Friday 14 August 2020

74-வது சுதந்திர தினச் சிறப்புக் கட்டுரை

 

74வது சுதந்திரதினச் சிறப்புக் கட்டுரை


 சுதந்திரம் மற்றும் குடியரசைப்

பேரழிவிலிருந்து பாதுகாப்போம்!

--டி. ராஜா

(பொதுச் செயலாளர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி)

        நமது நாடு, காலனிய ஒடுக்குமுறை அடிமைச் சங்கிலியை அறுத்தெறிந்து, 1947 ஆகஸ்ட் 15ம் நாள் சுதந்திரமான சுயச்சார்பு பாதையில் பீடுநடைபோடத் துவங்கியது. அந்த வெற்றியின் தருணம், ஆயிரக்கணக்கான நமது நாட்டு மக்கள் தங்கள் உயிர் உடமை அத்தனையும் தியாகம் செய்து நடத்திய புகழார்ந்த விடுதலைப் போராட்டத்தின் இறுதிப் பயனாய் விளைந்தது – அது கனவுகள் நனவாக மாற்றுவதற்காகத் தொடங்கப்பட்ட பயணத்தின் புதிய துவக்கம். இதே உணர்வைப் பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில் 1947 ஆகஸ்ட் 14ம் நாள் நள்ளிரவு உரையாற்றிய முதலாவது பிரதமர் ஜவகர்லால் நேரு எதிரொலித்தார்: “இன்று இப்போது நாம் கொண்டாடும் சாதனை, புதிய வாய்ப்புகளின் திறப்புக்கு நாம் முன்னே எடுத்து வைக்கும் ஓரடி; பெரும் வெற்றிகளும் சாதனைகளும் நமக்காக எதிரே காத்திருக்கின்றன.”

        விடுதலை அடைந்தபோது, எங்கும் நீக்கமற வியாபித்திருந்த ஏழ்மை, வேலைஇல்லா திண்டாட்டம், அதனோடு தேசப் பிரிவினைக்குப் பிறகு தொடர்ந்த மதரீதியான கலவரங்களின் அபாயம் என்ற .இருபெரும் பிரச்சனைகளை நாடு சந்தித்தது. இப்பிரச்சனைகளைத் தலைவர்கள் அப்போது எப்படி எதிர்கொண்டு தீர்க்க முயற்சித்தார்கள் என்பது—74வது சுதந்திரதினத்தைக் கொண்டாடும்—இன்றைக்கும் நமக்குப் பெரிதும் பொருத்தமுடைய பாடமாகும்.

கரோனா பாதிப்பும் அரசும்

        நாட்டின் அடிப்படை ஆதாரக் கட்டமைப்புகள் குறித்துத் தன்னைத்தானே புகழ்ந்து வானளாவ பெருமை பேசிய மோடி அரசின் லட்சணத்தை கரோனா கால நெருக்கடி அம்பலப்படுத்தி விட்டது. இதனை எழுதுகின்ற நேரத்தில் நாள்தோறும் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையில் உலகிலேயே இந்தியாதான் முதல் இடத்தில் இருக்கிறது. (ஆகஸ்ட் 14ல் புதிதாக 64,553 பேர் தொற்று பாதிக்கப்பட்டு, மொத்தம் 24 லட்சத்து 61ஆயிரத்து 190 பேர் பாதிக்கப்பட்டும், 48,040 மக்கள் உயிரிழந்துமுள்ளனர் என்பது அரசின் புள்ளிவிபரம்)

