Friday 11 September 2020

சோமநாத் லாகிரி : அரசியலமைப்பு நிர்ணய சபையின் கம்யூனிஸ்ட் உறுப்பினர்

 

நமது பெரும் தலைவர்கள் வாழ்விலிருந்து :

சில சித்திரத் சிதறல்கள் -12



சோமநாத் லாகிரி :

அரசியலமைப்பு நிர்ணய சபையின் கம்யூனிஸ்ட் உறுப்பினர்

--அனில் ரஜீம்வாலே

(நியூஏஜ் செப்டம்பர் 6 –12)

          

சோமநாத் லாகிரி 1909ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி வங்காத்தில் பிறந்தார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுதிய அரசியலமைப்பு நிர்ணய சபையில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் அவர் என வரலாற்றில் அறியப்படுகிறார். சோமநாத், 19ம் நூற்றாண்டு வங்காளத்தில் புகழ்பெற்ற இளைஞர் தலைவரான ராம்தனு லாகிரி குடும்பத்தைச் சேர்ந்தவர்; ஈஸ்வர சந்திர வித்யாசாகரின் (நவீன இந்தியச் சீர்திருத்த முன்னோடித் தலைவர்) சமகாலத்தவர். 

          கல்கத்தா பிரிஸிடன்சி கல்லூரியில் சோமநாத், பி.எஸ்சி (ஹானர்ஸ்) வேதியல் முடித்தார். அந்தப் பாடத்தில் அசாதாரணமான புத்திசாலியாக விளங்கினார். நாட்டின் அப்போதைய ஒத்துழையாமை, கிலாபத் இயக்கச் செல்வாக்குகளால் ஈர்க்கப்பட்டார். 1930களின் சட்டமறுப்பு இயக்கத்தில் பங்கேற்றார். சுவாமி விவேகானந்தரின் இளைய சகோதரரும், மார்க்சியருமான பூபேந்திரநாத் தத் அவர்களோடு சோமநாத்துக்குத் தொடர்பு ஏற்பட்டது. எம்.எஸ்சி படிப்பில் சேர்ந்த சோமநாத் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டு, 1930ல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அப்துல் மோமின் உடன் சேர்ந்து 1931 கராச்சி காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டார். அங்கு அவர் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து நடந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றார். சிலகாலம் ஏஐஎஸ்எப்  மாணவர் அமைப்பில் பணியாற்றினார்; மாணவர்களின் கூட்டங்களில் அவர் ஒரு நட்சத்திரப் பேச்சாளாராக விளங்கினார்.

தொழிலாளர் மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கங்களில்

          கல்கத்தாவில் சோமநாத் டிராம் ரயில்வே தொழிலாளர்கள் மத்தியில் பணியாற்றத் தொடங்கி, ‘கிழக்கு வங்காள ரயில்வே தொழிலாளர்களின் சங்க’த்தை அமைத்தார். 1933ல் ஜாம்ஷட்பூர் ‘டாட்டா இரும்பு மற்றும் ஸ்டீல் கம்பெனி லிட்.,(TISCO) தொழிலாளர்களைத் திரட்டிச் சங்கம் அமைத்தார்.

           மீரட் சதி வழக்கு (1929 –33) காரணமாக 32 கம்யூனிஸ்ட்கள் கைது செய்யப்பட, கம்யூனிஸ்ட் இயக்கத்தில் அதனால் ஏற்பட்ட அமைப்பு ரீதியான வெற்றிடத்தை வெளியே இருந்த தோழர்கள் சரிசெய்ய முயன்றார்கள். ’கல்கத்தா கமிட்டி’ அமைக்கப்பட்டதில் அகில் பேனர்ஜி, ரனீன் சென், அபானி சௌத்திரி, ரமீம் பாசு இவர்களோடு சோமநாத்தும் அப்துல் ஹலீமும் உறுப்பினர்கள். பிசி ஜோஷி, டாக்டர் அதிகாரி மற்றும் சிலரால் கூட்டப்பட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு தலை மறைவு இரகசியக் கூட்டத்தில் அப்துல் ஹலீம் மற்றும் ரனீன் சென்னுடன் கலந்து கொண்டார்; சோமநாத் மத்திய கமிட்டி உறுப்பினராக இணைத்துக் கொள்ளப்பட்டார். கட்சி மையமான பம்பாய்க்கு 1935ல் மாற்றப்பட்டார்; தோழர் எஸ் எஸ் மிராஜ்கர் கைதான பிறகு இடைக்காலத்தில் கட்சியின் பொதுச் செயலராகவும் சோமநாத் செயல்பட்டுள்ளார். 1947 வரை மத்தியக் கமிட்டி உறுப்பினராக நீடித்த சோமநாத் அதன் பிறகு பொலிட் பீரோ உறுப்பினரானார்.

