Wednesday 12 August 2020

#ApologizeAnantkumarHegdeMP

  

THE PROFILE OF “Deshbhakt”

•••• “தேசபக்தரின்” சுயவிபரக் குறிப்பு ••••

தோழர் பட்டாபி தனது வலைப்பூவில் 11-08-20 அன்று இரவு        9. 22மணிக்கு கீழ்க்கண்ட பதிவை வெளியிட்டிருந்தார். அன்றைய காலை தி இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில் வெளியான ஒரு நபரின் பேச்சை (உளறல்களையும் பரபரப்பு கருதி அப்படிச் சொல்வதுண்டு) முதலில் எடுத்துக் கூறி, தொடர்ந்து தன் கருத்துகளைப் பதிவிட்டிருந்தார். இனி வலைப்பூ பதிவின் தமிழாக்கம்:

        கர்னாடகா பாராளுமன்ற உறுப்பினர் திரு அனந்தகுமார் ஹெக்டே பின்வரும் வார்த்தைகளில் பேசியதாக தி இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.

        “சர்ச்சைகளுக்குப் பெயர்போன முன்னாள் மத்திய அமைச்சரும்  பாரதிய ஜனதா கட்சியின் வடக்கு கர்னாடகா MP திரு அனந்தகுமார் ஹெக்டே, தற்போது புதிய சர்ச்சையைத் துவக்கி உள்ளார்; BSNL ஊழியர்களைத் ‘துரோகிகள்’ மற்றும் ‘தேச விரோதிகள்’ என விமர்சனம் செய்து, வேலை செய்ய மறுக்கும் அவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக வேலையைவிட்டு நீக்கித் துரத்த வேண்டும் என (திருவாய் மலர்ந்து) உரைத்துள்ளார்.

        “இதற்கு ஒரே தீர்வு தனியார்மயம்தான், நிச்சயம் நமது அரசு அதைச் செய்யும். தற்போது சுமார் 85ஆயிரம் பேர்கள் துரத்தப்பட்டுவிட்டனர், இதன் பிறகு மேலும் பலரை வேலைநீக்கம் செய்ய வேண்டும்” என்று ஒரு வீடியோ பதிவில் அவர் கூறினார்.

        மேற்கண்ட செய்திக்கு நமது தோழர் பட்டாபியின் எதிர்வினை:

        இயல்பாகவே அவருடைய இந்தப் பேச்சு  மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர், தொலைத்தொடர்பு இலாக்கா மற்றும் BSNL நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் தரப்பை ஒருபக்கம் சங்கடப்படுத்தியுள்ளது; மறுபக்கம் BSNL ஊழியர்கள் மத்தியிலும் கடும் கோபத்தைத் தூண்டி எதிர்ப்புகள் வலுக்கக் காரணமாகி உள்ளது. முன்னாள் அமைச்சர் ஊழியர்களைத்தான் நேரடியாகக் குற்றம் சாட்டுகிறார் என்றாலும், நிறுவனத்திற்குப் பொறுப்பான அமைச்சர், கண்காணிக்கும் DOT உயர்அதிகாரிகள் மற்றும் BSNL நிறுவனத்தின் CMD, போர்டு உறுப்பினர்கள் மீது, உண்மையில் மறைமுகமாக, கண்டனம் தெரிவிப்பதே ஆகும். நல்ல சேவைக்கு ஊழியர்களைப் போலவே சாதாரணமாக இந்த உயர் அதிகாரிகளும் சமமான பொறுப்புடையவர்கள்.

        எம்.பி. திரு அனந்தகுமார் ஹெக்டேஜி அவர்களுக்கு BSNL சேவையில் குறைபாடு இருக்குமானால், அதனை அவர் கர்னாடகாCGM, அல்லது CMD, அல்லது நேரடியாகத் துறையின் அமைச்சருக்கே கொண்டு சென்று நிவர்த்தி கண்டிருக்க முடியும். பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயப்படுத்தும் கொள்கை விரைவில் வரப்போகிறது என  பாஜக அரசின் உயர்மட்ட முடிவுகள் எடுப்பதற்குத் தலைமை வகிக்கும், சாதாரணமாக வேறு யாருமல்ல, பாரதப் பிரதமரே அறிவித்துள்ளார். BSNL தனியார்மயப்படுத்தல் குறித்து அறிவிப்பு வெளியிட மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் / மத்திய நிதி அமைச்சர் அல்லது பிரதம மந்திரி இவர்களுக்கு உள்ள அதிகாரத்தைத் தாண்டிய அதிகாரம் இந்த எம்.பி.க்கு இருக்கிறதா, நமக்குத் தெரியவில்லை. தனது சொந்த கட்சியின் அரசு எந்தவித கொள்கையைத் தயாரித்து வருகிறது என்ற முடிவைக் காத்திருந்து பார்க்கும் பொறுமை இவரிடம் இல்லை.

