Friday 17 December 2021

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 54 -- தோழர் பானி போரா -- வடகிழக்கு மாநிலங்களில் கம்யூனிஸ்ட் இயக்கம் கட்டியவர்

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 54         


தோழர் பானி போரா --

வடகிழக்கு மாநிலங்களில் கம்யூனிஸ்ட் இயக்கம் கட்டியவர்


– அனில் ரஜீம்வாலே

நியூஏஜ் (டிச.5 – 11)

            அசாம் மாநில (புகழ்பெற்ற காசிரங்கா தேசியப் பூங்கா அமைந்துள்ள) நாகோன் மாவட்டத்தின் நாகோன் நகரத்திலிருந்து 9 கிமீ தொலைவில் இருக்கும் போஜகாவில் 1923 ஆகஸ்ட் 21ம் நாள் பானி போரா (Phani Bora)ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். விடுதலைக்கு முன், கிழக்குப் பாக்கிஸ்தான் பகுதியையும் (தற்போதைய பங்களாதேஷ்) உள்ளடக்கி அசாம் மிகப் பெரிய மாகாணமாக இருந்தது. 1950கள் 1960கள் வரையிலும்கூட அசாமுடன் மேகாலயா, நாகாலாந்து முதலிய பகுதிகளும் இணைந்திருந்தன. பானி போரா நாகோன் அரசு உயர்நிலைப் பள்ளியிலிருந்து 1942ல் மெட்ரிகுலேஷன் தேர்வானார். புகழ்பெற்ற கவுகாத்தி (தற்போது குவஹாட்டி) காட்டன் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

சிறந்து விளங்கிய மாணவர் தலைவர்                      

            1960களின் தொடக்கத்தில் மிக இளம் வயதிலேயே விடுதலை இயக்கத்தில் இணைந்து காங்கிரஸ் தலைவர் ஹால்டர் பூய்யான் முதலானவர்களுடன் தொடர்பு கொண்டார். 1930களின் மத்தியில் ‘அசோம் ச்சாத்ர சன்மிலான்’ (அசாம் மாணவர்கள் மாநாடு என்ற 1916ல் நிறுவப்பட்ட) அமைப்பின் செயல்பாடுகளில் ஈடுபட்டார். பின்னர் பானி போரா மற்றும் பிறரது முயற்சியால் ‘மாணவர்கள் மாநாடு’ அமைப்பு (1936ல் நிறுவப்பட்ட) அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், ஏஐஎஸ்எஃப் அமைப்பில் இணைந்தது. பின்னர் 1941ல் நாகோனிலேயே ஏஐஎஸ்எஃப் மாவட்ட அமைப்பு தொடங்கப்பட்டது. தாதி மகந்தா, ரமேஷ் சர்மா, ஸ்வர்ணலதா மகந்தா, புஷ்பலதா சைக்கியா, விஜயா பகவதி போன்ற மாணவத் தலைவர்களின் அறிமுகம் கிடைத்தது. பின்னர் அனைத்து அசாம் மாணவ அணியினரின் முகாம் நடத்தப்பட்டபோது அதில் ஏஐஎஸ்எஃப் இணைச் செயலாளர் பிரசந்தா சன்யால் உரையாற்றினார். 

