Tuesday 11 August 2020

வரலாற்றுத் தலைவர்கள் வரிசை 8 : தோழர் கே எல் மகேந்திரா

 

நமது பெரும் தலைவர்கள் வாழ்விலிருந்து :

சில சித்திரத் சிதறல்கள் -8


கே எல் மகேந்திரா : உழைக்கும் வர்க்கத்தின் 

உண்மைத் தலைவர்

--அனில் ரஜீம்வாலே

(நியூஏஜ் ஆக.2 – 8)

பாட்டாளி வர்க்கத்தின் நாடறிந்த கம்யூனிஸ்ட் தலைவர் கே எல் மகேந்திரா. நீடித்த பல ஆண்டு காலம்  ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளராகப் பணியாற்றியவர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் மத்தியக் குழு உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்.

ஹைத்திராபாத்தில் நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் 1922 நவம்பர் 25ம் நாள் பிறந்தார். பொருளாதார ரீதியில் செழிப்பான குடும்பம் அல்ல. அவருக்கு இரண்டு வயதே ஆன நிலையில் தந்தையை இழந்தார். நாற்பதே ரூபாய் பென்ஷன் தொகையோடு அவருடைய தாயார், நான்கு சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரியை, எவ்வளவோ இன்னல்களுக்கு மத்தியில் பெரும் பொறுமையோடும் அன்போடும் வளர்த்து ஆளாக்கினார்.

கல்வி

ஆறாம் வகுப்பில் மற்ற அனைவரும் வேத சாஸ்திர இறையியலைப் படித்த போது மகேந்திரா அறநெறிகளைப் படித்தார். அவருடைய ஆசிரியர் உப்பு சத்தியாகிரகம் போன்ற நிகழ்வுகளையும் பகத்சிங் போன்றவர்கள் சம்பந்தப்பட்ட கதைகளையும் கூறுவது வழக்கம். இளம் மகேந்திராவை இது மிகவும் ஈர்த்தது.

மெட்ரிகுலேஷன் முடித்த பிறகு ஹைத்திராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். ஹைத்திராபாத் ஆரியசமாஜம் 1936ல் நடத்திய சத்தியாகிரகம் அவரது கவனத்தை ஈர்த்தது. காந்திஜி கருத்துகளின் செல்வாக்கு அவரது அரிஜன் வாரப் பத்திரிக்கைக்குச் சந்தா கட்டச் செய்தது. ஜவகர்லால் நேரு மீது மயக்கம் கொள்ளும் அளவு ஈடுபாடும், காங்கிரஸ் தலைவராகச் சுபாஷ் சந்திரபோஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதில் மகிழ்ச்சியும் கொண்டார். 1938ல் ஹைத்திராபாத் நிஜாமின் ஆட்சி உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் ‘வந்தே மாதரம்’ பாடலைத் தடை செய்திருந்தது. மகேந்திராவும் மற்ற மாணவர்களும் விடுதிகளிலிருந்து விரட்டப்பட அதனை எதிர்த்து மாணவர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். முதல் ஆண்டிலேயே மாணவர்கள் போராட்டத்தில் மகேந்திரா கலந்து கொண்டார். காதி உடைகளையே அணிந்தார். மத்திய மாகாண அரசின் முயற்சியால் வேலைநிறுத்தம் செய்த மாணவர்களுக்கு நாக்பூர் மற்றும் ஜபல்பூர் கல்லூரிகளில் சேர ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால் மகேந்திராவின் சகோதரர் எப்படியோ பணம் புரட்டி அவரைச் சாந்திநிகேதனுக்கு அனுப்பி வைக்க, அவர் இன்டர்மீடியட் கல்வியை முடிந்தார். அங்கே அவருக்கு அனைத்திந்திய மாணவர் பேரவை (ஏஐஎஸ்எஃப்) அமைப்புடன் தொடர்பு ஏற்பட, சாந்திநிகேதனிலிருந்தும் வெளியேற அவருக்கு உத்தரவிடப்பட்டது!

