Friday 18 December 2020

பொன் எழுத்துக்களால் செதுக்கப்படும் விவசாயிகள் போராட்டம்

 


ஜனநாயக இயக்க வரலாற்றுப் பக்கங்களில்

பொன் எழுத்துக்களால் செதுக்கப்படும் விவசாயிகள் போராட்டம்

--குர்னாம் கன்வர்

        ஆயிரக்கணக்கான டிராக்டர்கள், டிராலிகளுடன் லட்சக் கணக்கான விவசாயிகள் டெல்லி சாலைகளை அடைத்துப் போராட்டப் பேரணி நடத்தி வருகின்றனர். மக்களுக்கு உணவளிக்கும் விவசாயிகளைச் சொந்த நாட்டின் தலைநகருக்குள் உள்ளே நுழைய விடாமல் ஆளும் அரசுகளின் அராஜகங்கள் அரங்கேறுகின்றன. நெடுஞ்சாலைகளில் மலையாய் மணலைக் கொட்டுவது, அகழி வெட்டுவது, முள்வேலி தடுப்புகள், தண்ணீர் பீரங்கிகள், கண்ணீர் புகை குண்டு தாக்குதல்கள், போலீஸ் பெரும் படை குவித்துத் தடியடி நடத்துவது …இவை அத்தனையும் முறியடித்து முடிவெடுத்தபடி விவசாயிகள் நவம்பர் 26 –27ல் புறப்பட்டு,  தலைநகரைச் சூழ்ந்தனர்.

            அவ்வாறு நுழைந்துவிட்ட விவசாயிகளைச் சின்னஞ்சிறிய புராரி நிரங்காரி மைதானத்தில் –திறந்தவெளிச் சிறை போல – போலீஸ் மற்றும் சிஆர்பிஎஃப் பெரும்படையைக் காவல் வைத்து அடைத்துவிட மத்திய அரசு சூழ்ச்சி செய்தது. இந்தச் சூழ்ச்சியை அறியாத சில நூறு பேர்கள் அங்கே முகாமிட்டுத் தங்கவும் செய்தனர். ஆனால் அரசின் நாடகத்தை உணர்ந்த விவசாயப் போராளிகள் அரசின் புராரி மைதானச் சலுகையை மறுத்து விட்டனர்; சிங்கு மற்றும் திக்ரி முனைகளில் உட்கார்ந்து விட்ட அவர்கள் டெல்லிக்குச் செல்லும் அத்தேசிய நெடுஞ்சாலையை மூடினர். இன்றும் அவை மூடித்தான் கிடக்கின்றன, அதுபோல உபி முதலானவற்றிலிருந்து டெல்லிக்குச் செல்லும் பல நுழைவாயில்களிலும் விவசாயிகளே குவிந்துள்ளனர்.

            விவசாயிகளுக்கு விரோதமான, வேளாண்மைக்கு எதிரான, பொருளாதாரத்திற்கும் ஏன் தேசத்திற்கும் விரோதமான கார்ப்பரேட் ஆதரவு கருப்புச் சட்டங்களை எதிர்த்து நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்தில் அகில இந்திய கிசான் சபா, பஞ்சாப் பிரிவு பொதுச் செயலாளர் பல்தேவ் சிங் நிகல்கார்க் தலைமையில் புறப்பட்ட பேரணிகளில், செயல் தலைவர் பல்கரண் சிங் பிரார், துணைத் தலைவர் சூரத் சிங் தரம்கோட், சிபிஐ முன்னாள் மாநிலச் செயலாளரும் மாநில விவசாயத் தலைவருமான கர்தேவ் சிங் ஆர்ஷி, மாநிலத் தலைவர் தவின்தர் சோகல் மற்றும் பலர் டெல்லியின் பல முனைகளிலும் பங்கேற்கின்றனர். அதுபோல, மாணவர்கள், இளைஞர்கள்  மற்றும் இந்திய மக்கள் நாடக மன்ற (இப்டா) குழுகள் போன்றோரும் தங்கள் புரட்சிகர கலை நிகழ்ச்சிகள் மூலம் விவசாயிகளின் இயக்கத்திற்கு ஆதரவு திரட்டுகின்றனர்.

