத் தவிர கட்சியின் எந்த அமைப்பும் முடிவு செய்ய முடியாது எனத் தீர்மானித்தது. எனவே இந்தப் பிரச்சனையை கட்சியின் அடுத்த தேசியக் குழுக் கூட்டத்தில் எழுப்புவதே முறையானதாக இருக்கும்” 

இதே பொருள் பற்றி 1963 ஜூன் 5ம் நாள் செயற்குழு சார்பில் தோழர் எம் என் கோவிந்தன் நாயர் வெளியிட்ட அறிக்கை:

“சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நாம் தெரிவிக்க விரும்புவது யாதெனில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கான்பூரில் கம்யூனிஸ்ட்கள் மாநாட்டில் 1925 டிசம்பர் 26ம் நாள் அமைக்கப்பட்டது. இதற்கு முன்பும் கம்யூனிஸ்ட் அகிலத்திடமிருந்து வழிகாட்டுதல்களைப் பெற்று நாட்டின் பல பகுதிகளில் சுமார் ஏழு கம்யூனிஸ்ட் குழுக்கள் செயல்பட்டு வந்தனர். ஆனால் கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆஃப் இந்தியா என்று அறியப்படும் கட்சி மேற்குறிப்பிட்ட கான்பூர் மாநாட்டில், 500க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்க,  1925 டிசம்பர் 26ம் நாள் அமைக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்தது. அம்மாநாட்டில் பங்கேற்ற குறிப்பிடத்தக்க முக்கியமான தோழர்கள் முஸாபர் அகமத் (கல்கத்தா), எஸ் வி காட்டே, ஆர் எஸ் நிம்க்கர் மற்றும் ஜெ பி பகர்கட்டா (பாம்பே), அப்துல் மஜீத் (லாகூர்), சி கே அய்யங்கார் மற்றும் சிங்காரவேலு செட்டியார் (மெட்ராஸ்). 1925 டிசம்பரில் கூடிய மாநாட்டின்போது எஸ் ஏ டாங்கே மற்றும் சௌகத் உஸ்மானி சிறையில் இருந்தனர். ”கட்சியின் செயற்குழு டிசம்பர் 28ல் கூடி தோழர் எஸ் வி காட்டே அவர்களைப் பொதுச் செயலாளர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுத்தது.” இந்த நிகழ்வுகள் எல்லாம் 1964க்கு முன் நிகழ்ந்தவை.

இந்தியப் புரட்சி மற்றும் இந்தியத் தொழிலாளர்களின் நலன்களைப் பொருத்த அளவில் 1964 கட்சிப்பிளவு துரதிருஷ்டவசமானது. இருந்த போதினும், சோவியத் மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சிகளிடையே ஏற்பட்ட தத்துவார்த்த முரண்பாடுகளின் ஒரு பகுதியாக நிகழ்ந்துதான் விட்டது. மற்றொரு முரண்படும் விஷயம், பிரதான எதிரியை எதிர்க்கும் போராட்டத்தில் இந்திய பூர்ஷ்வாக்கள் குறித்த அணுகுமுறை. இன்று இந்த பல்வேறு கேள்விகளுக்குமான விடையை, பிரிவு நிகழ்ந்து கடந்து விட்ட இந்த 55 ஆண்டுகளில், சரித்திரம் ஓரளவு வழங்கியிருக்கிறது. பிளவு நடந்த சூழ்நிலையில் நிலவிய, உணர்வு மேலிட்டால் முன் வைக்கப்பட்ட இரண்டு பக்கத்தின் பல வாதங்களும், பிரிந்து இருப்பதன் பின்னணியிலேயே நியாயப்படுத்த முடியும். இந்த வாதங்கள் எல்லாம் இயல்பாகப் பிளவின் காரணமாகத் தூண்டப்பெற்று அதனோடு இணைந்த  தன்வயக் காரணிகளின் தன்உணர்ச்சி ஆதிக்கத்தில் சொல்லப்பட்டவையே தவிர, எதார்த்தமான புறநிலைக் காரணிகள் அனைத்தையும் பரிசீலித்து முன்வைக்கப்பட்டவை அல்ல. ஆனால் மார்க்ஸியம் கற்பித்த மார்க்ஸிய ஆய்வு வழிமுறை புறநிலை உண்மைகளை, தன்னுணர்ச்சி கடந்து தன்நிலை தாண்டி பரிசீலிப்பது அல்லவா.

