Wednesday 15 December 2021

வகுப்புவாதம் பிளவுபடுத்தும், ஜனநாயகத் தன்மையற்றது! --டாக்டர் யுகல் ராயலு

                         வகுப்புவாதம் பிளவுபடுத்தும், ஜனநாயகத் தன்மையற்றது!

--டாக்டர் யுகல் ராயலு

            இந்தியத் துணைக் கண்டத்தின் வியக்கத்தக்க அம்சங்களில் அதன் செழிப்புமிக்கப் பன்மைத்துவமும் ஒன்று. பன்மையாய் வேறுபட்டிருப்பது அதன் பூகோள அல்லது இயற்கை அமைப்புகளில் மட்டுமல்ல. அது, தனித்துவமான பன்முகத் தன்மை, ‘முப்பது கோடி முகமுடையாள்; உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்’ என – அதன் பண்பாட்டில் கலாச்சாரத்தில், செப்பும் மொழியில், உணவுப் பழக்கங்களில் என – ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பகுதியிலும் எத்தனை எத்தனை வேறுபாடுகள்; ஆனால் அவை அனைத்தோடும் இணைந்தும் பிணைந்தும் தேசத்தின் ஒட்டுமொத்த மக்களும் ‘சிந்தனையில் ஒன்றுடை’யவர்களாக எழுந்து நிற்பது நாட்டின் சிறப்புமிக்கப் பன்முகத் தன்மையை நம்பவியலாத ஒன்றாக்குகிறது.

            இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள், அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது ஷெட்யூலின்படி 22 ஆகும். ஆனால் இந்தியாவில் மட்டும் 19,500க்கும் மேற்பட்ட தாய் மொழிகள் அல்லது பேச்சுவழக்கு மொழிகள் உள்ளன. உலகின் இந்தப் புவிப் பகுதியில் ஒவ்வொரு 40 கிமீ தொலைவிலும் பேசப்படும் மொழி மாறுகிறது என்கிறார்கள்.

            உணவுப் பழக்கம் மற்றும் உடை உடுத்தும் பாணியிலும் அதே போன்று வண்ணங்களும் சுவைகளும் பற்பல கதை சொல்லும். திருவனந்தபுரத்தில் 38 டிகிரி வெப்பநிலையில் ஒருவர் ரயில் பயணத்தைத் தொடங்கினால் காஷ்மீரின் ஜம்மு பகுதியை அடையும்போது வெப்பநிலை நடுங்க வைக்கும் குளிராக இருக்கும். பருத்தி ஆடையுடன் புறப்பட்ட திருவனந்தபுரம் பயணி ஜம்முவின் குளிருக்கேற்ற கம்பளி ஆடை இல்லாமல் உடல்நலப் பிரச்சனைகளைச் சந்திக்க நேரும். நாட்டின் இரு நகர்களுக்கு இடையே இத்தனை வேறுபாடு.

            அதே போல, ‘பூமியிலே கண்டம் ஐந்து, மதங்கள் கோடி’ எனப் பாரதியார் கூறும் உலகின் அனைத்து சமய நம்பிக்கைகளையும் பின்பற்றும் மக்கள் இந்தியாவில் உண்டு. தேசத்தை நிறுவிய முன்னோர்கள் மதசார்பற்ற அரசியலமைப்பைத் தேர்வு செய்ததற்காக மக்கள் நாள்தோறும் நன்றி கூறுகிறார்கள்; மதசார்பற்ற அரசியலமைப்பின் பயனாகவே (பெரும்பான்மையை அல்லது சிறுபான்மையைச் சேர்ந்த) எல்லாச் சமய நம்பிக்கைகளையும் சார்ந்த குடிமக்களும், வேறுபட்ட பண்பாட்டு உணர்வோடு வேறு வேறு மொழிகளைப் பேசுபவர்கள் அனைவரும் நாட்டில் இணக்கமாக அமைதியுடன் வாழ முடிகிறது.

