Thursday 30 December 2021

பெண்களின் திருமண வயதை உயர்த்தும் மசோதா -- ஆனி ராஜா விமர்சனம்

                                                       


     பெண்களின் திருமண வயதை உயர்த்தும் மசோதா

 திரைமறைவு அரசியல் நோக்கம் கொண்டது

--ஆனி ராஜா

(பொதுச் செயலாளர், இந்திய மாதர் தேசிய சம்மேளனம்)

            பெண்களின் சட்டபூர்வத் திருமண வயதை 18லிருந்து 21 வயதாக உயர்த்த இந்திய அரசு 2021, டிசம்பர் 21அன்று மக்களவையில் ‘குழந்தைத் திருமணத் தடைச் சட்டம், 2006’  திருத்த மசோதா (மசோதா எண் 163 ஆண்டு 2021) தாக்கல் செய்துள்ளது.

            இந்து, கிருஸ்துவ, முஸ்லீம், பார்சி மதங்கள் சார்ந்த அந்தந்த மதத்தினர் சம்பந்தமான திருமணம், மணமுறிவு, தத்து எடுத்தல், ஜீவனாம்சம் தொடர்பான (இந்து திருமணச் சட்டம் 1955, இந்திய கிருஸ்துவர்கள் திருமணச் சட்டம் 1872, முஸ்லீம் தனிநபர் சட்ட அமலாக்கச் சட்டம் 1937, பார்சி திருமண மற்றும் மணமுறிவு சட்டம் 1936 மற்றும் சிறப்புத் திருமணச் சட்டம் 1954, வெளிநாட்டவர் திருமணச் சட்டம் 1969) சட்டங்களில் திருத்தம் செய்வது மசோதாவின் நோக்கம். தற்போது நடைமுறையில் உள்ள பாரம்பரியம், பழக்க வழக்கம், திருமண நடைமுறைகள் குறித்து மசோதா குறிப்பிடுகிறது.

            பெண்களுக்கான சட்டபூர்வ திருமண வயதை உயர்த்தும் இந்தத் திருத்தத்தின் மூலம் வேலைவாய்ப்பு மற்றும் கல்வியைத் தொடரவும், ஆரோக்கியமான குழந்தைப் பேறுக்காக உடல் நலனைக் காக்கவும் பெண்களுக்கு வாய்ப்பு ‘வழங்குவதாக’ பாஜக அரசு பெருமை பேசுகிறது. சமத்துவம், பெண்களுக்கு அதிகாரமளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக அரசு கூறுகிறது.

மசோதாவில் சொல்லப்பட்ட நோக்கம்

            மேலெழுந்தவாரியாகப் பார்க்க, உத்தேசிக்கப்பட்டுள்ள இம்மசோதா பெண்களுக்குச் சார்பானதாக, முற்போக்கானதாகத் தோன்றினாலும், நெருக்கமாக ஆராய்ந்தால் உண்மை அதற்கு நேர்மாறானது என்பது விளங்கும். பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது, குறிப்பாக அவர்களின் ஊட்டச்சத்து, கல்வி, தாய்- சேய் மரண விகிதம் முதலானவற்றை மேம்படுத்த வேண்டும் என்பது சொல்லப்பட்ட நோக்க இலக்குகள்; அவர்களது குடும்பத்தினர், சமூகம், (கலாச்சார) கண்காணிப்பு தனி அமைப்புகள் அல்லது அரசு இவற்றின் வற்புறுத்தல் இன்றி பெண்கள் தன்னாட்சியுடன் குறிப்பாக வயது வந்த பெண்கள் தங்கள் திருமணம், குழந்தை பெறுதல் முதலானவற்றை முடிவெடுக்கும் உரிமை உட்பட அனைத்து வகையிலும் பெண்கள் அதிகாரமளிக்கப்பட வேண்டும் என்பது நோக்கம்.