எனவே கட்சி அமைப்பு நாள் எது என்பது  குறித்த மலர்ந்துவரும் புதிய நிலைபாடுகளும்கூட மார்க்ஸிய ஞான வெளிச்சத்தில் காய்தல் உவத்தல் அற்ற வரலாற்று பார்வையோடே பரிசீலிக்கப்பட வேண்டும். ‘கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆஃப் இந்தியா’, பாரத மண்ணில் அமைக்கப்பட்டதா அல்லது அன்னிய மண்ணில் அமைக்கப்பட்டதா?  இந்த மிகத் தூலமான அடிப்படை கேள்வி சிந்திக்க வேண்டிய முக்கியமான ஒன்று. நம்முடைய வர்க்க எதிரிகள் கட்சியின் மீது ஓர் அயல்நாட்டு முத்திரைச் சீட்டைக் கட்டிவிடத் தீய நோக்கத்தோடு முயல்கிறார்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும். [உதாரணமாக, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், நாட்டில் நடைபெறும் அடித்துக் கொல்லும் கும்பல் படுகொலைகளையே அயல்நாட்டு இறக்குமதிச் சரக்கு என்று நிராகரிக்க முயல்வதைச் சொல்லலாம் – இன்றைய ஆட்சியாளர்களின் வெறியுணர்வு ஊட்டப்பெற்ற தேசியவாதம் ஒரு யதார்த்த அபாயம் ( மொழிபெயர்ப்பாளர் சேர்த்தது ) ].

1920-ம் ஆண்டு தாஷ்கண்ட்டில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட ஏழு பேரில் இருவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்ற உண்மையை அடிப்படையாகக் கொண்டு வர்க்க எதிரிகள் அவர்களின் தாக்குதல்களைக் கூர்மைப்படுத்தக்கூடும். இப்படிக் கூறுவதால் தாஷ்கண்ட் கூட்டத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை எந்தவகையிலும் குறைத்து மதிப்பிடுவதாகக் கொள்ளலாகாது.  1925-ம் ஆண்டு டிசம்பர் கான்பூரில் நடைபெற்ற அமைப்பு மாநாடு மேகக் கூட்டமாய் கூடிக் கலைந்த  நொடிப் பொழுது திடீர் நிகழ்வு அல்ல. இந்தியாவில் செயல்பட்டுவந்த ஏழு கம்யூனிஸ்ட் குழுக்களோடும், தாஷ்கண்ட்டில் அமைக்கப்பட்ட கம்யூனிஸ்ட் குழுவின் பெரும் பங்களிப்போடும் அந்த அமைப்பு நிர்மாணிக்கப்பட்டது. எனவே, அந்த வரலாற்றுச் செயல்முறைகளையும் அதன் பங்களிப்பையும் முழுமையாக அங்கீகரிக்கும் வகையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தனது நூற்றாண்டு விழாவை 2025-ம் ஆண்டே கொண்டாட வேண்டும்.

கம்யூனிஸ்ட்களின் ஒற்றுமை என்ற லட்சியத்தை நோக்கிய நமது பயணத்தில் வரலாறு சம்பந்தப்பட்ட இந்த விஷயத்தையும் நாம் தத்துவார்த்த, அரசியல், மற்றும் அமைப்புநிலை அம்சங்களோடு இணைத்தே விவாதிக்க வேண்டும். மிகச் சிறந்த தத்துவவாதியும் சமூக சீர்திருத்தவாதியுமான ஸ்ரீ நாராயணகுரு அருளியபடி, ’’எந்த விவாதமும் அதன் நோக்கம் –’வாதமிட்டு வெல்வதாக இல்லாமல், அதற்கு மாறாக (விவாதிக்கப்படும் பொருள் பற்றி) மேலும் அறிந்து புரிந்து கொள்வது மற்றும் (பிறரையும்) அறியச் செய்து புரிய வைப்பது’ – என்பதாக மேல்நோக்கி எடுத்துச் செல்லப்பட வேண்டும்” என்பதாக இருக்கட்டும். இந்த விவாதம் சிபிஐ, சிபிஐ(எம்) அணியிரையும் ஏனைய முற்போக்குச் சக்திகளையும் அடிப்படை லட்சியம் நோக்கி மேலும் உணர்வூட்டி வலிமை பெறச் செய்யட்டும்.

                   “நல்லதோர் வீணையை மீட்டுவோம்

                 மாநிலம் பயனுற வாழ்வதற்கே!”

--நன்றி : நியூஏஜ்

தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

 

No comments:

Post a Comment