Saturday 26 September 2020

ஈஸ்வர்சந்திர வித்யாசாகர் 200வது பிறந்தநாள்

 

19ம் நூற்றாண்டின் ஆகச் சிறந்த சமூகச் சீர்திருத்தவாதி

ஈஸ்வர்சந்திர வித்யாசாகருக்கு 200வது பிறந்தநாள் புகழஞ்சலி


--பவித்ரா சர்க்கார்

(நியூஏஜ் செப்.27 –அக்.3 இதழ்)

ஈஸ்வர் சந்திரா 1820ம் ஆண்டு, செப்டம்பர் 26ம் நாள், தற்போது மேற்கு வங்க மாநிலம் மித்னாபூர் மாவட்டத்தின் எங்கோ இருக்கும் குக்கிராமம் பீர்சிங்கா என்ற இடத்தில் மிகவும் ஏழைக் குடும்பம் ஒன்றில் பிறந்தார். இரவீந்திரநாத் தாகூர், மகாத்மா காந்தி முதலிய பெருமகன்கள் அவரைப் பெரிதும் புகழ்ந்துள்ளனர். இன்று 2020, செப்டம்பர் 26ம் நாள் அந்த மாபெரும் சமூகச் சீர்திருத்தவாதியின் 200வது பிறந்தநாள்!

2020ஆண்டு ஆகஸ்ட் 5ம்நாள் விடுதலைக்குப் பிந்தைய இந்தியாவில் அசாதாரணமான ஒரு நிகழ்வு – அன்று நாட்டின் பிரதமர், ஒரு மதம் சார்ந்த கோயிலுக்கான அடிகல்லை நாட்டினார்; கரோனா அச்சுறுத்தலுக்கு இடையே அயோத்தியா இராமர் கோயிலின் அடிக்கல் நாட்டு விழா -- அரசியல் நோக்கத்திற்காக, இந்துத்துவா வெறியுணர்வை ஊட்டுவதற்காக -- நடத்தப்பட்டது. இன்றைய அரசிற்கோ அல்லது பிரதமருக்கோ அது புதியதன்று, வழக்கமானதுதான்; இந்தக் களேபரத்தில் அவர்கள் செய்ய மறந்த எவ்வளவோ விஷயங்களில் பண்டிட் ஈஸ்வர் சந்திர வித்யாசாகரின் இரண்டாவது நூற்றாண்டு பிறந்தநாள் விழாவைக் கொண்டாட மறந்ததும் ஒன்று. வித்யாசாகர் என்ற அவரது பட்டப்பெயருக்கு ஏற்ப அவர் ஒரு கல்விக் கடல், அறிவின் சாகரம் – பொருத்தமாகவே அந்தப் பட்டம் அவரது வாழ்நாளிலேயே அவருக்குச் சூட்டப்பட்டது.

ஈஸ்வர் சந்திரா கல்வியில் மட்டுமல்ல, அன்பில், ஆதுரமான கருணையில், பரிவில், பெருந்தன்மையில் இப்படி மனிதப் பண்புகள் பலவும் நிரம்பிய மாபெருங்கடல். அவர் ஓர் இந்து, பிராமணரும்கூட. ஆனால் அவருக்குப் பிராமணர்–சூத்திரர், இந்து–முஸ்லீம் இப்படி எந்தப் பேதமும் இல்லை, அவருக்கு அனைவரும் ஒன்றே. அவர் செய்த பல நல்ல செயல்களில் உயர்வு தாழ்வு வித்தியாசம் பார்த்ததில்லை. அவருடைய பேராசிரியர் ஒருவர் காலரா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டபோது அவருக்குப் பணிவிடை செய்து பார்த்துக் கொண்டார்; பேராசிரியர் ஏழை என்பதால், சிகிச்சைக்கான செலவுகளை ஈஸ்வர் சந்திராவே ஏற்றுக் கொண்டதுடன், ஒரு செவிலியர் போல பேராசிரியர் இயற்கைக் கடன் கழிக்க உதவுவதில் இருந்து, சுத்தம் செய்வது, குளிப்பாட்டுவது என அனைத்துப் பணிகளையும் செய்தார்.

மேற்கு வங்கம் சந்தன் நகரில் இருந்த ஏழை முஸ்லீம்களுக்குத் தனது பொருட்செலவில் உணவு, தயிர் முதலியன வாங்கித் தருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தேவையானபோது பணம் தந்தும் உதவி இருக்கிறார்.