அதற்காகவே திருமண வயதை உயர்த்துவது என்ற அரசு நடவடிக்கை மேற்குறிப்பிட்ட பிரிவுகளில் அரசின் பிற செயல்பாடுகளோடு ஒத்துச் செல்லவில்லை என்பது நமது ஆய்வின் கருத்து. மேற்சொன்ன இலட்சிய இலக்குகள் மீதான உறுதிப்பாட்டை இந்திய மாதர் தேசிய சம்மேளனம் (NFIW) மீண்டும் உறுதியாக வற்புறுத்துகிறது. மேலும் இந்த நோக்கங்களைப் பெண்களின் திருமண வயதை உயர்த்துவதன் மூலம் சாதித்துவிட முடியாது என மாதர் சம்மேளனம் உறுதிபடக் கூறுகிறது. எதார்த்தத்தில் நிலவும் பெண்களின் அந்தஸ்து நிலையை ஒப்பிட, பெண்களுக்கு ‘அனைத்து வகையிலும் முழுமையாக’ அதிகாரமளிப்பதை, அவர்களின் திருமண வயதை அதிகரிப்பதன் மூலம், சரி செய்துவிட முடியாது.

            தேசத்தின் செல்வாதார வாய்ப்புக்கள் மற்றும் நீதியைப் பெறுவதில் பெண்களுக்குச் சமத்துவமற்ற பெரும் பிரச்சனைகள் உள்ளன. பெண்கள் திருமண வயதை உயர்த்துவதை மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் கருவியாகப் பயன்படுத்துவது ஒரு சமூகத்தினரையும் சமுதாயத்தின் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களையும் (பாதிக்கும்) நோக்கமுடையதாகச் செலுத்திவிடும். வெளியே சொல்லப்படும் நோக்க இலக்குகளுக்கும், அதை எட்டுவதற்கான அமைப்புநிலை வசதிகளுக்கும் இடையே ஆழமான முரண்பாடுகள் நிலவுகின்றன; அத்தகைய வாய்ப்பு வசதி குறைபாடு தரமான கல்வியைப் பெறுவதில், குறிப்பாகப் பெண் குழந்தைகள் மற்றும் சமூகத்தின் விளிம்புநிலையிலிருந்து வருபவர்களைத்  தரமான கல்வியைப் பெற இயலாதவராக்குகிறது.

கல்வி நிலை :

விளிம்புநிலையில் உள்ளவர்களுக்கு உயர் கல்வியைப் பெறுவது ஏறத்தாழ முடியாத ஒன்று. பத்தாம் வகுப்புவரை உள்ள கிராமப்புற அரசுப் பள்ளிகள், கற்பிக்கும் ஆசிரியர்கள் பற்றாக்குறை மற்றும் முறையான கட்டமைப்பு வசதிகள் அற்ற நிலையில் உள்ளன. இக்குறைபாடு இலட்சக் கணக்கான பெண் குழந்தைகள் 10ம் வகுப்பைக்கூட அடைய முடியாதவராகத் தவிர்த்துவிடுகிறது.

2013 -14ம் ஆண்டிற்கான ‘கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்டத் தகவல் முறைமை’ அறிக்கையின்படி, தொடக்கநிலை பள்ளிக் கல்வியில் 6கோடிக்கும் அதிகமான பெண் குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு 2019 –20ம் ஆண்டு நடுநிலைக் கல்வி மட்டத்தில் பள்ளிகளில் அதே எண்ணிக்கையில் பெண்குழந்தைகள் இருக்க வேண்டாமா? ஆனால் அவ்வாண்டிற்கான அறிக்கையில் வெறும் 35 லட்சம் பெண் குழந்தைகள் மட்டுமே நடுநிலை மட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது. அதன் பொருள், 5கோடியே 65லட்சம் பெண் குழந்தைகள் தொடக்கக் கல்வியோடு இடை நிறுத்தப்பட்டுவிட்டார்கள் என்பதே. அப்படி ஐந்தாம் வகுப்போடு இடை நிறுத்தப்பட்டவர்கள் எப்படித் தங்கள் 18வது வயதில் பட்டக் கல்வியில் சேர முடியும்? எப்படி அவர்கள் அதிகாரமளிக்கப்படுவர்?

