Saturday 26 December 2020

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பு தினம் -- டிசம்பர் 26

 

டிச. 26 -- சிபிஐ 95வது அமைப்பு தின விழா கொண்டாட்டம்

           தேசிய மற்றும் வர்க்க

       இயக்கங்களின் விளைவே

1925ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

--அனில் ரஜீம்வாலே

நியூஏஜ் டிச.20—26

            இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்ட ஆவணம் (புதுச்சேரி, 2015) கூறுகிறது, “இந்திய மண்ணின் கான்பூர் நகரில் நடைபெற்ற மாநாட்டில் 1925, டிசம்பர் 26ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது.” (பத்தி1.2) இந்த ஆண்டு டிசம்பர் 26ம் நாள் சிபிஐ கட்சியின் 95வது அமைப்புதின விழா காணும் நாம், அதன் நூற்றாண்டு நிறைவை 2025ல் கொண்டாடுவோம்.

சிபிஐ கட்சி அமைப்பு -- 1920 தாஷ்கண்ட் முயற்சிகள்

            1925க்கு முன்பு சிபிஐ என்ற கட்சி அமைப்பைக் கட்ட நடந்த பல முயற்சிகளில் 1920 தாஷ்கண்ட் நகர் முயற்சியும் ஒன்று. சோவியத் ரஷ்யாவிலும் பிற ஐரோப்பிய நாடுகளிலும் வசித்த சில புரட்சியாளர்களும் கம்யூனிஸ்ட்களும் ‘கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா’ அமைப்பை நிறுவிட முடிவு செய்து 1920ம் ஆண்டு அக்டோபர் 17நாள் தாஷ்கண்டில் ஒரு கூட்டம் நடத்தினர். அக்கூட்டத்தில் எம் என் ராய், MPBTஆச்சார்யா, அபானி முகர்ஜி, முகமது ஷஃபீக் உள்பட ஏழுபேர் மற்றும் பிறர் கலந்து கொண்டனர். ஷஃபீக்கைச் செயலாளராக்கி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டதாக அக்கூட்டம் அறிவித்தது. அதே தாஷ்கண்ட் நகரில் மற்றொரு கூட்டம் 1920 டிசம்பர் 15ம் நாள் நடைபெற்றது.

            அதன் பின்னர் மேலும் கூட்டங்கள் எதுவுமோ அல்லது பயனுள்ள நடவடிக்கைகளோ நடத்தப்படவில்லை. சிபிஐ அமைப்பதற்கான ‘இறந்து பிறந்த’ (குழந்தை போன்ற) முயற்சி அது. இந்தியப் புரட்சியாளர்கள் குறிப்பாக ‘இந்திய புரட்சிகர அசோசியேஷன்’ அமைப்பிற்குள் நிலவிய முரண்பாடுகளும் கொள்கை பற்றாக்குறையும் ‘தாஷ்கண்ட் கட்சி’யைச் செயல்படாது முடக்கி விட்டது –போதுமான முன்தயாரிப்புகளும் எதிர்கால நோக்கமும் இல்லாது அமைத்ததே காரணம். அக்‘கட்சி’ உயிர்ப்பான எந்தத் தொடர்பையும் இந்தியாவுடன் கொண்டிருக்கவில்லை.

எம் என் ராயின் பங்கு

            எம்என் ராய் ஒரு புரட்சியாளர், இந்தியாவிலிருந்து 1915ல் இந்தோனேஷியாவிற்கு ஆயுதங்கள் சேகரிப்பதற்காகப் புலம்பெயர்ந்து சென்றவர். இறுதியில் அமெரிக்கா சென்று அங்கே கம்யூனிஸ்ட்டாகப் பரிணமித்தார். 1918ல் அவர் நிறுவிய மெக்ஸிகோ சோஷலிட் கட்சி ஓராண்டில் மெக்ஸிகோ கம்யூனிஸ்ட் கட்சி ஆனது. காமின்டர்ன் எனப்படும் கம்யூனிஸ்ட் அகிலத்தின் 1920 இரண்டாவது மாநாட்டில் மெக்ஸிகோ கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாளராகக் கலந்து கொண்ட ராய், மீண்டும் அங்கே திரும்பிச் செல்லவில்லை.  

