Monday 17 August 2020

புதிய கல்விக் கொள்கை : கற்பனைகளும் கட்டுடைத்தலும்

 

   

புதிய கல்விக் கொள்கை :

கற்பனை கதையாடல்களும், உண்மை நிலைகளும்

--டாக்டர் யுகல் ராயலு

(சிபிஐ கட்சிக் கல்வி இலாக்கா பொறுப்பாளர்)

(நியூஏஜ் ஆக.9 – 15 இதழ்)

        நவீன மனித சமுதாயத்திற்கு உணவு, உடை, உறையுள் போல கல்வியும் மிக முக்கியம் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எல்லா வளர்ந்த சமூகங்களிலும் பொதுவாக நன்கு வளர்ச்சி பெற்ற கல்வி முறை உள்ளது. பெரும்பான்மையான ஐரோப்பிய நாடுகளில் சோஷலிச முறைபோல அனைவருக்குமான சமவாய்ப்பு அரசு கல்வியை, உயர்ந்த தரத்தில், சீரான முறையில் வழங்கும் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளன. நமது நாட்டிலும்கூட எந்தப் பகுதிகளிலெல்லாம் கல்வி சென்று அடைந்ததோ, அங்கெல்லாம் அனைத்து வகைகளிலும் வளர்ச்சி பெற்றிருப்பதை நாம் பார்க்க முடியும்.

        எல்லா வாக்குறுதிகளையும்போலவே, புதிய கல்விக் கொள்கை (என்இபி)யிலும் மோடி அரசு பெரும் ஆரவாரமான கூச்சலை எழுப்பியுள்ளது. புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையைத் தயாரித்த குழுவின் தலைவர் டாக்டர் கஸ்தூரி ரங்கன் (விண்வெளி ஆராய்ச்சி கழகம் இஸ்ரோவின் முன்னாள் தலைவர், விஞ்ஞானி, கல்வியாளர்), பெரும் புகழ்பெற்ற ஒரு பேராளர். ஆனால் வியப்பிற்குரியது, டாக்டர் கஸ்தூரி ரங்கன் வழங்கிய ஆலோசனைகளுக்கும், உண்மையில் அமைச்சரவை முடிவெடுத்த கல்விக் கொள்கைக்குமிடையே உள்ள பாரதூரமான வேறுபாடு இடைவெளிகளாகும்.

       புதிய கல்விக் கொள்கை, பிரம்மாண்டமான உறுதிமொழிகளையும், அடைய வேண்டிய முழுமையான இலக்குகள் குறித்த வர்ணனைகளையும் டாம்பீகமாகக் கொண்டிருக்கிறது. வார்த்தையாடல் ஜாலங்கள், மிகத் திறமையாக இரண்டு விஷயங்களை மூடி மறைக்கிறது; ஒன்று, அனைத்துத் துறைசார்ந்த உயர் கல்விகளையும் தனியார்மயப்படுத்தும் கடுமையான முயற்சி; இரண்டு, பள்ளிக் கல்வியை மிகத் தந்திரமாகக் காவிமயப்படுத்துவது. சொல்லப்படும் கற்பனை எதிர்பார்ப்புயையும், அதனைத் தோலுரிக்கும் உண்மை நிலைகளையும் ஒவ்வொன்றாகப் பட்டியலிடலாம்:

கற்பனை எதிர்பார்ப்பு-1: வேறுபட்ட துறைகளில் பலவிதமான பாடப் பிரிவுகளிலிருந்து மாணவர்கள் பல்துறைகளைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பளிப்பது (Multidisciplinary system)!

உண்மைநிலை : பல்துறை முறை என்றால் அனைத்து மட்டங்களிலும் ஒவ்வொரு பாடத்திற்கும் கற்பிக்கும் ஆசிரியர்கள் தேவை. பள்ளிகள், கல்லூரிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லை என்பதே எதார்த்தம். செலவைக் குறைக்க அரசு, நிரந்தர ஆசிரியர்களுக்கு பதில் ‘மணிநேர ஒப்பந்த அடிப்படை’யில் (கிளாக்-ஹவர் பேசிஸ்) நியமிக்கிறது. அவர்களுக்குக் குறிப்பிட்ட மணிநேரங்கள் பாடவேளையாக ஒதுக்கப்படும். அத்தகைய ஆசிரியர்களுக்கு அந்த மணிக்கு மேல் பொறுப்பு எதுவுமில்லை. குறைந்த ஊதியத்திற்கு, கற்றறிந்த ஒருவர் ஏன் தேவைக்கு அதிகமான மணி நேரம் கல்விக்கூடத்தில் பொழுதைச் செலவிட வேண்டும்? அல்லது மாணவர்களின் முழுமையான ஒருங்கிணைந்த வளர்ச்சி குறித்து ஏன் கவலைப்பட வேண்டும்?

கற்பனை எதிர்பார்ப்பு-2: அரசு பொது நிதியிலிருந்து தற்போதைய மூன்று சதத்திலிருந்து ஆறு சதமாகக் கல்விக்கான முதலீட்டை அதிகரிப்பதே இலக்கு!

