Sunday 26 December 2021

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 96வது அமைப்பு தினம் -- ஒரு வரலாற்றுப் பார்வை -- நியூஏஜ் தலையங்கம்

 

நியூஏஜ் தலையங்கம் (2020 டிச.26 – ஜன.1, 2021)

மீண்டும் மக்களிடம் செல்வோம்!

மேலும் முன்னோக்கிச் செல்வோம்!

            1925 டிசம்பர் 26ம் நாள் இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றில் மறக்கமுடியாத நாள்! அந்நாளில்தான் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பிறந்தது! சிபிஐ வாழிய வாழியவே!

            கான்பூரில் அந்த டிசம்பர் மாதத்து தினம் குளிராக இருந்தாலும், அங்கே குழுமியிருந்த இளம் புரட்சியாளர்கள் அணையா நம்பிக்கை மற்றும் புதிய உலகு பற்றிய விழைவுகளின் தகிக்கும் நெருப்பின் நெஞ்சக் கிளர்ச்சியோடு இருந்தனர். அவர்கள் மெட்ராஸ், கல்கத்தா, பம்பாய், பஞ்சாப், கான்பூர் முதலான தேசத்தின் பல்வேறு பகுதிகளில் புதிதாகப் பிறந்த கம்யூனிஸ்ட் குழுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி குழுமியிருந்தனர். இந்திய மண்ணில் கட்சியின் முதலாவது அமைப்புநிலை மாநாடு நிகழ்வதற்கு முன்பே, இந்திய எல்லைகளுக்கு அப்பால் தாஷ்கண்ட் கம்யூனிஸ்ட் குழுக்கள் போன்றவை நிறுவப்பட்டன. அவர்களது கனவு சுதந்திர  இந்தியா வளர்ச்சி பெற்று சோஷலிசப் பாதையில் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்பதே. இருப்பினும் காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதையாய் அது, விபத்தாய் நிகழ்ந்தவைகளின் தன்னிச்சை விளைவு அல்ல. மாறாக, சாதகமற்ற சமூக அரசியல் பின்புலத்தில் ஆழமான விவாதங்களுக்குப் பிறகு நன்கு சிந்தித்து எடுத்து வைத்த அடிகள், அது திட்டமிட்ட நடவடிக்கைகளின் விளைவு. ஏகாதிபத்திய எதிர்ப்பு விழிப்புணர்வு குருத்தாய் முளைவிட்டாலும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மற்றும் அதன் இந்தியக் கையாட்கள் அதனைப் பிடிங்கி எறிய கடுமையாக முயன்றார்கள். அனைத்தையும் மீறி, எதிர்க்க முடியாதபடி இந்திய மண்ணில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பிறந்தது! சிபிஐ வாழிய வாழியவே!

            1917ல் மாபெரும் அக்டோபர் சோஷலிசப் புரட்சியின் வெற்றி வரலாற்றின் பாதையை முற்றிலுமாக மாற்றியது. யுகப் புரட்சியின் அதிர்வுகள் ஒடுக்கப்பட்ட மக்கள் திரள் மற்றும் அனைத்து கண்டங்களின் நாடுகள் மத்தியிலும் அதன் நம்பிக்கை செய்தியைப் பரப்பியது. மனிதகுல விடுதலைக்கான மார்க்சிய தத்துவத்தின் ஆதர்சத்தால் ஊக்குவிக்கப்பட்ட மாபெரும் அக்டோபர் புரட்சி விடியல் கீதத்தால், புரட்சிகர குழுக்கள் சமூக மாற்றம் குறித்துப் புதிய உள்நோக்குப் பார்வையைப் பெறத் தொடங்கினர். இந்தியாவில் ‘நவஜவான் பாரத் சபா’, தோழர்களோடு பகத்சிங் வழிநடத்திய ‘இந்துஸ்தான் சோஷலிச குடியரசு அசோசியேஷன்’ மற்றும் சூர்யா சென் போன்றவர்கள் நடத்திய இளைஞர் படை குழுக்கள், வங்கத்தின் ஜுகாந்தர் மற்றும் அனுசிலான் குழுக்கள் அனைத்தும் இந்த விழிப்புணர்வின் பகுதிகளாக விளங்கின.