          பம்பாய் தொழிலாளர்களின் குடியிருப்பான ‘சாவல்’ (அடுக்ககத் தொகுப்பு வீடுகள், அனைத்துப் பயன்பாட்டுக்குமான ஒற்றை அறை, பொது கழிப்பறை உடையது, புலம்பெயர் தொழிலாளர்களுக்கான தனித்துவமான குறைந்த எளிய வாடகைக் குடியிருப்பு) ஒன்றிலிருந்து 1936ல் சோமநாத் கைது செய்யப்பட்டு, கொடுமையாக அறியப்படும் லாகூர் குய்லா சிறையில் --தர்ஷன் சிங் கனடியன், தேஜா சிங் ஸ்வதந்வர் முதலானவர்களுடன் –அடைக்கப்பட்டார். விடுதலையான சோமநாத் 1939ல் மீண்டும் கைதானார்.

          வங்காளத் தொழிலாளர்கள் மத்தியில் சோமநாத் லாகிரி புகழ்பெற்ற பேச்சாளராகத் திகழ்ந்தார்.

காங்கிரஸில் பணி

          பங்கிம் முகர்ஜி மற்றும் முஸாஃபர் அகமது இவர்களோடு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகச் சோமநாத் லாகிரி 1938ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சிக்குள் அமைக்கப்பட்ட இடதுசாரி ஒருங்கிணைப்புக் குழுவிலும் சேர்க்கப்பட்டார். வங்காளப் பிரதேசக் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராக 1938--39ல் செயல்பட்டார்.

          1944ல் காந்திஜிக்கு ஆதரவாகத் திரண்ட பெருந்திரள் கூட்டமொன்றில், உண்ணாவிரதம் இருக்க வேண்டாம் எனக் காந்திஜியிடம் நேரடியாக வேண்டுகோள் விடுத்தார் சோமநாத்! காந்திஜியைப் பி.சி. ஜோஷி ‘தேசத் தந்தை’ என அழைப்பதற்கு முன்பு சோமநாத் லாகிரி காந்திஜியை “நமது தந்தை மற்றும் நமது குரு” என்றழைத்தார்.

          சோமநாத் லாகிரி மற்றும் பங்கிம் முகர்ஜி தெரிவிக்கும் யோசனைகள் மற்றும் கருத்துகளை எப்போதும் மற்றவர்கள் அப்படியே ஏற்றுக் கொள்வது வழக்கம் என்ற அளவு அவை அத்துணை மதிப்புமிக்கவையாக இருந்தன. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கலந்தாலோசனையில் இருக்கும்போதே இந்த யோசனைகள் ஏற்கப்பட்டிருக்கின்றன.