நாட்டின் பொருளாதார நிலை

        பணமதிப்பிழப்பு சாகச நடவடிக்கை மற்றும் அவசரகோலத்தில் அமலாக்கிய ஜிஎஸ்டி வரிவிதிப்புக்குப் பிறகு ஏற்கனவே நலிந்து மூழ்கிக் கொண்டிருந்த தேசத்தின் பொருளாதாரம், பொதுச் சொத்துகள் கொள்ளையிடப்படுவதால் மீளமுடியாத பின்னடைவை நோக்கிச் சரியத் தொடங்கிவிட்டது. கரோனா நெருக்கடிக்கு மத்தியில் மத்திய ரிசர்வ் வங்கி கவர்னர், நாட்டின் இந்த ஆண்டிற்கான ஜிடிபி சுருங்கத் தொடங்கியதை, எவ்வளவு என்ற அளவைக் கூறாமல், ஒப்புக்கொண்டுள்ளார். முதலீடு மற்றும் கடன் வழங்குவதை மதிப்பீடு செய்யும் முகமையான  ICRA, பொருளாதாரத்திற்கான அந்தக் குறியீட்டை 9.5% குறையும் எனக் கணித்துள்ளது. பொருளாதாரத்தின் மீதான இந்தகைய பாதிப்புகள், குறிப்பாக எளிதில் பாதிக்கப்படும் தொழில் பிரிவுகளை மேலும் கடுமையாக பாதித்து, தொடர்ந்து வேலைஇழப்புகள் மற்றும் வாழ்வாதார இழப்புகளை அதிகரிக்கும். நோய் தொற்றை (அதிரடி ஊரடங்கு, போக்குவரத்து நிறுத்தம் என)த் தவறாகக் கையாண்டதன் காரணமாக ஏற்கனவே மோசமாக இருந்த வேலையின்மை மேலும் அதிகரித்தது; தற்போது ஜூலை மாத வேலையின்மை விகிதம் 7.43%மாக உள்ளதென, இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மைய (CMIE) புள்ளிவிபரம் கூறுகிறது. இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், ஊரடங்கின் மத்தியில், பொதுத்துறை நிறுவனங்களைத் திட்டமிட்ட முறையில் அழிக்கும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபடுகிறது என்பதே.

தேசத் தலைவர்களும் பொதுத்துறை நிறுவனங்களும்

        புதிதாக விடுதலை அடைந்த இந்திய தேசத்தின் தலைவர்கள், இந்தியாவின் வறுமை ஒழிப்பு மற்றும் வேலையின்மை அகற்றல் என்பதற்கான, பெரும் வாய்ப்பாக மட்டும் பொதுத் துறை நிறுவனங்களைக் கருதவில்லை; மாறாக, துணைக் கண்டம் போன்று பரந்து விரிந்த நாட்டின் பல்வேறு பிரதேசங்களுக்கு இடையே செல்வாதாரத்தில், வசதி வாய்ப்புகளில் நிலவிய ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்பதற்கான நல்வாய்ப்பாகவும் அதனைக் கருதினார்கள். காலத்தின் சோதனைகளை வென்று நிற்கும் பொதுத்துறை நிறுவனங்களை இன்று பிய்த்தெறியத் தொடங்கியிருக்கிறார்கள். அவற்றில் நாட்டின் ஆகப் பெரிய வலைப்பின்னல் கட்டமைப்பான இரயில்வேயும், பொதுத்துறை வங்கிகளும்கூட அடக்கம். ஊரடங்கைக் காரணம் காட்டி, இதனை எதிர்த்துக் குரல் எழுப்ப பொதுமக்களையும் அனுமதிப்பதுமில்லை.

குடியரசின் மீது தாக்குதல்

உரிமைகளுக்காக இந்தியர்கள் போராடியதன் விளைவாகக் கடந்த பல பத்தாண்டுகளாகச் சாதிக்கப்பட்டவைகளை அழித்தொழிக்கிறார்கள் என்பதே இதன் பொருள். அரச முதலாளித்துவ எஜமானர்களின் பொக்கிஷ அறைகள் லாபத்தால் நிரம்ப வேண்டும் என்பதற்காகவே, வானமே இடிந்து விழுந்தாலும் சரி என்று, மோடி அரசு மும்முரமாகக் குடியரசை நொறுக்கி உடைக்கிறது.

