Tuesday 7 December 2021

தேபகா இயக்கத்தின் பவள விழா கொண்டாட்டம்


தேபகா இயக்கத்தின் பவள விழா கொண்டாட்டம்

-- சுபோத் தத்தா

(படம், தெற்கு தினாஜ்பூர் மாவட்டத்தின் பலூர்காட் என்ற இடத்தில் உள்ள நினைவுச் சிலை)

            (கொல்கட்டா, பஸீர்ஹட்டிலிருந்து) முன்பு விவசாயிகள் இயக்கத்தின் புனிதபூமியான பஸீர்ஹட்டில் ‘தேபகா இயக்கத்தின்’ 75வது ஆண்டு பவள விழா 2021, நவம்பர் 24ல் கொண்டாடப்பட்டது. 1946ல் தொடங்கிய அந்த இயக்கம் 1950வரை நீடித்தது. அக்காலத்தில் பெருநிலக்கிழார்களான ஜோடேதார் (Jotedars, ஜமீன்தார்) நிலத்தில் ஒப்பந்த அடிப்படையில் விவசாயம் செய்த பர்க்காதார்கள் (Bargadars, குத்தகை விவசாயிகள்) விளைச்சலில் பாதியை நிலவுரிமையாளர்களுக்குத் தர வேண்டியிருந்தது. விளைச்சல் பங்கை மூன்றில் ஒரு பங்காகக் குறைக்க வேண்டும் என்பது தேபகா இயக்கத்தின் கோரிக்கை. அவ்வாறு பிரிக்கும் முன் அறுவடையான தானியத்தைத் தங்கள் வசமே வைத்திருப்போம், ஜோடேதார்களின் பண்ணையில் வைக்க மாட்டோம் என்றும் வற்புறுத்தினர். மேலும் வங்கத்தின் நில வருவாய் ஆணையம், அதேபோன்ற சிபார்சையும் அரசுக்கு அறிக்கையாகத் தந்திருந்தது. தேபகா இயக்கப் போராட்டத்தில் ஜோடேதார்களுக்கும் பர்க்காதார்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

            போராட்டம் காரணமாக அம்மாகாணத்தின் முஸ்லீம் லீக் அமைச்சரவை பர்க்கதாரி சட்டம் கொண்டு வந்தது; அந்தக் குத்தகைச் சட்டம் அறுவடையான மொத்த தானியத்தில் மூன்று ஒரு பங்கை நிலவுடைமையாளருக்கு வழங்கும் வகையில் வரையறுத்தது. நிலவருவாய் ஆணையமும் (ஃப்ளவ்டு கமிஷன் என்று அதன் தலைவரான சர் ஃபிரான்சிஸ் ஃப்ளவ்டு பெயரிலும் அழைப்பர்; பிரிட்டீஷ் அரசு அதிகாரியும் தூதுவருமான அவருடைய சேவையைப் பாராட்டி மிக அபூர்வமாக மூன்று நைட்கூட் சிறப்புப் பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது) குத்தகைதாரர்களுக்கு ஆதரவான சிபார்சுகளைத் தந்தது.

பிரிக்கப்படாத 24 பர்க்கானாவில் போராட்ட இயக்கம்

            1943 வங்கப் பஞ்சத்தின்போது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சுந்தர்பன்ஸ் பகுதியின் விவசாயிகளுக்கு நிவாரண உதவிகளை வழங்கியது. 1946 செப்டம்பரில் வங்கப் பிரதேச கிஸான் சபா தேபகா இயக்கத்தைத் தொடங்குவது என முடிவெடுத்தது. (தேபகா என்றால் ‘மூன்று பங்கு’ எனப் பொருள்) அந்த விவசாயிகள் இயக்கம் காக்த்விப், சோனார்பூர், பான்கர் மற்றும் கேனிங் பகுதிகளில் வெடித்தெழுந்தது. காக்த்விப் மற்றும் நாம்கான் இரண்டும் இயக்கத்தின் புயல் மையமாக விளங்கின. குத்தகை விவசாயிகளின் பங்கை அதிகரிப்பதே இயக்கத்தின் நோக்கம்.

            அந்த இயக்கத்தின் புகழ்பெற்ற தலைவர்களாக கன்ஸாரி ஹால்டர், கணேஷ் தாஸ், அசோக் போஸ் மற்றும் ராஷ் பிகாரி போஸ் இருந்தனர். கஜன் மாலிக், மானிக் ஹஜ்ரா, பிஜாய் மோன்டல் போன்ற விவசாயத் தலைவர்கள் சிலர் புகழ்பெறத் தொடங்கினார்கள். 1950 வரை தொடர்ந்த இயக்கத்தின்போது பர்காதாரி சட்டம் நிறைவேற்றப்பட்டது. நிலத்தில் உழைப்பையும் இடுபொருள்களையும் வழங்கிய குத்தகை விவசாயிகளுக்கு விளைச்சலில் மூன்றில் இரண்டு பங்கு பெறுவதை அந்தச் சட்டம் அங்கீகரித்தது.

            1946 –1950 காலகட்டத்தில் 24 பர்க்கானா மாவட்டத்தின் பல பகுதிகளில் தேபகா இயக்கம் காரணமாக பர்க்கதாரி சட்டம், 1950 கொண்டுவரப்பட்டது. அச்சட்டம் நிலத்தில் பயிர் செய்த குத்தகை விவசாயிகளுக்கு அதிக பங்கை அங்கீகரித்தாலும் அது அமல்படுத்தப்படவில்லை. நில உச்ச வரம்பையும் மீறி பெரும் பரப்பிலான நிலங்கள் பணக்கார நில உடைமையாளர்கள் வசமே இருந்தது.

