Friday, 24 October 2025

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 112 -- ஷிவ் வர்மா –பகத்சிங்கின் சகா

 கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 112


ஷிவ் வர்மா –பகத்சிங்கின் சகா,
உ பி --யில் கட்சியைக் கட்டியவர்

அனில் ரஜீம்வாலே

ஷிவ் வர்மா, நாம் நன்கு அறிந்த சர்தார் பகத்சிங்கின் தோழர், ஹிந்துஸ்தான் சோஷலிஸ்ட் புரட்சிகர அமைப்பின் அமைப்பாளர், அந்தமான் செல்லுலார் சிறையில் நீண்ட காலம் கைதியாக இருந்தவர்,  உ.பி மற்றும் பிற இடங்களில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை வளர்த்தவர்களில் ஒருவராவார்.

ஷிவ் வர்மா உபி ஹர்தோய் மாவட்டம், கட்டேளி கிராமத்தில் 1904 பிப்ரவரி 9ம் நாள் பிறந்தார். தந்தை ஸ்ரீ கன்னையா லால் வர்மா, தாயார் திருமதி குந்தி தேவி. குழந்தைகள், ஷிவ் உள்ளிட்ட ஆறு பேர். அரசு ஊழியரான அவரது தந்தை பகுதிநேரம் விவசாயத்தில் ஈடுபட்டவர். அவர் அரசு வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஆயுர்வேத மருத்துவத் தொழிலை மேற்கொண்டார்.

ஷிவ் கான்பூர் டிஏவி கல்லூரி மாணவர். அவர் தனது தொடக்க அரசியல் உணர்வைப் பெற்றிட தந்தை வழி  சகோதரர் காரணமாக இருந்தார்.

சுதந்திரப் போராட்டத்தில் நுழைவு

15 வயது முதலே ஷிவ் அரசியல் இயக்கங்களின் பால் ஈர்க்கப்பட்டார். அப்போது அவர் எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார். அவரது மூத்த சகோதரனும் மூன்று நண்பர்களும், ஹர்தோய் பகுதியில் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்த, முதலாவது சத்யாகிரகிகள். அவர்களது உதாரணத்தைப் பின்பற்றி ஷிவ் வர்மாவும் படிப்பை விட்டு விட்டு 1920 ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்தார்.

அந்த இளம் வயதிலேயே ஷிவ், ஹர்தோய் காங்கிரஸ் அலுவலகப் பொறுப்பாளர் ஆனார். இறுதியில் அவர் மாவட்டக் காங்கிரஸ் செயலாளராக அறிவிக்கப்பட்டார்.

பகிஷ்கரிப்பு இயக்கத்தில் அவர் தீவிரமாகப் பங்கேற்றார். ஒத்துழையாமை இயக்கம் திரும்பப் பெறப்பட்டதும் பெரும் ஏமாற்றமடைந்த ஷிவ், முற்றாகக் காங்கிரசை விட்டு வெளியேறினார். அவரது மூத்த சகோதரர் ஒரு சன்னியாசியாக மாறினார். கயா பிரசாத் பிரம்மச்சாரி என்பவருடன் ஷிவ்வுக்குத் தொடர்பு ஏற்பட்டது. அவர் புரட்சிகரப் புத்தகங்களைத் தந்தார்.

1922--23ல் உ.பி அவந்த் பகுதியில் நடைபெற்ற ‘விவசாயிகளின் ஒற்றுமை இயக்கத்தில் (ஏகா மூமெண்ட்)  ஷிவ் தீவிரமாகப் பங்கேற்றார். ஹரிஜனத் தலைவர் மாதரி பாசி தலைமையில் நடைபெற்ற அந்த இயக்கம் ஹர்தோய், உனாவ், ஃபரூகாபாத் முதலிய பகுதிகளுக்கும் பரவியது. இதன் மத்தியில் ஷிவ் ஒரு புரட்சிகர குழுவை அமைக்க   பாசியும் உறுப்பினரானார். அந்த இயக்கம் முடிந்த பிறகு அவர் தனது படிப்பைத் தொடர்ந்தார்; 1925ல் ஜெய்தேவ் கபூர் உடன் அவர் கான்பூர் வந்தார்.

கான்பூரில்தான் சச்சீந்திரநாத் சன்யால், சுரேஷ் சந்திர பட்டாச்சாரியா மற்றும் பிறரால் ‘ஹிந்துஸ்தான் குடியரசு அசோசியேஷன் அமைக்கப்பட்டது. பின்னர் ஷிவ் வர்மா, சுரேந்திரநாத் பாண்டே, பிஜாய் குமார் சின்ஹா, ஜெய்தேவ் கபூர் மற்றும் பிறரும் அதில் இணைந்தனர். தலைமறைவு வாழ்வில்  ஷிவ் வர்மாவின் பெயர் ‘பிரபாத்

பிஜாய் குமார் சின்ஹா, ஷிவ் வர்மாவை ராதா மோகன் கோகுல்ஜியிடம் அறிமுகம் செய்து வைத்தார்; அவர், தீவிரமான இதழியல் செயல்பாட்டாளர், எழுத்தாளர் மற்றும் 1925 கான்பூரில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தொடக்க மாநாட்டிற்காகத் தீவிரமாகப் பணியாற்றியவர்களில் ஒருவராவார். அந்த நேரத்தில் நடத்தப்பட்ட அகில இந்தியக் காங்கிரஸ் கட்சி அமர்வில் ஷிவ் ஒரு தன்னார்வத் தொண்டராக இணைந்தார்.

கோகுல்ஜி உடன் ஷிவ்வின் சந்திப்பு 1926 டிசம்பரில் நடந்தது. ஒரு புத்தகத்தைத் திரும்பித் தர பிஜாய் தன்னுடன் அவரை அழைத்துச் சென்றிருந்தார். கோகுல் ஜி ஏழை மக்களும் தொழிலாளர்களும் நிறைந்த இடத்தில் வாழ்வது வழக்கம். ஷிவ் அவரை 1925ல் நடைபெற்ற காங்கிரஸ் அமர்வில் போகிற போக்கில் நொடிப் பொழுது பார்த்ததுதான்.

ராதா மோகன் ஜி, ஷிவ் வர்மாவைக் கருத்தியலில் பயிற்றுவித்தார். ’கம்யூனிசம் என்றால் என்ன?’ என்ற அவர் எழுதிய புத்தகத்தைப் படிக்கக் கொடுத்தார். புத்தகத்தைத் தரும்போது அவர் ஷிவ்விடம், ‘அப்புத்தகத்தை ஒருமுறை அல்லது இரண்டு முறை அல்ல, பலமுறை படிக்குமாறு’ கூறினார்.  அப்படி அதை முழுமையாகப் படிக்காமல் தன்னிடம் மீண்டும் திரும்ப வேண்டாம் என ஷிவ்விடம் கேட்டுக் கொண்டார்! மேலும், தனது கேள்விகளுக்குப் பதில் அளிக்க முழுமையான தயாரிப்புடன் அவர் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

அதைத்தான் ஷிவ் செய்தார். ஆழ்ந்து படித்த பிறகு அவர் புத்தகத்தைத் திரும்பக் கொடுத்தார்; கோகுல் ஜி கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் வெற்றிகரமாகப் பதில் அளித்தார்: கோகுல் ஜி, “சபாஷ், நீ தேர்வில் வென்று விட்டாய்!” என்றார். கோகுல் ஜி பெருமளவில் சேகரித்து வைத்திருந்த நூல்களைப் படிக்க ஷிவ் வர்மாவை ஊக்கப்படுத்தினார். அவரது நூலகத்திலிருந்து பல பல புத்தகங்களைப் படித்தார், அவர்கள் சோசலிசம் குறித்து விவாதித்தனர்.

மேலும் பல புரட்சிகர நடவடிக்கைகளிலும் ஷிவ் ஈடுபட்டார். விலை உயர்ந்த இரண்டு பிஸ்டல்களைப் பெற உதவியவர் கோகுல் ஜி. ஒரு பிஸ்டல் மணி பானர்ஜியாலும், மற்றொன்று அலகாபாத் சிஐடி-யான எஸ்.பி. பானர்ஜியாலும் பயன்படுத்தப்பட்டன. மற்றொன்று சாண்டர்சைச்  சுடுவதற்குப் பகத்சிங்  பயன்படுத்தியது.

    1925ல் புகழ்பெற்ற ககோரி (ரயில் கொள்ளை* ) நிகழ்வுக்குப் பிறகு சந்திரசேகர ஆசாத் ஜான்சியில் தங்கினார். அவர் கான்பூருக்கு வந்து ராதாமோகன் கோகுல் ஜியுடன் தங்கினார். இங்குதான் ஷிவ் வர்மா ஆஸாத்தை முதல் முறை சந்தித்தார். அவர்கள் அனைவரும் ராம் பிரசாத் பிஸ்மில் உடன் தீவிரத் தொடர்பு கொண்டிருந்தனர். 
 [*இது, 1925 ஆகஸ்ட் 9ல் இந்துஸ்தான் குடியரசு அமைப்பைச் சேர்ந்த ராம் பிரசாத் பிஸ்மில். சந்திரசேகர ஆசாத் முதலான இந்தியப் புரட்சியாளர்கள், ககோரி ரயில் நிலையத்தில் 8ம் எண் ரயிலை நிறுத்தி அதில் கொண்டு செல்லப்பட்ட பிரிட்டிஷ் அரசு நிதியை –தங்கள் புரட்சிகர நடவடிக்கைகளுக்காக – துணிச்சலாகக் கொள்ளையடித்த நிகழ்வு. பின்னர் முக்கிய புரட்சியாளர்கள் சிலருக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது –மொழிபெயர்ப்பாளர் கூடுதல் இணைப்பு]  

1927 ஜனவரியில் டிஏவி கல்லூரியில் ஷிவ் வர்மா பகத்சிங்கைச் சந்தித்தார். அப்போது பகத்சிங் புரட்சியாளர்கள் அனைவரையும் சந்திக்க ஒரு வாரம் கான்பூர் வந்திருந்தார். பகத்சிங் கற்றலில் மிக ஆர்வம் உடையவராகவும் ஏராளமான நூல்களைப் படிப்பவராகவும் ஷிவ் அவரைக் கண்டறிந்தார் அவர் பெரும்பாலும் ஷிவ் அறையில் தங்கினார். விக்டர் க்யூகோ, டால்ஸ்டாய், தஸ்தயேவ்ஸ்கி, கார்க்கி, பெர்னாட்ஷா, சார்லஸ் டிக்கன்ஸ் மற்றும் பலர் எழுதிய நூல்களைப் பகத்சிங் படித்தார். 1925ல் கணேஷ் சங்கர் வித்யார்த்தி வெளியிட்டு வந்த ‘பிரதாப்’ (புகழ்/ வலிமை) பத்திரிக்கையில் அவர் முன்பு பணியாற்றியுள்ளார். மௌலானா ஹஸ்ரத் மொஹானி அவர்களையும் சந்தித்த ஷிவ் அவர் குறித்து எழுதினார்.

பிஸ்மில் உடன் சந்திப்பு

ராம் பிரசாத் பிஸ்மில் 1927 டிசம்பர் 19 தூக்கிலிடப்பட இருந்தார். அதற்கு ஒரு நாள் முன்பு கோரக்பூர் மாவட்டச் சிறைக்கு அவரது தாயார் மூல் ராணி தேவி மகனை இறுதி முறையாகப் பார்க்க வந்தார். ஏற்கனவே அங்கே இருந்த ஷிவ், மூல் ராணியை நெருங்கி பிஸ்மில்லைச் சந்திக்கத் தனக்கு உதவும்படி வேண்டினார். உடனே அதற்கு ஒப்புக் கொண்டவர் அவரை பிஸ்மில் ஒன்றுவிட்ட சகோதரன் ஷங்கர் பிரசாத் போல நடிக்கக் கூறி, தன்னை அவரது ‘மௌசி (தாயின் சகோதரி) எனக் குறிப்பிட்டார்! தாய்க்கும் மகனுக்குமான இறுதி சந்திப்பு அது என்பதால் சிறிது நேரம் அவர்கள் தனியே விடப்பட்டனர். அதன் பிறகு அந்தத் தாய் ஷிவ் வர்மாவை இந்துஸ்தான் குடியரசு அமைப்பின் (HRA) உறுப்பினர் என்று குறிப்பிட்டு அவருடன் பிஸ்மில்லைப் பேசக் கூறினார். பிஸ்மில்லும் ஷிவ் வர்மாவும் சிறிது நேரம் உரையாடினர்.

