Friday 25 December 2020

வரலாற்றுத் தலைவர்கள் வரிசை 22 மக்கள் தலைவர் வ சுப்பையா

 

நமது பெரும் தலைவர்கள் வாழ்விலிருந்து :

சில சித்திரத் சிதறல்கள் -22


மக்கள் தலைவர் வ சுப்பையா :

பிரெஞ்ச் இந்தியாவின் விடுதலைக்கு வித்திட்டவர்

--அனில் ரஜீம்வாலே

(நியூ ஏஜ்–நவ.15 --21, 2020)

            1947 ஆகஸ்ட் 15ல் இந்தியா விடுதலை அடைந்த பிறகும் பாண்டிச்சேரி, காரைக்கால் (தமிழ்நாட்டிற்கு அருகே இரண்டு பகுதிகளாக), ஏனாம் (ஆந்திரா, காக்கிநாடா அருகே), மாகே (கேரளா, கோழிக்கோடு அருகே), மற்றும் சந்திரநாகூர் அல்லது சந்தர்நகர் (மேற்கு வங்கம்) போன்ற பகுதிகள் பிரான்ஸ் தேசத்தின் பிடியில் இருந்தன. அவை கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் தலைவர் வ சுப்பையா தலைமையிலான போராட்டத்தால் 1954ல் விடுதலை அடைந்தன.

சில முந்தைய சரித்திரம்

          போர்த்துகீசியர்கள் முதலில் நம் மண்ணில் பாண்டிச்சேரியில் வந்து இறங்கினார்கள்; அவர்களது ஆலைகள் மற்றும் குடியிருப்புகளை உள்ளூர் மக்கள் புது--சேரி (புதியதான குடியிருப்பு என்ற பொருளில்) அழைத்தனர். அதையே போர்த்துகீசியர்கள் 1954ல் தங்கள் வரைபடத்தில் ‘புதுசேரியா’ (Puducheria)  என்று குறித்தனர்.

          மசூலிப்பட்டினத்தில் பிரெஞ்ச் ஆலை ஒன்றைப் பிரான்சின் கிழக்கிந்திய கம்பெனி 1664 செப்டம்பர் 1ம் நாள் நிறுவியது. பீஜ்பூர் சுல்தான் கீழ் வலிகொண்டபுரத்தின் க்விலன்டர் (Qiladar) ஷேர் கான் லோடி, மசூலிப்பட்டினத்தின் இயக்குநர் ஃபிரான்கோய்ஸ் மார்ட்டினிடம் ஓர் இடத்தை வழங்க அவர் அதில் 1674ல் பாண்டிச்சேரியை நிர்மாணித்தார். மேலும் மாஹேயை 1720களிலும், ஏனாம் பகுதியை 1731லிலும் மற்றும் காரைக்கால் பகுதியை 1738லும் பிரான்ஸ் கைப்பற்றியது. 1793ல் பாண்டிச்சேரி பிரிட்டிஷ் கட்டுப்பாட்டின் கீழ் வந்தாலும், 1814ல்  பிரான்சிடமே மீண்டும் வழங்கி விட்டது.

          1871 பாரீஸ் கம்யூன் தாக்கத்தில் பிரெஞ்ச் இந்தியா பத்து கம்யூன்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவொன்றும் ஒரு மேயரின் கீழ் கொண்டு வரப்பட்டது.

சுப்பையா இளமைப் பருவம்

          வரதராஜூலு கைலாஷ் சுப்பையா 1911ம் ஆண்டு பிப்ரவரி 7 நாள் பிறந்தார். அவருடைய தாத்தா கோட்டைக்குப்பத்தில் ஒரு காவல்துறை அதிகாரி, தந்தை வணிகராக இருந்தார். செகன்டரி பள்ளிக் கல்வியைப் பெட்டிட் செமினார் பள்ளியிலும் (1917 –23), அதன் பிறகு பாண்டிச்சேரி கால்வே கல்லூரியில் (1923—28) உயர்கல்வியையும் முடிந்தார்.

