Friday 14 October 2022

நியூஏஜ் தலையங்கம் (அக்.16 –22) 24வது கட்சிக் காங்கிரஸை நோக்கி …


நியூஏஜ் தலையங்கம் (அக்.16 –22)
                                      

    24வது கட்சிக் காங்கிரஸை நோக்கி …

          இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது கட்சி காங்கிரஸ் மாநாட்டைச் சிறப்பாக நடத்திட சரித்திரப் புகழ் பெற்ற விஜயவாடா நகரம் தயாராகிவிட்டது. இதற்கு முன் அந்நகர் கட்சி மாநாட்டை, 1961லிலும் 1975ம் ஆண்டிலும், இரண்டு முறை நடத்தியுள்ளது. இன்று 2022 அக்டோபர் 14ல் சிபிஐ 24வது கட்சிக் காங்கிரஸின் தொடக்கத்தின் அடையாளமாக, நம்பிக்கையின் செங்கொடி, மீண்டும் பட்டொளி வீசிப் பறக்க உள்ளது. அக்டோபர் 18வரை விஜயவாடா நகரின் இரவும் பகலும் பயனுள்ள விவாதங்களுடனும் பொருள் நிறைந்த பாதையைத் தேடுவதாகவும் உற்சாகம் ததும்ப இயங்க உள்ளது.

          கட்சியின் 6,40,344 (2021) உறுப்பினர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 900 பிரதிநிதிகள் கூடி, சமகாலச் சவால்களைச் சந்திக்க வழிகளைக் கண்டறியவும் அதற்கேற்பக் கட்சியை வலிமைப்படுத்தவும் தங்கள் சக்தி மற்றும் அனுபவங்களை அர்ப்பணிக்க உள்ளனர். தேசத்தைச் சொல்லொண்ணா கடும் நெருக்கடியில் தள்ளிய ஆர்எஸ்எஸ் – பாஜக ஆட்சிக்கு முடிவுகட்டிய பிறகு, நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கான தந்திரோபாயங்கள் மற்றும் உத்திகள் காணப்பட வேண்டும். நெருக்கடிகள் நிறைந்த நிலைகளிலிருந்து நாட்டைக் காப்பாற்றும் திறன்மிக்க மதசார்பற்ற, ஜனநாயக, இடதுசாரி சக்திகளின் பரந்த ஒற்றுமையைக் கட்ட, 24வது கட்சி காங்கிரஸ் அறைகூவல் தருமென எதிர்பார்க்கலாம். அவ்வகையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது கட்சி காங்கிரஸ் மாநாடு, நாட்டின் வரலாற்றில் ஒரு முக்கியமான அரசியல் நிகழ்வாகப் பதிவாகும்.

     கம்யூனிஸ்ட் கட்சி உண்மையான தேசபக்த சக்திகளின் கட்சி. அது, ‘விடுதலைக்கான நெடும் பயணத்தில்’ இந்திய மக்களுடன் இணைந்து மறுக்க முடியாத பங்காற்றியுள்ளது. இந்திய விடுதலை இயக்க நிகழ்ச்சித் திட்டத்தில் ‘பூரண சுயராஜ்யம்’ என்ற முழக்கத்தை முதலில் எழுப்பியது கம்யூனிஸ்ட்களே. விடுதலைப் போராட்ட நீண்ட வரலாற்றின் பல்வேறு பக்கங்கள் போராடும் மக்கள் திரளுடன் கம்யூனிஸ்ட்களின் இன்னுயிர்களாலும் ரத்தத்தாலும் நனைந்து தோய்ந்துள்ளன. விடுதலைக்கான போராட்ட அறைகூவலை ஏற்று விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களைத் திரட்டி வீரம் செறிந்த இயக்கங்களைக் கட்டியமைத்து நடத்துவதில் கம்யூனிஸ்ட்கள் முனையிலே முகத்து நின்றனர். தியாகங்களின் அந்தச் சகாப்தங்கள் மறக்க முடியாதவை. அதே நேரத்தில், கம்யூனிஸ்ட்கள் சர்வதேச நிகழ்வு வளர்ச்சிப் போக்குகளைக் குறித்த உணர்வுடன் செயல்பட்டனர், ஏனெனில் அவைதாம் எந்தவொரு நாட்டின் அரசியலையும் வடிவமைப்பதில் மிகவும் முக்கியமானவை. அப்புரிதலுடன் கம்யூனிஸ்ட்கள் அன்றும் சரி, இன்றும் சரி, சர்வதேசியம் என்ற பதாகையை எப்போதும் உயர்த்திப் பிடிக்கின்றனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, 24வது கட்சிக் காங்கிரஸில் சர்வதேசிய ஒருமைப்பாட்டு உணர்வுடன் பல்வேறு கண்டங்களிலிருந்து சகோதரக் கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகள் நேரடியாகப் பங்கேற்க உள்ளன.

