Wednesday 5 October 2022

பொருளாதார நிதிமூலதனமயமாக்கலும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியும் --அனில் ரஜீம்வாலே

                                           


  பொருளாதார                             நிதிமூலதனமயமாக்கலும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியும்

--அனில் ரஜீம்வாலே

          கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருகிறது. செப்டம்பர் 26ல் ஒரு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 81.62ஆக இருந்தது, செப்டம்பர் 28ல் 81.94 ஆகச் சரிந்தது; இதனால் பொருளாதாரம் சூழன்று, பணவீக்கம் தாவிப் பாய்ச்சலில் உயர்ந்தது. அயல்நாட்டு நிதி முதலீடுகளின் விற்பனைஅதிகரித்ததால் (இந்திய நிதிச் சந்தையான மும்பை) தலால் ஸ்டிரீட் சென்செக்ஸ் 3120 புள்ளிகள் நட்டமடைந்தது. (அதாவது, அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த அன்னிய முதலீட்டாளர்கள், இந்தியப் பங்குச் சந்தையில் செய்த முதலீட்டைத் திரும்பப் பெற்று, அமெரிக்கப் பங்குகளில் முதலீடு செய்யத் தொடங்கினர்.) சென்செக்ஸ் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வந்தது. அரசும் இந்திய ரிசர்வ் வங்கியும் (ஆர்பிஐ) திகைத்தன, அடிக்கடி கருத்து உடன்பட முடியாமல் பதற்றத்துடன் மோதிக்கொண்டன. சமீபத்தில் ஆர்பிஐ, ரூபாய் மதிப்பைத் தாங்கிப் பிடிக்க டாலர் வரத்தை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுத்தது. எண்ணெய் நிறுவனங்களிடம் நேரடியாக டாலரை விற்பனை செய்வதற்கான தனியான சாளரத்தைத் திறக்கவும் முன் வந்தது.

     10 ஆண்டுகளுக்கான அமெரிக்க ட்ரஷரி பாண்ட் (அரசுப் பத்திரம்) டாலர் முதலீட்டின் மீதான பலன் 12 ஆண்டுகளின் உச்சபட்டமாக 4 சதவீதத்திற்கு மேல் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. டாலர் குறியீட்டெண் 20 ஆண்டுகளில் ஆகக் கூடுதலாக 114.8 உச்சம் தொட, ரூபாயின் மீதான அதனது அழுத்தம் அதிகமாகிறது.

        செப்டம்பர் 28ம் நாள் வர்த்தக அமர்வின் இறுதியில் முதலீட்டாளர்கள் ரூ1.7 லட்சம் கோடி அளவு தொகை நட்டமடைந்தனர்; மேலும், கடந்த 6 வர்த்தக அமர்வுகளில் செல்வத்தின் அரிமானம் ரூ15 லட்சம் கோடியைத் தொட்டது. இந்தக் காலகட்டத்தின்போது வெளிநாட்டு தொகுப்பு முதலீட்டாளர்கள் (ஃபாரின் போர்ட்போலியோ இன்வெஸ்டர்கள்) ரூ15.560கோடி மதிப்புள்ள தங்களின் பங்குகளை (ஸ்டாக்ஸ்) விற்றனர்: இவ்வாறு அவர்கள் சந்தையில் இந்த அளவு பணத்தைப் புழக்கத்தில் விட்டனர், அதற்குச் சமமான டாலர்களைப் பெற்று எடுத்துச் சென்று விட்டனர். இந்த வான் விளையாட்டு தொடர்கிறது.

          இது ஏகபோக நிதிச் சந்தையின் வித்தியாசமான காட்சி.

டாலரை விற்று, ரூபாயைப் ‘பாதுகாத்தல்’

          2022 ஜூலை முதலாக ஆர்பிஐ டாலருக்கு நிகரனான ரூபாய் மதிப்பை 79 முதல் 80க்குள் கட்டுக்குள் வைத்து ரூபாயைப் ‘பாதுகாத்து’ வருகிறது. அதன் பிறகு ஆர்பிஐ திடீரென அதனை மிதக்கட்டும் என விட்டுவிட ரூபாய் மதிப்பு 81ஐ கடந்து சரிந்து விட்டது.