            காலனிய (நாடுகளின்) பிரச்சனைகள் குறித்து, அவரது அனுபவங்கள் அடிப்படையில்,  ‘துணை ஆய்வறிக்கை’ தயாரிக்கும்படி எம்என் ராய் அவர்களை இரண்டாவது அகிலத்தில் லெனின் கேட்டுக்கொண்டார். முதன்மை ஆய்வறிக்கையை(தீசிஸ்) லெனினே தாக்கல் செய்தார். இந்தியா மற்றும் பிற காலனிய நாடுகளின் விடுதலை இயக்கங்கள் மற்றும் அவற்றின் பூர்ஷ்வா தலைமைகள் குறித்த அணுகுமுறை மீது மிகக் கூர்மையான விவாதங்கள் நடத்தப்பட்டன. முற்றிலும் செக்டேரியன் (குழுப் போக்கு) ஆவணமாக ராய் தயாரித்த ஆய்வறிக்கை, லெனின் மற்றும் கம்யூனிஸ்ட் அகிலத்தால் அப்படியே முழுவதுமாக நிராகரிக்கப்பட்டது. டைப் செய்யப்பட்ட ராயின் ஒரிஜினல் தீசிஸ் அறிக்கையில் லெனின் தன் கைப்பட நிராகரிக்கப்பட்ட பத்திகளை வெட்டி நீக்கினார்.

            பின்தங்கிய நாடுகளின் “பூர்ஷ்வா (நடுத்தர-வர்க்கம்) ஜனநாயக விடுதலை இயக்கங்கள் மீது கம்யூனிஸ்ட் தத்துவச் சாயங்கள் ஏற்றிட எடுக்கும் முயற்சிகளுக்கு எதிரான உறுதியான போராட்டங்க”ளை லெனின் வரவேற்று ஆதரித்தார். (அவ்வியக்கங்களில் வலிந்து நாம் கம்யூனிச நடைமுறைகளைத் திணிக்க முயலக் கூடாது என்பது கருத்து).  ஒவ்வொரு தேசிய, காலனிய எதிர்ப்பு மற்றும் பூர்ஷ்வா ஜனநாயக இயக்கங்களையும் கம்யூனிஸ்ட்கள் கட்டாயம் ஆதரிக்க வேண்டும் என லெனின் வற்புறுத்தினார்.

            ஒடுக்கப்பட்ட நாடுகளில் இருக்கும் கம்யூனிஸ்ட்கள் ஆற்ற வேண்டிய கடமை, ‘புரட்சிகரக் கட்சிக’ளை ஏற்படுத்துவது எனினும், கம்யூனிஸ்ட் கட்சிகள் அந்தப் பெயரில் இருந்தால் மட்டும் போதாது. பக்குவமான எதார்த்த சூழ்நிலை கனியாமல், எந்தப் பரபரப்பான அவசரத்திலும் கம்யூனிஸ்ட் கட்சிகளை அமைப்பதை லெனின் உறுதியாக எதிர்த்தார்; (அப்படிக் கம்யூனிஸ்ட் கட்சிகளை அமைப்பதற்குத் தேவையான) அடிப்படையான, போதுமான வர்க்கங்கள் வளர்ச்சி பெறுவது மிக முக்கியமானது என்றார். கீழ்த்திசை நாடுகளின் கம்யூனிஸ்ட்களிடம் லெனின் கூறினார், “(தற்போது) விழிப்புற்று வரும் பூர்ஷ்வா தேசியத்தில் நீங்கள் உங்கள் அடித்தளத்தை அமைத்திடல் வேண்டும்…”

            பூர்ஷ்வா ஜனநாயக இயக்கங்களோடு இணைந்து இயங்குவது பாட்டாளி வர்க்க இயக்கத்திற்கு ஊறு விளைவித்திடும் என எம்என் ராய் மற்றும் பிற செக்டேரியன் தலைவர்கள் கருதினர். காந்திஜி உட்பட பூர்ஷ்வா தலைமையைப் முதலில் ‘தூக்கி எறிந்து விட்டு’ விடுதலை இயக்கத் தலைமையைப் பாட்டாளி வர்க்கம் ‘கைப்பற்ற’ வேண்டும் என ராய் விரும்பினார். இந்த அணுகுமுறை பார்வை ஒட்டுமொத்தமாக (அகிலத்தால்) நிராகரிக்கப்பட்டது.