அந்தமான் சிறையில் கடுமையான சித்திரவதைகள் மற்றும் கட்டாய உணவு புகட்டல் உள்பட பல கொடூரங்களின் காரணமாக மரணமடைந்த மகாவீர் சிங் ஒரு பெரும் புரட்சிகர கைதி. 1928 ஜூனில் ஷிவ் வர்மாதான் அவரை ஹிந்துஸ்தான் குடியரசு அமைப்பில் (HRA) உறுப்பினராகச் சேர்ந்தார்.

1928 நவம்பரில் நூரிகேட்டுக்கு அருகில் ஆக்ராவில் அமீர் சந்த் என்ற புனைப் பெயரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தபோது ஷிவ் வர்மா வெடிகுண்டுகள் தயாரிப்பதில் பயிற்சி பெற்றார்.

புகழ்பெற்ற ககோரி சதி வழக்கில் (ரயில் கொள்ளை) ஜோகேஷ் சந்திர சாட்டர்ஜி 1927-ல் ஃபதேக்ஹர்க் மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சாட்டர்ஜியைச் சிறையிலிருந்து வெளியே கொண்டு வர அவரது ஒப்புதலைப் பெறுவதற்கான பொறுப்பு ஷிவ் வர்மா மற்றும் விஜய் குமார் சின்ஹாவிடம் அளிக்கப்பட்டிருந்தது. அவர்கள் ஃபதேக்ஹர்க் விட்டு புறப்பட்ட பிறகு 1928 மார்ச் 3ல் போலீஸ்காரர்கள் இந்த இருவரையும் தேடி வந்தனர். இதையறிந்த இருவரும் உடனடியாக அந்த இடத்தை விட்டு நீங்கி கான்பூர் செல்ல முடிவு செய்தனர். கான்பூருக்கு ரயில் புறப்பட்டதும் இரண்டு போலீஸ்காரர்கள், ஷிவ் மற்றும் பிஜாய் முன்பதிவு செய்த அதே பெட்டியில் வந்தமர்ந்தனர். இதை மோப்பம் பிடித்து ஜலாலாபாத் ஸ்டேஷனுக்கு அடுத்து அவர்கள் ரயிலில் இருந்து குதித்துத் தப்பி சென்றனர். அவர்களைப் பிடிக்கத் தொடர்ந்து ஓடிய  போலீஸ்காரர்கள் அந்த முயற்சியில் விழுந்து காயமடைந்ததுதான் மிச்சம்.

HSRA அமைப்பில்

ஷிவ் விரைவாக சோசலிசம் நோக்கி நகரத் தொடங்கினார். அவர் தனது படிப்பை விட்டு விட்டு புரட்சிகரப் பணியில் ஆழ்ந்தார். (பின்னர் ஹிந்துஸ்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு, HSRA, என்று மாற்றப்பட்ட) ஹிந்துஸ்தான் குடியரசு அமைப்பில் (HRA) இணைந்தார். விரைவில் ஷிவ் வர்மா, 1928 செப்டம்பர் 8 மற்றும் 9ல் டெல்லி பெரோஷா கோட்லா கோட்டை இடிபாடுகளில் புரட்சியாளர்களால் அமைக்கப்பட்ட HSRA மத்தியக் குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டார். அவர் உ பி கிளையின் அமைப்பாளர். ‘சந்த்(‘Chand’) இதழுக்காக வர்மா பல்வேறு கட்டுரைகளை எழுதினார்.

பகத்சிங் மற்றும் பட்டுகேஷ்வர் மத்திய அசெம்பிளியில் குண்டுகளை வீசுவதற்கு முன்பு, சந்திரசேகர் ஆசாத் ஷிவ்விடம் அவர்களை நன்கு கவனித்துக் கொள்ளும்படி அறிவுறுத்தினார்.

ஜெய்தேவ் கபூர், கயா பிரசாத் மற்றும் ஷிவ் வர்மாவிடம் சஹாரன்பூரில் குண்டு தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கும் பொறுப்பு தரப்பட்டது. அவர்கள் டிஸ்பென்சரி நடத்தும் பெயரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தனர். அவர்களிடம் பணம் இல்லாததால் பணத்தைத் திரட்ட காலம் எடுத்துக் கொண்டனர்; மேலும் பணத்துக்கு ஏற்பாடு செய்ய கயா பிரசாத் கான்பூர் சென்றார். அவர்களின் நடவடிக்கைகளைச் சந்தேகித்த போலீஸ் அந்த இடத்தைச் சோதனை நடத்தி வெடிகுண்டுகள் மற்றும் சில பொருட்களுடன் அவர்களைக் கைது செய்தனர். பின்னர் கயா பிரசாத்தும் கைது செய்யப்பட்டார், அது மே 1929. 

லாகூர் மத்தியச் சிறைக்கு அனுப்பப்பட்ட அவர்களுக்கு எதிராக விசாரனை நடத்தப்பட்டு 1930ல் லாகூர் சதி வழக்கின் கீழ் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அரசியல் செயல்பாட்டாளர்களுக்குச் சிறையின் நிலைமைகளை மேம்படுத்தக் கோரி சரித்திர புகழ் பெற்ற 63 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஷிவ் வர்மா பங்கேற்றார்; அதில் யதீந்திர நாத் தாஸ்  (‘ஜத்தின் தாஸ்’ என்ற ஜதீந்திர நாத் தாஸ்) மரணமடைந்தார்.

         உண்ணாவிரதம் காரணமாக விரைவில் தாஸின் உடல்நிலை பலவீனமடைந்தது. 15 நாட்களுக்குப் பிறகு உணர்விழந்த நிலையில் அதிகபட்ச காய்ச்சலுடன் சிறை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சிறையில் காய்ச்சல் நிமோனியா ஆனது. கூடுதல் ஜுரத்தில் பல நாட்கள் படுக்கையில் புரண்டு தவித்தார். மார்பில் தைக்கும் வலியால் துடித்தவர் ஒரு வினாடி கூட இமை மூடி தூங்க முடியவில்லை. சில மருந்துகளை உட்கொள்ள மருத்துவர்கள் கெஞ்சியபோது மறுத்தார். பலகீனமான குரலில் அவர், ‘எல்லா மருந்துகளையும் மறுக்க அவர்கள் முடிவெடுத்துள்ளதாகவும், அந்த முடிவிலேயே தானும் உறுதியாக நிற்கப் போவதாக பதில் அளித்தார்.

ஷிவ் வர்மா அதில் பிழைத்தது, ஓர் அதிசயம். அவர் எப்பொழுதும் அமைதியாகத் துணிச்சலை வெளிப்படுத்துவார். ஒருமுறை நீதிமன்றத்தில் போலீசால் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்ட அவர் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

நீதிமன்ற விசாரணை நிகழ்வுகளைக் கூர்ந்து கவனமுடன் பார்ப்பது அவர் வழக்கம். பின்னர் குறுக்கு விசாரணையின்போது அவற்றைப் பயன்படுத்தி அரசு தரப்பு வழக்கறிஞர் வாதங்களையும் சாட்சிகளையும் நார்நாராகக் கிழித்தெறிவார். குறிப்பாக அவர் அப்ரூவர் ஆன பிறழ் சாட்சிகளிடம் கடுமையான கேலி கிண்டலுடன் வினாக்களைத் தொடுப்பார்; அப்போது அவர்கள் உடல் நடுங்கி கண்கள் பட படக்க தங்கள் முந்தையக் கூற்றுடன் முரண்பட பதிலளிக்க வைத்து விடுவார். நீதிமன்ற அறையில் குழுமிய பார்வையாளர்கள் மத்தியில் இது சிரிப்பலைகளை எழுப்பும்.

உண்ணாவிரதப் போராட்டம்போது அரசு அதிகாரிகள் அளித்த உறுதி மொழிகளில் இருந்து அரசு பின் வாங்கியது. லாகூர் வழக்கின் அனைத்துக் கைதிகளும் ‘சிவகுப்பு சிறையில் அடைக்கப்பட்டு கடும் மிருகத்தனத்துடன் நடத்தப்பட்டனர்.

ஷிவ் மெட்ராஸ் சிறைகளுக்கு மாற்றப்பட்டார். ராஜமுந்திரி சிறையில் இருந்தபோது அவரும் ஜெய்தேவ் கபூரும் ஐந்தரை மாதங்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். அது அல்லாமலும் எண்ணற்ற சண்டைகளும் நடப்பதுண்டு.

அந்தமானில்

இறுதியாக ஷிவ் வர்மாவும் பிற கைதிகளும் இழிவுப் பெயர் பெற்ற, மனிதத்தன்மை அற்ற அந்தமான் செல்லுலார் சிறைக்கு அனுப்பப்பட்டனர். அங்கே நிலைமைகள் படுமோசம். ஷிவ் அங்கே கம்யூனிஸ்ட் ஒருங்கிணைப்பு குழுவின் அங்கமானார், பிஜாய் குமார் சின்ஹா அதன் நிறுவனர்களில் ஒருவர். அந்தமானில் இருந்தபோது கம்யூனிசத்திற்கு மாறிய ஷிவ் உண்மையில் அதன் முன்னணி அமைப்பாளர்கள், தலைவர்களில் ஒருவர்.

1938 வரை ஜெய் தேவ் உடன் ஷிவ் வர்மா அந்தமானில் இருந்தார். பிற கைதிகளில் பெரும்பான்மையோர் விடுதலை செய்யப்பட்டனர்; ஆனால் அந்தமான் தீவில் இருந்து இந்திய நிலப் பகுதிக்குக் கொண்டுவரப்பட்ட பின்பும் ஷிவ் மற்றும் ஜெய்தேவ் விடுதலை செய்யப்படவில்லை. 1946-ல்தான் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். 1929 மற்றும் 1946 இடைப்பட்ட காலத்தில் ஷிவ் வர்மா பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டு, மொத்தம் 16 ஆண்டுகள் 9 மாதங்கள் மற்றும் ஒரு வாரம் சிறைவாசத்தில் கழித்தார். நாடு விடுதலையான பிறகும் பலமுறை அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையிலிருந்து விடுதலை குறித்து

சில நிபந்தனைகளை ஏற்றால், ஷிவ் வர்மா மற்றும் ஜெய் தேவ் கபூர் இருவரையும் விடுவிக்க பிரிட்டிஷ் அரசு முன் வந்தது. ஆனால் அந்நிபந்தனைகளை ஏற்க அவர்கள் மறுத்து விட்டனர். இது, அந்தமானிலிருந்து விடுவிக்க வேண்டுகோள் மனுக்களை எழுதி; அரசியலில் இருந்து விலகி இருக்க எல்லாவிதமான வாக்குறுதிகளையும் அளித்து; வெளியே வந்த, சவார்க்கர் போன்ற சில கைதிகளின் செயல்களில் இருந்து முற்றிலும் மாறான தன்மை உடையது!

ஹர்தோய் மத்திய சிறையில் இருந்து பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு,  1946 பிப்ரவரி 4ல் ஷிவ் மற்றும் ஜெய்தேவ், ‘நாங்கள் ஏன் இன்னும் பிடித்து வைக்கப் பட்டிருக்கிறோம் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லைஎன்று எழுதினர். 1920களின் தொடக்கத்திலிருந்து பஞ்சாப், இராணுவச் சட்ட கைதிகள் மற்றும் பிற ஆயுள் தண்டனை பெற்ற கைதிகள் விடுவிக்கப்பட்டு விட்டனர். மொத்தம் ஏறத்தாழ 20 ஆண்டுகளை அவர்கள் சிறையில் கழித்து விட்டனர். இருந்தும் அவர்கள் எந்த மன்னிப்பையும் கோரவில்லை. இந்திய விடுதலை நாள் நெருங்கி வர, தாங்கள் எந்தவித நிபந்தனையும் இன்றி விடுவிக்கப்படுவோம் என்று அவர்கள் உறுதியாக நம்பினர்.