          1944ல் கல்கத்தா பல்கலைக்கழக இன்ஸ்டியூட் அரங்கில் மாணவர்கள் மத்தியில் சோமநாத் பேசியபோது, அதற்கு இடையூறாக மாணவர்கள் தொடர்ந்து கைதட்டிக் கொண்டே இருந்தார்கள். அப்போது அவர் ‘மக்கள் யுத்தம்’ என்ற (People’s War line) கருத்தை விளக்க வேண்டியிருந்தது. உடனே மைக் அருகே சென்ற சோமநாத், ‘ஆங்கிலக் கவிஞர் PB ஷெல்லியைப் பற்றித் தெரியுமா?’ எனப் பார்வையாளர்களிடம் வினவினார்! அரங்கில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்! அவர் தொடர்ந்து ஷெல்லியின் கவிதைகளையும் ஆங்கில இலக்கியத்தின் ‘புனைவு இலக்கியம்’ குறித்து, மார்க்சிய நோக்கில் அவற்றை வங்க மொழியில் விளக்கினார். கூட்டத்தினர் மகுடிக்கு மயங்கியவராகக் கேட்டனர். (ஆங்கில இலக்கிய வரலாற்றில் 18ம் நூற்றாண்டின் பிற்பகுதி, 19ம் நூற்றாண்டின் முற்பகுதியில், இயற்கையை ஆராதித்தப் பரவலான ஓர் இலக்கியப் போக்கு ‘ரொமான்டிசம்’. பாரதியாரின் புனைப் பெயர்களில் ஒன்று ‘ஷெல்லி தாசன்’. அந்த அளவு ஷெல்லி ‘மனித வர்க்கத்தையெல்லாம் அரவணைக்கும் மனிதாபிமானத்தோடு இலக்கியம் படைத்தவன்’ என– பாரதியும் ஷெல்லியும் நூலில் தொமுசி ரகுநாதன் –என்சிபிஹெச் வெளியீடு ).

40 நிமிடங்கள் இவற்றை விளக்கிய பிறகு சோமநாத் பார்வையாளர்களிடம், ‘இப்போது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ‘மக்கள் போர்’ நிலைபாடு குறித்துப் பேசலாமா’ என அனுமதி கேட்டார்; பிறகு குண்டூசி விழும் சத்தத்தைக் கேட்குமளவு அமைதியாக அவரது உரையைக் கேட்டனர். (இப்போதும் சரியான புரிதல் இல்லாமல், உலகப் போரின் போது பிரிட்டீஸாருக்குக் கம்யூனிஸ்ட்கள் உதவினார்கள் எனக் கம்யூனிஸ்ட் கட்சிகள் மேல் விமர்சனம் வைக்கப்படுகிறது. ஹிட்டலரின் பாசிசத்தை முறியடிப்பதே மனிதகுலத்தின் அன்றைய ஒரே தேவையாக இருந்தது. தொழிலாளர்கள் அதனை நன்கு புரிந்திருந்தனர் என டாக்டர் அம்பேத்கர் பம்பாய் வானொலி நிலையத்திலிருந்து ஆற்றிய உரையில் விரிவாக விளக்கியுள்ளார். கம்யூனிஸ்ட்கள் குறுகிய தேசியக் கண்ணோட்டத்தை விடுத்து மனிதகுலத்தைப் பாதுகாக்கவும் புதிய சமூக ஆட்சி முறையை உருவாக்கவும் உறுதியாக நின்றார்கள் –மொழிபெயர்ப்பாளர் இணைத்தது)

          1940ல் பெரும் எண்ணிக்கையில் கம்யூனிஸ்ட்கள் கைது செய்யப்பட்டனர். சோமநாத்தும் வேறுபலரும் அந்த இடங்களிலிருந்து விலக்கி வைக்கப்பட்டனர். அவர் இரண்டு ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். திரும்ப வந்ததும் கல்கத்தா மாநகராட்சியின் தொழிலாளர் இடத்திற்கான தேர்தலில் (1943) போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றார். எதிர்த்துப் போட்டியிட்டவர் இரண்டாயிரம் வாக்குகள் வாங்க, இவர் பத்தாயிரத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார்.

          சோமநாத் 1944ல் கல்கத்தா முனிசிபல் தொழிலாளர்களின் சரித்திரப் புகழ்மிக்க வேலைநிறுத்தத்தைத் தலைமையேற்று நடத்தினார். சணல் தொழிலாளர்கள் மத்தியில் 15 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றினார். வங்காளத்தின் மிகச் சிறந்த தொழிற்சங்கமாக, முகமது இஸ்மாயில், சதுர் அலி மற்றும் பிறருடன் சேர்ந்து, டிராம் தொழிலாளர்கள் சங்கத்தைக் கட்டியமைத்தார். வங்காளத்தில் வெளியான ஒரே தொழிலாளர்களின் பத்திரிக்கையான ‘ஸ்வதின்டா’ (வங்க மொழியில் ‘சுதந்திரம்’ எனப் பொருள்படும்) இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்.

