Wednesday 22 December 2021

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாற்று வரிசை 55 -- பத்தம் எல்லா ரெட்டி

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 55         


பத்தம் எல்லா ரெட்டி
--

ஆயுதப் போராட்டத்தை விலக்கிக் கொள்வது எப்படி என அறிந்த தலைவர்

– அனில் ரஜீம்வாலே

நியூஏஜ் (நவம்.21 – 27)

            ஆந்திரா மாநிலம், கரீம்நகர் மாவட்டத்தில் கலிப்பள்ளி கிராமத்தில், பட்டேல்கள் என அறியப்படும் நடுத்தர விவசாயிகள் குடும்பத்தில் 1906ல் பத்தம் எல்லா ரெட்டி பிறந்தார். தந்தை பெயர் ஹன்மையா அசல்தார் முகட்டம் (Hanmaiah Asaldar Mukaddam). கலிப்பள்ளியில் இருந்த தொடக்கப் பள்ளியில் ஆரம்பக் கல்வியையும் பின்னர் ஹைத்தராபாத், கௌளிகுடா நகரின் விவேக் வர்த்தனி பள்ளியில் சேர்ந்த பத்தம் எல்லா ரெட்டி 1927 –28ல் மெட்ரிக் கல்வியை முடித்தார். அந்தக் கல்வி நிறுவனத்தின் தேசியத் தனித்துவமும் தாராளச் சிந்தனை பண்பும் அவரிடம் ஆழமான செல்வாக்கு செலுத்தியது. அவருக்கு வாமன் நாயக் என்ற புரட்சியாளருடன் தொடர்பு ஏற்பட்டது.

சட்டமறுப்பு இயக்கத்தில்

            அப்பள்ளி செல்வாக்குபோலவே அதே நேரம் காங்கிரஸ் தலைமையிலான இயக்கத்தாலும் ஈர்க்கப்பட்டு கதர் பிரச்சாரங்களில் சேர்ந்தார். அவர் ஹைத்தராபாத் நகரின் கோல்கொண்டா பத்திரிக்கா, மெட்ராசிலிருந்து வெளியான ஆந்திர பத்திரிக்கா இதழ்களின் முகவரானார்.

            ஆந்திர மகாசபா அமைப்பு 1920களிலேயே தொடங்கப்பட்டதாகும். 1921ல் வெறும் 12 உறுப்பினர்களுடன் ஆந்திரா ஜன் சங்கம் (ஆந்திர மக்களின் சொஸைட்டி) நிறுவப்பட்டது. 1922 பிப்ரவரியில் அதன் முதல் மாநாடு நடைபெற்றது. 1928ல் அவ்வமைப்பு ஆந்திரா மகாசபா என மாற்றப்பட்டு அதன் முதல் மாநாடு 1930ல் நடைபெற்றது.

            எல்லா ரெட்டி பின்னாட்களில் மகாசபாவின் முக்கியமான தலைவர்களில் ஒருவரானார். அவர் ஆந்திர மகாசபாவின் முக்கிய புள்ளியும் காங்கிரஸ் தலைவருமான சுவாமி இராமானந்த் தீர்த்(தர்) அவர்களுடன் மிக நெருக்கமாகப் பணியாற்றினார். இராமானந்த் தீர்த்(தர்) நிஜாமின் ஆட்சிக்கு எதிராகப் பல போராட்டங்களை நடத்தி ஹைத்தராபாத்தை இந்தியாவுடன் இணைப்பதற்காகப் பாடுபட்டார். ஆந்திர மகாசபாவில் கம்யூனிஸ்ட்களும் காங்கிரஸ்காரர்களும் ஒன்றாகப் பணியாற்றினார். எல்லா ரெட்டி 1930 ஜூலையில் சட்டமறுப்பு இயக்கத்தில் சேர மெட்ராஸ் மாகாணத்திற்குப் புறப்பட்டார். திருச்சிராப்பள்ளியிலும் வேலூரிலும் சத்யாகிரகப் பிரச்சாரம் செய்தார். கள்ளுக் கடை மற்றும் அயல்நாட்டுப் பொருள்கள் விற்கும் கடைகளில் மறியல் செய்ததற்காக அவர் பீமாவரத்தில் கைதானார். 1930 ஜூலை 26ல் குற்றவாளியெனத் தீர்ப்பாகி ஏழு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டார்.