          1927 செப்டம்பரில் சுப்பையா பாண்டிச்சேரியிலிருந்து கடலூருக்கு மகாத்மா காந்தியைப் பார்ப்பதற்காக  இரண்டு நண்பர்களோடு சைக்கிள் மிதித்துச் சென்றார். ‘பிராத்தனை’ கூட்டத்தில் உரையாற்றிக்கொண்டிருந்த மகாத்மாவைக் கண்டார்.  அதே ஆண்டு மெட்ராசில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டைப் ‘பார்ப்பதற்கும்’ சென்று பல புகழ்பெற்ற மனிதர்களைச் சந்தித்தார். ரஷ்யா குறித்து ஜவகர்லால் நேரு எழுதிய புத்தகத்தை 1928ல் படித்தவர், மேலும் ‘லெனினும் ரஷ்யப் புரட்சியும்’ என்ற சிங்காரவேலர் எழுதிய புத்தகத்தையும் படித்தார்.

          கல்லூரியில் ஆறாவது பாரத்தில் படித்துக் கொண்டிருந்த போது மூன்று வாரங்களுக்கு நீடித்த மாணவர்களின் வேலைநிறுத்தத்தை நடத்தியதால் 6 மாதங்களுக்குக் கல்லூரியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். 1929ல் கல்லூரியில் விவாதக்குழுவை அமைத்து அதற்கு ‘தி ம்யூச்சுவல் பிரதர்குட்’ (பரஸ்பர சகோதரத்துவம்) எனப் பெயரிட்டார்; 1930ல் இளைஞர் அமைப்பையும் (யூத் லீக்), 1931ல் கால்வே கல்லூயில் முன்னாள் மாணவர்களின் பேரவை மன்றத்தையும் ஏற்படுத்தினார்.  ‘சுயமரியாதை’ இயக்கத்துடனும் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது.

பிரெஞ்ச் இந்தியாவில் யூத் லீக்

          யூத் லீக் எனும் இளைஞர் மன்ற அமைப்புகளை 1931--32களில் சுப்பையா அமைத்தார்; ‘இராமகிருஷ்ணா படிப்பகம்’ என்பதன் தலைவராகச் செயல்பட்டு தேசிய உணர்வை விரிவாகப் பரப்பினார். 1931ல் ஒரு காப்பீட்டு நிறுவனத்தில் கிளை மேலாளராகப் பணியில் சேர்ந்தார்.

          விரைவில் பாண்டிச்சேரி அரிசன சேவா சங்கம் நிறுவப்பட்டு சுப்பையா அதன் செயலாளர் ஆனார்; சேரி (ஜுஹீ ஏரியா) பகுதிகளைச் சுத்தம் செய்தார்; அரிசன குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கும் கல்வி கற்பித்தார்.

          மெட்ராஸ் பிரிசிடன்சி சுற்றுப் பயணத்தின்போது 1934 பிப்ரவரி 17ம் நாள் காந்திஜி பாண்டிச்சேரி வந்தார். பாண்டிச்சேரி வரும்போது ஸ்ரீ அரவிந்தர் இருக்க மாட்டார் என்பதால், காந்திஜி முதலில் பயணத்தையே ரத்து செய்திருந்தார். இதை அறிந்த சுப்பையா அவரது முடிவை மாற்ற முயல்வதற்காகக் குன்னூர் சென்று, காந்திஜியின் பக்கத்து அறையிலேயே தங்கினார். குளிரால் சுப்பையா நடுங்கிக் கொண்டிருந்தபோது, திறந்த வராண்டாவில் ஒரு கயிற்றுக் கட்டிலின் மேல் ஒரு சாதாரண துண்டோடு காந்திஜி நன்றாக உறங்கிக் கொண்டிருந்ததைக் கண்டார்!