உண்மைநிலை : தற்போதைய அரசு மெல்ல மெல்ல உயர் கல்விக்காகச் செலவிடுவதைக் குறைத்து வருகிறது. ஏற்கனவே முதுகலை மட்டத்தில் ஆய்வுக்கான மானியத்தைப் பாதியாக வெட்டிவிட்டார்கள். மேலும் மேலும் கல்வி நிறுவனங்களுக்குச் சுயசார்பு, கல்வி மற்றும் நிதி சார்ந்த தன்னாட்சி, அங்கீகாரத்தை வழங்குகிறார்கள் – அதன் பொருள் கல்வி நிறுவனங்களை மேலும் தனியார்மயப்படுத்துகிறார்கள் என்பதே. இந்த நிலையில், தற்போதைய மூன்று சதவீதமாவது அரசு தொடர்ந்து முதலீடு செய்யுமா என்பதே வியப்பிற்குரியது. (மேலும் கோதாரி கமிஷன் எப்போதோ கூறிய 6சதவீதம் என்பதையே இன்னமும் அரசுகள் செலவிடவில்லை. மாறாக இன்றைய நிலையில் தேவை 10சதவீதத்திற்கும் மேல் என்பதே உண்மை)

கற்பனை எதிர்பார்ப்பு-3: வரலாறு, சமூகவியல், தத்துவம், உளவியல், இலக்கியம், எழுத்தாற்றல், மானுடவியல், புடைப்பூக்கக்கலை முதலிய துறைகள் அடங்கிய லிபரல் ஆர்ட்ஸ் கல்வித்துறை; குடிமையியல், இந்தியப் பாரம்பரியம் மற்றும் மொழிகள் மேம்பாடு வலியுறுத்தப் பெறும்.

உண்மைநிலை: லிபரல் ஆர்ட்ஸ் பட்டம் பெற்றவர்கள் நன்கு விவாதிக்கும் திறனும், பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணும் திறனும் கைவரப் பெறுவார்கள் என்பது இத்துறைக்கான விளக்கம். ஆனால் அரசாங்கம் சுதந்திரமாகச் சிந்திக்கும் உணர்வெழுச்சியை எப்படியாவது கொன்றொழிப்பது எனத் தீர்மானித்துச் செயல்படுகிறது. ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், ஜாமியா மிலியா மற்றும் ஹைத்திராபாத் மத்தியப் பல்கலைக் கழகங்களில் என்ன நடந்தது என்பதை நாடறியும்! இந்தியாவின் மனிதஆற்றல் கல்வித் துறை படிப்புகளின் ஆகச் சிறந்த கோட்டையாகப் பெயர் பெற்று விளங்கி வருவது ஜெஎன்யு. மாணவர்களை, கல்வியாளர்களை எதிரிகள் போல வேட்டையாடும் அரசு, புதியக் கல்விக் கொள்கை அறிக்கையில் கதை சொல்கிறது. அரசு மற்றவர்களுக்கு உபதேசிப்பதைத் தான் முதலில் செயல்படுத்த வேண்டும்.

கற்பனை எதிர்பார்ப்பு-4: முழுமையான வளர்ச்சிக்காக “பரக்” -- Performance Assessment Review and Knowledge-- அமைக்கப்படும்.  (ஒரு தொடரின் ஆங்கில முதல் எழுத்துகள் சேர்ந்த சுருக்கச்சொல் “பரக்”-- இந்தியில் தேர்வு எனப் பொருள்படும்.) ‘செயலாக்க மதிப்பீடு பரிசீலனை மற்றும் அறிவாற்றல்’ என்பது அமைப்பின் பெயர்.

உண்மைநிலை: வெளியிலிருந்து பார்க்க மிகவும் நல்லது போலத் தோற்றமளிக்கிறது. ஆனால் செயல்பாட்டை, அறிவாற்றலை யார் மதிப்பிடப் போகிறார்கள்? அரசு அதிகாரிகளா அல்லது தனியாரா? வெளிப்படைத் தன்மையும் திறந்த மனதுடனான அணுகுமுறையும் இல்லாமல் இந்த முயற்சி வீணில் முடியும்.

கற்பனை எதிர்பார்ப்பு-5: ஆசிரியர்களுக்குத் தேசிய அளவில் தொழில்சார்ந்த தரப்படுத்தல் நிறுவுதல் (நேஷனல் புரஃபஷனல் ஸ்டாண்டர்டு ஃபார் டீச்சர்ஸ் -- (NPST)!      

உண்மைநிலை: இன்றைய நிலையில் நாடுமுழுதும் ஏராளமான ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. எதிர்கால இந்திய இளைஞர்களின் அறிவைச் செதுக்கி உருவாக்கும் முக்கிய பணியில் தற்காலிக மற்றும் (கிளாக்-ஹவர்) கடிகார மணிநேர அடிப்படையிலான ஆசிரியர்களே பணியாற்றி வருகிறார்கள். அனைத்துக் கல்விப் புலனங்களில், அனைத்துக் கல்வி நிலையங்களிலும் தேவையான தொழில்சார்ஆற்றல்மிக்க ஆசிரியர்களை முதலில் நியமியுங்கள்.

