Wednesday 30 September 2020

வரலாற்றுத் தலைவர்கள் வரிசை 14 தோழர் எஸ் எஸ் மிராஜ்கர்

 

நமது பெரும் தலைவர்கள் வாழ்விலிருந்து :

சில சித்திரத் சிதறல்கள் -14


எஸ்.எஸ். மிராஜ்கர் :

தொழிற்சங்கம், கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்டிய தலைவர்

--அனில் ரஜீம்வாலே

(நியூ ஏஜ் செப்.20 –26, 2020)

            சாதாரணப் பின்புலத்திலிருந்து வந்த, சாந்தாராம் சௌலராம் மிராஜ்கர், இந்தியாவில் தொழிற்சங்க இயக்கம் மற்றும் கம்யூனிச இயக்கத்தை நிறுவிய தலைவர்களில் ஒருவராக மேலெழுந்தார். 1899ம் ஆண்டு பிப்ரவரி 8ம் நாள் மகாராஷ்டிர மாநிலம் ரெய்கார்க் மாவட்டம், மன்கான் தாலுக்காவில் உள்ள காரவல்லி என்ற கிராமத்தில் பிறந்தார். சிறிய பிளாட் மட்டுமே வைத்திருந்த அவருடைய தந்தை சௌலராமுக்குக் குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளையே நிறைவேற்ற இயலாத ஏழ்மை. எனவே அவர் துணிகள் விற்பனையோடு கூடிய சிறிய மளிகைக் கடை ஒன்றைத் துவக்கினார். நல்ல வேலை தேடி அவரது மூத்த மகன் உரன் என்ற பகுதிக்குச் செல்ல மிராஜ்கரும் சகோதரருடன் சென்று அங்கேயே நடுநிலைப் பள்ளித் தேர்வை முடித்தார். அன்னையும்கூட பாம்பேயில் டெக்ஸ்டைல் ஆலை ஒன்றில் வேலை செய்தார். 13 வயதிலேயே மிராஜ்கர் ஒரு தையல்காரரிடம் பயிற்சிப் பணியாளராகச் சேர்ந்தார். 1914ல் மராதா உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து மெட்ரிகுலேஷன் தேர்வில் வெற்றி பெற்றார். 

தொழிலாளர் இயக்கத்தில்

            உழைக்கும் வர்க்கத்தின் வாழ்க்கை நிலைமையை முதலாவது உலக யுத்தம் கடுமையாகப் பாதித்தது. 1917ல் தபால் ஊழியர்கள், (டெக்ஸ்டைல்) ஜவுளி ஆலைத் தொழிலாளர்கள் நீண்ட வேலைநிறுத்தத்தில் இறங்கினர். பள்ளிப் படிப்பை முடித்த மிராஜ்கர் தொழிலாளர் இயக்கத்தில் இணைந்தார். பிரஞ்ச் வங்கி ஒன்றில் பணியில் சேர்ந்தார். 1920ல் ஏஐடியுசி அமைப்பின் துவக்க மாநாட்டின்போது ஓட்டல் தொழிலாளர்கள் மற்றும் டெக்ஸ்டைல் தொழிலாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்ட மாபெரும் பேரணியை நடத்தினார்.

            1920ல் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று ஒயின் ஷாப் கடைமுன் மறியல் செய்து கைதானார். அவருக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்ட்டது.

தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் கட்சி ஸ்தாபித்தல்

          பம்பாய் காங்கிரசுக்குள் இருந்த ‘காங்கிரஸ் லேபர் பார்ட்டி’யின் மறுவடிவமாக 1927ல் பம்பாயில் ‘தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் கட்சி’ [Workers’ and Peasants’ Party (WPP), Kirti Kisan Party என்றும் அழைக்கப்படும்] கட்சி அமைக்கப்பட்டது. துந்திராஜ் தெங்கடி அதன் தலைவர்,  மிராஜ்கர் செயலாளர். அந்தக் கட்சி அமைப்பில் எஸ்வி காட்டே, நிம்கர், ஜோக்லேகர், ஜாப்வாலா முதலான பிரபல தலைவர்களும் இடம் பெற்றிருந்தனர்.

1927ல் பாம்பேயில் வெளியான ‘கிராந்தி’ (புரட்சி) என்ற மராத்தி வார இதழின் முதல் ஆசிரியர் மிராஜ்கர்.