      புதிய தாராளமய காலத்தின்போது அவர்களின் அரசியல் போராட்ட அனுபவங்கள் மாநாட்டில் பகிர்ந்து கொள்ளப்படும். வரலாறு நெடுக, சிபிஐ இடதுசாரி சக்திகளின் ஒற்றுமைக்காக உறுதியாக நின்றுள்ளது. பொது நோக்கத்திற்காகப் பிற அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து போராட, இடதுசாரிகளின் அத்தகு ஒற்றுமைதான் ஊக்குவிக்கும் செய்தியாகும். இடதுசாரிகள் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை உயர்த்திப் பிடித்து, சிபிஐ கட்சிக் காங்கிரஸை வாழ்த்த பிற இடதுசாரி கட்சிகளை மாநாட்டிற்கு அழைத்துள்ளது.

          சிபிஐ காங்கிரஸில் அவர்களின் பங்கேற்பு ஆழமான பொருள் உடையது. 24வது கட்சிக் காங்கிரஸின் பங்கேற்பாளர்கள், சர்வதேசிய மற்றும் தேசிய அரசியல் நிகழ்வுப் போக்குளைக் குறித்து ஆழமான ஆய்வுகளைச் செய்வது இயல்பே; கட்சியை மேலெடுத்து நடத்த அந்த ஆய்வுகளிலிருந்து பாடங்கள் பெறுவோம். ஏகாதிபத்தியமும் பகாசுர லாபம் மற்றும் உலக மேலாதிக்கத்தைப் பெறுவதற்காக அதன் தேட்டையும் உலகம் முழுவதுமுள்ள நாடுகளையும் அதன் மக்களையும் தொடர்ந்து அச்சுறுத்துகிறது. அதன் போர் முஸ்தீபுகளும் செயல்திட்டங்களும் மனித குலத்தின் செல்வாதாரத்தைக் கற்பனைக்கு எட்டாத அளவுகளில் களவாடிவிட்டது. இதன் நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதில் தோல்வி அடைந்த உலகப் பிற்போக்கு சக்திகள், மதத் தீவிரவாதம் மற்றும் புதிய பாசிசத்தை பல்வேறு நாடுகளில் அரங்கேற்றத் தலைப்பட்டுள்ளன. மக்கள் திரளோ அவர்களுக்கு முன் சரணடையத் தயாராக இல்லை. அவர்களை எதிர்த்துப் பல்வேறு நாடுகளில் மக்கள் வெற்றிகரமான அரசியல் போராட்டங்களைத் தொடுத்துள்ளனர்.

     லத்தீன் அமெரிக்காவின் பல நாடுகளில் இடது மற்றும் ஜனநாயக சக்திகள் அடைந்துள்ள வெற்றிகள் கவனமாகப் படிக்க வேண்டியவை ஆகும். இந்தியாவுக்கு மாற்றம் தேவை. இம்மாபெரும் தேசத்தின் மதசார்பற்ற அடித்தளங்களை ஆர்எஸ்எஸ் – பாஜக ஆட்சி, மிக மோசமாகப் பாழ்படுத்திவிட்டது. அது அளித்த அச்சி-தின் (நல்ல காலம்) உறுதிமொழி மோடி ஆட்சியின் கீழ் மிகப்பெரிய பொய் என நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சியில் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக ஆகின்றனர், ஏழைகள் பரம ஏழைகளாயினர். ஆட்சியாளர்கள் தங்கள் பிரச்சாரத் திறமைகளால் தங்கள் தோல்விகளை மறைக்கக் கூடுதல் நேரம் பணியாற்றுகிறார்கள். நமது பொருளாதாரத்தின் முதுகெலும்பு, வலிமை எனக் கருதப்பட்ட பொதுத் துறைகள் தொடர்ச்சியான தாக்குதலுக்கு உள்ளாகின்றன. வங்கிகளும் காப்பீட்டு நிறுவனங்களும் தனியார்மயமாக்கப்படுகின்றன.