            இஸ்லாமிய தேசம் எனப் பிரகடனப்படுத்தப்பட்ட பாக்கிஸ்தான் போன்ற நாடுகளிலும் சமூகம் ஒருபடித்தானதாக, ஒற்றைக் கூறுகள் அமைந்ததாக இல்லை. அந்த நாடுகள் ஒரே மதத்தைச் சார்ந்த மக்கள் தொகையைக் கொண்டிருக்கவில்லை. பாக்கிஸ்தானிலும் பல மதத்தைச்
சேர்ந்தவர்கள் வாழ்கிறார்கள். முஸ்லீம்கள் பெரும்பான்மை எனினும் பங்களாதேசம் மதத்தின் பெயரால் அல்லாமல், பேசும் மொழியால் அடையாளப்படுத்தப்படுகிறது. அங்கு இஸ்லாமியர்கள், இந்துகள் மற்றும் கிருஸ்துவர்கள் மதத்தின் பெயரால் உறுதிமொழிவதில்லை;  தேசியமொழியின் பெயரால் உறுதி கூறுகிறார்கள், அது பெங்காலி எனும் வங்கமொழி! நவீன ஜனநாயகம் ஒன்றிணைந்து சமாதான சகவாழ்வு வாழ்வதற்கான வழிகாட்டுகிறது.

பிரச்சனை ஏற்படுத்துபவர்கள்

            இந்தியாவில் பிரிட்டீஷ் காலனிய ஆட்சியிலிருந்து தொடங்கியதுதான் வகுப்புவாதப் பிரச்சனை. இந்தியாவின் பன்முகத் தன்மையைக் காலனியவாதிகள் மிகவும் எதிர்மறையாகப் பயன்படுத்தினார்கள். 1857 முதல் சுதந்திரப் போருக்குப் பின் பிரிட்டீஷ் நிர்வாகம் ஆடிப் போனது. அத்தகைய சக்திமிக்கக் கிளர்ச்சியை அவர்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. மீண்டும் கிளர்ச்சி ஏற்படாமல் தடுக்க காலனியவாதிகள் ‘பிரித்தாளும் தந்திரத்தை’ இறுதிவரை முழுமையாகப் பயன்படுத்தினர். விளைவு, ஒவ்வொரு வகையிலும் துணைக்கண்டத்தின் மக்கள்  பிளவுபட்டனர்.

            “….  அதன் விளைவான ஏழ்மை மற்றும் வேலைவாய்ப்புகள், தொழில்நுட்பப் பணிகள் மற்றும் பிற வாய்ப்புகள் அனைத்திற்கும் ஏகாதிபத்தியத்தைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை, வகுப்புவாதம் வளர்வதற்குச் செழிப்பான களத்தை வழங்கியது.”

            இந்தியா பிளவுபட்டது மக்கள் மீது விழுந்த பெரும் வடு. காலனிய எஜமானர்களின் அருவருப்பான (பிரித்தாளும்) திட்டம் அவர்கள் சென்ற பிறகு வேலை செய்தது துரதிருஷ்டமே. அது துணைக்கண்டத்தின் எல்லா நாடுகளிலும் இருக்கும் தீவிரவாதிகளுக்கு அந்நாடுகளின் சிறுபான்மையினரை அச்சுறுத்தும் ஆயுதத்தை வழங்கியது. தங்களுடைய நடவடிக்கைகள் நாட்டின் சாதாரண குடிமக்களைப் பாதிப்பதைப் பற்றி தீவிரவாதிகள் அவமானப்படவில்லை. அவர்களது தூண்டுதலால் வகுப்புவாத நெருப்பு பற்றி எரியும்போது ஏற்படும் கலகம், குழப்பம் இவற்றில் உதவிட யாருமில்லாத ஏழைமக்கள் அவதிப்படுவதைப் பற்றியும் அவர்களுக்கு அக்கறை இல்லை. சமூகத்தில் சாதாரண மக்கள் படும் துன்பங்களில் தீவிரவாதிகள் தங்கள் வகுப்புவாத வெற்றியைக் கொண்டாடுவது உண்மையான பாசிஸ்ட்டுகளின் குணமேயாகும்.