தேசத் தியாகத் தலைவர்கள் கண்ட கனவு

அதே நேரத்தில் அதிகரித்து வரும் மதவெறி பாசிசம், இந்திய அரசியலமைப்பின் ஆதாரமான மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசின் அடித்தளத்தைச் சம்மட்டியால் அடித்து உடைக்கிறது. இந்து இந்தியா என்ற கருத்தாக்கத்தையே காந்தி, நேரு, பட்டேல், மௌலானா ஆஸாத் மற்றும் அம்பேத்கர் போன்ற தலைவர்கள் தங்கள் வாழ்நாள் எல்லாம் எதிர்த்து வந்திருக்கிறார்கள். இந்திய விடுதலைப் போராட்டத்தில் அனைத்துச் சமூகம் மற்றும் எல்லா மதங்களையும் சேர்ந்த மக்களின் பங்கேற்பாலும், மனமுவந்து ஏற்றுக் கொண்ட தியாகங்களாலும், மதசார்பற்ற உணர்வுநிலையாலும் கட்டி எழுப்பப்பட்டதே நம்முடைய இந்தியா. மதம் கடந்த ஒற்றுமையே இந்தியா. எந்தச் சமூகத்தையோ அல்லது குறிப்பிட்ட மதநம்பிக்கை சார்ந்தவர்களையோ சமூக விலக்கம் செய்வதன் மூலம் நாட்டின் செயல்பாடுகளில் பங்கேற்கும் அவர்களின் குடிமை உரிமையான அரசியலில் இருந்தே விலக்கப்படுவது போன்றவைகளுக்கு இங்கே இடமில்லை; ஆனால் இன்றைக்கு இந்தியாவில் அதைத்தான் செயல்படுத்த முயல்கிறார்கள். புறக்கணித்து ஒதுக்கி வைக்கும் அரசியல், குறிப்பிட்டசாரரை வேறுபட்ட ’பிறர்’ என முத்திரை குத்துவது என்பது, தேசத்திற்காக உயிர்த்தியாகம் உட்பட உச்சபட்ச அர்ப்பணிப்பு செய்த அனைத்து சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கும் செய்யப்படும் அவமரியாதையாகும்.

தலைவர்களின் விழைவு

நம்முடைய தேசத்தின் பொதுவாழ்க்கையையும், நமது அனைத்து அமைப்புக்களையும் மதவாதப்படுத்த முயற்சிக்கும் பாஜக–ஆர்எஸ்எஸ் ஒன்றைத் தெளிவாக ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். அது, பகத்சிங் முதல் சந்திரசேகர ஆசாத் வரை, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வரை எவர் ஒருவரும் தங்களின் வாழ்க்கையை இந்து ராஷ்ட்ராவுக்காகத் தியாகம் செய்யவில்லை; அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் பற்றுறுதி மதசார்பற்றக் கொள்கைக்காகவும் சமத்துவத்திற்காகவும் பிசிறற்று முழுமையாகப் பாடுபட்டார்கள்; அவர்கள் கனவு கண்டது, இந்த நாட்டில் மதசார்பற்ற ஜனநாயகக் குடியரசை நிர்மாணிக்க.

இந்து ராஷ்ட்ரா என்பது . . .

இந்து ராஷ்ட்ரா என்பது பாகுபடுத்தி, ஒதுக்கி வைத்து, கீழ்--மேல் படிநிலைகளை அடிப்படையாகக் கொண்ட கருத்து; சிறுபான்மையினருக்கு எதிராக அவர்களை வேறுபடுத்தி  அது பாரபட்சமாக நடத்தும்; சாதி, பிராமணியம் மற்றும் ஆணாதிக்க இறுக்கத்துடன் அமைந்த கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. அதே அளவு சமமான கடுமையுடன் தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டும்.

அண்ணல் அம்பேத்கர் எச்சரிக்கை

எனவேதான், நமது அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பி டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் எழுதினார், “இந்து ராஜ்யம் அமையுமானால், யாருக்கும் சந்தேகம் தேவையில்லை, அதுதான், நம் நாட்டிற்குப் பேராபத்து, ஆகப் பெரிய பேரழிவு.” அண்ணல் மேலும் கூறுகிறார், “அது (மத அடிப்படையில் அமையும் இந்து ராஜ்யம்), ஜனநாயக அமைப்போடு பொருந்தாத ஒன்று.” டாக்டர் அம்பேத்கர் எச்சரித்த இந்துத்துவா பெரும்பான்மைவாதக் கருத்தாக்கத்தை அப்படியே நம்மீது சுமத்துவதற்கு அனைத்து வழிகளிலும் முயற்சிக்கப்படுகிறது.

