Wednesday 19 August 2020

வரலாற்று தலைவர்கள் வரிசை 9 தோழர் இசட் ஏ அகமத் : அறிவார்ந்த மக்கள் தலைவர்

                  



 

நமது பெரும் தலைவர்கள் வாழ்விலிருந்து :

சில சித்திரத் சிதறல்கள் -9

தோழர் இசட் ஏ அகமத் :

அறிவார்ந்த மக்கள் தலைவர்


--அனில் ரஜீம்வாலே

 (நியூஏஜ் ஆக.9—15, 2020)

          ZA அகமது அவர்களுடைய தாத்தா ஜலந்தரைச் சேர்ந்த ராம் சிங் சௌகான், 1930ல் முஸ்லீம் பக்கீர் (முஸ்லீம் புனிதர்) ஒருவரைச் சந்தித்த பிறகு முஸ்லீமாக மதம் மாறியவர். அவருடைய படம் இப்போதும் லாகூர் சீப்ஸ் கல்லூரியில் இடம் பெற்றுள்ளது. அகமதின் தாயார், இக்பால் பேகம், ஜாட் குடும்பத்திலிருந்து வந்தவர்; தந்தை, ஜீயாவுதீன் அகமத் (தற்போது பாக்கிஸ்தானில் உள்ள) மிர்பூர் காஸ் பகுதியின் டிஎஸ்பி காவல்துறை அதிகாரி. ஜெய்னுல் ஆபிதின் (ZA) அகமத், மிர்பூர் காஸ் பகுதி உமர்காட் என்ற ஊரில் 1907 செப்டம்பர் 29ல் பிறந்தார். (ஜெய்னுல் ஆபிதின் என்பதற்கு நம்பிக்கையாளர்களின் அணிகலன் என்பது பொருள்.) அவரிடம் தேசிய மற்றும் கம்யூனிஸ்ட் பார்வையிலான கருத்துகள் வளர்ந்து உருவாவதற்கு அவரது தந்தையின் ஆழமான செல்வாக்கே காரணம்.

          இஸ்லாமிய மதரசா பள்ளியின் பழமைவாதம் மற்றும் இருண்மைவாதக் கருத்துகள் காரணமாக ஜெய்னுலை மதரசா பள்ளிக்கு அனுப்புவதை தந்தை எதிர்த்தார்; வீட்டிலேயே தனிப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்து ஆங்கிலம் கற்பித்தார். 1914ல் குஜராத் கோத்ராவில் உள்ள பள்ளிக்கும் பின்னர் மெட்ரிகுலேஷன் படிக்க ஹைத்திராபாத் (சிந்து மாநிலம்) சென்றார். அலிகார் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த அகமத் தனது ஹானர்ஸ் படிப்பில் பிரஞ்ச் புரட்சியைத் தேர்வு செய்தார்.

          ஜெய்னுல் அங்குதான் ஷபூர்ஜி சக்லத்வாலா பற்றி கேள்விப்பட்டார். ஜெய்னுல் ‘தீவிர கட்சி’ ஒன்றை அமைத்து தனது கருத்துக்கு KM அஷ்ரப்-ஐயும் இணங்கச் செய்தார். தந்தையிடம் லெனின் வாழ்க்கை சரித்திர புத்தகம் ஒன்றைப் பார்த்தபோது தந்தைதான் கூறினார், ‘புதிய சமூதாயம் ஒன்றைப் படைத்துவரும் மாபெரும் மனிதர், லெனின்’ என்று.

மார்க்சியத்தோடு தொடர்பு

          ஹானர்ஸ் படிப்பு முடிந்ததும் 1928ல் மேற்படிப்புக்காக இங்கிலாந்து சென்றார். அதற்காக மாதம் ரூ250/- கடன் உதவித் தொகையைத் தாமஸ் குக் அண்ட் கம்பெனி மூலமாக முஸ்லீம் அறக்கட்டளை ஒன்றிடமிருந்து பெற்று வந்தார். தேசப் பிரிவினைக்குப் பிறகு அந்த அறக்கட்டளை பாக்கிஸ்தான் நாடோடு சென்று விட்டதால், அகமத் அந்தத் தொகையைத் திரும்பச் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்பது விந்தையே! லண்டனில் சக்லத்வாலாவை மீண்டும் சந்தித்தார். (அவர் இந்தியப் பார்சி வம்சத்தைச் சேர்ந்த பிரிட்டீஷ் அரசியல்வாதி.) அவர்மட்டும் கம்யூனிஸ்ட் ஆகாமல் இருந்திருந்தால் பெரும் டாட்டா குடும்பத்தின் வளர்ப்பாகி இருப்பார். சக்லத்வாலா, 1927ல் பிரிட்டன்  பாட்டர்சீ தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கம்யூனிஸ்ட் எம்பி ஆவார்.

