Wednesday 23 September 2020

வரலாற்றுத் தலைவர்கள் வரிசை 13 ஷர்பூர்ஜி சக்லத்வாலா




 


நமது பெரும் தலைவர்கள் வாழ்விலிருந்து :

சில சித்திரத் சிதறல்கள் 13



ஷபூர்ஜி சக்லத்வாலா :

டாடா தொழில் சாம்ராஜியத்திலிருந்து கம்யூனிசத்திற்கு

--அனில் ரஜீம்வாலே

(நியூஏஜ் செப்டம்பர் 13 – 19இதழ்)

          ஷபூர்ஜி சக்லத்வாலா இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முறையான உறுப்பினர் இல்லை, இருப்பினும் அதன் எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்களிப்புச் செய்தவர். வரலாற்றில், பிரட்டீஷ் பாராளுமன்றத்தின் ஒரே கம்யூனிஸ்ட் உறுப்பினர் என்ற தடத்தைப் பதித்தவர்.

          பம்பாயின் புகழ்பெற்ற பார்சி குடும்பத்தில் 1874-ம் ஆண்டு மார்ச் 28ம் நாள் பிறந்தார். அந்தப் பார்சி குடும்பம் அவரது தாயார் வழியில் டாட்டா குடும்பத்துடன் உறவுடையது. ஜெ எல் டாட்டாவின் சகோதரி ஜெர்பாய் சக்லத்வாலாவின் தாய் ஆவார். தந்தை தொராப்ஜி புகழ்பெற்ற வணிகர், அவர்களுடைய குடும்பம் சொராஷ்ட்ரிய மத நம்பிக்கையைச் சார்ந்தது.

          ஷபூர்ஜி பம்பாய் புனித சேவியர் பள்ளியிலும் கல்லூரியிலும் படித்தார். அசாதாரணமான அறிவுடைய மாணவராக, விவாதங்களில் தலை சிறந்தும் விளங்கினார். 1890களில் பிளேக் நோய் பரவியபோது ருஷ்ய மருத்துவர் ஹஃப்கைன் அவர்களுடன் சேர்ந்து பணியாற்றினார். கல்லூரிப் படிப்பை முடித்ததும், குடும்ப வணிகம் செய்ய இரும்பு, கரி, சுண்ணாம்புக் கல் முதலிய தாதுப் பொருட்கள் கச்சா மூலப்பொருட்களையும் தேடி மத்திய இந்தியாவில் பயணம் மேற்கொண்டார். ஜெஎன் டாட்டா மேற்பார்வையில் ‘டாட்டா இரும்பு மற்றும் ஸ்டீல் லிமிட்., கம்பெனி’ நிர்மாணத்தில் முக்கிய பங்காற்றினார்.

          தனது தேடல் ஆய்வுப் பயணத்தின்போது ஒரிசா, பீகார் போன்ற இடங்களில் ஏழை ஆதிவாசிகளையும் ஒடுக்கப்பட்டோரையும் அவர் சந்திக்க நேர்ந்தது. சுவையான சம்பவத்தில், சில ஆதிவாசிகளைப் போலீசார் சுற்றி வளைக்கக் கண்டார். அந்தப் போலீஸ்காரர்கள் அவர்களைப் பிடிக்க வெள்ளைக்காரர்கள் வருவதாகக் கதைத்தனர்! போலீஸ் நிலையம் சென்ற ஷர்பூர்ஜி அங்கே சாவிக்கொத்து சுவரில் தொங்குவதைப் பார்த்தார். வெடுக்கென சாவிக் கொத்தைக் கைப்பற்றி போலீஸ்காரர்களை ஸ்டேஷனிலேயே வைத்துப் பூட்டி விட்டார். ஆதிவாசிகளை விடுவித்த பிறகுதான் போலீஸ்காரர்கள் ஒவ்வொருவராக விடுதலை செய்தார்! 

