Tuesday 28 December 2021

நாகாலாந்து படுகொலைகளும் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டமும்

 

நாகாலாந்து படுகொலைகளும் 

ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டமும்

--எஸ். சுதாகர் ரெட்டி

(மேனாள் பொதுச் செயலாளர்,  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி)

            நாகாலாந்தில் ஆயுதப்படைகள் டிசம்பர் 4ம் தேதி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டனர். மோன் மாவட்டத்தில் பணியாற்றும் சுரங்கத் தொழிலாளர்கள் சிலர், மற்றவர்கள் அவர்களுடைய கிராமத்திலிருந்து வந்த அவர்களது உறவினர்களும் நண்பர்களும். அது ஓர் இரக்கமற்றப் படுகொலை. ‘ஆயுதப் படையினர் தற்காப்புக்காகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர்’ என உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் அறிக்கை அளித்தார். அது கேலிக்குரிய பொய்.

            படையினருக்கு எதிர்ப்புறத்தில் இருந்து சுடும்போது, படையினர் திருப்பித் துப்பாக்கிச் சூடு நடத்தினால் அது தற்காப்பு. அவர்களது வாகனத்தைத் தடுத்து நிறுத்த வேண்டுமானால் சாலைத் தடுப்புகளைப் பயன்படுத்தியிருக்கலாம். அவ்வழியில் தீவிரவாதிகளை எதிர்பார்த்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாகப் படையினர் கூறிக் கொள்கின்றனர். தங்கள் வண்டியை நிறுத்துமாறு சைகை செய்யப்படவில்லை என உயிர்பிழைத்த தொழிலாளி கூறினார். ஒருக்கால் அத்தகவல் உளவுப் பிரிவினரால் தரப்பட்டிருக்கலாம். சில காலமாக நாகாலாந்து கொந்தளிப்பில் குழப்பமாக இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் நாகாலாந்து தீவிரவாதிகளுடன் சில உடன்பாடு ஏற்பட்டதாக மோடி அரசு கூறினாலும் அந்த உடன்பாடு என்ன என்பது குறித்து மக்களிடம் நம்பிக்கை வைத்து எதுவும் சொல்லவே இல்லை. தீவிரவாதிகளுடன் விவாதம் நடத்திய மூத்த காவல்துறை அதிகாரி ரவிக்குச் சுளையாகச் சமீபத்தில் (தமிழ் நாட்டின்) ஆளுநர் பதவி அளிக்கப்பட்டது. கொடூரமான துப்பாக்கிச் சூடு சம்பவம் கிளர்ச்சியாளர்களை இப்பகுதியில் மீண்டும் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடத் தூண்டலாம்.

            இராணுவக் கோர்ட் விசாரணை நடத்துவது இச்சம்பவத்தில் குற்றவாளிகளைத் தண்டிக்க உதவாது; காரணம், அவர்களை ‘ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம்’ (AFSPA, அஃப்ஸ்பா) பாதுகாக்கிறது. ‘பதற்றமான பகுதிகள்’ என அழைக்கப்படும் இடங்களில் மக்கள் இயக்கங்களை நசுக்குவதற்காகப் பிரிட்டிஷ் அரசு கொண்டு வந்ததே இந்தச் சிறப்பு அதிகாரச் சட்டம். விடுதலை பெற்ற இந்தியாவில் அஸாமின் சில பகுதிகளுக்காக 1958ல் இச்சட்டம் அறிமுகமானது. பின்னர் ஒன்றிணைந்த அஸாம் மேலும் ஆறு வடகிழக்கு மாநிலங்களாகப் பிரித்து அமைக்கப்பட்டபோது (அந்த ஏழு மாநிலங்களும் சேர்ந்து ‘ஏழு சகோதரிகள்’ என அழைக்கப்பட்டது) அஃப்ஸ்பா கொண்டுவரப்பட்டது. அச்சட்டத்தை அமல்படுத்த அஸாம் ரைஃபிள்ஸ் படைப் பிரிவு நியமிக்கப்பட்டது. அவர்கள் நடத்திய அட்டூழியங்கள் காரணமாகச் சிறப்பு அதிகாரச் சட்டத்தை மக்கள் வெறுத்தனர். பின்னர் அது மாற்றியமைக்கப்பட்டது. கடந்த பல வருடங்களில் பல சம்பவங்கள் நிகழ்ந்தேறின, கிளர்ச்சியாளர்களோடு மற்றவர்களும் கொல்லப்பட்டனர்.