காந்திஜியோடு உடன் நடந்து சென்றபோது, அவரது நடை வேகத்திற்கு இளைஞரான சுப்பையாவால் ஈடு கொடுக்க முடியவில்லை. பாண்டிச்சேரி விஜயத்தை ரத்து செய்ய வேண்டாம், அது பெரும் முக்கியத்துவம் உடையதென சுப்பையா சமாதானப்படுத்த உடனடியாகக் காந்திஜியும் சம்மதித்தார். பாண்டிச்சேரி ஒடியன்சாலையில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கம்யூனிச இயக்கத்திலும், தொழிற்சங்க இயக்கத்திலும்

          1934 ஜூலையில் சுப்பையா மெட்ராசில் அமீர் ஹைதர் கான் மற்றும் சுந்தரையாவைச் சந்தித்து மெட்ராசில் கம்யூனிஸ்ட் கட்சி நிர்மாணம் குறித்து விவாதித்தார். இரகசியமாக இரவில் முதலியார் பேட்டை, அரியாங்குப்பம் முதலிய பகுதிகளில் தொழிலாளர்களைச் சந்தித்துச் சுப்பையா தொழிற்சங்கங்களைக் கட்டியமைத்தார். ‘சுதந்திரம்’ என்ற தமிழ் மாத இதழை நடத்தி அதில் பிரதானமாகத் தொழிலாளர்களின் பிரச்சனைகளை இடம்பெறச் செய்து வெளியிட்டார். அந்த இதழ் 8000 பிரதிகள் அச்சாகி, மெட்ராஸ், சிலோன், தென்னாப்பிரிக்கா, மலாயா, பர்மா முதலான இடங்கள் வரை பரவியது.

வலிமையான பிரெஞ்ச் தொழிற்சங்கப் பொது மகாசம்மேளனம் (French TU CGT -- Confederation general du travail) அமைப்புடன் சுப்பையாவுக்குத் தொடர்பு ஏற்பட்டது. வரையறுக்கப்பட்ட வேலைநேரம் கோரி பாண்டிச்சேரி சவனா மில்லில் (பின்னர் சுதேசி ஆலை என அழைக்கப்பட்டது) காலவரையறையற்ற வேலைநிறுத்தம் தொடங்கப்பட்டது. 84 நாட்கள் அந்த வேலை நிறுத்தம் நடந்த பிறகு, ஆலையின் முதலாளி கோரிக்கைக்குப் பணிந்தார்; 1935ல் ஏப்ரல் 29ம் நாள் 10 மணி வேலைநேர ஒப்பந்தம் எட்டப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி ரோடியர் மில் மற்றும் கேஃபில் மில்களும்கூட (Gaeble mills பின்னர் பாரதி மில் ஆனது) ஒழுங்குக்கு வந்தன.

1935 ஜுன் 3ம் நாள் பாண்டிச்சேரியில் முதன் முறையாகத் தொழிலாளர்களின் பொதுக் கூட்டம் நடைபெற்றது. 1936ம் ஆண்டு அக்டோபர் 17ம் நாள் பாண்டிச்சேரிக்கு ஜவகர்லால் நேரு, தீரர் சத்திய மூர்த்தி, கர்மவீரர் காமராஜர் ஆகிய தலைவர்களைச் சுப்பையா விழுப்புரத்திலிருந்து காரில் அழைத்து வந்தார்.