கற்பனை எதிர்பார்ப்பு-6: உயர்கல்வியில் ‘கிராஸ் என்ரோல்மென்ட் ரேஷியோ’ (GER) [அதாவது பள்ளிக் கல்வி முடிப்பவர்களில் எவ்வளவு பேர் உயர்கல்வியைத் தொடர்கிறார்கள் என்பதற்கான விகிதம்]. தற்போது நூற்றுக்கு 26.3 பேர் மட்டுமே மேலே தொடர்ந்து படிக்கிறார்கள் என்ற குறைவான மோசமான நிலையை மாற்றி 50 சதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது!

உண்மைநிலை: தற்போதைய நிலவரப்படி, பள்ளி முதல் வகுப்பில் நுழையும் மாணவர்கள் எண்ணிக்கையில் 2சதவீதத்தினர் மட்டுமே இளநிலை பட்டப் படிப்பு மட்டத்தை அடைகிறார்கள். கிராமப்புறங்களில் கல்வி பெறுவதற்கான வாய்ப்பு வசதி முற்றாக இல்லாத நிலை காரணமாக, கிராமப்புறச் சாதாரண ஏழை மாணவர்கள் பள்ளிக் கல்வியைத் தாண்டிச் செல்ல முடிவதில்லை. இந்தச் சூழ்நிலையில் உயர்நிலைக் கல்வியில் அரசின் இலக்கான (GER) விகிதத்தை அதிகரிக்க அடிப்படை மட்டத்தில் அரசு, உண்மையாகக் கூடுதலாகச் செலவிட்டால் மட்டுமே முடியும்.

கற்பனை எதிர்பார்ப்பு-7: பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களை அவ்வவ்போது குறிப்பிட்ட கால இடைவெளியில் நடத்தப்படும் ஆய்வுகளிலிருந்து விடுவிப்பது; அதற்குப் பதில், சுய ஆய்வு மதிப்பீடு செய்து கொள்ளும் பாதையில் அவற்றை வைப்பது

உண்மைநிலை: இவ்வளவு ஆய்வுகள் சோதனைகள் நடத்தும்போதே, தனியார் கல்வி நிறுவனங்கள் தங்கள் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்குக் குறைந்த ஊதியம் மட்டுமே வழங்கி, பெரும் லாபம் கொழிப்பதிலேயே கண்ணாக நிறுவனங்களை நடத்தி வருகின்றன. இந்த ஆய்வுகளும் கட்டுப்பாடுகளும்கூட இல்லை என்றால் அவர்கள் காட்டில் மழைதான், விருப்பம் போல விளையாடலாம். இதனால் மேல்தட்டு கல்வி முறையில், சாதாரண மக்களைப் பற்றி கவலைப்படாத உச்சாணி கோபுரக் கல்வி நிலையங்களில், பணக்காரர்கள் மட்டுமே சேர்ந்து படிக்கவும், மற்றவர்களுக்குத் தரம் குறைந்த கல்வியும் என்ற நிலை ஏற்படும்.

கற்பனை எதிர்பார்ப்பு-7: நிதி விவகாரங்களில் வெளிப்படைத் தன்மை!

உண்மைநிலை: இந்தியாவில், கண்மூடித்தனமாகத் தனியார்மயக் கல்வி பரவியதற்கு முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் தற்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுகளே காரணம். அரசு நிதியால் நடத்தப்பட்ட கல்வி நிறுவனங்களை மறைமுகமாகச் சிறுமைபடுத்தி பழிகூறி, தனியாருக்கான இடத்தை உண்டாக்கித் தந்தார்கள். தனியார் நடத்துபவைக் கல்வி நிலையங்களாக இருந்தாலும், அங்கேயும் மற்ற எல்லா முதலாளிகளையும் போலவே அவர்களின் நோக்கம் கொள்ளை லாபமே தவிர, கல்வி அல்ல. தனியாருக்கு ஆதரவான ஒரு சூழ்நிலையில் யார் பூனைக்கு மணி கட்டுவது என்பது பிரதானமான கேள்வி. தனியார் மயமான கல்வியில் வெளிப்படைத் தன்மை என்பது இன்னொரு அலங்கார வார்த்தை.

சில முக்கியமான பிரச்சனைகள்

1. பள்ளிக் கல்வி :

பள்ளிக் கல்வியைப் பற்றி பேசும்போது, ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி வழங்குவதில் உள்ள அடிப்படை பிரச்சனைகள் அனைத்தையும் ஏதோ நிறைவேற்றிவிட்ட எண்ணத்தில் புதிய கல்விக் கொள்கை ஆவணம் பேசுகிறது. சமூக, பொருளாதார ரீதியாகச் சாதகமற்ற நிலையில் வைக்கப்பட்டுள்ள சமூகக் குழுவினரின் பிரச்சனைகள் குறித்து, அறிக்கை முழுமையாக மௌனம் சாதிக்கிறது; அந்தப் பிரிவு மக்களின் குழந்தைகள் கல்வி பெறுவதில் இன்னும் இடர்பாடுகளைச் சந்திக்கின்றனர். இதுகுறித்து ஏராளமான செய்திகள் வருகின்றன; சமீபத்தில் ஓர் இளம்பெண் தினமும் 24கி.மீ. சைக்கிளில் பயணித்துப் பள்ளிக்குச் செல்கிறார் என ஒரு செய்தி. மறுபுறத்தில் கேரள மாநிலத்தில், ஒரு கிராமத்துப் பெண் போர்டு தேர்வுகள் எழுத, அவருக்காகவே தனியே படகு சேவையை அரசு இயக்கியது என்பதும் செய்திதாளில் பார்க்க முடிகிறது. அதேபோலவே ஜப்பானில் தனியொரு மாணவி பள்ளி செல்ல வேண்டும் என்பதற்காக, அவரது கிராமத்திற்கு ரயிலை ஓட்டுகிறது என்ற வரவேற்கக்கூடிய செய்தியும் வருகிறது.

