Wednesday 28 October 2020

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எப்படி இருக்க வேண்டும்?

 

உருவாகி வரும் உலக ஒழுங்கமைவு முறையும் இந்தியாவும்

--டி ராஜா

        “கடந்த சமீப காலங்களில் இந்திய அரசின் வெளிஉறவுக் கொள்கை முன்னுரிமைகள் மேலும் மேலும் அமெரிக்கா பக்கம் சாய்ந்து வருகிறது; புதிய தாராளமயக் கட்டமைப்பின் பால் தங்களை அவர்கள் ஒப்படைத்து விட்டதையே அது காட்டுகிறது. இந்தக் கொள்கை மாற்றத்திற்கு நடைமுறைக்கேற்ற இயல்பான எந்த நியாயங்களும் இல்லை; மாறாக, இந்திய நலன்களை அமெரிக்க நலன்களோடு முடிச்சுப் போடுவது மோசமான அழிவையும், சார்ந்திருக்கக் கூடிய இழிநிலையையும் இந்தியாவிற்கு ஏற்படுத்திவிடும். மோடி அரசின் அமெரிக்கச் சார்பு கொள்கைகளால் இந்தியாவிற்கு லாபம் ஒன்றும் இல்லை, ஆனால் பாரதத்தின் தார்மிக ரீதியான மிக உயர்ந்த அடிப்படையை அது பறித்து விட்டது.”

            நவீன வரலாற்றில் மிக மோசமான சுகாதார நெருக்கடியில் உலகம் தத்தளிக்கும்போது, வேறுசில நீண்டகாலப் பிரச்சனைகளும் தலையெடுக்கின்றன. லடாக்கில் இந்தியா சீனாவிற்கு இடையே பதற்றம், (ஜோர்டான் நதியின்) மேற்குக் கரைப் பகுதியை இஸ்ரேல் தனது நாட்டுடன் சேர்த்துக் கொள்ளப் போடும் திட்டங்கள் -- உலக மக்கள் அனைவரும் தொற்று, நோய், துன்பம், பேரதிர்ச்சி மற்றும் பெருமளவிலான வேலைஇன்மை இவற்றின் பிடியில் சிக்கி உழலும்போது எழுப்பப்பட வேண்டிய பிரச்சனைகளா? ஆனால் இவை போன்ற பிரச்சனைகள் உலக அதிகாரப் போட்டி இயக்கவியலைச் சுற்றிய விவாதங்களை மேலே கொண்டு வந்துள்ளன.

            மேற்கு எல்லைப் பகுதி பதற்றத்தால் இந்தியா சீனா இரண்டு தரப்பிலும் ஏற்பட்ட உயிர் இழப்புகள், ஆசியாவின் அருகருகே அமைந்த பிரம்மாண்டமான அண்மை தேசங்கள் இரண்டின் மோதல்கள் தீர்க்கப்படாததையே வெளிப்படுத்துகிறது. சொத்துக்களைக் கட்டாயப்படுத்தித்  துறந்துவிட்டு ஓடச் செய்து பாலஸ்தீனர்களை நாடற்றவர்களாக்க, மேற்குக்கரையைக் கபளிகரம் செய்ய டோனால்டு டிரம்பின் ஆதரவோடு செயல்படும் இஸ்ரேலின் நீண்டகாலத் திட்டத்திற்குப் புது உத்வேகம் கிடைத்துள்ளது.