            வகுப்புவாதம், இந்தியத் துணைக்கண்டத்தின் எல்லா நாடுகளிலும் பெரும்பான்மைச் சமூகத்தைச் சார்ந்த தீவிரவாதிகள் முன்மொழிந்து ஆதரிக்கும் தேசியவாதம் என்ற வேடத்தில்தான் வருகிறது.  மக்கள் தொகையில் மிகப் பெரும்பான்மையினரான உண்மையான ஜனநாயகவாதிகள் மற்றும் மதசார்பற்ற குடிமக்கள் வாய்மூடி மௌனமாக இருப்பது தீவிரவாதிகள் வளர வாய்ப்பான பாதையும் களத்தையும் அமைத்துத் தருகிறது; அவர்களும் மக்கள் மத்தியில் வெளிப்படையாக வகுப்புவாத விஷத்தைப் பரப்புகிறார்கள். இதில் இறுதியாகப் பாதிக்கப்பட்டு துன்பப்படுபவர்கள் மௌனமாக இருந்த பெரும்பான்மையினரும் நிர்கதியான துரதிருஷ்டமான சிறுபான்மைச் சமூக உறுப்பினர்களுமே!  

இந்தியாவில்

           

இந்தியாவில் ஆர்எஸ்எஸ் வழிகாட்டலில் செயல்படும் தீவிர வலதுசாரி குழுக்கள் தொடங்கிய நாள் முதலாகவே பல்வேறு வழிமுறைகளிலும் இந்து –முஸ்லீம் வெறுப்பு எனும் விஷத்தைப் பரப்ப முயல்கிறார்கள். ஆர்எஸ்எஸ் பரப்பிய அதிதீவிர தேசியவாதத்தில் முதல் பலி  இந்திய விடுதலை இயக்கத்தின் தன்னேரில்லாத தலைவரும், அமைதி மற்றும் அகிம்சையின் அடையாளமுமான, மகாத்மா காந்தி மகான்!

    ஜனசங்கம் அல்லது பாரதிய ஜனதா கட்சி போன்ற அதிதீவிர வலதுசாரி கட்சியைத் தேர்தலில் தேர்ந்தெடுக்க மறுத்த வாக்காளர்கள் அதற்கு எந்த முன்னுரிமையையும் வழங்காத காரணத்தால் நீண்ட காலத்திற்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு அடக்கியே வாசிக்க வேண்டியிருந்தது. ஆனால் குஜராத் மாநிலத்தில் 2002ல் நடத்தப்பட்ட வகுப்புவாத வன்முறை அனைத்தையும் மாற்றிவிட்டது. சமூகத்தை மதவாத வகுப்புவாத அடிப்படையில் பிளவுபடுத்த ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தலைவர்கள் கடுமையாக வேலை செய்தனர்.

            சமூகம் பிளவுபட்டு உத்திபிரிவது தொடர்ந்து தீவிரமாக்கப்பட்டது; ‘குஜராத் மாநிலம் இந்து ராஷ்டிரா (இந்து தேசம்) என்பதற்கான சோதனைக் கூடம்’ என ஆர்எஸ்எஸ் குழுமம் அறிவித்தது. அம்மாநிலத்தில் பல்வேறு கிராமங்களிலும் முளைத்த வழிகாட்டும் அறிவிப்புப் பலகைகள், ‘இந்து ராஷ்டிராவின் … … …இந்தக் கிராமம் தங்களை வரவேற்கிறது’ என்றன.

குஜராத்தில் கலவரத்தின் பொருளாதார விளைவு

            2002ல் குஜராத் மாநிலத்தில் நடந்த கலவரத்தின் விளைவாக ஏற்பட்ட முக்கியமான பொருளாதார அம்சம் உள்ளது. 2002ம் ஆண்டில் டெக்ஸ்டைல் மில்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்கள் ஊதிய உயர்வு மற்றும் பல ஆண்டுகளாகத் தங்களுக்கு மறுக்கப்பட்ட பிற வசதிகளுக்காக ஒரு மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்குத் தயாரித்து வந்தனர். பெரும் டைக்ஸ்டைல் முதலாளிகளின் நிதி மூலதனத்தின் மூலம் கிடைத்த பெரும் தொகையைக் கொண்டு வகுப்புவாத சக்திகள், மிக நைச்சியமாக சப்தமில்லாமல் இந்து – முஸ்லீம் கலவரங்களைத் திட்டமிட்டு நடத்தியதில் சுமார் 2000 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். அப்படி இறந்தவர்களில் பெரும்பான்மையோர் முஸ்லீம்கள். ஆனால் இந்தக் கலவரத்தில் தேச மைய ஓட்டத்தின் முக்கியமான நாளிதழ்கள் ஒருபோதும் வெளியிடாத செய்தி உண்டு; அது தங்கள் வாழ்க்கை மேம்பாட்டிற்காகப் போராட்டத் தயாரிப்பில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அதன் பிறகு முன்பைவிட குறைவான ஊதியத்திற்குப் பணியாற்ற வேண்டிய நிர்பந்தத்திற்குத் தள்ளப்பட்டனர் என்ற உண்மை அச்சில் வெளிவரவே இல்லை. அவர்களின் ஒற்றுமை, வகுப்புவாதம் என்ற விஷத்தால், உடைத்து நொறுக்கப்பட்டது!