இங்கிலாந்து பயணம்

தேசிய இயக்க எழுச்சி காலத்தில் காங்கிரஸ் அரசியலில் ஈடுபாடு கொண்டு பிரிட்டீஷ் அதிகாரிகளுடன் மோதினார். தங்கள் ‘வணிகத்தைக் கவனித்துக் கொள்ள’ என்ற பெயரில் அவரை இங்கிலாந்து அனுப்பி விடுவதே பாதுகாப்பானது என குடும்பத்தார் நினைத்தார்கள். ஆனால் அதற்கு நேர் எதிர்மாறானதே நடந்தது: அவருடைய தீவிரமான அரசியல் வாழ்வு இங்கிலாந்தில்தான் வடிவம் கொண்டு, ஒரு கம்யூனிஸ்டாக மலர்வதில் முடிந்தது! முதலில் மான்செஸ்டரில் இருந்த டாட்டா அலுவலகத்தில் வேலை செய்தார், பின்னர் லண்டனுக்கு மாறினார். நேஷனல் லிபரல் கிளப் உறுப்பினரான பின் அங்கே புகழ்பெற்ற அறிவாளிகள் பலரைச் சந்தித்தார். ஒருமுறை (அயர்லாந்தின் தலைமைச் செயலாளர், இந்திய அரசுச் செயலர், லிபரல் கருத்தியல் அறிஞர், பத்திரிக்கை ஆசிரியர், பாராளுமன்ற உறுப்பினர் ஆன) புகழ்பெற்ற லார்ட் மோர்லே உடன் மோதும்படியானது; பின் அந்தக் கிளப்பிலிருந்து ஷர்பூர்ஜி விலகினார்.

பிரிட்டீஷ் தொழிலாளர் இயக்கத்துடன் தொடர்பு ஏற்பட்டத்துடன், கம்யூனிஸ்ட் இயக்கம் உட்பட இந்திய இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தார். 1910ல் சுதந்திரத் தொழிலாளர் கட்சி(ILP) உறுப்பினரானவர், அதன் இடதுசாரிஅணியில் ரஜினி பால்மே தத் அவர்களைச் சந்தித்தார். ILPயின் இடதுசாரிஅணி அந்தக் கட்சி இரண்டாவது (கம்யூனிஸ்ட்) அகிலத்தில் கலந்து கொள்ளாமல் விலகி இருக்கச் செய்வதில் வெற்றி பெற்றது. அதே நேரம் மேக்டொனால்டு மற்றும் ஸ்னோடன் ‘இரண்டரை அகிலம்’ எனக் குறிப்பிடப்படும் ‘சோஷலிசக் கட்சிகளின் சர்வதேசத் தொழிலாளர் சங்கம்’ அமைப்பினுள் ILPஐ இழுத்துவிட முயன்றனர்; காரணம், மூன்றாவது அகிலத்துடன் ILP தொடர்பு கொள்வதைத் தடுக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம்தான்!

1920ல் சக்லத்வாலா, எமிலி பர்ன்ஸ், வால்டன் நியூபோல்டு மற்றும் ரஜினி பால்மே தத் ILP கட்சிக்குள் ‘மூன்றாவது அகிலத்திற்கான குழு’ ஒன்றை அமைத்ததுடன், ‘தி இன்டர்நேஷனேல்’ என்ற செய்தி அறிக்கையையும் கொண்டு வந்தனர். 1921ல் ILP கட்சியின் இடதுசாரி அணி கிரேட் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சி(CPGB )யில் இணைந்தது. சக்லத்வாலா இந்த ‘இணைப்பு மாநாட்’டில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் ஆதரவுக் கடிதம் ஒன்றை அனுப்பினார்.

தொழிலாளர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கத்தில்

          அமைப்பு ரீதியாகத் தொழிலாளர்களைத் திரட்ட சக்லத்வாலா இங்கிலாந்து முழுவதும் சுற்றுப் பயணம் செய்தார். அவர் பெயர் ஒன்றே கூட்டங்களுக்குப் பெருமளவு மக்களைத் திரட்டும் அளவு விரைவில் புகழ் அடைந்தார். மூன்றாம் வகுப்பு இரயில் வண்டியின் தரையில்கூட அமர்ந்து பல இடங்களுக்கும் பயணம் செய்தார். அலுவலக எழுத்தர்கள், கூட்டுறவு மற்றும் பொது தொழிலாளர்களை அவர் திரட்டினார்.

பிரிட்டீஷ் பாராளுமன்றத்தில்

        லேபர் கட்சியின் ஆதரவோடு, தொழிற்சங்கக் கவுன்சிலின் சார்பில் கம்யூனிஸ்ட் உறுப்பினராகச் சக்லத்வாலா 1922ல் பாராளுமன்றத்திற்கு லண்டன், பட்டர்சீ வடக்குத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 1923ல் மீண்டும் போட்டியிட, மிகக் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தபோதும், ஆதரவு வாக்குகள் 9.1 சதவீதம் அதிகரித்தது. 1924ல் நேரடியாகக் கம்யூனிஸ்ட் உறுப்பினராகப் போட்டியிட்டு, கூடுதல் வாக்குகளுடன் வென்றார்.