1905ம் ஆண்டு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது ஈஸ்வர் சந்திரா குறித்த வரலாற்றுச் சித்தரிப்பு ஒன்றில் இவ்வாறு எழுதினார்: “ராம் மோகன் ராய் தொடங்கி வங்காளத்தில், மற்ற பிராந்தியங்களைவிட உயர் புகழோடு, கதாநாயகர்கள் எழுந்த வண்ணம் உள்ளனர். அவர்களில் ஈஸ்வர் சந்திர வித்தயாசாகர் அவர்களைத் தலைச் சிறந்தவர் என்று சொல்ல வேண்டும்…”

இந்திய மறுமலர்ச்சி இயக்க உயர் கோபுரத்தில் ஒளிரும் நட்சத்திரமான ஈஸ்வர் சந்திர வித்தயாசாகர், தேசத்தின் பெரும் சீர்திருத்தவாதி, பெரும் கல்விமான், நவீன வங்காள மொழி உரைநடையின் சிற்பி என்பவற்றிற்கெல்லாம் மேலாக அவர் ஒரு மதசார்பற்ற மனிதாபிமானி. 19ம் நூற்றாண்டு இந்தியாவில் நவீனமானவை ஒவ்வொன்றின் காரணகர்த்தா அவர். அவரது வெற்றிகளில் போற்றப்பட வேண்டிய ஆகச் சிறந்த சாதனை இந்து கைம்பெண்களின் மறுமணம்.

1855ல் சமஸ்கிருதக் கல்லூரி முதல்வராக இருந்தபோது இந்து கைம்பெண்கள் மறுமணம் பற்றி வெளியிட்ட ஆய்வுக் கட்டுரை, பாரம்பரியத்தில் கட்டுண்டு கிடந்த நிலப்பிரபுத்துவச் சமூகத்தில் கலவரத் தீயை மூட்டியது. மேல்சாதி இந்துக்களின் பிரச்சனை அது என்ற போதிலும், சமூகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அந்தப் பழக்கம் புரையோடிப் போயிருந்தது. 1856ல் சட்டமன்றக் கவுன்சிலின் உறுப்பினர்க‘ளிடம் வித்தியாசாகர் விளக்கமளித்துச் சமாதானம் கூற, மறுமணத்திற்கான சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. சட்டம் நிறைவேற்றப்பட்ட சில மாதங்களிலேயே 1856ம் ஆண்டு டிசம்பர் 7ம் நாள் முதல் இந்து கைம்பெண்ணின் மறுமணத்தைக் கொல்கத்தாவில் நடத்தி வைத்தார். மணமகள் பத்து வயது சிறுமி, காளிமதி, பிராமண விதவை; மணமகன், படித்தவனான சிரிஸ் சந்திர வித்யாரத்னா. இது அக்காலத்தில் சனாதனத்தில் சிக்கிப் பாரம்பரியத்தைச் சுமந்த சமூகத்தில் ஆகப் பெரும் கலகம், புரட்சி –கலகக்காரர் வித்யாசாகரின் பெயர் நாடு முழுதும் பரவியது. இது மகாராஷ்ட்ரா, குஜராத், அசாம் மற்றும் ஒரிசா என எங்கும் சீர்திருத்த இயக்கத்தில் செல்வாக்கு செலுத்தியது. அந்தந்த மாநிலங்களில் இருந்த சமூகச் சீர்திருத்தப் போராளிகள் இந்து பெண்கள் மறுமணத்திற்கான முயற்சிகளைத் துவக்கினர். அதற்கு முன் 1850களிலேயே குழந்தைத் திருமண முறையை எதிர்த்துக் குரல் எழுப்பிய வித்யாசாகர் ஒரு பகுத்தறிவு சீர்திருத்தவாதியாக மலர்ந்தார். உயர் சாதி (கூலின்) சமூகத்தில் நிலவிய பலதார திருமணமுறையை எதிர்த்தும் கட்டுரைகள் எழுதினார்.  