இருபது ஆண்டுகளுக்கு முன் மணிப்பூரில் 20 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். பேருந்து நிலையத்தில் காத்திருக்கும்போது சிலர் மிருகத்தனமான தாக்குதலைச் சந்தித்தனர். மனோரமா தேவி என்ற பெண்மணி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட நிகழ்வால் மணிப்பூர் பெண்கள் பெரும் சீற்றம் அடைந்தனர். அவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணி உலக மக்களின் மனசாட்சியை உலுக்கியது; அப்பேரணியில் நிர்வாணமாகச் சென்ற பெண்கள், ”எங்களைப் பலாத்காரம் செய்”

என முழக்கமிட்டனர். மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். அஃப்ஸ்பா சட்டத்திற்கு எதிராக இரோம் ஷர்மிளா பல ஆண்டுகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். அவருக்கு வலுக்கட்டாயமாக அரசு உணவு ஊட்டினாலும், அவற்றை மீறி அவர் 16 ஆண்டுகள் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தினார்.   

காலிஸ்தான் இயக்கத்தின்போது பஞ்சாபிற்கு நீட்டிக்கப்பட்ட அஃப்ஸ்பா 14 ஆண்டுகள் அமலுக்குப் பிறகு விலக்கிக் கொள்ளப்பட்டது.  1990ல் ஜம்மு காஷ்மீரில் திணிக்கப்பட்ட சட்டம் இன்றும் அமலில் உள்ளது. 12வது மக்களவையில் நான் (எஸ் சுதாகர் ரெட்டி) உறுப்பினராக இருந்தபோது மணிப்பூரிலிருந்து அனைத்துக் கட்சி குழுவினரை அழைத்துச் சென்று சிவராஜ்சிங் பாட்டில், உள்துறை அமைச்சரைச் சந்தித்தோம்; பின்னர் 14வது மக்களவையின்போது பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கையும் சந்தித்து விவாதித்தோம். சிறப்புச் சட்டத்தை விலக்கினால் ஆயுதப் படையினர் மனஉறுதி குலைந்து தளர்ச்சியடையக்கூடுமென இருவருமே வித்தியாசமான காரணம் கூறினர்.  சில அத்துமீறல்கள் நடைபெறுவதை அவர்கள் ஏற்றாலும் சில பகுதிக

ளில் தொடர வேண்டிய தேவை உள்ளது என்றனர். சூழ்நிலை மேம்பட்ட பிறகு மறுபரிசீலனை செய்ய உறுதியளித்தனர். சட்டத்தை ரத்து செய்யக்கோரி வடகிழக்கில் பல தூதுக்குழுக்களும் பல்வேறு போராட்டங்களும் நடந்தன. திரிபுரா மாநிலத்தில் இடதுசாரி அரசு அமைதியை ஏற்படுத்திய பிறகு சட்டம் விலக்கப்பட்டது. பின்னர் மிஸோராம் மேகாலயாவிலும்
ரத்தானது. ஆனால் அஸாமின் சில பகுதிகள், நாகாலாந்து, இம்பால் தவிர்த்து மணிப்பூர் முழுவதும் மற்றும் ஜம்மு காஷ்மீரிலும் அஃப்ஸ்பா சட்டம் இன்னும் தொடர்கிறது.

ஐநா சபையின் மனித உரிமைகள் கமிஷன் (UNHRC) இச்சட்டத்தை விலக்கிக் கொள்ள திரும்பத் திரும்ப இந்திய அரசிடம் கூறியது. இது பற்றி ஆய்வு செய்ய பல கமிஷன்கள் அமைக்கப்பட்டன.


நீதிபதி ஜீவன் ரெட்டி கமிஷன்

            உச்சநீதிமன்ற நீதியரசர் ஜீவன் ரெட்டி தலைமையிலான குழு 2005 ஜூன் 6 அறிக்கையில் இச்சட்டத்தை ரத்து செய்யக் கறாராகச் சிபார்சு செய்தது. ஏனெனில், “இச்சட்டம் வெறுப்பு மற்றும் அடக்குமுறையின் அடையாளம், அடாத நடவடிக்கைகளுக்கான ஒடுக்குமுறை கருவி” என்றது. 10 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்ட அறிக்கையை 2015ல் மோடி அரசு நிராகரித்தது.