1928ல் பம்பாயில் நடந்த ஜவுளி ஆலைத் தொழிலாளர்களின் ஆறுமாதங்கள் நீண்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க வேலைநிறுத்தத்தின் முக்கிய அமைப்பாளர்கள் டாங்கே, ஜோக்லேக்கர், நிம்கர், விவி கிரி மற்றும் பிறருடன் மிராஜ்கரும் திகழ்ந்தார். புகழ்பெற்ற ’கிர்னி காம்கார் யூனியன்’ (மில்களின் தொழிலாளர் சங்கம்) அப்போதுதான் உதயமானது. அந்தச் சங்கமானது அதற்கு முன் இருந்த கிர்னி காம்கார் மகாமண்டல் என்ற அமைப்பின் செம்மையாகத் திரட்டிக் கட்டமைக்கப்பட்ட அமைப்பாகும். தாதரில் இருந்த கஸ்தூர் சந்த் மில்லின் தொழிலாளர்கள் முதலில் வேலைநிறுத்தத்தில் இறங்க, பத்து நாட்களுக்குள் தொழிலாளி வர்க்கம் முழுமையும் பின் தொடர்ந்தது. மிராஜ்கர் முனிசிபல் தொழிலாளர்களையும் திரட்டினார்.

1927 பாம்பேயில் ’லெனின் தினம்’ அனுசரிக்க சௌபாட்டியில் (கிர்காவ் மாவட்டத்தில் சௌபாட்டி பீச் என்பது புகழ்பெற்ற கடற்கரை) பிரம்மாண்ட கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ததில் மிராஜ்கர் தீவிரமாகப் பங்கேற்றார். அமெரிக்காவில் பொய்யான வழக்கில் சாக்கோ மற்றும் வென்ஸெட்டி தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து நடந்த கண்டன எதிர்ப்பு இயக்கத்தில் பங்கேற்று அது பற்றிய பிரச்சாரக் கையேடுகளை விநியோகித்தார். தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் கட்சி முதன் முறையாக 1927ல் மேதினத்தைப் பெரும் சிறப்பாகக் கொண்டாடியது.

[பிரிட்டனின் 1919ம் ஆண்டு சட்டத்தை ஆராய சர் ஜான் சைமன் தலைமையில் --இந்தியப் பிரதிநிதிகள் யாரும் இடம் பெறாத-- 7 பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய சட்ட ஆணையம் அமைக்கப்பட்டு, இந்தியாவில் ஆய்வு நடத்த வந்தபோது] அந்தச் சைமன் குழுவை நிராகரித்து இயக்கம் நடத்தப்பட்டது. 1928 பாம்பேயில் மிராஜ்கர் மிகத் தீவிரமாக அந்தப் புறக்கணிப்பு இயக்கத்தை கட்டமைத்து நடத்த, அந்தக் குழு பாம்பே நகரத்திற்குள் நுழைய முடியாமல் நேரே பூனா செல்ல நேர்ந்தது. ‘சைமன் கமிஷன் ஏழு’க்காக ஏழு கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன. சைமன் குழுவை எதிர்த்துத் தொழிலாளர்கள் விவசாயிகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இளைஞர் மாநாட்டினர் 50ஆயிரம் மக்கள் அடங்கிய மிகப் பிரம்மாண்டமான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

மீரட் சதி வழக்கு, 1928

            இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்ட பிறகு வேகமாக வளர்ந்ததால், அதிர்ச்சி அடைந்த பிரிட்டீஷ் அரசு கடுமையான அடுக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடும் வகையில் 1929 மார்ச் 20ம் நாள் நாடு முழுவதுமிருந்த கம்யூனிஸ்ட் மற்றும் தொழிற்சங்கப் பெரும் தலைவர்கள் மிராஜ்கர் உட்பட, 32பேர் மீது சதி வழக்குகளைப் புனைந்து அவர்கள் அனைவரையும் மீரட்டில் சிறை வைத்தனர். நீதிமன்றத்தில் மிராஜ்கரின் அறிக்கை, தொழிலாளர்கள் விவசாயிகள் கட்சியின் நோக்கம் இந்திய தேசத்திற்கு விடுதலையை புரட்சியின் மூலம் அடைவது என்பதைத் தெளிவுபடுத்தியது. மிராஜ்கருக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டாலும், தேசிய மற்றும் சர்வதேசிய நாடுகளின் பரவலான அழுத்தத்தின் காரணமாக 1933ல் மற்றவர்களுடன் சேர்ந்து அவரும் விடுவிக்கப்பட்டார்.  