            பானி போரா 10வது படித்துக் கொண்டிருந்தபோதே அவரை ஏஐஎஸ்எஃப் தொடர்பு கொண்டது என அதன் அசாம் முன்னாள் தலைவர் சித்தானந்த் சைக்கியா தனது நினைவுக் குறிப்பில் எழுதியுள்ளார். மாணவர் பெருமன்ற அமைப்பின் கீழ் மாணவர்களின் வலிமையான குழு ஒன்றை அமைத்தார். அப்போது ஜோர்ஹட் ஜெ பி கல்லூரியில் படித்துவந்த சித்தானந்த் அசாம் மாணவர்கள் சம்மேளத்தின் துணைத் தலைவராக இருந்தார். அக்கல்லூரியின் இன்னொரு மாணவர் விஷ்ணு போரா அமைப்புச் செயலாளர். அசாம் பள்ளத்தாக்கில் அப்போது காட்டன் கல்லூரி ஜெ பி கல்லூரி இரண்டு மட்டுமே இருந்ததால் மாணவர்கள் பெரும் எண்ணிக்கையில் சம்மேளனத்தில் சேர்ந்தார்கள். அப்போதுதான் அவர்கள் நாகோன் பயணம் செய்து பத்தாவது படித்துக் கொண்டிருந்த, அச்சமற்ற சுதந்திரமான மாணவரான பானி போராவை அடையாளம் கண்டனர். பானி போரா உதவியுடன் அவர்கள் மற்ற இடங்களிலும் ஏஐஎஸ்எஃப் அமைப்பை நிறுவினர். பானி போரா மாணவர் சங்கத்தின் செயலாளர் ஆனார். சில நாட்களிலேயே பதான் கோஸ்வாமி, ஜுச்சன் பூய்யான், கமல் கோஸ்வாமி, ஜீவன் லஸ்கர், லெட்சுமி கோஸ்வாமி, மகேந்திர லஸ்கர், உமேஷ் போரா மற்றும் பல மாணவர்களை உள்ளடக்கிய வலிமையான குழுவை அமைத்தார்.

            காட்டன் கல்லூரியில் இணைந்த பிறகு பானி போரா வலிமையான மாணவர்கள் சங்கத்தை அமைத்தார். அப்போது அவருடன் தீரேஷ்வர் காலிதா, லோகிட் சர்கார், சிவ்பிரசாத் சென், புதார் பரூவா மற்றும் அனந்தேஷ்வர் சர்மா என ஏனைய மாணவர் தலைவர்கள் பணியாற்றி கவுகாத்தியில் தீவிரமான குழுவாகச் செயல்பட்டனர்.

            பானி போரா காட்டன் கல்லூரியிலிருந்து இளங்கலைப் பட்டம் பெற்றார். அங்கு அரசியல், மாணவர் அமைப்பு இவற்றில் மட்டுமல்லாது மாணவர் இதழ் நடத்துவதிலும் எழுதுவதிலும் அவர் தீவிரமாகச் செயல்பட்டார். 1940களில் ‘காட்டன் (கல்லூரி) காரர்கள்’ (தி காட்டனியன்) என்ற அக்கல்லூரியின் மாணவர் இதழை சில காலம் நடத்திய மூவரில் அவரும் ஒருவராக இருந்து தீவிரமாகச் செயலாற்றினார். அதில் அவரும் எழுதியதன் மூலம் இதழுக்குச் சிந்தனையைக் கிளரும் முற்போக்கு கண்ணோட்டத்தை ஏற்படுத்தினார் – அது அசாம் மறுமலர்ச்சியின் அமைப்பானது.

            சிந்தனைக்கு விருந்தாக பானி போரா எழுதிய பல கட்டுரைகளில் ஒன்றின் தலைப்பு : லெனின் : உழைக்கும் மனிதகுலத்திற்கு ஓர் ஆராதனை அடையாளம்” என்பதாகும்.

            1942 செப்டம்பரில் கோலகாட் என்னும் இடத்தில் ஒரு மாணவர் முகாம் பிரசந்தா சன்யால் வழிகாட்டலில் நடத்தப்பட்டது. ஜடுநாத் சைக்கியா மற்றும் தீரன் தத்தா முகாம் அமைப்பாளர் பொறுப்பு வகித்தனர்.

            உண்மையில் மேல் அசாம் பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்குவதற்காக 1941ல் பிரசந்தா சன்யால் அனுப்பி வைக்கப்பட்டார். அதற்காகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது அங்கே கம்யூனிஸ்ட் கட்சி வேர் கொண்டு வளர்வதை விரும்பாத ஒரு கும்பல் கடுமையாக அடித்துத் தாக்கியதில் சன்யால் காயமடைந்தார். எனினும் 1942 மத்தியில் அவர் அசாமை விட்டு புறப்பட்டபோது கட்சி ஏற்கனவே கருக்கொண்டு  வடிவெடுத்திருந்தது.