          அரசியல்வாதியாகவும் பத்திரிக்கையாளராகவும் இருந்ததால் மிக உன்னிப்பாக அனைத்தையும் கவனித்து அவதானிப்பார். இன்றைய நிகழ்வுகளின் முக்கியமான அம்சம் என்ன என்று ஒருமுறை நிகில் சக்ரவர்த்தியிடம் கேட்டார். போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் மக்கள் ஓடினர் என்பதற்குப் பதிலாக, போலீஸ் துப்பாக்கிச் சூட்டிற்குள் மக்கள் ஓடினர் என நிகில் தகவல் தெரிவித்தார். சோமநாத் முத்தாய்ப்பு செய்தார்: ‘இதுதான், இதுதான் செய்தி. மக்கள் இனிமேலும் அஞ்சி ஓடுவதில்லை; மக்கள் புரட்சியின் இந்த அம்சத்தை முறையாகச் செய்தியாக்க வேண்டும்’.

அரசியல் நிர்ணய சபைக்குத் தேர்வு

          அரசியலமைப்பு நிர்ணய சபைக்குக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாகத் தேர்வான ஒரே உறுப்பினர் சோமநாத் லாகிரி. சொத்துரிமை அடிப்படையில் 13 சதமானவர்கள் மட்டுமே, பிரிட்டீஷ் ஆட்சி காலத்தில், நிர்ணய சபைக்கான தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். எனவே கம்யூனிஸ்ட்கள் போட்டியிடுவதோ அல்லது வெல்வதோ ஏறத்தாழ முடியாத ஒன்று. இதிலிருந்து பாதுகாத்த ஒரே அம்சம், ‘தொழிலாளர்களின் தொகுதிகள்’ – அவையும் கூட கடுமையான போராட்டங்களுக்குப் பிறகே அமைப்பது சாத்தியமானது.

          கல்கத்தா மற்றும் புறநகர் தொழிலாளர் தொகுதியிலிருந்து சோமநாத் தேர்வானார். தேர்தல் பரப்புரையின்போது அவரது வீடு குண்டர்களால் தாக்குதலுக்கு உள்ளானது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வங்காளத்தில் மேலும் 6 வேட்பாளர்களை நிறுத்தி இருந்தது.

          அரசமைப்பு நிர்ணய சபை 1946ல் முதலாவது இந்திய அரசை தேர்ந்தெடுத்தது; அந்த இடைக்கால அரசின் பிரதமராக நேரு இருந்தார். அந்த அரசு ஆழமான விவாதங்களுக்குப் பிறகு, இந்தியாவுக்கான அரசமைப்புச் சட்டத்தை 1949ல் இயற்றியது.

          அரசமைப்பு நிர்ணய சபை விவாதங்களில் சோமநாத் லாகிரி துடிப்புடன் தீவிரமாகச் செயலாற்றினார். அவர்தான், இடைக்கால அரசு அமைக்கப்பட வேண்டும் எனவும்; வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை அடிப்படையில், அந்த அரசே முதலாவது தேர்தலை நடத்தலாம் எனவும் சபையில் முதலில் கோரியவர் – அரசமைப்பு நிர்ணய சபையின் தலைவர் டாக்டர் இராஜேந்திர பிரஸாத் சோமநாத்தின் தீர்மானத்தை ‘விதிகளுக்கு ஏற்புடையதாக இல்லை’ (அவுட் ஆஃப் ஆர்டர்) என நிராகரித்து விட்டார்.

          அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் ஊதியத்தைக் குறைக்க வேண்டும், கீழ்மட்ட ஊழியர்களின் ஊதியத்தை அதிகரிக்க வேண்டும் என்பதை முன்மொழிந்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார் சோமநாத். ஆனால் அந்த யோசனைகள் நிராகரிக்கப்பட்டன என்பது தெரிந்ததுதான்.