இந்தியப் பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம்

            உடல்நலன், ஆரோக்கியம் என்பது மிக மிக முக்கியமான பிரச்சனை; அப்பிரச்சனைக்கு விரைவாகத் தீர்வு காண, உறுதியான செயல்பாடுகள், விஞ்ஞான மற்றும் அறிவார்ந்த அணுகுமுறை வேண்டும். குறிப்பாக இரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் அதிகரிக்கும் தாய் – சேய் மரண விகிதங்களை முதலில் தடுத்து நிறுத்த விரைவான நடவடிக்கை தேவை. (தாய் – சேய் மரண விகிதம் (maternal and infant mortality) என்பது ஊட்டச்சத்து குறைபாடு, இரத்த சோகையால் பாதிப்புக்குள்ளாகும் கர்ப்பிணி தாய்மார்கள் பிரசவத்தின்போது மரணமடையும் எண்ணிக்கை, பிறந்த குழந்தை 5 வயதிற்குள் மரணமடையும் எண்ணிக்கையையும் குறிப்பிடுவது.)

வேறுசில ஆய்வு அறிக்கைகள்

            சமீபத்தில் வெளியான ‘உலகப் பட்டினி குறியீடு பட்டியல்’ (க்ளோபல் ஹங்கர் இன்டக்ஸ்) அறிக்கையில் 116 நாடுகளில் இந்தியா 101 இடத்தில் உள்ளது. நாடுகளின் சூழ்நிலை, மக்களின் ஊட்டச் சத்து குறைபாடு, ஐந்து வயதுடைய குழந்தைகளில் i) வயதுக்கு ஏற்ற எடையின்றி மெலிந்து இருப்பது (சைல்டு வேஸ்ட்டிங்) ii) வயதுக்கு ஏற்ற உயரம் இன்றி குள்ளமாக இருப்பது (சைல்டு ஸ்டண்டிங்) மற்றும் iii) ஊட்டச்சத்தின்றி இறந்து போவது (சைல்டு மார்ட்டாலிட்டி) போன்ற காரணிகளின் தரவுகள் அடிப்படையில் அப்பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

ஒன்றிய அரசின் ‘தேசிய குடும்பநல ஆய்வு -5’ (NFHS-5)அறிக்கையின்படி ஆறு வயதிற்குக் கீழ் உள்ள இந்திய தேசத்தின் குழந்தைகளில் 67% இரத்த சோகையில் பாதிக்கப்பட்டுள்ளனர். இது அதற்கு முந்தைய 4வது அறிக்கையில் 58.6 சதவீதமாக மட்டுமே இருந்தது. அதே போல ஐந்து வயதிற்குக் கீழுள்ள குழந்தைகளில் குள்ளமாவது 36%, வயதுக்கேற்ற எடை இல்லாது இருப்பது 19% மற்றும் எடை குறைவான குழந்தைகள் 32.1 சதவீதமாக உள்ளது என அறிக்கை கூறுகிறது. தாய் சேய் மரண விகிதத்திற்கு முக்கிய காரணம் பெண்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் இரத்தசோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு அதிகமாக இருப்பதேயாகும். குடும்ப நல சர்வே அறிக்கை 5ன்படி, கர்ப்பிணி அல்லாத 15 வயதிலிருந்து 49 வரையான பெண்களில் இரத்த சோகை 53.2 சதவீதத்திலிருந்து 57.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதே நிலைதான் கர்ப்பிணித் தாய்மார்களிடமும் காணப்படுகிறது.