2. பள்ளி அடிப்படை கட்டமைப்பு :

கிராமங்கள் அல்லது காலனிகளை ஒரு தொகுப்பாக்கி, அங்குள்ள சிறிய பள்ளிகளை ஒன்றாக இணைத்து, விரிந்த பெரிய பள்ளி வளாகமாக மாற்றும் யோசனை சொல்லப்படுகிறது. சிறிய அளவு பள்ளிகள், (சாதாரணமாக ஒதுக்குப்புறமான தொலைவு இடங்களில் அமைந்தவை) ‘இயக்கப்படுவதில் சிக்கல்’ அதிகமாக உள்ளன எனப் புதிய கல்விக் கொள்கை ஆவணம் கூறுகிறது. நிர்வாக வசதிக்காகச் சிறிய பள்ளிகளை மூடிவிடுவது என்ற யோசனை, பெருமளவு கிராமப்புற மாணவர்களை, குறிப்பாக பெண் மாணவிகளை, கல்வி கற்கும் சிஸ்டத்திலிருந்தே வெளியேறச் செய்யும். (இப்படி அருகமை பள்ளிகளை மூடிவிட்டால் எப்படி 100 சதவீதக் கல்வி அறிவு என்ற இலக்கை எட்டுவது?) என்ன ஒரு புத்திசாலித்தனமான யோசனை!

3. பாடத் திட்டச் சட்டகம்:

உண்மைகள் மற்றும் செயல்முறைகளை அப்படியே மனப்பாடம் செய்வதில் தற்போதைய கல்விமுறை முழுமையாகக் கவனம் குவிக்கிறது. எனவே ஒவ்வொரு பாடத்திலும் பாடத்திட்டச் சுமையை, அதன் முக்கியமான மைய பொருண்மை அளவுக்குக் குறைக்கப் பரிந்துரை அளிக்கப் படுகிறது. இதனால் (மைய கருத்தைப் புரிந்து கொண்ட மாணவன் அது குறித்து) மேலும் விவாதிக்கவும் பகுப்பாய்வு அடிப்படையில் முழுமையாகக் கற்பதற்கான போதுமான (காலம் முதலிய) இடம் வழங்க முடியும்” எனப் புதிய கல்வி ஆவணம் குறிப்பிடுகிறது. இது மிகவும் நல்ல, நேர்மறையான கருத்துப் பதிவு. ஆனால் இந்த மாற்றத்தை எப்படி நடைமுறையில் சாதிப்பது? அதற்குக் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், ஆசிரியர் மாணவர் விகிதத்தை 1: 25எனப் பராமரிக்க வேண்டும். மாணவர்கள் மீது அக்கறையோடு சரியான வகையில் கவனம் செலுத்த, நிரந்தர அடிப்படையில் போதுமான ஆசிரியர்களை அனைத்துப் பள்ளிகளிலும் நியமித்தால் மட்டுமே, விவாதம் மற்றும் பகுப்பாய்வு முறையில் முழுமையான கற்றல் என்பதை நோக்கி நடைபோட முடியும்.

4. பள்ளித் தேர்வுகள் சீர்திருத்தம்:

ஆவணம் குறிப்பிடுகிறது, “தற்போதைய பள்ளி போர்டு தேர்வுகள், i) மாணவர்களைச் சில பாடங்களில் மட்டுமே கூடுதல் கவனத்தைச் செலுத்த நிர்பந்திக்கிறது  ii) கற்றலை உருவாக்க முறையில் (பார்மடிவ் மேனர்) சோதிக்கவில்லை iii) மாணவர்கள் மத்தியில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. மாணவர்களின் முழுமையான பள்ளி அனுபவத்தில் அவர்களின் வளர்ச்சியை தொடர்ந்து கண்காணிக்க, மூன்று, ஐந்து, மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ‘ஸ்டேட் சென்சஸ் தேர்வு’ எனப் பொதுத் தேர்வுகள் நடத்த, வரைவுக் கொள்கை முன்மொழிகிறது...”