            சில நேரங்களில் சொல்லப்படுவது போல, 1920 தாஷ்கண்ட்டில் சிபிஐ கட்சி அமைப்பது என்ற முன் முயற்சி கம்யூனிஸ்ட் அகிலத்திலிருந்து அல்லது எம்என் ராயிடமிருந்து வரவில்லை. அது நாடுவிட்டு இடம் பெயர்ந்து வந்த ‘முகாஜிர்கள்’ குழு மற்றும் சோவியத் யூனியனிலும் ஜெர்மனி போன்ற நாடுகளில் வசித்த மற்ற சில புரட்சியாளர்களிடமிருந்து வந்தது.

            ராய் தாஷ்கண்ட் கூட்டத்தில் கலந்து கொண்ட போதிலும் அவர் ‘சிபிஐ’ அமைக்கும் யோசனையை ஏற்கவில்லை. அவர் தனது நினைவுக் குறிப்பில் எழுதுகிறார், “இடம் பெயர்ந்து வந்த சில தனிநபர்கள் தங்களைக் கம்யூனிஸ்ட் கட்சி என அழைத்துக் கொள்வதில் பொருள் ஏதும் இல்லை…(அவர்கள்) முழுமையாக அறிவார்கள் அது பெயருக்குத்தான் இருக்கும் ஒன்று..” ஏற்பட்டுவிட்ட சில அபிப்ராயங்களை மறுக்கும் வகையில் ராய் மேலும் எழுதுகிறார் : “புலம் பெயர்ந்து வந்தவர்கள் கம்யூனிஸ்ட் கட்சி அமைத்ததை நான் ஒப்புக்கொள்ளவில்லை; அந்தக் கட்சிக்கு இந்தியத் தொழிலாளர்கள் சார்பாகப் பேசுவதற்கே உரிமை இருப்பதாக நான் நம்பவில்லை எனும்போது –ஒட்டுமொத்த இந்திய நாட்டு மக்கள் சார்பாகப் பேசவும் உரிமை இல்லை எனத் தனியாகக் குறிப்பிடத் தேவையில்லை.”

            இந்த ஒரு நினைவுக் குறிப்பு, ‘இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி’யை எம்என் ராய் நிறுவினார் என்ற பரவலான தவறான கருத்தை நீக்கிவிட்டது. ராய் இந்தியக் கம்யூனிஸ்ட்களோடு தொடர்பு கொண்டு ‘கம்யூனிஸ்ட் கட்சி’ குறித்த தனது சொந்தக் கருத்தை அவர்கள் மீது திணிக்க விரும்பினார். ஆனால் டாக்டர் அதிகாரி, டாங்கே, காட்டே, முஸாஃபர் அகமது முதலான மற்றவர்கள் எம்என் ராயின் அணுகுமுறையைக் கூர்மையாக விமர்சித்தனர்.

            சில பிரச்சாரங்களை முன்னெடுப்பது என்ற வகையில் தாஷ்கண்ட் குழு பயனுள்ள பங்களிப்பைச் செய்தது என்றாலும், உண்மையில் ‘கம்யூனிஸ்ட் கட்சி’யாகச் செயல்படவில்லை. விரைவில் இந்தியாவோடு தொடர்பு இல்லாமல், ஒருங்கிணைப்பு அல்லது எந்த நடவடிக்கையும் இல்லாமல் ‘தாஷ்கண்ட் கட்சி’ மறைந்தது. பல்வேறு தொழில் நகர்களிலும் நகர்ப்புற மையங்களிலும் 1920ம் ஆண்டு முதலே செயல்பட்டு வந்த இந்தியக் கம்யூனிஸ்ட்கள் 1925ல் கட்சி அமைப்பதை நோக்கி நகர்ந்தனர். இந்தியாவில் இருந்த கம்யூனிஸ்ட்கள் ஒருபோதும் 1920 தாஷ்கண்டில் அமைக்கப்பட்ட ‘கட்சி’யை அங்கீகரித்ததில்லை.