            கோலகாட் நகரில் முற்போக்கான காங்கிரஸ் தலைவரான கார்கேஷ்வர் தமுலி அவர்களின் வீட்டில் 1942 டிசம்பர் 30 – 31தேதிகளில் 34 பேர் சேர்ந்து அசாம் பள்ளத்தாக்கில் முதன் முறையாக கம்யூனிஸ்ட் கட்சியை அமைத்தனர். அந்த 34பேர்களில் பானி போரா, திம்பேஷ்வர் தமுலி, ஹானே சைக்கியா, சுரேன் பரூவா, சித்தானந்த் சைக்கியா மற்றும் சிலரும் இருந்தனர்.

அசாமில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தோற்றம்

            1935ல் சில்ஹெட் பகுதியில் சிபிஐ முதலாவது அலகும் (யூனிட்) பின்னர் 1938ல் காச்சர் மாவட்டத்திலும் அமைக்கப்பட்டது. ஏஐஎஸ்எஃப் அணிகள் அப்பணியில் முக்கிய பங்காற்றினர்.

            பிரேஷ் மிஸ்ரா, சத்தியபிரதா தத்தா மற்றும் பிரநேஷ் பிஸ்வாஸ் ஆகிய கம்யூனிஸ்ட் தலைவர்கள் தலைமையில் (சூர்மா ஆற்றங்கரையில் உள்ள) சூர்மா பள்ளத்தாக்கில் வலிமையான கம்யூனிஸ்ட் இயக்கம் எழுந்தது. அப்போதுதான் அசாம் பள்ளத்தாக்கு கம்யூனிஸ்ட் அமைப்புக் குழு கோலகாட்-டில் அமைக்கப்பட்டு ஜுடுநாத் சைக்கியா செயலாளராகத் தேர்வானார். கோலகாட்டின் ஒரு முலையில் நடைபெற்ற கல்வி முகாமில்தான் கட்சி அமைக்கப்பட்டது. முகாம் 10 நாட்கள் நடைபெற்றது. முதல் இரண்டு நாட்களிலேயே சில காங்கிரஸ்காரர்கள் முகாமைத் தாக்கினர். பின்னர் முகாம் பாதுகாப்பான ஜுடு சைக்கியா இல்லத்திற்கு மாற்றப்பட்டது. 12 உறுப்பினர் அமைப்புக் குழுவில் பானி போரா இடம் பெற்றார். நீல்மோனி பர்தாக்குர் மற்றும் பினாய் சக்ரவர்த்தி போன்ற சில தலைவர்களை அசாமைவிட்டு பிரிட்டிஷ் அரசு வெளியேற்றியது; காரணம், அவர்கள் திக்போய் எண்ணெய் ஆலைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை நடத்தினர் என்பதே.

            அந்தக் குழு கட்சியின் வங்காள மாகாணக் குழுவின் கிளையாகச் செயல்படட்டும் என்றே முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதலாவது கட்சிக் காங்கிரஸ் 1943 மே – ஜூன் மாதங்களில் பம்பாயில் நடைபெற்றது. அந்த நேரத்தில் அசாம் பள்ளத்தாக்கு மற்றும் சூர்மா பள்ளத்தாக்கு இரண்டும் ஒன்றாகச் சேர்ந்து அசாம் மாகாணக் குழுவை அமைத்தது; பிரேஷ் மிஸ்ரா செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சி அலுவலகம் கோலகாட்-டிலிருந்து கவுகாத்திக்கு மாற்றப்பட்டது. இந்நிகழ்வுகளில் பானி போரா முக்கிய பங்காற்றினார்.