            இந்த இரண்டு நிகழ்வுகளும், உருவாகி வரும் உலக ஒழுங்கமைவு அதிகாரப் போட்டி இயக்கவியல் குறித்துப் பரிசீலிக்கத் தூண்டியுள்ளன. 1990களில் சோவியத் யூனியன் சிதறிய பிறகு அமெரிக்க அரசியல்விஞ்ஞான தத்துவவாதியான ஃபிரான்சிஸ் ஃபுக்குயாமா போன்ற சில விமர்சன உற்சாகிகள், ‘வரலாற்றின் முடிவு’ என அவசரப்பட்டு பிரகடனப்படுத்தத் தலைப்பட்டனர். (‘என்ட் ஆஃப் ஹிஸ்டரி‘ என்பது அவர் எழுதிய கட்டுரை மற்றும் நூலின் தலைப்பாகும். அதில் இனி இரண்டு முகாம்கள் இல்லை, மேற்கத்திய தாராள ஜனநாயக முறை ஒன்று மட்டுமே கோலோச்சும் என அவதானித்திருந்தார்). மேலும் சித்தாந்தக் கொள்கை என்பது முக்கியமற்றதும், உலக அரசியலை நடத்தப் பொருத்தமற்றது ஆகும் எனவும் எழுதினார். ‘இருவேறு உலகத்து இயற்கை’ என இரட்டை முனை உலகம் இனி இல்லை, பனிப் போருக்குப் பிறகு ஓருலகு, ஒரு முனை – அதில் அமெரிக்கா உலகப் போலீசாகவும், உலக அளவில் அனைத்து அமைப்புகளுக்கும் வெட்கமற்ற முதலாளித்துவம் தலைமையேற்கும் என்பதுவும் அவர்களின் கணிப்பு. ஆனால் இந்த மிதப்பும் செறுக்கும் அன்றும் நிலைக்கவில்லை, தற்போது நாம் காண்கின்ற இன்றும் ஏற்றுக்கொள்த்தக்கதாக இல்லை என்பதையே நிகழ்வுகள் நிரூபிக்கின்றன. 2001ம் ஆண்டு (இரட்டை கோபுரத் தகர்ப்பு) செப்டம்பர் 11ம் நாள்  தீவிரவாதத் தாக்குதல்கள் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளைத் தூங்கவொட்டாமல் துரத்துகின்றன. வழமையல்லாதப் பாதுகாப்பு அச்சுறுத்தல் சவால்கள், வழக்கமான நிறுவப்பட்ட பாதுகாப்பு, போர் மற்றும் நவீனமயம் குறித்த கோட்பாடுகளைக் கேள்விக்குள்ளாக்கி விட்டன. உலகப் போலீஸ்காரரான அமெரிக்கா உலகின் பிற நாடுகளின் உதவிக்கு வேண்டுகோள் விடுக்கிறது.

            2008ன் உலகளாவிய நிதி நெருக்கடி (ஃபினான்சியல் மெல்ட்-டவுன்) புதிய தாராளமய உலக ஒழுங்கமைவு முறையின் உண்மைத் தன்மைகளைக் கேவலமானதாக அம்பலப்படுத்தி விட்டது. பொருளாதார வளர்ச்சியைப் பொருத்து முதலாளித்துவத் தர்க்கவியல்படி திடீர் வளர்ச்சி ஊதிப் பெருத்தலும், அடுத்து உடைந்து சிறுத்தலும் நிகழ்வது தவிர்க்க இயலாது என்பார்கள்; அதன்படி 2008லும் மேற்கத்தியத் தலைமையிலான அனைத்து, கடன்வழங்கிச் சுரண்டும், (நிதிநிறுவன) அமைப்புகளும் நொறுங்கி வீழ்ந்தன. ஆயிரக்கணக்கானவர்கள் வேலை இழந்து பராரிகள் ஆயினர்; பொதுமக்கள் பணத்தைக் கொண்டு செயல்பட்ட உலகின் மிகப் பெரிய நிதி கார்ப்பரேஷன்கள் சிலவற்றைக் காப்பாற்ற, அரசு முன்வந்து உதவி செய்ய வேண்டியிருந்தது எனில், ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களின் துன்பம் அளவில்லாது.