          அகமத் லண்டன் ஸ்கூல் ஆப் எக்கனாமிக்ஸ் கல்லூரியில் படித்தார். சாஜ்ஜாட் ஜாகீர், அஷ்ரப், சௌகத் உமர், நிகரேந்து தத் மஜூம்தார் முதலானவர்களைக் கம்யூனிஸ்ட் குழுவில் சந்தித்தார். கட்சி பள்ளியில்  பிரபலமான பிரிட்டீஷ் கம்யூனிஸ்ட்கள் ரால்ப் ஃபாக்ஸ் மற்றும் பென் பிராட்லே ஆகியோரது சொற்பொழிவுகளில் கலந்து கொண்டார். அந்தக் குழு ‘பாரத்’ என்ற இதழை நடத்தியது. அவர்கள் மார்க்சிய தத்துவ நூல்களை வட்டமேசை மாநாடுகளில் கலந்து கொள்ள வந்தவர்கள் மூலம் இந்தியா அனுப்பி வைத்தனர் –மாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் பொதுவான சோதனைகளிலிருந்து விலக்கு பெற்றவர்கள் என்பதால் இது சாத்தியமானது. அதில் ஒரு கட்டு புத்தகம் அலகாபாத், ஆனந்த பவனம் வழிதேடி வந்து சேர்ந்து, அந்த மாளிகையில் நேருவின் புத்தகச் சேகரிப்பை மேலும் வளப்படுத்தியது! அந்தப் புத்தகச் சேகரிப்பு பொக்கிஷத்திற்கு அகமதை அழைத்துச் சென்றவர் இந்திரா காந்தி.

          லண்டனில் தங்கியிருந்தபோது இசட் ஏ அகமதும் நண்பர்களுமாக ஹாலந்து முதல் இத்தாலிவரை ஐரோப்பாவிற்கு ஒரு சைக்கிள் பயணத்தை இரண்டரை மாதங்களில் மேற்கொண்டனர். அவர் இந்தியன் சிவில் சர்வீசஸ் எனப்படும் ஐசிஎஸ்-சில் சேர மறுத்து விட்டார்; மாறாக, பிஹெச்டி ஆய்வைப் ‘பெண்கள் மற்றும் குழந்தைத் தொழிலாளர் உழைப்பு’ என்ற தலைப்பில் எடுத்துக் கொண்டு, இந்தியாவில் ஆறுமாத கால களப் பணியை மேற்கொண்டார்.  1935ல் அவருக்கு PhD டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

          பாசிசம் அதிகரித்து வந்த தருணத்தில், கிரேட் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் ஹாரி போல்லீட் அவருடன் பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி குறித்து விவாதித்தார். 1934ல் ப்ரூசெல்சில் நடைபெற்ற பாசிச எதிர்ப்பு மாநாட்டில் தோழியர் ஹஜ்ரா பேகம் மற்றும் மற்றவர்களோடு அகமதும் கலந்து கொண்டார்.

இந்தியா திரும்பல்

1936ல் பாம்பே திரும்பிய அகமத், சர்தேசாய் முதலானோரைச் சந்தித்தார். மிகவும் இறுக்கமான BTரணதிவேயுடன் அவருக்கு ஏற்பட்ட சந்திப்பு ஏமாற்றமளித்தது; பிடிஆர், காமின்டர்ன் அமைப்பின் ஐக்கிய முன்னணி கோட்பாட்டை (1935) ஏற்கவில்லை.

கராச்சி அடைந்ததும், அவருடைய தந்தையார் தனக்கு அனைத்துத் தகவல்களும் உளவு அறிக்கைகள் மூலம் தெரியுமெனக் கூறினார், அவர் டிஐஜி காவல் அதிகாரி ஆயிற்றே. சிலகாலம் அகமத் ஆசிரியராகப் பணியாற்றினார்; சாஜ்ஜாட் ஜாகீரிடமிருந்து லக்னோ வருமாறு அழைப்புக் கடிதம் வந்தது. அப்போதுதான் நாடு திரும்பியிருந்த அவருடைய லண்டன் நண்பர்கள் குழுவினர், மனதை ஈர்த்த லக்னோ காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டனர். அந்நகரில் அப்போது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி கூடியிருந்தது; பிசி ஜோஷி, கட்சி உறுப்பினராக அகமதுக்கு ஒப்புதல் வழங்கினார். பின்னர் அவர் கட்சியின் மத்திய குழுவுக்கு அழைப்பாளர் ஆக்கப்பட்டார்.