இது உண்மையில் மிகவும் விந்தையான ஆச்சரியத்திற்குரியது. பத்தாம் வகுப்பு ஒரு பொது போர்டு தேர்வின் ஒற்றை அழுத்தத்தைப் போக்க வரைவறிக்கை தரும் பரிந்துரை, புதிதாக மூன்று போர்டு பொதுத் தேர்வுகள் திணிப்பு! மூன்று, ஐந்து வகுப்புகளில் பொதுத் தேர்வு எனின் அந்த மாணவர்களின் முழு குடும்பமும் மனஅழுத்தத்தில் தள்ளப்படும். கறுப்புப் பணத்தை அழித்து ஒழிக்க, 500 ரூபாய் வங்கி கரன்சிகளை 2000ரூபாய் வங்கி கரன்சிகளால் மாற்றியதைப் போல இதுவும் இருக்கிறது! ஆன்-லைன் வகுப்பு புரியாதபோது, அந்தப் பாடத்திற்குத் தனியே ஆன்-லைன் டியூஷன் ஏற்பாடு செய்வதைப் போல!

இந்த முழு ஆவணமும் பரபரப்பான பிரச்சார மொழியில், பொதுமக்களை ஈர்க்கும் சர்க்கரை தடவிய சொற்களில் தயாரிக்கப்பட்டுள்ளது. போர்டு தேர்வுகள் வேண்டாம் என்ற கட்டத்தை இன்னும் இந்தியா வந்தடையவில்லை. ஒருவகையில் போர்டு பொதுத் தேர்வுகள் என்பது மாணவர்கள் வாழ்வில், ஒரு முக்கியமான திருப்புமுனையாக உள்ளது. தற்போதைய தேவை போர்டு தேர்வுகள் முறையில் சீர்திருத்தம் மட்டுமே.

 5. உயர்கல்வி :

உயர்கல்வியைப் பொருத்த அளவில் தற்போதைய அரசின் நோக்கங்கள் என்ன என்பதை மிகச் சாமர்த்தியமாகக் கல்விக் கொள்கை ஆவணம் மறைத்துவிடுகிறது. மற்ற துறைகளைப் போலவே அரசு உயர்கல்வித் துறையையும் காவிமயப்படுத்த விரும்புகிறது. அதற்காகவே பல்கலைக்கழக மானியக்குழு (UGC), நாக் (NAAC) எனப்படும் ‘தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று குழு’  மற்றும் பிற அமைப்புகளின் அதிகாரப் பங்கு பாத்திரங்களைக் குறைக்கிறது.

6. ஒழுங்காற்று அமைப்பும் தரச்சான்று வழங்கலும்:

ஆவணம் பின்வருமாறு கூறுகிறது, ”யுஜிசி-யின் பணி உயர்கல்வி நிறுவனங்களுக்கு மானியங்களை வழங்குவது மட்டும் என வரையறுக்கப்படுகிறது. தற்போது யுஜிசியின் கீழுள்ள நாக் அமைப்பு இனி, உயர்மட்ட தரச்சான்று வழங்குநராக, பலவகை கல்வி நிறுவனங்களுக்கு அதிகாரபூர்வ சான்றளித்தல் என்ற புதிய செயல்பாட்டை மட்டும் மேற்கொள்ளும்; மேலும் அது 5 முதல் 7 வருடங்களுக்கு ஒரு முறை உயர் கல்வி நிறுவனங்களை மதிப்பீடு செய்யும்…”  

இது உயர்கல்வியைக் கொல்லைப்புற வழியாகத் தனியார் மயப்படுத்துவதைத் தவிர வேறில்லை. முதலில் நாக் வேறுபட்ட நிறுவனங்களுக்கு லைசென் வழங்குமாம், பின்னர் அவை கல்வி நிறுவனங்களை மதிப்பிடுமாம். இதில் முதல் அம்சம், வரலாற்று ரீதியாகச் சோதனைகளை வென்று நிரூபிக்கப்பட்ட யுஜிசி அமைப்பு கலைக்கப்படுகிறது. முக்கியமான காரணம் யுஜிசியின் பல உறுப்பினர்கள் காவிப்படை அதிகாரத்திற்குப் பணிபவர்களாக இல்லை; எனவே, யுஜிசி- அமைப்பையே கலைத்து விடுகிறார்கள். காவிப்படைக்கு நெருக்கமான நிறுவனங்களை முதலில் நாக் தேர்ந்தெடுத்து லைசென்ஸ் வழங்க, பின்னர் அவர்கள் பிற நிறுவனங்களை மதிப்பீடு செய்வார்கள். இதன் மூலம் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகம், மற்றும் ஜாமியா மிலியா போன்ற கல்வி நிறுவனங்களை மெல்ல இழுத்து மூடிவிடுவது அரசுக்குச் சுலபமாகிவிடும்.