            சாதாரண பொது மக்கள் அதிதீவிர தேசியவாதத்தின் முழக்கங்களாலும் தனது நாட்டை அடுத்த சூப்பர் பவர் ஆக்கப் போவதான கூச்சல்களாலும் அக்குடிமகன் அல்லது குடிமகள் திக்குமுக்காடச் செய்யப்படுகிறார்: அப்போது நிதிமூலதனம், அருவருப்பான அரசியல்வாதி மற்றும் வகுப்புவாத அடிப்படைவாதிகளின் கூட்டுத் தொடர்பு சமூகத்தில் வெடித்துச் சிதறும் அபாய நிலையை உண்டாக்குகிறது. தேசியவாதம் மற்றும் அடையான அரசியல் இவற்றின் திரைமறைவில், வகுப்புவாதச் சக்திகள், அரசின் சாய்காலில் கொழிக்கும் முதலாளிகள் (க்ரோனி கேப்பிடலிஸ்ட்) இலவசமாக அள்ளித் தந்த பெரும் தொகைகளைப் பயன்படுத்தி உள்ளூர் சிறு தொழில் முனைவோர்கள், சிறு வணிகர்களின் முதுகெலும்பை நொறுக்கிவிடுகிறார்கள்; இந்தச் சூழல் ஏகபோக முதலாளிகளுக்கு மிகச் சாதகமான கள நிலைமையை ஏற்படுத்துகிறது. இத்தகைய சூழ்நிலைகளில் தொழிலாளர் வர்க்கத்திற்கு ஒன்றுபடுவது சாத்தியமற்றது. 2002 தொடங்கி இதுநாள் வரையில் குஜராத் தொழிலாளர்களின் வலிமை, வகுப்புவாதச் சக்திகளின் அழுத்தத்தால், தேய்ந்து சரிந்தே வருகிறது.

வேளாண் போராட்டம்

            சென்ற ஓராண்டைக் கடந்தும் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டம் மற்றுமொரு எடுத்துக் காட்டு. இறுதியில் மூன்று கருப்பு வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு, விவசாயிகளும் சொந்த ஊர் திரும்பி வருகிறார்கள். ஆனால் ஓராண்டு போராட்டத்தால் சிறு மற்றும் விளிம்புநிலை விவசாயிகள் திவாலாகும் நிலைக்கு வந்து விட்டது மட்டுமல்ல நாட்டில் சிறுஅளவிலான விவசாயம் என்பது சாத்தியமற்றதாக்கி விட்டது. இதனைத் தொடர்ந்து பெரும் கார்ப்பரேட் கூட்டு குழுமங்கள் விவசாயத் துறையில் நுழையும் வாய்ப்பை ஏற்படுத்துவது, 70 சதத்திற்கும் மேலான இந்திய மக்களை இந்தக் கார்ப்பரேட்டுகளிடம் அற்பக் கூலிகளாக மாற்றிவிடும். (இது அனைத்தையும் உணர்ந்துதான் விவசாயிகள், 700க்கும் மேற்பட்ட விவசாயத் தோழர்களை பலிதந்தும்,  விடாப்பிடியாகப் போராடி வென்றனர்.)