சாந்திநிகேதனில் நேருவின் சுயசரிதை, சோஷலிசம் குறித்து ஜான் ஸ்ட்ரச்சே எழுதியது, ட்ராஸ்கியின் ருஷ்ய புரட்சி சரித்திரம் முதலிய நூல்களைப் படித்தார். அது தவிர அங்கே, ப்ருதிவி சிங் ஆஸாத், ஹரிந்திரநாத் சட்டோபாத்யாயா, சரோஜினி நாயுடு போன்ற தலைவர்களின் உரைகளைக் கேட்கும் வாய்ப்பும் கிடைத்தது. ட்ராஸ்கியவாதிகளான பன்னா லால் தாஸ்குப்தா மற்றும் சோமேந்திரநாத் தாகூர் போன்றவர்களின் தொடர்பு கிடைத்தாலும், விடுதலை இயக்கம் பற்றிய அவர்களது குறுகிய அணுகுமுறை அவருக்குப் பிடிக்கவில்லை. தடை செய்யப்பட்டிருந்த லெனின் புத்தகங்களைக்கூட படித்ததுடன், ‘தேசிய முன்னணி’ (நேஷனல் பிரண்ட்) என்னும் சிபிஐ கட்சி இதழ்களையும் படித்தார். மெல்ல கம்யூனிஸ்ட் தத்துவத்தைத் தழுவி மாறத் தொடங்கினார். பூஜா விடுமுறையின்போது சில நண்பர்களுடன் வடகிழக்கு இந்தியப் பகுதிகளைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டார். சிட்டகாங்கில் கல்பனா தத் மற்றும் புகழ்பெற்ற காங்கிரஸ்காரர்களைச் சந்தித்தார். மகேந்திரா மாணவர்கள் சங்கப் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ராம்கர்க் காங்கிரஸ் மாநாட்டுக் கூட்டத்தொடரில் கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பார்வையாளர் டிக்கெட் வாங்கிக் கொண்டு பெற்றார் மகேந்திரா !

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில்

1939ல் இரண்டாவது உலக யுத்தம் வெடித்தது. மகேந்திரா உட்பட பல மாணவர்களும் ஹிட்லர், பிரிட்டனைத் தோற்கடித்துவிட வேண்டுமென விரும்பினர். ஆனால் பாசிசத்தை ஆழமாகப் புரிந்து கொள்ள, அவர் ரஜினி பால்மே தத் போன்றோரின் புத்தகங்களைப் படிக்க வேண்டியிருந்தது. மாணவர்கள் நடித்த நாடகங்களில் ஜப்பான் ஆக்ரமிப்புக்கு எதிராக சீன மக்கள் போராடுவதைக் காட்சிப்படுத்தி அரங்கேற்றினர். அப்போது முறைப்படி இல்லா விட்டாலும், அவரும் மற்ற மூன்று நண்பர்களுமாகக் கம்யூனிஸ்ட்டாக மாறி இருந்தனர்.

உறுப்பினர் படிவங்களை அனுப்பி வைக்கும்படி ஏஐஎஸ்எஃப் வங்காள அலுவலகத்திற்கு அவரும் சில நண்பர்களும் கடிதம் எழுதினர். இரவீந்தரநாத் தாகூர் இறந்த 20 நாட்களுக்குப் பிறகு கல்லூரியின் முதல்வர் ஏ.கே சந்தா அவர்களைக் கல்லூரியை விட்டு வெளியேறச் சொன்னார். அப்போது 1941 நவம்பரில் மகேந்திரா மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தார். நான்கு நண்பர்களும் நேரே ரயிலில் பர்த்வான் கல்லூரி முதல்வரிடம் சென்று தாங்கள் ஏஐஎஸ்எஃப் அமைப்பைச் சேர்ந்தவர்கள், தங்களுக்குக் கல்லூரிடம் இடம் வழங்க வேண்டும் என்று கேட்டனர்! கல்லூரி முதல்வரும் மறுக்கவில்லை. இங்கே அவர்கள் மாணவர் பெருமன்றத்துடனும் கம்யூனிஸ்ட்களுடனும் தொடர்பு கொண்டனர். முதலில் இரண்டு மாதங்களுக்குப் பரிட்சார்த்த உறுப்பினர்களாக அனுமதித்த பிறகு, கட்சியில் முழு அந்தஸ்துள்ள உறுப்பினர் ஆனார்கள்.

