Thursday 3 September 2020

வரலாற்றுத் தலைவர்கள் வரிசை 11 : விமலா டாங்

 

நமது பெரும் தலைவர்கள் வாழ்விலிருந்து :

சில சித்திரத் சிதறல்கள் -11



விமலா டாங் :
முன்னுதாரணத் தலைவர், 
பத்மஸ்ரீ விருதாளர்

--அனில் ரஜீம்வாலே

(நியூ ஏஜ் ஆகஸ்ட் 30 – செப்டம்பர் 5 இதழ்)

          பஞ்சாப் தீவிரவாதத்தைத் தீரமுடன் எதிர்கொண்ட விமலா டாங், தனது உழைப்பாலும் தன்னலமற்ற சேவையாலும் மிகச் சில கம்யூனிஸ்ட்களுக்கே வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டு தேசத்தால் கௌரவிக்கப்பட்டவர். விமலா டாங் (பகாயா) லாகூரில் 1926 டிசம்பர் 26ம் நாள் பிறந்தார். தாராளச் சிந்தையுடைய தேசியவாதியான அவருடைய தந்தை அவ்தார் லால் பகாயா, (பிபிசி) பிரிட்டீஷ் ப்ராட்காஸ்டிங் கார்ப்பரேஷனில் செய்தி வாசிப்பாளராக லண்டனில் பணியாற்றியவர். விமாலாவின் தாயார் கமலாவுடன், அவரது இளைய சகோதரியும் 1931ல் மேடம் மரியா மாண்டிசோரியின் நேரடி மேற்பார்வையில் மாண்டிசோரி டிப்ளமா படிப்பை மேற்கொள்ள  ரோம் சென்றனர். இந்தியாவில் முதன் முதலாக மாண்டிசோரி ஆசிரியர்களான நால்வரில் விமலாவின் தாயாரும் ஒருவர். அந்தக் கமலா அம்மையார்தான், தனது கணவர் அவ்தூர் லால் லண்டனிலேயே 1943ல் திடீரென இறந்த பிறகு முழு குடும்பப் பொறுப்பையும் ஏற்று நிறைவேற்றியவர்.

விமலாவின் துவக்கக் கல்வி

       லாகூரில் சர் கங்கா ராம் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். அந்தப் பள்ளியின் முதல்வர் மிருணாளினி சட்டோபாத்யாயா; அவர் கவிக்குயில் சரோஜினி நாயுடுவின் தங்கை. பள்ளியில் விமலா சர்வ கலைகளிலும், படிப்பு, விளையாட்டில் கேப்டன், வில்வித்தை, இசை பாடல், என இப்படி இப்படிப் பல பிரிவுகளிலும் சிறந்து விளங்கினார்! பள்ளியின் ‘பார்வர்டு’ என்னும் சுவர்-பத்திரிக்கையின் ’ஆசிரியர்கள் குழு’வில் இடம் பெற்றார். மகாத்மா காந்திஜியின் பிறந்தநாள் மற்றும் (ஜனவரி 26) சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் உற்சாகமாக ஈடுபட்டார். முதல்வர் மிருணாளினியின் மற்றொரு சகோதரியான சுகாசினி பாம்பேயிலிருந்து அடிக்கடி வருவது வழக்கம். அவர் (‘The Internationale’) எனப்படும் ‘சர்வதேசிய கீதம்’ மற்றும் ருஷ்யப் புரட்சிக் கதைகளைக் கற்பிப்பார்.

          (“பட்டினிக் கொடுஞ்சிறைக்குள் பதறுகின்ற மனிதர்காள்! பாரில் கடையரே எழுங்கள், வீறுகொண்டு தோழர்காள்!” என்பதே ‘The nternationale’ பாடல்; அதைப் பிரஞ்ச் புரட்சியின்போது யூஜின் எடின் பர்ட்டியர் என்ற சோஷலிசக் கவிஞர் எழுதினார். முதல் அகில காலத்திலிருந்து அந்தப் பாடல் ‘பாட்டாளி வர்க்கச் சர்வகீதமானது’. பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்ட அந்தப் பாடலின் பொருளை ஏ.எஸ்.கே. தமிழில் விளக்கிக் கூற, ரயில்வே போராட்டத்தில் சிறைப்பட்ட நாகை சாமிநாதன் என்பவர் தமிழ் பாடலாக்கினாராம்! -- சுதந்திரப் போரில் தமிழக கம்யூனிஸ்ட்டுகளின் மகத்தான பங்கு என்ற தோழர் என். ராமகிருஷ்ணன் எழுதிய நூலிலிருந்து மொழிபெயர்ப்பாளர் இணைத்த தகவல்)