கட்சி மறுசீரமைப்பு

          BTரணதிவேயும், எஸ்.வி.தேஷ்பாண்டேயும் செக்டேரியனிசத்தையும் தாவிப்பாயும் சாகசத்தையும் இடையூறில்லாமல் அமுல்படுத்தினர் என்றும் காங்கிரஸ் எதிர்ப்பு கட்டுப்பாடின்றி இருந்ததாகவும் அப்போதைய வெளிச்சூழ்நிலையை மிராஜ்கர் விவரிக்கிறார். மேலும் தேஷ்பாண்டே தனது சொந்த ‘போல்ஷ்விக் (பாணி) கட்சி’யையும் அமைத்தார் என்று கூறும் மிராஜ்கர், திடீரென்று ரணதிவே 1929ல் தொழிலாளர்களின் பொது வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் தந்தது, தொழிலாளர்களின் அமைப்புகளைச் சீர்குலைத்தது என்றும் கூறுகிறார்.

            (மீரட் சதிவழக்கில் சிறைசென்ற தலைவர்கள்) விடுவிக்கப்பட்ட பிறகு தோழர்கள் கூடி கட்சித் தலைமையை அமைத்தார்கள். முதலில் டாக்டர் அதிகாரி, பின்பு எஸ்எஸ் மிராஜ்கர் அதன் பின் சோமநாத் லாகிரி சிறிது காலம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர்களாகச் செயல்பட்டனர். ஒருவர் பின் ஒருவராகக் கைதாக, இறுதியில் பி சி ஜோஷி பொதுச் செயலாளர் பொறுப்பேற்றார்.

            அந்த இடைக்காலத்தில் மிராஜ்கர் கைதாகி எரவாடா சிறையில் அடைக்கப் பட்டார்.

            1934ல் மிராஜ்கர் ’இளம் தொழிலாளர்கள் லீக்’ அமைப்பிற்கு அலுவலகம் ஏற்பாடு செய்தார். ஒன்றுபட்ட தேசிய முன்னணி அமைப்பதற்கான வாய்ப்புகளை ஆராய மிராஜ்கர், பல காங்கிரஸ்காரர்கள், ஜெயபிரகாஷ் நாராயண், மினு மசானி, அசோக் மேத்தா, யூசுப் மெஹ்ரலே முதலான சோஷலிஸ்ட்டுகளையும் பிறரையும் சந்தித்தார்.

கம்யூனிஸ்ட் அகிலம், காமின்டர்ன் காங்கிரசின் சாகசம், 1935

            1935ல் பிரிட்டீஷ் கம்யூனிஸ்ட் கெம்ப்பெல் மூலமாக 7வது காமின்டர்ன் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொள்ள மிராஜ்கர் மற்றும் இருவருக்கு அழைப்பு கிடைத்தது. கொழும்புவிலிருந்து கப்பல் மூலம் சிங்கப்பூர் சென்று அங்கே மலாயா முதலான வழியே மேலும் பயணத்தைத் தொடர சிலநாட்கள் தங்கி ஏற்பாடுகள் செய்தனர். ஆனால் ஒரு உளவு அதிகாரி அவர்களை அடையாளம் கண்டுவிட கைது செய்யப்பபட்டு பின்னர் திருப்பி அனுப்பப்பட்டனர். அதனைத் தொடர்ந்து பல மாதங்கள் மிராஜ்கர் ஒரு ‘சாது’ வேடத்தில் பூனா அருகே தலைமறைவாக இருந்தார்!.