பிரான்சில் மக்கள் முன்னணி வென்றது

          (பாசிசத்திற்கு எதிரான இடதுசாரிகள் மற்றும் மையவாத அரசியல் கட்சிகள் சேர்ந்த) மக்கள் முன்னணி (பாப்புலர் ஃப்ரண்ட்) 1936ல் பிரான்ஸ் தேர்தலில் வெற்றி பெற்று அரசமைத்தது; அது பாண்டிச்சேரியில் ஒரு சாதகமானச் சூழ்நிலையை உண்டாக்கியது. 1936 ஜூலையில் வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தொழிலாளர்களின் போராட்டம் பாண்டிச்சேரியில் நடந்தபோது இயந்திரத் துப்பாக்கிகள் தாங்கிய போலீஸ் படை கொண்டுவந்து குவிக்கப்பட்டது. துப்பாக்கிச் சூட்டில் 12 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். தொழிலாளர்கள் சவனா மில்லுக்குத் தீ வைத்தனர். சுப்பையாவும் ராமண்ணாவும் எப்படியோ தப்பிவிட்டனர். பிரெஞ்ச் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கேப்ரியல் பெரி இந்தப் பிரச்சனையைப் பிரான்ஸ் பாராளுமன்றத்தில் எழுப்பினார். லியான் ப்ளம்மின் மக்கள் முன்னணி அரசு பிரெஞ்ச் கவர்னர் சோலோமியாக்கைக் கண்டித்தது. இதனைத் தொடர்ந்து தோழர்கள் கிரி, குருசாமி, துரைசாமி மற்றும் சுப்பையா கவர்னருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தொழிலாளர்களின் 1936 ஜூலை 30 வரலாற்றுச் சிறப்பு மிக்கப் போராட்டம் பாண்டிச்சேரியில் 8 மணி நேர முறை அறிமுகமாக வழிவகுத்தது. 

பிரான்ஸ் தேசத்திற்கு விஜயம்

          நேரு கூறிய யோசனைப்படி, சுப்பையா 1937 மார்ச் மாதம் பிரான்சுக்குச் சென்றார். அவர் இல்லாத நேரத்தில் பாண்டிச்சேரி விவகாரங்களை எஸ்வி காட்டே மற்றும் எஸ்ஆர் சுப்பிரமணியம் கவனித்துக் கொண்டனர். சுப்பையா பிரான்சில் க்ளமெண்ஸ் டட், மேடம் அன்ட்ரே வையோலிஸ், கேப்ரியல் பெரி, பியாரே செமார்டு மற்றும் பல தலைவர்களைச் சந்தித்தார். 1941ல் நாஜிகளால் பெரி கொல்லப்பட்டார். அதுமட்டுமல்லாமல், ‘சோர்போன் பல்கலைக்கழக’த்தில் (1257 ஆம் ஆண்டுவாக்கில் இராபர்ட் தே சோர்போன் என்பவரால் நிறுவப்பட்ட கல்லூரி; தற்போது பாரிஸ் பல்கலைக்கழகம் என்றழைக்கப்படுகிறது) சுப்பையாவின் நண்பரும் பிரெஞ்ச் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரான மாஹேவைச் சேர்ந்த மாதவன் மைக்கேல் மற்றும் பலரும் நாஜிகளால் படுகொலை செய்யப்பட்டனர்.

          பிரான்சில் சுப்பையா இந்திய மாணவர்கள் அசோசியேஷனில் உரையாற்றினார். பிரெஞ்ச் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரானப் புகழ்பெற்ற மௌரிஸ் தொரேஸ் (Maurice Thorez) அவர்களைச் சந்தித்தார்.  

          பிரான்ஸ் தொழிலாளர் அமைச்சர் மௌரி மௌடேட் உடன் நடத்திய விவாதத்திற்குப் பிறகு லேபர் கோடு புரிதல் உடன்பாடு ஏற்பட்டது; இதனால் பாண்டிச்சேரியில் 1938 ஜனவரி 1ம் தேதி முதல் எட்டு மணி வேலைநேர முறை அமலாக்கச் சட்டம் நிறைவேற வழிவகுத்தது. ஆயிரக் கணக்கானோர் அன்புடன் வரவேற்க 1937ல் சுப்பையா தாயகம் திரும்பினார்.

          நேரு கூறிய யோசனைப்படி சுப்பையா பாண்டிச்சேரியில் 1937ல் ‘மகாஜன் சபா’வைத் தொடங்கினார் – மகாஜன சபா என்பது காங்கிரசுக்கு இன்னொரு பெயர். சுப்பையா வீட்டுக்கு வீடு சென்று காதி விற்பனை செய்தார். 1938ல் சூரத் நகருக்கு அருகே இருக்கும் ஹரிபுராவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டிலும் கலந்து கொண்டார்.