1943 சிபிஐ முதல் கட்சிக் காங்கிரஸ்

        பஞ்சாப் கலைக்குழு ஒன்றின் உறுப்பினராக இடம்பெற்ற விமலா 1943 முதலாவது சிபிஐ கட்சிக் காங்கிரஸில் கலந்து கொள்ள பாம்பே நகருக்கு வருவதற்கான முதல் அனுபவம் கிடைத்தது. முதல் முறையாக உயரமான கட்டடங்கள், அகலமான வீதிகள், உள்நாட்டு ரயில் வண்டிகள், மிக நெருக்கடியான போக்குவரத்து மற்றும் கடற்கரை காட்சிகளைப் பார்த்தார்! சிபிஐயின் பல பெரிய ஆளுமைத் தலைவர்களைச் சந்தித்தார்; பி.சி. ஜோஷி, டாக்டர் அதிகாரி, பிடிஆர், எஸ்ஏ டாங்கே மற்றும் பலர். பினாய் ராய் மற்றும் மக்தூம் மொஹிதீன் இவர்களால் அவர் மிக ஆழமாக ஈர்க்கப்பட்டார்.

        லாகூருக்குத் திரும்பும்போதுதான் அவர் கட்சி உறுப்பினர் ஆனார். கட்சி (வகுப்பு) பள்ளியில் அருண் போஸ் சொற்பொழிவுகளில் விமலா ஒருவர் மட்டுமே பெண் பங்கேற்பாளர்.  (சுதந்திரப் போராட்டத் தேசியத் தலைவர் பூபேந்திர நாத் பாசுவின் உறவினரான அருண் போஸ், பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்; பின்னர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக 30 வயதுகளிலேயே நியமிக்கப்பட்ட அறிஞர்)

1943 வங்காளப் பஞ்சத்தின் போது சேவை

       1943ம் ஆண்டு வங்கத்தின் பெரும் பஞ்சத்தில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள பஞ்சாபிலிருந்து சென்ற நான்கு மாணவர்கள் குழுவில் விமலா பகாயா, மற்றும் சத்யபால் டாங் இடம் பெற்றனர். அவர்கள் பினாய் ராய் அவர்களின் சொந்த மாவட்டமான ரங்க்பூருக்கு விஜயம் செய்தனர். அங்கே சுற்றிலும் நடைபெற்ற துயரம்மிக்க சாவு மற்றும் அழிவுகளை விமலா நேரில் கண்டார். துயரம் கொப்பளிக்கும் பல பாடல்களை அந்த விஜயத்தின்போது அவர் பாடினார்.

அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் AISF ல்

       1944ல் பாம்பே வில்சன் கல்லூரியில் பொருளாதாரம் (ஹானர்ஸ்) பட்டப் படிப்பில் விமலா சேர்ந்தார், அவர் கல்வி உதவித் தொகையும் பெற்றார்.

        ஏஐஎஸ்எப் பெருமன்றத்தின் இணைப்புச் சங்கமான ‘பாம்பே மாணவர்கள் சங்க’த்துடன் (BSU) விமலாவுக்குத் தொடர்பு ஏற்பட தொடர்ந்து மாணவர்சங்க அலுவலகத்திற்குச் செல்லத் துவங்கினார். சிபிஐ கட்சியின் ‘பியூபிள்ஸ் வார்’ இதழைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வங்கப் பஞ்சத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவ, மாணவர் அமைப்பு ‘வங்கத்தைப் பாதுகாப்போம்’ இயக்கத்தைத் துவக்கியது. அதில் பணியாற்ற விமலா, ரவி பகாயா, சத்யபால் டாங் முதலானோர் பலமான கேடர் அணியை அமைத்தார்கள். விமலாவின் குடும்பத்தினரும் பம்பாய்க்கு மாற்றிக் கொண்டு வர, கட்சியுடன் நெருக்கம் அதிகமானது. கல்லூரி விவாத மேடைகளில் விமலா முன்னணிப் பேச்சாளராக மலர்ந்தார்.

