Tuesday 25 August 2020

வரலாற்றுத் தலைவர்கள் வரிசை 10 : ஹிஜாம் ராவத் சிங் : மணிப்பூர் மக்களின் கதாநாயன், மாநிலத்தின் தந்தை

நமது பெரும் தலைவர்கள் வாழ்விலிருந்து :

சில சித்திரத் சிதறல்கள் - 10                               



ஹிஜாம் ராவத் சிங் :

மக்களின் கதாநாயன்,

மாநிலத்தின் தந்தை 



--அனில் ரஜீம்வாலே

(நியூஏஜ் ஆகஸ்ட் 16 –22, 2020)

          

ஹிஜாம் ராவத் சிங், மணிப்பூர் மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டியெழுப்பியவர், மாநிலத்தின் ஒவ்வொரு வீட்டிலும் உச்சரிக்கும் பெயர். மணிப்பூர் மாநிலத்தைப் படைத்த சிற்பி என்றும், மணிப்புரி தேசிய இனத்தை நிலப்பிரபுத்துவத்திலிருந்தும், பிரிட்டீஷ் ஆட்சியில் இருந்தும் விடுவித்தவர் என்று கொண்டாடப்படுகிறார். (மணிப்பூர், இம்பால் மேற்கு மாவட்டம், வான்கோய் தாலுக்காவில் உள்ள) ஆய்னம் லேய்கே (Oinam Leikei) என்ற கிராமத்தில் ஓர் ஏழை குடும்பத்தில் 1896ம் ஆண்டு, செப்டம்பர் 30ம் நாள் பிறந்தார் ராவத் சிங். தந்தையை இளம் வயதிலும், பின்னர் அடுத்து தாயையும் இழந்தார். காங்லா அரண்மனைக்கு அருகே இம்பாலில் இருந்த ஜான்ஸ்டன் மேல்நிலைப் பள்ளியில் 7வது வரை படித்தார். அப்போது ராவத் பாலர் சங்கத்தையும், சத்ர சன்மிலான் எனப்படும் மாணவர் அமைப்பையும் ஏற்படுத்தினார். 1913ல் டாக்காவில் படிக்கச் சேர்ந்தாலும், பணம் இல்லாததால் மீண்டும் திரும்ப வர நேரிட்டது.

          பெற்றோரை இழந்த காரணத்தால் தனது செலவுக்காக மாணவர் உணவுச்சாலை ஒன்றில் சமையல்காரனாக வேலை பார்த்துள்ளார், பள்ளி மாதக் கட்டணம் நான்கு அணா கட்ட முடியாமல்!

          இம்பாலில் தனது நண்பர் மைபாம் ஷாம்தென் என்பவருடன் வாங்கெய்யில் (ஸ்ரீகோவிந்தா ஜீ வைணவ ஆலயம் உள்ள இடம்) தங்கி இருந்தார்; அந்த நண்பரோ மகாராஜா சூரசந்த் சிங் அரண்மனையில் பணியாற்றியதால் ராவத்துக்கும் அரச குடும்பத்தினருடன் தொடர்பு ஏற்பட்டது. மகாராஜாவுக்கும் ராவத்தை மிகவும் பிடித்துப் போனது; அவரது மூத்த சகோதரரின் மகளான இளவரசி கொம்தோன்சனா தேவியைத் திருமணம் செய்து வைக்க, ராவத் மகாராஜாவின் மருமகனானார். அரசவையில் அவர் ஒரு நீதிபதியாகப் பின் நியமிக்கப்பட்டார்.

தேசிய உணர்வின் தாக்கம்

          மேலே படிப்பதற்காகக் கல்கத்தா சென்றபோது 1922ல் மகாத்மா காந்தியின் உரையைக் கேட்டார், தேசிய உணர்வில் மூழ்கினார். மணிப்பூரில் முதன் முதலில் காதி கதர் உடை அணிந்தவர் அவர்தான். அவருடைய தேசியவாத கண்ணோட்டம் மற்றும் நடவடிக்கை காரணமாக மகாராஜா கோபம் கொண்டு அவரைச் சமூக விலக்கம் செய்து ஒதுக்கி வைத்தார்.