            நிதி மூலதன எஜமானர்கள் மற்றும் வகுப்புவாத அரசியல்வாதிகள் இடையே உள்ள தொடர்பு மிகவும் வலிமையானது; எனவேதான் அனைத்துத் தரப்பிலிருந்து கண்டனங்கள் வந்தாலும் ஒன்றிய அரசு வேளாண் சட்டங்களை ரத்து செய்யாமல் அடம் பிடித்தது. அது மட்டுமா, ஆளும் கட்சி தன்வசம் உள்ள வகுப்புவாத அடிப்படைவாதிளை நம்பி போராடும் விவசாயிகளை மதம், இனம், வகுப்பு அடிப்படையில் பிளவுபடுத்தவும் மனப்பால் குடித்தது. வெட்கமற்று தேசத்தின் அன்னதாதாக்களைக் ‘காலிஸ்தான் தீவிரவாதிகள்’ என இழிவு செய்து விவசாயிகளை இந்து – சீக்கியர் அடிப்படையில் பிரிக்க முயன்றது. அந்த முயற்சி தோல்வி அடைந்ததும் வகுப்புவாதச் சக்திகள் விவசாயப் பெருங்குடி மக்களை ‘நக்ஸலைட்டுகள், மாவோயிஸ்ட்டுகள்’ எனக் களங்கப்படுத்தினர். அனைத்தையும் தவிடுபொடியாக்கி, வகுப்புவாத அடிப்படைவாதிகளின் அருவருப்பான திருவிளையாடல்களையும் தாண்டி உருக்குபோல உறுதியாக நிற்கும் விவசாயிகள் வரலாற்றில் புகழப்படும் பெருமை அடைகின்றனர். வாழ்க விவசாயிகள் ஒற்றுமை, வாழ்க தொழிலாளர்கள் மக்கள் ஒற்றுமை!

பாக்கிஸ்தான்

           

மத அடிப்படையில் உருவாக்கப்பட்டாலும் பாக்கிஸ்தான் அரசாட்சியில் மதசார்பற்ற கண்ணோட்டம் உடையதாக்க தொடக்கத்தில் முயற்சிகள் செய்யப்பட்டன. பாக்கிஸ்தான் அரசிலமைப்புச் சட்டத்தில் “மதசார்பற்ற” என்ற சொல் இடம் பெறவில்லை எனினும், உணர்வுநிலையில் அது மதசார்பற்றதாகவே இருந்தது. ஆனால் நிலைபெற்றிருந்த ஓர் உண்மை யாதெனில், தோன்றியதிலிருந்தே பாக்கிஸ்தான் அரசு ஆட்சி அதிகாரத்தில் கடுமையான தீவிரவாதப் போக்கு உடையவர்கள் பாக்கிஸ்தானை ஓர் இஸ்லாமிய தேசமாக மாற்றவதற்கு விரும்பினர். அப்படித்தான் இறுதியாக 1956ம் ஆண்டில் பாக்கிஸ்தான் இஸ்லாமியக் குடியரசானது. பாக்கிஸ்தானில் இருந்த வகுப்புவாத அடிப்படைவாதிகள் (இந்துகள், ஷியா பிரிவு முஸ்லீம்கள் மற்றும் பழங்குடியினர் முதலிய) சிறுபான்மை மக்களை அமைதியாக வாழ அனுமதிக்கவில்லை. அந்நாட்டின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றப் போட்டியிடுபவர்களுக்கு இடையே அரசு மதத்தைப் பாதுகாப்பதில் யார் சிறந்தவர் எனக் காட்டிக் கொள்ளும் அரசியல் சதுரங்க விளையாட்டில் சிறுபான்மையினர் அவர்கள் கைகளில் கிடைத்த வெறும் பகடைக் காய்களாயினர். இத்தகைய வகுப்புவாத அரசியல் விளையாட்டுகளால் வல்லாண்மைமிக்க இராணுவத்திற்கு ஒரு பிரச்சனையும் இல்லை, எதுவரை எனில், அந்த விளையாட்டுகளால் ஜனநாயக நாடு எனக் கூறப்படும் நாட்டில், இராணுவ ஆயுதப் படைகளின் உச்சபட்ச அந்தஸ்தைப் பாதிக்காதவரையில் மட்டுமே (இராணுவம் விட்டு வைக்கும்).