            1908ம் ஆண்டிலேயே பால கங்காதர திலகர் கைது செய்யப்பட்டபோது பம்பாய்த் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் பிரகடனம் செய்தனர் – அந்த வேலைநிறுத்தம் இந்திய உழைக்கும் வர்க்கம் முதன் முதலாக நடத்திய அரசியல் வேலைநிறுத்த நடவடிக்கையாகும்! திலகருக்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு ஆறு நாட்கள் வேலை நிறுத்தம் செய்தனர். பம்பாய் வீதிகளில் “திலகரை விடுதலை செய்” என்ற ஒரே முழக்கம்
எதிரொலித்தது. தொழிலாளர் வர்க்கத்தின் இந்த நடவடிக்கையை அறிந்த
லெனின் எழுதினார்,

‘இந்திய உழைக்கும் வர்க்கம் முதிர்ச்சி அடைந்துவிட்டது’. அந்த முதிர்ச்சிதான் 1920ல் ஏஐடியுசி பேரியக்கத்தை அமைத்திடச் செய்தது. தொழிலாளர்களோடு விவசாயிகள், இளைஞர்கள், பிற ஒடுக்கப்பட்ட பிரிவினர்களும் காலனிய ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தனர். புதிய போராட்டப் பாதை காண்பதற்கான அவர்களுடைய தவிப்புமிக்கத் தேடல் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பதற்குப் பாதை சமைத்தது. காங்கிரஸ் தலைமையின் அரைகுறை மனதோடு எடுக்கப்படும் நடவடிக்கைகளால் ஏமாற்றம் அடைந்த காங்கிரஸ் அணிகளும்கூட இந்தியப் புரட்சியாளர்களைச் சுதந்திரம் மற்றும் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புக்களைத் தேட வற்புறுத்தியது.

            அப்படி அமைப்பதற்கு முன்பே கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் தத்துவம், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் தலைமையிலான வஞ்சக இருட்சக்திகளால் தாக்கப்பட்டது. சோஷலிசக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு போராட்டக் களத்தில் குதித்த இளம் புரட்சியாளர்களுக்கு எதிராக ஒன்றன்பின் ஒன்றாக சதி வழக்குகள் புனையப்பட்டன; 1922 முதல் 1928 வரையான ஐந்து  பெஷாவர் சட்ட வழக்குகள், கான்பூர் சதி வழக்கு, லாகூர் சதி வழக்கு, மீரட் சதி வழக்கு என எதிர்ப்போர் குரல்வளைகளை நெறிக்க பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இடைவெளியின்றி தொடுத்த வழக்குகளின் பட்டியல் மிக நீண்டது. பொய்யும் புனைச் சுருட்டுக்களும் மற்றும் சதிகளால் கம்யூனிஸ்ட் கட்சியைக் கொல்ல முடிந்திருக்குமானால், அது இந்த மண்ணில் நிலைத்திருக்க முடியாது. இப்படி ஒடுக்குமுறையாளர்கள் மற்றும் வர்க்க எதிரிகளால் தூண்டப்பட்ட அனைத்துத் தொல்லைகளையும் துணிந்து எதிர்த்துதான், தேசத்தை விடுவித்து புதிய உலகு காணும் பாதையில் முன்னேற, கம்யூனிஸ்ட்கள் தங்கள் தளராத போராட்டங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டார்கள்.  இந்திய அரசியல் வான்வெளியில் ‘பூரண சுதந்திரம்’ என்ற முழக்கத்தை ஒலிக்கச் செய்தது, கம்யூனிஸ்ட்கள்தான்.

           


1921 இந்திய தேசிய காங்கிரஸ் அகமதாபாத் அமர்வில் பூரண சுதந்திரத்திற்கான தீர்மானத்தை முன்மொழிந்தவர் தோழர் ஹஸ்ரத் மொஹானி (படம்). அத்தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. அடுத்த ஓராண்டிலே 1922 காங்கிரஸ் கயா அமர்வில் அதே கோரிக்கையை மேலும் அதிக ஆதரவோடு திரும்ப எழுப்பியவர் தோழர் சிங்காரவேலு செட்டியார்.

            ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, 1925ம் ஆண்டின் இறுதியில், கான்பூரில் நடந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பு மாநாட்டின் வரவேற்புக்குழு தலைவரானார், ஹஸ்ரத் மொஹானி. சிபிஐ அமைப்பு மாநாட்டிற்குத் தலைமை வகித்தார், சிங்காரவேலு செட்டியார். நினைவில் நீங்கா அந்நாட்களிலிருந்து இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் கம்யூனிஸ்ட்கள் மறுக்க முடியாத பெரும் பங்களிப்புகளைச் செய்தனர். அகில இந்திய கிசான் சபா, அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், முற்போக்கு எழுத்தாளர்கள் கூட்டமைப்பு முதலிய வெகுஜன அமைப்புகளும் 1936ம் ஆண்டில் லக்னோவில் கட்டியமைக்கப்பட்டன. இளைஞர்கள், பெண்கள் அமைப்புக்களும் பிற ஒடுக்கப்பட்ட மக்கள் திரளும் கம்யூனிஸ்ட்களுடன் அணி திரண்டு முனையிலே முகத்து நிற்றனர்.