கல்வியின் மூலம் மட்டுமே நமது நாடு முன்னேற முடியும் என உறுதியாக அவர் நம்பினார். 1848ல் பெண்களுக்கான முதலாவது பொதுப் பள்ளியைக் கொல்கத்தாவில் பெத்தியூன் நிறுவினார், பின்னர் அப்பள்ளி பெத்தியூன் பள்ளி என அழைக்கப்படலாயிற்று. சில காலத்தில் வித்யாசாகர் அப்பள்ளியின் செயலாளர் ஆனார். 1851 -- 1858க்கு மத்தியில் வங்காளத்தின் பல பகுதிகளில் பெண்களுக்கான 31 பள்ளிக் கூடங்களை நிர்மாணித்தார். இராஜா ராம் மோகன் ராய் ஏற்றி வைத்த வங்க மறுமலர்ச்சியின் ஒளிவிளக்கு, பகுத்தறிவு, மனிதாபிமானம் என்ற இயல்புகளோடு நிலப்பிரபுத்துவ பழக்க வழக்கங்களுக்கு எதிராக உறுதியான அடித்தளத்தைக் கொண்டிருந்தது. ‘19ம் நூற்றாண்டின் முற்பகுதியில் கடற்பறவை போன்ற புயல்வேகத் தீவிரச் சிந்தனையாளரான ஹென்றி லூயிஸ் விவியன் டெரோசியோவின் சீடர்களான ‘இளம் வங்காளிகள்’ (அல்லது டெரோசியன்கள்) எனப்படுவோர் இந்துயிசத்தின் தீய பழக்க வழக்கங்களைச் சாடினார்கள். ஆனால் அவர்களது எதிர்ப்பில் பரபரப்பு இருந்ததே தவிர ஆக்கபூர்வமானதாக இல்லை. (ஹென்றி லூயிஸ் 1809 முதல் 1931 வரை வாழ்ந்த இந்தியக் கவிஞர், தீவிர முற்போக்காளர், இந்து பழக்க வழக்கங்களை விமர்சித்தவர், இந்து கல்லூரியின் உதவித் தலைமை ஆசிரியர், மாணவர்களைக் கவர்ந்து கற்பித்தவர். காலரா தொற்றால் இறந்தார்)

அந்தச் சூழலில், கிருஸ்துவ மிஷினரிகள் இந்து சமூகத்தை அரிப்பதைக்  கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு தேவேந்திரநாத் தாகூர், கேசவ் சந்திர சென் மற்றும் பிறர் தலைமையில் இயங்கிய பிரம்ம சமாஜ் அமைப்பு, மேல்ஜாதி இந்துகளிடம் செல்வாக்கு பெற்றிருந்தது. ஆனாலும் மிஷினரிகள் கல்விஅறிவில்லாத ஏழைகள் மத்தியில் மெல்ல ஊடுருவியது. எவ்வாறாயினும், வங்க மொழி உரைநடையைக் கட்டமைத்தில் துவக்ககால பங்கு, மற்றும் கல்வியைப் பரவலாக்கியதில் அவர்கள் ஆற்றிய பங்கு மறுக்க முடியாதது. இந்தியாவில் சமூக மாற்றங்களைக் கொண்டு வருவதில் வித்தியாசாகர் தனித்த ஒற்றை மனிதராய் வினைஊக்கித் தூண்டுகோலாய் இருந்தார். பிரிட்டீஷ் ஆட்சியாளர்கள் உதவியுடன்தான் சீர்திருத்த நடவடிக்கைகளை அவரால் மேற்கொள்ள இயன்றது என்பது உண்மைதான். வித்யாசாகரின் தனித்த ஆளுமை, அவரது சுயமரியாதை, நேர்மைப் பண்பு, துணிவு, உறுதிப்பாடு, பகுத்தறிவு அணுகுமுறை ஆளும் வர்க்கத்தினரைக் கவர்ந்தது. வங்கத்தின் காலனிய ஆட்சியாளர்கள் தங்கள் வர்க்க நிலையிலிருந்து நிலப்பிரபுத்துவ இருண்மைக் கருத்துகளையும் பழக்கங்களையும் எதிர்க்க விரும்பினார்கள்–அதுவே வித்யாசாகரின் பொது நோக்காகவும் இருந்தது. அதைத் தாண்டி ஒரு போதும் எந்தத் தருணத்திலும் அநியாயமாகப் பிரிட்டீஷ்காரர்களுடன் அவர் சமரசமாக நடந்து கொண்டதே இல்லை.

மாறாக, காலனிய ஆட்சியாளர்களின் கொடூரத்தையும் ஊழல் குணத்தையும் அவர் தனது எழுத்துகள் மூலம் அம்பலப்படுத்தியிருக்கிறார். ‘வங்காள இதிகாஸ்’ (வங்கத்தின் வரலாறு) என்ற நூலில், 18ம் நூற்றாண்டு பிற்பகுதியில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எலிஜா இம்பே உடந்தையாக இருக்க அப்போதைய கவர்னர் ஜெனரல் வாரன் ஹெஸ்டிங், எப்படி பணத்தைச் சுருட்டும் ராஜியத்தை வங்காளத்தில் நிறுவனப்படுத்தினார் என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார். ஹெஸ்டிங்கை எதிர்த்தார் என்ற ஒரே காரணத்திற்காக நந்தகுமார் என்ற மக்கள் நேசித்த செல்வாக்குமிக்க மனிதன் பொதுவெளியில் தூக்கிலிடப்பட்டதையும் குறிப்பிட்டுள்ளார். 

