Monday, 7 September 2026

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 129 --ஏஎஸ்ஆர் சாரி–கம்யூனிஸ்ட் அமைப்பாளர் மற்றும் சட்டவியல் வல்லுநர்

 கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 129 


ஏஎஸ்ஆர் சாரி
–கம்யூனிஸ்ட் அமைப்பாளர் மற்றும் சட்டவியல் வல்லுநர்


–அனில் ரஜீம்வாலே 

ஏஎஸ்ஆர் சாரி 1908ல் (இன்றைய தெலுங்கானாவின்) செகந்திராபாத்தில் பிறந்தார். தனது நினைவோடையில் அவர் எழுதினார்: ”என் நினைவில் முதலில் முன்வந்து நிற்கும் விஷயம், நான் செகந்திராபாத் இரயில்வே குடும்பத்திலிருந்து வந்தவன்.” இரயில்வே, ஒரே தொழில் துறையாக இருந்ததால் பெரும்பாலான நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் இரயில்வே குடும்பங்கள். சாரியின் தந்தை ஸ்ரீநிவாஸ், மூத்த சகோதரர் இராமசாமி மற்றும் மாமா நரசிம்மன் இரயில்வேயில் பணியாற்றினார்கள்.

அவர் பிறந்த இடம் துர்நாற்றம் வீசும் சேரிகள், விளைவு ப்ளேக் நோய் : புபோனிக் பிளேக் அல்லது அரையாப்புப் பிளேக் (எர்சினியா பெஸ்டிஸ் பாக்டீரியாவினால் ஏற்படும் கடுமையான தொற்றுநோய்) ஒவ்வொரு ஆண்டின் நிகழ்வானது! எலிகள் இறந்து விழும் மற்றும் விரைவில் எண்ணற்ற மக்கள் செத்து விழத் தொடங்குவார்கள். ஓர் ஆண்டில் சுமார் ஆறு மாதங்களுக்கு அவர்கள் கூடாரங்களில் (டென்ட்களில்) வாழ வேண்டியிருந்தது.

சாரியின் குடும்பம் ஊரின் வெளிப்புறத்தில் டென்ட்களில் வாழ்ந்தது. அதன் எதிரே இரயில்வே விளையாட்டு மைதானம் இருந்தது. நிஜாம் கல்லூரி இன்ட்டர் கலை பிரிவு வகுப்பு மாணவரான சாரி நல்ல கிரிக்கெட் வீரர், மீடியம் வேகப்பந்து வீச்சாளர். தொடர்ந்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் (ஹாட்ரிக்) சாதனையால் அவரது நற்பெயர் உயர்ந்தது. அதனால் ஈர்க்கப்பட்ட இரயில்வே, அவருக்கு இரயில்வே கார்டு பணி வழங்க முன் வந்தது; ஆனால் அவரது சகோதரர் அனுமதிக்கவில்லை. சாரி தொடர்ந்து படித்து, வாழ்வில் மேம்பட வேண்டும் என அவர் விருப்பியதே காரணம்.

இந்தப் பாடம் அவரது வாழ்நாள் முழுவதும் ஏஎஸ்ஆர் மூளையில் ஆழப் பதிந்தது. அப்போது பணத்திற்கு உயர் மதிப்பு இருந்தது: அவரது தந்தை அற்ப ஊதியம் ரூ 25ல் பணியாற்றத் தொடங்கி மாதம் ரூ.50 ஊதியத்தில் ஓய்வு பெற்றார்!

அவரது சகோதரர் இராமு காந்திஜியின் பெரும் பக்தரானார். அவர் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஏற்ற கைராட்டைகளை வாங்கித் தந்தார். ஏஎஸ்ஆர் வயதில் இளையவர், அவருக்குத் தந்த கைராட்டையும் சிறிதாக இருந்தது! இராமு குடும்பத்தினரால் முதல் குளியல் துண்டுகள் தயார்  செய்யப்பட்டன.  