            சிபிஐ வரலாற்றின் மாபெரும் சகாப்தம் தீரமான போராட்டங்கள் மற்றும் தியாகங்களால் நிரம்பியது. பொருளாதார, அரசியல் மற்றும் சமூக ஒடுக்குமுறையிலிருந்து விடுவித்து மக்கள் திரளை அவர்களின் முன்னோக்கிய பயணத்தில் கட்சி தலைமைதாங்கி வழிநடத்தியது. நிலப்பிரபுத்துவ காலனிய சக்திகளுக்கு எதிரான, சாகச நிகழ்வுகள் நிரம்பிய, தெலுங்கானா மற்றும் புன்னபுரா வயலார் ஆயுதம் தாங்கிய போராட்டங்கள் மற்றும் அமைதிவழிப்பட்ட விவசாயிகளின் தேபகா இயக்கம் கம்யூனிச வரலாற்று நிகழ்வுகளில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டன.

            செங்கொடி தலைமையில் நாட்டின் பல பகுதிகளில், சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான சுயநலமற்றப் போராட்டங்களில், இன்னுயிரை ஈந்த தியாக மறவர்களை வருங்காலத் தலைமுறையினரும் என்றென்றும் நினைவு கொள்வர். சுதந்திர இந்திய வரலாற்றின் ஒவ்வொரு திருப்பு முனையிலும், தொழிலாளர்கள் மற்றும் பாடுபாடும் மக்கள் திரளின் நலன்களின் சார்பாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி களத்திலே முன்நின்றது. வலதுசாரி பிற்போக்குச் சக்திகளின் பேரழிவை ஏற்படுத்தும் சதிகளை எதிர்த்து எப்போதும் களமாடியது சிபிஐதான்; அதன் மூலம் ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் சோஷலிச இலக்குகளின் மேன்மையைக் கட்சி உயர்த்திப் பிடித்தது. வகுப்புவாத, பாசிச சக்திகள் நிகழ்த்த இருக்கும் அதன் (பேரழிவு) இயல்பைக் குறித்துக் கட்சி விழிப்புணர்வுடன் எப்போதும் தேசத்தை எச்சரிக்கிறது. பாசிச அபாய அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராட மதசார்பற்ற, ஜனநாயக, இடதுசாரி சக்திகளின் பரந்த அடிப்படையிலான மேடை அவசியம் என சிபிஐ வலியுறுத்தக் காரணம், உலக வரலாறு மற்றும் இந்திய வளர்ச்சி குறித்த கட்சியின் புரிதல் மிகத் தெளிவானது என்பதே. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தனது வலிமை மற்றும் சக்திகளைத் தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள், தலித் மற்றும் ஆதிவாசி மக்களின் உரிமைககளுக்காகப் போராட எப்போதும் அர்பணிக்கிறது. இந்தியத் துணைக் கண்டத்தின் குறுக்கும் நெடுக்குமாக சிபிஐ-யின் செங்கொடி – எங்கெல்லாம் மக்கள் ஆளும் வர்க்கங்களின்  கொடூரமான கொள்கைகளை எதிர்த்துக் கிளர்ந்து போராடுகிறார்களோ, அங்கெல்லாம் – செம்மாந்து ஒளிவீசி பறப்பது தெரிகிறது.

