Monday 21 September 2020

சுவாமி அக்னிவேஷ்

 

சுவாமி அக்னிவேஷ்,

ஒளிரும் நம்பிக்கைச் சுடராய் என்றும் திகழ்வார்

       


 நன்றி : தி இந்தியன் எக்ஸ்பிரஸ்       

--ஸ்மிதா குப்தா

(மூத்த அரசியல் பத்திரிக்கையாளர்)

        கொடுமையான கொத்தடிமைத் தொழிலாளர் முறைக்கு எதிராகக் கடும் பிரச்சாரம் நடத்தியவரென அதிகம் அறியப்பட்டவர் சுவாமி அக்னிவேஷ். ஆனால் பொது வாழ்க்கையில் 40ஆண்டுகளுக்கும் மேலாக அவர் ஈடுபட்ட செயல்பாடுகள் பலதிறப்பட்டன: அநீதி, வகுப்புவாதம் மற்றும் அதிகாரத்துவத்திற்கு எதிராக மக்களோடு நின்று தளர்வின்றிப் போராடியவர். மக்களின் பிரச்சனைகளுக்காகப் போராடி, இந்திய ஜனநாயகம், மற்றும் அரசியலமைப்பு விழுமியங்களை உயர்த்திப் பிடிக்க விடாப்பிடியாகத் தனது இருப்பைத் தொடர்ச்சியாக நிலைநாட்டியவர்.

        1975ல் இந்திரா காந்தி கொண்டுவந்த அவசரநிலையை எதிர்த்ததற்காக 14 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், தேசிய சிறுபான்மைக் கமிஷனின் முன்னாள் தலைவர் வஜகத் ஹபிபுல்லா நடத்திய இயக்கத்திலும், பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் இயக்கத்திலும் இணைந்தார். 40 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, திருத்தப்பட்ட அந்தச் சட்டம் மக்களை மதஅடிப்படையில் பாகுபடுத்துவதால், அச்சட்டம் அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மீறுகிறது என நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.

        மேலும் முக்கியமான மக்கள் இயக்கங்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார்: குஜராத் சர்தார் சரோவர் அணை காரணமாக அங்கிருந்து அகற்றப்படும் மக்களுக்காக மேதா பட்கர் நடத்திய ‘நர்மதா பச்சோ ஆந்தோலன்’ இயக்கம், உலகமயப் பொருளாதாரக் கொள்கைகள் எதிர்ப்பு, அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கம் எனப் பலவற்றிலும் இணைத்துக் கொண்டுள்ளார். மனித மலத்தை மனிதர்களே அள்ளும் காட்டுமிராண்டி முறை ஒழிப்பு கோரிக்கை, கருவிலேயே பெண்சிசு அழிப்புக்கு எதிர்ப்பு, சதி பழக்கத்தை ஒழிப்பது மற்றும் தாழ்த்தப்பட்டவர்களை ஆலயங்களில் அனுமதிப்பது முதலான இயக்கங்களின் முன்னணியில் இருந்தார்.  மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இரண்டாவது ஆட்சி காலத்தில் இவரை மத்தியஸ்தராக நியமித்தது.

        வகுப்புவாத வன்முறைகளைத் தணிப்பதற்காக ஆஸ்கர்அலி இன்ஜினியருடன் சேர்ந்து பேரணிகளை நடத்தினார்; பல்வேறு மதத்தலைவர்கள் அடங்கிய ‘சமூக நீதிக்காக மதங்கள்’ என்ற அமைப்பை ஏற்படுத்தினார்; ஆஸ்திரேலிய கிருஸ்துவ மிஷனரியின் பாதிரியார் கிரஹாம் ஸ்டைன்ஸ் மற்றும் அவரது இரு மகன்கள் தூங்கும்போது பஜ்ரங்தள் உறுப்பினர்களால் எரித்துக் கொல்லப்பட்ட இடத்திற்கு 55 மதத் தலைவர்கள் அடங்கிய குழுவைத் தலைமை ஏற்று அமைதிப் பேரணியாக அழைத்துச் சென்றார்.

        சுவாமி அக்னிவேஷ் விவேகானந்தரைப்போல காவி டர்பன் அணிந்து, ஆரிய சமாஜ உறுப்பினர்கள்போல உடையும் உடுத்தியிருப்பார். (ஆர்ய சமாஜத்தின் உலக மன்றத்தின் தலைவராகி 2004 முதல் 2014வரை பொறுப்பு வகித்தார்). இத்தகைய உடுப்பில் இவர் மேற்கொள்ளும் செயல்பாடுகள் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் துணை அமைப்புகளுக்கு எரிச்சலைத் தந்தது. இந்நிலையில் இயல்பாக எதிர்பார்க்கக் கூடியதே நடந்தது, 2018ல், முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் உடலுக்கு மரியாதை செலுத்த இவர் சென்றபோது டெல்லி பாஜக தலைமை அலுவலகத்திற்கு வெளியே பாஜக தொண்டர்களால் தாக்கப்பட்டார்.

        அவரது காவி டர்பனையும் மேலாடையையும் பிடித்திழுத்துத் தாக்கினார்கள். மென்மையாகப் பேசும் குணமுடைய, அப்போது 78வயதான, அக்னிவேஷக்கு அது பெரும் அதிர்ச்சி. பின்னர் எழுதிய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டார்: “எனது வாழ்நாளை முழுவதுமாகச் சமூகநீதிக்காகப் பற்றுறுதியோடு அமைத்துக் கொண்ட செயல்பாடுகள் காரணமாக, நீண்ட காலமாக ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்கு நான் கண் உறுத்தலாகவே இருந்தேன். நீதி என்ற விழுமிய கொள்கை ஆர்எஸ்எஸ்க்கு எரிச்சல் தருவது.