அலகாபாத்தில் நேருவைச் சந்தித்த பிறகு ஆனந்த பவனத்தில் மாதம் 50ரூ ஊதியத்தில் அகமது முழுநேர ஊழியரானார். இதன் மத்தியில் ஹஜ்ரா பேகத்துடன் அவருக்குத் திருமணம் நடைபெற்றது; திருமணத்திற்குப் பிறகு மாத ஊதியம் ரூ75/-ஆக அதிகரிக்கப்பட்டது. தேசிய முன்னணி கோட்பாட்டின் ஒரு பகுதியாக, கம்யூனிஸ்ட்கள் அப்போது காங்கிரசில் பணியாற்றுவது வழக்கம்.

காங்கிரசில் பணியாற்றல்

அப்போது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் நேரு மேற்பார்வையில் பல்வேறு இலாக்காகளை அமைத்தபோது, ZAஅகமத் விவசாய இலாக்கா செயலாளர் ஆனார். காங்கிரஸ் கட்சியின் விவசாய இலாக்கா பல புத்தகங்களையும், சிறு கையேடுகளையும் வெளியிட்டது. “இந்தியாவில் வேளாண் பிரச்சனைகள்” என்ற அகமதின் புத்தகம் மிகவும் புகழ்வாய்ந்தது. இவரது பணியால் மிகவும் ஈர்க்கப்பட்ட நேரு, அகமதைக் காந்திஜிக்கு அறிமுகம் செய்து வைத்தார். அந்தப் புத்தகம் பற்றி அறிந்து கொண்ட காந்திஜி அகமதை ஆரத் தழுவினார்.

இதன் மத்தியில் அகமத், ‘பத்திரிக்கைத் தொழிலாளர்கள் சங்கம்’ உட்பட பல தொழிற்சங்க அமைப்புகளைத் திரட்டி அமைத்தார். ஆர் டி பரத்வாஜைச் சந்தித்தார். (இந்தக் கட்டுரை தொடரின் 5வது கட்டுரை அவரைப் பற்றியது) அகமத் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஆக்கப்பட்டார். 1937–39ல் உ.பி. பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் ஆனார். உத்திரப் பிரதேசத்தின் விவசாய பகுதிகளில் ஷிப்பன் லால் சக்சேனா மற்றும் முன்ஷி கலிகா பிரசாத் உடன் சுற்றுப்பயணம் செய்தார். பல கட்சி கிளைகளை அமைத்தார். 1936–40களில் கான்பூரில் பல தொழிலாளர் இயக்கங்களில் பங்கேற்றார்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர்களில் ஒருவரானார் அகமது. பீகார் மோதிகாரி பகுதியில் நடந்த விவசாயிகள் மாநாட்டில் ராகுல சாங்கிருத்தியாயன் அவர்களைச் சந்தித்தார். பின்னர் பிரத்தேகமாகக் கட்டப்பட்ட குடிசையில் அகமதோடு சாங்கிருத்தியாயன் மூன்று வாரங்கள் ஒன்றாகத் தங்கியிருந்தார். அப்போது அநேகமாக அங்கிருந்துதான் ”வால்கா முதல் கங்கை வரை” நூலின் சில பகுதிகளை அவர் எழுதியிருக்கக் கூடும். விரைவில் ராகுல சாங்கிருத்தியாயனும் பின்னர் அகமதுவும் கைது செய்யப்பட்டு ஒன்னரை மாதங்களுக்குப் பிறகு தியோலி அனுப்பி வைக்கப்பட்டார்கள். 