        இந்தப் பெரிய மனிதர் (ஜென்டில் மேன்) சென்ற 16-வது மக்களவையிலும் எம்பியாகவும், அமைச்சராகவும் இருந்திருக்கிறார். பாராளுமன்றக் கூட்டங்களில் கலந்து கொண்ட ஆஜர் பட்டியலில் பெரிதும் நன்றாகச் செயல்பட்டிருக்கிறார் என்பதற்காகப் பாராட்டலாம். சென்ற மக்களவையில் ரயிவே துறை பற்றி, அன்னிய நேரடி முதலீடு, தொழிலாளர் சட்டங்கள் குறித்து இவர் 285 கேள்விகளை எழுப்பி இருக்கிறார்; ஆனால் டெலிகாம், BSNL பற்றி ஒரு கேள்வியைக் கூட கேட்டதில்லை. இந்தியத் தொலைத்தொடர்பு சிஸ்டத்தின் வளர்ச்சி, முன்னேற்றம், நலவாழ்வு மீதான இந்தப் பெரிய மனிதரின் அக்கறை, இவரது கடந்த காலத்தில் அந்த அளவுக்கே இருந்தது.

        2020 பிப்ரவரி மாதம் இந்தப் பெரிய மனிதர் நம்முடைய இந்திய விடுதலைப் போராட்டம் மற்றும் மகாத்மா காந்தி மீது சர்ச்சைக்குரிய தரம்தாழ்ந்த விமர்சனத்தைச் செய்தார். பல்வேறு ஊடகங்களில் வெளியான அவரது அந்த விமர்சனம், “விடுதலைப் போராட்டம் மிகப் பெரிய நாடகம், சில தலைவர்களால் அரங்கேற்றப்பட்டது; அத்தகைய தலைவர்கள் (பின்னர்) மகாத்மா ஆனார்கள்.” இப்படி தேசவிடுதலைப் போராட்டத்தையும் தேசத் தந்தை மகாத்மா காந்தியையும் தரம்தாழ்ந்து கேலி, கிண்டல் செய்த குற்றத்திற்காக எந்த தேசவிரோத வழக்கும் இவருக்கு எதிராகத் தொடுக்கப்படவில்லை. மிக பலமாக ஊடகங்களில் பலமுறை இது விவாதத்திற்கு உள்ளான பிறகு, பாரதிய ஜனதா கட்சியால் இவருக்கு விளக்க நோட்டீஸ் வழங்கப்பட்டது.

        (இதோடு நிறுத்த இவர் என்ன சாதாரண மனிதரா?) அடுத்த மிகப் பெரிய சர்ச்சை, ‘பாஜக இங்கே (ஆட்சிக்கு) வந்திருப்பது இந்தத் தேசத்தின் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுவதற்காகத்தான் என்று இவர் வெளியிட்ட அறிக்கை. இதற்காகவும் அவர் மன்னிப்பு கேட்கச் செய்யப்பட்டார்.

        இப்போது மீண்டும் ‘புகழேணி’யில் (வேதாளம் முருங்கை மரத்தில்) ஏற்றி விட்டது – BSNL ஊழியர்களுக்கு எதிராக இவர் தெரிவித்த கருத்து.

‘‘ஜனநாயக சீர்திருத்தத்திற்கான (தன்னார்வ) அமைப்பு” (Association of Democratic Reforms *) தந்துள்ள தகவல்களிலிருந்து அவரைப் பற்றிய  ’எம்.பி.- சுயவிபரக் குறிப்பு’ வருமாறு:  

Ø ஆஸ்தி – 8.47 கோடி ரூபாய் சுமாராக

Ø கடன் பொறுப்பு – 4.10 கோடி ரூபாய்

Ø கல்வித் தகுதி  – 12ம் வகுப்பு

Ø தொழில் – வணிகம் மற்றும் விவசாயம்

Ø ஆண்டு வருமானம் -- 2013 –14ம் வருடத்திற்காகத் தாக்கல்

செய்த வருமான வரி ஆவணங்கள் படி ரூபாய் 6 லட்சத்திற்கு மேல்

Ø --2017 -18 வருடத்திற்கானது ரூபாய் 4 லட்சம் அருகே (வருவாய் குறைவு)

Ø  துணைவியாரின் வருமானம் ரூபாய் 3.8 லட்சத்திலிருந்து ரூபாய் 28.5 லட்சமாக உயர்ந்திருப்பதாகக் காட்டப்பட்டுள்ளது.