        1981ல் அவர் நிர்மாணித்த ‘பந்துவா முக்தி மோர்ச்சா’ (BMM) கொத்தடிமைத் தொழிலாளர் விடுதலை முன்னணி அமைப்பின் மூலம் 1,72,000 தொழிலாளர்களைக் கொத்தடிமைத் தளையிலிருந்து விடுவித்த சாதனையே சுவாமி அக்னிவேஷின் ஆகப் பெரும் பங்களிப்பாக நிலைபெற்று இருக்கும். அது தவிர செங்கல் சூளை, கல் குவாரி மற்றும் கட்டுமானப் பணிகளில் உழைத்த தொழிலாளர்களுக்காக அவர் அமைத்த தொழிற்சங்கங்கள் தனிச் சிறப்பு பெறுவன.

        இந்தப் புதுமையான முதன்மை பணிக்காக ‘சமகால அடிமைத்தனத்திற்கு எதிரான ஐ.நா.வின் தன்னார்வ அறக்கட்டளை நிதியத்தின்தலைவராக மூன்று முறை தேர்வாகி 1994 முதல் 2004வரை பணியாற்றினார். புகழ்பெற்ற அவரது வாசகம், ‘‘குடி உரிமைதான் இந்திய மக்களை ஒன்றாக இணைத்து வைத்திருக்கிறதே தவிர, இந்துத்துவா அல்ல’’. அந்த அளவு வாழ்நாள் முழுவதும் பாஜக—ஆர்எஸ்எஸ் கூட்டை எதிர்த்து வந்தபோதிலும், இந்துத்துவா பிரச்சாரத்தை முறியடிக்கத் தான் முக்கியத்தும் பெற்றிருந்த ஆரிய சமாஜம் அமைப்பை ஈடுபடுத்தத் தவறிவிட்டார். அப்படிச் செய்யத் தனித்துவமாக அவர் வாய்ப்பு பெற்றிருந்தபோதும், அதனைச் செய்யாததற்கு, ஒருக்கால் ஒரே நேரத்தில் பல போராட்டங்களை அவர் நடத்தியது காரணமாகலாம்.

        ஆந்திரப் பிரதேசம் ஸ்ரீகாகுளம் பகுதியில் 1939 ஆண்டு செப்டம்பர் 21ம் நாள் பிறந்தார். இவரது இயற்பெயர் வேப ஷியாம் ராவ். நான்காவது வயதில் தந்தையை இழக்க, பின்னர் தற்கால சத்தீஸ்கர் மாநிலப் பகுதியில் இருந்த சக்தி என்ற சுதேச அரசின் திவானாக இருந்த அவரது தாய்வழி தாத்தாவால் வளர்க்கப்பட்டார். சட்டம் மற்றும் வணிக மேலாண்மையில் பட்டம் பெற்று கொல்கத்தா செயின்ட் சேவியர் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். பிற்காலத்தில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்ற சப்யாசச்சி முகர்ஜியிடம், இளம் வழக்கறிஞராகச் சில காலம் பணிபுரிந்தார். வைதீகமான பிராமண குடும்பத்தில் பிறந்தவர், 1968ல் இந்து சீர்திருத்த இயக்கமான ஆர்யசமாஜத்தின் முழுநேர ஊழியரானார்.

        இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு உலக இன்பங்களைத் துறந்து அவர் ஒரு சன்னியாசியாக மாறியபின் சுவாமி அக்னிவேஷ் ஆனார். 1977ல் நடந்த பொதுத் தேர்தல் அலையில் இந்திராகாந்தி ஆட்சி அதிகாரத்தை இழந்தபோது, அரியானா சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அக்னிவேஷ், மாநிலத்தின் கல்வி அமைச்சராகவும் பணியாற்றினார். மிக விரைவிலேயே அவருடைய எதிர்பார்ப்பு பொய்த்துப்போகப் பதவிகளை ராஜினாமா செய்தவர், தமது வாழ்நாள் சக்தி அனைத்தையும் சமூக நீதி இயக்கங்களில் செலவிட முடிவு செய்தார்.

        அவருடைய சமூகம் மற்றும் கல்விப் பின்னணியைப் பார்க்க அவருடைய வாழ்க்கை வேறொரு பாதையில் பயணித்திருக்க முடியும்; ஆனால் அவரது தேர்வு வேறாக இருந்தது. அப்படித் தேர்ந்தெடுத்த ஒரு காரணத்திற்காகவே அவரை வருங்காலத் தலைமுறை என்றும் நினைவில் வைத்துக் கொண்டாடும். எனது சமகாலப் பத்திரிக்கை தலைமுறையினரின் அரசியல் பரப்பில் அவர் ஒரு பகுதியாக இருந்தார் என்பது மட்டுமல்ல, எப்போதும் அவர் நம்பிக்கை ஒளிச் சுடராய் விளங்குவார்.

(சுவாமி அக்னிவேஷ் 2020 செப்டம்பர் 11ம் நாள் மறைந்தார்)

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்


No comments:

Post a Comment