சந்தோஷ் ஹெக்டே குழு

            2013ல் ஆறு பேர் இராணுவத்தால் கொல்லப்பட்ட நிகழ்வை அடுத்து தொடர்ச்சியாக நடத்தப்பட்ட போராட்டங்களால் நீதியரசர் சந்தோஷ் ஹெக்டே குழு அமைக்கப்பட்டது. மேனாள் முதன்மை தேர்தல் ஆணையர் ஜெஎம் லிங்டோ மற்றும் காவல்துறை மூத்த அதிகாரி ஒருவரும் குழுவில் இடம்பெற்றனர். விசாரணைக்குப் பிறகு பலியானவர்கள் எவர் மீதும் எந்தக் குற்றப் பின்னணி பதிவுகளும் இல்லை என்று அறிவித்தவர்கள், அஃப்ஸ்பா சட்டம் மேலும் மனிதத்தன்மையுடன் இருக்க வேண்டும், இராணுவப் படையினர் தங்கள் செயல்களுக்கு மேலும் பொறுப்பாக்கப்பட வேண்டும் என்றும் கூறினர். நீதிக்குப் புறம்பான கொலைகளைச் சட்டபூர்வமாக விசாரிப்பது குறித்து ஒன்றிய அரசு மூன்று மாத காலத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் எனவும் அவர்கள் ஆலோசனை கூறினர். மேலும் ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் போன்ற பகுதிகளில் அமைதியை ஏற்படுத்தி சாதிப்பதில் அஃப்ஸ்பா சட்டம் தடையாக உள்ளது எனக் குறிப்பிட்டது.

            ஹெக்டே குழு ஆயுதப் படையினருக்கு எதிராகக் குற்ற நடவடிக்கை எடுப்பதிலிருந்து அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் அச்சட்டத்தின் ஆறாவது பிரிவைக் குறிப்பிட்டு முக்கியமான விமர்சனத்தைச் செய்தது: ‘அப்பிரிவின்படி ஒன்றிய அரசின் அனுமதி இன்றி எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட முடியாது; அவ்வாறெனில், உரிய விசாரணைக்குப் பின் ஒன்றிய அரசால் சட்டபூர்வ குற்ற நடவடிக்கைக்கு அனுமதி வழங்க முடியும் என்பதே அதன் பொருள்’ என்றும் விளக்கியது.

            இரண்டாவது நிர்வாகச் சீர்திருத்தக் குழு தனது அறிக்கையில் அஃப்ஸ்பா சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என சிபார்சு செய்தது; மேலும் அவ்வாறு ரத்து செய்தால் அது வடகிழக்கு மாநில மக்களிடையே எழுந்துள்ள பாகுபாடு மற்றும் அன்னியப்படுத்தப்படுவதான உணர்வையும் நீக்கும் என்று கருத்துரைத்தது. அக்குழு, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தைத் திருத்தவும் வடகிழக்குப் பகுதியில் ஆயுதப்படைகளைப் பயன்படுத்துவது பற்றிய புதிய அத்தியாயத்தைச் சேர்க்க வேண்டும் எனவும் சிபார்சு செய்தது. 

            உச்சநீதிமன்றம் பின்வருமாறு கூறியது: ஆயுதப்படை நடத்தும் எந்த என்கௌண்டரில் பலியானாலும், பலியானவர் அப்பாவி பொது மனிதரோ அல்லது தீவிரவாதியோ அல்லது பயங்கரவாதியோ எவராயினும் அது முழுமையான விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்; சட்டம் அனைவருக்கும் பொது, இருவருக்கும் சமமாகவே பயன்படுத்த வேண்டும். ஜனநாயகத்தின் தேவை அது, மற்றும் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதன் தேவையும், தனிநபர் சுதந்திரங்களைப் பாதுகாப்பதன் தேவையுமாகும். இப்படிப் பல முக்கியமான சிபார்சுகளுக்குப் பிறகும் ஆயுதப் படையினர் சிறப்பு அதிகாரச் சட்டம், மக்கள் விருப்பத்திற்கு மாறாகத் தொடர்கிறது; அப்பாவிகள் பலியாவதும்கூட.