            கட்சி தொடங்கப்பட்டதிலிருந்து 1947வரை காலனிய ஆட்சிக்கு எதிராகவும், பின்னர் பல பத்தாண்டுகள் காங்கிரஸின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்தும், தற்போது பாஜகவின் மிகப் பிற்போக்குத்தனமான ஆட்சிக்கும் அதனைக் கட்டுப்படுத்தி வழிநடத்தும் பாசிச ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு எதிராகவும் முக்கியமான போர்களுக்குத் தளர்வின்றி மக்களைத் திரட்டுகிறது. தற்காலத்தில் இந்திய மக்கள் திரளுக்கு எதிரான முக்கிய எதிரி வகுப்புவாத பாசிச சக்திகளே என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிதான் மிகக் கூடுதலான தெனிவோடு பிரகடனப்படுத்தியது. மேலும் முக்கிய எதிரிக்கு எதிரான போர்களத்தில் வெற்றி பெற அனைத்து மதசார்பற்ற, ஜனநாயக இடதுசாரி சக்திகளின் பரந்துபட்ட மேடையை நனவாக்குவது என்ற அரசியல் கண்ணோட்டத்தை முன்னிறுத்தி ஆதரித்த முதல் அரசியல் கட்சியும் சிபிஐதான். மார்க்சிய விஞ்ஞானக் கோட்பாடுகளின் நம்பிக்கைக்குரியதாய் நின்று விளங்கும் சிபிஐ, அதன் அடிப்படையில் நமது நாட்டின் சமூக அரசியல் முரண்பாடுகளையும் உலகைச் சுற்றியுள்ள நிகழ்வுகளையும் பகுத்துணர எப்போதும் முயல்கிறது. இந்த அதன் அணுகுமுறை முயற்சிகளில் சொந்த அனுபவங்களிலிருந்தும் உலக அனுபவங்களிலிருந்தும் மதிப்புறு பாடங்களைக் கட்சி கற்றுள்ளது. இந்த வகையில் உலக கம்யூனிஸ்ட் போர்ப்படை அணிவரிசைகளில் தானும் பெருமைமிக்க ஒரு படைப் பிரிவு எனப் பிரகடனப்படுத்துவதில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மிகுந்த பெருமிதம் கொள்கிறது. 

            சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்து, உலக சோஷலிச முகாம் பலவீனமானபோது அது மார்க்சியத் தத்துவத்தின் தோல்வி அல்ல எனத் தயக்கமின்றி அறிவித்த சிபிஐ கட்சி, அதனைப் பயன்படுத்திய ஓர் அணுகுமுறையின் வீழ்ச்சி என்றது. சோஷலிச நெருக்கடிக்குப் பிறகு நடந்த 15வது கட்சி காங்கிரஸில், புதிய சூழ்நிலைகள் ஏற்படுத்திய பிரச்சனைகளைத் தீர்க்கும் சவாலை, புரட்சிகர மார்க்சிய விஞ்ஞானத்தைப் படைப்பூக்கமாக மேம்படுத்துவதன் மூலமாக, கட்சி எதிர்கொண்டு ஏற்றது.

            இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 96வது அமைப்புதினத்தைக் கொண்டாடும் இன்றைய தருணத்தில் கட்சி தனது உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், இடதுசாரிகளின் நலம் நாடுபவர்களை மார்க்சியப் புரட்சிகரத் தத்துவம் மற்றும் நடைமுறைகளைப் பயின்று தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளுமாறு அறைகூவி அழைக்கிறது. கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கும்போது, இந்த மாபெரும் தேசத்தின் சேவையிலும் நமது மக்கள் திரளின் நன்மைக்காகவும் ஆற்றிய எண்ணிறந்த தனது சாதனைகளுக்காகச் சிபிஐ கட்சி இயல்பாகவே பெருமிதம் கொள்கிறது. அதனோடு, முயற்சிகளில் தானடைந்த தோல்விகளையும்கூட கட்சி அறிந்தே இருக்கிறது. நீண்ட பயணத்தில் நிகழ்ந்த தனது தவறுகளைத் துணிவுடன் ஒப்புக்கொள்ளும் அரசியல் நேர்மையும் கொண்ட ஒரே கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே! அச்செயல் மக்கள்பால் உள்ள அதன் நேர்மையையும் கொள்கைபால் உள்ள பற்றுறுதியையும் பிரதிபலிப்பது.

            அதே உணர்வோடு, கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கொள்கை கோட்பாட்டின் அடிப்படையில் மீண்டும் ஒன்றிணைப்பது குறித்த முக்கிய பிரச்சனையில் சிபிஐ தனது நிலைபாட்டை உறுதிபட மீண்டும் வற்புறுத்துகிறது.  கொள்கைசார்ந்து எதிர்கால கண்ணோட்டத்துடன் மீளாய்வு செய்தால் கம்யூனிஸ்ட்கள் ஓர் உண்மையை உணர முடியும்;  அது, நமது இயக்கத்தில் ஏற்பட்ட பிளவு, புரட்சிகர இயக்கத்தைப் பலவீனப்படுத்தி, வர்க்க எதிரிகளை வலிமையாக்கி உள்ளது என்ற பெரும் உண்மையைப் புரிய வைக்கும். கம்யூனிச இயக்கத்தின் எதிர்வரும் நூற்றாண்டு மற்றும் அதன் விவாத நிகழ்வுகளில், தங்கள் சிந்தனை மற்றும் செயல்களில் ஒன்றுபடுவதற்கு உதவிடும் வகையில் பொருள் பொதிந்த விவாதங்களை நடத்துவதற்கான வாய்ப்புகளை இந்தியக் கம்யூனிஸ்ட்களுக்கு வழங்க வேண்டும்.