          கல்வி என்ற பிரச்சனையை மணிப்பூரில் ராவத் முதலில் கையில் எடுத்து மணிப்பூர் கல்வி நிறுவனம் ஒன்றைத் துவக்கினார்; பின்பு அது இம்பால் மகாராஜா உயர்நிலைப் பள்ளியானது. 1927ல் மாஜிஸ்ரேட் ஆனார், ஆனால் வித்தியாசமான மாஜிஸ்ரேட்டாகத் தனது அதிகாரத்தை மக்களுக்கு உதவுவதற்காகப் பயன்படுத்தினார். மகாராஜாவின் ஆதரவோடு நடத்தப்பட்ட பிராமண சபாவுக்கு எதிராக ராவத் கிளர்ந்தெழுந்து, அந்தச் சபாவின் பிற்போக்கு சித்து விளையாடல்களுக்கு எதிராக மூவாயிரம் மக்களை ஒன்றுதிரட்டினார்.

          மணிப்பூர் மகாராஜாவின் அதிகாரம் சவாலைச் சந்தித்தது இதுதான் முதன் முறை.

மகாராஜாவுடன் மோதல்

          1934ல் மகாராஜா ‘நிகில் மணிப்பூர் இந்து மகாசபா’ என்ற அமைப்பை, (நிகில் என்றால் அனைத்து, முழுமையாக என்று பொருள்) இந்து மகாசபாவைப் போன்ற வழிமுறையில் அமைத்தார். (முதலில் அதன் நோக்கம் தேசியமாகவும், கிருஸ்துவ மதத்தின் ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்துவதாகவும் இருந்தது.) அதன் பெரும்பாலான பணிகளை ராவத் மேற்கொண்டார். ஆனால் விரைவில் முரண்பாடு, மோதல் ஏற்பட்டது. சின்காவில் நடந்த அதன் நான்காவது மாநாட்டு கூட்டத்தில், மகாராஜா கலந்து கொள்ளாதபோது, அமைப்பின் பெயரில் இருந்த இந்து என்ற சொல் கைவிடப்பட்டது. மகாராஜா சினமுற்றாலும், ராவத் தனது பணியை விட்டு விலகி, மகாசபாவின் செயல்பாடுகளில் முழுநேரமும் ஈடுபட்டார்; ஜனநாயக பூர்வமான கோரிக்கைகளை முன்னெடுத்தார்; ராஜ தர்பாரைத் (தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட) சட்டமன்றமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார். 

          1937ல் மாண்டலேவில் நடைபெற்ற மாநாட்டில் சபா உதவித் தலைவராக ராவத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே வருடம் அசாம் பிரதேச ராஷ்ட்ரிய மாநாட்டிலும் பங்கேற்றார். வயது வந்தோர் வாக்குரிமை அடிப்படையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் கோரிய மகஜரைச் சமர்ப்பிக்க நான்காயிரம் பேரிடம் கையெழுத்து திரட்டினார். அதன்பிறகு மகாராஜாவின் வேட்பாளரை 700 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, ராவத் மகாசபா தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். டிக்போய் எண்ணெய் வயல் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டை மகாசபா வன்மையாக கண்டித்தது. மணிப்பூரில் எங்கெங்கும் கதர், காந்தி குல்லா, மூவர்ணக் கொடி என தேசிய இயக்கம் வீறுகொண்டது.

பெருந்திரள் பெண்கள் எழுச்சி

          1939 டிசம்பரில் மாபெரும் பெண்கள் இயக்கம் வெடித்தது. போரின் பெயரால் ஏற்றுமதி மற்றும் கள்ளச்சந்தை காரணமாகச் சந்தையில், அரிசி இல்லாது மறைந்தது போனதே போராட்டத்திற்கு முக்கிய காரணம். மணிப்பூர் பொருளாதாரத்தில் பெண்கள் கேந்திரமான முக்கிய பங்கு வகிப்பவர்கள். (அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு, இமா கைதேல் - அம்மா சந்தை

மணிப்பூரைத் தாண்டியும் புகழ் பெற்ற பெரிய சந்தையாகும். இது முழுவதும் பெண்களால் நிர்வகிக்கப்படுகிறது. இங்கு மணிப்பூரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வரும் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் அன்றாடம் தங்கள் பொருட்களைக் கொண்டுவந்து விற்கின்றனர். இச்சந்தையில் பூக்கள், காய்

கனிகளில் இருந்து கருவாடு, வாசனைத் திரவியங்கள், கைவினைப்பொருட்கள் வரை அனைத்தும் கிடைக்கும்.) எனவே இயல்பாக அவர்கள் திரும்பத் திரும்ப ’நுபி லான்’ அல்லது ‘நுபி லால்’ ((மணிப்புரியில் ‘பெண்களின் போர்’ எனப் பொருள்படும்) இயக்கத்தைத் துவக்கினர்.