அந்த நேரத்தில் பினாய் சௌத்திரி கட்சியின் மாவட்டச் செயலாளராக இருந்தார். மகேந்திரா மற்றும் நண்பர்களுக்கு இந்தி மொழி நன்கு தெரியுமாதலால், கட்சிச் செயலாளர் அவர்களை மேற்குவங்கத்தின் அசன்சோல் பகுதியில் தொழிலாளர்கள் மத்தியில் பணியாற்றக் கூறினார். மாணவராகப் படித்துக் கொண்டிருக்கும்போதே மகேந்திராவும், நிலக்கரி, இரும்பு, ஸ்டீல் மற்றும் பிற ஆலைத் தொழிலார்கள் மத்தியில் 1943 –46 ஆண்டுகளில் பணியாற்றினார். அந்தத் தொழிற்சாலை முதலாளிகள் பிரட்டீஷ்காரர்கள். வங்கத்தின் கடும் பஞ்சத்தின்போதும் அவர் பணியாற்றியிருக்கிறார்.

பிரிட்டீஷ்காரர்கள் கம்யூனிஸ்ட்களைப் பணியாற்றவே விடுவதில்லை எனப் பினாய் சௌத்திரியும் ஹரே கிருஷ்ணா கோனாரும்  மகேந்திராவிடம் கூறினார்கள். மகேந்திரா நேராகத் துணை மண்டல அதிகாரியிடம் சென்று தாங்கள் சிபிஐ கட்சியிலிருந்து வந்திருப்பதாகவும்  (பஞ்சத்தின் காரணமாக) ’உணவுக் குழு’ ஒன்றை அமைக்க இருப்பதாகவும் கூறினார்கள். தொழிலாளர்களுக்காக அப்படி எதையும் செய்ய முடியாது என்ற அதிகாரியிடம், ‘அது பற்றித் தனக்குக் கவலை ஏதுமில்லை’ என்று பதிலளித்தார்!

மகேந்திராவும் நண்பர்கள் குழுவும் பகல் நேரத்தில் இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் வேலை செய்வார்கள், இரவில் இரகசியமாக வயல்களின் ஊடே எட்டு கிலோமீட்டர் பயணித்துப் பர்ன்பூர் ஸ்டீல் நகரத்திற்குத் தொழிலாளர்களைச் சந்திக்கச் சென்று விடுவார்கள்! அங்கே கம்யூனிஸ்ட் குழு ஒன்றை அமைத்தனர். மகேந்திராவுக்கு பி.ஏ. இளங்கலைப் படிப்பை நிறைவு செய்ய ஒரு மாதகாலம் அவகாசம் தரப்பட, அவரும் வெற்றிகரமாக அதனை நிறைவேற்றினார்.

 ஆஸாத் ஹிந்த் ஃபோஜ்’ (இந்திய விடுதலை இராணுவம்) (படத்தில் அதன் சின்னம்) அதிகாரிகளை விடுதலை செய்யுமாறு கோரிகையை முன்வைத்து முதன் முறையாக 5000 தொழிலாளர்களுடன் பிரம்மாண்டமான பேரணியை நடத்தி, ஒரு வேலைநிறுத்தமும் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியும் முஸ்லீம் லீக்கும்கூட அதனை ஆதரித்தனர்.

விரைவிலேயே மகேந்திரா, அசன்சோல் நிலக்கரி மற்றும் இரும்பு ஸ்டீல் கனிமவளச் சுரங்கத் தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நிலக்கரி தொழிலாளர்கள் சங்கத்தின் செயலாளரும் ஆனார். 

மீண்டும் ஹைத்திரபாத், ஏஐடியுசி—யில்

பத்தாயிரம் தொழிலாளர்களின் பிரதிநிதியாக மகேந்திரா, 1945 மெட்ராசில் நடந்த ஏஐடியுசி மாநாட்டில் கலந்து கொண்டார். தொழிலாளர்கள் நிறைந்த பர்ன்பூர் தொகுதியிலிருந்து இந்திரஜித் குப்தா 1946 தேர்தலில் போட்டியிட்டபோது மகேந்திரா அவருக்காகத் தீவிரமாகப் பணியாற்றினார். அப்போது அவர் வெற்றிபெறவில்லை.