            சிலகாலம் முன்பு ஒரு மூத்த இராணுவ அதிகாரி, ‘எந்த நாட்டின் மக்கள் அந்நாட்டின் இராணுவத்தைப் பார்த்து பயப்படவில்லையோ, அந்த நாடு சபிக்கப்பட்டதாக அழியும்’ என்று திருவாய் மலர்ந்தார். அது சரியான கருத்து அல்ல. எல்லைகளையும் தேசத்தையும் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டதே இராணுவம், மக்களை அடக்கி ஒடுக்குவதற்காக அல்ல. நாட்டின் எதிரிகள், ஆக்கிரமிப்பாளர்கள் இராணுவப் படையைப் பார்த்து பயப்பட வேண்டும். நமது நாட்டு மக்கள் இராணுவத்தை மதிக்கிறார்கள், வீரர்களின் தியாகத்தை நோக்கி அவர்களிடம் அன்புடையவர்களாக இருக்கிறார்கள். பின் அவர்கள் ஏன் அச்சப்பட வேண்டும்?

            அரசு நிர்வாகத்தின் எந்த அமைப்பிடமும் அச்சப்படுவது வெறுப்பை வளர்க்கும். தேசத்தின் ஒட்டுமொத்த மக்களும் தீவிரவாதிகள் இல்லை. மக்கள் கூட்டம் பின்வரும் பிரிவினர்களைக் கொண்டிருக்கிறது: தேசத்தின் செல்வத்தை உற்பத்தி செய்யும் உழைக்கும் வர்க்கம்; தேசத்திற்கு அன்னமிட உணவு தானியங்களை உற்பத்தி செய்யும் விவசாயிகள்; ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் போல பெரும் கருவிகளை உற்பத்தி செய்து வானை அளக்க ஊர்திகள் அனுப்பும் நமது விஞ்ஞானிகள், தொழில்நுட்பவியலாளர்கள்; மக்களின் நலன் காக்கும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், கைவினைஞர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், அறிஞர்கள், கலைஞர்கள், மக்கள் உரிமைக்காகப் போராடும் மக்கள் பிரதிநிதிகள், சிறிய பெரிய வணிகர்கள், போற்றுதலுக்குரிய தூய்மைப் பணியாளர்கள், கணினி வல்லுநர்கள் என எண்ணிறைந்த பகுதியினரைக் கொண்டது நமது மக்கள் தொகை. இந்த மக்கள் இராணுவத்தைப் பார்த்து ஏன் பயப்பட வேண்டும்? எங்கெல்லாம் குற்றவாளிகளும் சமூக விரோதிகளும் இருக்கிறார்களோ அவர்களை நமது காவல்துறையினர் கவனித்துக் கொள்வார்கள்.

            நாடாளுமன்றத்தில் எதிர் கட்சிகள், காங்கிரஸ் உட்பட (பொதுவாக ஆட்சிஅதிகாரத்தில் இருக்கும் கட்சிகள், அதிகாரம் இழந்ததும் ஞானம் வந்தவராவார்கள்) நாகாலாந்து படுகொலைகள் குறித்து முழுமையான விசாரணை கோரி எதிர் தரப்புப் பங்கினை ஆற்றின; இடதுசாரிகள் உட்பட சில கட்சிகள் மக்கள் விரோத அஃப்ஸ்பா சட்டத்தை ரத்து செய்யக் கோரின.

           தற்போது இதற்கான போராட்டம் வடகிழக்கு மற்றும் ஜம்மு காஷ்மீர் பகுதிகளோடு வரையறுத்து நிற்பதல்ல. இது ஒட்டு மொத்த தேசத்தின் ஜனநாயகத்திற்கான போராட்டம். அரசியல் கட்சிகள், ஜனநாயக சக்திகள் மற்றும் மக்கள் அனைவரும் அஃப்ஸ்பா சட்டத்தை ரத்து செய்வதற்காக இணைந்து போராட முன்வர வேண்டும்.

(கடைசி செய்தி : வெறுப்புக்குரிய ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை நாகாலாந்தில் நீக்குவதற்காக ஒன்றிய அரசு உள்துறை அமைச்சக கூடுதல் செயலாளர் தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளது. ரத்து செய்வதற்கான வழிமுறைகளை அக்குழு 45 நாட்களில் தரும். –பத்திரிக்கை செய்தி)

--நன்றி: நியூஏஜ் (டிச.19 --25)

--தமிழில் : நீலகண்டன்

No comments:

Post a Comment