          பாராளுமன்றத்தில் அதிஅற்புதச் சொற்பொழிவுகளை ஆற்றினார்; இந்தியாவில் பிரிட்டீஷ் ஆட்சியைத் தோலுரித்து, இந்தியாவின் ஏழ்மைக்கும் மக்களின் பட்டினிக்கும் பிரிட்டீஷ் ஆட்சியே பொறுப்பு; எனவே இந்தியாவை விட்டு பிரிட்டன் வெளியேற வேண்டும் என வற்புறுத்தினார்.

          25 ஆண்டுகளுக்கு முன்பு பம்பாயில் நடந்த சம்பவத்தைப் பாராளுமன்றத்தில் ஏர்ல் வின்டர்டன் (பிரபுவு)க்கு சக்லத்வாலா நினைவூட்டினார்; அப்போது ‘வெள்ளையர்கள் மட்டும்’ என நிபந்தனை விதிக்கப்பட்ட பம்பாய் கிளப் ஒன்றில் பிளேக் நோய் தொற்று பரவல் சம்பந்தமாக மருத்துவர் ஒருவரைப் பார்க்கச் சென்ற தனக்கு அனுமதி மறுக்கப்பட்டது; எப்படியோ பின்வாசல் வழியே அழைத்துச் செல்லப்பட்டேன். இந்தியச் சட்டக் கமிஷன் இத்தகைய பிரச்சனையை விசாரணை செய்யுமா என கேள்வி எழுப்பினார். மேலும் பிரிட்டீஷ் அரசு அத்தகைய கமிஷனைப் பிரான்ஸ் தேசத்திற்கு, உதாரணத்திற்கு பிரான்ஸ் மக்கள் ஆள்வதற்குத் தகுதியானவர்களா என்பதை அறிந்து கொள்வதற்காக, அனுப்பும் தைரியம் உண்டா?!

          பிரிட்டீஷ் அரச குலத்தின் மீது நேரடித் தாக்குதலைப் பாராளுமன்றத்திற்குள் செய்த நவயுகத்தின் முதலாவது பாராளுமன்ற உறுப்பினர் சக்லத்வாலாவாகத்தான் இருக்க முடியும். இந்தியாவில் தொழிற்சங்கச் சட்டம் இயற்றுவது குறித்து கேள்வி எழுப்பியவர், 1920ல் மாண்டேகு பிரபுவை இது சம்பந்தமாக நேரடியாகச்  சந்தித்தார்.

          ஸ்ரீனிவாச அய்யங்கார் மற்றும் முகமது அலியுடன் இணைந்து லண்டன் காங்கிரஸ் குழு ஒன்றை அமைத்தார்.

சக்லத்வாலா பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோதும், இந்தியாவுக்கோ அல்லது அமெரிக்காவுக்கோ செல்ல விசா அனுமதி மறுக்கப்பட்டார்.

டாட்டா நிறுவனங்களிலிருந்து விலகல்

40 லட்சம் பவுண்டு அனுமதிக்கப்பட்ட முதலீட்டுடன் செயல்பட்ட டாட்டா நிறுவனம் ஒன்றில் டிபார்ட்மென்டல் மேனேஜராக ஷர்பூர்ஜி இருந்தார். வெளியே முதலாளித்துவச் சுரண்டலைப் பற்றி பேசிக்கொண்டு அவ்வாறு நீடிப்பது அபத்தம் என்று நினைத்தார். எனவே 1925ல் அந்தக் கம்பெனியிலிருந்து விலகி தன் குடும்பத்துடன் லண்டன் புறநகர் பகுதியின் சிறு குடியிருப்புக்கு மாறினார். அப்போது மணமாகி இருந்த ஷர்பூர்ஷியின் வாழ்க்கைத் துணையாக மிஸ் மார்ஷ் என்னும் பிரிட்டீஷ் பெண்மணி விளங்கினார். உலக வாழ்வில் ஏழையாகக் காலம் தள்ளியவர், அரசியல் செயல்பாடுகளில் நாளுக்கு நாள் ‘செல்வந்தராக’ உயர்ந்தார்.

1926ல் பிரிட்டீஷ் தொழிலாளர்களின் வரலாற்றுப் புகழ்மிக்கப் பொது வேலைநிறுத்தக் கிளர்ச்சியில் முன்னணியில் அவர் செயல்பட்டார்.