தியோலி முகாமில்

          ராஜஸ்தான் பாலைவனத்தின் நடுவே கோடாவிலிருந்து 60 கி.மீ. தூரத்தில் இந்தத் தடுப்புக் காவல் சிறப்பு முகாம் 1857ல் --மிகவும் ‘அபாயகர’மான சுதந்திரப் போராட்ட வீரர்களை அடைப்பதற்கென்றே—கட்டப்பட்டது. இராணுவத்தினர் கட்டுப்பாட்டின்கீழ் வைக்கப்பட்டிருந்தது. சிறைக் கைதிகளில் பெரும்பாலானோர் கம்யூனிஸ்ட்கள். முகாமில் முறையான தொடர் வகுப்புகளை அவர்கள் நடத்தினார்கள். எஸ் ஏ டாங்கே பொருளாதாரம் குறித்து அகமதை வகுப்பெடுக்கக் கூறினார்; அவரது உரை அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்டது.

          தங்களைத் தங்கள் சொந்தப் பகுதி சிறைகளுக்கு இடமாற்ற வேண்டும், குடும்பத்தினருக்கு நிதி உதவி செய்ய வேண்டும் என்று கோரி சிறைவாசிகள் உண்ணாவிரதப் போராட்டம் துவக்கினர். அகமதின் உடல்நிலை பாதித்தது. வெளியே நாடுமுழுதும் எதிர்ப்பு இயக்கங்கள் வலுத்தன, குடும்பத்தின் பெண் உறுப்பினர்கள் உள்துறை செயலாளர் மாக்ஸ்வெல் அவர்களை ஒரு குழுவாகச் சந்தித்தனர். கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தாங்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என உறுதிபட தெரிவித்தனர். கோரிக்கைகள் ஏற்கப்பட்டு அனைவரும் விடுவிக்கப்பட்டனர். அகமதோ அங்கிருந்து பரெய்லி மத்தியச் சிறைக்கு அனுப்பப்பட்டு பின்னர் 1942 ஏப்ரலில் தான் விடுவிக்கப்பட்டார். அங்கிருந்து லாகூர் சென்றவர் அங்குப் புதிதாகக் கட்சி அலுவலம் நிர்மாணிக்க உதவினார்.

உ.பி.யில் பணி

          லக்னோ திரும்பியதும் அகமது ‘இந்தியா பப்ளிஷிங் ஹவுஸ்’ மற்றும் ‘சோஷலிச புத்தக மன்றம்’ ஒன்றையும் அமைத்தார். அந்தப் பணியில் சுபாஷ் போஸ், ஜெயபிரகாஷ் நாராயணன் போன்ற புகழ்பெற்ற தலைவர்கள் உடன் இருந்தனர். இப்படி அறிவார்ந்த பலர் அந்தப் பணியில் ஈடுபட்டது மட்டுமல்ல, அகமதும் மற்றவர்களும் பல புத்தகங்களையும் எழுதினர். 

          கான்பூரில் பீடி, பத்திரிக்கை, தகரம், குதிரை வண்டி (டோங்கா), ரிக்க்ஷா, கடைகள் மற்றும் பிற தொழிலில் ஈடுபட்டத் தொழிலாளர்கள் மத்தியில் பணியாற்றினார். உ.பி., அலகாபாத்தில் உள்ள சிவ்யோகி பகுதியில் அமைந்த ஆர்டனஸ் தொழிற்சாலையில் தொழிற்சங்கம் அமைத்தார். மேலும் இராணுவ இன்ஜினியரிங் ஊழியர்களுக்கான சங்கத்தையும் அமைத்தார். பின்னாட்களில் AITUC மத்திய தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆன ஸ்ரீவத்சவாவை இங்கேதான் அகமது சந்தித்தார். அகமது அவரைக் கட்சிக்குள் கொண்டு வந்தார்.

          1944ல் பெனாரசில் (காசி) நடந்த கைத்தறித் தொழிலாளர்கள் மாநாட்டில் அகமது கலந்து கொண்டார். அங்கே மாவ் என்ற இடத்தை அவரது மையமாகக் கொண்டு அவர் செயல்பட்டபோது, நெசவுத் தொழிலாளர்களால் ஈர்க்கப்பட்டவர் தம் முழுவாழ்நாளையும் அவர்கள் மத்தியில் பணியாற்ற அர்ப்பணிக்க முடிவு செய்து அவர்களுடனே நிரந்தரமாகத் தங்கவும் விரும்பினார். ஆனால் கட்சி இதற்குச் சம்மதிக்கவில்லை.