7. புதிய உயர் கல்வி நிறுவனங்களை நிறுவுதல்

என்இபி ஆவணம் கூறுகிறது,”தற்போது உயர் கல்வி நிறுவனங்களைப் பாராளுமன்றம் அல்லது சட்ட மன்றங்கள் ஏற்படுத்துகின்றன. அதற்குப் பதிலாக இந்தக் கொள்கை, உயர்கல்வி நிறுவனங்களை அதற்கென்ற அமைப்பின் மூலம் ஏற்படுத்தலாம் என முன்மொழிகிறது. (அதாவது ‘தொழில் கல்விக்கான அகில இந்திய கவுன்சில்(AICTE) மற்றும் யுஜிசி இரண்டையும் ஒன்றிணைத்து ‘தேசிய உயர்கல்வி ஒழுங்காற்று ஆணையம்’ (NHERA) ஒன்றை ஏற்படுத்துவது. அந்த) NHERA அமைப்பின் கீழ் உயர்கல்வி நிறுவன சாசனம் (Charter) மூலம் இத்தகைய கல்வி நிறுவனங்களை அமைப்பது. (உதாரணமாக சரித்திரத்தில் மாக்ன காட்டா சாசனம், உடன்படிக்கை எனப் படித்திருப்போம்; சார்ட்ட என்பது இலத்தீன் மொழியில் காகிதம் எனப் பொருள்படும். எனவே சட்டரீதியான ஆவணம்.) அதன்படி சில குறிப்பிட்ட வரையறைகளின் பேரில் வெளிப்படையான மதிப்பீடுகள் அடிப்படையில் இந்த சாசனம் வழங்கப்படும். புதிதாக அமைக்கப்படும் எல்லா உயர்கல்வி நிறுவனங்களும், NHERAஒழுங்காற்று அதிகார அமைப்பு வழங்கும் தகுதிஅங்கீகாரச் சான்றிதழைக் உயர்கல்வி நிறுவனம் தொடங்கப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்குள் நிச்சயம் பெற வேண்டியது கட்டாயம்.

முக்கியமான கேள்வி:மிக முக்கியமான கல்வி விஷயத்தில் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களின் இறையாண்மைமிக்க உச்சபட்ச மேலாண்மை அதிகாரத்தை ஏன் கீழிறக்கி அழிக்க வேண்டும்?”. ஒழுங்காற்று NHERA அமைப்பு பாராளுமன்றம் அல்லது சட்டமன்றங்களின் அதிகாரத்திற்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும். தற்போதைய முறையில் கல்வி சம்பந்தமான அனைத்தும் மக்கள் பிரதிநிதிகளால் கட்டாயம் விவாதிக்கப்படும் பிரச்சனைகளாக உள்ளது. இதுவே மிகவும் ஜனநாயகபூர்வமானது. தற்போதைய அரசு இந்த ஜனநாயகக் கோட்பாட்டை இல்லாது ஆக்க, ஒழித்துக் கட்டிவிட முற்படுகிறது.

8. உயர்கல்வி நிறுவனங்களின் மறுசீரமைப்பு :

வேறுபடுத்தி வெளிப்படையாக அறியமுடியாதபடி மிக நுட்பமாக, தன்னாட்சி பற்றி இந்த ஆவணம், “…இத்தகைய எல்லா நிறுவனங்களும் மெல்ல மெல்ல கல்விப் புலம், நிர்வாகம் மற்றும் நிதி என அனைத்திலும், முழுமையான தன்னாட்சியை நோக்கி நகரும்” எனக் கூறுகிறது.

மீண்டும் தனியார்மயம் நோக்கி ஓரடி முன்னே! கல்வி நிறுவனங்கள் தங்கள் செலவு மற்றும் ஊதியங்களைக் கொடுக்கும் அளவு சம்பாதித்துவிட முடியாது என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும். அரசு அல்லது மாணவர்களின் பெற்றோர் செலவின் சுமைகளைத் தாங்க வேண்டும். நிதி தன்னாட்சி என்றால், உனது சொந்த வாழ்க்கை தேவைக்கு நீயே சம்பாதித்துக் கொள்… என்பதே பொருள். அவ்வாறெனில், இந்தக் கல்வி நிறுவனங்கள் ஏதோ ஒரு பெயரில் தங்கள் கட்டணங்களை உயர்த்தக் கட்டாயப்படுத்தப்படும். இது தனியார்மயமின்றி வேறில்லை. இதன் மற்றொரு விளைவு, தொலைதூரங்களில், மலைவாழ் பிரதேசங்கள் மற்றும் கிராமப்புறங்களில் அமைந்துள்ள சாதாரண கல்வி நிறுவனங்களுக்கு அடிக்கப்படும் சாவு மணி இது– ஏனெனில் இந்தப் பகுதிகளைச் சார்ந்த பெற்றோருக்குக் கட்டணம் செலுத்தும் சக்தி மிகச் சொற்பமானது.

9. தொழில்பயிற்சி கல்வி :

புதிய கல்விக் கொள்கை இந்தியாவின் தொழில்பயிற்சி (உடனான) கல்வியை அமெரிக்கா மற்றும் ஜெர்மன் போன்ற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பேசுகிறது.  அது குறிப்பிடுகிறது, “…19 முதல் 24 வயதுடைய உழைப்புச்சக்தி நபர்களில் 5 சதவீதத்திற்கும் குறைவானவர்களே இந்தியாவில் தொழில்பயிற்சி கல்வியைப் பெறுகிறார்கள்; மாறாக, இதுவே அமெரிக்காவில் 52%, ஜெர்மனியில் 75% மற்றும் தென்கொரியாவில் 96% என்ற அளவில் உள்ளது…” ஆனால் இந்தியாவைவிட இந்த நாடுகளில் கல்விக்காக மிக அதிகமாகச் செலவழிக்கிறார்கள் என்பதை ஆவணத்தின் பிதாமகர்கள் வசதியாக மறந்து விட்டார்கள்.

