Sunday 2 August 2020

தூர்தர்ஷனை அரசியல் ஆயுதமாக்காதே


நியூஏஜ் (ஆக.2 –8) தலையங்கம்

தூர்தர்ஷன் தொலைக்காட்சியை

அரசியல் ஆயுதமாக்காதே!

        அதிதீவிர வலதுசாரி அரசியலின் முன்னேற்றத்தில் பிரச்சாரம் எப்போதும் பெரும் பங்கு வகிக்கிறது. பாசிசச் சரித்திரத்தில் இதற்கான ஆதாரங்கள் ஆயிரம். பாசிசத்தின் இந்திய முகமான ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் நடக்கும் பாஜக, இந்தத் தில்லாலங்கடிப் பிரச்சாரக் கலையில், குறைந்த காலத்தில் விஞ்சி நிற்கிறது. பிரச்சாரத்தால் கறுப்பு நிறத்தை வெள்ளையாக்கலாம், பொய்யை உண்மையாக மாற்றலாம் என நம்புகிறார்கள். அதற்கேற்பக் கீழ்ப்படிந்து நடந்திட தேசிய தொலைக்காட்சி ஊடகம் தூர்தர்ஷன் சேனல் மீது தொடர்ந்து அழுத்தம் தரப்படுகிறது. கார்ப்பரேட்டுகளால் கட்டுப்படுத்தப்படும் இந்திய அச்சு மற்றும் காட்சி ஊடகங்களை ஏற்கனவே சாதுவாகப் பயிற்சிதந்து வாலைக் குழைக்கும் வளர்ப்பு பிராணியாக, ஆளும் கூட்டத்தின் ஊதுகுழலாக மாற்றிவிட்டனர்.

பல ஆண்டுகளாகத் தூர்தர்ஷன் கைகட்டிப் பணிந்து அதைத்தான் செய்து வருகிறது. தூர்தர்ஷன் மூலம் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரத்தின்போது, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் உரைகளில், ஆளும் கட்சியின் அரசியலுக்குச் சங்கடம் தரும் தொந்தரவாக கருதப்பட்ட    இந்த வரிகளை நீக்க வேண்டும், அதை நீக்க வேண்டும் என்றெல்லாம் தூர்தர்ஷன் கடந்த காலங்களில் அத்துமீறி மூக்கை நுழைந்த உதாரணங்கள் உள்ளன. தூர்தர்ஷனின் அத்தகைய வேண்டுகோள்களை இந்தியக் கம்யூனிட் கட்சி இயல்பாகவே ஏற்க மறுத்து விட்டது. எதிர்வரும் ஆகஸ்ட் 5ம் நாள் அயோத்தியில் (இராமர் கோயில் கட்டுவதற்கான) பூமி பூசை நிகழ்ச்சியை நேரலையாகத் தூர்தர்ஷன் ஒளிபரப்ப வேண்டும் என அரசு விரும்புகிறது. 

யாரோ அல்ல, இந்த நாட்டின் பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்பது முக்கியமானது என்பதை யாரும் மறுக்கவில்லை. அத்தகைய நிகழ்சியை முழுமையாக முறையாகத் தேசியத் தொலைக்காட்சி ஒளிபரப்புவதும் இயல்பானது. ஆனால் அந்நிகழ்வு நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்ற முடிவு தேசத்திற்குத் தரப்படும் ஆரோக்கியமற்ற செய்திக்கான சமிக்ஞையாகும். அத்தகைய முயற்சி அரசியல் தர்மநியாயமாகுமா என்பதை நாடு விவாதித்து வருகிறது.

(1951ல் சோமநாத் ஆலயத்தைப் புதுப்பித்து நடத்தப்பட்ட விழாவில் பாபு இராசேந்திர பிரசாத், குடியரசுத் தலைவர் என்ற பொறுப்பில் கலந்து கொள்ளலாகாது என நேரு கருத்து தெரிவித்ததும்; கோயிலைப் புதுப்பிப்பது நல்ல யோசனை, ஆனால் அதனை அரச செலவில் நடத்தலாகாது என மகாத்மா காந்தி தெரிவித்த கருத்தை சர்தார் வல்லபாய் பட்டேல் ஏற்றதும் இந் நாட்டின் வரலாறு)

சங் பரிவார் கூட்டத்தைப் பொருத்தளவு, அந்தப் பிரகடனம் அவர்கள் வெற்றிக்கானது என நினைக்கலாம்; காரணம், அதற்காகத்தான் பெருமளவில் இவ்வளவு ஆண்டு காலமாகத் தங்கள் சக்தி அனைத்தும் திரட்டிக் கச்சை கட்டினார்கள். வானமே இடிந்து விழுந்தாலும் சரி, எப்படியாவது மீண்டும் அதிலிருந்து மேலும் அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார்கள்.