இறுதியாக, பிரிட்டிஷ் அரசு அவர்களை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டி வந்தது. நாட்டின் பல மூலைகளில் இருந்த லாகூர், ராஜமுந்திரி, அந்தமான், ஹர்தோய், நைனி, (கல்கத்தா அருகே) டம் டம், லக்னோ முதலிய பல்வேறு சிறைகளில் அவர்கள் அடைக்கப்பட்டனர். சிறைவிட்டுச் சிறை என ஆர்வத்தை தூண்டும் பயணம் அல்லவா இது!

விடுதலைக்குப் பிந்தைய காலம்

(அந்தமான் தீவில் இருந்து) இந்திய மண்ணிற்கு வந்த பிறகு ஷிவ் வர்மா இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாட்டாளர் ஆனார். அந்தமானில் அவர், கம்யூனிஸ்ட் ஒருங்கிணைப்புக் குழுவில் வகுப்புகளை நடத்துவது மற்றும் கையெழுத்துப் பிரதி இதழ் நடத்துவதில் உதவுவது உள்ளிட்ட ஏராளமான பணிகளை ஆற்றினார். உத்திரப் பிரதேசத்தில் அவர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரபல தலைவரானார்.

1948ல் சிபிஐ உ.பி. மாநிலக் குழுவின் செயலாளராக ஷிவ் வர்மா தேர்ந்து எடுக்கப் பட்டார். அது சிபிஐ-யில் பிடிஆர் பாதையின் காலம். மற்றவர்களைப் போலவே உ.பி. கட்சி குழுவும் தன்னைத் தானே அரித்து அழிக்கும் ஆழமான உட்கட்சி போராட்டத்தில் ஈடுபட்டது. கட்சியில் நிலவிய சூழ்நிலையை ஷிவ் விரும்பாவிட்டாலும் தொடர்ந்து பணி செய்தார்.

1951ல் உ.பி. கட்சிப் பொறுப்புகளில் இருந்து அவர் நீக்கப்பட்டார். அந்தத் தருணத்தில் கட்சியில் நிகழ்ந்துவந்த தேவையில்லாத மயிர் பிளக்கும் கூர்மையான விவாதங்களுடன் அல்லது அதன் பிறகும்கூட அத்தகைய விவாதங்களில் ஒருபோதும் அவர் மகிழ்ச்சியாக இல்லை.

சிபிஐ-யின்  நயா சவேரா (“புதிய விடியல்) என்ற கட்சி பத்திரிக்கையின் ஆசிரியராக ஷிவ் வர்மா இருந்தார்.

1948, 1962 மற்றும் 1965 ஆண்டுகளின்போது அவர் பலமுறை சிறை சென்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1964ல் பிளவுபட்டது. பிளவுக்குப் பிறகு ஷிவ் வர்மா சிபிஐ (எம்) கட்சியில் சேர்ந்தார். தேர்தல் டிக்கெட்டுக்காக நடந்த உட்கட்சி மோதல்களில் மெல்ல மெல்ல அவர் எதிர்ப்பையும் அவமானங்களையும் சந்தித்தார். 1971 தேர்தலில் எப்படியோ ஷிவ் வர்மாவுக்குக் கான்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து போட்டியிட டிக்கெட் கிடைத்தது; ஆனால் அவரை எதிர்த்துச் சுயேச்சையாகப் போட்டியிட்ட அதிருப்தி கம்யூனிஸ்ட் வேட்பாளர் எஸ் எம் பானர்ஜி அவரைத் தோற்கடித்தார்.

அவர் லோக் லஹர் (மக்கள் அலை அல்லது மக்கள் இயக்கம்) என்ற சிபிஎம் கட்சி ஹிந்தி

நாளிதழின் ஆசிரியராக அவர் நியமிக்கப்பட்டார். மேலும் ‘நயா பாத் (புதிய பாதை)  என்ற ஹிந்தி இதழின்ஆசிரியரும் ஆவார். HSRA இயக்கத்தின் புகழ்பெற்ற பெண் புரட்சியாளர், ‘துர்கா பாபி (மதினி)’ என்று மரியாதையுடன் அழைக்கப்பட்ட துர்காவதி தேவியால் தொடங்கப்பட்ட லக்னோ மாண்டிசோரி சொசைட்டியின் வாழ்நாள் அறங்காவலர் அவர். மேலும் லக்னோவில் ‘தியாகிகள் நினைவு மற்றும் சுதந்திரப் போராட்ட ஆய்வு மையம்ஒன்றை அவர் நிறுவினார்.

புரட்சியாளர்கள் பற்றிய கட்டுரைகள், புகைப்படங்கள் போன்றவற்றைத் திரட்ட அவர் விரிவாகப் பயணம் செய்தார் –அதற்காக அவர் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம் நூலகத்திற்கும் கூட சென்றார்.

முதுமை பிரச்சனைகள் காரணமாக ஷிவ் வர்மா 1997 ஜனவரி10ல் இயற்கை எய்தினார்.

ஹர்தோய் முனிசிபல் கவுன்சில், இந்தியப் புரட்சியாளர்களுக்கு அர்ப்பணித்து ‘ஷாஹீத் உத்தியான் (ஷாஹீத் பூங்கா)வில் ஷிவ் வர்மா, ஜெய்தேவ் கபூர் மற்றும் ஹரி பகதூர் ஸ்ரீவஸ்தவ் மூவருக்கும் சிலைகள் நிறுவ தீர்மானம் நிறைவேற்றியது.

தி லெஜெண்ட் ஆப் பகத்சிங் திரைப்படத்தில் ஷிவ் வர்மா பாத்திரத்தைக் கபில் சர்மா ஏற்று நடித்தார்.

எழுத்துப் படைப்புகள்

அவரது நூல்கள் சுதந்திரப் போராட்ட வரலாற்றின் முக்கியமான ஆதார ஊற்று. அவரது ‘நினைவலைகள் (‘ஸ்மிருத்தியான்’) நூலில் பகத்சிங், சந்திரசேகர ஆசாத், ராஜகுரு, சுக் தேவ், மகாவீர் சிங், யதீந்திரநாத் தாஸ் மற்றும் பகவதி சரண் வோரா குறித்த மதிப்புமிக்க, நேரடியாக

அறிந்து உணர்ந்த தகவல்களை ஷிவ் வர்மா அளித்துள்ளார். அந்த நூல் எல்லா வகையிலும் ஹிந்துஸ்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு மற்றும் அந்தமானில் கம்யூனிஸ்ட்கள் ஒருங்கிணைப்பு குறித்த வரலாற்று நூலாகத் திகழ்கிறது!

புரட்சியாளர் ஷிவ் வர்மா புகழ் வாழ்க!

--நன்றி : நியூ ஏஜ் (2024 ஜூலை 7 –13)

தமிழில் : நீலகண்டன்,

என் எஃப் டி இ, கடலூர்.

Wednesday, 8 October 2025

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 138 கே பாலதண்டாயுதம்– தென்னிந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் கட்டியவர்

 கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 138

கே பாலதண்டாயுதம் 
தென்னிந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் கட்டியவர், தலைசிறந்த அறிவாளர்

அனில் ரஜீம்வாலே

பாலன் என்று பிரபலமாக அறியப்படும் கே பாலதண்டாயுதம், தமிழ்நாட்டின், பொதுவாகத் தென்னிந்தியாவில், கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்டிய தலைசிறந்த அமைப்பாளர். அவர் புகழ்பெற்ற மாணவத் தலைவரும், மாணவர் இயக்கங்களைக் கட்டியவரும் ஆவார்.

பாலதண்டாயுதம் 1918 ஏப்ரல் 2ல் தமிழ்நாடு பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டி கிராமத்தில் பிறந்தார். அவர் எம்ஆர் காளஹஸ்தி முதலியார் மற்றும் சுப்பாத்தாள் தம்பதியருக்கு நான்காவது குழந்தையாகவும் முதல் மகனாகவும் பிறந்தார். அவர்கள் நடுத்தர வர்க்க விவசாயிகள். 15வது வயதில் பள்ளிப் படிப்பைப் பொள்ளாச்சி உயர்நிலைப் பள்ளியில் முடித்தார். இறுதியில் குடும்பமும் கிராமத்திலிருந்து இரண்டு மைல் தொலைவில் உள்ள பொள்ளாச்சி நகரத்தில் குடிபெயர்ந்தது.

கிளர்ச்சி சுபாவம்

உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாவது படித்தபோது பாலனுக்கு 13 வயது. அந்தச் சமயத்தில் பகத்சிங், ராஜகுரு மற்றும் சுகதேவ் தூக்கிலிடப்பட்டனர். அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும் தூக்கிலிடப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும் இந்த இளம் பையன் தனது கைகளையும் கால்களையும் இரும்புச் சங்கிலியால் கட்டிக்கொண்டு பொள்ளாச்சி வீதிகளில் ஊர்வலமாகச் சென்றான்.

பள்ளியில் (மாணவர் சங்கமான) பாலர் சங்கத்தின் தலைவரானார். கள், சாராயம் மற்றும் அரிசி கடைகளின் முன் அவர் காங்கிரஸ் தன்னார்வத் தொண்டராக மறியலில் பங்கு பெற்றார். மகாத்மா காந்தி அறைகூவல்படி அயல்நாட்டு துணி பகிஷ்கரிப்பு இயக்கமும் நடத்தப்பட்டது. இளம் வயது காரணமாக அவரைச் சிறைக்கு அனுப்பப்பட இயலவில்லை.

குழந்தைகளாக அவர்கள் புகையிலை மற்றும் ஜவுளிக் கடைகளை மறியல் செய்தனர். தேசிய உணர்வு வித்துகள் ஏற்கனவே அங்கு விதைக்கப்பட்டு இருந்தன.  திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் இன்டர்மீடியட் படிப்பை முடித்த பிறகு அவர் பிஎஸ்சி இளங்கலை பட்டம் பயில அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.

பள்ளியில் படிக்கும்போது பாலன் புரட்சிகர இளைஞர் அமைப்பு ஒன்றைத் தொடங்கினார். பல்கலைக்கழகத்தில்தான் இடதுசாரி, கம்யூனிஸ்ட் கருத்தியல்களுடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. அப்போது அவர் ஒரு காந்தியராக இருந்தார். அந்த நேரத்தில் இளைஞர்கள் மத்தியில் காந்தியமும் மார்க்சியமும் இரு பெரும் போக்குகளாக இருந்தன; இந்தக் கருத்து மோதல் அவர் மாற்றமடைந்ததில் பிரதிபலித்தது.

சுப்பிரமணிய சர்மா அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பிரபலமான மாணவர் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர். அவருடன் பாலன் தொடர்பு கொண்டார். பல அரசியல் போக்குகளை உள்ளடக்கி ஒன்றுபட்ட மாணவர் பொது அமைப்பாக 1936ல் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (ஏஐஎஸ்எப்) ஏற்படுத்தப்பட்டிருந்தது. மாணவர் பெருமன்றத்தின் ஒரு கிளை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டது. அது தவிர 1937ல், பல்கலைக்கழக வளாகத்தில் ‘காம்ரேடுகள் கிளப் ஒன்றைக் கம்யூனிஸ்டுகள் அமைத்தனர். அந்தத் ‘தோழர்கள் மன்றத்தில் பி. மாணிக்கம், சுப்பிரமணிய சர்மா மற்றும் பாலன் உள்ளிட்டவர்கள் இருந்தனர்.

பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஸ்ரீனிவாச சாஸ்திரி இந்த நடவடிக்கைகளால் சீற்றமடைந்து பாலன் உட்பட ஆறு மாணவர்களை இடைநீக்கம் செய்தார். அதைக் கண்டித்து மாணவர்கள் இரண்டு மாதங்களுக்கு வகுப்புகளைப் புறக்கணித்தனர்.

நிகழ்வுகளின் இந்த வளர்ச்சி போக்குகள் பாலனைக் கம்யூனிஸ்டுகளுக்கு மேலும் நெருக்கமாகக் கொண்டு வந்தது.