‘ஆக்யான் மஞ்சரி’ (கதைகளின் மொட்டுக்கள்) என்ற அவரது இன்னொரு நூலின் நான்கு அல்லது ஐந்து உறைய வைக்கும் கதைகளில், காலனிய ஆக்ரமிப்பாளர்கள் எவ்வளவு காட்டுமிராண்டித்தனமானவர்கள் என்பதை விவரித்திருப்பார். இப்படிப்பட்ட வித்யாசாகரை ஏகாதிபத்தியத்தின் ஏஜெண்ட் என முத்திரை குத்திய ஒரு அதிதீவிர இடதுசாரிப் பிரிவினர் அல்லது நக்சலைட் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இம்மாமனிதர் சிலையை ஒருமுறை  1970ல் உடைத்துச் சேதப்படுத்தினர். இத்தகைய சிந்தனைப் போக்கு எந்திரத்தனமான நிர்ணயிப்பு என்பதைத் தவிர வேறில்லை. மற்றொரு முறை 2019 மே மாதம் (அமித் ஷா பேரணியின்போது நிகழ்ந்த வன்முறையில்), கொல்கத்தா வித்யாசாகர் கல்லூரியில் நிறுவப்பட்டிருந்த பழமையான வித்யா சாகர் சிலையின் தலைப்பகுதி பாஜக ஆதரவாளர்கள் எனக் கூறப்படுபவர்களால் மீண்டும் உடைக்கப்பட்டது. அந்தக் குற்றச்சாட்டைப் பாஜக மறுத்தாலும் அதன் பழமைவாத கொள்கைகள் வித்யாசாகரின் மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு முற்றிலும் மாறானது என்பது வெளிப்படை.

வித்யாசாகரின் பணி பல திறப்பட்டது, கல்வி அறிவை வளர்ப்பது, பெண்கள் விடுதலை, கைம்பெண் மறுமணம், மண்சார்ந்த மொழி வகைகள் மற்றும் அம்மொழி இலக்கியங்களின் வளர்ச்சி என வேறுவேறு துறை செயல்பாடுகளில் ஈடுபட்டார். கொல்கத்தா வில்லியம் கோட்டை கல்லூரியில் இரண்டு முறையாக ஏழு ஆண்டுகள் பணியாற்றினார். அந்தக் காலக் கட்டத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் இல்லை எனினும் அவரது வாழ்க்கையை ஒழுங்குபடுத்திக் கட்டமைத்த காலம் அது. 1841-- 1846 முதல் காலகட்டத்தில் ‘வேதாள் பாஞ்ச்பின்ஷதி’ (25 வேதாளக் கதைகள்) மற்றும் ’வசுதேவ் சரித்’ (வசுதேவரின் சரித்திரம்) என்ற இரண்டு நூல்களை எழுதி வெளியிட்டார். அந்தக் கல்லூரியில் இருந்துதான் அவரது இந்தி மற்றும் ஆங்கில அறிவு மேம்பட்டது.

1851 முதல் 1858 வரை ஏழு ஆண்டுகள் சமஸ்கிருதக் கல்லூரியின் முதல்வராக வித்யாசாகர் பணியாற்றினார். அதற்கு முன்னரே அந்தக் கல்லூரியில் 1846ல் ஓராண்டு பணியாற்றி உள்ளார். கல்லூரி பாடத் திட்டத்தில் அடிப்படையான மாறுதல்களை அவரால் கொண்டுவர முடிந்தது. தத்துவம் மற்றும் அறிவியல் அடிப்படையில் அமைந்த நவீனக் கல்விக்கு ஆதரவாக இருந்தார். அவருடைய மதசார்பற்ற விரிந்த பார்வை அவரது கல்வித் திட்டங்களில் பிரதிபலித்தது. அப்போது கல்விக் கவுன்சிலின் செயலாளராக இருந்த டாக்டர் மௌட் அவர்களுக்கு 1853 செப்டம்பர் 7ம் தேதி எழுதி கடிதத்தில் வித்தியாசாகர் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்: “ஏகான்ம வாதமாகிய வேதாந்தமும் (கபிலரின் துவைத வாதமாகிய) சாங்கியமும் தவறான தத்துவ முறைகள்  என்பது பற்றி மேலும் விவாதமில்லை (அது முடிந்துபோன கருத்து)…சமஸ்கிருதக் கல்லூரியில் இவற்றைக் கற்றுத் தருவதால் ஏற்படும் அதன் செல்வாக்கை எதிர்த்து முறியடிக்க ஆங்கிலத்தில் ஆழமான தத்துவப் படிப்பு (கற்றுத்தர) வேண்டும்.” அந்தக் காலத்தில் சாங்கியத்தையும் வேதாந்தத்தையும் தவறான முறைகள் எனச் சொல்வதற்கு ஆகக் கூடுதலான தைரியம் வேண்டும், அது ஈஸ்வர சந்திராவுக்கு இருந்தது. சமஸ்கிருதக் கல்லூரி முதல்வராக இருந்தபோது கல்லூரியில் சேர ஜாதிப் பாகுபாடு முற்றாக ஒழிக்கப்பட்டது அவரது குறிப்பிடத்தக்க சீர்திருத்த நடவடிக்கை. கடுமையான பணிச் சுமைகளுக்கு மத்தியிலும் அவர் மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை பாட நூல்கள், குறிப்புக்களை வழக்கமாக எழுதினார். வங்கமொழி அறிமுக நூல் –‘வர்ண பரிச்சய’ (அறிமுக எழுத்துகள்), 1855ல் அவர் எழுதிய முக்கியமான இரண்டு தொகுதிகளாக வெளிவந்தன.