1946, பாம்பே மக்கள் எழுச்சி

        இரண்டாம் உலக யுத்தம் முடிந்த பிற்பகுதியில் ஜனவரி 1946 தொடங்கி நாட்டில் போராட்டங்கள் எழுச்சிபெற, பேரணி, ஆர்ப்பாட்டம், கூட்டங்கள், வேலைநிலைநிறுத்தங்கள் தினசரி நிகழ்வுகளாக, அதில் பெருமளவு எண்ணிக்கையில் மாணவர்களும் பங்கு கொண்டனர். பெருமன்ற மாணவர்கள், காங்கிரஸ் மாணவர்கள் கூட்டாகப் பேரணிகளை நடத்த, துப்பாக்கிச் சூட்டையும் காவலர்களின் லத்தி அடிகளையும் அவர்கள் எதிர்கொள்ள நேரிட்டது. அந்தப் போராட்டங்களின் முன்வரிசையில் வில்சன் கல்லூரி மாணவர்கள் ‘முனையிலே முகத்து நின்’றார்கள். 1946 பிப்ரவரியில் ராயல் இந்திய கப்பற்படை (RIN) கிளர்ச்சி புரட்சி வெடித்தது; அவர்களின் உணவு மற்றும் எரிபொருள் சங்கிலித் தொடர் வரத்து துண்டிக்கப்பட்டிருந்தது. பாம்பே மாணவர்கள் சங்கமும், மாணவர் பெருமன்றமும் போராட்டத்திற்கு ஊக்கத்துடன் ஆதரவளித்து, அவர்களுக்காக உணவுப் பொருட்கள் திரட்டினர். விமலா, நர்கீஸ் பாட்டிவலா மற்றும் பிறருடன் உற்சாகமாக எல்லா இடத்திலும் இருந்து செயல்பட்டார். இதன் மத்தியில் எம்.ஏ. முதுகலை பொருளாதாரப் பள்ளியில் படிக்க விமலாவுக்கு அனுமதி கிடைத்தது.

1946, சர்வதேச இளைஞர்கள் கமிஷன்

        பெருமன்ற அழைப்பின் பேரில், சர்வதேச இளைஞர்களின் குழு ஒன்று 1946ல் இந்தியா வந்தது. அந்தக் குழுவில் சோவியத், யுகோஸ்லாவேகியா, டேனிஷ் மற்றும் பிரஞ்ச் பிரதிநிதிகள் இடம் பெற்றிருந்தார்கள். பம்பாய் நகரைச் சுற்றிக் காட்டவும், அங்குக் கூட்டங்களில் பேசவும் விமலாவும் மற்றவர்களும் அவர்களுக்கு உதவியாக உடன் சென்றனர்.

        அந்தக் குழு விடைபெற்று புறப்பட்டுச் சென்றபின், சர்வதேச மாணவர்கள் சங்க (International Union of Students) மாநாட்டில் கலந்து கொள்ளப் பெருமன்றத்தின் பிரதிநிதிகள் குழுவைத் தேர்ந்தெடுக்கும் கேள்வி எழுந்தது; விமலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சர்வதேச மாணவர்கள் சங்க மாநாட்டில்

        உலக இளைஞர்கள் திருவிழா கொண்டாடப்பட இருந்தது. விமலா பகாயா ‘எஸ் எஸ் சமாரியா’ கப்பலில் 1947 ஜூன் மாதம் இந்தியாவை விட்டு புறப்பட்டு, கெய்ரோ வழியாக லிவர்பூல் நகரை 21 பயணத்திற்குப் பிறகு சென்றடைந்தார். அவர் தம்மோடு ஷாகித் பகத் சிங் ஓவியங்களையும் பிறவற்றையும் எடுத்துச் சென்றார் (இந்தியில் ஷாகித் எனில் தியாகி); அவை சுங்க அதிகாரிகளின் உணர்வற்ற செயல்பாடுகளால் சற்றே சிதைந்து பாதிப்படைந்தது. குமுத் மேத்தா அவரை வரவேற்க அவர்கள் லண்டனைச் சென்றடைந்தனர்.