            பொறுப்புக்களைப் பகிர்ந்து கொள்வது முக்கியம் என அப்போதுதான் மேற்கத்திய உலகு புரிந்து கொண்டது; மேலும் பொருளாதாரத்தில் சீனாவும் இந்தியாவும் வளர்ச்சி பெற்று வருவதைப் போன்ற புதிய உலக நிலைமைகளுக்கு அனுசரித்துச் செல்ல வேண்டிய தேவையை உணர்ந்தன. உலகின் பொருளாதாரப் போக்கைச் செல்வாக்குடைய பெரும் பணக்கார ஜி-8 நாடுகள் நிர்ணயித்ததை மாற்றி, (புதிதாக அமைந்த) ஜி-20 நாடுகள் – என்னதான் அவை புதிய தாராளமய வரையறைக்குள் செயல்பட்டாலும்—நிர்ணயிக்கத் தொடங்கி விட்டன. உலகின் ஒதுக்கப்பட்ட நாடுகளை முடிவெடுப்பதிலிருந்து தள்ளி வைத்து, ஒவ்வொருவருக்கும் எது ஆகச் சிறந்தது எனப் பணக்காரர்களே முடிவெடுப்பதைத் தங்கள் கைகளில் வைத்துக் கொள்வதால், (ஜி-20) இதுவும் கூட ஒருவகையில் அதிகாரத்தை (எல்லா நாடுகளுக்கும் வழங்காமல்) தங்களுக்குள் பகிர்வதும், பொறுப்புக்களைத் தட்டிக்கழிப்பதுமே ஆகும். 

            இப்படி நிர்மாணிக்கப்பட்ட செயல்முறை இப்போது பல நெருக்கடிகளைச் சந்திக்கிறது, அதற்கான காரணங்கள் பலவாகும். உலகின் தொழிற்பட்டறையாகச் சீனா மாறி வருவது, கொட்டை போட்ட பல மேற்கத்திய அதிகார மையங்களை -- தங்கள் அந்தஸ்து குறித்து-- பாதுகாப்பு அற்றதாக உணரச் செய்துள்ளது. இதனால், உலக மக்களையோ சுற்றுச் சூழலையோ எப்படிக் கடுமையாகப் பாதிக்கும் என விளைவுகள் பற்றி கவலைப்படாமல், அமெரிக்கா – சீனா இடையேயான வர்த்தகம் மற்றும் யுக்தானுசாரப் போராக (ஸ்ட்ரடர்ஜிக் வார்) மாற்றி விட்டன. இப்படி ஒருமுனையில் அமெரிக்கா, மறுமுனையில் சீனா என உருவாகி வரும் இருமுனை உலகில் எந்தத் திசை வழியை, பாதையை இந்தியா மேற்கொள்ள வேண்டும் என்பதே குறிப்பாக, நம்மைப் பொருத்து, நாம் இங்கே பார்க்க வேண்டிய பொருத்தம் உடையது.

            இந்த நிலைமைகள் ஒன்றும் புதிதல்ல, ஆனால் அதன் விளைவுகள் இம்முறை மேலும் கடுமையானது. காலனிய ஆட்சியிலிருந்து விடுதலையடைந்த போதும் இதுபோன்ற கேள்விகள் நம்மைப் பின்தொடர்ந்து இடைமறித்தன. நம் நாட்டைப் பனிப்போர் முகாம்களில் இழுத்திட நடைபெற்ற முயற்சிகளை இந்தியா உறுதியாக எதிர்கொண்டு நிராகரித்தது மட்டுமல்ல, கூட்டுச் சேரா வெளியுறவுக் கொள்கையைத் தேர்ந்தெடுத்தது; அதன்மூலம் உலகின் புதிதாக விடுதலை அடைந்த காலனிய நாடுகள், காலனிப்படுத்தப்பட்ட நாடுகள் நலனுக்காக உறுதியாக நின்றது.