          நாஜி ஜெர்மனி 1940ல் பிரான்சை ஆக்கிரமித்தபோது பாண்டிச்சேரி பிரான்ஸ் தேசத்தோடு இருந்த தொடர்பை இழந்தது. அப்போது போவின் என்பவரால் நிர்வகிக்கப்பட்ட பாண்டிச்சேரி அநேகமாகப் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வந்தது.

          1941ல் சுப்பையா கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டார். அச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 400 கம்யூனிஸ்ட்களில் எஸ்வி காட்டே, ஜீவா, ஏகே கோபாலன், பாலதண்டாயுதம் முதலானவர்களும், பல காங்கிரஸ்காரர்களும் இருந்தனர்.

அனைவரும் 1942 செப்டம்பரில் விடுதலை செய்யப்பட்டனர்.

கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தேசிய ஜனநாயக முன்னணி அமைத்தல்

          விடுதலைக்குப் பிறகு சுப்பையா பாண்டிச்சேரியில் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பைக் கட்டினார். அவர் காரைக்கால், மாஹே மற்றும் சந்தன் நாகூர் விஜயம் செய்து அங்கே காளிச்சரண் கோஷ் மற்றும் பிற தலைவர்களைச் சந்தித்தார். 


(மேற்கு வங்கத்தின் 24 பர்கானா கோடலியாவில் பிறந்த காளிச்சரண் கோஷ், புகழ்பெற்ற விடுதலைப் போராட்ட வீரர், பத்திரிக்கையாளர், எழுத்தாளர், வழக்கறிஞர், பல தலைவர்களின் சரிதைகளை எழுதியவர். அவர் எழுதிய ‘சட்டமில்லாத சட்டங்கள்’ (The Lawless Laws") புத்தகத்தின் மூலம் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் சலசலப்பை ஏற்படுத்தியவர். ‘தி ரோல் ஆப் ஹானர்’ மற்றும் ‘வங்காளத்தில் பஞ்சம்’ போன்ற நூல்கள் பெரும் புகழ்பெற்றவை –மொழிபெயர்ப்பாளர் இணைத்தது)

          ‘சுதந்திர பிரெஞ்ச் கலகக் கிளர்ச்சியாளர்கள்’ (Free French Insurgents --FFI) குழுவினர் மற்றும் வெளிநாட்டில் நிறுவப்பட்ட ஜெனரல் டி கௌளி (General de Gaulle) பிரான்ஸ் அரசோடு தொடர்பு கொண்டார் சுப்பையா. FFI கிளர்ச்சியாளர்கள், சுப்பையாவின் நண்பரும் அல்ஜீயர்ஸ் பிரெஞ்ச் கல்லூரி பேராசிரியரான அடீஸ்எம் (Adiceam) அவர்களைப் பாண்டிச்சேரிக்கு அனுப்பி பரந்த அடிப்படையிலான நாஜி எதிர்ப்பு ‘காம்பேட்’ தாக்குதல் அமைப்பை நிறுவினார். சுப்பையா அக்குழுவின் தலைவராகவும் பேராசிரியர் லாம்பெர்ட்-சரவணே பொதுச் செயலாளராகவும் செயல்பட்டனர்.

          போர் முடிந்த பிறகு பாண்டிச்சேரியில் கம்யூனிஸ்ட் கட்சி, அனைத்து முற்போக்குச் சக்திகளையும் ஒன்றுதிரட்டி, தேசிய ஜனநாயக முன்னணி அமைத்தது. 1946 ஜூன் 26ல் கவுன்சல் ஜெனரல் சபைக்கு நடந்த தேர்தலில் 44 இடங்களில் 34 இடங்களைத் தேசிய ஜனநாயக முன்னணி வென்றது.