சிபிஐ கட்சி முழுமையாக ஆதரிக்கிறது

            சிபிஐ மூத்த தலைவரும், கிசான் தலைவருமான டாக்டர் ஜோகிந்தர் தயாள் தலைமையில் நடந்த கட்சியின் அவசரச் செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு ‘நியூஏஜ்’ இதழுக்குப் பஞ்சாப் மாநிலக்குழு செயலர் பன்த் சிங் பிரார் அளித்த பேட்டியில், ‘சிபிஐ பஞ்சாப் கிளை அமைப்புகள், மற்றும் இடதுசாரி கட்சிகள் முழுமையாக விவசாயிகள் போராட்டத்தை ஆதரிக்கின்றன; கட்சியின் விவசாயப் பிரிவு, அதன் இளம் செயல்வீரர்கள் இதர 39 விவசாயச் சங்கங்களுடன் இணைந்து டெல்லியில் முன்னணிப் படைவரிசையில் போராடி வருகின்றனர்’ என்று கூறினார்.

            செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற சிபிஐ மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வெகுஜன அமைப்பு முன்னணித் தலைவர்கள் பலரும் தற்போது டெல்லி போராட்டத்தில் பங்கேற்கின்றனர். மாவட்டக் கிளை அமைப்புகள் உடனடியாக அவசர மாவட்டக் குழு கூட்டங்களைக் கூட்டி மேலும் போராட்டப் படை வீரர்கள் அணிகளை டெல்லி எல்லைக்கு அனுப்பத் திட்டமிடுமாறு மாநிலக் கட்சி அறைகூவல் விடுத்துள்ளது. டெல்லியின் நுழைவாயில்களில் முகாமிட்டுள்ள விவசாய இயக்கத்தினருக்கு --அவர்களுக்கு எதிராக பாஜக பரப்பி வரும் பொய்ப் பிரச்சாரத் தகவல்கள், அவதூறுகளை முறியடிக்கும் வகையில்--  உணவுப் பொருட்கள், உதவிகள் மற்றும் பொதுமக்கள் ஆதரவைத் திரட்ட வேண்டும். டெல்லிக்குச் செல்லாது மாநிலத்திலேயே இருக்கும் தோழர்கள், மூன்று கருப்புச் சட்டங்களை எதிர்த்துப் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகக் களத்தில் தொடர்ந்து, தனித்தோ அன்றி பிற இடதுசாரி அமைப்புக்களுடன் இணைந்தோ, கண்டன இயக்கங்களை நடத்துமாறும் மாநிலக் கட்சி அறிவுறுத்தி உள்ளது.

            டெல்லி மாநில அரசிதழில் (கெஜட்டில்) மூன்று கருப்புச் சட்டங்களின் அமலாக்கத்திற்கு ஒப்புதல் அளித்து விட்டு, போராளிகளிடம் பசப்பி ஆதரவு நாடகமாடும் டெல்லி முதலமைச்சர் கேஜ்ரிவால் மற்றும் ஆம்ஆத்மி கட்சித் தலைவர்களுக்கு எதிராகக் கூட்டத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆம்-அத்மி கட்சியினரும் கேஜ்ரிவாலும் மத்திய பாஜக அரசையும் பிரதமர் நேரேந்திர மோடியின் செயல்களையும் தாக்குவதில்லை; அவ்வளவு ஏன், ஹரியானா மற்றும் பஞ்சாப் விவசாயத் தலைவர்கள் மீது வன்முறைத் தாக்குதல்களைக் கட்டவிழ்த்த ஹரியான முதலமைச்சர் கட்டார் மீது கூடக் கண்டனம் தெரிவிப்பதில்லை; மாறாக, நாளும் பொழுதும் பஞ்சாப் முதலமைச்சரை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்துகின்றனர். (பஞ்சாப் முதல்வரின் செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகள் மற்றும் போதாமைகளை எதிர்த்து இடது சாரியினர் தொடர்ந்து பஞ்சாபில் போராடி வருவது தனி)

            பஞ்சாபின் (பாஜக தவிர்த்த) அனைத்து கட்சிகளையும், குறுகிய கட்சி வேறுபாடுகளை மறந்து, விவசாயிகள் இயக்கத்திற்கு ஆதரவாக ஒன்றிணைந்து செயல்பட சிபிஐ கட்சி வலியுறுத்துகிறது; நமது சக்திகள் அனைத்தையும் ஒன்றுதிரட்டி மோடியின் பாசிச ஆட்சியை வீழ்த்தி, ஜனநாயக இயக்கத்தின் விவசாயிகளின் வெற்றியை உறுதிப்படுத்த உழைக்க வேண்டும்.