சென்ற ஆண்டு ஆகஸ்ட் 5 : ஜம்மு காஷ்மீர்

சென்ற 2019 ஆகஸ்ட் 5ம் நாள் மத்திய அரசு அரசியலமைப்புச் சட்டக்கூறு 370ஐ ரத்து செய்து, ஜம்மு காஷ்மீருக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் தந்த சிறப்பு அந்தஸ்தைப் பறித்தது மட்டுமின்றி, அம்மாநிலத்தை இரண்டு ஒன்றியங்களாகப் பிரித்து தரத்தைக் குறைத்தது. அந்த நடவடிக்கையால் எந்தவொரு பயனையும் காஷ்மீரிகளோ அன்றி தேசத்தின் பிறபகுதி மக்களோ இன்னும் அடையவில்லை; மாறாக காஷ்மீர் மக்கள், இணைய தளம் முதலிய செய்தித் தொடர்பும் இன்றி,  தொடர்ச்சியாக ஓராண்டாக ஊரடங்கில் முடக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த ஆண்டு அயோத்தி இராமர் கோயில்

இந்த ஆண்டு 2020 ஆகஸ்ட் 5ம் நாள், கரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கில் இருக்கும்போது, அயோத்தியில் இராமர் கோயில் கட்டுவதற்கான பூமிபூசை விழாவைப் பிரதமரே தலைமை ஏற்று நடத்துகிறார். விழா மேடையில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், பிரதமர் மற்றும் உத்திரபிரதேச மாநிலத்தின் முதல்வரும் ஆளுநரும் ஒன்றாகக் காட்சி தருவது, ஏதோ ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு நாட்டின் அதிகாரபூர்வ அந்தஸ்து வழங்கப்பட்டு விட்டதான தோற்ற மயக்கத்தை ஏற்படுத்துகிறது. இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஒட்டு மொத்தமாக முழுமையாக விரோதமானது; ஏனெனில், அரசியலமைப்புச் சட்டம் நமது நாட்டை ஒரு மதசார்பற்ற தேசமாக வரையறுத்து, அனைத்து மத நம்பிக்கைகளுக்கும் அப்பால் நின்று அரசு நடுவுநிலையைப் பேண வேண்டுமெனப் பணிக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கச் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்ட பிரதமரும் மற்றவர்களும் அரசியலமைப்புச் சட்டத்தின் நியதியை வழுவாது பின்பற்றி ஒழுக வேண்டும்.

ஆர்எஸ்எஸ் மதவாத செயல்திட்டங்கள்

மேலும் ஒருபடி சென்று, ‘ஆகஸ்ட் 15ம் தேதி எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியமானது தற்போது ஆகஸ்ட் 5ம் தேதி’ எனப் பிரதமர் அயோத்தியில் பேசியுள்ளார். பூமிபூசை முடிந்த கையோடு சமூக வலைதளங்களிலும் பிற இடங்களிலும், “காசியும் மதுராவும் பாக்கி உள்ளன” என வெறிக்கூச்சல் எழுப்பி வருகின்றனர். அந்த முழக்கம் – ஜனநாயக, மதசார்பற்ற அடிப்படையிலான இந்தியாவை ஒரு மதம் சார்ந்த இந்து ராட்ஷ்ட்ராவாகவும், மக்களின் விஞ்ஞான மனோபாவத்திற்கு மாற்றாக இந்துத்துவ பொதுபுத்தியைப் புகுத்தும்– அவர்களது திட்டங்களின் கெட்ட நோக்கங்களைச் சுட்டிக்காட்டுகிறது. இவை அனைத்தும் ஆர்எஸ்எஸ் மதவாத நிகழ்ச்சிநிரலில் உள்ள செயல்திட்டங்களைக் காட்டும். ஆகஸ்ட் 5ம் தேதியை ஆகஸ்ட் 15ம் தேதியோடு சமமானதாக ஒன்றுபடுத்திக் காட்ட எண்ணுவது, இந்துத்துவா அடையாளங்களை --தியாக வேள்வியில் புடம்போட்ட-- விடுதலை இயக்கத்திற்கு இணையானதாக மாற்றச் செய்யப்படும் முயற்சி.