மோசமான பொருளாதார நிலை

            இன்றைய பொருளாதார நிலை என்பது வேலை வாய்ப்பு இல்லாத மற்றும் பணி இழப்பு ஏற்படுத்தும் வளர்ச்சியாக உள்ளது; இந்த நிலைமை இளம் பெண்களுக்குப் பொருளாதார அதிகாரமளிப்பதை வெகுவாகப் பாதிக்கிறது. தொழிலாளர் உழைப்புச் சக்தியில் பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு  தற்போது 20 சதவீதமாக மிகவும் குறைந்துள்ளது என ‘தேசிய சாம்பிள் சர்வே அமைப்பின் (NSSO)’ சமீபத்திய ஆய்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது. அங்கன் வாடிகளிலும், ஆஷா மற்றும் மதிய உணவுப் பணியாளர்களாகவும் ஆண்டுக் கணக்காகப் பணியாற்றும் இலட்ச இலட்சமான பெண்கள், தொழிலாளர்களாகவே அங்கீகரிக்கப்பட்டதில்லை. பள்ளிகளில் மதிய உணவு சமைக்கும் சமையல்காரர்களுக்குப் பணி நியமனத்தில் கூறப்பட்ட கடமைகளைத் தவிரவும் பெருக்குதல், கழிவறைகளைத் தூய்மை செய்தல், பள்ளி முதல்வர் வீட்டில் அன்றாட வீட்டுப் பணிகள் கட்டாயப்படுத்தப்பட்டு சுரண்டலுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.

            அதே போன்ற நிலையில் இருப்பவர்களே ஆஷா பணியாளர்களும் (ASHA, ‘அக்கிரிட்டெட் சோஷியல் ஹெல்த் அக்டிவிஸ்ட்’, அதாவது பயிற்சி பெற்ற ‘பொது ஒப்புதல் அளிக்கப்பட்ட சமூகச் சுகாதாரச் செயல்பாட்டாளர்’). கிராமங்களில் யாருக்கு எந்த நேரத்தில் என்ன உடல்நல பாதிப்பு என்றாலும் அவர்களை முதலில் கவனிக்கும் சுகாதாரப் பணியாளர் ஆஷாதான். நள்ளிரவில் ஒரு கர்ப்பிணித் தாய் அழைத்தாலும் சென்று கவனித்து அவர்களை மருத்துவமனையில் சேர்க்கத் தயாராக இருக்க வேண்டியவரும் அவர்தான். அவர்கள் எல்லாம் தன்னார்வத் தொண்டர்கள் என அழைக்கப்படுகின்றனர். இப்படிப்பட்ட பணியாளரின் உழைப்பைப் புறக்கணித்து அவர்களைத் தொழிலாளர்கள் என அடையாளப்படுத்தவும் முற்றாக மறுக்கப்படுகிறது.

ஊதிய இடைவெளி

            உலகப் பொருளாதார ஃபோரம் என்ற அமைப்பின் உலகப் பாலின இடைவெளி 2021 அறிக்கையில் 156 நாடுகள் தரவரிசை பட்டியலில் இந்தியாவுக்கு 140வது இடம்; இந்தியாதான் தெற்காசியாவில் மோசமாகச் செயல்படும் மூன்றாவது நாடு. பொருளாதாரச் செயல்பாடுகளில் ஈடுபடுவது மற்றும் வாய்ப்புகள் குறித்த துணை குறியீடு பட்டியலில் பெண்களின் நிலை சரிந்துள்ளதாகச் சுட்டிக் காட்டுகிறது: “சரிவை ஏற்படுத்தும் காரணிகளில் பெண்களின் உழைப்புச் சக்தி பங்கேற்பு விகித வீழ்ச்சி, நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்பப் பணிகளில் பெண்கள் பங்களிப்பு குறைவது,  மூத்த மேலாண்மைப் பொறுப்புக்கள் மற்றும் மேல்நிலையில் பெண் மேனேஜர்கள் எண்ணிக்கை சரிவு என – அனைத்துப் பிரிவுகளிலும் பெண்களின் நிலையில் சரிவே ஏற்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் பெண்கள் ஈட்டிய வருமானம், மதிப்பீட்டின்படி ஆண்களின் வருமானத்தில் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே என்பது இந்தியாவை உலகளாவிய இந்தக் குறியீட்டுப் பட்டியலின் கடைசி பத்து இடங்களில் தள்ளி உள்ளது” என அறிக்கை கூறுகிறது.