        அங்கே கிட்டி பூம்லா, அர்விந்த் மேத்தா, டாக்டர் கேஎம் அஷ்ரப், ஷரப் ஆதர் அலி போன்றோரை விமலா சந்தித்தார். தி கிரேட் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்குச் சென்றபோது ரஜினி பால்பே தத் மற்றும் பிற தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். மறுநாள் சர்வதேச மாணவர்கள் சங்க தலைமையகமான ப்ராக் நகருக்குப் (செக் குடியரசின் தலைநகரம்) புறப்பட்டனர்.

        உலக இளைஞர்கள் விழாவின்போது இந்தியப் பிரதிநிதிகள் குழுவின் முதல் வரிசையில் விமலா பகாயா நடந்தார். அந்த மாநாட்டில் இந்தோனேஷியாவின் சுகியோனோ மற்றும் இந்தியாவின் விமலா பகாயா ஆகிய இரண்டு பேர் மட்டுமே ஆசியாவின் பிரதிநிதிகளாகக் கலந்து கொண்டனர்.  அந்த மாநாட்டின் பணிச் சூழல் மற்றும் சர்வதேச மாணவர்கள் சங்கத் தலைமையகத்தின் வழிமுறைகள் மிகவும் அதிகார அலுவல் அமைப்புமுறை சார்ந்ததாக இருந்ததாக எழுதிய விமலா, அவர்கள் காலனிய பிரச்சனைகளைப் புரிந்து கொள்ளும் உணர்வற்றவர்களாக இருந்தனர் என்றார். அதன் பிறகு பிரத்தேகமான காலனிய அலுவலகம் அமைக்கப்பட்டது, அதில் விமலா ஓர் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

        சர்வதேச மாணவர்கள் சங்க அமைப்பில் விமலா கடுமையாக உழைத்தார்; காலை 7 மணிக்கே அதன் அலுவலகத்திற்குச் சென்றுவிடும் அவர் தனது விடுதிக்கு மாலை 6 மணிக்குத் தான் திரும்புவார். மாணவர்கள் நிவாரணக் குழுவின் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டார். புகழ்பெற்ற தூக்குமேடைக் குறிப்புகள் (‘Notes from the Gallows’) புத்தகத்தை எழுதிய ஜுலியஸ் பூசிக் அவர்களின் மனைவி குஸ்டவா பூசிக்கைப் பராக்கில் விமலா சந்தித்தார்.

        [ஜுலியஸ் பூசிக் (Julius Fucik) (23 பிப்ரவரி 1903 – 8 செப்டம்பர் 1943) ஒரு‍ பத்திரிகையாளர், செக்கோஸ்லோவோக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி உறுப்பினர்.  நாஜி எதிர்ப்பு முன்னணியின் ஒரு‍ பகுதியாகவும் செயல்பட்டவர். இட்லரின் ரகசிய காவல்துறை 1942 இல் பூசிக்கை கைது‍ செய்து சிறையில் அடைத்தது. சிறையிலிருந்த போது‍ தூக்குமேடைக் குறிப்புகள் என்ற உலகப் புகழ்பெற்ற நூலை எழுதினார். நாஜிகளால் இரண்டாவது உலக யுத்தத்தின்போது சிறையில் கொடுமைகள் செய்யப்பட்டு 1943 செப்டம்பர் 8 ஆம் தேதி பூசிக் பெர்லினில் தூக்கிலிடப்பட்டார். அவரது‍ மரணத்திற்குப் பிறகு‍ 1950 இல் சர்வதேச சமாதானப் பரிசு‍ வழங்கப்பட்டது. – நன்றி விக்கி பீடியா தகவல்]