            விவசாய விளைச்சல் திருப்திகரமாக இல்லாததால் 1931ல் அவர் விவசாயிகள் மத்தியில் (சமஸ்தான) அரசுக்கு வரி வருமானம் செலுத்த வேண்டாம் எனப் பிரச்சாரம் செய்தார். 1931 அக்டோபரில் கலிப்பள்ளி, ஜவகர்பேட், முஸகான் பேட் மற்றும் ஆனந்த்குண்டி முதலான ஊர்களின் மக்களைத் திரட்டி ‘முழுமையான வரி வருவாய் தள்ளுபடி அல்லது பணம் செலுத்துவதற்கு மேலும் காலஅவகாசம்’ கோரி மனுஅளிக்கச் செய்தார்.

            1931 செப்டம்பரில், ‘பால்நந்தா ஆந்திரா சபா நிலையம்’ என்ற பெயரில் தெலுங்கு நூலகம் ஒன்றைத் திறந்தார். ஆர்மூர், நிஜாமாபாத் மாவட்டத்திற்கு விஜயம் செய்து மகாத்மா காந்தியின் இயக்கத்திற்காக நிதி திரட்டினார்.

            1928 –29ல் காக்கிநாடாவில் ராவி நாராயண ரெட்டியுடன் உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டதே எல்லா ரெட்டியின் முதலாவது பெரிய அரசியல் நடவடிக்கை. அவ்வியக்கத்தில் அவர் அடி உதைபட்டு, கைதாகி ஏழு மாதங்கள் தொடர்ச்சியாக மெட்ராஸ் பிராந்தியத்தின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டார். அப்போது எல்லா நேரமும் கை கால்களில் விலங்கைப் பூட்டி மிகக் கொடூரதாகத் துன்புறுத்தப்பட்டார். விடுதலையானதும் ஆந்திர மகாசபாவில் சேர்ந்தார். அத்தருணத்தில் எல்லா ரெட்டியும் ராவி நாராயண ரெட்டியும் இளைஞர் இயக்கத்திலும் தலைவர்களாக இருந்தார்கள்.

            மாநிலக் காங்கிரஸ் அமைப்பு நிறுவப்பட்ட 1938 முக்கியமான வருடமாகும். ஆனால் அவ்வமைப்பு உடனடியாகத் தடை செய்யப்பட்டது. அது நடத்திய சத்தியாகிரகப் போராட்ட இயக்கத்தில் அதன் 7வது சத்தியாகிரகிகள் அணியின் ‘சர்வாதிகாரி’ யாக (அணித் தலைவர்) பத்தம் எல்லா ரெட்டி அறிவிக்கப்பட்டார். மாநில காங்கிரஸ் அமைப்பின் செயல்பாட்டுக் கமிட்டியின் உறுப்பினராகவும் அவர் இருந்தார். 1937 முதல் 1941ம் ஆண்டு வரையான காலத்தின் மகாசபாவின் அரசியல் தீவிரமயமானது. 1941ல் ராவி நாராயண ரெட்டி அதன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்கள் இருவரும் மகாசபாவை மிகத் திறமையாக வழிநடத்தினர். 

            ஹைத்தராபாத் நகரில் காங்கிரஸ் சார்பில் அவர் சத்தியாகிரகத்தில் தன்னை ஒப்புக் கொடுத்தார், 1938 ஆகஸ்ட் 11ல் கைதானார். எல்லா ரெட்டி ஓர் உறுதியான கம்யூனிஸ்ட்டாகவும் தீவிரமான காங்கிரகாரருமாகப் பணியாற்றினார். அப்படி அவர் முரண்பாடான இரண்டுமாக இருப்பதைப் பல தோழர்களுக்கு ஜீரணிக்க முடியவில்லை.

            மெட்ராஸ் மாகாணம், கிருஷ்ணா மாவட்ட துணிலிப்பாடு என்ற இடத்தில் நடைபெற்ற விவசாயிகளுக்கான அரசியல் பள்ளிக்குச் சென்று கலந்து கொண்டார். காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியின் தலைவரும் அகில இந்திய கிஸான் சபாவின் (ஏஐகேஎஸ்) தலைவருமான பேராசிரியர் என் ஜி ரங்கா அந்தப் பள்ளியை நடத்தி வந்தார். 1939ல் மாணவர்கள் நடத்திய ‘வந்தே மாதரம்’ போராட்டத்திற்கு உதவினார். 1939 கரீம் நகரில் அவர் கதர் கடை ஒன்றையும் தொடங்கினார்.