இந்தியாவில் சோஷலிச, கம்யூனிஸ்ட் கொள்கைகள் பரவல்

            சிபிஐ அமைப்பதற்கு வெகுமுன்னரே சோஷலிச மற்றும் மார்க்சிய கருத்துகள் நாட்டில் மலரத் தொடங்கின.

            அவற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வு, முதன் முதலில் சுவாமி விவேகானந்தர், ‘நான் ஒரு சோஷலிஸ்ட்’ எனப் பிரகடப்படுத்தியது; அவர் இரண்டாவது அகிலம் தலைமையேற்ற பாட்டாளி வர்க்க இயக்கங்களால் ஈர்க்கப்பட்டு அதன் ஆழமான தாக்கத்திற்குள்ளானார்.

            லோக மான்ய பாலகங்காதர திலகர் பிரிட்டிஷ் பாணியில் 1916ல் ‘இந்தியத் தொழிலாளர் கட்சி’யை அமைத்தார். 1923ல் இந்தியாவில் நடைபெற்ற முதலாவது மேதினத்தின் போழ்து, ‘தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட்’டான சிந்தனைச் சிற்பி ம சிங்காரவேலர், மெட்ராசில் ‘லேபர் கிசான் பார்ட்டி’யை நிறுவியதை அறிவித்தார். மெட்ராசிலிருந்து செயல்பட்ட ’தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் கட்சி’ யின் (The Workers and Peasants Party (WPP) மத்தியக் குழு, தனது பஞ்சாப், பம்பாய் மற்றும் வங்காளக் கிளைகளுக்கு ‘கொடி நாள்’ (‘Flag Day’) தினத்தை ஜூலை 18ம் நாள் அனுசரிக்கும்படி 1923 ஜூலையில் தந்தி அனுப்பி, மேலும்  அந்நிகழ்வில் தேசிய மூவர்ணக் கொடியையும் செங்கொடியையும் ஏற்றி வைக்கக் கோரியது.

            இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் 1925ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பதற்குத் தேவையான வலிமையான அடித்தளத்தை உருவாக்கின. 

AITUC (1920) அமைக்கப்பட்டதும்  கம்யூனிஸ்ட் குழுக்கள் மலர்தலும்

          வரையறுக்கப்பட்ட வகையில் காலனிய ஆட்சியின் தொழில்மயமாக்கல், தொழிலாளர் வர்க்கத்தை உருவாக்க, அந்தப் பௌதீகப் புறச்சூழல் நிலைமை இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் எழுவதற்கு வழியமைத்தது. அதேபோல (பரவலாக இல்லை என்றாலும்) வரையறுக்கப்பட்ட நவீன கல்வி, அறிவாளிகள் பிரிவு மலர்வதற்கு உதவியது; கல்வியறிவு பெற்ற அவர்களில் பலரும் சோஷலிச மற்றும் கம்யூனிச இயக்கத்தில் இணைந்தனர். உருவான தொழிலாளி வர்க்கம் ஏஐடியுசி தொழிற்சங்கப் பேரியக்கத்தை 1920ல் நிறுவியதானது, அதனது வழியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பதை நோக்கிப் பங்களிப்புச் செய்தது. அது, தொழிலாளி வர்க்கத்தினுடைய வர்க்க உணர்வைக் குணாம்ச ரீதியில் வளர்த்தது.  ஏஐடியுசியின் முதலாவது அமைப்பு மாநாட்டில் அதன் தலைவர் லாலா லஜபதி ராய் அவர்களின் துவக்க உரை அதற்கு நிரூபணமான கட்டியம் கூறியது. அதன் பிறகு கம்யூனிஸ்ட்கள் செல்வாக்குப் பெறத் தொடங்கி, இயக்கத்திற்குத் தேசிய உணர்வு மற்றும் வர்க்க உணர்வைக் கொணர்ந்தனர். டாங்கே, காட்டே, மிராஜ்கர், முஸாஃபர் அகமது, சிங்காரவேலர், ஜோக்லேக்கர், அஜாய் கோஷ், சக்லத்வாலா மற்றும் படையணியாய்த் தலைவர்கள் பலரும் தொழிலாளர் வர்க்கத்தை அரசியல்மயப்படுத்தவும், கோட்பாட்டுத் தத்துவமயப்படுத்தவும் உதவினர்.