ஒன்றுபட்ட இடதுசாரிகள் குரல்

            பஞ்சாபின் எட்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் வெகுஜன அமைப்புகள் சேர்ந்து “பாசிசத் தாக்குதலுக்கு எதிரான முன்னணி”யைக் அமைத்துள்ளன. விவசாயிகளின் டெல்லிப் பேரணியைத் தடுத்து நிறுத்தும் நோக்கத்தில் பாஜகவின் ஹரியானா கட்டார் காட்டாசி கட்டவிழ்த்து விட்டுள்ள அடக்கு முறைகளைக் கண்டித்து அந்த முன்னணி, ஜலந்தரில் நவம்பர் 29ல் மாபெரும் பேரணி மற்றும் பொதுக் கூட்டத்தை நடத்தியது. கூட்டத்தில், புரட்சிகர கட்டுப்பாடோடு தீரமாகப் போராடி வரும் விவசாயிகளின் உறுதிக்கு நல்வாழ்த்துகள் பாராட்டுதல்கள் தெரிவிக்கப்பட்டது. மாநில எல்லை ஓரங்களில் டெல்லியின் நுழைவாயில்களில் பல லட்சம் மக்கள் அமர்ந்துள்ளனர்; அவர்களைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் கட்டார் மற்றும் யோகி ஆதித்யநாத்  ஆட்சிகளின் பலாத்காரத் தாக்குதல்களை முறியடித்து அவர்களை மண்ணைக் கவ்வ வைத்த விவசாயிகள், நெஞ்சை நிமிர்த்தி தலைநகரில் நுழைந்தனர். கூட்டத்தில் பேசிய சிபிஐ மாநிலச் செயலாளர் பன்த் சிங் பிரார், ‘ஜனநாயக இயக்கத்தின் வரலாற்றுப் பக்கங்களில் விவசாயிகள் தங்கள் இயக்கத்தின் மூலம்  பொன்னெழுத்துக்களால் நிரப்பி உள்ளனர்’ என்று கூறினார்.

பாஜகவின் பொய்ப் பிரச்சார அவதூறுகளை நிராகரிப்போம்

            பாஜக –ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் டிஜிட்டல் தொழில்நுட்பப் பிரிவுகளும் வரலாற்றுச் சிறப்பு மிக்கப் போராட்டத்தைப் புழுதிவாரித் தூற்றும் பல அடிப்படை ஆதாரமில்லாத இட்டுக் கட்டிய புரளிகளைப் பரப்பி வருகின்றனர். விவசாயிகள் போராட்ட இயக்கம் காங்கிரஸ் மற்றும் அகாலிகளால் தூண்டப்பட்டது என்பது தவறான முதல் குற்றச்சாட்டு. அதனைக் காது கொடுத்துக் கேட்கத் தற்போது யாரும் தயாரில்லை; பல லட்சக் கணக்கில் டெல்லி எல்லைகளில் குவிந்துள்ள விவசாயிகள் அரசியல் தலைவர்கள் எவரையும் அவர்களிடையே சொற்பொழிவாற்ற அனுமதிப்பதில்லை.  வேளாண் அவசரச் சட்டங்கள் கொண்டுவரப்பட்ட போதும், மசோதாக்கள் தாக்கல் ஆன நிலையிலும், அவைகளில் விவாதம் என்ற பெயரில் சட்டமாக நிறைவேற்றப்பட்ட போதும் –அகாலிகள், மத்திய அரசின் அங்கமாகவே தொடர்ந்து இடம் பெற்றனர்-- என்பதை மோடி அரசு மற்றும் அதன் ஊதுகுழல்கள் என ஒவ்வொருவரும் நன்கு அறிவர். விவசாயிகளின் போராட்ட இயக்கம் வேகம் பெற்றதால் முதலில் மத்திய அமைச்சரவையிலிருந்து அகாலி தளம் தனது அமைச்சரைப் பதவி விலகக் கட்டாயப்படுத்தியது; இப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்தும் அந்தக் கட்சி உறவைத் துண்டித்துக் கொண்டுள்ளது.