காங்கிரஸ் மற்றும் ஆந்திர மகாசபாவில்

            எல்லா ரெட்டி தனது இல்லத்தில் 1939 நவம்பர் 30ல் ஒரு பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். அக்கூட்டத்தில் குண்டூரைச் சேர்ந்த தேஷ்பக்த கொண்டா வெங்கடப்பையா கதர் (காதி), அரிசன முன்னேற்றம், மற்றும் பிற தலைப்புக்களில் சொற்பொழிவாற்றினார். அவர் 1939 டிசம்பரில் நடந்த அலிர் கிஸான் மாநாட்டின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆந்திர மகாசபாவின் 7வது வருடாந்திர அமர்வின்போது 1940 ஏப்ரல் 21 மால்காப்பூரில் ‘விவசாயிகள் பேரணி’ என அறியப்படும் ஆர்ப்பாட்டம் ஒன்றை எல்லா ரெட்டி நடத்தினார். ஆந்திர மகாசபா உண்மையான பெருந்திரள் மக்கள் இயக்கமாக, முக்கியமாக நால்கொண்டா மற்றும் வாராங்கல் பகுதிகளில் வளர்ந்தது. கரீம் நகரிலும் அது வளர்ந்து வந்தது. 1941லிருந்து மகாசபாவின் செயல்பாடுகளில் எல்லா ரெட்டியும் அவரது கூட்டாளிகளும் செல்வாக்கு செலுத்தினர். விரைவில் எல்லா ரெட்டி அதன் பொதுச் செயலாளரானார், இயக்கமும் நிஜாமுக்கு எதிரான ஒன்றுபட்ட தீவிர முன்னணியானது.

            1942 மே மாதம் ரூ200 அபராதமும் ஓராண்டு கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்ட எல்லா ரெட்டி சிர்சில்லா சிறையில் அடைக்கப்பட்டார். (இன்றைய தெலுங்கானா மாநிலத்தில் சிர்சில்லா 40ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத் தறிகளுடன் முக்கியமான டெக்ஸ்டைல் மையமாகத் திகழ்கிறது). அவருக்கு விலங்கு பூட்டத் தேவையில்லை என நீதிமன்றத்திலேயே நீதிபதி கூறிய பிறகும், கான்ஸ்டபிள்கள் அவரது கை கால்களில் விலங்குகளைப் பூட்டி சிர்சில்லாவிலிருந்து கரீம்நகருக்கு அவரை மாற்றினர். தினஇதழ்களில் அது பரபரப்பான செய்தியானது. அவரை வழியனுப்ப பெரும் எண்ணிக்கையில் இளைஞர்கள் குவிந்தனர். காவல் நிலையத்திற்கு அவரை முக்கிய வீதிகள் வழியாக நடத்தி அழைத்துச் சென்று அங்கே மனநலம் பாதித்த ஒருவனுடன் அவரை அடைத்து வைத்தனர். பல முறை வேண்டியும் உணவோ குடிக்க நீரோ வழங்க மறுத்து பின் அவரை வாராங்கலுக்கு மாற்றினர். அங்கேயும் அந்தச் சிறையிலிருந்து செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு, 6 கிமீ தொலைவு அவரது ஒரு காலில் பெரும் இரும்பு வளையத்தை மாட்டி நடத்தியே அழைத்துச் சென்றனர். அவர் மிகவும் பசியோடு இருந்ததால் கழிபேட் பேருந்து சேவையில் இருந்த பயணிகள் அவருக்கு மாங்கனிகளும் தண்ணீரும் வழங்கினர்.

            நிஜாம் அரசின் ஹைத்தராபாத் காவல் மற்றும் சிறைத் துறை ஐஜி-க்கு கே டெய்லர் என்ற துணை காவல் கண்காணிப்பாளர் பின்வருமாறு கடிதம் எழுதினார் : ”எல்லா ரெட்டி தொல்லை விளைவிக்கும் மிகத் தீவிரமான கலகக்காரர்; எனவே அவரை நிபந்தனைகள் இல்லாமல் விடுதலை செய்தால், விரைவில் மகாத்மா காந்தி தொடங்க உள்ள கிளர்ச்சிப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்கக்கூடும்.” இத்தகவல்களைக் கோல்கொண்டா பத்திரிக்கா மற்றும் ஆந்திரா பத்திரிக்கா போன்றவை விரிவாக வெளியிட்டன. சிறையில் அரசியல் கைதிகளுக்கு உரிமையான மேம்பட்ட வசதிகள் மற்றும் நாளிதழ்கள் வழங்கக் கோரி அவர் சிறையில் உண்ணாவிரதப் போராட்டமும் மேற்கொண்டார். அவரைக் கட்டாயப்படுத்தி உணவூட்ட முயன்றனர். இறுதியில் அவரது போராட்டமே வென்றது, அரசியல் கைதிகளுக்கான சில முக்கிய வசதிகள் தரப்பட்டன.

