Thursday 15 October 2020

வரலாற்றுத் தலைவர்கள் வரிசை 16 : அமீர் ஹைதர் கான்

 

நமது பெரும் தலைவர்கள் வாழ்விலிருந்து :

சில சித்திரத் சிதறல்கள் -16

அமீர் ஹைதர் கான் :

தென்னகத்தில் இயக்கம் கட்டிய தலைவர்

--அனில் ரஜீம்வாலே

(நியூ ஏஜ்–அக்.11 --17, 2020)

          அமீர் ஹைதர் கான் (பாக்கிஸ்தான்) ராவல்பிண்டி மாவட்டத்தின் கலியானில் சியாலியன் என்ற குக்கிராமத்தில் 1900ம் ஆண்டு மார்ச் 2ம் நாள் பிறந்தார். அசாதாரணமான, சாகசங்கள் நிறைந்தது அவருடைய வாழ்வு; ஆனால் கம்யூனிச இயக்கத்தின் பன்முகப்புக் கூறுகளான  அமைப்புகளைக் கட்டி வளர்த்தவர் அவர் என்பது பலரும் அறியாதது. அவர் பார்க்காத வேலை இல்லை, இந்த உலகமே அவருடையது என்பதுபோல பல நாடுகளில் அலைந்து திரிந்துள்ளார்!

          சிறுவயதில் தந்தையை இழந்தார், தாய் மறுமணம் செய்து கொண்டார்; மாற்றுத் தந்தையோடு ஒத்துப்போக முடியாமலும், அவர் குடும்பத்தினர் அணுகுமுறையை விரும்பாமலும் குர்ஜர்கான் ஸ்டேஷனுக்கு ஓடிவிட்டார்; பின்னர் பட்டினி தாகத்தோடு பெஷாவர் கன்டோன் மெண்ட்டில் இருந்த அண்ணன் வீட்டுக்குச் சென்றார். மிகவும் அதிர்ந்துபோன சகோதரர் மீண்டும் அவரைக் கிராமத்தில் கொண்டு வந்து சேர்த்தார். அமீருக்குப் படிக்க வேண்டும் என்ற பெரு விருப்பம் இருந்தது. எனவே மீண்டும் தப்பி ஓடி பல மசூதிகள், மதராசாக்களுக்கு (முஸ்லீம் மதக்கல்வி போதிக்கும் பள்ளிகள்) பயணமாகிச் சென்றபோதும், அந்த இடங்கள் கல்வியில் நாட்டமில்லாதவைகளாக இருந்தன; மாறாக, அவையெல்லாம் மத்தியகாலத்திய / நிலஉடைமை குழப்பத்தின் மையங்களாகவும் இருந்தன. அவரை எந்தப் பாடசாலையோ பள்ளியோ, மசூதி/மதராசாவோ திருப்திப்படுத்தவில்லை –அறிவுப் பசியோடே பெரிதும் இருந்தார்.

          மீண்டும் குர்ஜர்கான் ஸ்டேஷன் வந்து, ஹௌராவுக்கு பட்டினியோடு டிக்கெட் இல்லாமல் பயணம் செய்து மற்றொரு சகோதரர் வீட்டில் தங்கினார். சில காலம் அங்கே படித்தாலும், அந்த இடம் கடத்தலின் மையமாக இருப்பதை விரைவில் அறிந்தார். எனவே இந்த முறை கையில் பத்து காசில்லாமல் பம்பாய்க்குப் பயணமானார். பிந்துலால் என்ற இந்துவைச் சந்தித்து, அவனோடு நடைபாதையில் தூங்கி தெருவோரங்களில் மற்றச் சிறுவர்களோடு தங்கி கப்பல்கள் சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டார். பளபளக்கும் கப்பல்களைத் துடைப்பது அல்ல, கப்பல்களின் புகைப்போக்கி, ’சிம்னி’களைத் தூய்மை செய்வது – அது முந்தைய கால இங்கிலாந்தின் ‘சிம்னி –பாய்ஸ்’ சிறுவர்களை ஞாபகப்படுத்தும்.