அகில இந்திய கிசான் சபாவில்

          அகில இந்திய விவசாயிகள் சங்கம் (ஆல் இந்தியா கிசான் சபா –சகஜானந்த சரஸ்வதி துவக்கியது) முதல் அமைப்பு நிலை மாநாட்டிற்கு 1936 ஏப்ரல் 11ல் இந்தியா முழுவதும் இருந்து பிரதிநிதிகள் லக்னோ வந்தனர். ZAஅகமது ஒரு பார்வையாளராகக் கலந்து கொண்டார். அங்கே அவர் இந்துலால் யாக்னிக் மற்றும் என்ஜி ரங்காவைச் சந்தித்தார்; அகமதிடம் அவர் உங்கள் வாழ்க்கையை இந்தி பேசும் பிராந்தியத்தில் விவசாயிகள் இயக்கத்தில் அர்ப்பணிக்கக் கேட்டுக் கொண்டார். விவசாயச் சங்கத்தின் மத்திய நிர்வாகக் குழுவில் அகமது இணைத்துக் கொள்ளப்பட்டார். ஜெய் பகதூர் சிங், சர்ஜூ பாண்டே இருவரோடும் ZAஅகமதும் சேர்ந்து உபி விவசாயிகள் சங்கத் ‘திரிமூர்த்தி’களாக விளங்கினர். முன்ஷி கலிகா பிரசாத்தைக் கட்சிக்குக் கொண்டு வந்தார் ZAஅகமது.  

1943 பாம்பேயில் முதலாவதாக நடந்த கட்சி காங்கிரஸ் மாநாட்டில் அகமது பங்கேற்றார். கிசான் சபாவும் கட்சியும் உ.பி.யில் விரைவாகப் பரவியது. கட்சிக்கு நிதி திரட்ட குறுக்கும் நெடுக்குமாக நீண்ட தொலைவு பயணங்களை மேற்கொண்டபோது தோழியர் ஹஜ்ரா பிரபலமான தலைவரானார் என்பதை அங்கே எழுப்பப்பட்ட ஒரு முழக்கமே உணர்த்தும்: “ஆ ஹை ஹஜ்ரா, தி தோ பஜ்ரா” (‘ஹஜ்ரா வந்து விட்டார், கம்பு முதலிய தானியங்களைக் கொடுத்து விடுங்கள்’). பிக்டா (பீகார்), மலபார் (கேரளா) முதலிய இடங்களுக்கு விரிவாகப் பயணம் மேற்கொண்டார். இஎம்எஸ் நம்பூதிரிபாட்டைச் சந்தித்தார்; பாம்பே வந்தபோது பிசி ஜோஷி அவரை, அப்போது பஞ்சமும் வறட்சியும் கொடுமையாகப் பரவிய வங்கத்திற்குப் போகக் கூறினார். அகமது தேபாகா இயக்கத்திலும் பங்கு பெற்றார்.  (நிலஉடமையாளருக்குக் குத்தகை விவசாயிகள் தரவேண்டிய பங்கு, விளைச்சலில் பாதி என்பதை மூன்றில் ஒருபங்காகக் குறைக்க வேண்டுமென்ற வங்காள விவசாயிகளின் கோரிக்கையில் உருவானது தேபாகா இயக்கம். கிசான் சபா இந்த இயக்கத்திற்குப் புது உத்வேகம் அளித்தது.)

தேச விடுதலைக்குப் பிறகு

          ZAஅகமது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கல்கத்தா கட்சி காங்கிரஸில் (1948)  கலந்து கொண்டார். பிடிஆர் பாதை அப்போது கட்சியில் ஆதிக்கம் செலுத்தியது. அகமது தலைமறைவு வாழ்க்கையில் சென்றார். எச்சரிக்கை கிடைத்ததை அடுத்து, லக்னோ கட்சி அலுவலகத்தில் இருந்த சுமார்70 தோழர்கள் தலைமறைவாயினர், கட்சி அலுவலகமும் காலி செய்யப்பட்டது.  ஃபெரோஸ் கோதியில் சில நாட்கள் தங்கிய அகமது டெல்லிக்கு ரயில் மூலமாக ஓர் இராணுவ அதிகாரி சீருடையில் சென்றார்! பின்னர் டகோடாவில் அவர் லாகூர் புறப்பட்டுச் சென்றார். பாக்கிஸ்தானிலும் அவருக்கு எதிராகக் கைது வாரண்டு இருந்தது. தனது சகோதரர் ஜப்ரூதின் அகமது, டிஐஜியாக இருக்கும் கராச்சி புறப்பட்டார். சொல்லவே தேவையில்லை, இயல்பாகவே அகமது போலீஸ் ஜீப்பிலே சுற்றினார்! அவருடைய சகோதரர் ஏனைய காவலர்களுக்கு அவரைவிட்டு விலகி இருக்கக் கூறியதோடு, அகமது தன்னுடன் தான் தங்குவார் என்று மிகத் தெளிவாகக் கூறி விட்டார்.

