Sunday 6 December 2020

அயோத்தியா தீர்ப்பில் சில முரண்பாடுகள் --மீள் பதிவு

 

‘ஜனசக்தி’யில் வெளியான கட்டுரையின் மீள் பதிவு


அயோத்தியா தீர்ப்பில் சில முரண்பாடுகள்

--கரன் தாப்பர்

            உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எளிதில் புரிந்துகொள்ளக் கூடியதாகவும், தர்க்கத்தின்படி ஏற்கத்தக்கதாகவும் இருக்க வேண்டும் என விரும்புவோம். மற்றவற்றைவிட இந்த இரண்டு பண்புகளையும் நான் வலியுறுத்துவேன். அப்படி இல்லாது போனால் தீர்ப்புகள் அலங்கார புனைந்துரையாக நயவுரையாகிப் போகும். சமீபத்திய அயோத்தியா தீர்ப்பில் இவை எந்த அளவு பொருத்துகிறது, பார்ப்போம்.

            நீதிமன்றம், எப்படி  முடிவை வந்தடைந்தது என்பது பற்றித் தீர்ப்பின் பத்தி 796 பேசுகிறது.  “தாவா அசையா சொத்தின் உரிமை பற்றியது. சொத்துரிமையை நீதிமன்றம் (வழிபாட்டு மத) நம்பிக்கை சார்ந்து முடிவு செய்ய முடியாது, மாறாகச் சாட்சியம் ஆவணத்தின் அடிப்படையிலேயே முடிவு செய்ய முடியும்” என்றது. சரி, அப்படி என்ன ஆவண சாட்சியம் என்று பார்த்து அவை வலுவான –மறுத்துப் பேச முடியாத—ஆதாரமா எனப் பார்ப்போம்.

            1857க்குப் பிறகு பாபர் மசூதியில் வழிபாடு நடைபெற்றது என்பதற்கான சாட்சியங்களை இந்துக்களும் முஸ்லீம்களும் வழங்கியுள்ளார்கள் என்பதை நீதிமன்றம் ஏற்கிறது. ஆனால் அதற்கு முன்பு வழிபாடு நடைபெற்றதா என்பதற்கான ’சந்தர்ப்ப சாட்சியங்கள், கூடுதல் வாய்ப்புகளை’ப் பார்க்குமிடத்து, உள்மண்டபத்தில்  வழிபாடு நடத்தியிருக்கலாம் என்பதற்கான சாட்சியங்கள் இந்துகள் தரப்பில் இருக்கிறது, ஆனால் முஸ்லீம்களைப் பொருத்து சாட்சியம் இல்லாதிருக்கிறது. தீர்ப்பின் பத்தி 786 கூறுவதாவது: “பாபர் மசூதி கட்டப்பட்ட ஆண்டிலிருந்து 1856-57வரையான இடைப்பட்ட காலத்தில், அந்த (மசூதி) இடம் முஸ்லீம்களின் சொத்தாக அவர்கள் வசம் இருந்ததற்கோ அல்லது அந்த இடம் பயன்படுத்தப்பட்டு அங்கே அந்தக் கால இடைவெளியில் நமாஸ் தொழுகை நடத்தப்பட்டதா என்பதற்கான சாட்சிய விவரம் இல்லை

            என்னுடைய பிரச்சனை இங்கேதான் துவங்குகிறது. ’நமாஸ் தொழுகை நடத்தப்பட்டதற்கு ஆதார சாட்சியம் இல்லை’ என்று குறிப்பிடும்போது நீதிமன்றம் அந்த இடத்தில் 450 ஆண்டுகளாக மசூதி இருந்தது என்பதை ஏற்கிறது. எப்போது அப்படி அங்கே மசூதி இருந்தது என்பது ஏற்கப்படுகிறதோ, அதன் தொடர்ச்சியாக அங்கே (அம்மதத்தவரின்) வழிபாடுகளும் நடைபெற்றிருக்கும் என்பதும் (சொல்லாமலேயே) விளங்கிக்கொள்ளக் கூடியதல்லவா?  1528 முதல் 1857 வரை அதற்கான சாட்சியம் இல்லை என்றால் அந்த மசூதி  325 ஆண்டுகளாகச் செயல்பாடற்றதாக அல்லது பயன்படுத்தப்படாத ஒன்றாக இருந்தது என்று நீதிமன்றம் சொல்கிறதா? நீதிமன்றம் அவ்வாறுதான் சொல்கிறது அல்லது அனுமானிக்கிறது என்றால் பிறகு எவ்வாறு 1857-ம் ஆண்டிற்குப் பிறகு முஸ்லீம் வழிபாடு நடத்த மசூதி பயன்படுத்தப்பட்டது என்ற கூற்றை நீதிமன்றம் விளக்க முடியும்? ஆனால் இந்தக் கேள்விகளுக்குப் பதில் அளிக்கப்படவில்லை.

 இன்னொரு பிரச்சனை. 1856 -57ல் பாபர் மசூதியில் வழிபாடு நடத்தும் உரிமைக்காக இந்து-முஸ்லீம் கலவரங்கள் நிகழ்ந்தன என்பதையும்; அதனைத் தொடர்ந்து இரண்டு மதத்தினருக்கும் வழிபாட்டு இடங்களைத் தனித்தனியே பிரிக்கப் பிரிட்டீஷ் குறுக்கே தடுப்பு வேலி அமைத்தார்கள் என்பதையும் நீதிமன்றம் ஒப்புக்கொள்கிறது. அவ்வாறெனில், அதுவே 1857க்கு முன்பும் முஸ்லீம்கள் அங்கே வழிபாடு நடத்தினார்கள் என்பதற்குப் போதுமான ஆதாரமாகாதா? மேலும், ஐரோப்பிய பயணிகளான ஜோசப் டைஃப்ன்தலர், வில்லியம் ஃபிஞ்ச் மற்றும் மான்ட்கோமெரி மார்டின் முதலானோர் பாபர் மசூதியில் 1857க்கு முன்பு இந்துகள் வழிபாடு நடத்தினார்கள் என எழுதியப் பயணக்குறிப்புகளை நீதிமன்றம் ஆதாரமாக ஏற்கிறது. ஆனால் அவர்களும்கூட அதனை மசூதி என்றுதான் குறிப்பிட்டுள்ளார்களே தவிர, யாரும் அதனை வழக்கொழிந்தது அல்லது பயன்படுத்தப்படாதது எனக் குறிப்பிடவில்லையே.   