ரிபப்ளிக் ஸ்பெயின் இயக்கத்திற்கு  ஆதரவாக

ஸ்பெயின் தேசத்தின் பாசிச ஜெனரல் பிரான்சிஸ் பிராங்கோவுக்கு எதிராகப் போராடும் ‘குடியரசு ஸ்பெயினுக்கு ஆதரவாக நாடு முழுதும் நிதி திரட்ட ஜவஹர்லால் நேரு அறைகூவல் விடுத்தார். நிதி திரட்டலுக்குப் பொறுப்பான ஒரு மாணவர் பாலனுக்கு எதிராகப் பொய்யான புகார் கொடுத்தார். பாலன் மற்றும் பிற ஐந்து மாணவர்கள் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்; பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்ட அவர்கள் சில தினங்கள் சிறையில்கூட அடைக்கப்பட்டனர்.

மாணவர்கள் வேலை நிறுத்தம்

தமிழ்நாட்டில் முதலாவது மாபெரும் மாணவர்கள் வேலை நிறுத்தம் 1938ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடந்தது. அந்த வேலைநிறுத்தம் இரண்டு மாதங்கள் நீடித்தது. அதுவரை அதுதான் மாணவர்களின் நீண்ட வேலை நிறுத்தப் போராட்டம். பாலனைத் தவிர மற்ற அனைவரும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். பாலன் மட்டுமே பழிவாங்கப்பட்ட ஒரே மாணவர். அப்போது அவருக்கு வயது 20 மட்டுமே. அவர் ஓர் அற்புதமான நல்ல மாணவர் மற்றும் அமைப்பாளர்.

மாணவர்கள் போராட்டத்தில் பாலன் ஈடுபட்டதன் காரணமாக அவரது தந்தை அவரை வீட்டுக்குள் நுழைய அனுமதிக்க மறுத்தார். அதன் விளைவாய் அவரது படிப்பு முழுமையாக நிறுத்தப்பட்டது. தனது நண்பர்களுடன் வசிக்கும் கட்டாயத்திற்கு அவர் ஆளானார்.

விரைவில் அவர் கேரளாவில் இருந்து வந்த ஆங்கிலோ இந்தியப் பெண்மணி கிளாடிஸ் வில்ஸ் காதலில் விழுந்தார். வேலைநிறுத்தக் காலத்தின்போதே அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

சிங்காரவேலருடன்

பாலதண்டாயுதம் மெட்ராஸில் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க இயக்கத்துடன் தொடர்பு கொண்டார். அவருக்குக் காட்டே, சிங்காரவேலர், கல்யாணசுந்தரம் போன்ற மற்ற பிற பிரபலமான தலைவர்கள் குறித்துத் தெரிய வந்தது. இரயில்வே தொழிலாளர் இயக்கத்தில் ஈடுபட்ட அவர் பொன்மலைப் பகுதி இரயில்வே தொழிலாளர்கள் தொழிற்சங்கத்துடன் பணியாற்றினார். புகழ்பெற்ற தலைவர் கல்யாணசுந்தரத்துடன் பாலன் ’தொழிலாளர் என்ற தொழிற்சங்க இதழின் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். தொழிலாளர் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டார்.

பலமுறை கைது செய்யப்பட்ட அவர் கோயம்புத்தூர் மற்றும் வேலூர் சிறைகளுக்கு அனுப்பப்பட்டார். இந்த நிகழ்வுகளால் அவரது தாயார் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு நோய்வாய்ப்பட்டார். விடுதலையாகி காயாரைச் சந்தித்த பிறகு விரைவில் தாயார் மரணமடைந்தார்.

காட்டே உடன் தொடர்பு

எஸ்வி காட்டே வருகையை அடுத்து மெட்ராஸ் நகரம் மற்றும் மெட்ராஸ் மாகாணத்தில் கம்யூனிஸ்ட் நடவடிக்கைகள் உத்வேகம் அடைந்தன. அமைப்புநிலை மற்றும் மாகாணம் முழுவதும் உள்ள பிரச்சினைகளில் அவர் வழி காட்டினார். பம்பாயில் இருந்த கட்சி அனைத்திந்திய மையத்துடன் அவர் தொடர்பு வைத்திருந்தார்.

50, தாத்தா முத்தியப்பன் தெரு மெட்ராஸ் என்ற முகவரியில் இயங்கிய தொழிலாளர் பாதுகாப்பு லீக் பின்னர் 2 / 65 பிராட்வேக்கு (பெயர்தான் பிராட்வே உண்மையில் குறுகலான சந்து!) இடம் பெயர்ந்தது. ‘வேலைநிறுத்த அலுவலகம்’ என அது அறியப்படலாயிற்று. அந்த அலுவலகத்திற்குக் காட்டேவின் நெருங்கிய நண்பரான நேரு விஜயம் செய்தார். மேலும் பல இளைய மற்றும் மூத்த தோழர்கள்கூட அங்கு வழக்கமாக வந்தனர். காட்டேவிடம் ஆலோசனை கேட்டு வந்த அவர்களில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து பாலதண்டாயுதம், இராமச்சந்திர ரெட்டி மற்றும் பலர் அடங்குவர். 

தோழர் சி எஸ் சுப்பிரமணியத்தை முதல் செயலாளராக் கொண்டு ஒரு கம்யூனிஸ்ட் கிளை அமைக்கப்பட்டது.

காங்கிரஸ் சோசலிசக் கட்சியில் (சி எஸ் பி)

பாலனுக்குத் திருச்சியில் குடியிருக்க தனி வீடு இருந்தது. அங்கே அவர் சிஎஸ்பி-யில் சேர்ந்தார். மேலும் அவரது சம்மதம் இன்றி அவர்கள் அவரை ‘ஃபார்வர்டு பிளாக்மாவட்டச் செயலாளராக ஆக்கினர். அந்த நேரத்தில் காங்கிரஸ் இயக்கத்திற்குள் இடதுசாரி ஒருங்கிணைப்பு தீவிரமாக நடைபெற்றது இதனால் அவரால் ஒரே நேரத்தில் இரண்டு அமைப்புகளிலும் இருக்க முடிந்தது.

ஃபார்வேர்ட் பிளாக் குறித்து

இக்காலகட்டத்தில் ஃபார்வேர்ட் பிளாக் தலைவர்களுடன் பாலனுக்குத் தொடர்பு ஏற்பட்டது. அதன் தலைவர் முத்துராமலிங்கத் தேவருடன் அவர் நட்பு பாராட்டினார். ஆனால் பாலன் ஃபார்வேர்ட் பிளாக்கில் இணைந்து விட்டதாக ஒரு தவறான கருத்து ஏற்பட்டது. இது சரியானது அல்ல. பின்னர் ஒரு கட்டுரையில் அவர், தான் ஒருபோதும் அதில் சேரவில்லை என விளக்கம் அளித்தார்.

இரண்டாம் உலகப் போரும் தொழிலாளர் இயக்கமும்

அவர் திருச்சியில் தற்காலிகமாக ஒரு எழுத்தராகப் பணியாற்றினார். இரண்டாம் உலகப் போர் நெருங்கவும் போருக்கு எதிரான மனநிலை உணர்வு தீவிரமாகப் பரவியது. 1938ல் போருக்கு எதிரான ஒரு கூட்டத்தில் பாலன் உரையாற்றினார். காலனிய ஆட்சியாளர்களான பிரிட்டிஷ் பார்வையில் இது மிகப் பெரிய ‘குற்றம்!’ இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டார். தனது மனைவியை மோசமான நிலையில் பரிதவிக்கவிட்டு அவர் பிரிய நேர்ந்தது. மனைவியை, ஃபார்வேர்ட் பிளாக் தலைவர் முத்துராமலிங்கத் தேவரின் நண்பரான, இரத்தினவேலு தேவர் பாதுகாப்பில்   இருக்கச் செய்து சென்றார்.

1940 இறுதியில் அவர் விடுதலை செய்யப்பட்டாலும் சிறை வாயிலில் மீண்டும் கைது செய்யப்பட்டார்!. அவரது மனைவி கிளாடிஸ் அவருக்காகப் பொறுமையின்றி காத்திருந்தார். பின்னர் இறுதியில் 1942ல் விடுதலை செய்யப்பட்டார்.

பெருந்திரள் நடவடிக்கைகள் மற்றும் இதழியல்

1939ல் இரண்டாம் உலகப் போர் வெடித்ததும் சிபிஐ சட்ட விரோதமாக்கப்பட்டது. பாலனும் கைது செய்யப்பட்டு 1939 முதல் 1942 வரை வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். 1942 ஜூனில் விடுதலை செய்யப்பட்ட பிறகு இரயில்வே தொழிலாளர்கள் மத்தியில் பணியாற்றினார். அவர்களது தொழிற்சங்கத்தின் ‘இரயில்வே ஒர்க்கர்ஸ் இதழின் ஆசிரியரானார். கட்சியின் ஜனசக்தி இதழ் ஆசிரியர் குழுவிலும் அவர் இருந்தார். 1943ல் ‘சோவியத் நண்பர்கள் அகாடமி அமைப்பைத் தொடங்கி அதன் செயலாளர் ஆனார். இதழ்களில் ஏராளமாக எழுதினார்; பொதுக் கூட்டங்கள் பலவற்றில் உரையாற்றினார். கட்சிக்கு நிதி திரட்ட அவர் நாடகங்களில்கூட நடித்தார்.

1945 மதுரையில் நடத்தப்பட்ட சோவியத் யூனியன் நண்பர்கள் அமைப்பின் (FSU) முதலாவது மாகாண மாநாட்டில், இராஜாஜி முக்கிய விருந்தினராகக் கலந்து கொண்டார்.

பாலன் 1945 இறுதி வரை மெட்ராஸில் தங்கியிருந்து ஜனசக்தி இதழில் பணியாற்றினார். 1945ல் கட்சி வேலைக்காக அவர் திருநெல்வேலி அனுப்பப்பட்டார். சிபிஐ மத்தியக் குழுவின் சார்பாகத் தமிழ்நாடு பிரதேசக் கமிட்டியின் பொறுப்பாளராக இருந்த தோழர் என்கே கிருஷ்ணன், பாலதண்டாயுதம் செயல்பாடுகளால் மிகவும் ஈர்க்கப்பட்டார்.

1942 –43 காலகட்டத்தில் அமைக்கப்பட்ட ‘சோவியத் யூனியன் நண்பர்கள் (பிரண்ட்ஸ் ஆப் சோவியத் யூனியன்) குழுவின் செயலாளராகப் பாலதண்டாயுதமும், அதன் தலைவராகத் திரு வி க (திரு வி கல்யாணசுந்தரம்) அவர்களும் இருந்தனர்.

இக்காலகட்டத்தின் இந்த அனைத்து எழுச்சிகளின் மத்தியில் அவர் மனைவி மனம் சலித்துப் போனார். முற்றாக அரசியலைக் கைவிடுமாறு கிளாடிஸ் அவரிடம் கூறினார். முன்பு சிறை வாயிலில் அவர் காத்திருந்தபோது பாலன் உடனடியாக மீண்டும் கைது செய்யப்பட்டார். எனவே அவரைக் கேரளா அழைத்துச் சென்று அங்கே பணியாற்ற மனைவி விரும்பினார். ஆனால் பாலன் அரசியலைக் கைவிட மறுத்துவிட்டார். கிளாடிஸ் திருமண உறவை ரத்து செய்து, மறுமணம் செய்து கொண்டார். அவரது மறுமணம் குறித்த செய்தி தன்னை மகிழ்வடையச் செய்தது என பாலன் கூறினார்.

1942 முதலாக பாலன் பொன்மலை இரயில்வே யார்டில் பணியாற்றி வந்தார்.

1946ல் போராட்டங்கள்

பம்பாயில் 1946 பிப்ரவரியில் ராயல் இந்தியக் கடற்படை (RIN) கிளர்ச்சி நடைபெற்றது. அதற்கு ஆதரவாக மெட்ராஸ் மாகாணத்தில் தொழிலாளர் வர்க்கம் ஒரு மாபெரும் மனிதனாகத் திரண்டு எழுந்து மாகாணத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலும் வேலைநிறுத்தத்தில் இறங்கியது. பாலன் அப்பொழுது கட்சியின் அமைப்பாளராகத் திருச்சியில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் கப்பற்படை எழுச்சிக்கு ஒருமைப்பாட்டு நடவடிக்கைகளில் ஜீவானந்தம், கல்யாணசுந்தரம், இராமமூர்த்தி மற்றும் பிறருடன் இணைந்து பெரும் பங்காற்றினார்.