          இரயில்வே, துறைமுகங்கள் மற்றும் சுரங்கங்கள் என அனைத்தும் விற்பனைக்குக் கடைவிரிக்கப்பட்டுள்ளன. (தொலைத் தொடர்பில் பொதுத் துறையான பிஎஸ்என்எல் பாரபட்சமாக நடத்தப்படுகிறது.) நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் முன்பு என்றுமில்லாத வகையில் உச்சத்தில் உள்ளது. விலைவாசி உயராத நாளில்லை. இந்திய ரூபாயின் மதிப்பு ’பலவான்’ டாலரின் பேராசை முன்பு கையறுநிலையில் இரையாகிக் கிடக்கிறது. மேம்பட்ட வாழ்விற்காக ஏங்கும் மக்களின் கனவுகள், பன்னாட்டு மற்றும் உள்நாட்டு மூலதனத்தின் லாப வேட்டை முன்பு முற்றாக அடமானம் வைக்கப்பட்டது. அதானியின் வளர்ச்சியை நாட்டு வளர்ச்சியின் அடையாளமாகக் காட்டும் கயமை. அதே நேரத்தில், அன்னிய நேரடி முதலீடு (ஃஎப்டிஐ) அவர்களின் அனைத்து வளர்ச்சியின் மந்திரமாக உள்ளது. தங்களின் களத்தைத் தயார் செய்ய ஆர்எஸ்எஸ் – பாஜக அரசு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது அதனது மூர்க்கமான தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. மதச்சார்பின்மை, ஜனநாயகம் மற்றும் சோஷலிசம் போன்ற அரசமைப்புச் சட்டத்தின் கோட்பாடுகள் அவர்களின் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளன. மத நம்பிக்கை மற்றும் வழிபாட்டு இடங்கள் மக்களைப் பிளவுபடுத்தவும், அன்றாட வாழ்வின் உண்மையான பிரச்சனைகளிலிருந்து அவர்களின் கவனத்தைத் திசை திருப்பவும் நரித்தனமாகத் தவறாகப் பயன்படுகின்றன. ஆள்வோர்கள் தங்கள் பாதையை முஸோலினி மற்றும் ஹிட்லரின் வரலாற்றுப் பக்கங்களிலிருந்து எடுத்துக் கொள்கிறார்கள். அவர்களை முறியடிப்பதன் மூலமே நமது நாடு தப்பிப் பிழைக்க முடியும்.

          ஆர்எஸ்எஸ் பாசிசக் கோட்பாட்டால் வழிநடத்தப்படும் மோடி அரசின் வலதுசாரி பிற்போக்கு குணாம்ச அடையாளத்தைக் கண்டறிந்த முதல் அரசியல் கட்சி சிபிஐ ஆகும். ஹிட்லர் மற்றும் கோல்வால்கர் எழுத்துக்களில் வெளிப்படும் பொதுவான பார்வைகள், அவர்களின் தத்துவக் கோட்பாடுகளின் ஒத்த தன்மையைக் குறித்துக் கதைகதையாய்ப் பேசும். ஆர்எஸ்எஸ் தனது பேச்சு மற்றும் செயல்களின் மூலம் தாங்கள் ஹிட்லர் பாசிசத்தின் வாரிசுகளாக, நிதிமூலதனத்திற்கு அடிமை சேவகம் புரிபவர்களாக, மற்றும் இனப் பெருமித மேட்டிமைக்கு விஸ்வாசிகளுமான இந்தியப் பதிப்பு என்பதை நிரூபிக்கிறது.

          மேற்கண்ட காரணங்களால்தான் கம்யூனிஸ்ட் கட்சி அவர்களைப் பாசிசவாதிகள் என அழைக்கத் தயங்குவதில்லை. பாசிசவாதிகளின் உத்தரவுக்கு இணங்க ஓர் ஆட்சி தேசிய வாழ்வின் ஆதாரக் கட்டமைப்புகளைப் பிய்த்தெறிய முற்படும்போது, கம்யூனிஸ்ட் கட்சியின் முதன்மையான கடமை, தத்துவார்த்த ரீதியிலும் அரசியல் ரீதியிலும் அவர்களை எதிர்த்துப் போரிடுவதே. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அக்கொள்கைத் தெளிவுடன் வழிநடத்தப்படுகிறது. எனவே அனைத்து மதசார்பற்ற, ஜனநாயக மற்றும் இடதுசாரி சக்திகளின் ஆகப் பரந்த ஒற்றுமைக்குக் கம்யூனிஸ்ட் கட்சி தெளிவான அழைப்பை அளித்துள்ளது. இந்த எதிர்காலக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் 24வது கட்சிக் காங்கிரஸின் அரசியல் தீர்மான வரைவறிக்கை அமைந்துள்ளது.