            இதன் பிறகும் அகாலி தளக் கட்சியினர் மாநில அரசின் மீதுதான் முக்கியமான விமர்சனத் தாக்குதல்களைத் தொடர்கின்றனரே தவிர, மோடி அரசை எதிர்த்துப் பேசுவதில்லை. ஒருக்கால் அடுத்த 2022ம் ஆண்டு தேர்தலில் பாஜகவோடு மீண்டும் கை கோர்க்கலாம் என்ற நம்பிக்கையாக இருக்கும்! விவசாயிகளின் போராட்டம், மாநிலத்தின் காங்கிரஸ் அரசையும் மூன்று கருப்புச் சட்டங்களுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றவும், மத்தியச் சட்டங்களைப் பயனற்றதாக்கும் வகையில் மாநிலத்தில் சொந்த சட்டங்களை நிறைவேற்றவும் கட்டாயப் படுத்தியது; மேலும் விவசாயிகள் மீது வழக்குகள் போடாமல்,  ஜனநாய இயக்கத்தைத் தடைசெய்ய முயலாமலும் இருக்க வைத்தது. பாஜக தவிர்த்த அனைத்து கட்சிகளின் ஒருமித்த ஆதரவோடு சட்டமன்றத்தில் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் அந்த மசோதாக்களை மத்திய ஒப்புதல் பெற அனுப்பாமல் மாநில ஆளுநர் தாமதித்து வருகிறார். 

            மத்திய வேளாண் சட்டங்கள், வேளாண்மைத் தொழிலுக்கே பிறப்பித்த மரண தண்டனை மற்றும் அவர்களின் விவசாய நிலங்களைக் கார்ப்பரேட்டுகளுக்குத் தங்கத் தட்டில் வைத்துத் தானம் செய்வதுதான்; அதன் காரணமாகவே, பஞ்சாப் மாநிலத்தின் அனைத்துப் பிரிவினர் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிக்கிறது. மேலும் விவசாயம் என்பது இந்திய அரசியல் சட்ட வரையறைப்படி மாநிலங்களின் (தனி உரிமைப்) பட்டியலின் கீழ் வருவது, பொதுப் பட்டியலில்கூட அல்ல. அந்த வகையிலும் மத்திய சட்டங்கள் அரசியலமைப்பின் கூட்டாச்சித் தத்துவத்திற்கு விரோதமானவை –அரசியல் சட்டத்தை மீறியவை. 

            மற்றொரு வெட்கங்கெட்ட பாஜக அவதூறு, ‘இத்துணை பிரம்மாண்டமான பேரணிக்கும், கலந்து கொள்ளும் போராளிகளுக்கு உணவு அளிப்பதற்கும் யார் நிதி உதவி செய்கிறார்கள்’ என்ற கேள்வியை, மகாப் பொய்யன் கோயபல்ஸ் தத்துவத்தின்படி திரும்பத் திரும்ப, ஊடகங்கள் மூலம் பரப்புகிறார்கள். பாஜக தலைவர்களும், ஊதுகுழல்களும் பஞ்சாப் மாநில மக்களின் பண்பாட்டு பாரம்பரியத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கக்கூட மாட்டார்களா? குறிப்பாகச் சீக்கிய மதத்தைச் சார்ந்த மக்கள் வரலாற்றில் ஒளிவீசிப் புகழார்ந்து விளங்கும் உயிர் தியாகங்கள், குடும்பங்களை இழந்தது போன்ற எண்ணற்ற தியாகங்கள் எத்தனையோ இருக்க, (இயக்கத்திற்காகப்) பணத்தைச் செலவிடுவதைப் பற்றிக் கூற வேண்டுமா என்ன? ஒவ்வொரு டிராக்டரோடும் இணைக்கப்பட்ட இரண்டு டிராலிகளில் ஒன்றில் தன்னார்வ விவசாயத் தொண்டர்களும் மற்றொன்றில் பல மாதங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களும் நிரப்பப்பட்டிருந்தன. மேலும் தேவையான தொண்டர்கள், பொருட்களையும் அணிஅணியாய் அனுப்பவும் பஞ்சாப் மக்கள் தயாராகவே உள்ளனர். மத்திய ஆட்சி அதிகாரக் கோட்டைக் கதவருகே போராடிவரும் தங்கள் சோதரர்களின் பயிர் பச்சை நிலங்களை மாநிலத்தில் இருக்கும் சகோதரர்கள் பேணிக் காத்து வருகிறார்கள்.