            வகுப்புவாதிகள் வேண்டுமென்றே இந்தியாவின் முக்கிய நிலப்பகுதிகளிலிருந்து புலம் பெயர்ந்த முஸ்லீம்களை முகாஜீர்கள் (வந்தேறிகள், மதம் மாறியவர்கள்) என முத்திரை குத்தினர்; அகமதியர்களை முஸ்லீம்களாக அங்கீகரிக்க மறுத்தனர். வகுப்புவாத உலைக்களம் பாக்கிஸ்தானில் எப்போதும் நிலப்பிரபுத்வத்தை அதிகாரமிக்கதாக நீடித்து வைத்திருக்கச் செய்கிறது; அந்நாட்டின் சிறு மற்றும் விளிம்புநிலை விவசாயிகள் நீதி பெறுவதற்கான எந்த வாய்ப்புக்களையும் விட்டு வைத்திருப்பதில்லை. மிகப் பெரும்பான்மையான பாக்கிஸ்தான் குடிமக்கள் வறுமையின் பிடியிலும் பட்டினியில் துன்பப்படும் நாட்டின் உண்மைநிலையை வகுப்புவாதப் பிரச்சாரம் திரையிட்டு மறைக்கிறது; வலிமையான இஸ்லாமிய பாக்கிஸ்தான் என்ற முழக்கம் காற்றில் ஓங்கி ஒலிக்கும்வரை அந்நாட்டு மக்களால் இந்நிலையை மாற்றுவதற்குப் போராட இயலாது. பாக்கிஸ்தானின் பெரும்பான்மை பிரச்சனைகளுக்கும் மக்களின் துன்பங்களுக்கும் வகுப்புவாதமே பொறுப்பாகும். 

பங்களாதேசம்

        
வங்கதேசத்தில் சமீபத்திய நிகழ்வுகள் கவலை தருவன. அதன் மதசார்பற்ற பிரதமர்
ஷேக் ஹசீனா வாசிட் தனது தேசத்தை வளர்ச்சிப் பாதையில் எடுத்துச் செல்ல பாடுபடும்போது வகுப்புவாத அடிப்படைவாதிகள் நாட்டைப் பின்னோக்கி இழுத்து வகுப்புவாத வன்முறை படுகுழியில் தள்ள முயல்கின்றனர். துர்க்கா பூசையின்போது கோயில்கள் சூரையாடப்பட்டன. அதில் 7 இந்துகள் உள்பட பத்துபேர் உயிரிழந்தனர். 2021 அக்டோபர் 13 – 19 தேதிகளில் நடந்த நிகழ்வுகள், மெல்ல வளர்ச்சியை நோக்கி நடைபோடத் தொடங்கிய அந்நாட்டின் மதசார்பற்ற கட்டமைப்பை உலுக்கிவிட்டன. வங்கதேச மக்களின் நல்ல காலம், அந்நாடு தற்போது மதசார்பற்ற அரசைப் பெற்றுள்ளது; அவ்வரசு உடனடியாக குற்றவாளிகளுக்கு எதிரான விரைவான நடவடிக்கைகளை எடுத்தது.

            கொடுமையான பாக்கிஸ்தான் இராணுவத்தை எதிர்த்துத் தீரமுடன் போராடிய நாடு, நன்கு ஒருங்கமைக்கப்படாத முக்தி வாகினி படையை வைத்துக் கொண்டு இந்திய இராணுவத்தின் உதவியோடு நாட்டை ஆக்ரமித்த சக்திகளின் கொடுமைகளிலிருந்து மக்களை விடுவித்தது; ஆனால் வகுப்புவாதச் சக்திகளாகிய உள்பகை எதிரிகளிடமிருந்து மக்களை விடுவிக்க முடியவில்லை. சுதந்திரம் அடைந்து அரை நூற்றாண்டுகளுக்குப் பிறகும் வங்க தேசம் ஏழை நாடாக நீடிப்பதற்குக் காரணம் விடுதலைக்குப் பின் பல ஆண்டுகளை உள்நாட்டுக் குழப்பங்களிலே இழந்ததுதான். அடிப்படை, பிளவுவாதச் சக்திகள் அமைதி மற்றும் முன்னேற்றத்தை அனுமதிப்பதில்லை.