          தேசத் துரோகம் குறித்த சர்தார் பட்டேலின் கருத்துகளைச் சோமநாத் கடுமையாக எதிர்த்து, ‘அது பிரிட்டீஷ் அணுகுமுறையின் போக்கு, அதன் தொடர்ச்சி’ எனக் கூறினார். அரசை எதிர்க்கும் எல்லாமும் ‘தேசத் துரோக நடவடிக்கை’ என முத்திரை குத்திவிட முடியாது. இங்கிலாந்திலேயே அதிகமான சுதந்திரம் உண்டு. பட்டேல் மட்டும் தனது வழியில் அவரது கருத்திலேயே செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தால், அனைத்துச் சோஷலிச மற்றும் முற்போக்கான கருத்துகள் ஒவ்வொன்றும் நசுக்கப்பட்டிருக்கும்.

          அரசியல் நிர்ணய சபைக்கான வழிநடத்தும் குழுவுக்கான 11 இடங்களுக்கு, சோமநாத் லாகிரி, லட்சுமி நாராணன்சுவாமி உட்பட 13 பெயர்கள் முன்மொழியப்பட்டதில், பின்னிருவரும் தங்கள் பெயர்களைத் திரும்பப் பெற்றனர். அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையே, சோமநாத் பொதுமக்களுக்கான அதிகமான உரிமைகள் கோரி சபையில் கேள்விகளை எழுப்பினார். ‘மக்களின் குரல்’ என நேருவைப் புகழ்ந்துரைத்த சோமநாத், இருப்பினும் அவரும் அதற்கேற்றபடி நடக்க வேண்டுமெனக் கூறினார்.

விடுதலைக்குப் பிறகு செயல்பாடுகள்

          இந்தியா சுதந்திரமடைந்த சாதனையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றது. விரைவில் பிடிஆர் பாதை கட்சியைக் கைப்பற்றிவிட, ‘உண்மையில்’ இந்தியா சுதந்திரமடைந்தது என்பதை நிராகரித்து, ‘புரட்சி’க்கு அறைகூவல் விடப்பட்டது. சோமநாத் லாகிரி கட்சி பொலிட் பீரோவின் ஓர் அங்கமாக, பிடிஆர், டாக்டர் அதிகாரி, பவானி சென் மற்றும் என்கே கிருஷ்ணனுடன் இருந்தார். விரைவிலேயே கட்சியில் கடும் பாதிப்பு, தலைமையில் மாற்றத்தை ஏற்படுத்த, மீண்டும் ஆரோக்கியமான பாதைக்குக் கட்சி திரும்பியது. சோமநாத்தும் நீக்கப்பட்டார். பின் வந்த ஆண்டுகளில் இந்திய (அரசியல்) சூழல் குறித்த ஆரோக்கியமான எதார்த்தப் பகுப்பாய்வை அவர் ஒப்புக் கொண்டார். கட்சி மீண்டும் தேசத்தின் முக்கிய அரசியல் நீரோட்டப் பாதைக்குத் திரும்ப அவரும் துணயாக இருந்தார்.

          காந்திஜியின் படுகொலையை 1948லிலேயே கண்டித்த சோமநாத் கூறினார், துயரம் கொண்டு வருந்தவில்லை, மாறாகக் கடும் சினமுற்றிருக்கிறேன்!’