தியோலி தடுப்பு முகாமில்

1940ல் மிராஜ்கர் மீண்டும் கைது செய்யப்பட்டு இம்முறை ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் –மெர்வாரா பாலைவனத்தில் அமைந்த தியோலி தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டார். முகாம் எண் 2ல் அவர் 200 கைதிகளுடன் இருந்தார்; அவர்களில் சுமார் 160 கம்யூனிஸ்ட்கள் மற்றும் 30 சோஷலிஸ்ட்களும் அடங்குவர். ஜெயபிரகாஷ் நாராயண் அவர்களில் ஒருவர். மேலும் டாங்கே, BPL பேடி, ரஜினி பட்டேல், பாட்கர், பிடிஆர், சோலி பாட்லிவாலா ஆகியோர் இருந்தனர்.

            அவர்களில் சிலரை வேறு முகாமிற்கு மாற்ற நினைத்தபோது, பிடிஆரும் வேறுசிலரும் சிறை அலுவலர்களைத் தாக்குவது, கற்களால் அடிப்பது முதலான சாகச ‘எதிர்ப்பை’ மேற்கொள்ள யோசனை தெரிவித்தனர். அந்த எதிர்ப்பில் துப்பாக்கிக்சூடு நடத்தப்பட்டு சிலர் இறக்க நேர்ந்தாலும் அதனால் இழப்பு பாதகம் இல்லையாம்!

            அத்தகைய ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பு வாக்கெடுப்பு நடத்தலாம் என மிராஜ்கர் யோசனை தெரிவித்தார். பிடிஆரின் திட்டத்திற்கு ஆதரவாக 12தோழர்களுக்கு மேல் இருந்த அந்தப் பெரிய கமிட்டியில் இரண்டு வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

            தியோலியில் கருக்கொண்டு துவங்கிய 1942ன் பிடிஆர் (செக்டேரியன், சாகச) பாதையுடன் முழுமையாக உடன்படவில்லை என மிராஜ்கர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா விடுதலை அடைந்தது

            1947 ஆகஸ்ட் 15ல் இந்தியநாடு விடுதலை அடைந்ததை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்று பல விழாக்களுக்கு ஏற்பாடு செய்தது. பாம்பே சிவாஜி பூங்காவில் பிரம்மாண்டமான அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. சிபிஐ பிரதிநிதியாக மேடையில் எஸ்எஸ் மிராஜ்கர் வீற்றிருந்தார். எஸ்கே பாட்டீல் முதலானோர் பேசிய பிறகு மிராஜ்கரின் முறை வந்தது. தனது பேச்சில் விலைவாசி ஏற்றம், கறுப்புச் சந்தை, அரசின் தோல்விகளைப் பற்றி விவரிக்கத் தொடங்கும்போது மைக் அணைக்கப்பட்டது. மைக் நிறுத்தப்பட்ட போதும், மிராஜ்கர் பத்து பதினைந்தாயிரம் மக்கள் கூட்டம் கேட்கும் அளவு தனது குரலை உயர்த்தினார். அடுத்தப் பேச்சாளர் வந்தபோது மைக் உயிர்பெற்றது! என்ன ஏய்த்தல் தந்திரம் நடத்தப்பட்டிருக்கும் என்பதை மக்கள் புரிந்து கொண்டனர். 1948ல் பிசி ஜோஷி மாற்றப்பட்டு BTரணதிவே பொதுச் செயலாளர் ஆனதும், விரைவில் கட்சி சாகசத்தில் இறங்கியது. இரண்டாவது கட்சி மாநாட்டில் மிராஜ்கர் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். பாம்பே திரும்பிய உடன் அவர் கைது செய்யப்பட்டு, பிரபல வழக்கறிஞர்கள் KTசுலே, ஏஎஸ்கே அய்யங்கார் இவர்களோடு, ஆர்த்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டார்.  அவர்களது ஆட்கொணர்வு மனுவை நீதிபதிகள் எம்சி சாக்லா (பின்னாட்களில் நேரு அமைச்சரவையில் கல்வி, வெளியுறவுத்துறை அமைச்சரானவர்) மற்றும் கஜேந்திர கட்கர் விசாரித்தனர். ஆயுதங்கள் சேகரித்தது, (இராணுவப்) படையை உருவாக்கியது போன்று தன்மீது சுமத்தப்பட்டக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்து மிராஜ்கர் நீதிமன்றத்தில் ஒன்னரை மணிநேரம் திறமையாக வாதாடினார். தன்னிடம் ஒரு கத்திகூட இல்லை என்றார் மிராஜ்கர்! 1929ல் மீரட் சதி வழக்கில் மிராஜ்கர் முதலானோர்க்கு எம்சி சாக்லா வழக்கறிஞராக ஆஜராகி ஆதரித்தவர். தற்போது அதே சாக்லா நீதிபதியாக மிராஜ்கரின் வாதக் கருத்துகளை ஏற்றுக் கொண்டாலும், தடுப்புக் காவல் சட்டங்கள் முன்பு அவர் ஏதும் செய்ய இயலாதவராக இருந்தார்! மிராஜ்கர் மீண்டும் சிறைக்குத் திரும்ப அனுப்பப்பட்டார்.  