நிஜாமிற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க மகேந்திராவை விடுவிக்கும்படி மக்தூம் மொகீதீன், மெட்ராசில் இருந்தபோது ரனீன் சென் அவர்களிடம் கேட்டுக்கொண்டார். பி சி ஜோஷியும் வங்காளக் கட்சிக்கிளைக்குக் கடிதம் எழுத, மகேந்திரா 1946 ஜூலையில் மீண்டும் ஹைத்திராபாத் வந்தார். அப்போது ஹைத்திராபாத் அனைத்து தொழிற்சங்கங்களின் காங்கிரசின் தலைவராக  மக்தூம் மொகீதீனும், பொதுச் செயலாளராக டாக்டர் ராஜ் பகதூர் கவுர் ( படம் )

(தெலுங்கானாஆயுதப் போராட்ட வீரர், இரண்டு முறை பாராளுமன்ற உறுப்பினர், 94வது வயதில் 2011, அக்டோபர் 8ம் நாள் மறைந்தார்) இருந்தனர். அவர்களோடு மகேந்திரா ஹைத்திராபாத் தொழிற்சங்க இயக்கத்தில் இணைந்து அவரும் செயலாளர்களில் ஒருவரானார்.

விரைவில் ஹைத்திராபாத் நகர கட்சிக் குழுவின் செயலாளரானார். 1946 அக்டோபர்13ல் ஆந்திர மகாசபா மற்றும் ஏஐடியுசி சட்டவிரோத அமைப்புகள் என்று அறிவிக்கப்பட்டது. ராஜ் பகதூர் கவுர் மற்றும் ஜாவட் ரிஜ்வி கைது செய்யப்பட்டனர். மகேந்திரா அவர்களைச் சிறையிலருந்து மீட்பது என்று திட்டமிட்டு, உஸ்மானியா பொதுமருத்துவமனைக்கு அவர்கள் கொண்டுவரப்படும்போது, வெற்றிகரமாக அதனை நிறைவேற்றவும் செய்தார்.

1947ல் பிரமீளா தாய் எனும் பெண்மணியை மணந்தார்.

தெலுங்கானா ஆயுதப் போராட்டத்தில் பங்கு

1946 –48 தெலுங்கானா ஆயுதப் போராட்டம் நிகழ்ந்தபோது கேஎல் மகேந்திரா தொழிற்சங்கப்பணிகளிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஆயுதப் போராட்டத்தில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களைச் சேகரிப்பது என்ற ‘தொழில்நுட்ப’ப் பணி அவருடையது. தலைவர்களை விடுவிக்கத் திட்டமிட்டு, முதலில் அம்ரித்லால் சுக்லா, எஸ்விகே பிரஸாத்;  பிறகு நல்லா நரசிம்மலு மற்றும் சீனுவாச ரெட்டியை விடுவித்தார். பின்னிருவரும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்கள் ஆவார்கள். அவர்கள் உயர்நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டபோது சிறை வாசல் கதவைத் துப்பாக்கி ஏந்திய 18 காவலர்கள் காவலுக்கு இருந்தபோதும் அவர்கள் மயிர்க்கூச்செறியும் பரபரப்பான நிகழ்வாகப் பாத் ரூம் மேற்கூரை ஒட்டிய சன்னல்வழியே தப்பித்து விட்டார்கள். இத்தகைய செயல்களைத் திட்டமிடுவதில் மகேந்திரா பெரிய மாஸ்டர்!

நிஜாமிற்கு எதிரான போராட்ட நடவடிக்கைகளில் மகேந்திரா நகரில் மிகவும் புகழ்பெற்றவராகத் திகழ்ந்தார். ஆயுதங்களோடு அவர் எவர் வீட்டிலும் தங்குவார். அரசு ஊழியர்களும் வணிகர்களும்கூட அவருக்கு ஆர்வமாக உதவுவார்கள்.

ஒரு முறை, நகர கட்சிக்குழுவிடம் இருந்த பணஇருப்பு முற்றும் தீர்ந்து போனநிலையில், செய்வதறியாது இருந்தனர்; காரணம், அனைவரும் தலைமறைவு வாழ்க்கையில் இருந்த நேரம். ஒரு வணிகருக்குக் கடிதம் ஒன்றை எழுதி அதைச் சந்திரகுப்தா சவுத்திரியின் மனைவியான கருணா சவுத்திரியிடம் கொடுத்து அனுப்பினார். அவரும் பல வணிகர்களைச் சந்தித்து இரண்டே மணி நேரத்தில் ரூ3000/= திரட்டினார். கட்சிக்கு அவ்வளவு பெரும் செல்வாக்கு இருந்தது.