1946ல் இரயில்வே வேலை நிறுத்தத்திற்குப் பாலன் ஆதரவு திரட்டினார். அவருக்கு எதிராக வாரண்ட் பிறப்பிக்கப்பட அவர் தலைமறைவானார். 1947 ஆகஸ்ட் 15 நாடு விடுதலை அடைந்த பிறகு வாரண்ட் ரத்து செய்யப்பட, அவர் வெளியே வந்தார். தூத்துக்குடியில் உணவுக்கான போராட்ட இயக்கத்தையும் அவர் தலைமையேற்று நடத்தினார். மேலும் படகுத் தொழிலாளர்கள் போராட்டத்தை நடத்தினார். அந்தத் தொழிலாளர்கள் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையில் படகுகளை இயக்குவதில் பணியாற்றினார்; அப்போது அந்த நேரத்தில் அங்கு எதார்த்தமான ஒரே போக்குவரத்து சாதனமாகப் படகுகள் மட்டுமே இருந்தன. மேலும் பாலன் விக்ரமசிங்கபுரம் ஜவுளி ஆலைத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை, போலீஸ் மற்றும் கருங்காலிகளை எதிர்த்துப் போராடி நடத்தினார்.

பாலன் திருநெல்வேலி மாவட்டத்தில் மிகவும் தீவிரமாகப் பணியாற்றி தொழிலாளர் வர்க்கம் மற்றும் மாணவர்கள் போன்ற சமூகத்தின் பிற பகுதிகளிலும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலிமைமிக்க சக்தியாக வளர உதவினார்.

மதுரை சதி வழக்கு

1943ல் நிர்வாகத்திற்கு விசுவாசமாக இருந்தவர்களில் இருந்து வேறுபட்ட தனியான தொழிற்சங்கத்தைக் கம்யூனிஸ்டுகள் அமைத்தனர். 1946ல் நிர்வாகம் 27 தொழிலாளர்களை, அவர்களது நடவடிக்கைகள் நிர்வாக விரோதமானது என்ற அடிப்படையில் குற்றம் சாட்டி, வேலைநீக்கம் செய்தது. இறுதியில் தொழில் தகராறு மத்தியஸ்தர் தொழிலாளர்களையும், கம்யூனிஸ்டுகளால் வெல்லப்பட்ட தொழிற்சங்க தேர்தல்களையும் மீண்டும் நியமிக்க நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.

பிரிட்டிஷ் அரசு கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக புனைந்த பொய் வழக்கே மதுரை சதி வழக்கு என அறியப்படுகிறது. பாலகண்டாயுதம் உள்ளிட்ட சிபிஐ மாகாணத் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அந்த வழக்கில் அமைதியின்மையை ஏற்படுத்துதல் மற்றும் தொழிலாளர் தலைவர்களைக் கொல்ல சதி செய்தது (!) என்ற குற்றச்சாட்டில் அவர்கள் விசாரிக்கப்பட்டனர். அப்போது தலைமுறைவாகச் சென்ற பாலன், 1947 ஆகஸ்ட் 15ல் இந்தியா விடுதலையைச் சாதித்த பிறகே வெளியே வந்தார்

பி டி ஆர் காலம்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பி.டி ரணதிவே தலைமையின் கீழ் அதிர்ச்சிகரமான காலத்தைக் கடந்தது; பிடிஆர், நேரு அரசை ஆயுதப் போராட்டம் மூலம் தூக்கி எறிதல் என்ற சாகச மற்றும் சுய அழிவுப் பாதையைப் பின்பற்றினார். கெடுதல் நிறைந்த இந்தப் பாதை, கட்சி செயல்பாடுகளை மெட்ராஸ் மாகாணத்திலும் தமிழ்நாட்டிலும்கூட தீவிரமாகப் பாதித்தது. கட்சி ஒழுங்கற்று சீர்குலைந்தது, கட்சி அணிகள் தலைமறைவாகின அல்லது அடக்குமுறைகளிலும் சுய அழிவு சாகச நடவடிக்கைகளிலும் கொல்லப்பட்டனர்.

1948 கல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது கட்சிப் பேராயத்தில் பாலன் கலந்து கொண்டார். மீண்டும் வாரண்ட் பிறப்பிக்கப்பட தலைமறைவானார்.  அவர் மிகவும் சிக்கல் நிறைந்த கடுமையான பாதை வழியே அகமதாபாத், பம்பாய், மத்திய இந்தியா, மெட்ராஸ் மாகாணத்தின் சில இடங்கள் இவற்றைக் கடந்து வந்தார்.  பாலன் உள்ளிட்ட பலரும் தலைமறைவாயினர். 1948 --50ல் திருநெல்வேலியிலும், 1950 --1952ல் மெட்ராஸிலும் அவர் தலைமறைவாகத் தங்கி இருந்தார். 1952 பிற்பகுதியில் அவர் கைது செய்யப்பட்டு மீண்டும் ஒன்பது ஆண்டுகள், 1962ன் தொடக்கத்தில் விடுதலை செய்யப்படும் வரை, சிறையில் காலம் கழித்தார்.

தனது வழிகாட்டியும் நண்பருமான பொன்னு மறைந்ததை அறிந்து அவர் மிகவும் வருந்தினர்; கைது செய்யப்படுவதற்கு முன்பு அவர் தூத்துக்குடியில் பொன்னு இல்லத்தில் தான் தங்கி இருந்தார்.

திருநெல்வேலி, மதுரை, மெட்ராஸ், நாக்பூர் மற்றும் கோயம்புத்தூர் என பல்வேறு சிறைகளுக்குப் பாலன் மாற்றப்பட்டார். திடீரென்று அவர் நாக்பூர் சிறைக்கு மாற்றப்பட்டு அங்கே நீண்ட காலம் இருந்தபோது மருத்துவச் சிகிச்சையும் எடுக்க வேண்டியதாயிற்று.

திருமணம்

1952ல் சிறிது காலம் அவர் விடுதலையானார். விடுதலைக்குப் பிறகு அவர் 1953ல் கட்சித் தோழர் ஒருவரின் சகோதரியான துல்க்க ராணி என்பவரை இரண்டாம் முறையாகத் திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டி வந்த அவர், 9 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பி வந்தார்.

இரண்டாவது திருநெல்வேலி சதி வழக்கு, 1954

கே பாலதண்டாயுதம் மற்றும் பி மீனாட்சிநாதன் இருவருக்கும் 1954 நவம்பர் 2ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் 1948–49 தொடர்பான ‘குற்றங்களில் அருணாச்சலம் என்ற மில் தொழிலாளியுடன் விசாரிக்கப்பட்டனர். சிறைவாசிகள் கைவிலங்கு மாட்ட மறுத்தனர். இதன் விளைவாய் அவர்களைப் போலீஸ்காரர்கள் 100 மைல் தொலைவு டிரக் பயணம் முழுதும் மிருகத்தனமாகத் தாக்கினர். வலுக்கட்டாயமாக அவர்கள் கைகளில் விலங்கை மாட்டி அவர்கள் தூக்கி எறியப்பட்டனர்.

அனைத்து அரசியல் கட்சிகளின் ஒன்றுபட்ட நடவடிக்கைகளால் அவர் விடுதலை ஆனார்.

சிறையில் அவர் நேரத்தை ஒருபோதும் வீணடித்ததில்லை. தனது முழுமையான எதிர்கால வாழ்வை ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் திட்டமிட்டார். ஏராளமாக ஆழ்ந்து தீவிரமாகப் படித்தார்; முறையான வகையில் மொழிபெயர்ப்புகளைச் செய்தார்; நிரம்ப தோட்ட வேலைகளில் ஈடுபட்டு தாவரவியலில் (பாட்டனி) சோதனைகளை மேற்கொண்டார்!

1962க்கு பிறகு

1962ல் விடுதலையான பின் மீண்டும் தீவிர நடவடிக்கைகளில் இறங்கினார். மெட்ராஸ் மாவட்டக் கட்சி செயலாளர் ஆனார். சொற்பொழிவாற்றுவதிலும் பேச்சின் மூலம் மற்றவர்களை இணங்கச் செய்யும் ஆற்றலிலும் திறன்மிக்க அவருக்கு நிகர் வெகு சிலரே. பலமுறை அவர் கைது செய்யப்பட்டார். கடைசியாக அவர் கைதானது 1970 நில உரிமைப் போராட்டம். சுருங்கச் சொல்லி விளங்கச் செய்யும் தெள்ளிய தமிழில் அவர் எழுதுவது வழக்கம்.

கட்சி மற்றும் பொதுவாழ்வில் பதவிப் பொறுப்புகள்

1964 பம்பாய் கட்சி காங்கிரஸில் சிபிஐ தேசியக் குழு உறுப்பினராகப் பாலன் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாட்னா (1968) மற்றும் கொச்சின் (1971) கட்சி காங்கிரஸ்களில் அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சியைப் பாதுகாக்க பிளவு நடவடிக்கைகளுக்கு எதிராக அவர் ஏராளமாகப் பாடுபட்டார்

1971ல் கோயம்புத்தூர் தொகுதியில் இருந்து அவர் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்து எடுக்கப்பட்டார். திறமையான பாராளுமன்றவாதி என அவர் தனது முத்திரையைப் பதித்தார்.

அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது ‘சிபிஐ குறித்த இசை ஆல்பம்ஒன்றைக் கொண்டு வந்தார். கேஜே யேசுதாஸ், ஏஎல் ராகவன் மற்றும் எல்ஆர் ஈஸ்வரி போன்ற பிரபல சினிமா பாடகர்கள் இசைத்த பாடல்கள் அடங்கிய இசை தொகுப்பு அது.

எழுத்துப் படைப்புக்கள்

பாலன் ஏராளமாக எழுதிக் குவித்தவர். அவரது படைப்புகளில், 1. பி ஜீவானந்தம் வரலாறு 2. ஆயுள் தண்டனை சிறைவாசம் –எனது நினைவுக் குறிப்புகள். 3. நாம் ஏன் வங்கி தேசியமயம் கோருகிறோம்? 4. மார்க்சியம் என்றால் என்ன? 5. ஜவுளி தொழிலில் நெருக்கடிகள் 6 அக்டோபர் புரட்சியும் நமது சுதந்திரப் போராட்டமும் நூல்களும் மற்றும் பலவும் அடங்கும். பெரும்பான்மையாக அந்த நூல்கள் தமிழில் எழுதப்பட்டன.

மரணம்

கே பாலதண்டாயுதம் மிக துரதிஷ்டமான இறப்பைச் சந்தித்தார். அவர் 1973 மே 31 ல் ஏஐடியுசி பொதுச் செயலாளர் சதீஷ் லூம்பா, ஒன்றிய அமைச்சர் மோகன் குமாரமங்கலம் மற்றும் பாரதிய கெத்மஸ்தூர் யூனியன் (BKMU) தலைவர் பான் சிங் பௌரா முதலானவர்களுடன் இந்திய ஏர்லைன்ஸ் விமானம் 440ல் டெல்லிக்குத் திரும்பி கொண்டு இருந்தார். எதிர்பாரா விதமாக விமானம் விபத்துக்குள்ளாகி மோதிச் சிதற, முதல் மூவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். நான்காவதான பௌரா விமானத்திலிருந்து தூக்கி எறியப்பட்டதால் தீக்காயங்களுடன் தப்பினார்.

பாலதண்டாயுதம் அப்பொழுது ஸ்ரீலங்காவில் சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு, ஐஎல்ஓ, ‘மக்கள் தொகை பிரச்சினைகள்என்ற பொருளில் நடத்திய கருத்தரங்கில் ஏஐடியுசி பிரதிநிதியாகக் கலந்து கொண்டுவிட்டு டெல்லி திரும்பிக் கொண்டிருந்தார். மரணம் அடைந்தபோது அவருக்கு வயது 55 மட்டுமே.