            இதன் மத்தியில், பெரும் தொழிலக மையங்களில் செயல்பட்ட கம்யூனிஸ்ட் குழுக்கள் சிபிஐ அமைப்பது நோக்கிச் செல்ல உதவின. இந்த நிகழ்வுகள் எதனிலும் தாஷ்கண்ட் குழு ஆற்றிய எந்தவொரு பங்களிப்பும் இல்லை. 

            பல்வேறு கம்யூனிஸ்ட் குழுக்கள் மார்க்சிய செய்திப் பத்திரிக்கைகளை வெளியிட்டன; எஸ் ஏ டாங்கேவின் ‘தி சோஷலிஸ்ட்’, முஸாஃபர் அகமது நடத்திய லங்கல், சோகன் சிங் ஜோஷ் வெளியிட்ட கிர்தி (தொழிலாளி), ம சிங்காரவேலர் நடத்திய லேபர் கிசான் கெஜட் (தொழிலாளி விவசாயி அறிக்கை) முதலிய பல மாத, வார இதழ்கள் இக்காலக் கட்டத்தில் வெளியாயின.

            இந்தியாவின் முதல் மார்க்சியச் சிற்றேடாகக் ‘காந்தியும் லெனினும் ஓர் ஒப்பீடு’ (1921) என்ற எஸ் ஏ டாங்கே எழுதி வெளியிட்ட கையேட்டில் காந்தி, லெனின் இருவரின் அரசியல் பார்வை மற்றும் கொள்கைகளை ஒப்பிட்டு, மாறுபாடுகள் வேறுபடுத்திக் காட்டப்பட்டன. அவரது தி சோஷலிஸ்ட் இதழ் முந்தைய மார்க்சியத் தலைமுறையினரைப் பயிற்றுவித்தது.

            கம்யூனிஸ்ட்கள் இந்திய விடுதலை இயக்கத்தின் பிரிக்க முடியாத பகுதியாக இருந்தனர். கம்யூனிஸ்ட்டான மௌலானா ஹஸ்ரத் மொகானி, 1921ம் ஆண்டிலேயே, முழுச் சுதந்திரம் என்பதைக் கோரிக்கை தீர்மானமாக அலகாபாத் காங்கிரஸ் மாநாட்டில் முன் மொழிந்தார். 1925ம் ஆண்டு வாக்கில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியிலும், பம்பாய், மெட்ராஸ், பஞ்சாப் முதலிய மாகாணக் காங்கிரஸ் கமிட்டிகளிலும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் கம்யூனிஸ்ட்கள் உறுப்பினர்களாக இருந்தனர். சிங்காரவேலர் (மெட்ராஸ் இராஜதானி காங்கிரஸ் கமிட்டி என்றும் அழைக்கப்படும்) மெட்ராஸ் மாகாணக் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியிலும் தீவிரமாகப் பணியாற்றினார்.

            இந்திய விடுதலை இயக்கத்தில் தொழிலாளர் வர்க்கம் கேந்திரமான பங்காற்றியது, கம்யூனிஸ்ட்கள் அளப்பரிய பெரும் பங்களிப்புச் செய்தனர்.

1925 கான்பூரில் சிபிஐ கட்சி அமைக்கப்பட்டது

            1925ம் ஆண்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்ட நிகழ்வு, தேசிய மற்றும் வர்க்கப் போராட்ட இயக்கங்களின் இயக்கவியலின் இணைந்த வரலாற்று விளைவு; ரஷ்யப் புரட்சியும் சர்வதேச நிகழ்வுப் போக்குகளும் அந்த விளைவை முழுமையாக்கிச் செயல்படுத்திய வினை ஊக்கிகள். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபிக்கப்பட்டதைத் தேசிய இயக்கத்தின் அனைத்து முற்போக்குப் பிரிவுகளும் வரவேற்றன.