Ø  2014ல் அறிவிக்கப்பட்ட இவருடைய ஆஸ்தி ரூ3,23,67,360 (அதாவது ரூபாய் மூன்று கோடிக்கு மேல்);

Ø  2018ல் அறிவிக்கப்பட்ட இவருடைய ஆஸ்தி ரூ8,47,55,455 (அதாவது ரூபாய் எட்டு கோடிக்கு மேல்)

Ø  --சதவீத அடிப்படையில் இது 162 சதவீத மதிப்பு உயர்வு. இவருடைய ஆண்டு வருமானம், வருமான வரி ஆவணங்கள் தாக்கல் செய்தபடி, ரூ32,65,795  (அதாவது ரூபாய் 32 இலட்சத்திற்கு மேல்)

மேற்கண்ட இந்த விவரங்கள் அனைத்தும் ஜனநாயக சீர்திருத்தத்திற்கான (தன்னார்வ) அமைப்பு அறிக்கைகளில் தரப்பட்டுள்ளன.

[*Association of Democratic Reforms என்ற லாபநோக்கமில்லாத அரசு-சாரா அமைப்பு, 1200 தன்னார்வலர்களுடன் டெல்லியிலிருந்து செயல்படுகிறது. “இந்த மண்ணில் எந்த அதிகார பொறுப்பும், குடிமகன் என்று இருப்பதற்கு, மேலானது அல்ல” என்ற ஃபெலிக்ஸ் ஃப்ராங்ஃபர்ட்டர்  முழக்கத்தை நோக்கமாகக் கொண்ட இந்த அமைப்பு 1999ல் நிறுவப்பட்டது. தேர்தல் மற்றும் ஆலோசனை கூறலைப் பயனாகக் கொண்டது (விக்கிபீடியா களஞ்சியத்திலிருந்து]

இந்தியத் தண்டனைச் சட்டம் IPC ன் கீழ் இவர் மீது நிலுவையில் உள்ள வழக்குகளின் சுருக்கமான விபரங்கள் வருமாறு:

v   மதம், இனம், பிறந்த இடம், வசிக்குமிடம், மொழி மற்றும் பிற அடிப்படைகளை முன்னிட்டு வேறுபட்ட குழுக்களிடையே பகையையும் மோதல்களையும் தூண்டிவிடுவது; மேலும் நல்லிணக்கத்தைப் பேணுவதற்குப் புறம்பான செயல்களைச் செய்வதற்கு எதிரான ஐபிசி பிரிவு 153-ஏ தொடர்புடைய -- இரண்டு குற்றச்சாட்டுகள்.

v    (ஐபிசி பிரிவு 506கீழ்) மிரட்டி அச்சுறுத்தல் கிரிமினல் குற்றம்  -- ஒரு குற்றச்சாட்டு

v    மதரீதியான வெறுப்பு வெறியுணர்வை நோக்கமாக உடைய, வேண்டுமென்றே இழிவு படுத்தும் செயல்கள், அல்லது எந்தவொரு வகுப்பாரின் மதநம்பிக்கைகளை அவமதித்தல் (ஐபிசி பிரிவு 295-A கீழ்)       -- ஒரு குற்றச்சாட்டு

v  அமைதியைக் குலைத்து மோதலைத் தூண்டுவதை நோக்கமாக உடைய வேண்டுமென்றே அவமதித்தல் குற்றம் (ஐபிசி பிரிவு 504கீழ்) – ஒரு குற்றச்சாட்டு

v  தவறான முறையில் தடுத்து மறித்தல் (ஐபிசி பிரிவு 341கீழ்)    –ஒரு குற்றச்சாட்டு

v  பலநபர்களால் பொதுவான (குற்ற) நோக்கத்தை மேலெடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளைச் செய்தல் (ஐபிசி பிரிவு 34கீழ்)  --ஒரு குற்றச்சாட்டு

v  தானே முன்வந்து (பிறரைக்) காயம் ஏற்படுத்துதல் (ஐபிசி பிரிவு 323கீழ்)  --ஒரு குற்றச்சாட்டு

மேற்கண்ட அரசுசாரா அமைப்பு தகவலின்படி,  எந்த வழக்கிலும் அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்படவில்லை.

‘தேச பக்தர்’ என்பதற்கான வரைவிலக்கணம்   எதுவும், நிச்சயம் கண்டபடி பொறுப்பற்று பேசுவதற்கான சுதந்திரம் என்று பொருள்படாது என நாம் நம்புகிறோம்.

11-8-2020

--தமிழாக்கம் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

 

 

     

  

 

No comments:

Post a Comment