(தோழர் பாலதண்டாயுதம் நினைவைப் பறைசாற்றியபடி சென்னையில் உயர்ந்தோங்கி நிற்கிறது, அவரது பெயரால் அமைந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் கட்சி அலுவலகக் கட்டிடம் “பாலன் இல்லம்)

வாழ்க பாலன் புகழ்!

நியூ ஏஜ் (2025, அக்.  5 – 11)
தமிழில் : நீலகண்டன்,
என்எப்டிஇ, கடலூர்

 

Thursday, 25 September 2025

இந்திய தேசத்தைக் கட்டியமைப்பதில் சிபிஐ பங்களிப்புகள்

 

இந்திய தேசத்தைக் கட்டியமைப்பதில் 

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பங்களிப்புகள்

அனில் ரஜீம்வாலே

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான காலனிய எதிர்ப்புப் போராட்ட வரலாற்றுடன் இந்திய தேசம் உருவாகி வந்தது. அதன் வளமான கூட்டுப் பண்பாட்டுப் பின்புல ஆதரவுடன், விடுதலைப் போராட்டத்தின்போது உருவான பொருளாதார தேசியத்தில் அது வேர் கொண்டுள்ளது. தாதாபாய் நௌரோஜி தொடங்கி, சுரேந்திரநாத் பானர்ஜி, கோகலே, பந்தார்கர் மற்றும் திலகர், காந்தி மற்றும் நேரு மூலம், பிரிட்டிஷ் ஆட்சியின் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் மீது நடத்தப்பட்ட ஆழமான விமர்சனத்தில் உருவானது நமது விடுதலைப் போராட்டம்.

கம்யூனிஸ்டுகளின் வருகை

காலனியம் மீது விஞ்ஞானபூர்வ விமர்சனத்துடன் கம்யூனிஸ்டுகள் நுழைந்தனர்; அந்த விமர்சனம், 19 மற்றும் 20ம் நூற்றாண்டின் பொருளாதாரத் தேசியப் பாரம்பரியங்களைத் தொடர்ந்தது; மற்றும் அவற்றின் விஞ்ஞானபூர்வ பரிசீலனையில் இருந்த பற்றாக்குறையை விமர்சிக்கவும் செய்தது. 1925ல் உழைக்கும் வர்க்கத்தின் கட்சியாகத் தங்களை அமைத்துக் கொண்ட கம்யூனிஸ்டுகளின் வருகை, காலனியத்தின் பொருளாதார மற்றும் அரசியல் ஆட்சியின் மீது ஓர் ஆழமான புதிய பார்வையின் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதில், இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தின் மற்ற போக்குகளில் இருந்து அவர்கள் குணம்சரீதியில் வேறுபட்டார்கள்; அவர்கள் தரித்து வந்த ஆயுதம் --உலக யுத்தம் மற்றும் ரஷ்யப் புரட்சியில் நிரூபிக்கப்பட்டதான-- உலக ஏகாதிபத்தியம் மீது விஞ்ஞானப் பகுப்பாய்வு என்ற லெனின் ஆக்கித்தந்த ஆயுதம்.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், (அதே உலக ஏகாதிபத்திய முறையின் ஒரு பகுதியான) பிரிட்டிஷ் மற்றும் ஐரோப்பிய பொருளாதாரங்களின் தேவைகளுக்கு உதவிடும் தங்கள் காலனிய ஆட்சிமுறையின் துணை அமைப்பாக இந்தியப் பொருளாதாரத்தை மாற்றியது என கம்யூனிஸ்டுகள் எடுத்துக் காட்டினர். காலனியப்படுத்தப்பட்ட நாடுகளின் பொருளாதார மேம்பாட்டில் ஏகாதிபத்தியம் அக்கறைப்படவில்லை என்றும்; மற்றும் அதே வகையில் (காலனிய நாடுகளில் தேசிய) முதலாளித்துவ வளர்ச்சியைத் தடுத்தது என்பதையும் மார்க்சிய விஞ்ஞான பகுப்பாய்வு நிரூபித்தது. எனவே, பொதுவாகக் காலனியத்தை, குறிப்பாகப் பிரிட்டிஷ் காலனியத்தைத் தேசிய பூஷ்வாக்கள் (தேசிய நடுத்தர வர்க்க முதலாளிகள்) எதிர்த்தனர் என்பது வரலாற்றுப் பூர்வமாக முற்போக்கானது, மற்றும் புரட்சிகரமானதும் கூட. எதிரெதிர் சக்திகளின் போராட்டமான அது, இந்திய தேசியத்தின் எழுச்சிக்கு வித்திட்டது.

அத்தகைய எதிர்ச் சக்திகளில் உழைக்கும் வர்க்கம், விவசாயிகள், பழங்குடிகள், அறிவாளிகள், படித்த நடுத்தர வர்க்கங்கள் மற்றும் பல தரப்பும்கூட அடங்கும். எனவே சிபிஐ, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக வளர்ந்து வரும் இளம் முதலாளித்துவம் மற்றும் தேசியத்தின் முரண்படும் சக்திகளின் ஒற்றுமைக்கு, காலனியத்திற்கு எதிரான ‘தேசிய முன்னணியில் ஒன்றுபட அறைகூவல் விடுத்தது. முதலாளித்துவ வளர்ச்சியைத் தடை செய்யும் அனைத்துச் சங்கிலிகளையும் உடைத்து  முழுமையாக விடுதலை செய்யும் கடமைகளை நிறைவேற்றுவதால்,  இந்திய விடுதலைப் போராட்டம் மட்டுமின்றி பிற காலனிய தேசங்களிலும் நடைபெறும் தேசிய விடுதலை சுதந்திரப் போராட்ட இயக்கத்தை மாமேதை லெனின், அவற்றின் பொருளாதார மற்றும் அரசியல் உள்ளடக்கத்தில் அவை “பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சிஎன்றழைத்தார்.

தேசியப் போக்குகள் மீது ஆழமான தாக்கம்

இந்திய அரசியல் அரங்கில் கம்யூனிஸ்ட்களின் உதயம், ஆற்றல்மிகு செயலூக்கி- யின் தாக்கத்தைக் கொண்டிருந்தது. தேசிய இயக்கத்தின் பல்வேறு போக்குகளின் மீது அது ஓரளவு அல்லது பெருமளவில் தாக்கத்தைச் செலுத்தியது; அவற்றில் முதன்மையானதும் முக்கியமானதும் இந்திய தேசிய காங்கிரஸ், (சீக்கியர்களின் ஓர் ஆயுதக் குழுவான) பாபர் அகாலி மற்றும் (உருதுமொழியில் ‘கிளர்ச்சி‘ என பொருள்படும் Gadar) காதர் இயக்கங்கள், தலைமறைவு புரட்சிகர தேசிய இயக்கம், சோசலிஸ்ட்கள் மற்றும் பிறர் அடங்குவர். குறிப்பாக உழைக்கும் வர்க்கம், விவசாயிகள், இளைஞர்கள் முதலானோர் மார்க்சியத்தால் ஈர்க்கப்பட்டனர்.

அதனால்தான் நாட்டின் தேசிய விடுதலை இயக்கத்தில் சோசலிச மற்றும் மார்க்ஸிய கோட்பாடுகள் பரவலாகப் புகழ் பெற்றிருந்ததை நாம் காண முடிகிறது. சுவாமி விவேகானந்தர் உலகம் முழுவதும் சோசலிசம் குறித்துப் பேசினார். இங்கிலாந்தின் லேபர் கட்சி போல தொழிலாளர்களின் கட்சியை அமைக்க திலகர் விரும்பினார். 1920ல் பம்பாயில் இந்தியாவின் முதல் தொழிற்சங்கமான ஏஐடியுசி அமைப்பின் தொடக்க மாநாட்டில் தலைமை வகித்த லாலா லஜபதிராய் தனது தலைமை உரையில் சோசலிசம் மற்றும் சோவியத் யூனியன் குறித்த தெளிவான நேர்மறை கருத்துக்களைத் கூறினார். இந்திய மற்றும் உலக நிகழ்வுகளைப் பகுப்பாய்வு செய்ய, விஞ்ஞான சோசலிசம் மற்றும் வரலாற்றுப் பொருள்முதல்வாத முறையை ஒப்புக் கொண்டவர்களில் முதலானவர் பண்டிட் நேரு. அவர், மார்க்ஸ் மற்றும் லெனின் படைப்புகளைத் தீவிரமாக ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார்; பல புரட்சியாளர்கள் மார்க்சியத்துடன் அறிமுகம் பெறுவதற்கு உதவினார். பிசி ஜோஷி, ஆர்டி பரத்வாஜ், எஸ் காட்டே மற்றும் பல கம்யூனிஸ்டுகளுடன் நேரு இணைந்து பணியாற்றினார்.

வெளிநாட்டில் லாலா ஹர்தயாள் மற்றும் எண்ணற்ற பிற காதர் இயக்கவாதிகள் மார்க்சிய ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்தனர்.

HSRA மீது மார்க்சியத்தின் தாக்கம்

தலைமறைவு தேசியப் புரட்சிகர இயக்கத்தில் மார்க்சியக் கோட்பாடுகளை முதலில் கற்றறிந்தது பகத்சிங் மற்றும் அவரது குழுவினரும்தான். இந்த இயக்கத்தில் அராஜகவாத கோட்பாடுகள் பெரிதும் மலிந்திருந்தது: அந்த இயக்கம், பிரிட்டிஷ் காலனிய ஆட்சியைச் சில துணிச்சலான புரட்சியாளர்களின் ஆயுத நடவடிக்கைகளால் சுலபமாகத் தூக்கி எறிய முடியும் எனத் தவறாகக் கருதியது. அவர்களது பல சாகசங்கள் மற்றும் தியாகங்கள் இருந்த போதும், அவர்கள் எதார்த்தத்தில் இருந்து வெகு தூரம் விலகி இருந்தனர்; மற்றும் உண்மையில் விடுதலைக்காகத் தேசம் தழுவிய வலிமையான பெருந்திரள் இயக்கத்தைக் கட்டுவதில் தோல்வி அடைந்தனர். இந்தியச் சமூகம் மற்றும் அதன் வர்க்கங்களைப் பகுப்பாய்வு செய்வதற்கு விஞ்ஞான முறைகளைப் புரிந்து கொண்டு பயன்படுத்த அவர்கள் எந்த முயற்சியும் செய்யவில்லை.

தொடக்கத்தில் அராஜகம் மற்றும் அராஜக அரசின்மை வாதம் (அராஜகத்தவ சிண்டிகலிசம்) அவர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தது. ஒரு பிரிவு க்ரோபோட்கின் மற்றும் பகுனின் (Kropotkin and Bakunin) கருத்தைப் பின்பற்றியது. அதைத் தொடர்ந்து இயக்கத்திற்குள் கருத்தியல் போராட்டம் ஏற்பட்டது; உதாரணத்திற்கு அனுசீலன், ஜுகாந்தர் மற்றும் ஹிந்துஸ்தான் ரிபப்ளிக் அமைப்பில் (HRA) அதன் பிரதிபலிப்பைக் காணலாம்.

சிபிஐ கட்சி அமைக்கப்பட்டதானது, கருத்தியல் விவாதங்களைக் கூர்மைப்படுத்த இட்டுச் சென்றதை ஏனைய பிற சான்றுகளுக்கு மத்தியில் பகத்சிங் மற்றும் மற்றவர் எழுத்துக்களின் ஆவணங்கள் பிரதிபலித்தது. அவை அராஜகத்துடன் உடன்பாடு இன்மையும், மற்றும் மார்க்சியத்தை நோக்கி ஈர்ப்பும் வளர்ந்து வந்ததைக் காட்டியது. ‘HRA’ அமைப்பை HSRA (ஹிந்துஸ்தான் சோசலிசக் குடியரசு அசோசியேஷன்) என மாற்றியதில் வெற்றியடைந்த பகத்சிங், தனிநபர் தீவிரவாதம் குறித்த கருத்தியல் விவாதத்தைத் கட்டவிழ்த்து விட்டார்.