சிறையிலிருந்து தப்பிய விரிவான தகவல்களை நல்லா நரசிம்மலு, தெலுங்கானா ஆயுதப் போராட்டம்’ என்ற நூலில் விவரித்துள்ளார். வரலாற்றில் இந்நிகழ்வு 1950 மே மாதம் நிகழ்ந்தது.

பிடிஆர் பாதையும் மகேந்திராவும்

1948 -50 காலகட்டத்தில் கட்சியின் சுயஅழிப்புக்கு இட்டுச் சென்ற ‘பிடிஆர் பாதை’ கருத்துகளோடு மகேந்திரா கடுமையாக வேறுபட்டார்; அந்தப் பாதை மிக மோசமாகத் தோல்வியடைந்தது. மாவட்டக் குழுவிற்கு இதுகுறித்து விரிவாகக் கடிதம் எழுதினார்; ஆனால் மாவட்டக்குழு இவர்மீது ‘பூர்ஷ்வா ஏஜென்ட்’ என்று முத்திரை குத்தியது. ஆனால் ஆந்திரா மாநிலக் கட்சிக்குழு BT ரணதிவே பார்வையுடன் வேறுபட்டதால், மகேந்திரா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆயுதப் போராட்டம் ஒரு சாகச முயற்சியாகவும், மக்களிடமிருந்து விலகி தனிமை படுத்தப்பட்டதாக  மாறிவிட்ட சூழலில், ஆயுதப் போராட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என கட்சித் தலைமைக்குக் கேஎல் மகேந்திரா கடிதம் எழுதினார். அதே போன்றதொரு தொனியில் ரவி நாராயன் ரெட்டியும் கடிதம் எழுதினார். பிராந்தியத் தலைமை மிகவும் கோபமடைந்தது.

அரசியல் மாற்றத்தில், பிடிஆர் மாற்றப்பட்டு பொதுச் செயலாளராக சி.ராஜேஸ்வரராவும், ‘சீனப் பாதை’, ’ரஷ்யப் பாதை’ (ரஷ்யன் லைன்)யாகவும் மாறியது. பாதை மாற்றத்திற்கேற்ப 1951ல் பொதுத் தேர்தல்களில் பங்கேற்பது எனக் கட்சி முடிவெடுத்தது. ரவி நாராயன் ரெட்டியும் TBவிட்டல் ராவும் பாராளுமன்ற மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். டாக்டர் ராஜ் பகதூர் கவுர் மாநிலங்களவைக்குத் தேர்வானார். சட்டமன்ற இடைத்தேர்தல்களில் மக்தூம் மொகீதீன் வென்றார். 1951 -52 அந்த நேரத்தில் மகேந்திரா சிறையில் இருந்தார்.

மீண்டும் ஹைத்திராபாத் தொழிற்சங்க காங்கிரசில்

மீண்டும் அனைத்து ஹைத்திராபாத் தொழிற்சங்க காங்கிரசில் செயல்பட்டார் மகேந்திரா. மாநிலங்கள் மறுசீரமைப்புக்கு முன்பு 1956ல் ஹூட்டி தங்கச் சுரங்கத்தில் 48 நாட்கள் வேலைநிறுத்தம் நடைபெற்றபோது மகேந்திரா மிகப் பிரம்மாண்டமான பேரணியை நடத்தினார். (1902ல் நிறுவப்பட்ட ஹூட்டி சுரங்கம், உலகின் பழமையானது. இடைக்காலத்தில் மூடப்பட்ட அந்தச் சுரங்கம் 1947ல் ஹைதராபாத் கோல்டு மைன்ஸ் கம்பெனி லிமிடெட் என்ற பெயரில் மீண்டும் செயல்பட்டது.1956ல் மாநிலங்களின் மறுசீரமைப்பில் சுரங்கத்தின் உரிமையானது, ஹைதராபாத்திடமிருந்து கர்நாடகாவிற்கு (அப்போது மைசூர் என்று பெயர்) மாற்றப்பட்டதால், நிறுவனமும் “தி ஹுட்டி கோல்டு மைன்ஸ் கம்பெனி லிமிடெட்”(HGML) எனப் பெயர் மாற்றப்பட்டது)