            இது தவிர, ஹரியானா மற்றும் டெல்லி மக்களும் அத்தியாவசியப் பொருட்களை வழங்குகின்றனர். இப்படிப்பட்ட உழுகுடித் தியாகிகளைப் பாஜகவினர் புழுதிவாரித் தூற்றி இழிவுபடுத்துகிறார்கள். விவசாயிகள் இயக்கம் பஞ்சாப் மக்களை மட்டுமே உள்ளடக்கியது என்பது பாஜகவின் மற்றொரு அவதூறுக் குற்றச்சாட்டு; ஹரியானா, உபி, உத்தர்காண்ட், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், இராஜஸ்தான் முதலிய பல்வேறு மாநிலங்களிலிருந்து பெருமளவில் பங்கேற்றிருக்கும் விவசாயிகள் மற்றும் அவர்களின் எண்ணற்ற தலைவர்கள் தங்கள் பங்கேற்பின் மூலம் அந்தப் பிரச்சாரத்தைத் தவிடிபொடியாகி நிராகரித்துள்ளனர். (டெல்லி வாழ் மக்களின் அன்றாட வாழ்விற்குத் தங்கள் போராட்டம் எவ்வளவு பெரிய இடையூறு என்பதை உணர்ந்த மிகுந்த மனவேதனையோடு) டெல்லியின் அனைத்து நுழைவாயில்கயையும் அடைத்துள்ளனர் – டெல்லி நகரவாசிகளின் துயர்களுக்கு மோடி அரசே முழு பொறுப்பு.

            அவதூறுகளில் மிகவும் இழிவான வெட்கக்கேடானது விவசாயிகள் இயக்கத்தைக் காலிஸ்தான் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், அர்பன் நக்ஸ்சலைட்கள் என்றெல்லாம் பழிதூற்றி அழைப்பது; இதைப் பார்க்கும்போது, அவர்களது அவதூறு உற்பத்தி ஆலையிலிருந்து வரும் நாட்களில் என்னவெல்லாம் வருமோ யாருக்குத் தெரியும்? விவசாயிகளின் போராட்ட இயக்கம் அனுபவம் வாய்ந்த வேளாண் தலைவர்களால் வழிநடத்தப்படுகிறது. மூன்று மாதங்களாகப் பஞ்சாப் மற்றும் பிற மாநிலங்களில் விவசாயிகளின் இயக்கம் அமைதியாகவே நடந்து வருகிறது. தேச விரோத முழக்கங்களை எழுப்ப எவரையும் அனுமதிப்பதில்லை, ஆனால் மோடி அல்லது அவரது அரசு அல்லது கார்ப்பரேட்டுகளை விமர்சிக்கும் முழக்கங்கள் பெரிதும் விண்ணில் எதிரொலித்தன, இனியும் அவை தொடரும். ஆதரவாளர்களது சொற்பொழிவு உரைகளின் தொணி, உள்ளடக்கம் இவற்றைப் போராட்டத் தலைவர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்; பிரம்மாண்டமான இயக்கத்தில் எதிர்த்தரப்பு உதிரிகள் எவரும் ஊடுருவிக் குழப்பம் விளைவித்திடாது விழிப்புடன் இருக்கவும் –அவ்வாறு இல்லாவிடில்-- இயக்கத்தின் மீது கரிபூசி விடுவார்கள் எனவும் பொதுமக்களை வற்புறுத்தி எச்சரித்து வருகின்றனர்.

அடுத்தது என்ன?

            மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு கிசான் தலைவருடன் தொலைபேசியில் பேசி டிசம்பர் 3ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தார். நெடுஞ்சாலைகளிலிருந்து அகன்று விவசாயிகள் புகாரி மைதானத்திற்குச் சென்றால் அதற்கு முன்பே கூட விவாதிக்கலாம் என்ற நிபந்தனை அழைப்பை விவசாயிகள் நிராகரித்தனர். டிசம்பர் 1ம் தேதி நடந்த பேச்சுவார்த்தைகள் எதிர்பார்த்தபடியே தோல்வியில் முடிந்தது; ஏனெனில் பிரதமர், முற்போக்கான அந்த வரலாற்றுச் சட்டங்கள் (?) வழங்கும் பலன்களைத் தொடர்ந்து பண்ணிப் பண்ணிப் பேசி வருவதுதான். தீர்வைத் தாமதித்து இயக்கத்தை நீட்டித்தால் எதிர்ப்பாளர்கள் சோர்ந்துபோய் திரும்பி விடுவர் என அவர்கள் மனப்பால் குடிக்கின்றனர். போராட்டத்தின் வீச்சு நாளுக்கு நாள் –குறிப்பாக, பஞ்சாப், ஹரியானா, உபி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்ராவில்  --அதிகரித்து வருகிறது. விவசாயிகளுக்குத் தார்மிக ஆதரவு தெரிவித்து டாக்ஸி, ஆட்டோ மற்றும் சரக்கு வாகன இயக்குநர்கள் வேலைநிறுத்த அறிவிப்பு தந்துள்ளனர். நாடெங்கும் பல பகுதியினரும் ஆதரவுப் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