சம்யுக்த மகாராஷ்டிரா இயக்கம்

            1950களில், பாம்பேயுடன் மகாராஷ்டிரா மாநிலம் அமைக்க வற்புறுத்திப் போராடிய சம்யுக்த மகாராஷ்டிரா சமிதி (SMS) இயக்கத்தின் முன்னணியில் மிராஜ்கர் செயல்பட்டார்.  1955 நவம்பர் 21ம் நாள் பாம்பேயில் நான்கு முதல் ஆறு லட்சம் பேர் கலந்து கொண்ட மிகப் பெரிய பேரணி நடைபெற்றது. 

அதில் நூற்றுக் கணக்கானோர் பலியாயினர், ஆயிரமாக மக்கள் காயமடைந்தனர்; அதன் பிறகு சில ஆண்டுகள் வேலைநிறுத்தம், பேரணி, கூட்டங்கள் என்பதே அன்றாட நிகழ்வாயிற்று. சிறைக் கூடங்கள் நிரம்பி வழிந்தன. அங்கு, இங்கு என எல்லா இடத்திலும் மிராஜ்கர் இருந்தார். எஸ்.ஏ.டாங்கே, சேனாபதி பாபட், லால்ஜி பென்ட்சே, ஆச்சார்ய ஆத்ரே எனப் பலரும் முன்னிலை பெற்றுத் தலைவர்களாக உருவாகினர்.

            சம்யுக்த மகாராஷ்டிரா சமிதி தேர்தல்களில் வெற்றி வாகை சூடி அதிகாரத்திற்கு வெகு அருகில் வந்தது.

            1960 மே முதல் நாள் ‘சம்யுக்த மகாராஷ்டிரா’ (ஒன்றுபட்ட மராட்டியம்) பாம்பேயுடன் சேர்த்து அமைக்கப்பட்டது. அது பற்றி மிராஜ்கர் எழுதிக் குவித்துள்ளார்.

படம் நன்றி பாம்பே மிரர்

கோவா விடுதலை    

            கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கோவா விமோசன் சமிதி மூலம் கோவா விடுதலைப் போராட்டம் 1946ல் துவங்கியது. விடுதலைப் படைகளால் நகர் ஹவேலி 1954ல் விடுவிக்கப்பட்டது, மேலும் தாத்ரா (1954) ஜூலை 23ல் விடுதலையானது. (ஆட்சி செய்த) போர்த்துகீசியர் துப்பாக்கிச் சூடு நடத்திய போதிலும், மூவர்ணக்கொடியை ஏற்றி வைத்து ‘சுதந்திர அரசு’ (ஆசாத் சர்க்கார்) அறிவிக்கப்பட்டது. நரோலி மற்றும் கிராமங்கள் ஜூலை 29லும் தொடர்ந்து ஆகஸ்ட் 1ல் சில்வாசாவும் கோவா மக்கள் கட்சி மற்றும் ஆசாத் கோமந்தக் தள் கட்சிகளால் கைப்பற்றப்பட்டன. வீரம்செறிந்த இப்போராட்டங்களில் பங்கேற்ற கம்யூனிஸ்ட்களால் நரோலிக்கு அருகிருந்த பகுதிகள் விடுதலை செய்யப்பட்டன.

            எஸ்ஏ டாங்கே மற்றும் பிறருடன் இணைந்து வரலாற்றுப் புகழ்மிக்க கோவா விடுதலை சத்யாகிரகத்தில் மிராஜ்கர் முன்னணிப் பங்கு வகித்தார். கொல்லப்பட்ட தியாகிகளின் பூத உடல்களோடு மிராஜ்கர் உடன் திரும்ப வந்தபோது ஆயிரக்கணக்கானோர் அதில் பங்கேற்றனர். இறுதியாக இந்திய இராணுவம் 1961 டிசம்பரில் கோவாவை முற்றிலுமாக விடுவித்தது.