          1981ல் ஆங்கிலேயர்களுக்கும் மணிபுரிக்கும் நடந்த யுத்தத்திற்குப் பிறகு பிரித்தானிய காலனியவாதிகள் மணிப்பூரை ஆக்கிரமித்து மிடின்குனகு சூரசந்த் சிங் (1891-1941), என்ற சிறுவனை மெந்டுராபாக் அரசராகத் தெரிவு செய்தனர். மகாராஜா அரிசி ஏற்றுமதி மற்றும் வர்த்தகச் சூதாட்டத்தில் ஈடுபட்டு சந்தையில் அரிசியைக் கட்டுப்படுத்தினார். முன்பு அரிசி மாநிலத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு மட்டுமே இருந்தது. செய்தித் தொடர்பு, மோட்டார் வாகன அறிமுகம் மற்றும் மார்வாரி வியாபாரிகள் வந்தபின் அரிசி ஏற்றுமதி வர்த்தப் பொருளாகி மாநிலத்தை விட்டு வெளியே அனுப்பப்படலாயிற்று. இதனால் அவ்வவ்போது நெருக்கடிகள் ஏற்பட்டது. 1939ல் பஞ்சம் போன்ற நிலை ஏற்பட, மக்கள் கொதித்தெழுந்தனர். அதில் பெண்கள் தங்களது ‘இரண்டாவது நுபி லான்’ போரைத் தொடுத்தனர்.

          1939ல் மகாராஜாவையும் கிம்சன் என்ற பிரித்தானிய அரசியல் ஏஜென்டையும் எதிர்த்து அந்தப் போராட்டம் நடைபெற்றது. டிசம்பர் 11 அன்று க்வாய்ராம்பண்ட் பஜாரில் அரிசியைக் காணாத பெண்கள் தர்பார் உறுப்பினர்களை முற்றுகையிட்டனர். அவர்களில் பலர் தப்பி விட, பிடிபட்ட ஷார்ப், தர்பாரின் தலைவரை டெலிகிராப் ஹவுசில் அடைத்து வைத்தனர். அசாம் 4வது ரைபிள் படை தாக்கியதில் பல பெண்கள் காயமடைந்தனர். கிளர்ச்சியாளர்கள் அரசியல் ஏஜென்ட் மாக்ஸ்வெல்லை எதிர்த்தும் முழக்கமிட்டனர்.

          மாநிலத்திற்கு வெளியே இருந்த ராவத் சிங் டிசம்பர் 16ம் நாள் திருபுராவிலிருந்து திரும்பினார். ராவத் ‘மணிப்பூர் பிரஜா சம்மெலினி’ என்ற புதிய அரசியல் கட்சியை நிறுவி, மாபெரும் கூட்டங்களில் உரையாற்றினார்.

கைதும் கம்யூனிஸ்ட்டாக மலர்தலும்

          1940 ஜனவரி 7ம் நாள் கைதான ராவத் மூன்றாண்டு தண்டனையில் முதலில் மணிப்பூர் சிறைக்கும் பின்னர் சில்ஹெட் (பங்களாதேஷில் உள்ள 5வது பெரிய நகரம், ஜலாலாபாத் என்றும் அழைக்கப்படுகிறது) சிறைக்கும் அனுப்பி வைக்கப்பட்டார். சிறையில் ஹேமங் பிஸ்வாஸ், ஜோதிர்மாய் நந்தி மற்றும் பிற கம்யூனிஸ்ட்களைச் சந்தித்தார். 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தால் தேசியப் பெரும் எழுச்சி மூள, ஏராளமானோர் சிறைகளில் அடைக்கப் பட்டனர். பல கம்யூனிஸ்ட்கள் மற்றும் புரட்சியாளர்களுடன் தொடர்பு ஏற்பட, கம்யூனிசத் தத்துவம் அறிமுகமானது. ராவத் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக மனு செய்தார்.