      அன்னியச் செலாவணி கையிருப்புத் தொடர்ந்த ஏழாவது வாரமாகக் குறைந்து வருகிறது. 2021 செப்டம்பர் 3ல் அது உச்சத்தில் 642 பில்லியன் டாலர்களாக இருந்தது. ஆனால் அதிலிருந்து கடந்த வாரத்தில் 551 பில்லியன் டாலர்களாக, சுமார் 100 பில்லியன் டாலர்கள் அளவு தேய்மானமடைந்து, சேமிப்பு வீழ்ந்துள்ளது. ஏன்? ஏனெனில் ஆர்பிஐ சந்தையில் டாலர்களை விற்கிறது!

          2022 மார்ச்சில் ஆர்பிஐ-யின் நிகர விற்பனை 20 பில்லியன் டாலர்கள், இதனால் அன்னியச் செலாவணிக் கையிருப்பு என்ற பாதுகாப்புக் கேடயம் மிகக்கடுமையாகக் குறைந்துள்ளது. (‘ஆன முதலில் அதிகம் செலவானால் மானமிழந்து, மதிகெட்டு…. பொல்லானாம் நாடு’ என்று ‘நல்வழி’யில் ஔவையார் எச்சரிக்கிறார்)

     ஆனால் அரசோ நாட்டின் பொருளாதாரத்தில் ‘அனைத்தும் ஓகே’ என்று மேடைகளில் முழங்குகிறது!  (படம் நன்றி தோழர் TP ஜெயராமன் முகநூல் இடுகை) கையிருப்புக் குறைந்தது பற்றிக்  கவலைப்பட ஏதுமில்லை என்று

 பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் அக்கறைகளை நிராகரிக்கிறார். ஆனால் பொருளாதார நிபுணர்கள் ஆபத்தான இவ்வணிகச் செயல்பாட்டிற்கு எதிராக எச்சரிக்கிறார்கள். டாலர்களை ஈர்ப்பதற்காக மாற்று நடவடிக்கைகள் எடுப்பதைத் தவிர்த்து, அதனை ‘நிராகரிப்பதாக’ இருக்கக் கூடாது என அவர்கள் வற்புறுத்துகிறார்கள். எனவே இக்கட்டான இச்சூழலில் என்ன செய்வது?! அரசும் ஆர்பிஐ-யும் குழப்பத்தில் உள்ளன.

     பரோடா வங்கியின் முதன்மை பொருளாதார அதிகாரி ஏற்றுமதியாளர்களை அன்னியச் செலாவணியை ஒரு மாதத்திற்குள் கட்ட வற்புறுத்தும் யோசனையைக் கூறுகிறார். தங்கத்தின் இறக்குமதி மீது வரி விதிப்பது மற்றும் எண்ணெய் நிறுவனங்களுக்காகத் தனியே சாளரம் திறப்பது என்பதை அரசு பரிசீலிக்கக் கூடும். வைப்புத் தொகைகளை மீண்டும் நிரப்ப, வங்கிகள் வெளிநாட்டு வாழ் இந்தியர்களை (என்ஆர்ஐ) டாலர்களை விரைவாக டெப்பாசிட் செய்யுமாறு கேட்பதைப் பரிசீலிக்கக் கூடும்.

          மாதத்திற்கு வர்த்தகப் பற்றாக்குறை 30 பில்லியன் டாலர்களாக உள்ளது; நடப்புக் கணக்கு பற்றாக்குறை (கரண்ட் அக்கௌண்ட் டெஃபிசிட், சிஏடி) ஜிடிபிக்கு 3.5 சதவீதமாக உள்ளது; அது கடந்த ஆண்டில், 2013லிருந்து உயர்ந்தபட்ச அளவான, 1.2 சதவீதமாக இருந்தது. அதிக இறக்குமதி, குறைவான ஏற்றுமதி காரணமாக டாலர்களை இழப்பது என்பதே சிஏடி பற்றாக்குறை என்பதன் பொருள். டாலருக்கும் ரூபாய்க்கும் இடையிலான வட்டி விகித வேறுபாடு குறைந்து வருவதால் ரூபாயின் மீதான அழுத்தம் அதிகரிக்கிறது.  