1943 கடும் பஞ்சத்தில் சேவைப் பணிகள்

          1943ல் கடுமையான பஞ்சம் வங்கத்தை மட்டுமின்றி, அசாம், ஒரிசா மற்றும் பீகார் மாகாணங்களையும் பாதித்தது. இவற்றுள் அசாம் ஒப்பீட்டளவில் ஏழ்மையிலும் பின்தங்கியும் இருந்ததால் மக்கள் மிக மோசமாகத் துன்பப்பட்டனர். கவுகாத்தியில் இன்றைய நாளில் போலா பரூவா கல்லூரி என்றழைக்கப்படும் பகுதியின் நிவாரண முகாமிற்கு கௌரிசங்கர் பட்டாசாரியா பொறுப்பாளர். இப்பணியில் ஏஐஎஸ்எஃப் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி செயல்வீரர்கள் இரவு பகலாக உதவி செய்து முகாமில் இருந்த மக்களை கவனித்துக் கொண்டனர். பானி போராவின் செயல்பாடு முன்னுதாரணமானது. பஞ்சத்தில் பீடிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட மேற்கு வங்கம் மற்றும் சூர்மா பள்ளத்தாக்கிலிருந்து இரண்டு கலைக்குழுக்கள் அசாமின் பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகள் நடத்தி நிதி திரட்டினர்.

            1945 ஜூன் மாதம் நாகோணில் அசாம் மாணவர்கள் சம்மேளனத்தின் மாநாடு கூடியது. ஹால்தர் பூய்யான் மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவராகவும் பானி போரா செயலாளராகவும் செயல்பட்டனர். பொது அரங்கு நிகழ்வுக்குப் பிரஃபுல்ல கோஸ்வாமி தலைமை ஏற்க மாணவர் பெருமன்றத்தின் அமைப்புச் செயலாளர்களில் ஒருவரான ரமீன் பானர்ஜி தொடங்கி வைத்தார். அசாமின் பல பகுதிகளிலிருந்து வந்திருந்த பிரதிநிதிகளோடு சகோதர ஆதரவாக ஷில்லாங், மணிப்பூர் மற்றும் பிற இடங்களிலிருந்தும் தோழமைப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

            அந்தத் தருணத்தில்தான் கச்சார் மாவட்டத்தில் விவசாயிகளின் தேபகா இயக்கம் பரவி இருந்தது. வங்கத்தில் தேபகா இயக்கம் பற்றி எவ்வளவோ அறிந்திருந்தாலும் அசாமிலும் அது புகழ்பெற்ற இயக்கமாகும் என்பது பலருக்கும் தெரியாது. உண்மை யாதெனில் வங்கத்தில் தொடங்குவதற்கு முன்பே அசாமில் தேபகா இயக்கம் தொடங்கி விட்டது. (தேபகா எனில் மூன்று பங்கு. நில உடைமையாளர்களுக்குத் தந்து கொண்டிருந்த அறுவடையில் இரண்டு பங்கை ஒரு பங்காகக் குறைக்க வேண்டும் என்பதே குத்தகை விவசாயிகளின் கோரிக்கை.)

சிபிஐ மாநிலச் செயலாளராக

            ஜெகந்நாத் பட்டாச்சாரியா மற்றும் ஜடு சைக்கியா போன்ற முதல் தலைமுறை கம்யூனிஸ்ட்களிடமிருந்து பானி போரா பொறுப்பேற்றுக் கொண்டார். தனது எம்ஏ முதுநிலைப் பட்டத்தை நிறைவு செய்ய படிப்பைத் தொடர விரும்பினார்; ஆனால் சூழ்நிலை கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டி வந்தது. 1948ல் பானி போரா கட்சி மாநிலக்குழுவின் செயலக உறுப்பினரானார். (வங்கதேச) மைமென்சிங் பகுதியைச் சேர்ந்த கட்சியின் தீவிர உறுப்பினரான ஹேனா மஜூம்தாரை 1949ல் திருமணம் செய்து கொண்டார். 1948ல் கட்சி மீதான தடையைத் தொடர்ந்து 1949ல் பொங்கைகான் என்ற இடத்திலிருந்து பானிபோராவும் அவரது மனைவி ஹேனா (போரா)வும் கைது செய்யப்பட்டனர். அவரை நாகோன் சிறையிலும் ஹேனாவை தேஜ்பூர் சிறையிலும் அடைத்தனர். ஹேனா போரா பின்னாட்களில் அசாம் மாநிலத்தில் மட்டுமின்றி இந்தியாவின் சிறந்த பெண்கள் தலைவராக உயர்ந்து புகழ்பெற்றார். அவர் பல ஆண்டுகளுக்கு அசாம் மகிளா சங்கத்தின் பொதுச் செயலாளராகப் பணியாற்றினார்.