            பின் விடுதலை செய்யப்பட்டவரை ஒரு கிராமத்தில் கட்டாயமாக அடைத்து வைத்தனர்.

பின்னர் சிபிஐ கட்சியில்

            மகாசபாவையும் சிபிஐ கட்சியையும் அரசு தடை செய்தது. எல்லா ரெட்டியும் மற்றவர்களும் தலைமறைவாயினர். அங்கிருந்தபடி ராவி நாராயணன், எல்லா ரெட்டி மற்றும் மக்தூம் மொகியுதீன் கட்சி சார்பாக அறிக்கைகள் வெளியிடுவது வழக்கம். இயக்கத்தின் ஒருவகையான  ‘மூவர் அணியாக’ அவர்கள் ஒத்திசைந்து செயல்பட்டனர். அந்தப் பகுதியில் வாழும் மக்களுக்கு 1947 செப்டம்பர் 11ல் அவர்கள் விடுத்த திறந்த வேண்டுகோளில் ஆந்திர மகாசபாவின் சார்பில் எல்லா ரெட்டி கையொப்பம் இட்டார். சிபிஐ, அனைத்து ஹைத்தராபாத் தொழிற்சங்கக் காங்கிரஸ் (AHTUC) மற்றும் மகாசபா மூன்றும் இணைந்து வெளியிட்ட அந்த அறிக்கையில் நிஜாம் அரசு, நிலச்சுவான்தார்கள் மற்றும் (வரி வசூலிக்க அதிகாரமாக) தேஷ்முக் பட்டம் அளிக்கப்பட்ட நிலப் பிரபுக்களுக்கு எதிராகப் போராட ஆயுதங்களை ஏந்துமாறு மக்களை அறைகூவி வேண்டினர். நிஜாமும் (நிலவுடைமையாளர்களின் தனிப்பட்ட கூலிப்படையான) ராஜ்கார்களும் ஹைத்தராபாத் இந்தியாவுடன் இணைவதை விரும்பவில்லை; சுதந்திரமான அரசாக நீடிக்க வேண்டுமென அவர்கள் விரும்பினர்; ஆனால் மூவர் அணி நிஜாம் அரசுக்கு முடிவுகட்டவும்  இந்திய ஒன்றியத்துடன் இணைவதற்காகவும் அறைகூவல் தந்தது.

ஹைத்தராபாத் இணைப்பும் கட்சியின் தவறும்

            சில காங்கிரஸ்காரர்கள் சிறையில் இருக்க மற்றவர்கள் அந்தச் சமஸ்தானத்தின் எல்லைகளில் முகாம் அமைத்துத் தங்கி இருந்தனர். இந்திய அரசின் போலீஸ் நடவடிக்கைக்குப் பின் நிஜாம் சரணடைந்தார்; ஹைத்தராபாத் இந்திய ஒன்றியத்துடன் இணைந்தது. பொதுமக்கள் இந்திய இராணுவத்தைத் தங்களை விடுவித்த இரட்சகர்களாக வரவேற்றனர்.

            இந்தத் தருணத்தில்தான் கட்சி மிகப்பெரிய தவறை, சொல்லப்போனால் உண்மையில் ஓர் அபத்தத்தை, இழைத்தது. இரண்டாவது கட்சிக் காங்கிரஸை ஒட்டி ஆந்திரா கமிட்டி குழுவாத சாகசப் பாதையைப் பின்பற்றுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது. அத்தீர்மானத்தின்படி (ஒன்றியத்தில் அதிகாரத்தில் இருந்த) காங்கிரஸ் ஏகாதிபத்தியத்துடன் கூடிக் குலாவி அதனோடு அதிகாரத்தைப் பங்கு போட்டுக் கொண்டது என்றும், சுதந்திரமே ஒரு ஏமாற்றுப் பொய் என்றும் கூறியது: மேலும், நாடு முழுவதும் கொரில்லா போராட்டத்தைத் தொடுக்க வேண்டும் எனக் கூறியது. அதாவது, ‘சீனப் பாதை’ என்று அழைக்கப்பட்ட பாதையைப் பின்பற்றியது. அவர்கள் அளித்த முழக்கம், “தெலுங்கானா வழி (ஆயுதப் போராட்டக் கிளர்ச்சி) ஒன்றுதான் நாடு முழுவதும் பின்பற்றப்பட வேண்டும்” என வலியுறுத்தியது.