செக்கோஸ்லோவாக்கியா விமலாவின் இரண்டாவது தாய் வீடானது. செக் தேசத்தில் விரிவாகப் பயணங்களை மேற்கொண்டு, செக் மொழியையும் சரளமாகப் பேசக் கற்றுக் கொண்டார். இரண்டாவது உலக யுத்தம் முடிந்த உடனடி சூழ்நிலையில் நிலைமை மிகக் கடினமாக இருந்தது; எந்த அளவுக்கு எனில், கடிதங்களைத் தபால் பெட்டியில் போடக்கூட ஒருவர் பாஸ்போர்ட் ஆவணத்தைக் காட்ட வேண்டிய கட்டாயம்! அனைவருக்கும் உணவு கூப்பன்கள் வழங்கப்பட்டன. சர்வதேச மாணவர்கள் சங்க அமைப்பு பின்னர் தனக்கான தனி கேண்டீனை அமைத்துக் கொண்டது.

ரஷ்யப் புரட்சியைக் கொண்டாடும் கலாச்சார விழாக்களில் விமலா பங்கு பெற்றார். கீழை நாடுகளின் கல்வி நிறுவனமான ஓரியண்டல் இன்ஸ்ட்டியூட்டின் பேராசிரியர் லெஸ்னி அவர்களைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. பெரும் கல்வியாளரான அவர் வங்காளம் மற்றும் சமஸ்கிருதத்தில் பாண்டியத்துவம் பெற்றவர்; தாகூரைப் படித்த கல்வியாளர், இந்தியாவுக்கு விஜயம் செய்து, சாந்திநிகேதன் (பல்கலைக்கழகத்திற்கும்) பலமுறை வந்தவர்.

இந்தியா திரும்புதல்

       1951ல் விமலா பாம்பேக்குத் திரும்பி வந்ததும், குடும்பத்திற்கு ஆதரவாக ஒரு விளம்பர நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். கட்சியில் நிலைமை மோசமாக இருந்தது; அப்போது கட்சி இடதுசாரி சாகசச் சுய அழிப்புப் பாதையில் சென்று கொண்டிருந்ததால் குழப்பத்தில் இருந்தது.

        1952 ஏப்ரல் 10ம் நாள் விமலா, சாதாரணப் பதிவுத் திருமண முறையில் சத்யபால் டாங்கை மணந்தார். விமலா டாங் அமிர்தசரஸ் நகருக்கு அருகே சேஹர்ட்டா என்ற இடத்திற்கு மாறினார். (ஆறு பெரும் சக்கரங்கள் என்று பஞ்சாபியில் பொருள்படும் புனித குளம் இருக்கும், பாக்கிஸ்தான் எல்லையை ஒட்டிய நகர். அந்தக் குளத்தைச் சீக்கியர்களின் ஐந்தாவது குருவான குரு அர்ஜுன் தேவ் ஜீ நிர்மாணித்தார்.) அங்கே ஏனையத் தொழிலாளர்கள் போலத் தொழிலாளர் காலனியில் அவர்கள் தங்கினர். ஓர் அறைமட்டுமே உள்ள குடியிருப்பு, அதனோடு சிறிய முற்றம் அல்லது ஒரு சிறு அங்கணம் (‘அங்கன்’) இணைந்த குடியிருப்பு; தண்ணீருக்குக் கை பம்பு இருந்தது;  அங்கணத்தில் சமைத்து, துவைத்துக் கொள்ள வேண்டும்; தனியே கழிவறை கிடையாது, காலை இயற்கை கடன்களுக்காக மற்றவர்களோடு வயல்வெளிக்குச் செல்ல வேண்டும். மின்விசிறி முதலிய எந்த வசதியும் இல்லாமல் கடுமையான கோடை காலத்தையும் அங்கேயே கழித்தபோதும், அவர்கள் இருவரும் மகிழ்ச்சியாகவே இருந்தார்கள். மற்ற தொழிலாளர்களும் அவர்களை மிகவும் நேசித்தனர். தொழிலாளர்களோடு பின்னர் அவர்கள் வாழ்க்கை நிலைமைகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டது. ஒரு கல்லூரியில் விமலா விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்த போதும், 1958ல் கட்சி முழுநேர ஊழியராக அந்தப் பணியைவிட்டு விலகினார். (சிலகாலம் ப்பிளிட்ஸ் மற்றும் நியூஏஜ் பத்திரிக்கைகளின் செய்தியாளராகப் பணியாற்றினார்)