          அது ஒரு கொடுமை, ’சிம்னி–ஸ்வீப்’ (புகைப்போக்கித் துடைப்பமாம், எது? நான்கிலிருந்து ஆறு வயதுள்ள பாவப்பட்ட ஏழைக் குழந்தைகள்) என்றும் சொல்கிறார்கள். [1666 செப்டம்பர் 2 முதல் 5ம் நாள் வரை லண்டன் நகரில் மிகப்பெரிய தீ விபத்து நடந்த பிறகு, புகை போக்கிகள் அமைக்கப்பட்டன; நீண்ட நாட்பட பயன்பாட்டிற்குப் பிறகு புகைக் குழாயை அடைத்துக் கொள்ளும் கரித்தூள்களை நீக்கிச் சுத்தம் செய்ய அந்தச் சிறு குழந்தைகளைப் பயன்படுத்தினார்கள். 18 அங்குல விட்டமே உள்ள புகைக் கோபுரத்துள் சிறுவர்களை இறங்கி விடுவார்களாம், இரக்கமற்றவர்கள்; அந்தக் கொடுமை 1875 செப்டம்பரில் பாராளுமன்ற மசோதாவின் மூலம் இங்கிலாந்தில் முடிவுக்கு வந்தது. –மொழிபெயர்ப்பாளர் இணைத்தது] காலை முதல் இரவு வரை பணியாற்ற வேண்டிய அந்தச் சிறுவர்கள் விரைவாக ஏற வேண்டும் என்பதற்காகச் சில நேரம் நெருப்பைப் பற்ற வைப்பார்களாம். புகைக் கூண்டின் உட்பறச் சுவரில் படிந்துபோன கரியை அகற்ற முதலில் சிம்னியைச் சூடாக்கி, வெந்நீரையும் ஊற்றுவார்கள். அதன் பின் அதனுள் அந்தச் சிறுவர்கள் இறக்கி விடப்படுவார்கள். உடல் முழுதும் கரியாகி, கை கால்கள் மூட்டுக்களில் சிராய்த்து, எல்லாம் கறுப்பாக –இருமல் முதல் இயற்கை உபாதை கழித்தல் வரை—அனைத்தும் கறுப்பாக.  அவர்கள் தான் சிம்னி பாய்ஸ்.

வெளிநாடுகளில்

          வணிகக் கப்பலில் வேலை கிடைந்த உடன் அமீர் பஸ்ரா சென்றார். முதல் உலகப் போர் நேரம், பிரிட்டீஷ் படைகள் முகாமிட்டிருந்தன. ஒரு படைப் பிரிவு பாக்தாத்தைத் தாக்கும்படி உத்தரவிடப்பட்டது; ஆனால் ஒரு கிளர்ச்சி அதனைத் தடுத்து முறியடிக்க, கிளர்ச்சியாளர்கள் கைது செய்யப்பட்டனர். 

          அமீர் ஹைதர் அவை எல்லாவற்றிற்கும் சாட்சியாக இருந்து நேரே பார்த்தார்.

          ஒரு வருடத்தில் வேறொரு கப்பலில் பணிக்குச் சேர்ந்து பம்பாய், ஷாங்காய் வழியாக லண்டன் சென்று, பின்பு நியூயார்க், 45 நாட்களுக்குப் பிறகு விளாடிவோஸ்டாக் (ருஷ்யா) அடைந்தார்! இதன் மத்தியில் கப்பலிலேயே ஒரு கிளர்ச்சியை வெற்றிகரமாகத் தலைமையேற்று நடத்தினார்!

அமெரிக்கக் குடியுரிமை : ‘படைவீரர்களை ஏலம் விடுதல்’ இயக்கம்

          அமீர் ஹைதர் போதுமான நீண்டகாலம் அமெரிக்காவில் தங்கியதால், மாலுமிகள் சங்கத்தின் உதவியோடு 1921ல் அமெரிக்கக் குடியுரிமை பெற்றார். அமெரிக்காவில் உலக யுத்தத்திற்குப் பிந்தைய நிலைமை இராணுவவீரர்களைப் பிச்சைக்காரர்களாகச் சிதறச் செய்து பட்டினியோடு அவர்களைச் சாலையோரப் பாதைகளில் படுத்துறங்கச் செய்தது.