அது மேலும் கூறுகிறது, “…அனைத்துப் பள்ளி மாணவர்களும் ஏதாவது ஒரு தொழிலில் பயிற்சிக் கல்வியை கிரேடு 9 முதல் 12க்குள் கட்டாயம் பெற வேண்டும். தற்போதைய ’தேசிய திறன் தகுதி சட்டக’த்தின் கீழ் திறன்சார் மட்டங்களோடு ஒத்திசைவாகப் பள்ளிக் கல்வித் திட்டச் செயல்பாடுகளை அளித்திடப் பொருத்தமான வகையில், முன்மொழியப்பட்ட பள்ளி வளாகங்கள் தங்கள், சிறப்பு நிபுணத்துவத் திறனை வளர்த்துக் கட்டிஎழுப்ப வேண்டும். ..”

மீண்டும் வானளாவிய கோட்டை கட்டும் பேச்சுகள்! (ஒருவகையில் பழைய குலகல்வி திட்டத்தின் புது வடிவம் இது என்பது ஒருபக்கம் இருக்க) தொழில் பயிற்சிக் கல்விக்கு “அந்தத் தொழிலில் கைத்திறன்” உடைய பயிற்சியாளர்கள் தேவை. மேலும் அதற்கு ஆதரவாக நல்ல செய்முறை ஆய்வங்கள், சோதனைக்கூடங்கள் அல்லது தொழில் பட்டறைகள் துணைநிற்க வேண்டும். திறனைப் போதிக்க தொழில் சார்ந்த நிபுணர்கள் பணியமர்த்தப்பட வேண்டும். தற்போதைய அனுபவம் யாதெனில், கம்யூட்டர் லேப் இல்லாமலேயே கம்யூட்டர் கல்வி கற்றுத் தருவதைப் போல, தொழில்பயிற்சி கல்வி, எந்த செயல்முறை பயிற்சியும் இன்றிக் காகிதத்தில் வழங்கப்படுகின்றன. நிதி ஆதரவை, அரசு உதவியை அதிகரிக்காமல் தொழில் கல்வி குறித்த எந்தப் பேச்சும் வெறும் வெற்று ஆரவாரம் மட்டுமே.

10.         கல்வியும் இந்திய மொழிகளும் :

மொழிகளைப் பொருத்து இந்த ஆவணம், தீயைத் தொடுவது போலப் பல மக்களின் உணர்வோடு விளையாடி தவறான இடத்தில் உரசி விட்டது. அதன் முன் வைப்புகள் வெளிப்படுத்தியதைவிட மறைத்ததே அதிகம்.

ஆவணம் கூறுகிறது, “…பயிற்று மொழி வீட்டு மொழியாகவோ / தாய்மொழியாகவோ / உள்ளூர் மொழியாகவோ இருப்பது -- 5வது கிரேடு வரை, அதுவே 8வது கிரேடு வரை என்றால்-- விரும்பத்தக்கது” என்று சொல்லிவிட்டு, இறுதி வால் பகுதியில் ”எங்கெல்லாம் சாத்தியமாகுமோ அங்கெல்லாம்” என ஒரு ’இக்கு’ (அபாய முடிச்சை) வைத்திருக்கிறது.

நோக்கம் மிக நல்லதாகத்தான் தோன்றுகிறது –துவக்கக் கல்வி தாய்மொழியில் (வாழ்விட மொழியில்) என்பது. ஆனால் கேள்வி, இது இந்தியா முழுவதும் ஒரே மாதிரியாகவா? என்பதுதான். ஆங்கிலவழி (தனியார்) பள்ளிகள் ஒரேயடியாக உடனே பயிற்றுமொழியைத் தாய் மொழியாகத் துவக்க வகுப்புகளுக்கு மாற்றி விடுமா?

வல்லுநர்களின் கவலை, முடிவு எடுக்கப்பட்ட உடன் அனைத்து அரசு பள்ளிகளும் துவக்க வகுப்புகளில் தாய்மொழிவழி கற்பித்தலுக்கு மாறி விடும்; ஆனால், ஆங்கிலவழிப் பள்ளிகளுக்கு விருப்பத்தேர்வு (option) வாய்ப்பளிக்கப்பட்டால், எந்தத் தனியார் பள்ளியும் தாய்மொழிவழி பயிற்சிக்கு மாறாமல், தொடர்ந்து ஆங்கிலவழிக் கல்வி போதனையையே மேற்கொள்ளும். இதனாலும் அரசுப் பள்ளிகளில் சேர்க்கை குறையும், ஏற்கனவே அதுதான் நடந்து வருகிறது. இப்படியே குறைந்து கொண்டு போனால், ஒரு கட்டத்தில் அரசு அனைத்துப் பள்ளிகளையும் மூடிவிடும் – கல்வி என்பது தனியார் ஏகபோக வேட்டைகாடாகும். சிலவருடங்களிலேயே பள்ளிக் கல்வியில் முழுமையான தனியார் மயம் கோலோச்சும்!