ஹைதராபாத் மற்றும் செகந்திராபாத் பகுதியில் காந்திஜியின் யங் இந்தியா இதழ் விநியோகத்திற்கான முழு முகவர் உரிமையை இராமு பெற்றார்; பிரிட்டிஷ் இந்தியாவில் அது துணிச்சலான செயல். ஏஎஸ்ஆர் மற்றும் தோழர்கள் யங் இந்தியா இதழ் பிரதிகளை ஞாயிற்றுக் கிழமைகளில் அதன் சந்தாதாரர்களுக்கு விநியோகித்தனர். அவரது குடும்பம் காந்தியக் குடும்பம், அவர்களின் உணவும்கூட ‘காந்திய’ முறையாக இருந்தது! கீரை போன்ற இலை காய்கறிகள் நிறைய உண்பது ஆரோக்கியமானது என எங்கோ காந்திஜி எழுதினார். அதைச் சரியாகப் பின்பற்றிய குடும்பம் உருளைக்கிழங்கு மற்றும் அரிசிக்குப் பதிலாக இலை உணவுப் பொருளுக்கு மாறியது!

சுதேசி பொருட்களை வாங்குவது முக்கியமான வழக்கம்; காலிகட் சோப்பு மற்றும் லுங்கிகளுக்கு ஆர்டர் செய்யப்பட்டன. இராமு ஏராளமான புத்தகங்கள் வாங்கினார் குடும்பத்தின் இளைய உறுப்பினர்கள் அனைத்தையும் படித்தனர், பள்ளிப் பாடப் புத்தகங்களைத் தவிர!

ஏஎஸ்ஆர் தனது 14 வயது வாக்கில் உண்மையான கொலை குற்றச்சாட்டு விசாரணை அடிப்படையில் அமைந்த லார்டு லிட்டன் எழுதிய ‘யூஜின் ஆரெம்’ என்ற நாவலைப் படித்தார். அப்போதுதான் ஒரு வழக்கறிஞராக ஆவது என்ற எண்ணம் சாரியைக் கவ்விப் பிடித்தது. 

அவரது குடும்பம் பழமைவாதக் குடும்பம் அல்ல, ஆனால் விரிவான அளவில் ஆரோக்கியமான சமய –தத்துவக் கருத்துகளின் தாக்கத்தைப் பெற்றிருந்தது. பக்திப் பாடல் மற்றும் செவ்வியல் கர்நாடக இசையில் ஆழமான ஈடுபாட்டை ஏஎஸ்ஆர் வளர்த்தார்; பக்தி யோகா மற்றும் இராமகிருஷ்ண மடத்தில் அவர் ஆர்வம் கொண்டார். விவேகானந்தரின் சீடரான மடத்தின் சுவாமி யோகேஷ்வரானந்த் செகந்திராபாத்துக்கு வந்தார். அவரது சொற்பொழிவுகள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. மகரிஷி கார்வேயும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தினார். இஸ்லாமிய வாழ்க்கை முறை சுஃபி தத்துவம் மற்றும் உடைகளும் சாரியிடம் செல்வாக்கை ஏற்படுத்தியது.

அரசியல் நடவடிக்கைகள் 

கல்லூரியில் சாரி திறமையான விவாதம் செய்பவராக இருந்தார். ஒருமுறை அவர் அசைவ உணவுக்கு ஆதரவாகப் பேசினார். விவாதத்தில் அவர் கூறினார் : “உண்மைதான், தாவர உணவுகள் மனிதருக்குப் பயனுள்ளவை. ஆனால் கோழிக்கறி மற்றும் ஆட்டுக்கறி என்பது, ‘செரிக்கப்படுவதற்கு முந்தைய தாவரம்’ தவிர வேறு என்ன?” (அதாவது ஆடு உண்ட தாவரம் செரிக்கப்பட்டு பின் கறி ஆனது. செரிக்கப்படுவதற்கு முன் அது தாவரமாக இருந்தது என்று வாதிட்டார்.) உடனே அவரது கருத்து அவையோரைப் பிடித்துக் கொண்டது! அவர் பல பரிசுகள் பெற்றார்.

நிஜாம் கல்லூரியில் முதல் அரசியல் வேலைநிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டதன் பெருமை சாரி குழுவினரையே சேரும். 1920களின் தொடக்கத்தில் காந்தியத்திலிருந்து அவர்கள் பிரிந்து சென்றனர். சௌரி சௌரா நிகழ்வுக்குப் பின் ஒத்துழையாமை இயக்கம் விலக்கிக் கொள்ளப்பட்டது. அது குறித்த அவர்களின் கருத்து இப்படி இருந்தது: “போலீஸ்காரர்கள் சிலர் கொல்லப்பட்டது என்ன ஒரு பெரிய விஷயம்?” அவர்கள் காந்திய அரசியல் தத்துவத்திலிருந்து பிரிந்து சென்றனரே தவிர, காந்தியிடமிருந்து அல்ல. எனவே காந்தி கைது செய்யப்பட்டபோது காந்தியின் கைதை எதிர்த்து அவர்கள் மாணவர்களின் வேலை நிறுத்தத்திற்கு ஏற்பாடு செய்தனர்.