பாம்பே மேயராக

            1958 பாம்பே மாநகராட்சித் தேர்தலில் சம்யுக்த மகாராஷ்டிர சமிதி பெரும்பான்மை பெற்றதும் மிராஜ்கர் அம்மாநகராட்சியின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பலமுறை மாநகராட்சிக்கு அவர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த ஆண்டு டெல்லி மேயராகவும் ஒரு கம்யூனிஸ்ட், அருணா ஆஸப் அலி, இருந்தார். மிராஜ்கர் தொழிலாளர்களின் நலனுக்காகப் பல்வேறு நிவாரண நடவடிக்கைகளை எடுத்தபோதும், சோஷலிஸ்ட்களும் வேறு சிலரும் தொல்லைதரும் வண்ணம், மற்றொரு முறை கிராக்கிப்படி உயர்வு கோரி, தொழிலாளர் வேலைநிறுத்தங்களைத் தூண்டினர் – அந்த அளவு ஊதியத்தை மாநகராட்சி வழங்குவது சாத்தியமற்றது என அறிந்தே செய்தனர். டாங்கேயும் சோஷலிஸ்ட் தலைவர் எஸ்எம் ஜோஷியும் தலையிட்டதால் மிராஜ்கரால் மாநகராட்சி நிர்வாகத்தைத் தொடர்ந்து நடத்திச் செல்ல முடிந்தது.

            இந்த நேரத்தில் மிராஜ்கர் ஏஐடியுசியின் தலைவராகவும் இருந்தார்.

கட்சிப் பிளவும் மிராஜ்கரும்

            1964ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவு ஏற்பட்டபோது மிராஜ்கர் முடிவெடுக்க முடியாமல் இருந்ததோடு, அந்தப் பிளவு அவரை ஆழமாகப் பாதித்தது. இதனால் இரண்டு கட்சிகளுக்கும் வெளியே எதனோடும் சேராமல் சிறிது காலம் இருந்தார். சீன ஆக்கிரமிப்பு நடந்தபோது அதனை அவர் கண்டித்தார்; பல தருணங்களில் பிடிஆர் (செல்லும்) பாதையைத் திரும்பத் திரும்ப விமர்சித்துள்ளார். சில கொள்கைகளில் மாறுதல் இருக்கும் என்று உறுதிமொழி அளித்து சிபிஐ (எம்) கட்சியில் சேர இணங்கும்படி மிராஜ்கர் வற்புறுத்தப்பட்டார். தனியான ஒரு தொழிற்சங்க அமைப்பு துவங்கத் திட்டமிடப்பட்டதால் 1970 ஏஐடியுசி குண்டூர் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என மிராஜ்கருக்கு [சிபிஐ (எம்) கட்சி] உத்தரவிட்டிருந்தும், அதனை மீறி ஏஐடியுசி தலைவர் என்ற முறையில் அந்த மாநாட்டில் மிராஜ்கர் கலந்து கொண்டார். அதனை அடுத்து எதிர்பார்க்கப்பட்டபடி சிபிஐ (எம்) கட்சி மிராஜ்கரைக் கட்சியிலிருந்து நீக்கியது. சி இராஜேஸ்வர ராவ் அறிவுத்தலின்படி 1973ல் மிராஜ்கர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். தொடர்ந்து அனைத்திந்திய தொழிற்சங்கக் காங்கிரஸ், ஏஐடியுசியில் பணியாற்றினார்.

            எஸ் எஸ் மிராஜ்கர் 1980 பிப்ரவரி 15ம் நாள் இயற்கை எய்தினார். மிக உயர்வாக மதிக்கப்பட்ட தொழிலாளர்கள் இயக்க, கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவரின் மறைவுக்கு அனைவராலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

            உழைக்கும் வர்க்கத் தலைவர், எஸ் எஸ் மிராஜ்கரின் நினைவைப் போற்றுவோம்!      

                                                                                                                             --தமிழில் : நீலகண்டன்,

 என்எப்டிஇ, கடலூர்

 

No comments:

Post a Comment