 இப்படி சேஹர்ட்டா அவர்களின் வாழ்விடமாக ஐம்பது ஆண்டுகளுக்கு இருந்தது. விரைவில் சேஹர்ட்டா நகராட்சி குழுவின் தலைவரான விமலா, அந்த நகராட்சியை முன்னுதாரணமான நகராட்சியாக மாற்றினார். சாலைகள், விளக்கு வசதி, மருத்துவமனை, ஏழைகளுக்குக் கண்சிகிச்சை முகாம், பள்ளிகள், தடையற்ற குடிநீர் வழங்கல் இப்படிப் பலவிதமான வளர்ச்சிப் பணிகளைச் செய்தார். பஞ்சாப் மாநிலத்திலேயே முதன் முறையாக சேஹர்ட்டா நகரத்தில்தான் உழைக்கும் தாய்மார்களுக்கான குழந்தைகள் காப்பகம் (creche) நிறுவப்பட்டது; அங்கே குழந்தைகளுக்கு இலவச உணவு வழங்கப்பட்டது. அந்த நகரமும், நகராட்சி நிர்வாகம் முழுமையும் ஊழலில் இருந்து விடுபட்டு விளங்கியது.

        நாணயம், நேர்மை, மற்றும் மதிப்புமிக்க விழுமியங்களை வழுவாது பற்றி ஒழுகுவதில் விமலாவும் சத்யபால் டாங்கும் ‘அரசியலில் டாங்கின் வழி’ (‘Dang School of Politics’) எனப் பெருமிதமாக, அனைவரும் பரவலாகச் சொல்லும் வகையில் வாழ்ந்தனர்.

சட்டமன்றத்தில்

        அமிர்தசரஸ் மேற்கு சட்டமன்றத் தொகுதியிலிருந்து 1967ல் வென்ற சத்யபால் டாங், 1980வரை திரும்பத் திரும்பத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1967ல் (சர்தார் குர்ணாம்சிங் தலைமையில் அமைந்த)  காங்கிரஸ் அல்லாத கூட்டணி மந்திரிசபையில் (உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல்) அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். (அமைச்சராக இருந்த காலத்தில் அமைச்சருக்கான பங்களாவை மறுத்துச் சட்டமன்ற விடுதி அறையிலிருந்தே செயல்பட்டார். அவருக்குப் பிறகு விமலா டாங் அந்தத் தொகுதியில் வென்றதோடு, கம்யூனிஸ்ட் சட்டமன்றக் குழு உறுப்பினர்களின் தலைவராகவும் செயல்பட்டார்.

பாக் ஆக்ரமிப்பின்போது தேசியப் பாதுகாப்பிற்கானச் சேவை

 

“எனது கருத்தின்படி மிகச் சிறந்த தேச பக்தர்கள் யாரெனில், துயருரும் மனித குலத்திற்கு ஏதேனும் பயனுள்ள முறையில் செயலாற்ற எவரொருவர் தனது உணர்வுகளால் உந்தித் தள்ளப்படுகிறார்களோ அவர்களே என்பேன்”     

            -- ஒரு பத்திரிக்கை பேட்டியில் விமலா டாங்

        1965ல் பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பின்போது சேஹர்ட்டா பாக்.விமானப் படையினரின் குண்டுவீச்சுத் தாக்குதலுக்கு உள்ளானது. விமலாவும் சத்யபால் டாங்கும் மக்கள் பாதுகாப்புப் படை அமைத்து நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர்; ஏக்தா தொழிற் சங்கம் தொடர்ச்சியாகக் கேன்டீன் மூலம் உணவு வழங்கியது. அந்தக் கேன்டீன் வாகா எல்லைக்குச் செல்லும் ஜவான்களுக்கும், அங்கிருந்து திரும்பும் வீரர்களுக்குமானது. சுற்றிலும் அமைந்த கிராமங்களிலிருந்து மக்கள் பால், காய்கறி மற்றும் பொருள்களை அளித்தனர்; மேலும் பாதுகாப்பு நன்கொடை நிதியும் திரட்டப்பட்டது. கெம் கரண் (Khem Karan) பகுதி அமெரிக்க பேட்டன் டாங்கிகளைப் புதைக்கும் இடுகாடானது. எல்லையில் அணிவகுத்து நின்ற இராணுவ வீரர்களுக்குப் பக்கபலமாகப் அவர்கள் பின்னே, இரண்டாவது மக்கள் படைவரிசையைக் கம்யூனிஸ்ட்களும் மற்றவர்களும் ஒன்று திரட்டி அமைத்தனர்.