உடற்கட்டு வளர்ப்பு பயிற்சி மற்றும் இளைஞர் இயக்கம்

சாரியும் சில தோழர்களும் மிகவும் மெலிந்து இருக்க, ஆனால் மதுரையிலிருந்து வந்த நாராயணசாமி அவர்களிடம் உடற்கட்டு பராமரிப்புப் பயிற்சி குறித்த சிந்தனையை விதைத்தார்; பின்னர் அவ்வாறு தொடங்கியதுதான் ‘தண்டால் பஸ்கி’   உடற்பயிற்சி!அவரும் கூட்டாளிகளும் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவின் புகழ் பெற்ற உடற்கட்டு பயிற்சியாளர்களுக்கு எழுதினர்: குறிப்பாக, தசைகளைக் கட்டுப்படுத்தும் முறையை அவர்கள் மேசிக் (Maxick) லிருந்து கற்றனர்! அவர்களது ‘ஆராய்ச்சிக’ளின் விளைவு யூத் பிசிகல் கல்ச்சர் லீக் (YPCL) என்ற அமைப்பை நிறுவ இட்டுச் சென்றது.  அவர்கள் ‘மனதின் மர்மங்க’ளைக் கூட ஆராயத் தலைப்பட்டு ஃபிராய்டு, ஜங், அட்லர் மற்றும் எதைத்தான் என்றில்லாமல் படித்தனர். அவ்வளவு ஏன், அவர்கள் ஹிப்னாடிசம் படிக்கத் தொடங்கி அதன் மனோவசியத்திற்கு ஆட்பட்டனர். ஒருமுறை அந்த இளைஞர் லீக் அமைப்பு கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கிக் கொண்டது. சாரியும் குழுவினரும் சர்க்கஸ் காட்சிகளை நடத்தினர். சாரி அவரே தன் வயிற்றின் மீது 300 பவுண்டு எடையுள்ள பெரிய பாறையைத் தாங்கினார்!

சாரி பி ஏ இளங்கலை பட்டத்தில் தேறிய பிறகு செயின்ட் பேட்டரிக்ஸ் ஐரோப்பிய உயர்நிலைப் பள்ளியில் ஒரு பணியைப் பெற்று அங்கு ஜூனியர் கேம்பிரிட்ஜ் வகுப்புக்குக் கணிதம் கற்பித்தார்.  வருடாந்திர ஆய்விற்கு அவரது மேனாள் முதல்வர் கென்னத் பர்னெட் (Kenneth Burnett) வருவதைக் கண்டு அவர் திகைத்தார். :”நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள்?”என்று அவர் கேட்டார். “நான் இங்கே ஆசிரியராக கற்பிக்கிறேன் சார்”. மேனாள் முதல்வர், “என்ன? நீங்கள் என்ன கற்பிக்கிறீர்கள்” எனத் தொடர்ந்து கேட்டார். “கணிதம் சார்” பதில் கூறினார். “மேத்-த-மே-ட்டிக்ஸ்” என அழுத்தமாக உச்சரித்த முதல்வருக்கு அது நம்ப முடியாததாக இருந்தது. ஆய்வுக்கு வந்த பர்னெட் அறிக்கையில், “கணிதத்துறை போதுமான அளவுக்குப் பலப்படுத்தப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்!

சட்டம் பயிலவும் பயிற்சி செய்யவும் சாரி பூனாவுக்கு இடம் மாறி சென்றார் ஆனால் இராணுவம் உட்பட பல்வேறு பணிகளில் அவர் சேர்ந்தார். ஆனால் தேசிய இயக்கம் மீதான ஒடுக்குமுறை அவருக்கு அளவுக்கு அதிகமாகப்பட்டது. எனவே இராணுவப் பிரிவு கணக்கு கண்ட்ரோலர் அதிகாரிக்கு அவர், “விடுதலை இயக்கத்தின் பால் அரசு பின்பற்றும் தேவையில்லாத ஒடுக்குமுறை கொள்கை அணுகுமுறை காரணமாக என்னால் இந்தச் சேவையில் தொடர முடியாத எனது இயலாமையைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று எழுதி தனது ராஜினாமாவை அனுப்பினார்:.