            இலட்சக் கணக்கான சிபிஐ உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பல்லாயிரக் கணக்கான அதன் கிளை அமைப்புகளுக்கு 96வது அமைப்பு தினம் என்பது கொண்டாடுவதற்கும் அனுசரிப்பதற்குமான வெறும் நாள் அன்று. எந்த மாபெரும் இலட்சியங்களுக்காக 1925ல் கட்சி நிறுவப்பட்டதோ அதற்குத் தங்களை மறு அர்ப்பணிப்பு செய்யும் தருணமாகும் இது.  அதே ஆண்டில் தொடங்கப்பட்ட ஆர்எஸ்எஸ், தேசத்தின் ஜீவாதாரங்களை உறிஞ்சிட தனது விஷக் கொடுக்குகளை நீட்டியுள்ளது என்பதை நாம் மறக்கலாகாது. இத்தகைய ஆபத்தான வளர்ச்சி அதன் கொள்கை சரியானது என்பதால் ஏற்பட்டதல்ல. உண்மையில் நியதி, நீதி, சரித்தன்மை என்பதெல்லாம் அவர்கள் கொள்கைகளுக்குப் புறம்பான எதிரிடையானவை. அவர்கள் முசோலினி பள்ளியில் படித்து பயிற்சி பெற்ற ஹிட்லர் பாசிசத்தின் இந்திய (பதிப்பின்) முகமாகும். 

            புதிய தாராளமயம் ஏவப்பட்டதால் இந்தியாவில் வலதுபுறம் சாய்ந்து வீசும் காற்றின் உதவியால் அவர்கள் வலிமையைத் திரட்டி தங்கள் இரகசியமான நோக்கங்களை நிறைவேற்றத் துணிந்துள்ளனர். இனப் பெருமிதம் மற்றும் சூப்பர் கொள்ளை லாபம் என்ற சிறகுகளில் ஏறி நமது நாட்டின் மதசார்பற்ற கட்டமைப்பினுள் ஊடுருவி, சமூகத்தில் வகுப்புவாதப் பிரிவினை விதைகளை விதைக்க முயல்கின்றனர். மக்களைத் திரட்டி அவர்களைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

            ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் செயல்படும் ஒன்றிய அரசு தனது பல சட்ட நடவடிக்கைகள் மூலமாக வகுப்புவாத பாசிசச் சக்திகளையும் உலகின் கார்ப்பரேட்டுகளையும் கட்டவிழ்த்து விட்டுள்ளது. அவர்கள் திட்டமிட்டு நாட்டு மக்கள் மத்தியில் ஒரு பிரமையைக் கட்டமைத்தனர் – அது, அவர்கள் தோற்கடிக்கப்பட முடியாதவர்கள் என்றச் சித்தரிப்பு. அந்த மாயா பிம்பத்தை, இன ஆதிக்க மேட்டிமையை இந்திய விவசாயிகள் தங்கள் வரலாற்றுப் புகழ்மிக்க ஓராண்டிற்கும் மேல் நீடித்தப் போராட்டங்களால் சுக்கு நூறாக நொறுக்கி விட்டனர். விவசாயிகளின் புகழ்மிக்க அமைதியான அப்போராட்டத்திலிருந்து தேசம் கற்க வேண்டிய பாடங்கள் ஏராளம். இது தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி கட்சிக் காங்கிரஸ் மாநாட்டு அறைகூவல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மேலும் பொருத்தமுடையது. அந்த அறைகூவல்,

            “மக்களிடம் செல்வோம், அவர்களோடு மீண்டும் ஒன்றிணைவோம்!”

            அந்த முழக்கம் கம்யூனிஸ்ட்களுக்குத் தங்கள் லட்சியங்களையும் நம்பிக்கைகளையும் நினைவுறுத்தும் கண்காணிப்பு வார்த்தைகளாகட்டும்!

மார்க்சியம் - லெனினியம் ஜிந்தாபாத்! செங்கொடி ஜிந்தாபாத்!                                           இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஜிந்தாபாத்!

--தமிழில் : நீலகண்டன், என்எப்டிஇ, கடலூர்    

No comments:

Post a Comment