          அதனைத் தொடர்ந்து ஒரு பெரிய இயக்கமாக உருவானதில் வீரர்கள் ஏலம்விடப்படுவது வழக்கமானது; வீட்டு வேலை செய்வதற்காகவே அவர்கள் வாங்கிச் செல்லப்பட்டனர். ஏலம் நடத்திய ஜேம்ஸ் மற்றும் ஹட்சன் இருவரையும் அமீர் ஹைதர் போஸ்டனில் சந்தித்தார். ஏலம் கேட்க எல்லா இடங்களிலும் கூட்டம் கூடியது, ஹைதர் சப்தமாகப் பெயர்களைக் கூப்பிடுவார். ஒரு வீரன் வெளியே வர, ஒரு நாளைக்கு ஒருவேளை உணவு தர யாரோ சம்மதிக்கும்போது, வேறுசிலர் இரண்டு வேளை உணவு தர முன்வருவார்கள். யாரேனும் மூன்று வேளை உணவுதர முடியுமா எனச் சப்தமாக அந்த மனிதன் கேட்க, ஒரு பெண்மணி உணவும் தங்கும் இடமும் வழங்க முன்வந்தார். அந்தப் பெண்மணிக்குத் தன் செல்லப் பூனைகளைப் பார்த்துக் கொள்ள ஆள் தேவைப்பட்டது! அவர் தனது சிமோசின் சொகுசுக் காரில் அவரை அழைத்துச் சென்றார்.

          இப்படிப் பலரும் ஏலம் விடப்பட்டனர், ஒவ்வொருவரிடமும் தனித்துவமான கோரமான பல கதைகள் இருந்தன. இந்த ஏலக் காட்சி நியூயார்க், ப்ரெயன் பார்க், லேன் 42க்கு மாறியது. அந்தப் பகுதி முழுவதையும் போலீசார் சுற்றி வளைத்து அந்த இயக்கத்தை நசுக்கினர். அமீர் ஹைதரும் கூட்டாளிகளும் லத்தி அடிகள் உட்பட போலீசாரின் தாக்குதலைச் சந்தித்தனர்.

சோஷலிசத்திற்கு அறிமுகமாதல்

          விரைவில் ஹைதர் விமான நிறுவனம் ஒன்றில் சேர்ந்தார். ஒரு நாள், பிரிட்டீஷ் லேபர் கட்சியின் தலைவர் மோர்கன் ஜான் ஒரு கூட்டத்தில், காலனியாக்கப்பட்ட மக்களை இனரீதியாகத் தாக்கி விமர்சித்தார். அங்கேயே வெளிப்படையாக ஹைதர் அவரை எதிர்த்துக் கேட்கக் குழப்பம் ஏற்பட்டது. மோர்கன் பின்வாசல் வழியே மறைந்தார். [இப்போதும் 2020 அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல் பிரச்சாரத்தில் டிரம்ப், வெள்ளைஇன மக்களுக்கு ஆதரவாக இருப்பதைக் காட்டிக் கொள்ள, ஆசிய அமெரிக்கர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கிறார்.—மொழிபெயர்ப்பாளர் இணைப்பு] ஒரு பழுப்பு நிற மனிதர் முன்வந்து ஹைதருடன் கைகுலுக்கித் தங்கள் அமெரிக்கத் தொழிலாளர் கட்சி அலுவலகத்திற்கு வருமாறு அழைத்தார். அமெரிக்கக் கம்யூனிஸ்ட் கட்சிதான் தடை காரணமாகப் பெயரை மாற்றிக் கொண்டு அப்பெயரில் இயங்கியது. டெட்ராய்ட் அலுவலகத்திற்குச் சென்றார். மாஸ்கோவில் உள்ள ‘கீழைத் தொழிலாளர்களின் பல்கலைக் கழக’த்தில் பயிற்சி பெற செல்ல இருந்த ஏழு உறுப்பினர் குழுவில் அமீர் ஹைதரும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அக்குழுவில் ஷம்சுல் ஹூதா மற்றும் கதார் கட்சியிலிருந்து ஐவரும் சேர்க்கப்பட்டிருந்தனர். பிறகு அவர்கள் நியூயார்க் சென்று  கட்சிச் செயலாளர் லூதர் போர்டைச் சந்தித்தனர். பயணத்திற்கு அவர் ஏற்பாடு செய்ய அவர்கள் மாஸ்கோ புறப்பட்டனர்.