குர்தா பைஜாமா உடையில் அவர் பூனாவைவிட்டுப்  புறப்பட்டார்

அவரும் அவரது நண்பர் ரமணராவ் இருவரும் பேருந்து மூலம் பம்பாய் சென்றனர். அங்கு அவர் மாவட்டக் காங்கிரஸ் குழுவுக்கு அறிமுகம் செய்யப்பட்டார். சத்யாகிரகி உறுதி மொழியில் “நான் ஒருபோதும் வன்முறையாளன் இல்லை”. என்று கையெழுத்திடும்போது அவருக்குச் ‘சிறிதும் நடுக்கம் இல்லாமல் இல்லை’. டாக்டர் என் எஸ் ஹார்டிகர் நிறுவிய ஹிந்துஸ்தானி சேவா தளத்தில் தன்னை அவர் இணைத்துக் கொண்டார். அங்கு உடற்பயிற்சிகளும் கூட்டுக் குழு பயிற்சிகளும் (எக்சசைஸ் மற்றும் ட்ரில்) நடந்தன. மற்றவர்களுடன் சேர்ந்து அவர் காங்கிரஸ் ஹவுஸ் இடத்தைப் பாதுகாக்கும் பணியை மேற்கொண்டார். அவருடன் கூடஇருந்த சகா பஞ்சாபில் இருந்து வந்தவர். ‘இரண்டு P மற்றும் இரண்டு C’ காரணமாக அவர் கோபமாக இருந்தார். –அதுதான் அவருக்குக் காவல் பணி வழங்கப்பட காரணம் என்ற கோபம். ‘இரண்டு P மற்றும் இரண்டு C’ என்பது பஞ்சாப் பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டி என்பதைக் குறித்தது!

அவர்கள் ‘பிரபாத் பெரி’ எனப்படும் ‘அதிகாலை ஊர்வல’மாகச் சென்று கள்ளுக் கடைகளில் மறியல் செய்தனர். லட்சக்கணக்கில் சட்டவிரோதமாகக் காங்கிரஸ் புல்லட்டின் சுற்றறிக்கை பிரசுரிக்கப்பட்டது. பம்பாய் பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டி 1930 ஜூலை 12 ஊர்வலத்திற்கு விதிக்கப்பட்ட தடையை உடைக்க முடிவு செய்தது. அங்குதான் சாரி அவரது எதிர்கால வாழ்நாள் நண்பர்களான ஐயர் மற்றும் சுந்தரத்தைச் சந்தித்தார். 1930ல் கார்வாலி தின ஊர்வலத்தில் அவர் மிக மோசமாக அடிக்கப்பட்டார். 

கம்யூனிஸ்ட் ஆக ஆதல்

நாசிக் சிறையில் இருந்து விடுதலையான பிறகு ஏஎஸ்ஆர் கம்யூனிஸ்ட் தத்துவம்தான் ஒரே மாற்று என முடிவு செய்தார். கிடைத்த கம்யூனிச நூல்கள் அனைத்தையும் படித்தார். தி இரயில்வே மஸ்தூர் என்ற மும்மொழி பருவ இதழில் பிழை திருத்துபவராக உதவி செய்தார். ரியாஸநவ் (Ryazanov) முன்னுரையுடன் கூடிய கம்யூனிஸ்ட் அறிக்கையை ஒரே இரவில் படித்தவர், அதனால் ஆழமாக ஈர்க்கப்பட்டார்.