            இந்நிகழ்வுப் போக்குகளின் இயல்பான உச்சமாகக் கான்பூரில் சிபிஐ அமைக்கப்பட்டது. காங்கிரஸ் மாநாட்டுப் பந்தல் அருகே கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு நடத்தப்பட்டதானது, விடுதலை இயக்கத்தோடு இருந்த மிக நெருங்கிய கூட்டுறவை அடையாளப்படுத்துகிறது. கான்பூர் மாநாடு முறையான கட்சி அமைப்பை ஏற்படுத்தி, மத்தியச் செயற்குழு மற்றும் கட்சிப் பொறுப்புகளுக்குத் தேர்வு செய்து, கட்சி அமைப்புச் சட்ட விதிகளையும் உறுப்பினர் படிவம் மற்றும் செங்கொடியையும் அங்கீகரித்து நிறைவேற்றியது. அதன் பிறகு காலப்பரிணாமத்தில் தொடர்ந்த வடிவை அது ஏற்றுத் தழுவியது. தேசிய மற்றும் வர்க்கக் கடமைப் பொறுப்புகள் இரண்டையும் இயக்கவியல் ரீதியாக இணைத்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எதிர் கொண்டது.

            கான்பூர் மாநாடு ம சிங்காரவேலரைத் தலைவராகவும் எஸ் வி காட்டே மற்றும் ஜெபி பகர்கட்டா (JP Bagerhatta) ஆகியோரைப் பொதுச் செயலாளர்களாகத் தேர்ந்தெடுத்தது. 1927 முதல் காட்டே மட்டுமே ஒரே பொதுச் செயலாளராகச் செயல்பட்டார்.

அமைப்புத் தேதி பிரச்சனை : ஒன்றுபட்ட கட்சியே தீர்த்தது

            கட்சி அமைப்பு தினம் பற்றிய பிரச்சனையைப் பிளவுபடாத ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியே இறுதியாக முடித்து வைத்தது. 1959ல் இந்தோனேஷிய கம்யூனிஸ்ட் கட்சி எழுப்பிய ஒரு கேள்விக்கு பதில் அளிக்கக் கட்சியின் மத்திய செயற்குழு 1959 ஆகஸ்ட் 18ல் கூடி விவாதித்து ‘இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 1925ல் அமைக்கப்பட்டது என முடிவு செய்தது. அந்தச் செயற்குழு கூட்டத்தில் அஜாய் கோஷ், பிடி ரணதிவே, பிசி ஜோஷி, எம் பசவபுன்னையா, இசட் ஏ அகமது, எஸ் ஏ டாங்கே, பூபேஷ் குப்தா, ஏ கே கோபாலன் மற்றும் பிறர் பங்கேற்றனர். கூட்டக் குறிப்புக்களைத் தம் கைப்பட எழுதிய பசவபுன்னையா அதில் பின்வருமாறு பதிவு செய்தார்: “சிபிஐ கட்சி அமைப்பு நாள் – 1925”. கூட்டக் குறிப்புகளின்படி கலந்து கொண்ட வேறு எவரும்,  வேறு எந்தத் தேதியும் முன் வைக்கவில்லை.

இதன் அடிப்படையில் இந்தோனேஷிய (கம்யூனிஸ்ட் கட்சியின்) ரெவியு இதழ் ஆசியருக்கு 1959 ஆகஸ்ட் 20 அன்று சிபிஐ செயற்குழு சார்பாகத் தோழர் பி.டி.ரணதிவே கையெழுத்திட்டு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டதாவது:  “இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி டிசம்பர் மாதம், 1925ம் ஆண்டு அமைக்கப்பட்டது. அதற்கு முன்பும்கூட தனிப்பட்ட கம்யூனிஸ்ட்களும், கம்யூனிஸ்ட் குழுக்களும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து செயல்பட்டு வந்தனர். ஆனால் 1925ல் கான்பூரில், நாட்டின் பல்வேறு கம்யூனிஸ்ட் குழுக்களின் சார்பாக வந்த பிரதிநிதிகள் கூடி, நடத்திய கூட்டத்தில்தான் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது”.