1920களின் பிற்பகுதி மற்றும் 1930களின் முற்பகுதி வாக்கில் அவரது குழுவினர் ஏறத்தாழ கம்யூனிஸ்டுகளுடன் அடையாளப்படுத்தப்பட்டனர். ‘கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் ஒன்றையும்கூட பகத்சிங் தயாரித்தார் மற்றும் தன்னை ஆயுதப் போராட்டத்தில் இருந்து தெளிவாகப் பிரித்து வரையறுத்தார். இப்போது அவர், போராட்டத்தின் பிரதான வடிவம் கருத்தியல்அரசியல் வகைப்பட்ட ஒன்று என வற்புறுத்தினார்.

1930கள் –40கள் வாக்கில் HSRA, சிட்டாகாங் குழு, பஞ்சாப் புரட்சியாளர்கள், மெட்ராஸ் மாகாணம் மற்றும் பிற இடங்களில் இருந்தவர்கள் விஞ்ஞான சோசலிசம் மற்றும் மார்க்சியத்திற்கு வந்துவிட்டனர்.

அந்தமானில் கம்யூனிஸ்டுகள் வலிமையாக ஒருங்கிணைப்பு

நூற்றுக்கணக்கான கைதிகளைக் கம்யூனிசத்திற்கு மாற்றியதில் அது தீர்மானகரமான பங்காற்றியது. அவர்களில் பட்டுகேஸ்வர் தத், விஜயகுமார் சின்ஹா, ஷிவ் வர்மா, சிட்டஹாங் குழு உறுப்பினர்கள் மற்றும் எண்ணற்ற பிற புரட்சியாளர்கள் அடங்குவர். சுமார் 400 பேர் கம்யூனிஸ்ட் கன்சாலிடேஷன் அமைத்தனர் மற்றும் அந்தமான் தீவுகளிலிருந்து நாட்டின் முக்கிய நிலப்பகுதிக்குத் திரும்பியதும் அவர்களின் பெரும்பான்மையோர் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர்.

சிட்டஹாங் குழு

சிட்டஹாங் ஆயுதக் குழுவின் பெரும் எண்ணிக்கையிலானவர்கள், மார்க்சியம் மற்றும் கம்யூனிசத்தில் உடன்பட்ட பிறகு, இரகசிய தனிநபர் சார்ந்த ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தனர். கல்பனா தத், சூர்யா சென், கணேஷ் கோஷ் போன்ற மற்றும் பிற பெயர்கள் அவர்களில் அடங்கும்.

‘தேசிய முன்னணி’ முழக்கமும் காங்கிரஸ் கட்சிக்குள் பணியாற்றலும்

தேசிய முன்னணி அமைக்க PC ஜோஷி விடுத்த அறைகூவல், உடனடி உத்தி சார்ந்த தேவைகளைத் தாண்டி, நீண்ட காலச் செயல் திட்ட நோக்கத்தை ஏற்படுத்தித் தந்தது; அது காங்கிரஸ்காரர்கள், சோசலிஸ்ட்கள் மற்றும் பிறருக்கும் கூட நட்சத்திரமாக வழிகாட்டும் ஒளி வழங்கியது. அதன் பின் விளைவுகளை இந்தியச் சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்திலும் காணலாம்.

சுதந்திரப் போராட்ட வீரர்கள் மத்தியில் அது ஆழமான மன அதிர்வுகளை ஏற்படுத்தியது. மேலும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஒன்றுபட்ட தடுப்பு அரண் கோட்டையாகக் காங்கிரஸை மாற்றுவதில் அது செயல்திட்ட உத்தி நடவடிக்கையாகவும் இருந்தது. மேலும் பல்வேறு உடனடி விளைவுகள் மற்றும் நீண்ட காலப் பின்விளைவுகள் கொண்டிருந்தது.

அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டியில் சுமார் இரண்டு டஜன் கம்யூனிஸ்ட்கள் இருந்தனர். பஞ்சாப் பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டிக்கு ஒரு கம்யூனிஸ்ட் தலைமை வகித்தார்; பம்பாய் பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டியில் ஒரு சமயம் கம்யூனிஸ்ட்கள் பெரும்பான்மையினராக இருந்தனர்; மெட்ராஸ் பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டியில் பெரும் எண்ணிக்கையிலான கம்யூனிஸ்டுகள் இருந்தனர். 

கம்யூனிஸ்ட் தலைவர் டாக்டர் ZA அகமத், AICCன் விவசாயக் குழுவுக்குத் தலைமை ஏற்றார்; மற்றும் பிற குழுக்களில் கம்யூனிஸ்டுகள் இடம் பெற்றனர். எஸ் ஜி சர்தேசாய், எஸ்வி காட்டே, ஆர்டி பரத்வாஜ் போன்ற பிற கம்யூனிஸ்டுகள் பலரும் AICCல் தீவிரமாகப் பணியாற்றினர்.

காங்கிரஸ் கொள்கைகளில் கம்யூனிஸ்டுகளின் தாக்கம்

விவசாயம், தொழில் துறை, திட்டமிடல், பொதுத்துறை, அரசமைப்பு அமைப்புகள், தேர்தல்கள் முதலானவை தொடர்பான காங்கிரஸ் கொள்கைகளில் கம்யூனிஸ்டுகள் ஆழமான செல்வாக்கு செலுத்தினர். சிபிஐ மத்திய செயற்குழு 1928லேயே அரசியலமைப்பு நிர்ணய சபை அமைப்பது தொடர்பாக, அனைவருக்கும் வாக்குரிமை அடிப்படையில், முன்மொழிவுகளை முன் வைத்தது. அந்த நேரத்தில் AICC சார்பாக முதலாவது இந்திய அரசியலமைப்பை மோதிலால் நேரு வடிவமைத்தார்.

முதன் முதல் ‘பூரண சுதந்திரம் கோரும் தீர்மானத்தை ஹஸ்ரத் மொகானி மற்றும் சுவாமி குமாரானந்த் ஆகிய இரு கம்யூனிஸ்ட்களே முன்வைத்தனர் என்பதை அனைவரும் அறிவர்; 1921ல் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அகமதாபாத் அமர்வில் அவர்கள் முன்வைத்த அந்தத் தீர்மானம் அப்போது நிராகரிக்கப்பட்டது. மீண்டும் அது கம்யூனிஸ்ட்களால் காங்கிரசின் மெட்ராஸ் அமர்வில் (1927) முன்மொழிக்கப்பட்டது; நேருவின் ஆதரவுடன்  தீர்மானம் நிறைவேறியது. 1928 கல்கத்தா அமர்வில் தீர்மானத்தை உடனடியாக ஏற்று அமலாக்கக் கோரி, காங்கிரஸ் மாநாட்டுப் பந்தல் அமைந்த இடத்தில், கம்யூனிஸ்டுகள் பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இறுதியில் 1929ல் அந்தக் கோரிக்கை காங்கிரசால் ஏற்கப்பட்டு அமலாக்கப்பட்டது.

பொதுத்துறை, தொழில்மயம், தேசியமயமாக்கல் மற்றும் திட்டமிடல் தொடர்பான கொள்கைகளின் தொடக்கங்கள் 1930கள் மற்றும் 1940களில் மேற்கொள்ளப்பட்டன; அதில் காங்கிரஸில் இருந்த கம்யூனிஸ்டு உறுப்பினர்கள் முக்கியப் பங்காற்றினர்.

ஏகாதிபத்திய எதிர்ப்பு

கம்யூனிசக் கருத்தியல், பொதுவாக விடுதலை இயக்கத்தின் மற்றும் குறிப்பாகக் காங்கிரஸ் கட்சியின் ஏகாதிபத்திய எதிர்ப்புத் திசை வழியை வலிமைப்படுத்தியது. ஏகாதிபத்தியம் மற்றும் காலனியம் குறித்த மார்க்சிய அணுகுமுறையின் ஆழமான தாக்கத்தைச் சுதந்திரப் போராட்ட வரலாறு மற்றும் குறிப்பாகக் காங்கிரஸ் கட்சி பெற்றது. பண்டிட் ஜவஹர்லால் நேரு ‘ஏகாதிபத்தியத்திற்கு எதிரான லீக்அமைப்பின் உயர்ந்த செயல்பாட்டாளர் ஆனார். ஸ்பெயின் குடியரசு இயக்கம் மற்றும் சீனாவில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான மக்கள் விடுதலை இயக்கத்துக்கு ஆதரவான ஒருமைப்பாட்டு இயக்கங்களுடன் அவர் முக்கிய முன்னணி பங்கெடுத்தார். அவரது முன்முயற்சியில்தான் 1935ல் டாக்டர் கோட்னீஸ் தலைமையிலான மருத்துவ மிஷன் குழு ஒன்று சீனாவுக்கு அனுப்பப்பட்டது.

இரண்டாம் உலகப் போருக்கு முன்பும், போர் நடந்த போழ்திலும் காங்கிரஸ் தொடர்ச்சியான பாசிச எதிர்ப்பு நிலைப்பாட்டை வெளிப்படுத்தியது; மேலும் சோவியத் யூனியன் மற்றும் பாசிசத்தை எதிர்த்துப் போரிட்ட மக்களோடு காங்கிரஸ் உறுதியாக நின்றது. உண்மையில் காங்கிரஸ் பாசிசத்திற்கு எதிரான மற்றும் நாசிசத்திற்கு எதிரான பெரும் தடுப்புச் சுவர் அரண் ஆனது. அத்துடன் கம்யூனிஸ்டுகள் பெரும் பங்கு ஆற்றினர்

காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி (CSP)

ஒரு தனித்துவமான அமைப்பான CSP, காங்கிரஸுக்குள் இடதுசாரி சிந்தனை மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு உள்ளவர்கள் மற்றும் சோசலிசச் சக்திகளை ஒன்று திரட்டியது. கம்யூனிஸ்டுகள், சோசலிஸ்டுகள், நேருவியர்கள், இடதுசாரி காங்கிரஸ்காரர்கள் மற்றும் சிலர் அடங்கிய முன்னணியாக அது இருந்தது. அது 1930களில் ‘தி காங்கிரஸ் சோஷலிஸ்ட்  வார இதழை  வெளியிட்டது. மேலும் மார்க்சியக்  கோடைக் காலப் பள்ளியையும் பல ஆண்டுகள் நடத்தியது. அதில் காட்டே, ஜெயப்பிரகாஷ் நாராயணன், ஆச்சாரிய நரேந்திர தேவ் முதலானோர்  பாடம் நடத்தினர். 1938ல் காங்கிரஸ் தலைவர் பொறுப்புக்கு நடந்த  தேர்தலில் சுபாஷ் சந்திர போஸ் வெற்றி பெற்றதில் CSP முக்கிய காரணியாக இருந்தது.

சதி வழக்குகளைச் சந்தித்ததும் வெஞ்சிறை வாசங்களும் 

கம்யூனிஸ்டுகள் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான தங்கள் போராட்டத்தில் கடுமையான சூழல்களைச் சந்தித்தனர், மிக மோசமாக ஒடுக்கப்பட்டனர். மீரட் சதி வழக்கு (1929-33) பிரபலமாக அனைவரும் அறிந்த ஒன்று. அவர்களுக்கு எதிராகப் புனையப்பட்ட பல்வேறு பிற வழக்குகளில் கான்பூர் சதி வழக்கு, மெட்ராஸ் சதி, பெஷாவர் வழக்கு, வேலூர் வழக்கு, கோயம்புத்தூர் வழக்கு முதலானவை சில.

கம்யூனிஸ்டுகள் ‘காலாபானி’ (அந்தமான் தனிமைச் சிறை; காலாபானி, ‘கறுப்பு நீர்’ மற்றும் ‘மரணம்’ என்பதைக் குறிக்கும்), தியோலி, புக்ஸா (Buxa) ஹிஜிலி முதலான இடங்களின் சிறைகளுக்கு அனுப்பப்பட்டனர். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தைக் கட்டாயப்படுத்தி கம்யூனிஸ்டுகளின் சக்தியை ஒப்புக்கொள்ள வைத்ததில் தீயோலி தடுப்புக்காவல் முகாம் சரித்திர ரீதியான பங்கு வகித்தது; அது இறுதியில் அவப்பெயர் எடுத்த தடுப்புக்காவல் முகாமையே கலைத்திட வழிகோலியது

புக்ஸா, ஹிஜிலி, வேலூர், மெட்ராஸ், கோயம்புத்தூர், லாகூர் கோட்டை மற்றும் எண்ணற்ற பிற தடுப்புக் காவல் மையங்கள் கம்யூனிஸ்டுகளின் மன உறுதி மற்றும் ஊக்க உணர்வைக் குலைப்பதில் தோல்வி அடைந்தன.