மக்களின் சுதந்திர நாள்

ஆகஸ்ட் 15 என்பது இந்தத் தேசத்து மக்களுக்குத் தங்கள் சுதந்திரப் போராட்டத்தை நன்றியோடு நினைக்கவும், விடுதலை இயக்கத்தில் அனைத்து மதங்கள், சாதிகள், சமூகங்களைச் சார்ந்த எண்ணற்ற மக்களின் அளப்பரிய தியாகத்தால் ஸ்வீகரிக்கப்பட்ட சமத்துவம், மதசார்பற்ற தன்மை, கூட்டுறவு, சகிப்புத்தன்மை, பகுத்து உணர்தல் முதலிய விழுமியங்களையும் கொண்டாடுவதற்கான வாய்ப்பு.

நமது விடுதலைப் போராட்டத்தின் இந்த மரபுரிமையைச் சிதைத்து, காவிமயப்படுத்திக் களங்கப்படுத்தவே பெரும்பான்மைவாத இந்துத்துவா இந்தத் தாக்குதல்களைத் தொடுக்கிறது. சமூகத்தின் சகலபகுதி மக்களும் இந்தத் தாக்குதல்களை எதிர்க்கவும் நம்முடைய பன்மைத்துவ மரபுரிமையைப் பாதுகாக்கவும் முன்வர வேண்டும்.

அரசியலமைப்புச் சபையில் டாக்டர் அம்பேத்கர்

1949 நவம்பர் 25ம் நாள் அரசியலமைப்புச் சபையில் இறுதி உரையாற்றும்போது, டாக்டர் அம்பேத்கர் எவ்வளவு தீர்க்க தரிசனத்தோடு, “சுதந்திரம் என்பது சந்தேகமில்லாமல் நிச்சயமாக மகிழ்ச்சிக்கு உரிய ஒன்றுதான். ஆனால் நாம் ஒன்றை மறந்துவிடலாகாது: சுதந்திரம் நம் மீது பெரும் பொறுப்புக்களைச் சுமத்தியுள்ளது. (எதிர்காலத்தில்) எதுவும் தவறாகப் போகுமெனில் இனியும் பிரிட்டீஷ்காரர்களை அதற்காகப் பழி கூறி தப்பித்துவிட நமக்கிருந்த வாய்ப்பை, விடுதலை அடைந்ததன் மூலம்,  நாம் இழந்து விட்டோம். இந்தக் கணத்திலிருந்து தவறாக நடப்பவற்றிற்கு, நாம் நம்மைத் தவிர, வேறுயாரையும் குற்றம் சாட்ட முடியாது” எனக் கூறினார்.

மக்களின் முன் உள்ள கடமை 

டாக்டர் அம்பேத்கரின் எச்சரிக்கை உண்மையாகி வருகிறது. ஆர்எஸ்எஸ் – பாஜக கூட்டின்கீழ் நடப்பவை எல்லாம், நமது அரசியலமைப்புச் சட்டம் மற்றும் ஜனநாயக அடிப்படை உயர் மதிப்பீடுகளைக் குறைத்துச் சிதைக்கும், தவறான நடவடிக்கைகளாகி வருகின்றன. நமது குடியரசை நாம் இழப்பதற்கு முன்னால் மக்கள் போராடவும், பெருமிதமிக்கக் குடியரசை மீட்கவும் வேண்டும். மக்களாகிய நாம் நாட்டின் சுதந்திரத்தையும் குடியரசையும் பாதுகாக்கச் சமதமேற்போம்! தொடர்ந்து குடிமக்கள் அனைவருக்கும் சமூக, பொருளாதார, அரசியல் ரீதியிலான நீதியையும், சுதந்திரம், சமஉரிமை, சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தையும் உறுதி செய்து கண்ணின் இமைபோல் காத்து நிற்போம்!  

“நாமிருக்கும் நாடு நமதுஎன்பது அறிந்தோம் - இது

 நமக்கே உரிமையாம் என்பது அறிந்தோம் (.…கெட்ட

 நயவஞ்சக் காரருக்கு நாசம் வந்ததே)  -- இந்தப்

 பூமியில் எவர்க்கும்இனி அடிமை செய்யோம்”

என்று, “ஆடுவோமே பள்ளு பாடுவோமே!”

--தமிழில் : நீலகண்டன்,

                               என்எப்டிஇ, கடலூர்      

No comments:

Post a Comment