            பானி பின்னர் நாகோனின் பார்ஜஹா கிராமத்தில் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார். அங்கே அவர் தக்க்ஷிண்காட் உயர்நிலைப் பள்ளியில் கற்பிக்கத் தொடங்கினார். பல முறை அவர் சிறையில் அடைக்கப்பட்டார். பார்ஜஹா வீட்டுச் சிறையிலிருந்து ஷில்லாங் மாற்றப்பட்டவர் அங்கே ஓராண்டு தங்கியிருந்தார். 1951ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அசாம் மாநிலக் குழுவின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பானி போரா அப்பொறுப்பில் 1975 வரை வகித்தார்.

            வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற பிறகு 1942ல் சிபிஐ கட்சியில் சேர்ந்த அடுத்த ஆண்டே கட்சியின் அசாம் மாகாணக் குழு உறுப்பினரானார். 1945ல் அசாம் மாணவர்கள் சம்மேளனப் பொதுச் செயலாளராகத் தேர்வானார். மாணவர் அமைப்பிலும் கட்சியின் ‘நதூன் அசோம்’ (புதிய அசாம்) இதழ் பணிகளிலும் மிகத் தீவிரமாகச் செயல்பட்டார்.

அழிவுக்கான ‘பிடிஆர் பாதை’

            அந்தத் தருணத்தில் மாகாணக் கட்சியின் செயலாளராக இருந்த பிரேஷ் மிஸ்ரா ஆக்கக் கேடான  பிடிஆர் பாதையைப் பின்பற்றினார். அந்த இடதுசாரி சாகசப் பாதையைப் பின்பற்றியதற்காக அவர் அப்பொறுப்பிலிருந்து 1951ல் நீக்கப்பட்டார்; கல்கத்தாவில் நடைபெற்ற அசாம் மாகாணக் குழுவின் தலைமறைவுக் கூட்டத்தில் மாகாணக் கட்சியின் செயலாளராகப் பானி போரா ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பிடிஆர் பாதையை எதிர்த்தார். அசாம் மாநிலச் செயலாளர் பொறுப்பேற்கும்போது அவருக்கு மிக இளம் வயது, வெறும் 26 ஆண்டுகளே நிரம்பி இருந்தார். பெரும் அழிவிற்குப் பிறகு மீண்டும் முதலிலிருந்து தொடங்குவதுபோல தொழிலாளர் –விவசாயி –மாணவர் அடித்தளத்தில் அமைத்த கட்சிக்குப் புத்துயிர் அளிப்பது மிகவும் கடினமான பணியாக இருந்தது.

தேர்தல்களில் போட்டி

            1951 வாக்கில் கட்சியின் பாதை மாற்றப்பட்டு, அது வரை ‘பூர்ஷ்வா ஏமாற்று’ எனப் புறக்கணித்தத் தேர்தல்களில் போட்டியிட முடிவு செய்யப்பட்டது. 1951ல் பானி போரா அசாம் சட்டமன்ற நவ்காங் ராகா தொகுதியில் போட்டியிட்டார். 9527 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம்; ஆனால் கட்சி சீரழிவுக்குப் பின் கட்சியின் நிலையையும் பொதுச் சூழலையும் பார்க்க இது மோசமான செயல்பாடன்று.