மஸ்கரேனஸ் (Mascaren-has) லிருந்து எம் என் ராய் வரை படித்தார், ஆனால் அவை ஈர்க்கவில்லை. [மஸ்கரேனஸ் என்பது மஸ்கரேன் தீவுக்கூட்டம் என்பதிலிருந்து பிறந்த அங்கு வாழ்வோரின் குடும்பப் பெயர் ஆனது. இங்கு ஒரு போர்த்துகீசிய சோசலிச நாவலாசிரியரை அது குறிக்கலாம்]. சுந்தரம் அவர்களால் ஹைதராபாத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார் அங்கு அரசு சட்டக் கல்லூரியில் அவர் சேர்ந்தார். பின்னர் 1934ல் பாம்பே சென்றவர் கம்யூனிஸப் படிப்பு வட்டங்களில் இணைந்து தானே சிலவற்றை அமைக்கவும் செய்தார். அத்தகைய ஒரு கூட்டம் கபிலா கண்ட்வாலா (Kapila Khandwalla) இல்லத்தில் நடந்தது. கலந்து கொண்டவர்களில் மூவர் காங்கிரஸ்காரர்கள். அந்தப் பெண்மணி பெண்கள் பள்ளியின் முதல்வர். மற்றொரு அமைப்பு ஏஎஸ்கே வாழ்ந்த நீலம் மன்ஸிலில் நடந்தது. இவற்றில் கலந்து கொண்டவர்களில் சிலர் பின்னர் தீவிர கம்யூனிஸ்ட் செயல்பாட்டாளர்கள் ஆயினர்.

1939ல் கட்சி என் எல் உபாத்தியாயாவை அனைத்திந்தியக் காங்கிரஸ் கமிட்டி (AICC) தேர்தலில் நிறுத்தியது. ஏஎஸ்ஆர் மற்றும் சுமார் 100 இளம் கம்யூனிஸ்டுகள் எஸ்கே பாட்டிலை எதிர்த்து அவருக்காகப் பணியாற்றினர். நல்ல வாக்குகளைப் பெற்றாலும் அவர் பாட்டிலை அடுத்து இரண்டாவதாக மட்டுமே வந்தார்

‘மகாகை’ வேலை நிறுத்தம் 1940

‘மகாகை’ (விலைவாசி உயர்வு) வேலை நிறுத்தம் மார்ச் 1940ல் தொடங்கியது. ஒன்றரை லட்சம் தொழிலாளர்கள் கலந்து கொண்ட அந்த வேலை நிறுத்தம், இரண்டாம் உலக யுத்தம் காரணமாகக் கிராக்கிப்படி கோரி, 40 நாட்கள் நீடித்தது. வேலை நிறுத்தம் குறித்துத் தினசரி நாட்குறிப்பை எழுத ஏஎஸ்ஆர் அவர்களிடம் பிசி ஜோஷி கேட்டுக் கொண்டார்.

ஏஎஸ்ஆர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளில் எஸ்ஏ டாங்கே, மிராஜ்கர், பருலேக்கர் (Parulekar), பட்கர் (Patkar) உள்ளிட்ட பல கம்யூனிஸ்டுகளுக்கு ஆதரவாக வாதாடினார். ஏஎஸ்ஆர் ஜூன் 1940ல் கைது செய்யப்பட்டு பூனா எரவாடா சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் அவர்கள் நாசிக் சிறைக்கு மாற்றப்பட்டனர். அங்கு ஒரு டஜன் இளம்மாணவர்கள் உட்பட 55 கம்யூனிஸ்டுகள் இருந்தனர். அவர்கள் கூட்டாகப் படிப்பது, விவாதிப்பது மற்றும் வகுப்புகளை அமைத்து நடத்தினர். 1941 ஜனவரி 26ல் சுதந்திர தினத்தை அவர்கள் கொண்டாடினர். அவரும் மற்றவர்களுமாகச் சேர்ந்து மார்க்ஸின் டாஸ் கேப்பிட்டல் (மூலதனம்) நூலைப் படித்தனர். காங்கிரஸ்காரர்களுக்குத் தனியான வகுப்புகள்கூட  நடத்தப்பட்டன.

அவர்கள் வழக்கமாகக் கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்தி புரட்சிகரப் பாடல்களைப் பாடுவர். ‘நான் இறக்கும் நாள் வரை’ என்ற கிளிப்ஃபோர்ட் ஓடெட்ஸ் (Clifford Odets) எழுதிய நாஜிகள் எதிர்ப்பு நாடகத்தை 33 நடிகர்களுடன் மாபெரும் வகையில் அரங்கேற்றினர்! சிறை கண்காணிப்பாளர்கூட காக்கி யூனிபார்ம் உடைகள் முதலானவற்றைத் தந்து உதவினார். கவுண்டஸ் வான் ஹெட்விக் கதாபாத்திரத்தில் சந்திரகாந்த் ககோட்கர் மாபெரும் வெற்றி பெற்றார்! அந்த நாடகம் நினைவில் நிற்கக் கூடியதாக ஆனது.