இப்போதைய கேள்வி, நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்ப அவசர கோலமாக முடிவெடுக்கும் தேசிய தொலைக்காட்சியின் செயல் அறிவார்ந்ததா  என்பதுதான். இது இந்தியாவின் மதசார்பற்ற ஒப்பற்ற அடையாளத்தைப் பாதிக்கும்; ஏற்கனவே காயப்பட்ட மனநிலையில் இருக்கும் இந்திய சிறுபான்மையினர் உணர்வுகளைக் கிளறி மேலும் மோசமாக்கிவிடும். இந்தத் தேசத்தின் உண்மையான இந்துக்களும்கூட, அயோத்தியா இனியும் மத மோதலுக்கும், மக்களிடையே ஒற்றுமையின்மைக்கும் நிலைத்த அடையாளமாக்கப்படும் கருத்தை ஏற்கச் சம்மதிக்க மாட்டார்கள். மத நம்பிக்கை எதுவாயினும், அதனைக் கடந்து, கொழுந்துவிட்டு எரியும் இன்றைய பிரச்சனைகளைத் தேசம் ஒற்றுமையாக எதிர்கொண்டு முன்னேற வேண்டும் என்றே விரும்புகிறார்கள். ஆனால் ஆர்எஸ்எஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் எண்ணம் அதற்கு எதிராக இருக்கிறது.

தீர்ப்பின் நன்மை, தீமைகளை ஒதுக்கித் தள்ளி வைத்துவிட்டு, 2019 நவம்பர் மாதம் 9ம் நாள் உச்சநீதிமன்றம் வழஙகிய (அயோத்தியா வழக்கு) தீர்ப்பு என்ன என்பதைக் குறித்த விழிப்புணர்வு நாட்டில் உள்ளது. ஆளும் கட்சி தங்கள் நீண்டகாலப் பொக்கிஷக் கனவு என்று அதனைக் கொண்டாடுகிறார்கள். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு 2.77 ஏக்கர் நிலத்தை (இராமர்) கோவிலுக்கு வழங்குவது எனத் தெளிவாகக் கூறியது; ஆனால் அரசு ஒரேயடியாகச் சுற்றியுள்ள மொத்த இடம் 67.7 ஏக்கர் நிலத்தையும் ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளைக்கு வழங்கியது. இந்தப் பின்னணியில்தான் நேரடி ஒளிபரப்பு முடிவு பரிசீலிக்கப்பட வேண்டும். 

பிரச்சார் பாரதி சட்டப் பிரிவு 12. 2(a)-ன்படி, தூர்தர்ஷன் கொள்கை நோக்கம், “தேசத்தின் ஒற்றுமையும் ஒருமைப்பாட்டையும்‘ மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தில் பொறிக்கப்பட்ட மாண்புறு விழுமியங்களையும் உயர்த்திப் பிடிப்பது” என வரையறுத்து கட்டளையிடுகிறது. ஆகஸ்ட் 5 ஒரு மத நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்பலாமா என்பதில் தூர்தர்ஷன் தன் விவேகத்தைப் பயன்படுத்துவதில் எந்தக் குழப்பமும் வரத் தேவையில்லை. தேச ஒருமைப்பாட்டுக்கான ஒப்புக்கொள்ளப்பட்ட விதிமுறைகளுக்கு அது முரணாகி விடக்கூடாது என்பதை அவர்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பூமிபூசை விழா நடக்க உள்ள இடத்தில்தான் 400 ஆண்டுகளுக்கும் மேல் பாபர் மசூதி இருந்தது. (ஓர் ஆங்கிலக் கட்டுரையில் இந்த விழாவை ‘ground breaking ceremony’ எனக் குறிப்பிட்டிருந்தது. அதுவும் சரிதான், முன்பு மத வழிபாட்டுத் தலம் breaking, இப்போது பூமி breaking). அந்த இடம்,  ஒருசார் நம்பிக்கை உள்ளவர்கள் வழிபாடு நடத்திய வந்த மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட இடம். அந்த அடாத செயலை உச்சநீதிமன்றம் சட்டவிரோத நடவடிக்கை என்றது. 1992 டிசம்பர் 6ம் நாள் அந்த அதே இடத்தில் நடத்தப்பட்ட வன்முறை வெறியாட்டக் கலகத்தை மதத் தீவிரவாதிகள் மட்டுமே பெருமைப்படுத்தி புகழ்வார்கள். (இதனால்தான் அப்போது உச்சநீதிமன்றம் குறிப்பிடும் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட கும்பலின் மீதான துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் உறவினர்களுக்கு, இந்நிகழ்ச்சிக்கான சிறப்பு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது போலும்). அந்த இடத்தில்தான், இந்து ராஷ்ட்ராவின் ஆக்கிரமிக்கும் யுத்த வெறிக் கூச்சல், கொடூரமாக எதிரொலித்தது. அந்த இடத்தில்தான் இந்திய மதச்சார்பின்மை மிக ஆழமாகக் காயப்படுத்தப்பட்டது. அதே இடத்திலிருந்து நீண்ட நேரமும் நேரடியாகவும்  பூமி பூசை ஒளிபரப்புவது, பீகார் தேர்தலுக்குத் தயாராகி வரும் பாஜக-வின் அரசியல் தேவையாக இருக்கலாம். ஆனால் அரசு தரும் அந்த  முன்னுரிமை, இந்த நாடு மற்றும் அதன் ஏழை மக்களுடைய கவலைகளுக்கு அப்பாற்பட்டது.