ஸ்ரீலங்கா

            தேசம் நீண்ட காலமாக ஏங்கித் தவித்த அபூர்வமான அமைதிக்காக ஸ்ரீலங்கா பெரும் விலை தரவேண்டியிருந்தது. அந்த அழகிய தீவு தேசத்தில் அமைதி கால் பதிக்கும் முன்பு ஸ்ரீலங்காவின் ஆயிரமாயிரம் மகன்களும் மகள்களும் தங்கள் இன்னுயிர்களை இழந்தனர். இருப்பினும் இன்னும் எஞ்சிய வகுப்புவாத அடிப்படைவாதிகள் அமைதியும் நல்லிணக்கமும் நீண்டகாலம் நீடிக்க அனுமதிக்க மாட்டார்கள். 2021 அக்டோபர் 18ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் வெளியான ஓர் அறிகை, ‘ஸ்ரீலங்காவின் முஸ்லீம் சிறுபான்மையினர் தொடர்ச்சியான பாகுபாடு, தொல்லை கொடுத்து அச்சுறுத்தல் மற்றும் வன்முறைகளால் 2013ம் ஆண்டிலிருந்தே துன்பப்பட்ட வருகிறார்கள்’ எனத் தெரிவிக்கிறது. பிரிட்டனிலிருந்து செயல்படும் அந்த மனித உரிமைகள் முகமையின் அறிக்கையில், ‘நாட்டில் சிங்கள – பௌத்த சமய அதிதீவிர தேசியவாதம் அதிகரித்ததன் மத்தியில் முஸ்லீம்களுக்கு எதிரான உணர்வுகள் தூண்டப்படுகிறது’ என்று குறிப்பிட்டது. மேலும் சர்வதேச பொதுமன்னிப்பு (அமினிஸ்டி இன்டர்
நேஷனல்)
அமைப்பின்
துணைப் பொதுச் செயலாளர் கீலே வார்டு, “முஸ்லீம்களுக்கு எதிரான உணர்வு ஸ்ரீலங்காவுக்குப் புதியதல்ல எனினும் சமீபத்திய ஆண்டுகளில் நிலைமை கடுமையாக மோசமாகியுள்ளது… தற்போதைய அரசின் கொள்கைகள் வெளிப்படையாக முஸ்லீம்களுக்கு எதிராக உள்ளது” எனக் கூறியதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

            “உன்வீடு உனது பக்கத்து வீட்டின் /இடையில் வைத்த சுவரை இடித்து…நாட்டொடு நாட்டை இணைத்து மேலே ஏறு” என பாவேந்தர் பாரதிதாசன் பாடியது போல உலகம் இன்று எல்லைகள் இல்லாத கோட்பாட்டை நோக்கி நடக்கையில் ‘இன்னும் சாதி இருக்கிறது என்பானும் இருக்கின்றானே’ எனச் சில மனிதர்கள் மற்றும் வெட்கமின்றி சில அரசுகள் இன்னும் ‘நாம், நமக்கு எதிர் அவர்கள்’ என்ற பழங்கால மனோபாவத்தைக் கட்டிக் கொண்டு அழுகிறார்கள்.”

முடிவுரை

            “எல்லோருடைய தேவைகளுக்கும் போதுமானது இவ்வுலகத்தில் இருக்கிறது, ஆனால் ஒற்றை மனிதனின் பேராசையைத் தீர்ப்பதற்கும் போதுமானது இவ்வுலகத்திடம் இல்லை” என்பது மகாத்மா காந்தியின் புகழ்பெற்ற பொன்மொழி.

            பூமித் தாய் அவளது எல்லா குழந்தைகளுக்கும் –அவர்கள் எங்கே வசித்தாலும், எந்த நம்பிக்கையைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் பேதமின்றி அனைவருக்கும் – சொந்தமானவள். சில மனிதர்கள் தாங்கள் மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள் எனத் தவறாகக் கருதுகிறார்கள். அறிவியல் முறைப்படி ஆராய்ந்தால் மனித குலத்தைச் சேர்ந்த அனைவரும் சமமானவர்கள், ஏறத்தாழ ஒன்றுபோல அமைந்த மரபணுக்களை உடையவர்கள்; அதற்கு மாறான இத்தகைய பழமையான குறுகிய மனோபாவச் சிந்தனைகள் அறிவியல் உணர்வையும் முற்போக்கான சிந்தனையையும் மறுக்கிறது.

            முதலாளிகளிடம் உள்ளார்ந்து இருக்கும் தவறு அவர்களால் தங்கள் லாபத்தைத் தாண்டி சிந்திக்க முடியாது என்பதே. லாபத்திற்காகப் பின்விளைவுகளைப் பற்றி கவலை இல்லாது எந்த வழிகளையும் பின்பற்ற, எதையும் செய்ய அவர்கள் தயங்குவதில்லை. வகுப்புவாத  அடிப்படைவாதிகள் தங்கள் க்ரோனி கேப்பிடலிஸ்ட் எஜமானர்களுக்குக் குறுகிய கால குறுக்குவழி லாபங்களைப் பெறச் செய்கிறார்கள். ஆனால் நீண்டகால அடிப்படையில் அத்தகயை வகுப்புவாதச் சூழ்ச்சித் திட்டங்கள் சமூகத்தின் உறவுவலைப்பின்னல் இணக்கக் கட்டமைப்பிற்கு மிகப் பெரிய அளவில் கேடு செய்கிறது.