பஞ்சாப் மகளிர் மன்றம்

    

   “எனது வாழ்வின் பணி, ஒரு நியாயமான சமூகத்தை, எந்தச் சமூகம் தனது ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான வாய்ப்பை வழங்குகிறதோ, அத்தகைய சமூகத்தை அமைக்கப் போராடுவது” 

                                                           -- விமலா டாங்

        பஞ்சாப் ஸ்திரி சபா என்னும் பலமான மகளிர் அமைப்பை நிறுவியவர்களில் விமலாவும் ஒருவர். அந்தச் சபா கல்வி உதவி, நிதி மற்ற உதவிகள் போன்ற சமூக நலப் பணிகளை மேற்கொண்டது. பஞ்சாபில் தீவிரவாதம் தலைவிரித்தாடியபோது, ஸ்திரி சபா ஆற்றிய பங்கு அளப்பரியது. 1954ல் ‘இந்திய மாதர் தேசிய சம்மேளனம்’ (NFIW) நிறுவிய நிறுவனர்களில் ஒருவரான விமலா டாங், அதன் செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றினார்.

தீவிரவாதத்தை எதிர்த்துத் தீரமிக்கப் போராட்டம்

        விமலாவும் சத்யபால் டாங்கும் பஞ்சாப் தீவிரவாதிகளின் முக்கிய தாக்குதல் இலக்குக்கு ஆளானார்கள். ஆனால் அவர்கள் தங்கள் உயிரைப் பற்றிக் கவலைப்படாது தீரமுடன் எதிர்த்துப் போராடினார்கள். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான தோழர்கள் இந்தப் போராட்டத்தில் தங்கள் இன்னுயிரைப் பலி கொடுத்தனர். விமலாவின் பாதுகாவலுக்குக் கட்சி ஏற்பாடு செய்தது. தீவிரவாத எதிர்ப்பு முன்னணிப் படைவீரர்களின் வரிசையில் விமலாவும் சத்யபால் டாங்கும் புகழ்பெற்று விளங்கினார்கள்.

சிபிஐ தேசியக் குழு உறுப்பினராக

        விமலா டாங் பஞ்சாப் கட்சியின் உயர்ந்த பொறுப்புகளை ஏற்று செயல்பட்டார். விரைவிலேயே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இணையர் இருவருமே, வயது முதிர்வு மற்றும் உடல் நலமின்மை காரணமாக, தேசியக் குழுவிலிருந்தும் கட்சியின் ஏனைய பொறுப்புக்களிலிருந்தும் தாமாக முன்வந்து விலகினார்கள். சட்டமன்றத் தேர்தல்களிலும் போட்டியிட அவர்கள் மறுத்து விட்டனர்.

விமலாவுக்குப் பத்ம ஸ்ரீ விருது

        பெருமிதமிக்க ‘பத்மஸ்ரீ விருது’ 1992ல் விமலா டாங்குக்கு வழங்கப்பட்ட கௌரவம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்குக் கிடைத்த மிகப் பெரிய பெருமை.


(பின்னர் 1988ல், சத்யபால் டாங் அவர்களுக்கு அவரது சமூகச் சேவையை  அங்கீகரிக்கும் வகையில் இந்திய அரசு  மூன்றாவது உயரிய சிவில் விருதான          ‘பத்ம பூஷண்’ விருதை வழங்கிச்                சிறப்பித்தது.) 


    2005ல் விமலா டாங் மிகக் கடுமையாக நோய்வாய்ப்பட, சண்டிகாரில் 2009, மே 10ல் இயற்கை எய்தினார்.

        பெண்களில் ஸ்ரீயாக விளங்கிய விமலா டாங் புகழ் என்றும் தாரகையாய் ஒளிரும்!

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர் 

 

 

 

 

 

 

 

 


No comments:

Post a Comment