ஒரு விஷச் சுற்று

சந்தையில் கையில் உள்ள பணம், மற்றும் சுலபமாகப் பணமாக மாற்றக் கூடிய எந்த வகையான வைப்புத் தொகைகள் மற்றும் பாண்டு போன்றவற்றின், புழக்கம் அதிகமானால் என்ன நடக்கும்? மற்றவற்றோடு அது பணவீக்கத்திற்கு வழிவகுக்கும். அன்னியச் செலாவணி கையிருப்புக் குறைந்தால் என்ன நடக்கும்? (டாலர் பணமாக மாற்றப்படுவதால்) சந்தையில் பணப் புழக்கம் அதிகரிக்கும்; விற்பவருக்கு அதே அளவு ஏற்றுமதி செய்யப்படும் பொருளுக்கு அதிகப் பணம் கிடைக்கும். உயர் பணவீக்கம் மற்றும் வட்டி விகித உயர்வு, பொருள் மற்றும் சேவை நுகர்ச்சி விகிதத்தையும் பொருளாதாரச் செயல்பாடுகளையும் பாதிக்கும்.

சந்தையில் அதிகப் பணப் புழக்கம் நிலவி, ரூபாய் மாற்று விகிதங்களும் வீழ்ச்சி அடையும்போது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்; பொருளாதாரச் செயல்பாடுகளுக்குள் பணத்தின் வரத்தைக் குறைக்க வட்டி விகிதங்களையும் ரெபோ விகிதங்களையும் (ஆர்பிஐ-யிடமிருந்து வணிக வங்கிகள் கடன் பெறும் வட்டி விகிதம்) அதிகரிக்க வேண்டும். பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட வேண்டும், அதற்கு முக்கிய நடவடிக்கையாகச் சந்தைக்குள் டாலர்களைக் கொண்டு வர வேண்டும்.

     பொருளாதார நிதிமூலதனமயமாக்குவதன் (ஃபினான்ஸியலைசேஷன்) அதிகரிப்பின் காரணத்தால் விளையும் விஷ வட்டம் இது.

மருந்து, நுகர் பொருட்கள், தகவல் தொழில் நுட்பம் மற்றும் பிற துறையினர் இத்தகைய தேய்மான மதிப்பிறக்கத்தால் பலன் அடைகிறார்கள், அவர்கள் ஒவ்வொரு டாலருக்கும் அதிக ரூபாயைப் பெறுகிறார்கள்: இது பணவீக்கத்தில் அழுத்தத்தைக் கொண்டு வந்து விலைவாசி உயர்வுக்கு வழி வகுக்கிறது. இறக்குமதியாளர்கள் அதே அளவு இறக்குமதி பொருளுக்குக் கூடுதலாகப் பணம் வழங்க வேண்டியிருப்பதால் அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

ஆட்டோமொபைல்ஸ், பெட்ரோலிய பொருட்கள், பல்வேறு எந்திரங்கள் போன்ற ஏற்றுமதிக்குரிய பொருட்களிலும்கூட (அதில் பயன்படுத்தப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட பாகங்களின்) இறக்குமதி மதிப்பைக் கொண்டுள்ளன. நடப்புக் கணக்குப் பற்றாக்குறை இடைவெளி அதிகரிக்கும்போது --வெளிநாட்டு முதலீட்டாளர்களால் முதலீடு செய்யப்படும் டாலர் வரத்து நாட்டிற்குள் வராத நிலையில் --இந்தப் பற்றாக்குறையை ஈடுகட்ட இந்தியா அன்னியச் செலாவணியை நாட வேண்டியுள்ளது.