            1957 தேர்தல்களில் போட்டியிட்டபோதும் மூன்றாம் இடமே, ஆனால் இம்முறை 25,377 வாக்குகள் பெற்றார். நவ்காங் தொகுதிக்கான இடைத் தேர்தலில் 1959ல் வெற்றி பெற்றார். 1962ல் தோல்வியடைந்தாலும் 1967ல் 53.42 சதவீத வாக்குகள் பெற்று மீண்டும் வெற்றி பெற்றார். 1972ல் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

கட்சி பொறுப்புக்களில் பானி போரா

            1953 –54ல் மதுரையில் நடைபெற்ற மூன்றாவது கட்சி காங்கிரஸ் மற்றும் 1956 பாலக்காடு நான்காவது மாநாட்டிலும் பானி போரா மத்திய குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1958 அமிர்தசரஸ் கட்சி காங்கிரசில் கட்சியின் கட்டமைப்பு மாற்றி அமைக்கப்பட்டது. இம்மாநாட்டில் மத்திய செயற்குழு உறுப்பினாராகத் தேர்வான பானி போரா 1986ல் மீண்டும் மத்திய செயற்குழுவிற்கும் 1989ல் மத்திய கட்டுப்பாட்டு கமிஷன் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த அந்தஸ்தில் அவர் மத்திய செயற்குழுவிலும் தொடர்ந்து இடம் பெற்றார்.

            1974ல் கட்சி ஸ்தாபன அமைப்பு இலாக்காவில் அவர் இணைத்துக் கொள்ளப்பட்டு வடகிழக்குப் பகுதியில் கட்சி அமைப்பைக் கட்டச் சிறப்பு பொறுப்பு வழங்கப்பட்டது. (மலையும் பள்ளத்தாக்கும் அமைந்த அம்மாநிலத்தின் அமைப்பைப் போலவே) அது மிகவும் சிரமமான பணி. மிக ஆழமாக மாறும் சூழல்களுக்கு அவர் திருப்தி அடைய வேண்டியிருந்தது. மேகாலயா, மணிப்பூர் போன்ற பிற இடங்களிலும் அவர் பணியாற்றி அறிக்கை தர வேண்டியிருந்தது. ஒன்றிணைந்த அசாமிலிருந்து மெல்ல புதிய மாநிலங்கள் பிரிக்கப்பட்டு உருவாயின. அவர் தம் பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றினார்.

            சிபிஐ மத்திய செயற்குழுவில், முதலில் உறுப்பினராகவும் பின்னர் கட்டுப்பாட்டுக் குழுத் தலைவராகவும் தேர்வாகி மத்திய செயற்குழுவில் 1996வரை நீடித்தார்.

            சக்திமிக்க சொற்பொழிவாளர், மிகச் சிறந்த அமைப்பாளரான பானி போரா சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்து தமது 82வது வயதில் 2004 ஜூலை 29ல் இயற்கையெய்தினார். அவருடைய மறைவில் உழைக்கும் மக்களுக்காகப் போராடிய மிகத் துணிச்சலான போராளியை, அறிவார்ந்தவரை, சிறந்த சட்டமன்ற உறுப்பினரை அசாம் இழந்தது. அவரது மறைவைக் கேட்டு அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் மாநில அரசு அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் அரைநாள் விடுமுறை அறிவித்தது. அசாமின் தலைநகரான கவுகாத்திக்கு வாழ்வின் அனைத்துத் துறைகளிலிருந்து பெருமக்களும் அனைத்து அரசியல் கட்சியினரும் இறுதி மரியாதை செலுத்தக் குவிந்தனர். சிபிஐ, சிபிஐஎம், புரட்சிகர சிபிஐ, பாஜக, ஜனதா தள் (எஸ்), என்சிபி, எஸ்யுசிஐ போன்ற அரசியல் கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். அனைத்துக் கட்சியினரையும் மாநிலத்தின் முதலமைச்சர் தருண் கோகாய் தலைமையேற்று அழைத்துச் சென்று பானி போராவுக்கு அஞ்சலி செலுத்தினார்.

            பானி போரா வடகிழக்கு மாநிலங்களின் தலைச் சிறந்த கம்யூனிஸ்ட் தலைவர் மட்டுமல்ல இந்தியா முழுமைக்குமான சிறந்த தலைவராவார்.

            அவர் நினைவைப் போற்றுவோம்!

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

 

  

No comments:

Post a Comment