இடதுசாரி அரசின் நிலச் சீர்திருத்தம்

            நிலச்சீர்திருத்தச் சட்டங்கள் அமலாக்கப்படாமல் இருந்ததை எதிர்த்து விவசாயிகளின் எழுச்சியை 1967ல் மேற்கு வங்கம் சந்தித்தது. 1977லிருந்து மேற்கு வங்கத்தில் முக்கியமான நிலச் சீர்திருத்தங்கள் பெருமளவில் இடதுசாரி அரசின் கீழ் நடைமுறைபடுத்தப்பட்டன. உச்சவரம்புக்கு அதிகமான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு விவசாயிகளுக்குப் பிரித்தளிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து விவசாயிகளின் குத்தகை உரிமைகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு ‘ஆப்பரேஷன் பர்கா’ என்ற இயக்கம் செயல்பட்டது. பிளவுபடாத வங்காளத்தின் 19 மாவட்டங்களில் அந்த இயக்கம் பரவியது.

           
அந்த இயக்கம் தினாஜ்பூர், ரங்க்பூர், ஜல்பைகுரி, கௌல்னா, மைமென்சிங், ஜாஸோர் மற்றும் 24 பர்க்கானா பகுதிகளில் தீவிரமானதாக மாறியது. அதன் பிறகு மித்னாபூர் மாவட்டத்திற்கும் பரவியது. போராட்ட இயக்கத்தில் பெண்கள் முக்கியமான பங்காற்றினர்.

ராணி மித்ரா தாஸ்குப்தா, மனிகுந்தளா சென், ரேணு சக்ரவர்த்தி, இளா மித்ரா முதலிய சிலர் அதன் புகழ்பெற்ற பெண் தலைவர்கள். அவர்களெல்லாம் ‘மகிளா ஆத்ம ரக்க்ஷா சமிதி’ (MARS) அமைப்பின் தலைவர்களாவார்கள். வி(பி)மலா மாஜீ, ஓர் இளம் கைம்பெண், (படம் நன்றி Feminism in India) மித்னாபூரின் நந்திகிராமத்தில் தேபகா இயக்கத் தலைவராக உருவானார். காகத்தீப் பகுதியில் ஒரு தியாகியின் மரணத்தை தழுவி வீர மரணம் அடைந்த பழங்குடி இனப் பெண்ணான அகல்யா உட்பட பல விவசாயிகள் இறந்தனர்.

            வங்கத்தின் இந்த வேளாண் இயக்கத்தின் நினைவாக வண்ணமயமான அலங்கரிக்கப்பட்ட பேரணிக்கு அகில இந்திய கிஸான் சபா (பி பி கங்குலி வீதியில்) வடக்கு 24 பர்க்கானா மாவட்டக் கமிட்டி பஸீர்ஹட்டில் ஏற்பாடு செய்தது. பேரணியில் சிபிஐ மாவட்டக்குழு செயலாளர் ஸ்வபன் பானர்ஜி, ஏஐகேஎஸ் மாவட்டச் செயலார் அஜீத் முகர்ஜி, சிபிஐ மாவட்டச் செயலாளர் சாய்பால் கோஷ் மற்றும் ரஞ்ஜித் கர்மாகர், குமரேஷ் குண்டு, காஜன் அதிகாரி, சிவ்சங்கர் கங்குலி, பாரந்தி அதிகாரி, அசிம் காடக், ஸ்வபன் குப்தா, ஆனந்த மண்டல் முதலான பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

           

ஸ்வபன் முகர்ஜி பேசும்போது ‘தொடர்ச்சியான வீரம் செறிந்த தீவிரமான போராட்ட இயக்கம் வெற்றி மீது வெற்றி வந்து சேரச் செய்யும் என்பதற்கு ‘சம்யுக்த கிஸான் மோர்ச்சா’ கூட்டியக்கத்தின் சமீபந்திய சாதனையே சான்று. அதைத்தான் முன்பே சாதித்தது தேபகா இயக்கம். நாம் எப்போதும் மக்களோடு நிற்கிறோம். நமது பிரதானமான கடமை உழைக்கும் மக்களுக்காகப் பாடுபடுவது. ஒன்றிய அரசு அரசியலமைப்புச் சட்டத்தின் வழிகாட்டலில் அல்லாமல், ஆர்எஸ்எஸ் அமைப்பின் வழிகாட்டலில் செயல்படுகிறது; மாநிலத்தில் உள்ள அரசோ மாநில வளர்ச்சிக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்குமான எவ்வித நேர்மறை திட்டங்களும் இன்றிச்  செயல்படுகிறது” என்று குறிப்பிட்டார்.

அலங்கரிக்கப்பட்ட வண்ணமயமான பேரணியில் விவசாயிகள் செங்கொடிகள், பதாகைகள் மற்றும் ஏர்கலப்பைகளை ஏந்தியபடி  பஸீர்ஹட்டின் போட்காட் வந்தடைந்தனர். மலைவாழ் கிஸான்கள் தங்களது பாரம்பரிய உடையலங்காரத்தில் வந்து கலந்து கொண்டனர். பெண்களின் பங்கெடுப்பு ஒப்பற்றதாக இருந்தது. பேரணிக்கு நிர்மல் கயான் தலைமை வகிக்க, பேரணியைக் காஜன் அதிகாரி நடத்தினார்.      

தேபகா இயக்கத்தின் பவளவிழா தேசத்தை என்றும் உற்சாகப்படுத்தும்!.

வயல்வெளிகள் தானியங்கள் உற்பத்தியாகும் களம் மட்டுமல்ல, அது வீரத்தின் விளைநிலம்! விவசாயிகளின் ஒற்றுமை ஓங்குக! இன்குலாப் ஜிந்தாபாத்!


--நன்றி : நியூஏஜ் (டிச.5 –11)

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

  

No comments:

Post a Comment