ரூபாய் மற்றும் பொருளாதாரத்தைப் ஃபினான்ஸியலேஷன் மதிப்பிறக்குகிறது

2022 தொடக்கம் முதல் அன்னியத் தொகுப்பு முதலீடுகள் (ஃபாரின் போர்ட்போலியோ இன்வெஸ்ட்மெண்ட், ஃஎப்பிஐ) நிகர அளவு 23 பில்லியன் டாலர்கள் விற்கப்பட்டது; அது பணவீக்கம் மற்றும் ரூபாய் மதிப்பிழப்பிற்கு வித்திட்டது. 2021அக்டோபர் முதலாக 3லட்சம் கோடிக்கு மேல் ஃஎப்ஐஐ எனும் அன்னிய நிறுவன முதலீடுகள் இந்தியப் பங்குச் சந்தையில் விற்கப்பட, அது மேலும் பணவீக்கத்திற்குக் காரணமானது. சுதந்திரமடைந்தது முதல் வேறு எந்த அரசும் போலன்றி, 2014 முதலாக ஒன்றிய அரசு வலதுசாரி பிற்போக்குப் பொருளாதாரக் கொள்கையைப் பின்பற்றுகிறது; விரல்விட்டு எண்ணும் சில ஏகபோக நிதி முதலாளித்துவத் தன்னலக் குழுக்களின் சார்பான (அலிகார்க்கி) பிரதிநிதிபோலச் செயல்பட்டு வருகிறது. அவர்கள் பொருளாதாரத்தைத் தங்கள் சுயலாபத்திற்காக மனம்போனபடி நடத்துகிறார்கள். (ஏகாதிபத்தியக் கட்டத்தில் முதலாளித்துவ நாடுகளின் பொருளாதார மற்றும் அரசியல் வாழ்வில் நிதிமூல முதலீட்டாளர்களின் அதிகாரச் செல்வாக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தன்னலக்குழுவினர் ஆட்சியே –அலிகார்க்கி --எனப்படும்.) சந்தையிலிருந்து பணத்தைத் திரும்பப் பெற்ற பணமதிப்பிழப்பு நடவடிக்கை (டிமானிடைசேஷன்) ஏகபோகவாதிகளுக்கு ஆதரவாகவே எடுக்கப்பட்டது; பெரும் தொகைகள் திரும்பப் பெறப்பட்டு சிலர் கைகளில் குவிக்கப்பட்டது. கூடுதலாக, நிதிப் பற்றாக்குறையைச் சந்திப்பதற்காகப் பெருமளவிலான புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிகத் தொடங்கப்பட்டுள்ளது.

உலகின் நூறுகோடி சொத்துடைய பெரும்பணக்காரர்கள் பட்டியலின் முதல் பத்து இடங்களில் சேர அதானிகளுக்கும் அம்பானிகளுக்கும், கோவிட் ஊரடங்குகள்,  பொன்னான வாய்ப்புக்களை அளித்தது. சொத்துகள் மற்றும் எளிதில் பணமாக்கக்கூடிய பாண்டுகள் முதலான பணத்தின் பெருமளவிலான தொகையைக் குவிப்பதன் மூலமாகவும், பொதுச் சொத்துகள் மற்றும் ரியல் எஸ்டேட்டுகளை விற்பதன் வாயிலாகப் பணத்தை வெள்ளமெனச் சந்தையில் பாயவிடுவதன் மூலம் இந்த வாய்ப்புகள் 

வழங்கப்பட்டன. ரூபாய் மதிப்பு சுழன்று தள்ளாடிய போதும், அவர்களுடைய சொத்துகள் மட்டும் அக்காலகட்டத்தில் இரட்டித்தது. (ஆனால் இந்தியாவோ உலகப் பட்டினிக் குறியீட்டில் 101வது இடத்திற்குத் தள்ளப்பட்டது) இவ்வாறுதான் நிதிமூலதனப் பொருளாதாரம் நடக்கிறது, அங்கே ரூபாய் மதிப்பின் பொருளாதாரம் சரிகிறது –இவை மக்கள் நலனைக் காவுகொடுத்துப் பரஸ்பரம் ஒன்றுக்கொன்று ஆதரித்து உதவுகிறது.

        நமது நாட்டின் பொருளாதாரம் இறக்குமதி சார்ந்ததாக மாறி வருவதுடன், அமெரிக்கா தலைமையிலான உலகப் பொருளாதாரத்துடன் பிணைக்கப்
பட்டுள்ளது; அதனோடு உடன் பிறவாத ஒன்றாக உலகை அச்சுறுத்தும் பணவீக்கமும் விலைவாசிகளின் உயர்வும் இந்தியாவையும் பாதித்துள்ளது. ஆனால் 2008லும் உலகப் பொருளாதாரம் கடுமையான நெருக்கடியைக் கடந்து வந்தது;
இருந்தபோதினும்
இந்தியா நடைமுறையில் ஏறத்தாழ அந்நெருக்கடியால் பாதிக்கப்படாமல் இருந்ததுஅதற்கு முக்கிய காரணம் இந்தியாவிடம் நெருக்கடிகளின் தாக்குதலைத் தாக்கும் பிடிக்கும் பாதுகாப்பாக வலிமையான பொதுத்துறை இருந்தது. எனவே உலகப்                                                   பொருளாதார நெருக்கடி நம்மைப் பாதிக்கவில்லை.