இந்த மொத்த நாடும் கரோனா தொற்றின் பாதிப்பில் உழலும்போது, மக்களுடைய நியாயமான முன்னுரிமை, நோய் பரவலை எதிர்த்துப் போராடுவதே. மக்களின் அன்றாட வாழ்வில் உணவுக்கும் தங்க ஓர் இடத்திற்கும் அல்லல் படுவதாய் வாழ்வியல் நிலைமை தொடர்ந்து அபாயத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. நிலைமையைச் சமாளிக்க மக்கள் அனைவரும் ஒன்றுபட்டிருக்க வேண்டிய தருணத்தில், மக்களிடையே பிளவைத் தூண்டுவது இந்திய உளவியல் பண்பாட்டு உணர்விற்கு எதிரானது. தேசிய ஒளிபரப்பு ஊடகத்தின் நேரடி ஒளிபரப்பு, ஒரு குரூரமான பழிவாங்கும் நடவடிக்கை என்றே கோடிக் கணக்கான சிறுபான்மை மக்களால் பார்க்கப்படும். சிறுபான்மை மக்கள் ஏற்கனவே பாதுகாப்பு இல்லாத உணர்வில் துன்பப்பட்டு வருகிறார்கள்; பாதுகாப்பின்மை உணர்வை குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, காஷ்மீரத்தின் சிறப்பு அந்தஸ்து அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து போன்ற அரசின் பல நடவடிக்கைகள் அதிகரித்தே வருகின்றன.

இக்கட்டான இந்த நேரத்தின் பிரதானமான தேவை மக்களின் ஒற்றுமையே என நாட்டின் இடதுசாரி சக்திகள் நம்புகின்றன. அந்த ஒற்றுமையை அதிகப்படுத்தி, மேலும் பலப்படுத்தும் வகையிலேயே அரசின் ஒவ்வொரு செயலும் அமைய வேண்டும். பிரித்தாளும் உத்தி ஆளும் கட்சிக்கு அரசியல் லாபத்தை அள்ளித் தரலாம். ஆனால் நிச்சயம் அந்தச் செயல்கள், பாரம்பரியமிக்க இந்தத் தேசத்தின் மதசார்பற்ற கட்டமைப்பின் இரத்தம் கசியும் புண்ணில் உப்பைத் தேய்ப்பதே ஆகும்.

அயோத்தியா நேரடி ஒளிபரப்பு சொரிந்து கொள்ளும் ஒரு தற்காலிகச் சுகத்தை, பேரானந்தத்தை மதத் தீவிரவாத சங் பரிவார் கூட்டத்திற்கு வழங்கக்கூடும். ஆனால், அரசியல் சட்ட மாண்புகளை  உயர்த்திப் பிடிக்க வேண்டிய கடப்பாடுடைய ஒரு மதசார்பற்ற ஜனநாயக அரசு, அவர்களுடைய கற்பனை சந்தோஷங்கள், ஆசைகளுக்கு ஏற்ப ஆடும் என எதிர்பார்க்கப் படுவதில்லை; அப்படி நடந்து கொள்ளவும் கூடாது. ஆனால் துரதிருஷ்டம், இன்றைய இந்தியாவில் நம் கண்முன்னே நடப்பது அதுதான். 

தெய்வம் பலப்பல சொல்லி-பகைத்

 தீயை வளர்ப்பவர் மூடர்

 பாருக்குள்ளே தெய்வம் ஒன்று

 இதில் பற்பல சண்டைகள் வேண்டாம்!”   --மகாகவி பாரதி

--தமிழில் : நீலகண்டன்,

  என்எப்டிஇ, கடலூர்

 

 


No comments:

Post a Comment