          1943 மார்ச் 20ல் விடுதலையான ராவத் மணிப்பூரில் நுழைய அனுமதிக்கப்படாததால் பங்களாதேஷ் கச்சர் மாவட்டத்தில் தங்க நேரிட்டது. அங்கே விவசாயிகள் மற்றும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் வேலை செய்தார். (தற்போது பங்களாதேஷில் இருக்கும்) மைமென்சிங் பகுதியின் நேத்ரகொனாவில் 1944 மார்ச்சில் நடைபெற்ற அனைத்திந்திய கிசான் சபா (AIKS) மாநாட்டில் கலந்து கொண்டார்.

          ராவத்தின் முயற்சியால் கச்சர் மாவட்டத்தில் சுமார் 50 சிறந்த மனிதர்கள் கட்சி உறுப்பினராகவும் அதில் பத்து பேர் முழுநேர கட்சி ஊழியர்களாகவும் ஆனார்கள். விவசாய சங்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கை ஆறாயிரத்தைக் கடந்தது. 1944ல் சுர்மா பள்ளத்தாக்கில் நடைபெற்ற விவசாய மாநாட்டிலும் கலந்து கொண்டார்.  

          இந்திய நாடக மன்றம் (IPTA)ன் குழுஒன்றை ’ஸ்வதேஷ் கானர் தள்’ என்ற பெயரில் கச்சரில் அமைத்தார். (ராவத் அவர்களே பெரும் எழுத்தாளர், கவிஞர், நாடக ஆசிரியர், நடிகர் மற்றும் பத்திரிக்கையாளர். அந்த வகையில் அவருடைய வாழ்க்கை ருஷ்யாவின் லியோ டால்ஸ்டாயுடனும் கவிஞர் டாக்டர் கமல் சிங்குடனும் ஒப்பிடத் தக்கது என்றொரு இணைய (E-PAO) கட்டுரையில் ஒரு போலீஸ் உயர் அதிகாரி எழுதியுள்ளார். ஏனெனில் அவர்களுடைய இலக்கிய ஆளுமை தவிர, செல்வ வாழ்வைத் துறந்து ஏழை எளிய மக்களுக்காக வாதாடவும் போராடவும் செய்தவர்கள் அவர்கள் – இணைப்பு மொழிபெயர்ப்பாளர்).

          1943ல் பாம்பேயில் நடைபெற்ற முதல் சிபிஐ கட்சி காங்கிரஸ் மாநாட்டில் ராவத் சிங் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். மணிப்பூர் மக்களின் சார்பில் அவர் வாழ்த்துச் செய்தியைத் தெரிவித்தார். இந்தச் செய்தி ’பியூபிள்ஸ் வார்’ சிபிஐ கட்சிப் பத்திரிக்கையில் வெளியானது. அந்தச் செய்தியில், கட்சி உறுப்பினராகத் தான் மனு செய்து வேண்டியது ஏற்கப்படுமானால், அதனைப் புரட்சிகரப் பெரும் பேறாகக் கருதுவேன் என்று பதிவு செய்திருந்தார். மேலும் ஜப்பானிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராகப் போராட வேண்டியது மணிப்பூர் மக்களின் முக்கியமான கடமை என்றும், கொரிலா யுத்தத்திற்கான பெரும் படையைத் தான் திரட்டப்போவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

          இதனால் ராவத் மணிப்பூரில் மீண்டும் நுழைவதற்கு ஆங்கிலேய அரசு நிச்சயமாக ஒப்புக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக, பிரிட்டீஷ் அவரைப் பாதுகாப்புக் கைதியாக 1944 செப்டம்பர் 15ம் நாள் கைது செய்தது. விடுதலையானதும் கச்சர் மாவட்ட கிசான் சபாவின் பொதுச் செயலாளர் ஆனார். 1946ல் அசாம் சட்டமன்றத்திற்கானத் தேர்தலில் போட்டியிட்டு சில வாக்குகளில் தோல்வி அடைந்தாலும், பின்னர் அவரே இரண்டு முறை சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1946 ஏப்ரலில் மணிப்பூர் பிரஜா மண்டலை நிறுவினார். கம்யூனிஸ்ட் என்று குற்றம் சாட்டி மணிப்பூர் மகாசபாவிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார்.