          மாஸ்கோவில் ‘சக்ரோவ்’ என அழைக்கப்பட்ட ஹைதர், பாடப் பயிற்சிகளில் சேர்ந்து ருஷ்ய மொழி கற்கத் தொடங்கினார். கிளமென்ஸ் தத், ராஜா மகேந்திர பிரதாப் போன்ற பல தலைவர்களைச் சந்தித்தார். கம்யூனிஸ்ட் அகிலத்தின் (காமின்டர்ன்) காலனியக் குழுவின் செயலாளர் GAK லுஹானியைச் சந்திக்க முயன்றார், முடியவில்லை. ருஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி (போல்ஷ்விக்) RCP (B) உறுப்பினராகச் சேர்ந்த ஹைதர், சோவியத் ஒன்றிய சோஷலிசக் குடியரசில் விரிவாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இந்தியா திரும்புதல்: டாங்கே உடன் சந்திப்பு

        அமீர் ஹைதர் 1927ல் பம்பாய் திரும்பினார். தோழர் எஸ் ஏ டாங்கேவைச் சந்திக்கும்படி அவரைக் காமின்டர்ன் பணித்திருந்தது. திரும்பும்போது உடன் வந்த அலி மார்தனுடன் மதன்புராவில் ‘கோலி’ ஒன்றில் (அப்பார்ட்மெண்டின் ஓர் உள் அறை) ஹைதர் தங்கினார். பம்பாயில் அப்போது தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் நடைபெற்று வந்தது. ‘தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் கட்சி’ அலுவலகத்திற்கு டாங்கேவைச் சந்திக்கச் சென்றனர். “நான் தான் டாங்கே” என அவர் அறிமுகப்படுத்திக் கொள்ள இருவரும் கைகுலுக்கிக் கொண்டனர். அங்கே பிசி ஜோஷி, பென் ப்ராட்லே மற்றும் காட்டே முதலானோரைச் சந்தித்தார். காமின்டர்ன் கொடுத்தனுப்பிய ஆவணங்களை ஹைதர் அளித்தார்.

          ஹைதர் விரைவில் லால் பவ்டா கிர்னி காம்கார் சங்கத்தில் சேர்ந்தார். தோழர்கள் காட்டே, டாங்கே, ஜோஷி போன்றோர் எப்போதும் பணப் பற்றாக்குறையிலும் ஏழ்மையிலும் வாழ்ந்தனர். ஜெனரல் மோட்டார் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்த ஹைதர் அங்கே பிசி ஜோஷியின் உதவியோடு தொழிற்சங்கம் அமைத்தார். பம்பாயில் தொழிற்சங்க இயக்கம் மற்றும் கட்சி அமைப்பைக் கட்டுவதில் ஹைதர் தீவிரமாகப் பங்கேற்றார்.

          மீரட் சதி வழக்குப் புனையப்பட்டதும் அமீர் ஹைதரின் பெயரும் அதில் இடம் பெற்றிருந்தது. எப்படியோ அவர், (சரோஜினி நாயுடு சகோதரி) சுகாசினி சட்டோபாத்யாயா உதவியுடன், ‘ஃபிரான்சிஸ்கோ ஃபெர்னான்டஸ்’ என்ற பெயரில் கோவாவுக்குத் தப்பினார். அங்கிருந்து இத்தாலியின் நேப்பிள்ஸ், ஃபிராங்பர்ட் சென்று பிறகு சோவியத் யூனியனுக்குத் தப்பி விட்டார்.

          திரும்ப வந்ததும், போலீஸ் கெடுபிடி காரணமாக, ‘ஷங்கர்’ என்ற பெயரில் மெட்ராசிற்கு மாற்றிக் கொள்ளும்படி ஆயிற்று.