            எல்லா ரெட்டி, மக்தூம் மற்றும் ராவி நாராயணன் ரெட்டி இந்த வாதத்தில் சமாதானம் அடையாமல், குறிப்பாக இந்திய இராணுவம் நுழைந்த பிறகு ஆயுதப் போராட்டம் தொடர்வதை எதிர்த்தனர்: விளைவு, புதிய தலைமைப் பட்டியலில் இடம் பெறாது விடப்பட்டனர். கட்சியின் தெலுங்கானா குழுவின் செயலாளராக அதன் முதல் மற்றும் இரண்டாவது மாநாடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் எல்லா ரெட்டி. அவரும் மற்றவர்களும் கட்சியின் தெலுங்கானா கமிட்டி ஆந்திரா மாகாணக் கமிட்டியிலிருந்து தனியாகச் செயல்பட விரும்பினர். மற்றவர்கள் தெலுங்கானா கமிட்டி மாகாணக் குழுவின் கீழ்தான் இருக்க வேண்டும் என விரும்பினர்.

            எல்லா ரெட்டி தெலுங்கானா சிபிஐ மாகாணக் குழுவின் செயலாளராக இருந்தார். அவர் சிபிஐ கட்சியின் அகன்ற ஆந்திரா (விசால் ஆந்திரா) குழுவிலும் உறுப்பினராக இருந்தார்.

              எல்லா ரெட்டியைக் குழந்தைப் பருவத்திலிருந்தே கவனிக்கும் வாய்ப்பு பெற்றவர், புகழ்பெற்ற மாணவர் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவரான நரசிங்(க) ராவ். அவர்கள் மாணவப் பருவ நாட்களிலும், தலைமறைவு வாழ்வின்போதும் சந்தித்திருக்கிறார்கள். 1952 தேர்தலில் சிட்டிபேட் தொகுதியிலிருந்து போட்டியிட்ட குருவா ரெட்டிக்காக அவர்கள் பணியாற்றியுள்ளனர். 

கிஷன் சந்தர் (2014, நவம்பர் 23 – 1977 மார்ச் 8) (படம்) என்ற உருது மற்றும் இந்தி சிறுகதை மற்றும் நாவலாசிரியர் எழுதிய “ஜப் கெத் ஜாகெ” என்ற கதையின் வழி  நரசிங்(க) ராவ், “மா பூமி” என்ற தெலுங்குமொழி திரைப்படத்தை 1980ல் எடுத்து வரலாற்று ஆளுமையான எல்லா ரெட்டியை நினைவு கூறுகிறார். 

  
(அந்த நாவலும் திரைப்படமும் விவசாயிகளின் போராட்ட உணர்வையும், எந்தத் தியாகத்திற்கும் அவர்கள் தயாராக இருப்பதையும் கலை நேர்த்தியோடு விவரிக்கிறது.) அந்தப் படத்தின் (போஸ்டர் படத்தில்) பல சித்தரிப்பு நிகழ்வுகளில், மலைசார்ந்த அப்பகுதி கிராமத்தில் ஒரு பெண் கொரில்லா படையைக் காவல் காத்து நின்ற நிகழ்வும் ஒன்று. அக்காட்சியில் கட்சி ஒரு செய்தித் தூதுவர் மூலம் தகவல் அனுப்பும்போது அவரிடம் அந்தப் பெண் கேட்பார் : “எல்லா ரெட்டி எப்படி இருக்கிறார்?” 

பாராளுமன்றவாதியாக

          1950 – 51வாக்கில் பிடிஆர் (ஜூன் 1950திலும்) பின்னர் சி இராஜேஸ்வரராவ் (ஏப்ரல் 1951 னிலும்) தலைமைப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு கட்சியின் பாதையும் மாற்றப்பட்டது, (‘மக்கள் ஜனநாயகப் புரட்சி’ பாதை ‘தேசிய ஜனநாயகப் பாதை எனக் கட்சித் திட்டம் மாற்றப்பட்டது). அன்றைய நிலையில் ஆயுதப் புரட்சியை எதார்த்தமற்றது மற்றும் தேவை இல்லாதது எனக் கைவிடவும் எதிர்வரும் முதல் பொதுத் தேர்தலில் போட்டியிடவும் கட்சி முடிவு செய்தது. பத்தம் எல்லா ரெட்டி, ராவி நாராயணன், மக்தூன் மொகியுதீன் மற்றும் கேஎல் மகேந்திராவும் மற்றவர்களும் ஹைத்தராபாத்தில் இந்திய இராணுவம் நுழைந்த பிறகு ஆயுதப் போராட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டுமென்று ஏற்கனவே அறைகூவல் விடுத்தனர்.