முன்னோக்கிச் செல்வதற்கான வழி

            இந்த நாட்டின் பெண்கள் உண்மையாகவே நன்றாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டுமெனில்; அரசியலமைப்புச் சட்டம் உறுதியளித்த சமத்துவம் மற்றும் கௌரவமான குடியுரிமையை வழங்கிடவும்; தரமான இலவச மற்றும் வேலைவாய்ப்புப் பெற தகுதியுடையதாக்கும் கல்வியை உறுதி செய்வதில் நமது கவனம் ஊசலாட்டமற்றுக் குவிக்கப்பட வேண்டும்; மேலும் ஊட்டச்சத்து மற்றும் தரமான சுகாதாரம் பேணல் வசதி (அது மருத்துவக் காப்பீடு வழங்குவது அல்ல) கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்; இளம் பெண்களுக்கு மனநிறைவான உறுதியளிக்கப்பட்ட கௌரவமான வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பான பணியிடம்; வன்முறையற்ற பாதுகாப்பான சமூகச் சூழ்நிலை; திருமணம் குறித்துப் பெண்களுக்குச் சுயேச்சையான மற்றும் முடிவெடுக்கும் அதிகாரம் அளித்தல். இவற்றையெல்லாம் உறுதி செய்து கிடைக்கச் செய்தால், பின்னர் அதுவே தன்னியல்பாக பெண்களின் திருமண வயதைப் பொருத்தமாக உயர்த்தச் செய்யும். (மாறாக, இந்த வசதி வாய்ப்புகளை அளிக்காமல் எந்திரத்தனமாக திருமண வயதை உயர்த்த சட்டம் கொண்டு வருவதால் பயனில்லை.)

            எனினும் மேற்குறிப்பிட்ட வாய்ப்புகளை அளிக்கும் அனைத்துப் பிரிவுகளும் தீவிரமாக தனியார்மயப்படுத்தப்படுவது மிகவும் துரதிருஷ்டமானது. இது மேலும் அவர்கள் வாய்ப்புக்களை –குறிப்பாக மிகவும் விளிம்புநிலை மற்றும் சமூகத்தின் நலிந்த பிரிவுகளைச் சேர்ந்த பெண்களுக்கு – எட்டாமல் செய்துவிடும்.