நிச்சயமாக எந்தக் குறிப்புகள் இந்துகளுக்குச் சாட்சியமாகிறதோ அது முஸ்லீம்களுக்கும் சாட்சியமாகிறது. ஆனால் நீதிமன்றமோ அதனைக் காணாததுபோலக் கண்ணை மூடிக் கொண்டதாகத் தோன்றுகிறது. நீதிமன்றம் கூறிக்கொள்ளும் சாட்சியத்தின் அடிப்படையில் பார்த்தால் அந்தச் சாட்சியமே வரலாற்றின் பக்கங்களில் நிற்வில்லை என்பதே எனது மற்றொரு வாதம். நீதிமன்றம் கூறியது: “மசூதியின் உள்கட்டிடப் பகுதி முஸ்லீம்களின் தனி உரிமையாக 1857க்கு முன்பு –அதாவது அது கட்டப்பட்ட 16ம் நூற்றாண்டிலிருந்து-- .இருந்ததற்கான ஆதாரங்களை முஸ்லீம்கள் சமர்ப்பிக்கவில்லை”. ஆனால் 1528ம் ஆண்டில் மசூதி கட்டப்பட்டபோது  இந்தியாவை வெற்றிகொண்ட ஆட்சியாளர் பாபர்தான், சந்தேகமில்லாமல் அவர் மதநம்பிக்கையின்படி முஸ்லீமாகவே இருந்தார் என்பது சரித்திரம்.

 பின்னர் 1658முதல் 1707வரை அவுரங்கசீப் பேரரசராக இருந்தார், மதநம்பிக்கையில் அவர் வெறியராகச் சொல்லப்படுகிறார். அப்படிப்பட்டவர்கள் ஒரு மசூதியில் இந்துகளை வழிபட அனுமதித்திருப்பார்கள் என நினைத்துப் பார்க்க முடியுமா? அதுவும் தவிர, குறிப்பாக அந்த மசூதி பாபரின் பெயரால் அழைக்கப்படும்போது? அல்லது அந்த இடத்தை முஸ்லீம்களின் தனிச் சொத்துரிமையாக வைத்திருப்பார்களா?  இது சரித்திரம். ’16ம் நூற்றாண்டில் மசூதி கட்டப்பட்டதிலிருந்து 1857க்குமுன்பு வரை மசூதியின் உள்கட்டமைப்பு தனிஉரிமையாக முஸ்லீம்களின் வசம் இல்லை’ என்பது நீதிமன்றத்தின் கூற்று. இதனை நாம் நம்ப வேண்டும் என்ற தீர்ப்பு  மேற்கண்ட சரித்திரத்தோடு பொருந்தாது முரண்பட்டு மோதுவதை நீதிமன்றம்தான் விளக்க வேண்டும்.

இறுதியாக, பத்தி 800ன் கடைசி வரியைப் பார்ப்போம்: “நிகழ்தகவு வாய்ப்புகளைப் பார்க்க, பிரச்சனைக்குரிய முழுமையான இடம் தங்கள் வசம் இருந்தது என்பதற்கு முஸ்லீம்கள் தாக்கல் செய்த சாட்சியங்களை விட இந்துகள் தாக்கல் செய்தது வலுவான அடிப்படையில் நிற்கிறது”. இந்த வரி வெளிப்படும் உண்மை யாதெனில், இந்து முஸ்லீம் இரண்டு தரப்பும் சொத்துரிமைக்கு ஆதரவாக ஆதார சாட்சியங்களை அளித்தன; ஆனால் நீதிமன்றம் இந்துகளின் சாட்சியம் மேம்பட்டது என நம்பியது அவ்வளவுதான்.  அவ்வாறெனின், வழக்குக்கு உட்பட்ட இடத்தை முழுமையாக இந்துகளிடம் கொடுக்காமல், இருதரப்புக்கும் பகிர்ந்து கொடுக்க அதுவே போதுமான அடிப்படையாக ஆகிவிடவில்லையா?

நான் வழக்கறிஞர் இல்லை, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஆய்ந்து விளக்கிச் சொல்ல வல்ல நிபுணரும் அல்ல. ஆனால் ஒரு சாதாரண குடிமகனாக, என்னை மேற்கண்ட முரண்பாடுகள் மிகவும் தொல்லைப்படுத்துகிறது. நான் வேண்டிக் கொள்வது ஒன்று மட்டுமே, தயவுசெய்து தீர்ப்பைப் புரியும்படியும் தர்க்கநியாயப்படி ஏற்கத்தக்கதாகவும் தெளிவாகச் சொல்வீர்களா? தீர்ப்பு சாட்சியத்தின்படி எனக் கூறப்பட்டதால், அது குறைந்தபட்சம் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டாமா? அந்தக் குறைந்தபட்சம் இந்த வழக்கிற்குப் பொருத்தமுடையது அல்லவா?

--நன்றி: தி இந்துஸ்தான் டைம்ஸ்

--தமிழில் :நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

 

 

No comments:

Post a Comment