இப்போதும் பொதுத் துறை இருக்கிறது, ஆனால் குறிப்பிடத்தக்க அளவு பலவீனமாக்கப்பட்ட நிலையில் உள்ளது; பொதுத் துறையின் பங்களிப்பைக் கட்டம் கட்டமாக நிதிமூலதன ஏகபோகத் தன்னலக் குழுக்களின் கைகளில் வழங்கப்பட்டு வருகிறது. உலகப் பொருளாதாரத்தின் வேர்களை அசைத்த உலக நெருக்கடிக்கு எதிராக –இந்தியாவைத் தொடக்கூட முடியாததொரு -- வலிமையான சுவராகப் பொதுத் துறை நின்றது. மோடியின் தலைமையிலான தற்போதைய ஒன்றிய அரசு நெருக்கடியைச் சந்திக்க உதவியாகப் பொதுத்துறையை நாடுவதற்குப் பதிலாக நிதி மூலதனத்தை நாடி ஓடுகிறது.

அரசு தனது கொள்கைகளை நியாயப்படுத்த உலக நெருக்கடியை ஒரு சாக்காகப் பயன்படுத்துகிறது.

உற்பத்தி எதிர் ஃபைனாஸ் கேபிடல்

இந்தியா உற்பத்திக்கான முதலீடுகளை இழந்து யூக வணிக முதலீட்டைப் பெறுகிறது. சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) மற்றும் வளம் சேர்க்கும் உற்பத்தி மையங்கள் எல்லாம் நாட்டிற்கு மிக அவசியத் தேவையான அன்னியச் செலாவணியைப் பாதுகாக்கும் வலிமை உள்ளவை, வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கக் கூடியன. ஆனால் பாஜக தலைமையிலான அரசு அவற்றைச் சீர்குலைத்து அழிக்கிறது. (உதாரணமாக அன்னியச் செலாவணியை ஈட்டித் தந்த சிறுகுறு நிறுவனங்களைச் சார்ந்த திருப்பூர் பனியன் உற்பத்தி ஆலைகள் பாதிக்கப்பட்டு, ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது.) அதிகாரபூர்வ தகவல்களும்கூட இதனை உறுதிப்படுத்தியுள்ளன. கோவிட் பெருந்தொற்றின்போது நிலைகுலைந்த அந்நிறுவனங்கள் இன்னும் மீண்டு எழவில்லை.

உற்பத்திப் பிரிவுக்கு முதலீடு அதிகரித்தால் உற்பத்தி அதிகரித்து நாட்டின் பொருளாதாரம் மட்டுமின்றி, அவை சார்ந்த மக்களின் வாழ்வாதாரமும் சமூக வாழ்க்கை நிலையும் மேம்படும். அவ்வாறன்றி, உற்பத்தி சாராத நிதிமூலதனம் மற்றும் யூக வர்த்தகப் பிரிவு பெருமளவு லாபம் மற்றும் சொத்துகளைப் பணப் பொருளாதாரத்திலிருந்து (மணி எக்கானமி) உறிஞ்சி –வான வெளியின் கருந்துளைபோல –விழுங்கிவிடுகின்றன! யூக வணிக நிதி, பணப் பொருளாதாரம் மற்றும் உற்பத்தியில் பின்னடைவு நாட்டின் பொருளாதாரத்தில் பேரழிவு குழப்பத்தை ஏற்படுத்தி விளையாடுகிறது.

உற்பத்தியில் முதலீடு செய்வது, உற்பத்தியைப் பெருக்குவது, அதன் மூலம் லாபம் ஈட்டுவது என்பது உற்பத்தி சார்ந்த பொருளாதாரம். அதற்கு மாறாக, உற்பத்திக்கு உதவாத யூக வணிகம் (பங்குச் சந்தை) மற்றும் நிதிமூலதனத்தில் முதலீட்டை முடக்குவது உற்பத்தி சாராத பொருளாதாரம். இவை இரண்டிற்கும் இடையேயான முரண்பாடு, மோதல் வேகமாக வளர்ந்து வருகிறது, நெருக்கடியை ஆழமாக்குகிறது.

--நன்றி : நியூஏஜ் (அக்.2—8)
         --தமிழில் : நீலகண்டன்,
          என்எப்டிஇ, கடலூர்

No comments:

Post a Comment