கல்வி ஆவணத்தின் இன்னொரு விளையாட்டு, சமஸ்கிருத மொழிக்கு அளிக்கப்பட்டுள்ள (சிறப்பு) இடம். பள்ளிக் கல்வியில் இரண்டு இந்திய மொழிகள் என்ற மும்மொழிக் கொள்கையில் மட்டுமல்லாமல், உயர் கல்வியின் எல்லா மட்டங்களிலும் இந்திய செவ்வியல் மொழிகளோடு, சமஸ்கிருதம் படிப்பதற்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்பு. (தாய்மொழிவழி கல்வி விரும்பத்தக்கது எனச் சொல்லிய இரண்டு பத்திகளை அடுத்து, எப்படி எல்லாம் சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என விரிவாகப் பட்டியலிடுவதிலிருந்தே அரசின் நோக்கம் வெளிப்பட்டு விடுகிறது)

(தெலுங்கில் ஒரு பழமொழி உண்டு, ‘பேரு பெத்த பேரு தாகடானிகி நீலு லேது’ (பேர் என்னவோ பெரிய பேர் தான், குடிக்கத்தான் தண்ணீர் இல்லை); அப்படி நரேந்திரமோடி அரசின் மற்ற அனைத்து பிரச்சனைகளில் போலவும், கல்வியைப் பொருத்த அளவிலும், பக்கம் பக்கமாக வானளாவப் பேச்சு இருக்கிறதே தவிர, உள்ளடக்கம் – செயல்பாடு என்று வரும்போது தேய்ந்து சிறுத்துப் போகிறது. சொல்லப்பட்ட பெரும்பான்மையான மாறுதல்கள் ஒப்பனை செய்து அழகுபடுத்தப்பட்டதாக, மேலோட்டமானதாக உள்ளன. ஆனால் அழுத்தம் என்னவோ மேலும் மேலும் தனியார்மயம் என்பதே.  உயர்ந்த தரம் மற்றும் சுதந்திரமான கல்வி வழங்குவது என ஆவணத்தின் மேற்பூச்சு ஒப்பனை மொழி இனிக்கப் பேசுகிறது. ஆனால் எதார்த்தத்தில், மற்ற எல்லா அமைப்புகளையும் போலவே, கல்வி குறித்த சகல பரிமாணங்களையும் ஒற்றை மையத்திலிருந்து, ஒரு சிலரின் கட்டுப்பாட்டில் வைக்கவே அரசு விரும்புகிறது. வேறுபட்ட பண்பாடுகளோடு விரிந்து பரந்த இந்தியா போன்ற தேசத்தில் ஜனநாயகத்தின் உள்ளூர் அமைப்புகள் மற்றும் மாநில அரசுகளின் பங்கேற்பு, அவற்றையும் ஈடுபடுத்தல் என்பது பற்றி எந்தக் குறிப்பும் ஆவணத்தில் இடம்பெறவில்லை.

மேலே குறிப்பிட்டதுபோல, துவக்கக் கல்வியில் தாய்மொழி வழி கற்பித்தல் நல்ல நோக்கமுடையது. இந்த யோசனை சாத்தியப்பட வேண்டுமானால் அருகமைப் பள்ளிகள் என்ற கோட்பாடு மேலும் பலப்படுத்தப்பட வேண்டும். ஒரு பகுதியில் உள்ள எல்லா குழந்தைகளும் தங்களுக்கு அருகே அமைந்த பள்ளிகளுக்குச் செல்வார்கள். அமைச்சரின் குழந்தையும், அமைச்சர் கார் டிரைவரின் குழந்தையும் ஒரே பள்ளிக்குச் செல்லுமானால், கல்வியின் தரம் உயர்வது மட்டுமல்ல, சமத்துவம் என்ற கருத்தும் ஜனநாயக நாட்டில் அமலாகவும் செய்யும்.

எந்த நாட்டில் கல்வி கடைச் சரக்காக, வர்த்தக விலைபொருளாகிறதோ, அந்த நாடு தொடர்ந்து பின்தங்கிய நாடாகவே இருக்கும்; அதன் பெரும்பான்மை இளைஞர்கள், வளர்ச்சி, முன்னேற்றத்திற்கான முக்கியமான கருவியான கல்வி மறுக்கப்பட்டவர்களாகவே இருப்பர்.

என்றைக்குக் கல்வி, அனைவருக்கும் சமமானதாக, எல்லோரும் பெறுவதற்குக் கட்டுப்படியாகும் வகையில் சாத்தியப்படுவதாக அமைகிறதோ, அப்போதுதான் இந்த தேசம் உண்மையில் வலிமையானதாக இருக்கும்!  

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ கடலூர்

 

'அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,

ஆலயம் பதினாயிரம் நாட்டல்

அன்னயாவினும் புண்ணியம் கோடி 

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்!

வீடுதோறும் கலையின் விளக்கம்

வீதிதோறும் இரண்டொரு பள்ளி;

தேடு கல்வியிலாத ஒருஊரைத் 

தீயினுக்கு இரையாக மடுத்தல்!

பட்டங்கள் ஆள்வதுஞ் சட்டங்கள் செய்வதும்

பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்;

பயிற்றிப் பல கல்வி தந்து- இந்தப் பாரை உயர்த்திட ...

தேர்ந்த கல்வி ஞானம் எய்தி வாழ்வம் இந்த நாட்டிலே!

                                              --மகாகவி பாரதியார்

 

 

 


No comments:

Post a Comment