1927ல் இந்திய விஜயம்

1925ல் கான்பூர் கம்யூனிஸ்ட் அமைப்பு மாநாட்டைத் துவக்கி வைக்க ஷர்பூர்ஜி அழைக்கப் பட்டபோதும், இந்தியா வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், வாழ்த்துச் செய்தி மட்டும் அனுப்பி இருந்தார். ‘தான் பிரிட்டீஷ் பிரஜை மட்டுமல்ல, பாராளுமன்ற உறுப்பினரரும் கூட’ என்பதை நினைவூட்டி அழுத்தமான கடிதம் ஒன்றை 1927ல் பிரிட்டீஷ் பிரதமருக்கு எழுதினார். தனது கருத்துக்களைப் பிரச்சாரம் செய்ய தனக்கு எல்லாவிதமான உரிமைகளும் உண்டு; எனவே தனது சட்டபூர்வமான நடவடிக்கைகளில் பிரிட்டீஷ் அரசு தலையிடக் கூடாது என்று வலியுறுத்தியவர், கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராகப் பாகுபாடு காட்டப்படுவதையும் எதிர்த்தார்.

பிரிட்டீஷ் அரசும் நிர்பந்தத்துக்குப் பணிந்து அவருக்குக் கடவுச்சீட்டு வழங்கியது. 1927ம் ஆண்டு பிப்ரவரி 14ம் நாள் பம்பாயை அடைந்தபோது அவருக்கு அதுவரை இல்லாத சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அஸோசியேட்டட் பிரஸ் ஆஃப் இந்தியா செய்தி நிறுவனம் 1927 மார்ச் 17 முதல் 20 வரை லாகூரில் நடக்க உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டாவது மாநாட்டை ஷர்பூர்ஜி சக்லத்வாலா துவக்கி வைக்கப்போவதாகச் செய்தி வெளியிட்டது. சில காரணங்களால் அந்த மாநாடு நடைபெறவில்லை.

தாய்நாட்டிற்கு வந்துள்ளபோது தனது பழைய நண்பர்களைச் சந்திக்க உள்ளதாக எழுதினார். பம்பாயில் அதற்கென அமைக்கப்பட்ட வரவேற்புக்குழுவில் கவிக்குயில் சரோஜினி நாயுடு, பிஜி ஹார்னிமென் (பெஞ்சமின் கய் ஹார்னிமென், ஒரு பிரிட்டீஷ் பத்திரிக்கையாளர், பம்பாய் க்ரானிகல் பத்திரிக்கை ஆசிரியர், இந்திய விடுதலைக்கு ஆதரவாளர்) இடம் பெற்றனர். வரவேற்புக்குழு தொழிலாளர்கள் நிறைந்த பகுதிகளில் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தது.

ஜனவரி 18ல் பம்பாய், கௌவாஜி ஜகாங்கீர் ஹாலில் அரங்கம் நிறைந்த மாபெரும் குடிமக்கள் வரவேற்பு அளிக்கப்பட்டது. 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஷர்பூர்ஜி இந்தியா வந்துள்ளார் என இடியோசையன்ன கரவொலிக்கு இடையே சரோஜினி நாயுடு அவரை அறிமுகம் செய்தார். அப்போது கூட்டத்தில் ஒரு குரல் ‘பாண்டவர்கள் போல’ என ஆமோதித்தது. அத்தகைய பெரும் மதிப்பைப் பெற்றிருந்த அவர், பலமுறை கைத்தட்டல்களுக்கு இடையே இரண்டு மணிநேரம் நீண்ட சொற்பொழிவாற்றினார்.

வரவேற்புக்கு முன்பு பம்பாய் பிரதேச காங்கிரஸ் அவருக்கு பூந்தோட்ட விருந்து (கார்டன் பார்ட்டி) அளித்தது. மேலும் ஆறாயிரம் முஸ்லீம்கள் இருந்த பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் பேசினார்.

பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டி தலைவரான சர்தார் வல்லபாய் பட்டேல் அலகாபாத் ரயில்வே நிலையத்தில் ஜனவரி 21ம் நாள் அவரை வரவேற்றார். சர்தார் பட்டேல் அவர்களே ஷர்பூர்ஜிக்கு மாலை அணிவித்தார். காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டத்தில் பேசும்போது, காங்கிரஸ் பூரண சுதந்திரத்தை தனது லட்சியமாகக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். (1929ம் ஆண்டு டிசம்பரில் நடந்த காங்கிரஸ் லாகூர் மாநாட்டில்தான் பூரண சுயராஜ்யம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.)