            டிசம்பர் 1ம் தேதி கூட்டத்தின், ஐந்து உறுப்பினர் குழு அரசு யோசனையை விவசாயிகள் நிராகரித்தனர். அவர்கள் அகில இந்தியக் கிசான் அமைப்புகளின் அத்தனை 35 அல்லது கூடுதல்  தலைவர்களும் வருவோம், ஆனால் ஐவர் மட்டுமே பேசுவோம் எனக் கூறிவிட்டனர். பிறகு டெல்லியின் அனைத்து நுழைவு வழிகளையும் அடைத்துவிட முடிவெடுத்தனர். டிசம்பர் 5ல் அரசு மற்றும் கார்ப்பரேட் கொடும்பாவிகளைக் கொளுத்தினர். போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகத் தேசிய விருது பெற்ற விளையாட்டு மற்றும் பிற துறைகளின் விருதாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பதக்கங்களை டிசம்பர் 7ம் தேதி திருப்பி அளித்தனர். நமது நாடு மட்டுமின்றி சர்வதேசச் சமூகத்தினரிடமிருந்தும் கூடும் ஆதரவோடு, வெற்றியை நோக்கி விவசாயிகளின் போராட்டம் வீறுநடை போடுகிறது.  

            தங்களின் தோல்வி எதிரே தெளிவாக எழுதப்பட்டுள்ளதைப் பாஜக தலைமை புரிந்து கொள்ள வேண்டும். பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி அமலாக்கம், சிஏஏ திணிப்பு, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து செய்தது போல, தந்திரமாகக் காய்நகர்த்தி அல்லது பலப்பிரயோகம் நடத்தி விவசாயிகளின் இயக்கத்தையும் தடுத்து விடலாம் எனப் பாஜக அரசு தப்புக் கணக்கு போட்டுவிட்டது. அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் (ஏஐகேஎஸ்) பொதுச் செயலாளர் அதுல் குமார் அஞ்சான் மற்றும் செயல் தலைவர் புபீந்தர் சம்பர் கூறும்போது, ‘இது மோடி சந்திக்கும் மிகப் பெரிய சவால், இதில் அவர் தோற்கப் போவது உறுதி’ என்றனர்.

            நாமும் அரசுக்கு நல்ல சிந்தனை ஏற்பட வேண்டும், தனது கொள்கை தடுமாற்றம் மற்றும் பிடிவாதத்தைக் கைவிட்டு விவசாயிகளுடன் உரிய கவனத்துடன் பேசவும், அவர்களுடைய கோரிக்கைகளை -- மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்தல், மின்சார மசோதா 2020ஐ திரும்பப் பெறுதல், அறுவடைக்குப் பின் எஞ்சும் பயிரின் அடிப்பகுதியை (பஞ்சாபியில் பராலி) எரிப்பதற்குத் தடைவிதித்த அவசரச் சட்டத்தை ரத்து செய்தல், சட்டப்படியான குறைந்தபட்ச ஆதார விலை (எம்எஸ்பி) உத்தரவாதம் வழங்கல், பயிர் கடன்களைத் தள்ளுபடி செய்தல், சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை அமலாக்கல் போன்ற கோரிக்கைகளை -- ஏற்கவும் முன்வர வேண்டும் என நம்புவோம். அதற்கு மாறாக, ஊடுருவல்காரர்கள் மூலம் ஆத்திரமூட்டல் அல்லது இராணுவ நடவடிக்கைகள் மூலம் கட்டாயத் தீர்வுக்கு முயலலாம் என அரசு எண்ணலாகாது; அப்படிச் செய்வது அரசிற்கு மட்டுமல்லாது தேசத்திற்கும் பேரழிவு ஆபத்துகளை ஏற்படுத்திவிடும்.   

            --நன்றி: நியூஏஜ் (டிச.13 –19 இதழ்)

--தமிழில்: நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

No comments:

Post a Comment