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் முதலியன

          தேசிய உணவு பாதுகாப்புச் சட்ட அமலாக்கம் குறித்துப் பிரதமரும் அரசும் விவாதிக்க வேண்டிய நேரத்தில், அச்சட்டத்தைக் குறிவைத்துத் தாக்கி ஆதார் உடன் இணைக்கப்படுகிறது. இதனால், பெருமளவில் மக்கள் உணவுப் பாதுகாப்பின்றி விலக்கப்பட்டு, சட்டத்தின் பயன் மறுக்கப்படுகிறது. 1975 அக்டோபர் 2ம் நாள் கொண்டுவரப்பட்ட “ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்ட சேவைகள்” (இன்டெகிரேட்டட் சைல்டு டெவலெப்மெண்ட் ஸ்கீம், ICD Scheme) குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும். உலகின் மிகப்பெரிய இந்தச் சமூகநலப் பாதுகாப்புத் திட்டம், ஆறு வயதிற்கு உட்பட குழந்தைகளின் ஊட்டச்சத்து, உடல்நலன் மற்றும் மன நலம் உள்ளிட்ட ஆரோக்கியத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. (மேலும் 16லிருந்து 44 வயது வரையான கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் உடல்நலத்தைப் பேணுவதுமாகும்.) இதன் மூலம் தாய் சேய் இறப்பு, நோய்வாய்ப்படுதல் மற்றும் குழந்தைகள் கல்வி இடைநிற்றல் முதலியவற்றைக் குறைப்பதும் திட்டத்தின் நோக்கம். மேலும் திட்டத்தின் பயனை எஸ்சி எஸ்டி பிரிவினர் அடையுமாறு நீட்டித்து இளம் குழந்தைகள் மற்றும் பெண்கள் இடையேயான உறவுப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும், பாலின சமத்துவ உணர்வு உடைய வாழ்க்கை அணுகுமுறையை ஏற்படுத்துவதையும் மேம்படுத்தப்பட வேண்டும். ஆனால் இந்தச் சமூகநலத் திட்டங்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு தொடர்ச்சியாகக் குறைக்கப்படுவதால் தற்போது இத்திட்டம் சீர்குலைக்கப்படுகிறது. எனவே நாடாளுமன்ற அவைகளில் விவாதிக்க வேண்டும். உணவு பாதுகாப்புச் சட்டத்தை மேலும் வலிமையாக்கி, அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் குறைந்த விலையில் கிடைக்கச் செய்வதாய் பரவலாக அனைவருக்கும் விஸ்தரிக்க வேண்டும். பேறுகால விடுமுறை, மருத்துவ வசதி  முதலிய பேறு கால வசதிகளும் பெண்கள் அனைவருக்கும் என பரவலாக்கி உறுதிப்படுத்த வேண்டும்.

சமூகநலத் திட்டங்களின் பயன்

            புள்ளிவிபரங்கள், எண்ணிறைந்த ஆய்வுகள் மற்றும் ஆய்வு முடிவுகள், பெண்களுக்கு அதிகாரமளிப்பதோடு சமூக நலத் திட்டங்கள் மற்றும் சேவைகள் கிடைக்கச் செய்வதை இணைத்துத் தொடர்புபடுத்துகிறது. இந்த மெய்மைக்கு முக்கியத்துவம் கொடுத்தே, பெண்களின் அனுமதிக்கப்பட்ட சட்டபூர்வத் திருமண வயதை உயர்த்துவது நிச்சயமாக பெண்கள் நலனுக்கான தீர்வாக ஒருபோதும் இருக்க முடியாது என்பதை உறுதிபடக் கூறுகிறோம். மாறாக, முக்கியமான உடல்நலம், கல்வி, வேலைவாய்ப்பு முதலிய பிரிவுகள் மீது கவனம் குவிக்கப்பட வேண்டும்.

            2006 குழந்தை திருமணத் தடை சட்டம் அமலான பிறகும், நமது நாட்டில் குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவது வழக்கமாக உள்ளதென அரசே கூறுகிறது. நடைபெறும் திருமணங்களில், இந்தியாவில் பெண்களின் சட்டபூர்வ திருமணத்திற்கான 18 வயது வரும்முன்னர் (அதாவது அவர்கள் சட்டப்படி குழந்தையாக இருக்கும்போதே) ஏன் 23 சதவீதமான திருமணங்கள் நடைபெறுகின்றன என்பது குறித்து நாடாளுமன்றம் அவசரமாக விவாதிக்க வேண்டும் என்பது மாதர் சம்மேளனத்தின் கருத்து. வரதட்சிணை சட்டமும் பெரும்பாலும் பயன்படுத்தப்படுவதில்லை. சட்டங்கள் இருந்தும் அவை ஏன் முடமாக்கப்பட்டு நீதி தேவைப்படும் நிலையில் உள்ள பெண்களாலும் பயன்படுத்தப்படுவதில்லை என்பதற்கான காரணங்களையும் நாடாளுமன்றம் மறுபரிசீலனை செய்து விவாதிக்க வேண்டும்.