            இருப்பினும், கடந்த சமீப காலங்களில் இந்திய அரசின் வெளிஉறவுக் கொள்கை முன்னுரிமைகள் மேலும் மேலும் அமெரிக்கா பக்கம் சாய்ந்து வருகிறது; புதிய தாராளமயக் கட்டமைப்பின் பால் தங்களை அவர்கள் ஒப்படைத்து விட்டதையே அது காட்டுகிறது. இந்தக் கொள்கை மாற்றத்திற்கு நடைமுறைக்கேற்ற இயல்பான எந்த நியாயங்களும் இல்லை; மாறாக, இந்திய நலன்களை அமெரிக்க நலன்களோடு முடிச்சுப் போடுவது மோசமான அழிவையும், சார்ந்திருக்கக் கூடிய இழிநிலையையும் இந்தியாவிற்கு ஏற்படுத்திவிடும். மோடி அரசின் அமெரிக்கச் சார்பு கொள்கைகளால் இந்தியாவிற்கு லாபம் ஒன்றும் இல்லை, ஆனால் பாரதத்தின் தார்மிக ரீதியான மிக உயர்ந்த அடிப்படையை அது பறித்து விட்டது.

            இந்தச் சூழ்நிலையில் பாலஸ்தீன ஆதரவுக் குரலை மௌனமாக்கியது;  கூட்டுச் சேராக் கொள்கை கைவிடப்பட்டு, அமெரிக்காவுக்கு ஒத்தூதும் பக்கவாத்தியம் ஆசியாவில் இசைப்பதை இந்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது. ஆசிய –பசிபிக் பகுதியில் தனது நலன்களைப் பாதுகாக்க அமெரிக்கா சீனாவுடனான மோதலில் இந்தியாவை இழுக்க முயற்சிக்கிறது. அமெரிக்காவின் முக்கியமான அதிபர் தேர்தல் நடைபெறும் இத்தருணத்தில் –டிரம்ப் மிகப் பெரிய சவாலை அங்கு எதிர்கொள்ளும்போது – அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலாளர் மைக் பாம்பியோ வெளியிடும் அறிக்கைகள், ஏற்கனவே இந்தியா சீனா இடையே இருக்கும் பிரச்சனையை, மேலும் சிக்கல் நிறைந்தவைகளாக ஆக்குகின்றன. அவையெல்லாம் இப்பகுதியில் அமெரிக்க நலன்களைப் பாதுகாப்பதற்காகக் கையறுநிலையில் செய்யப்படும் முயற்சிகள் தவிர வேறில்லை.

            வெளியுறவில் இப்படி என்றால், உள்நாட்டிலோ அமெரிக்க எஜமானர்களை மகிழ்விக்கச் செய்து கொள்ளப்படும் வர்த்தக உடன்பாடுகளால் இந்திய மக்கள் தங்கள் வாழ்வாதாரம் மற்றும் விவசாய நிலங்களை இழந்ததும், இந்தியத் தொழிலாளர் வர்க்கம் கடுமையான போராட்டங்கள் மூலம் வென்ற தொழிலாளர் உரிமைகளை இழந்ததும்தான் கண்ட பலன்.