பிரான்ஸ் பாராளுமன்றத்திற்கு

          பேராசிரியர் லாம்பர்ட்-சரவணே தேசிய ஜனநாயக முன்னணியின் சார்பாகப் பிரெஞ்ச் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வ.சுப்பையாவும் பக்கிரிசாமியும் காரைக்காலில் இருந்து பிரெஞ்ச் பாராளுமன்றத்தின் மேல் சபையான ‘தி கவுன்சல் ல ரிபப்ளிக்’ அமைப்புக்கு 1947 ஜனவரி 26ல் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்தியாவின் சுதந்திரம்

          1947 ஆகஸ்ட் 9ல் (வெள்ளையனே வெளியேறு இயக்கம் போல) ‘பாண்டிச்சேரியை விட்டு வெளியேறு தினம்’ கொண்டாடப்பட்டது. 1947 ஆகஸ்ட் 15ல் இந்தியா விடுதலை அடைந்ததைப் பாண்டிச்சேரி பிராந்தியம் முழுவதும் சுப்பையாவின் முன்முயற்சியில் பெரும் அளவில் விழாவாகக் கொண்டாடப்பட்டது. சந்திரநாகூர் பகுதி மக்கள் இந்தியாவின் மூவர்ணக் கொடியை ஏற்றி அதன் மூலம் நிர்வாகத்தைக் கைப்பற்றியதை அடையாள பூர்வமாக உணர்த்தினர். ஆனால் அந்தப் பகுதியின் நிர்வாக அதிகாரம், ஒரு பொது வாக்கெடுப்பின் மூலம், முறைப்படி உடன்பாடு கண்டு 1952 மே 2ம் நாள்தான் (இந்திய அரசுக்கு) மாற்றித் தரப்பட்டது. (அப்பகுதி மேற்கு வங்கத்துடன் இணைக்கப்பட்டது)

சுதந்திரப் போராட்ட வீரர்கள் மீது தாக்குதல்

          பாண்டிச்சேரியில் சுப்பையாவின் இல்லம் தாக்கப்பட்டு 1950 ஜனவரி 14ல் தீ வைத்து எரிக்கப்பட்டபோது, சுப்பையா தலைமறைவு வாழ்வில் இருந்தார்; அந்த இல்லம்தான் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமாகவும் ‘பிரெஞ்ச் இந்திய லேபர் ஸ்டோரா’கவும் செயல்பட்டது. பாண்டிச்சேரி இணைப்புக்குழு அமைக்கப்பட்டது. இந்தோ சீனாவிலிருந்து பிரான்ஸ் தனது சில துருப்புக்களைப் பாண்டிச்சேரிக்கு மாற்றத் துவங்கியிருந்தது. 1954ல் வியட்நாமுடன் டைன் பைன் ஃபூ சண்டையில் கடுமையாக அடிவாங்கிய பிறகு பிரான்ஸ் பாண்டிச்சேரிக்குப் பலரையும் மாற்றியது; ஆனால் துருப்புக்களின் உள்ளவுணர்வு உறுதி பாதிக்கப்பட்டு மிகவும் தாழ்ந்த நிலையில் இருந்தது.

          அஜாய் கோஷ் தலைமையிலான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களைச் சுப்பையா சந்தித்தார்; 1954 ஏப்ரல் 7ம் நாள் ‘நேரடி நடவடிக்கை’ தொடங்கியது. கிராமங்கள் விடுதலையாயின. பாண்டிச்சேரி எல்லைகளில் சிபிஐ கட்சியின் மேஜர் ஜெய்பால் சிங் போராளிகளுக்குப் பயிற்சி அளித்தார். மண்ணடிப்பேட்டை கம்யூன் முதன் முதலாகச் சுதந்திர அரசை அறிவித்து, மூவர்ணக் கொடியை ஏற்றியது. அடுத்தடுத்து ஒவ்வொரு கம்யூனாக விடுதலை பெறத் தொடங்கின.