தென்னகத்தில் கட்சி இயக்கம் கட்டுதல்

          1932ல் அமீர் ஹைதர் ‘இளைய தொழிலாளர்களின் லீக்’ அமைப்பினை திரட்டினார். (மீரட் சதிவழக்கில் இவர் பெயரும் இருந்ததால், மெட்ராஸ் போலீஸ்  1932 மே 7ம் நாள் கைது செய்து, வழக்கை இங்கேயே நடத்தி 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டார்.) ஹைதர் சிறையில் இருந்தபோது சுபாஷ் போஸ் மற்றும் முகுந்த் லால் உடன் தொடர்பு கொண்டிருந்தார். 1934ல் அவர் விடுதலையானார். சில ஆண்டுகள் மெட்ராசிலேயே அடைந்து கிடக்கும்படி ஆயிற்று. ஆனால் அக்காலத்தை அவர் நன்கு பயன்படுத்தினார்.  சிங்காரவேலர், ராஜா வடிவேலு, சுப்பிரமணியம் மற்றும் பலரோடு தொடர்பு கொண்டார். ராஜா வடிவேலுவின் சகோதரர் ’ருஷ்யன்’ மாணிக்கம், சீனுவாச ரெட்டி, கே.பாஷ்யம், ஏஎஸ்கே அய்யங்கார் ஒன்றாகக் கூடினர், எஸ்வி காட்டே சிறிது பின்னே இணைந்து கொள்ள, அவர்கள் வலிமைமிக்கக் குழு அமைப்பாயினர். அவர் பி சுந்தரையாவையும் சந்தித்தார். (ஹைதர் கட்சிக்குக் கொண்டுவந்து சேர்த்த பல இளம் அரசியல் ஊழியர்களில் சுந்தரையாவும் ஒருவர்)  மெட்ராஸ் மாகாணத்தில் அவர்கள் அனைவருமாகக் கம்யூனிஸ்ட் கட்சியை அமைத்தனர்.

          அவர்கள் ‘மெட்ராஸ் தொழிலாளர் பாதுகாப்பு லீக்’ அமைப்பு ஒன்றையும் அமைத்தனர். திருச்சிராப்பள்ளியில் ’சுயமரியாதை சமதர்மக் கட்சி’யின் மாநாட்டை 1936 நவம்பர் 1ம் நாள் எஸ்.ஏ.டாங்கே துவக்கி வைத்தார். அவர்களில் பலரும் பின்னர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர்.

          ‘காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி’யின் மெட்ராஸ் அலுவலகம் 2/65, பிராடுவே (பிராடுவே என்றால் அகலமான பாதை என்று பொருள்; ஆனால் அலுவலகம் இருந்த தெரு உண்மையில் மிகவும் குறுகலான சந்து!) என்ற இடத்திலிருந்து தீவிரமாக இயங்கியது; அந்த இடத்தில் பண்டித ஜவகர்லால் நேரு, பாலதண்டாயுதம், ஹைதர் முதலானோர் கூடி விவாதித்துள்ளனர். பத்திரிக்கை இதழ்கள், தொழிற்சங்கங்கள் அமைக்கப்பட்டன.

          எம்என் ராய் 1936ல் மெட்ராஸ் விஜயம் செய்தபோது, சிங்காரவேலர் இல்லத்திற்கு வந்தார். அவர் ஒரு புதிய கட்சி அமைப்பைத் தொடங்கிட விரும்பியபோதும் அதற்கு ஆதரவு கிடைக்கவில்லை. ஹைதர் அந்த யோசனையைக் கடுமையாக வெறுத்தார். அங்கே அடிக்கடி வரக்கூடிய பாண்டிச்சேரியின் ‘மக்கள் தலைவர்’ வ. சுப்பையா உடன் ஹைதர் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்.

ராம்கார்க் காங்கிரஸ் மாநாடு

          அமீர் ஹைதர் கான் 1939ல் பம்பாய் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 1940ல் ராம்கார்க் காங்கிரஸ் மாநாட்டிலும் கலந்து கொண்டார். செலவுக்காக (கவிக்குயில் சரோஜினி நாயுடுவின் சகோதரி) சுகாசினி கொடுத்த 50ரூபாயை பிக்பாக்கெட் வழிப்பறியில் பறிகொடுத்து நின்றவருக்கு, இந்திய சினிமாவின் புகழ்பெற்ற முன்னோடிக் கலைஞரும் பன்முகத் திறமையாளருமான ஜெடன் பாய் (ஹுசைன்)  ரூ100 கொடுத்து உதவினார். காங்கிரஸ் மாநாட்டிற்குப் பிறகு ஹைதர் பம்பாயில் போர் எதிர்ப்பு கூட்டமொன்றில் உரையாற்றினார். மீண்டும் கைது செய்யப்பட்டு, டாங்கே, மிராஜ்கர் முதலானவர்களுடன் நாசிக் சிறையில் அடைக்கப்பட்டார். 1942 ஜூலை 14 விடுதலையானார்.