1962 சீனாவின் ஆக்கிரமிப்பைக் கண்டித்தல்

          கட்சியின் வங்கமொழி வாராந்திரப் பத்திரிக்கையான ‘காலாந்தர்’ 1963 ஜனவரி இதழில் நன்கு ஆய்வு செய்து சீன ஆக்கிரமிப்புக் குறித்துச் சோமநாத் மிகவும் அழகான கட்டுரையில் பின்வருமாறு எழுதினார்: ‘ஒவ்வொரு ஆண்டும் இந்தியக் குடியரசை வலிமைப்படுத்த நமது போராட்டங்களை மேலும் முன்னெடுத்துச் செல்கிறோம். அந்த முயற்சியில் ‘ஒன்றுபடுவது மற்றும் போராடுவது’ என்ற கொள்கையின் ஒரு பகுதி அது. ஆனால் சித்தாந்தங்களை இயந்திரத்தனமாக, தீவிரமான வறட்டுவாதமாகவும் குழுப்போக்குடையதாகவும் மாற்றும்போது இவை மறக்கப்பட்டு விடுகின்றன. அதன் காரணமாகவே, பஞ்சசீலம், சமாதான சகவாழ்வு மற்றும் அணிசேரா இயக்கம் கூட விமர்சனத் தாக்குதலுக்கு ஆட்படுகிறது. தீவிர இடதுசாரிகள் --வர்க்க எதிரிகளாம்-- இருண்ட சக்திகளுக்கு உதவுவதுதான், சீனாவின் இந்தியா மீதான தாக்குதலும்; வலதுசாரி பிற்போக்கு முகாம்களுக்குப் பெரும் கொண்டாட்டத்திற்கான காரணமாகி விட்டது இது. எதை வலதுசாரி பிற்போக்கு சக்திகளால் சாதிக்கப்பட முடியாததோ, அதைச் சீனாவின் தலைமையில் மிகத் தீவிரமான இடதுசாரிகள் சாதிக்கின்றன’. சோமநாத் எழுதினார், ‘‘நமது தேசிய உணர்வுகள் செத்துப் போகவில்லை, தேசப் பாதுகாப்பிற்கான தேவையான முறையான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்வோம். நாட்டு மக்களை ஒன்று திரட்டிப் பிரதமரின் முயற்சிகளுக்குப் பின்னால் உறுதுணையாக நாம் அணி வகுப்போம்!’’

          இந்தத் தேசத்தை நமது சொந்த வழியில் நிர்மாணிப்போம்! அமைதிக்காகப் போராடுவோம்!” என்று சோமநாத் லாகிரி அந்தக் கட்டுரையை முத்தாய்ப்பு செய்தார்.

சட்டமன்றத்தில், சிபிஐ தலைவராக

          1957ல் மேற்கு வங்கச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சோமநாத் லாகிரி, தொடர்ந்து 1977வரை தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார். 1967 மற்றும் 1969ல் மாநில அமைச்சரவையில் அமைச்சராகப் பொறுப்பு வகித்துள்ளார். 1973ல் பொது கணக்குக் குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

          1961, 1964 மற்றும் 1968ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தேசியக் குழு உறுப்பினராக இருந்தார். தொடர்ந்து ‘நியூ ஏஜ்’ இதழில் கட்டுரைகள் எழுதி வந்தார். அதே போலப் பெருந்திரள் பொதுக் கூட்டங்கள், மார்க்சியம், சோஷலிசம் போன்ற கருந்தரங்கங்களிலும் மிகுந்த செயலூக்கமுடையவராகப் பங்கு பெற்றார். 1931ல் ‘அரசும் புரட்சியும்’ நூலை வங்க மொழியில் மொழிபெயர்த்தார். ‘சம்யோபத்’ Samyobad  (சோஷலிசம்) என்பது அவர் எழுதிய  மற்றொரு நூல். நியூஏஜ் போல வங்கத்தின் ‘ஜனசக்தி’ நாளிதழிலும் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். 1967ல் அவரது முதல் சிறுகதை தொகுப்பு நூல் வெளியானது.

          சோமநாத் லாகிரி 1984ம் ஆண்டு, அக்டோபர் 19ம் நாள் மறைந்தார். அவரது நூல்கள் மற்றும் அரசியல் நிர்ணய சபையில் அவர் ஆற்றிய உரைகளின் வழி என்றென்றும் அவர் புகழ் நிலைத்திருக்கும்! லால் சலாம்!

--தமிழில் : நீலகண்டன்,

 என்எப்டிஇ, கடலூர்


No comments:

Post a Comment