பாண்டிச்சேரியில் மூவர்ணக் கொடி

        1954ம் ஆண்டு ஜூலை 1 தேதி ஏனாமும், ஜூலை16ல் மாஹேயும் தங்களை விடுதலை பெற்றதாகப் பிரகடனப்படுத்தின. முதன் முறையாகப் பாண்டிச்சேரி முழுவதும் மூவர்ணக் கொடி ஏப்ரல் 1954ல் பறக்கத் தொடங்கி, பாண்டிச்சேரி மண்ணை இந்தியத் தாய்நாட்டோடு இணைக்கும் கோரிக்கை வேகம் பெறத் தொடங்கியது. 1954 ஆகஸ்ட் 9ம் நாள் முழு வேலைநிறுத்தம் அனுசரிக்கப்பட்டு, பிரெஞ்ச் அதிகாரிகள் மற்றும் நிறுவனங்கள் சுற்றி வளைக்கப்பட்டன. நேருவும் பிரான்சின் பிரதமர் மென்டெஸ் பிரான்சும் அமைதியான முறையில் அதிகார மாற்றம் குறித்து விவாதித்தனர்.

          1954 அக்டோபர் 18ல் முனிசிபல் கவுன்சிலர்கள் 178 பேரில் 170 கவுன்சிலர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் பாண்டிச்சேரி இந்தியா இணைப்பை அறிவித்தனர். 1954 அக்டோபர் 21ல் உடன்பாடு காணப்பட்டு, அதிகார மாற்றம் 1954 நவம்பர் 1தேதி உத்யோகபூர்வமாகச் செய்யப்பட்டது.

          இந்தியாவுக்கான கான்சல் ஜெனரல் கேவல் சிங் தனியே சிறப்பாக மக்கள் தலைவர் வ சுப்பையா அவர்களை விடுதலைப் போராட்ட முகாமில் சந்தித்து, நிகழ்வுகளின் வளர்ச்சிப் போக்குகளை அவருக்கு விளக்கினார்.

          கோட்டக்குப்பத்திலிருந்து சுப்பையா அவர்கள், தனது தாய் மற்றும் மனைவி தோழியர் சரஸ்வதியுடன் அலங்கரிக்கப்பட்டச் சிறப்பு இரதத்தில் பாண்டிச்சேரிக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். பிரான்ஸ் தேசத்துக் கொடி கீழிறக்கப்பட்டு, ராஜ் நிவாசில் (ஆளுநர் மாளிகை) சுப்பையாவுக்குத் தனித்த சிறப்பு மரியாதை செய்து, மூவர்ணக்கொடி ஏற்றி வைக்கப்பட்டது.

சுதந்திரத்திற்குப் பிறகு

1964 முதல் 1969 வரை பாண்டிச்சேரி சட்டமன்றத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்றக் குழுவின் தலைவராக வ சுப்பையா செயல்பட்டார். 1969 –73 காலகட்டத்தில் அஇஅதிமுக கூட்டணி அரசில் அவர் விவசாயத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். அவருடைய மனைவி தோழியர் சரஸ்வதி சுப்பையாவும் கூட சிபிஐ கட்சி சட்டமன்ற உறுப்பினர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினராகவும் சுப்பையா பணியாற்றியுள்ளார்.

மக்கள் தலைவர் எனப் பேரன்போடு அழைக்கப்படும், பாண்டிச்சேரியின் விடுதலைக்கு வித்திட்ட, தோழர் வ சுப்பையா தமது 82வது வயதில் 1993 செப்டம்பர் 10ம் நாள் இயற்கையெய்தினார்

. அவருக்கு மரியாதை செய்யும் வகையில் அவரது நினைவுத் தபால் தலை வெளியிட்டு இந்திய அரசு சிறப்புச் செய்தது. சுதந்திரப் போராட்ட வீரருக்கான தாமிரப்பட்டய விருது பெற்ற பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரியவர்.

வாழ்க மக்கள் தலைவர் வ சுப்பையா புகழ்!

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

 

No comments:

Post a Comment