          வரும் நாட்களில் கட்சிக் காங்கிரஸில் நடைபெறும் ஜனநாயக விவாதங்கள் கம்யூனிசக் கொள்கைத் தீர்மானங்களுக்கு இறுதியான செம்மை வடிவம் அளிக்கும். எதிர்வரும் 2024 பொதுத் தேர்தல்களில், வாழ்வா–சாவா போராட்டத்தை இந்திய அரசியல் சந்திக்கும்போது, பாசிச எதிர்ப்புச் சக்திகளின் ஒற்றுமையின் அரசியல் ஆக உயர்ந்த உச்சபட்ச முக்கியத்துவம் பெறுகிறது. இந்தத் தருணத்தின் தீவிரத் தன்மையைக் கருதி அனைத்து ஒத்த கருத்துடைய சக்திகளும் தேச மக்கள்பால் மற்றும் வரலாற்றிற்கான தங்களின் கடமை பொறுப்பை நிறைவேற்ற ஒன்றிணைந்து எழுவார்கள் எனக் கம்யூனிஸ்ட் கட்சி நம்புகிறது!

          கட்சிக் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகள், பல்வேறுபட்ட சூழ்நிலைகளில் பெருந்திரள் போராட்டங்களை நெருக்கமாக இருந்து நடத்திய பட்டறிவு அனுபவங்களில் புடம்போட்டு உருவான தலைவர்கள். எப்போரிலும் வெற்றிபெற சரியான அரசியல் பாதை மட்டுமே போதுமானதில்லை என்பதை அவர்கள் நன்றாக அறிவார்கள். அதற்கு வலிமையான, நல்ல தயாரிப்புகளுடனும் கூடிய சக்திமிக்க ஆயுதம்– அச்சவால்களைச் சந்திக்க- தேவை. இது சம்பந்தமாக, கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபன ரீதியான தயார்நிலை உயிர்ப்பான முக்கியத்துவம் உடையது.

      இந்த உண்மையின் விழிப்புணர்வுடன் சிபிஐ, புதுச்சேரியில் நடைபெற்ற தனது 22வது கட்சி காங்கிரஸில் முழுமையான கட்சியையும் அறிவுறுத்தியது, “மக்களுடன் மீண்டும் ஒன்றிணயுங்கள்!” 24வது கட்சி காங்கிரஸ் அந்த உறுதிமொழியைப் புதுப்பித்து, அந்தக் கடமையை அதிகபட்ச அர்ப்பணிப்புடன் முன்னெடுத்துச் செல்லும். ஏழைகள் மற்றும் உழைக்கும் மக்கள் திரளின் பிரச்சனைத் தீர்வு மற்றும்
முன்னேற்றத்திற்தாகப் பற்றுறுதி அர்ப்பணிப்புடன் போராடும் போராளிகளின் கட்சி எனக் கம்யூனிஸ்ட் கட்சியை மக்கள் எதிர்நோக்குகிறார்கள்
. அவர்களுக்கு அது நம்பிக்கையின் கட்சி. இந்த நாட்டு மக்களின் அந்த எதிர்பார்ப்பிற்கும் செங்கொடிக்கும் தகுதி உள்ளவர்களாகக் கட்சிக் காங்கிரஸின் பிரதிநிதிகள் விளங்குவார்கள், அதுவே அவர்களின் பெருமிதம். அதற்காகவே அவர்களது உள்ளங்கள், மற்றும் உணர்வுகளில் எல்லாம் அந்த நம்பிக்கை உணர்வு ததும்புகிறது.

          24வது கட்சி காங்கிரஸ் நோக்கி அணி வகுப்போம்!

          இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நீடு வாழ்க!

--தமிழில் : நீலகண்டன்,
தொடர்புக்கு 94879 22786

 


         

 

No comments:

Post a Comment