பல துறைகளிலும் வித்யாசாகர் ஆற்றிய பங்களிப்பு பிரமிப்பூட்டக் கூடியது. இதழியல் துறையில் தொடர்ந்து அவர் எழுதினார். ஐந்து பத்திரிக்கைகளோடு அவரது பெயர் தொடர்பு கொண்டுள்ளது. அவை, தத்துவபோதினி பத்திரிகா, சர்வ சுவாங்கரி பத்திரிகா, சோம்பிரகாஷ், இந்து பேட்ரியாட், விபிதார்த்த சங்கிரகா.  ஹரீஷ் சந்திர முகர்ஜிக்குப் பிறகு இந்து பேட்ரியாட்டின் ஆசிரியராக மதுசூததன் தத்தாவை அறிமுகம் செய்தார். பொழுதுபோக்காக ஹோமியோபதி மருத்துவத்தைக் கற்றவர் சிலநேரங்களில் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்துள்ளார். வாழ்வின் பிற்பகுதியில் சுமார் 18 ஆண்டுகள் தற்போதைய ஜார்க்கண்ட் மாநிலத்தின் கர்மதார் என்ற இடத்தில் கழித்தார். மத்தியதர மக்கள் மற்றும் அவரது உறவினர்களின் நன்றியில்லா குணம் ஒருக்கால் வித்யாசாகரைப் புறக்கணிக்கப்பட்ட ஐந்தாம் வர்ண மக்களான சந்தல்கள் மற்றும் கர்மதார் பகுதியில் வசித்த பிற பழங்குடியினத்தவரை நோக்கி இழுத்து வந்திருக்கலாம். பூர்வ பழங்குடி மக்களின் வாழ்வியலை மாற்ற முயன்று பாடுபட்டார். அச்செயற்பாட்டு நடவடிக்கையில் அவர்தான் முன்னோடி. ஏழை சந்தல் இன மக்களுக்கு உணவளித்து, ஹோமியோபதி மருந்துகள் தந்து கட்டணமின்றி அவர்களுக்குச் சிகிச்சையும் அளித்து பலரையும் குணப்படுத்தியிருக்கிறார்.

கீழ்க்கண்ட வார்த்தைகளில் புகழ்ந்து இரவீந்திரநாத் தாகூர் அவரை மதிப்பீடு செய்துள்ளார்: “வித்தியாசாகர் வாழ்க்கையை படிக்கும்போது, கற்றறிந்த வங்காளியாக, அல்லது அப்பழுக்கற்ற இந்துவாக அவரை மதிப்பிடுவதைத் தாண்டி, மனிதன் என்ற பதத்திற்கு உண்மையான பொருட்செறிவுள்ள அர்த்தம் வழங்கும் மனிதர் அவர் என்பதை அவரது வாழ்க்கை பலமுறை திரும்பத் திரும்ப நினைவூட்டுகிறது. அவரது வாழ்க்கையின் ஆகப் பெரும் புகழ், அபரிமிதமாகப் பொங்கிப் பிரவாகிக்கும் அவரது அசாதாரணமான இந்த மனிதநேயமே!”

ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் தமது 71வது வயதில் 1891ம் ஆண்டு ஜூலை 29ல் மறைந்தார். காந்திஜி குறிப்பிடுவார், “இந்த உலகில் அவரைப்போல வெகு சிலரே இருக்க முடியும்!”

--தமிழில் நீலகண்டன்

என்எப்டிஇ, கடலூர்

No comments:

Post a Comment