சோவியத் யூனியன் மீது நாஜி தாக்குதல், 1941

1941 ஜூன் 22ல் சோவியத் யூனியனுக்கு எதிரான ஹிட்லரின் தீவிர ஆக்கிரமிப்பு, சிபிஐ கொள்கை வழியில் மாற்றத்திற்கு இட்டுச் சென்றது. அதன் முக்கிய அம்சங்கள் தியோலி முகாம் தோழர்களிடமிருந்து, அடிப்படையில் எஸ்ஏ டாங்கே மற்றும் பிடிஆர் இருவராலும் எழுதப்பட்டு இறுதியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியால் ஏற்கப்பட்டது. பி சி ஜோஷியை ‘இடது தேசியவாதி’ என அழைத்த சாரி, ‘ஒருபோதும் அவர் உண்மையான மாக்ஸியவாதியாக ஆகவில்லை’ என்றார். அவரது கூற்றுப்படி, பிசி ஜோஷி கட்சியின் இந்தப் புதிய பாதையை (நியூ லைன்) தயக்கத்துடன் மட்டுமே ஒப்புக்கொண்டார்.

டோஜோ தலைமையின் கீழ் ஜப்பான் 1941 டிசம்பர் 7 அன்று அமெரிக்க கப்பல்கள் மீது பேர்ல் துறைமுகத்தில் குண்டு வீசித் தாக்கியது. பின்னர் ஹாங்காங், மலாயா, பர்மா முதலிய நாடுகளைக் கைப்பற்றியது. 1942 ஏப்ரல் மாத வாக்கில் ஜப்பானியப் படைகள் கொஹிமாவுக்கு வந்தன; மே மாதத்தில் கல்கத்தா மீது குண்டுகள் வீசப்பட்டன. சிபிஐ புதிய பாதையை ஒப்புக்கொண்டது. 1942 ஜூலை 5 முதல் சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்படுவது தொடங்கியது.

ஆகஸ்ட் இயக்கம், 1942

சாரி ப்யூபில்ஸ் வார் (மக்கள் யுத்தம்) பத்திரிக்கையின் செய்தியாளராக 1942 ஆகஸ்ட் 8ல் (தெற்கு மும்பை கிராண்ட் ரோட்டில் அமைந்துள்ள)  கோவாலியா டேங்க் மைதானத்திற்கு (தற்போது ஆகஸ்ட் புரட்சி மைதானம் என்று பெயர்) மிக நெருக்கத்தில் இருந்தார்; அன்று அங்கு சரித்திர நிகழ்வுகள் அரங்கேறின. காந்திஜி ‘செய் அல்லது செத்துமடி’ என்று பிரகடனம் செய்து ‘வெள்ளையனே வெளியேறு’ (குவிட் இந்தியா) இயக்கத்திற்கு அறைகூவல் விடுத்தார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு கடிதத்தில், அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி எதார்த்தமாக இருக்க விருப்பம் தெரிவித்து, ஜப்பானிய ஆபத்தைக் காண அறிவுறுத்தியது. காங்கிரஸிலிருந்து தலைவர் ஒருவர் கட்சி அலுவலகத்திற்கு வந்து தலைமறைவு இயக்கத்திற்குச் சிபிஐ தலைமை ஏற்க வேண்டும், ஏனெனில் கம்யூனிஸ்ட் கட்சி அதில் விரிவான அனுபவம் பெற்றது என வேண்டுகோள் விடுத்தார்! அருணா ஆசஃப் அலி பிரபலமான தலைவர் ஆனார். பின்னர் அவர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். சாரிக்கு அவர் நல்ல நண்பர் ஆனார்.