கட்சியின் வங்க மாநிலக்குழு 1960ம் ஆண்டில் கட்சியின் 40வது அமைப்பு தினத்தை, 1920ம் ஆண்டை அடிப்படையாக வைத்து, 1961ல் கொண்டாட முடிவு செய்தது. அன்றைய ஒன்றுபட்ட சிபிஐ கட்சியின் பொதுச் செயலாளராகச் செயல்பட்டுவந்த தோழர் இஎம்எஸ் நம்பூதிரிபாட் வங்கத் தலைமைக்கு 1960 ஜூன் 10ம் தேதி எழுதிய கடிதத்தில் தெரிவித்ததாவது: “உங்களுடைய மாநிலக்குழு 1961ல் கட்சியின் 40வது அமைப்பு தினத்தை அனுசரிக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாகத் தெரிய வந்தது. (மத்திய) செயற்குழு இது பற்றி விவாதித்து, இதனைத் தேசியக் குழுவைத் தவிர கட்சியின் எந்த அமைப்பும் முடிவு செய்ய முடியாது எனத் தீர்மானித்தது. எனவே இந்தப் பிரச்சனையை கட்சியின் அடுத்த தேசியக் குழுக் கூட்டத்தில் எழுப்புவதே முறையானதாக இருக்கும்” 

இதே பொருள் பற்றி 1963 ஜூன் 5ம் நாள் செயற்குழு சார்பில் தோழர் எம் என் கோவிந்தன் நாயர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:

“சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நாம் தெரிவிக்க விரும்புவது யாதெனில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கான்பூரில் கம்யூனிஸ்ட்கள் நடத்திய மாநாட்டில் 1925ம் ஆண்டு டிசம்பரில் அமைக்கப்பட்டது. இதற்கு முன்பும் கம்யூனிஸ்ட் அகிலத்திடமிருந்து வழிகாட்டுதல்களைப் பெற்று நாட்டின் பல பகுதிகளில் சுமார் ஏழு கம்யூனிஸ்ட் குழுக்கள் செயல்பட்டு வந்தனர். ஆனால் கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆஃப் இந்தியா என்ற கட்சி மேற்குறிப்பிட்ட கான்பூர் மாநாட்டில், 500க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்க, 1925 டிசம்பரில் அமைக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்தது. அம்மாநாட்டில் பங்கேற்ற குறிப்பிடத்தக்க முக்கியமான தோழர்கள் முஸாபர் அகமத் (கல்கத்தா), எஸ் வி காட்டே, ஆர் எஸ் நிம்க்கர் மற்றும் ஜெ பி பகர்கட்டா (பாம்பே), அப்துல் மஜீத் (லாகூர்), சி கே அய்யங்கார் மற்றும் சிங்காரவேலு செட்டியார் (மெட்ராஸ்). 1925 டிசம்பரில் கூடிய மாநாட்டின்போது எஸ் ஏ டாங்கே மற்றும் சௌகத் உஸ்மானி சிறையில் இருந்தனர். ”கட்சியின் செயற்குழு டிசம்பர் 28ல் கூடி தோழர் எஸ் வி காட்டே அவர்களைப் பொதுச் செயலாளர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுத்தது.” (நியூ ஏஜ், ஜூன் 9, 1963)

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தாஷ்கண்ட் குழுவுக்கு முறையான மதிப்பு மரியாதை கொடுத்து, அக்குழுவை ‘வெளிநாட்டு அலுவலக’மாக (‘Foreign Buro’) நடத்துகிறது.

இவ்வாறாக, பிளவுபடாத ஒன்றுபட்ட சிபிஐ கட்சியின் தலைமை எந்தவிதக் குழப்பம் மற்றும் ஐயத்திற்கிடமின்றித் தெளிவாக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது 1925ம் ஆண்டே தவிர, அது 1920ம் ஆண்டு அல்ல என்று உறுதியாக இறுதி செய்தது. இந்த முடிவை எடுத்த கட்சியின் மத்திய செயற்குழு அமைப்பானது, கம்யூனிச இயக்கத்தின் கோபுரம் போல் உயர்ந்த புகழ்மிக்கத் தலைவர்கள் பலரையும் உள்ளடக்கியது.

இவ்வாண்டு கட்சியின் 95வது அமைப்பு தினத்தைக் கொண்டாடுவோம், 100வது அமைப்பு தினக் கொண்டாட்டங்களை நோக்கி செம்பதாகை உயர்த்தி அர்ப்பணிப்புடன் செயல்படுவோம்!

செங்கொடி வாழ்க! செங்கொடி தந்த தியாகத் தலைவர்கள் வாழ்க!

கம்யூனிஸ்ட் கட்சி ஜிந்தாபாத்! இன்குலாப் ஜிந்தாபாத்!

--தமிழில்: நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

 

 

No comments:

Post a Comment