            உலகின் இன்றைய தேவை பரஸ்பர மரியாதை, அக்கறை, ’ஒப்புரவு கண்ணோட்டம்’, ஒத்துழைப்பு மற்றும் மக்களின் பங்கேற்பு முதலிய கொள்கை அடிப்படையில் அமைந்த சர்வதேச உறவு. மேற்கத்திய நாடுகள் தங்களைப் பற்றி வானுயரத் தம்பட்டமடித்த அனைத்தும் கோவிட் -19 சுகாதார நெருக்கடியில் திவாலாகி நிற்கின்றன. மேற்கத்திய நாடுகளின் மக்களுக்கு எளிதில் கிட்டாத, தனியார்மயமாக்கப்பட்டச் சுகாதாரப் பராமரிப்பு அமைப்பு, கோவிட் தொற்று அழுத்தத்தில் வெடித்துச் சிதறி, மனிதத்தன்மையற்ற சூழ்நிலைகளையும் உண்டாக்கியதைக் காண்கிறோம்; அதே நேரத்தில் சோஷலிச நாடுகள் அல்லது பொதுச் சுகாதாரப் பராமரிப்பைச் சோஷலிசப்படுத்திய நாடுகள் அந்நெருக்கடியைச் சிறப்பாக எதிர்கொண்டன. பணக்காரர்களின் கஜானாவை நிரம்புவதற்காகக் கசப்புகளை அதிகரிக்கும் வர்த்தகப் போர்கள், மனிதத்தன்மைற்ற சர்வதேசத் தடைகள் இவற்றிற்கு ஏராளமான நிதியாதாரங்களைச் செலவிடுவதல்ல உலகின் இன்றைய தேவை; மாறாகப் பொதுச் சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற பிரச்சனைகளுக்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதையே உலகம் எதிர்பார்க்கிறது. இரண்டு பெரும் பொருளாதாரச் சக்திகளாக, மிகப் பிரம்மாண்டமான மனித ஆற்றலோடு விளங்கும் இந்தியா மற்றும் சீனா இருநாடுகளும் இணைந்து எவ்வளவோ பணிகளைப் பங்களிப்புச் செய்ய முடியும்.

            ‘இடம் பெரிதுண்டு கண்டீர்’ என்பதாக ஒவ்வொருவருக்குமான இடத்தை உலகில் உறுதி செய்வதன் வாயிலாக ஒத்துழைப்பின் பலன்களை அறுவடை செய்யலாம். 1990களின் ஏற்பட்டதாகக் கருதப்படும் ஒருமுனை உலகையோ, அல்லது அமெரிக்கா ஒருபக்கமும் சீனா ஒருபக்கமுமாக நின்று, மற்ற நாடுகளைத் தங்கள் ஆளுகை முகாம்களுக்குள் இழுக்க முயலுகின்ற தற்போது உருவாகியுள்ளதாகத் தோன்றும் இருமுனை உலக முறையையும் நாம் நிராகரிக்க வேண்டும். இந்தியா தனது சுயேச்சையான கூட்டுச் சேராப் பெருமிதங்களுக்கு உண்மையாக வாழவும், அனைவருக்கும் வாய்ப்பளிப்பதான பல முனை மற்றும் நியாயமான உலக ஒழுங்கமைவு முறைக்காக ஆக்கபூர்வமாகப் பாடுபடவும் வேண்டும். இதனைத் தொடங்குவதற்கு முதலில் அமெரிக்கா வாலைப் பிடித்துக் கொண்டு ஓடுவதை நிறுத்தி, நமது நாடு அமெரிக்கச் செல்வாக்கால் பாதிக்கப்படாமல் தற்காத்துக் கொண்டு, தனது வெளியுறவுக் கொள்கையைச் சுதந்திரமாக வகுத்துக் கொள்ள வேண்டும்; அதற்குச் சீனா உட்பட தனது அனைத்து அண்டை நாடுகளுடன் எல்லைப் பிரச்சனைகளைப் பயனுள்ள பேச்சு வார்த்தைகளை நடத்தி இந்தியா தீர்க்க முயல வேண்டும்.