          (இளமையில் படிப்பதற்குப் படாதபாடுபட்ட மனிதர்--) அமீர் ஹைதர் 1946ல் ராவல்பிண்டியில் பள்ளி ஒன்றைத் தொடங்கினார்.

விடுதலைக்குப் பிறகு

          விடுதலைக்குப் பின் அமீர் ஹைதர் பாக்கிஸ்தானில் உள்ள தனது சொந்த கிராமத்தில் தங்கி விட்டார். ராவல்பிண்டி கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை வி.டி. சோப்ராவிடமிருந்து பெற்று பொறுப்பேற்றார். (போராட்ட இயக்கங்களில் ஈடுபட்டதுடன்) கட்சி அலுவலகத்தில் இருந்து கொண்டு இளைஞர்களுக்கு மிகப் பல சேவைகள் ஆற்றினார்; அவர்களை அலுவலகத்திலேயே தங்க ஏற்பாடு செய்வது மட்டுமல்ல, வழக்கமாக அவர்களுக்காக அவர்தான் உணவு சமைத்தும் பறிமாறுவார். 

          வேட்டையாட அவரைத் தொடர்ந்த பாக்கிஸ்தானின் சர்வாதிகார ஆட்சி, அவர் மீது மதவெறுப்புணர்வு வகுப்பு வாதத்தைப் பரப்பியதாகக் குற்றம் சாட்டியது விந்தையே! கைது செய்யப்பட்டு 15 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். 1950ல் மே தினத்தின்போது, ‘ராவல்பிண்டி சதி வழக்கு’ என்பதன் கீழ் மீண்டும் கைதுசெய்யப்பட்டு சாஜ்ஜட் ஸாகீர் (Sajjad Zaheer), (பாக்கிஸ்தானின் புகழ்பெற்ற இலக்கிய ஆளுமை, உருது கவிஞர்) (படம்)

ஃபைஸ் அகமது ஃபைஸ் முதலானவர்களுடன் பழிமிக்க லாகூர் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் மினான்வாலி சிறைக்கு மாற்றப்பட்டார். 1958ல் அயூப் கான் இராணுவ சர்வாதிகார ஆட்சியில் மீண்டும் ஒரு முறை கைது செய்யப்பட்டார்.

          பாக்கிஸ்தானில் ஜனநாயகத்தை மீண்டும் கொண்டுவர தொடர்ந்து போராடினார்; அவரது உடல் நலமும் விரைவில் சீர்கேடு அடைந்தது.

இந்தியாவில்

          இந்தியாவில் கடந்த காலங்களில் பழகிய தனது கெழுதகை நண்பர்களைச் சந்திக்க விரும்பி கனவு கண்ட அவர், பத்தாண்டுகள் நீண்ட காலம் கடவுச் சீட்டு பெறுவதற்கே போராட வேண்டியிருந்தது. இறுதியில் 1988ல் புதுடெல்லியில் உள்ள ‘அஜாய் பவன்’ இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகத்தில் வந்து சுமார் ஏழு மாதங்கள் தங்கினார். சிபிஐ தேசியக் குழு அவரைச் சிறப்பாகக் கௌரவித்தது. அப்போது நடந்த மேதினக் கொண்டாட்டங்களில்கூட அவர் கலந்து கொண்டார்.

          பாக்கிஸ்தான் திரும்பிய அவர், ஒரு நாள் பேருந்தைப் பிடிக்க முயலும்போது தவறி கீழே விழுந்து பலமாக அடிபட்டார். ராவல் பிண்டி மருத்துவ கல்வி நிலையத்தில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலன் இன்றி, 1989ம் ஆண்டு டிசம்பர் திங்கள் 26ம் நாள் மரணமடைந்தார். அவருடைய மறைவுக்குச் சமூகத்தின் பலதரப்பட்ட கருத்துடையவர்களும் மக்களும் மிகப் பரவலாக அஞ்சலி செலுத்தினர். அவருடைய நினைவை இந்தியா பெரிதும் போற்றிப் பாதுகாக்கிறது.

          அமீர் ஹைதர் கான் ஒரு தனித்துவமான புரட்சியாளர், சிறந்த கம்யூனிஸ்ட்! அவர் புகழ் ஓங்குக!

--தமிழில் : நீலகண்டன்,

  என்எப்டிஇ, கடலூர்

 

No comments:

Post a Comment