          1946ல் இம்பாலில் இருந்து ஒன்பது மைல் தள்ளி இருக்கும் நம்போல் என்ற இடத்தில் மணிப்பூர் க்ருஷக் சங்கத்தின் இரண்டாவது மாநாடு ராவத் சிங் தலைமையில் நடைபெற்றது.

          இரண்டாவது உலக யுத்தத்தின்போது முன்னேறிய ஜப்பானிய ஆக்கிரமிப்பாளர்களை எதிர்க்க ராவத் கொரிலா படைகளை அமைத்தார். அந்தப் படையில் குறைந்தது 20ஆயிரம் பேர் சேர்வதற்காக அவர் அழைப்பு விடுத்தார். முன்னேறி வந்த ஜப்பான் படைகள் மணிப்பூர் மீது பலமுறை வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தினர்.

இந்தியா விடுதலை அடைந்தது

          இந்திய விடுதலைக்குப் பிறகு மணிப்பூர் மன்னர் (போதசந்திர) தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தினை ஏற்படுத்த உறுதியளித்தார். ஜனநாயக செயல்பாட்டு நிகழ்முறைகளைத் துவக்க 9 கட்சிகளின் மாநாட்டை 1947 நவம்பர் 30ல் அமைத்தார் ராவத். அதில் பழங்குடி இனங்களின் பல அமைப்புகளும் சேர்க்கப்பட்டன. ராவத் 1948 பிப்ரவரி – மார்ச் மாதங்களில் கல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது சிபிஐ கட்சி மாநாட்டில் கலந்து கொண்டார். 1948 ஆகஸ்ட் 23ம் நாள் மணிப்பூரில் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது. மணிப்பூரில் முதல் பொதுத் தேர்தல் 1947ல் நடத்தப்பட்டது. அதில் மணிப்பூர் க்ருஷக் சபா (விவசாய சபை) 23 இடங்களுக்குப் போட்டியிட்டு 5 இடங்களில் வென்றது. வெற்றவர்களில் ராவத்தும் ஒருவர்.

          அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல் மணிப்பூர், கச்சர், லுஷாய் மலைப் பகுதிகள், திருபுரா முதலியவற்றை உள்ளக்கிய வடமேற்கு எல்லைப்புற மாகாணம் (பூர்பச்சல் பிரதேசம்) ஒன்றை அமைக்கத் திட்டமிட்டார். அந்தத் திட்டத்தை எதிர்த்து 1948, செப்டம்பர் 21ம் நாள் மிகப் பிரம்மாண்டமான கூட்டம் நடத்தப்பட்டது. மணிப்பூரின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர். போலீஸ் கடும் தாக்குதலில் ஈடுபட்டது.  (புங்டோங்பம் பகுதியில் மக்களைத் தடுத்த போலீசாருடன் ஏற்பட்ட கைகலப்பில் ஒரு போலீஸ் அதிகாரி அந்த இடத்திலேயே கொல்லப்பட்டார். இனி போலீஸ் துறையின் அடக்குமுறை கண்மூடித்தனமான இருக்குமென உணர்ந்த) ராவத் சிங் தலைமறைவானார். மணிப்பூர் பிரஜா சங்கமும், மணிப்பூர் க்ருஷக் சபாவும் தடை செய்யப்பட்டன. ராவத் சிங் தலைக்கு ரூபாய் பத்தாயிரம் சன்மானம் அறிவிக்கப்பட்டது.

          அந்த நேரத்தில் தீவிர இடதுசாரி குழுப்போக்கு, (ஆயுதப் புரட்சி) சாகசங்களின் பாதை கட்சியில் செல்வாக்கு செலுத்தியது. தெலுங்கானா, காகத்துவீப், திருபுரா, மைமென்சிங் முதலிய இடங்களில் ஆயுதப் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. மணிப்பூரிலும் ஆயுதப் போர் கட்டவிழ்த்து விடப்பட்டது. மாநிலம் முழுவதும் போலீஸ் முகாம்கள் பல அமைக்கப்பட்டன.