பம்பாய் கம்யூன் வாழ்க்கை 

1942ல் சட்டபூர்வமாக்கப்பட்ட பிறகு சிபிஐ, பம்பாய் சாண்ட்ஹர்ஸ்ட் சாலையில் அமைந்த ராஜபவனின் இரண்டு தளங்களை வாடகைக்கு விட்டது. கட்சியின் மத்திய தலைமையகத்தில் ஒரு கம்யூன் (கூடி வசிக்கும் குடியிருப்பு) அமைக்கப்பட்டது. சாரி மற்றும் பலர் கட்சியின் முழு நேர ஊழியர்களாயினர். அவர் தனது சட்டப் புத்தகங்களையும் அறையில் பயன்படுத்தும் மேசை, நாற்காலி முதலிய மரச்சாமன்களையும் நன்கொடையாக வழங்கினார். சுமார் 60 தோழர்களுடன் அயர்வின்றி தோழமை உணர்வில் பணியாற்றிய கம்யூன் வாழ்க்கை உற்சாகம் அளிப்பதாக இருந்தது. அந்தக் கம்யூன் குடியிருப்பைப் பலரும் வந்து பார்த்தனர்: அவர்களில் ராஜாஜி, உதய் சங்கர், எட்கர் ஸ்னோ, பெட்டி கிராம் மற்றும் அவருடன் சீனாவின் புதிய நான்காவது ராணுவம் மற்றும் ஹெச்.வி.ஆர் ஐயங்கார் முதலானோர் அடங்குவர்.

சாரி கட்சியின் பீப்பிள்ஸ் வார் பத்திரிக்கையின் ஆசிரியர் குழு போர்டில், ஷரப் ஆத்தர் அலி உடன் பணியாற்றினார். காலையில் வீதிகளில் பாடல்களைப் பாடி செல்லும் குழுவுக்குச் சாரி தலைமை தாங்கினார். அவர் பேராசிரியர் ஜே டி பெர்னால், எஃப்ஸ்டைன், கிங்ஸ்லே மார்ட்டின், பேராசிரியர் பிளாக் கெட், என்கே கிருஷ்ணன், பார்வதி கிருஷ்ணன், மோகன் குமாரமங்கலம், டாக்டர் பாபா முதலான பல பிரபல பிரமுகர்களைச் சந்தித்தார். ப்ரீத்தி சர்க்காருக்குச் சாரி ஜாலியன் வாலாபாக்கின் புகழ்பெற்ற பாடலைக் கற்றுத் தந்தார். 

“எனது வாழ்வில் ஆக மிக மகிழ்ச்சியாக இருந்த கம்யூன்  வாழ்க்கை காலம்” பிடிஆர் காலம் வரவும் நொறுங்கியது : அது தோழமை உணர்வை அழித்தது என்றார் அவர்.

“1946ல் இடைக்கால அரசு அமைக்கப்பட்டபோது சர்தார் பட்டேல் உள்துறை அமைச்சரானார். இரண்டு ஆண்டுகளில் கம்யூனிஸ்டுகளைத் துடைத்தெறிவதாக அவர் மார்தட்டினார். சாரியை ராஜாஜி பட்டேலிடம் அழைத்துச் சென்றபோது பட்டேல் அவரிடம், ‘நீங்கள் என்ன செய்கிறீர்கள்?’ என வினவினர். சாரி இவ்வாறு பதில் கூறினார் ”நான் :துடைத்தெறியப்படுவதற்காகக் காத்திருக்கிறேன்!’ பட்டேல் அதிர்ந்து போனார்!!

1946 பிப்ரவரியில் நடைபெற்ற கடற்படை வீரர்களின் கிளர்ச்சிக்கும் சாரி சாட்சியாக இருந்தார்.

காந்திஜியின் படுகொலை 

ஒவ்வொரு நாளும் காந்திஜியின் பிரார்த்தனைக் கூட்டங்களில் கலந்து கொள்வதும்; அவரது உரைகளின் முக்கிய உள்ளடக்கத்தின் சுருக்கத்தை வெளிநாட்டு பத்திரிக்கையாளர் -களுக்கு வழங்குவதும் சாரியின் வழக்கம். ஆனால் விதிவசமான அந்த நாளில் அவர் பிரார்த்தனைக் கூட்டத்திற்குச் செல்லவில்லை. (காந்திஜி படுகொலை செய்யப்பட்ட அந்நாளின்) செய்தியைக் கேட்டதும் அவர் பிர்லா மாளிகைக்குத் திரும்ப விரைந்து சென்றார். தேசமே அதிர்ச்சி அடைந்தது. அடுத்த நாள் பல லட்சக்கணக்கான மக்கள் டெல்லிக்கு விரைந்தனர்.