            வகுப்புவாதச் சக்திகளை எதிர்த்துப் போரிட வேண்டும்; அதே நேரம் வளர்ச்சிக்கான தங்கள் நிகழ்ச்சிநிரல் திட்டங்களை –அரசைத் தேர்ந்தெடுக்கும் இறுதி அதிகாரம் உடைய-- மக்கள் முன் எடுத்து வைக்க வேண்டும்: இதனை நிறைவேற்ற நல்ல சிந்தனையுள்ள மக்களும் போராடும் மக்கள் கூட்டமும் ஒன்றிணை வேண்டும் : அதைத்தான்  ஜனநாயகம் கோருகிறது. உற்பத்தி முதலீட்டைவிட நிதிமூலதனம் அதிக சக்திமிக்கதாகும்போது, அது தனது வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்திற்கு புதிய வாய்ப்புகளைத் தேடுகிறது. வகுப்புவாதம் (பாசிசத்தின் ஆரம்ப கட்டம்) க்ரோனி கேப்பிடலிஸ்டுகளைப் பாதுகாப்பான மேய்ச்சல் நிலங்களுக்கு அழைத்துச் செல்கிறது;  அந்தக் க்ரோனி கேப்பிடலிஸ்டுகள் ‘அரசாட்சியின்’ திசைவழிகளை மாற்றும் அதிகாரம் பெறுகிறார்கள். ஒரு சிலர் பலன் அடைய மிகப் பெரும்பான்மையினரின் நலன்களைக் காவு கொடுப்பதே அது பின்பற்றும் பொதுவான திசைவழி. வகுப்புவாதத்தின் சகல அடையாளங்களையும் மிக மிக எச்சரிக்கையாகக் கவனத்துடன் கையாண்டு, ‘இளையதாக முள்மரம் கொல்க’ என்ற 879வது திருக்குறள்படி முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

            லெனின் கூறியதை மனதில் நிறுத்த வேண்டும், அவர் கூறினார் : “(கொள்கை, கோட்பாடு, நடைமுறைகளில்) சமரசங்கள் செய்து கொள்ளுங்கள்; பின்னர் புரட்சி மடிந்து போகும்”. இந்த மாபெரும் புரட்சியாளர் என்ன சொன்னார்  என்பதற்கு ஆசியாவே ஒரு சாட்சி. எனவே (புரட்சியில் சமசரத்திற்கு இடமில்லை) விழிப்புடன் இருப்போம்!

            ஒரு குறைந்த கால அளவிற்குக்கூட வகுப்புவாத அடிப்படைவாதிகளுடன் எந்தச் சமரசமும் செய்து கொள்வது தேசத்தின் ஜனநாயக அடித்தளத்திற்கு அடிக்கப்படும் சாவுமணி என்பது நிரூபணமாகிவிடும். மனிதகுலம் பெரும்விலை தந்துதான் மிகக் கடுமையான தடைகளை வென்று இந்த மேன்மையான நிலையை – மக்கள் தங்கள் எதிர்காலத்தைத் தாங்களே முடிவு செய்ய இயன்ற நிலையை -- வந்து அடைந்துள்ளது. மனிதகுலத்தின் கடும் உழைப்பின் பலனாய் விளைந்த பலன்களை, குறுகிய தன்னல நோக்கம் உடைய, சொந்த லாபத்தைத் தாண்டி எதையும் பார்க்காத, சில மனிதர்களிடம் இழந்து விடாமல் இருக்க தொடர்ச்சியான கண்காணிப்பும் விழிப்புணர்வும்தான் இன்றைய தேவை. உலகம் முன்னோக்கி நடைபோட வேண்டும்.

            என்றுமுள மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் வார்த்தைகளை நினைவு கொள்வோம் :

“உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்! நீங்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை, ஏழ்மை மற்றும் அடிமை விலங்கைத் தவிர; அடைவதற்கோ பொன் உலகம் உண்டு!”

-- நன்றி : நியூஏஜ் (நவ.28 –டிச.4)

      --தமிழில் : நீலகண்டன், என்எப்டிஇ, கடலூர்      

No comments:

Post a Comment