ஆயுதப் போராட்டத்தில் பங்கேற்பு

தெலுங்கானா, தேபகா, புன்னப்புராவயலார் உள்ளிட்ட வரலாற்றுப் புகழ்பெற்ற பல்வேறு ஆயுதப் போராட்டங்களைக் கம்யூனிஸ்டுகள் தலைமை ஏற்று நடத்தி  கலந்து கொண்டனர்; மேலும் ராயல் இந்தியக் கடற்படை கிளர்ச்சி (RIN revolt) மற்றும் நிஜாமின் ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு சமஸ்தான பகுதிகளில் விவசாயப் போராட்டங்கள் மற்றும் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான போராட்டங்கள் முதலானவற்றில் கலந்து கொண்டனர். கட்சி தனது அணிகளின் ஆயிரக்கணக்கான தோழர்களின் இன்னுயிரை இப்போராட்டங்களில் இழந்து தியாகம் செய்தது.

தேர்தல்களின் பங்கேற்பு

பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் என்னவெல்லாம் சட்டப்படியான, அரசியலமைப்புக்கு உட்பட்ட மற்றும் தேர்தல் கள வாய்ப்புகளோ அவற்றைச் சிபிஐ, போராட்டங்களைப் போலவே சமமாக,  திறமையாகப் பயன்படுத்தியது. பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வாக்குரிமை மக்கள் தொகையில், சொத்து மற்றும் கல்வி அடிப்படையில், 12 முதல் 14 சதவீதம் அளவே இருந்தது. 1937ல் மிகவும் கடினமான சூழ்நிலைகளில் கம்யூனிஸ்டுகள் தேர்தல்களில் போட்டியிட்டனர். அப்போது கட்சி தடை செய்யப்பட்டு இருந்தது, எனினும் அதன் வேட்பாளர்கள் சுயேச்சைகளாக அல்லது காங்கிரஸின் பகுதியாக போட்டியிட்டனர். பஞ்சாப் சட்டமன்றத்தில் ஐந்து இடங்கள் மற்றும் வேறு சில பகுதியில் சில இடங்களிலும் சிபிஐ வென்றது. பொதுவாகக் கட்சி காங்கிரசுக்காகப் பணியாற்றியது.

அப்போது தொழிலாளர் தொகுதிகள் என்று இருந்தது பெரும் உதவியாகும். அவற்றில் ஆலைத் தொழிலாளர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். 1946ல் மாகாண தேர்தல்களில் சிபிஐ பல இடங்களில் வென்றது. அவர்களில் எஸ்ஏ டாங்கே பம்பாய் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வானார். அரசியலமைப்பு நிர்ணய சபையில் சிபிஐ ஓர் இடத்தை வென்று, சோமநாத் லாகிரி அரசியலமைப்பு நிர்ணய சபை உறுப்பினரானார்.

இவ்வாறு நம் நாடு விடுதலை அடைந்த நாடாக ஆவதற்கு நடத்திய நமது போராட்டங்களின் பல்வேறு பரிணாமங்களில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பங்களித்தது.

சிபிஐ மற்றும் சுதந்திர தேசம்

ஜனநாயகம், அரசியலமைப்புச் சட்டம், பேச்சுரிமை மற்றும் செயல்படும் உரிமை முதலியன சுதந்திரம் நமக்கு வழங்கிய சில பயன்கள். கடினமான வழியில் ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை மக்கள் புரிந்து கொண்டனர். பிரிட்டிஷ் ஆட்சியில் மிகக் குறைந்த சிறுபான்மை அளவில் மட்டுமே வாக்குரிமை இருந்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் வயது, பாலினம், வர்க்கம், சாதி, வகுப்பு, பணக்காரரோ ஏழையோ, கற்றவரோ கல்லாதவரோ என வேறுபாடு கருதாது வயதுவந்தோர் அனைவருக்கும் வாக்குரிமையை வழங்கியுள்ளது.

ஜனநாயகம், அரசியலமைப்புச் சட்டம் மற்றும் வாக்குரிமைகள் இந்தியாவில் சமூக அரசியல் மாற்றத்திற்கான புதிய ஆயுதங்களாயின. கம்யூனிஸ்டுகள், ஜனநாயகத்திற்கான தங்கள் போராட்டங்களில் பெருமளவு பங்களித்தும் மற்றும் ஜனநாயக அனுபவங்களில் இருந்து கற்கவும் செய்தனர். இந்தியா விடுதலை அடைந்த பிறகுள்ள காலச் சூழலில் கம்யூனிஸ்டுகளின் பங்கு இரண்டு பிரதான விஷயங்களில் வெளிப்பட்டு முன்னிற்கின்றன.

ஒன்று, ஒரு காலனிய தேசத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்கான புதிய பாத்திரம். ஒரு கம்யூனிஸ்ட் கட்சி புரட்சிக்காகப் பணியாற்றி –முதலாளித்துவ முறையை தூக்கி எறிவதாகியபுரட்சியை நடத்த இயல்பாக எதிர்பார்க்கப்படுகிறது. மரபார்ந்த இந்த செவ்வியல் கோட்பாடு, இந்தியாவிலும் பிற காலனிய நாடுகளிலும் உள்ள கம்யூனிஸ்ட்களுக்கு அப்படியே பொருந்தவில்லை. ஏகாதிபத்தியக் காலனியத்தால் சுரண்டப்பட்ட ஒரு காலனிய நாடு, மறு கட்டமைக்கப்படவும் முன்னேற்றப்படவும் வேண்டிய தேவை உள்ளது. இங்கே முன்னேற்றம் என்பதன் பொருள் அடிப்படையில் –தங்களுக்கு ஏகாதிபத்தியத்தால் மறுக்கப்பட்டமுதலாளித்து உறவுகள் மற்றும் உற்பத்திச் சக்திகளை முன்னேற்றுவது என்பதாம். அப்போது முதலாளித்துவம் வளர்ச்சி குன்றிய நிலையில் இருந்தது.

எனவே தொழில்மயம் மற்றும் விவசாய வளர்ச்சியை மேம்படுத்த வேண்டி, அடிப்படை கட்டுமானங்கள் மற்றும் கனரக ஆலை வடிவத்தில் உற்பத்திச் சாதனங்கள் அத்தியாவசியத் தேவையானது. அதற்கேற்ப இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தனது பொருளாதார மற்றும் அரசியல் செயல்திட்ட உத்திகளை உருவாக்கியது.

எனவே இந்தச் சூழலில் சிபிஐ, இந்திய தேசத்தைக் கருத்தியல், அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் வலிமைப்படுத்தும் நேர்மறை பங்கை ஆற்ற வேண்டி இருந்தது. மைய அரசில் ஒரு போதும் சிபிஐ அதிகாரத்தில் இல்லாத போதும், தேசத்தின் கொள்கைகளை வகுப்பதில் ஆக உயர்ந்த முக்கிய பங்கை ஆற்றியது; மற்றும் நேருவின் திட்டச் செயல்பாடு வரைபடச் சட்டகத்தை ஆதரிக்கவும் செய்தது, விமர்சிக்கவும் செய்தது.

சிபிஐ, பொருளாதாரத்தின் அதிகாரம் செலுத்தும் உச்சத்தில் பொதுத்துறை பிரிவை வைத்து, ஆக்கபூர்வ தேசியமய செயல் திட்டத்தை மேம்படுத்தியது; இந்தியப் பொருளாதாரத்தை வலிமைப்படுத்துவதன் ஒரு பகுதியாக, வலிமையான சுயசார்புள்ள இந்தியப் பொருளாதாரத்தைக் கட்ட நிலச் சீர்திருத்தங்களையும் மேம்படுத்தியது –அந்தச் செயல் முறையை ஆளும் பூர்ஷ்வா வட்டத்திற்குள் உள்ள ஏகபோக ஆதரவு மற்றும் நில உடமை ஆதரவு சக்திகளுக்கு எதிராகப் போராடியும் முன்னெடுத்துச் சென்றது.

ஒன்றுபடுதல் போராடுதல் கொள்கையைத் தொடர்ந்து சுதந்திர இந்தியாவில் சிபிஐ தொடர்ந்து எப்போதும் வலதுசாரி பிற்போக்குச் சக்திகளைக் கட்டுப்படுத்தி தடுத்து நிறுத்தப் போராடி வந்தது.

14பெரும் ஏகபோக வங்கிகள் 1969ல் தேசியமயமாக்கப் பட்டதும் மற்றும் அதைச் சுற்றி நிகழ்ந்த அரசியல் நிகழ்வுகளும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மிகப் பெரிய சாதனை: அதுவும் நிலப்பிரபுத்துவ மற்றும் ஏகபோக சக்திகள் திருப்பி அடிக்கப்பட்டபோது, இந்தியப் பொருளாதார நலனுக்காகச் சிபிஐ நிகழ்த்திய சாதனை அது.

வலதுசாரி பிற்போக்குக்கு எதிரான போராட்டம்

அரசியல் மற்றும் பொருளாதாரச் சீர்திருத்தங்களை உறுதியாகவும் தொடர்ச்சியாகவும் மேற்கொள்ளப்படாவிடில், வலதுசாரி வகுப்புவாத சக்தி அதிகாரத்தைக் கைப்பற்றும் ஆபத்துகள் சூழ்ந்து இருப்பதைச் சிபிஐ தொடர்ச்சியாகச் சுட்டிக் காட்டியது. அதன் எச்சரிக்கைகள் இன்று உண்மையாகிவிட்டது.

இந்த இறுதி நோக்கத்திற்காக, காங்கிரஸ் மற்றும் பிற அரசியல் கட்சிகளின் அரசுகளின் மக்கள் விரோதக் கொள்கைகளையும்; மற்றும் ஒன்றியத்தில் பிற அரசுகளையும் மாநிலங்களிலும் எதிர்த்துச் சிபிஐ பெரும் மக்கள் திரளைத் திரட்டி நினைவில் நிற்கும் பல போராட்டங்களை நடத்தியது.

நாடாளுமன்றத்தை நோக்கி முதலாவது பேரணி

அந்தப் போராட்டங்களில் உதாரணத்திற்கு ஒன்றைக் குறிப்பிட்டால் போதுமானது. இந்திய வரலாற்றில் முதன் முதலாக மக்களைத் திரட்டிப் பாராளுமன்றத்தை நோக்கி  பேரணியை நடத்தியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான்!  ஒரு கோரிக்கை சாசனத்தைத் தொகுத்து நாடு முழுதும் மக்களிடம் ஒரு கோடியே 25 லட்சம் கையெழுத்துக்களைப் பெற்று அந்தக் கோரிக்கை சாசனத்தைச் சிபிஐ வெகுகாலம் முன்பே-- 1963 செப்டம்பர் 13ல் பாராளுமன்றத்திடம் சமர்ப்பித்தது. அது குணாம்ச ரீதியில் புது வகையான, பல லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்புடன் நடத்தப்பட்ட ஆதரவு திரட்டல். இன்று டெல்லிப் பேரணி (டெல்லி மார்ச்) மாதிரி போராட்டம் பொதுவான முறையானது.

இப்பெருந்திரள் போராட்டங்கள் இந்திய தேசத்தின் ஜனநாயக உள்ளடக்கத்தைப் பலப்படுத்தி பாதுகாத்தது. வகுப்புவாதப் பாசிசச் சக்திகளால் இன்று அரசியலமைப்புச் சட்டம் மற்றும் ஜனநாயகம் தாக்கப்படுவதில் இருந்து அவற்றை பாதுகாக்க நாம் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம்.


நமது போராட்டம் தொடரும்!
         நமது லட்சியம் நிறைவேறும்!

நியூ ஏஜ் செப்டம்பர் (21 –27)

தமிழில் : நீலகண்டன்

என்எப்டிஇ, கடலூர்