அரசியல் பாலினச் சமத்துவம்

            மிக முக்கியமாக அரசியல் பாலினச் சமத்துவத்தை உறுதி செய்ய ‘பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா’வை நிறைவேற்றுவது மிகப் பெரிய நடவடிக்கையாக இருக்கும். நாடாளுமன்றத்தில் அம்மசோதா தாக்கல் செய்யப்பட்டு 25 ஆண்டுகள் கடந்து விட்டன. முடிவெடுக்கும் உச்சபட்ச அதிகார அமைப்புக்களான நாடாளுமன்றம், சட்டமன்றங்கள் போன்றவைகளின் நிகழ்முறையில் பெண்களுக்கான வெளி இருக்குமானால், அவர்களால் விவாதங்களில் பயனுள்ள வகையில் பங்களிப்புச் செய்ய இயலும்; ‘பட்டங்கள் ஆள்வதிலும் சட்டங்கள் செய்வதிலும்’ பொதுவாக பெரிதும் சமூகத்திலும் குறிப்பாக பெண்களுக்கு உண்மையில் பயனுறுமாறும் பங்கேற்க இயலும். இந்தியாவில் பாராளுமன்ற ஜனநாயகம் நடைமுறைக்கு வந்து 75 ஆண்டுகள் கடந்த பின்னும் பாராளுமன்றத்தில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை வெறும் 14 சதவீதமாக இருக்கிறது என்பது அவமானமில்லையா?

            ஓர் அதிர்ச்சி அளிக்கும் உண்மை, தற்போது ‘குழந்தைத் திருமணத் தடை (திருத்த) மசோதா 2021’ குறித்து பரிசீலிக்க உள்ள நாடாளுமன்ற நிலைக் குழுவில் ஒரே ஒரு பெண் உறுப்பினர் மட்டுமே இடம் பெற்றுள்ளார். அதன் பொருள், பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்பது என்ன என்பதையும், ஒரு பெண் எந்த வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதையும் ஆண்கள் முடிவு செய்யப் போகிறார்கள் என்பதுதான்.

            பெண்களின் விருப்பத் தேர்வுகள், பெண்களின் வாழ்வு மீது அதிகாரம் செலுத்துவது மற்றும் கட்டுப்படுத்துவது என்பதில் அரசு கவனம் செலுத்த முயல்கிறது; அதற்கு மாறாக, இந்த நாட்டின் பெண்கள், சமூக அரசியல் நீதியை உறுதிப்படுத்துவதற்காக நீண்ட காலமாகக் கோரிவரும்  நாடாளுமன்றங்களில் தங்களுக்கான நிலைத்த பிரதிநிதித்துவத்தை வழங்கிடும் வழிமுறைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

            உரிமைகளும் நீதிகளும் மறுக்கப்படுவது பெண்களின் மீதான வன்முறையே. அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய சமத்துவம் மற்றும் நீதிக்கான பெண்களின் உரிமைகளை உறுதிப்படுத்த ஒன்றிய அரசு பின்வருவனவற்றை வழங்க பொறுப்பேற்க வேண்டூம் : அவை, முதுகலை பட்டப்படிப்பு வரை பெண்களுக்கு இலவசக் கல்வி வழங்குதல், திறன் மேம்பாடு, வேலை வாய்ப்புகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு வன்முறையற்ற சூழலை உருவாக்கத் தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களின் உறுதியான அமலாக்கம். இந்தத் திசைவழியில் அரசு நிர்வாக அமைப்பு மற்றும் சமூகத்தின் கட்டமைப்பு மாற்றங்களோடு உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதே பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான பாதை.

            

புத்தாண்டில் அத்தகைய பாதைக்கான 

விடியல் பிறக்கட்டும்! வாழ்த்துகள்! 

--நன்றி : நியூஏஜ்(டிச.26 – ஜன.1)

           --தமிழில்: நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

 

No comments:

Post a Comment