            பத்தம் எல்லா ரெட்டி 1952 தேர்தல்களில் கரீம்நகர் மக்களவைத் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைமறைவாய் செயல்பட்டுவந்த சிபிஐ கட்சி அங்கம் வகித்த மக்கள் ஜனநாயக முன்னணியின் வேட்பாளராக அவர் நிறுத்தப்பட்டார். காங்கிரஸ் கட்சி வேட்பாளரும், பின்னாட்களில் இந்தியப் பிரதமரான பிவி நரசிம்ம ராவ் அவர்களை எல்லா ரெட்டி தோற்கடித்தார். தெலுங்கானா பகுதியில் கம்யூனிஸ்ட்கள் ஏறத்தாழ பாதி இடங்களை வென்றனர். ஹைத்தராபாதின் சிக்கட்பள்ளியில் ராவி நாராயணன், மக்தூம், சந்திரகுப்தா சௌத்திரியுடன் எல்லா ரெட்டிக்கு எழுச்சிகரமான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரம்மாண்டமான பேரணியும் ஏற்பாடு செய்யப்பட அதில் டாக்டர் ஜெயசூரியா மற்றும் அருணா ஆசஃப் அலி கலந்து கொண்டனர். 

            பின்னர் எல்லா ரெட்டி மாநிலங்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1958 ஆந்திரா சட்டமன்ற இடைத் தேர்தலில் புக்கரம் தொகுதியில் வென்றார். 1972ல் இந்தூர்தி சட்டமன்ற இடத்தை வென்றார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவு

            1964ல் சிபிஐ பிளவுபட்டது. பத்தம் எல்லா ரெட்டி சிபிஐ –எம் கட்சியில் இணைந்தார், ஆனால் குறைந்த காலமே அக்கட்சியில் இருந்தார். கரீம்நகர் மாவட்டத்திலிருந்து சிபிஎம் கட்சியில் இணைந்த ஒரே பிரபலமான சிபிஐ தலைவர் அவர். மூன்று மாதமே சிபிஎம் கட்சியில் நீடித்த எல்லா ரெட்டி மீண்டும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வந்தார்.

அறிவியல் தொழில்நுட்பத்திற்கு ஆதரவு

            பத்தம் எல்லா ரெட்டி விஞ்ஞான அணுகுமுறையை மிகுதியாக வற்புறுத்தி அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் படிப்புக்கு அடித்தளமிட்டார். இந்தியாவை நவீனமாக்குவதற்கு அதுதான் சிறந்த வழி என அவர் நம்பினார். கல்வி நிறுவனங்களை நடத்தி வந்தவர்கள் அவருடைய முயற்சிகளுக்குப் பெரும் மரியாதை செலுத்தினர்.

            பத்தாம் எல்லா ரெட்டி 1979ல் இறந்தார். (அவரது பிறந்த நாள் ஜனவரி 1, 1906 எனவும் மறைவு தேதி ஜனவரி 1, 1979 எனவும் ஓர் இணையத் தகவல் சொல்கிறது)

            2006ல் எல்லா ரெட்டியின் பிறந்தநாள் நூற்றாண்டு கொண்டாட்டங்களின்போது ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் ஒய் எஸ் ராஜசேகர் ரெட்டி கரீம்நகரில் அவரது வெண்கலச் சிலையைத் திறந்து வைத்தார். அந்த விழாவில் பேசிய முதலமைச்சர் கரீம்நகர் மாவட்டத்தில் நீர்ப்பாசன வேளாண்மைத் திட்டங்களை நிறைவேற்றுவதன் மூலம் கூடுதல் ஆயக்கட்டு கட்டுமானங்களை வழங்குவதை நனவாக்க சபதம் செய்தார். அந்தத் திட்டம் பத்தம் எல்லா ரெட்டியின் நீண்டகாலக் கனவாகும். அவரது கனவை நனவாக்குதல் அவருக்குச் செலுத்தும் பொருத்தமான அஞ்சலி!

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்.

 

 

 

 

 

.

 

  

No comments:

Post a Comment