            சமீபத்தில் ஐ.நா.வின் 75வது ஆண்டு பொது மாநாட்டில், ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியாவுக்கு இடமளித்தல் என்று பலமுறை வலியுறுத்தப்பட்ட கோரிக்கையை மீண்டும் எழுப்பி பிரதமர் மோடி ஆற்றிய உரை குறித்து உள்நாட்டில் ஆகப்பெரும் பிரச்சாரப் பரபரப்பு உண்டாக்கப்பட்டது. நமது நாட்டின் வரலாறு, பெரும் நிலப்பரப்பு, பொருளாதாரம், உலக விஷயங்களில் ஆக்கபூர்வமான பங்களிப்புச் செய்தல் போன்ற காரணங்களால் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியாவுக்கு ஓர் உறுப்பினர் இடம் என்ற கோரிக்கை மிகக் கூடுதலாக நியாயமானது; ஆனால் மேற்கண்ட அத்தகைய நற்பண்புகள் தற்போதைய ஆளும் தரப்பின் கீழ் குறிப்பாக அண்டை நாடுகளுடன், பல்வேறு ஒவ்வாத முரண்பாடுகள் காரணமாகக் கடுமையாகக் கறைபடிந்துள்ளது. ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் கிடைக்கும் இட அந்தஸ்தைப் பயன்படுத்தி, மிகப் பெரும் பேச்சுவார்த்தை நடைபெறும் இடங்களில் இதுவரை பிரதிநிதித்துவம் பெறாத நாடுகளையும் அல்லது குறைவாகப் பிரதிநிதித்துவம் உடைய நாடுகளுக்கு ஆதரவளிக்க அவற்றின் சார்பாக நடக்க இந்தியா தனது சுதந்திரமான பார்வையுடன் முன்வர வேண்டும்; ஒடுக்கப்பட்டவர்களுக்காக, ஏகாதிபத்தியத்தால் துன்பப்படுபவர்களுக்காகக் குரல் எழுப்புவது என்ற நமது மரபு அதுவே!

            ஒருமைப்பாட்டின் அடிப்படையில் அமையும் அனைவரையும் உள்ளடக்கிய இந்த விரிவான உலகப் பார்வைக்கு மாறாக, கடந்த சில ஆண்டுகளில் இந்திய வெளியுறவுக் கொள்கையின் போக்கு, மேலும் மேலும் அமெரிக்க –இஸ்ரேலிய இணையின் பக்கம் சாயத் தொடங்கி, உலக விஷயங்களில் மேற்கத்திய ஆதிக்கத்தைப் பலப்படுத்துவதாக மாறி உள்ளது என்பது துரதிருஷ்டவசமானது.

இந்தச் சூழ்நிலையில் இந்தியாவும் சீனாவும் பெரும்பான்மையான மக்கள் தொகையை உடைய, இருபெரும் பொருளாதாரச் சக்திகள். அவை பரஸ்பர நம்பிக்கையுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகள் மூலம் எல்லைப் பிரச்சனைகளைப் பேசித் தீர்த்துக் கொள்ளவும், தற்போதைய எல்லை மோதல்களுக்கு விரைவாக முடிவு கட்டவும் வேண்டும். மேலும் அனைவருக்குமானது இந்த உலகு, நியாயபூர்வமானது, சுற்றுச் சூழல் குறித்து உணர்வுடையது என்பதாக உலகை மாற்றிட இந்தியா பாடுபட வேண்டும். இவ்வாறு, சுதந்திரமான வெளிநாட்டுக் கொள்கையைப் பின்பற்றுவது நமது நாட்டிற்கு அல்லது தெற்காசிய பகுதிக்கு மட்டுமே முக்கியமானது அல்ல; மாறாக, உலகின் பரிதவிக்கும் மக்களுக்கு இந்தியா ஆற்ற வேண்டிய முக்கியமான பங்கு அது.

‘மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனி உண்டோ? மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனி உண்டோ’ என்ற கேட்ட பாரதியார்,  

          எல்லாரும் அமரநிலை எய்து நன்முறையை

             இந்தியா உலகிற்கு அளிக்கும் – ஆம், ஆம்

             இந்தியா உலகிற்கு அளிக்கும்!”

என்று நம்பிக்கையோடு உரைத்தது நிறைவேற்றப்படுமா? 

--(நியூஏஜ் அக்.25 –31

--தமிழில்: நீலகண்டன்,

      தொடர்புக்கு 94879 22786                 

No comments:

Post a Comment