காந்திஜி, நேரு, சரோஜினி, அலி சகோதரர்கள் மற்றும் தலைவர்களை விளிக்கும்போது சக்லத்வாலா ‘தோழர்களே’ என்று அழைத்துப் பேசினார். 1927ல் பல விஷயங்கள் குறித்துக் காந்திஜியும் சக்லத்வாலாவும் கடிதப் பரிமாற்றம் நடத்தினார்கள்.

டாட்டா நிறுவனங்களுக்குக் கடுமையான கடிதம்

கல்கத்தாவில் சிறப்பாக வரவேற்கப்பட்டவர், வி வி கிரியுடன் காரக்பூர் சென்றார். ‘டாட்டாவின் இரும்பு மற்றும் ஸ்டீல் கம்பெனி’யான  டிஸ்கோ (TISCO) மேனேஜ்மெண்ட்டுக்குக் கடுமையான கடிதம் எழுதினார்; அந்த நிறுவனம் தொழிலாளர்களின் உழைப்பினால் அடைந்த லாபத்தைத் தொழிலாளர் இயக்கங்களைப் பிளவுபடுத்த முறைகேடாகப் பயன்படுத்துவதைக் கண்டித்தார். அதில் ஜனவரி 25ல் ஜாம்ஷெட்பூர் விஜயம் செய்து தொழிலாளர் பிரச்சனைகள் பற்றி உரையாற்ற உள்ளதாகவும் குறிப்பிட்டார். காரக்பூரில் பேச அவர் அனுமதிக்கப்படவில்லை.

சென்னை விஜயம்

பிப்ரவரி 24ல் மெட்ராஸ் வந்தடைந்தவருக்குக் கார்பரேஷன் சார்பில் பெரும் குடிமை வரவேற்பு அளிக்கப்பட்டது. தீரர் சத்தியமூர்த்தி தலைமையில் திருவல்லிக்கேணி கடற்கரையில் தொழிலாளர்களின் பொதுக் கூட்டத்தில் பேசினார். அவருடைய பயணம் முழுவதும் சிந்தனைச் சிற்பி ம சிங்காரவேலர் உடன் சென்றார்; தமிழ்த் தென்றல் திரு வி க(ல்யாணசுந்தரம்) அவரது ஆங்கில உரையைத் தமிழாக்கம் செய்தார். சிங்காரவேலர் இல்லத்திற்கும் சக்லத்வாலா சென்றார். கோகலே அரங்கில் நடந்த கற்றறிந்த சான்றோர்களின் மாபெரும் சபையில் சக்லத்வாலா கம்யூனிசத்தின் லட்சிய நோக்கங்கள் குறித்துச் சொற்பொழிவாற்றினார்.

அந்த ஆண்டு மெட்ராசில் நடைபெற்ற ஏஐடியுசி மாநாட்டிலும் கலந்து கொண்டார். தென்னக விஜயத்தை முடித்துக் கொண்டு டெல்லி சென்றடைந்தபோது மோதிலால் நேருவும் ஏனைய தலைவர்களும் வரவேற்றனர்.

ஷர்பூர்ஜி சக்லத்வாலாவின் விஜயம் உழைப்பாளி வர்க்கம், தேசிய மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்குப் பெரும் ஆதர்ச ஊக்க சக்தியாக உற்சாகமளித்தது.

1927 ஏப்ரல் 8ம்நாள் பம்பாயை விட்டு லண்டனுக்குப் புறப்பட்டார். அவரிடம் மக்கள் திரட்டிய 14,300 ரூபாய் பணமுடிப்பு வழங்கப்பட்டது. தேசிய பத்திரிக்கை ஊடகம் அவருடைய நிகழ்ச்சிகளுக்குப் பெரும் விளம்பரம் அளித்துச் செய்தி வெளியிட்டனர்