ஆந்திரா ஏஐடியுசி-யில்

ஆந்திரா ஏஐடியுசி 1956ல் அமைக்கப்பட்டு கேஎல் மகேந்திரா செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ECIL, NFC, HCL முதலிய எண்ணற்ற சங்கங்களின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். என்ஜினியரிங் தொழிலாளர்களின் கூட்டு நடவடிக்கை குழுவிற்கு அவர் தலைவர். அவருடைய முயற்சியால்தான் தொழிற்சங்கத் தேர்தல்களில் இரகசிய ஓட்டு வாக்களிப்பு முறை ஏற்கப்பட்டது.

மகேந்திரா, ஆந்திர மாநில ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளராக 1973 முதல் 1985 வரை இருந்தார். மாநிலக் குறைந்தபட்ச ஊதிய ஆலோசனை போர்டின் உறுப்பினர்; மற்றும் 1970 முதல் 1982 வரை ஆந்திர சட்டமன்ற மேலவை உறுப்பினர். 1984 முதல் சிங்கநேரி நிலக்கரிச் சுரங்க தொழிலாளர் சங்கத்தின் தலைவராக்கப்பட்டார்.

டெல்லி தலையகத்தில்

மகேந்திரா, ஏஐடியுசி டெல்லி மத்திய தலைமையகத்திற்கு 1986ல் மாற்றப்பட்டார். 1986 முதல் 1996 வரை ஏஐடியுசியின் செயலாளர்களில் ஒருவர். 1996ல் ஏஐடியுசி பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்தப் பொறுப்பில் 2001 வரை நீடித்தார். 2001ல் டெல்லியில் உலகத் தொழிற்சங்கங்களின் சம்மேளன (WFTU) மாநாட்டைச் சிறப்பாக நடத்தியதில் முக்கிய பங்குவகித்தார். WFTU சம்மேளனத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கேஎல் மகேந்திரா 2005வரை அந்தப் பொறுப்பை வகித்தார்.  

சிபிஐ தேசியத் தலைவராக

1970ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தேசியக்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், இறுதி மூச்சுவரை அந்தப் பொறுப்பை நிறைவேற்றினார். 1997 முதல் 2004வரை கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினராகச் செயலாற்றியுள்ளார். ஏஐடியுசி பேரியக்கத்தின் துணைத் தலைவராக மறையும்வரை தொழிலாளர் வர்க்கத்திற்கு உழைத்தார் கேஎல் மகேந்திரா.

மத்தியில் சிலகாலம், கட்சிக் கல்விக்குப் பொறுப்பாளராகப் பணியாற்றியுள்ளார். பல நூல்கள்,  பிரச்சாரக் கையேடுகள் எழுதியுள்ளார். அவற்றில் ஆர்.எஸ்.எஸ். குறித்து, விடுதலை இயக்கம், நக்ஸல்பாரி இயக்கம், ஹைத்திராபாத்தில் தொழிலாளர் இயக்கம் (1920—56), அண்ணல் அம்பேத்கார் குறித்து, சூஃபி மற்றும் பக்தி மார்க்க இயக்கங்கள் குறித்தெல்லாம் எண்ணற்ற புத்தகங்கள் எழுதியுள்ளார். நிகழ்வுகளின் ஞாபகக் குறிப்புகள் மற்றும் உணர்வின் மிக்க தம்நினைவுகளின் அசைபோடல்களையும் எழுதியுள்ளார். அறிவார்ந்த தொழிற்சங்கச் செயற்பாட்டாளர், உழைக்கும் வர்க்கத்தின் உண்மைத் தலைவர்  கேஎல் மகேந்திரா, ஹைத்ராபாத்தில் 2007 ஆகஸ்ட் 12ம் நாள் மறைந்தார்.

செம்மாந்து பறக்கும் செங்கொடி அவர் புகழை என்றும் போற்றிப் பரப்பும்!

(புகைப்படம் நன்றி : the Hindu)

--தமிழில் : நீலகண்டன்,

  என்எப்டிஇ, கடலூர்

 

 


No comments:

Post a Comment