          வணிகம் செய்பவர் உடையில் அகமது ஜோத்பூர் புறப்பட்டு, பாம்பே சென்று மீண்டும் அலகாபாத் திரும்பி கட்சியின் ’இருட்குகை’ (den) அறையில் தங்கினார். மிகக் கூர்மையாக பிடிஆர் பாதையை விமர்சனம் செய்தார். விளைவு, உடல் உழைப்பு வேலைகளை ‘மட்டும்’ பார்த்தால் போதும் என உத்தரவிடப்பட்டார் – அதன் பொருள், இனி அறிவார்ந்த கொள்கை கோட்பாடு பணிகளைச் செய்ய வேண்டாம் என்பதுதான்! அவர் சமையல் பாண்டங்கள் பாத்திரங்கள் கழுவினார்!

          அது மட்டுமல்ல, அகமது (புரட்சியாளராக அல்லாமல்) ஒரு ’சீர்திருத்தவாதி’யாக, ஒரு (பிற்போக்கு) ‘திருத்தல் வாதி’யாக மாறிவிட்டதால், அவரை மணமுறிவு (டைவர்ஸ்) செய்துவிடும்படி ஹஜ்ராவுக்கு பிடிஆர் ‘உத்தரவிட்டார்’!  அவர்கள் தீரத்துடன் அதை மறுத்துவிட்டனர்.

          அதன் மத்தியில் காம்-இன்பார்ம் (கம்யூனிஸ்ட் தகவல்) பத்திரிக்கையில் வந்த தலையங்கம் அனைவரையும் அதிர்ச்சி கொள்ள வைத்தது. அது கூறியது : இந்தியா விடுதலை அடைந்து விட்டது; இனி அதன் பொருளாதார, சமூகநலப் பணிகளை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் போன்றவைகளை ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும். இது எல்லாமே பிடிஆர் பாதைக்கு முரணானவை! இப்போது என்ன செய்ய வேண்டும்? என சிவ் குமார் மிஸ்ரா கேட்டார். பிரதேச கமிட்டியின் அவசரக்கூட்டம் கூட்டப்பட்டது. முதலில் சிவ் குமார் யாதவும் பின்னர் ZAஅகமதுவும் உபி கட்சி செயலாளர் ஆனார்கள். 1951ல் தலைமறைவாக நடத்தப்பட்ட கல்கத்தா கட்சி காங்கிரஸ் மாநாட்டில் அகமது இரகசியமாகக் கலந்து கொண்டார். அம்மாநாட்டில் அஜாய் கோஷ் பொதுச் செயலாளராகத் தேர்வானார்.

கட்சி மற்றும் பாராளுமன்றப் பொறுப்புகளில்

          21 உறுப்பினர்கள் கொண்ட கட்சி மத்திய குழுவில் ZAஅகமது இடம் பெற்றார். 1953 –54ல் மதுரையில் நடைபெற்ற கட்சி காங்கிரஸில் மத்திய குழுவிற்கு அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1956 பாலகாடு கட்சி காங்கிரஸில் பொலிட் பீரோ உறுப்பினராகத் தேர்வானார். 1958 அமிர்தசரஸ் மாநாட்டில் மத்திய செயலகத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு செயலகத்தில் 1968 வரை நீடித்தார். 1968 பாட்னா கட்சி காங்கிரஸில் மத்திய நிர்வாகக் குழுவில் இடம் பெற்ற அகமது அதிலிருந்து 1992வரை அந்தப் பொறுப்பில் செயலாற்றினார்.

          நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக 1958 –62, 1966, 1972 – 78 மற்றும் 1990 –94 ஆண்டுகளில் பணியாற்றினார். இதன் மத்தியில் அவர் மாநில மேலவைக் கவுன்சிலுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

          மக்களின் அறிவார்ந்த தலைவராக விளங்கிய டாக்டர் ஜெய்னுல் ஆபிதின் அகமத் 1999ம் வருடம் ஜனவரி 17ம் நாள் மறைந்தார்.

                                                                                          --தமிழில் : நீலகண்டன்,

 என்எப்டிஇ, கடலூர்

 


No comments:

Post a Comment