இங்கிலாந்து திரும்பலும், மறைவும்

மிக விரிவாக இந்தியாவில் சுற்றுப் பயணங்கள் மேற்கொண்டதற்கான தண்டனையாக நாடு திரும்பிய உடன் பிரட்டீஷ் அரசு அவருடைய கடவுச் சீட்டை ரத்து செய்தது! ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ‘ஆக்ஸ்போர்டு மஜ்லிஸ் இந்திய மாணவர்கள் அமைப்பின் 1936ம் ஆண்டு மார்ச் –ஏப்ரல் கூட்டத்தில் முக்கிய சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளவிருந்த நிலையில் 1936 ஜனவரி 16ம் நாள் திடீரென சக்லத்வாலா இயற்கை எய்தினார். [ஆக்ஸ்போர்டு மஜ்லிஸ் என்பது இந்திய மாணவர்களால் 1896ல் அமைக்கப்பட்ட மாணவர்களின் விவாதக் கூட்டங்கள் நடத்துவதற்கான சங்கம். ஞாயிறு மாலையில் நடைபெறும் விவாத அரங்கில் இந்திய, ஆசிய மாணவர்கள் அரசியல் பிரச்சனை உட்பட பல்வேறு பொருள்கள் குறித்து விவாதிப்பர். கலைநிகழ்ச்சிகளும் நடத்துவர். சில நேரம் சிறப்புப் பேச்சாளர்களும் அழைக்கப்படுவதுண்டு.]

செத்தும் கொடுத்தார் சீதக்காதி

ஸ்பானிஷ் உள்நாட்டு யுத்தத்தின்போது நிவாரண உதவி சேவைகளுக்காக அனுப்பப்பட்ட சர்வதேச குழுவில் (பிரிகேடு) இடம் பெற்ற இந்திய அணிக்குச் ‘சக்லத்வாலா பிரிகேடு’ என்று பெயரிடப்பட்டது என்பது மிகவும் சுவையான தகவல். மற்றொரு சுவையான உண்மை, சக்லத்வாலா மறைவில் நிறைவேற்றப்பட்ட அஞ்சலி தீர்மானம் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், AISF அமைக்கப்படுவதற்குக் காரணத் தூண்டுகோலானது என்பதே! பெருமன்றம் அமைப்பதை முன்கூட்டியே தடுப்பதற்காக உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் இருந்த பிரிட்டீஷ் அதிகாரிகள் மாணவர்கள் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தனர். அதில் மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் மறைவிற்கு ஓர் இரங்கற் தீர்மானம், அவர்களால் கொண்டுவரப்பட்டது; ரமேஷ் சின்கா, அன்ஸார் ஹர்வாணி, PN பார்கவா மற்றும் பிற மாணவர்கள் தலைமையில் தேசிய மாணவர்கள் ஷர்பூர்ஜி சக்லத்வாலா மறைவுக்கு அஞ்சலித் தீர்மானத்தை முன்மொழிந்தார்கள். அந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற பிரிட்டீஷ் அதிகாரிகள் மறுக்க, கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டது. அதன் பிறகு தேசிய மாணவர்கள் மேடையைக் கைப்பற்றி சக்லத்வாலா மறைவுக்கு அஞ்சலித் தீர்மானத்தை நிறைவேற்றி. அனைத்திந்திய மாணவர்கள் மாநாட்டைக் கூட்டுவதான தங்கள் திட்டத்தை அறிவித்தனர். [AISF அமைப்பு மாநாடு லக்னோ நகரில் 1936ம் ஆண்டு ஆகஸ்ட் 12ல் 936 பிரதிநிதிகளுடன் நடந்தது. M.A.ஜின்னா தலைமை வகிக்க, ஜவகர்லால் நேரு மாநாட்டைத் துவக்கி வைத்தார். முறைப்படி அமைக்கப்பட்ட AISF அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் முதல் பொதுச் செயலாளராகப் பிரேம் நாராயண் பார்கவா தேர்ந்தெடுக்கப்பட்டார்.]

ஷர்பூர்ஜியின் மறைவுக்குத் தலைச்சிறந்த பெருமக்களான ஜவகர்லால் நேரு, (லேபர் கட்சியின் தலைவரும், 1945 முதல் 1951வரை பிரிட்டன் பிரதமருமான) கிளமெண்ட் அட்லீ, (பல்கேரிய கம்யூனிஸ்ட் தலைவரான) ஜார்ஜ் டிமிட்ரோ, (இங்கிலாந்தின் சமூக சீர்திருத்தவாதி) லான்ஸ்புரி, சுபாஷ் போஸ், (இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரான) ஹாரி போலிட் முதலான எண்ணற்றோர் புகழஞ்சலி செலுத்தினர்.

எவ்வளவு அசாதாரணமான கம்யூனிஸ்ட்டாக ஷர்பூர்ஜி சக்லத்வாலா விளங்கினார் என்பதை எண்ணிப் பார்க்க மலைக்கிறது!

--தமிழில்: நீலகண்டன்,

 என்எப்டிஇ, கடலூர்


No comments:

Post a Comment