          1951ல் ஆயுதங்கள் வாங்கி வர ராவத்தைப் பர்மாவுக்குச் செல்லக் கட்டளையிட்டது கட்சி. பர்மாவில் அப்போது ஆயுதப் போராட்டம் கடுமையாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அனைத்துக் கம்யூனிஸ்ட் குழுக்களோடும் தொடர்பு கொண்டு அவற்றை ஒருங்கிணைக்க ராவத் முயற்சி செய்தார். அவர்களும் மணிப்பூரின் போராட்டத்திற்கு உதவுவதாக உறுதி அளித்தனர். ஆனால் திரும்பும் வழியில் ஹிஜாம் ராவத் சிங்கை டைபாய்டு சுரம் தாக்கியது. எல்லையோர கிராமமான வாங்போவில் 1951 செப்டம்பர் 26ம் நாள் மணிப்பூரின் வீரத் திருமகன் விழி மூடினார்.

      “பொருளாதார ரீதியாக மணிப்பூர் பின்தங்கிய நாடு…இந்தப் பெரும் இடைவெளி பற்றாக்குறையை இட்டு நிரப்புவதும், நாட்டில் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியைக் கொண்டுவருவதுமே நம் எல்லோருடைய சரியான அணுகுமுறையாக இருக்கும்.”

--ஹிஜாம் ராவத், நிகில் இந்து மணிப்பூர் மகாசபாவின் முதல் மாநாட்டில்

          “தற்போது ஒரு நல்ல தருணம் வாய்த்திருக்கிறது; இந்த நேரத்தில் முக்கியமான கேள்வியாக நம்முன் நிற்பது பரஸ்பரம் கூடுவதும் ஆக்கபூர்வமாகக் கட்டி எழுப்புவதும்தான். நம்முடைய சொந்த தனிநபர் கோப தாபங்கள், பகைமை, இனக்குழு மோதல் மற்றும் தேசிய பகை உணர்ச்சியை மறந்து, நாம் அனைவரும் தேசத்தை முழுமையாக நேசிக்கத் தயாராவோம்.”

--ஹிஜாம் ராவத், நிகில் இந்து மணிப்பூர் மகாசபாவின் 2வது மாநாட்டில்

(மணிப்பூர் சட்டமன்றத்தை நோக்கி ஹிஜாம் ராவத் சிலை, சமீபத்தில் மாநில முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது)

பிறசேர்க்கை - 1

        1891-இல் ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் வரும் சமயத்தில் மணிப்பூர் ஒரு தனியரசரின் ஆளுகைக்கு உட்பட்ட ஒரு சமஸ்தானம் (Princely State) ஆகும். 1946 அக்டோபர் 15 அன்றே மணிப்பூர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. 1947-இல் மணிப்பூர் அரசியல் சட்டம் ஒரு ஜனநாயக அரசை உருவாக்கியது. அது  செயற்பாட்டு அதிகாரமுள்ள அரசரைத் தலைவராகவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அடங்கிய சட்டசபையையும் கொண்டது. 1956 முதல் யூனியன் பிரதேசமாகவே இருந்து வந்த மணிப்பூர், 1972-இல் தனி மாநிலமானது . மணிப்பூர் மாநிலத்தில் சுமார் 25 மில்லியன் பழங்குடி மக்கள் வசித்து வருகிறார்கள். மித்திஸ், பன்கல்ஸ், நாகா, குக்கீஸ் போன்ற பழங்குடி இனமக்கள் முக்கியமானவர்கள்.

பிறசேர்க்கை - 2

           14.4.1944 அன்றுதான் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலான ஆசாத் ஹிந்த் அரசு,  மணிப்பூர் மாநிலத்திலுள்ள மொய்ரங் மற்றும் நாகலாந்து மாநிலத்தின் பல பகுதிகளை ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசின் பிடியிலிருந்து கைப்பற்றியது. இந்திய தேசிய ராணுவப் படையின் வெற்றியை மொய்ரங் தினமாக மணிப்பூர் மாநிலத்தில் கொண்டாடுகிறார்கள்.   ஆங்கிலேயர்கள் சந்தித்த மிகக் கடுமையான போர்களில் இதுதான் மிகக் கடினமான போர்  என பிரிட்டிஷ் அரசாங்கமே ஒப்புக் கொண்டுள்ளது.  மேலும், இதுதான் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இந்தியா சந்தித்த முதல் வெற்றி.

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்


No comments:

Post a Comment