1948ல் கட்சி

1948 கட்சி காங்கிரஸ் மாநாட்டில் பி சி ஜோஷி (பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து) நீக்கப்பட்டார்; BT ரணதிவே கட்சி பொதுச் செயலாளராக அமர்த்தப்பட்டார். PCJ சீர்திருத்தவாதியாக இருந்தபோதிலும், அவர் தனது கருத்துக்களைக் கைவிடவில்லை என்பதில் தமக்கு (சாரிக்கு) திருப்தி இருந்ததாகச் சாரி கருத்துத் தெரிவித்தார். “பிடிஆர் அவசரப்பட்டு விட்டார்” மற்றும் அவரிடமிருந்து ஓர் அழைப்பு மக்களைப் புரட்சிக்குக் கிளர்ந்தெழச் செய்யும் என்று எண்ணினார்! ஆனால் பெருந்திரள் மக்கள் கூட்டம், ‘புதிதாக அமைக்கப்பட்ட சுதந்திர இந்தியாவின் அரசுக்கு எதிராகப் புரட்சிகர நடவடிக்கையை மேற்கொள்வது தேவையில்லாதது’ என்று எண்ணியது.

சாரி கூறுகிறார் : “நமது கட்சியில் குழுவாதப் போக்கு காலம் ஒரு பயங்கரக் கனவு”, அது, கட்சியை அழித்தது மட்டுமல்லாமல், “கம்யூனிஸ்டுகள் மத்தியில் பரஸ்பர நம்பிக்கையை நொறுக்கி விட்டது.” இந்த அனைத்தும் பி.சி ஜோஷி மீது அடிப்படையற்ற தாக்குதல்கள் மூலம் மூடி மறைக்க முயற்சிக்கப்பட்டது.

சாரி கைது செய்யப்பட்டு பம்பாய் ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டார். தனது வழக்கை அவர் தானே வாதிட்டார்; அவரது சிறைவாசம் உறுதி செய்யப்பட்டாலும், அவரது நியாயமற்ற சிறைவாசம் குறித்து நீதிமன்றம் கடுமையான கருத்துகளைத் தெரிவித்தது. அவர்கள் நேருக்கு நேர் போலீசுடன் மோதலில் ஈடுபட்டனர். சுதந்திரத்திற்கு முன்பு பிடிஆர் அவர்களே தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை எதிர்த்த குழுவாதப் போக்கு நிலைப்பாடுகளை எடுத்தார் என்பதைச் சாரி சுட்டிக் காட்டினார். அவரது அந்தக் குறிப்பு, விளக்கம் ஏதுமின்றி நிராகரிக்கப்பட்டது. 

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் விடுதலை செய்யப்பட்டார்.

தேர்தல்கள்

1952ல் பம்பாய் சட்டமன்றத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தனது பலமான செவ்ரீ-காலா சௌக்கி பகுதியிலிருந்து சாரியை நிறுத்தியது. மிகக் கடுமையான தேர்தல் போட்டியில் 16 ஆயிரம் வாக்குகள் சாரி பெற்றாலும் தோல்வி அடைந்தார்.

உச்ச நீதிமன்றம் 

இந்திய உச்ச நீதிமன்றத்தில் சாரி முதன்முறையாகத் தோன்றியது பரவசமான உற்சாக நிகழ்வு.  தோழர் ஏகே கோபாலனின் ஆட்கொணர்வு மனுவுக்காக அவர் ஆஜரானார். அதன் பிறகு அவர் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளில் ஆஜரானார். மேலும், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 12 தெலுங்கானா தலைவர்களுக்கு ஆதரவாக வழக்காடிய புகழ்பெற்ற பிரிட்டிஷ்

இடதுசாரி வழக்கறிஞர் டிஎன் பிரிட் (DN Pritt) அவர்களுடன்கூட அவர் கூட்டாகப்  பணியாற்றினார். தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான பிரிட், உலகம் முழுதும் சென்று இடதுசாரி மற்றும் புரட்சிகர நோக்கங்களுக்கு ஆதரவு திரட்டியவர். பகத்சிங், ஹோ சி-மின் மற்றும் ஜோமோ கென்யாட்டா (Jomo Kenyatta) போன்ற புரட்சியாளர்களுக்கு ஆதரவாக அவர் வாதாடியிருந்தார். அவர் புகழ்பெற்ற ‘கிங்ஸ் கவுன்சில்’ அமைப்பில் இருந்தார், ஆனால் கிங்ஸ் கவுன்சில் மத்தியில் அவர் தனியான ஒற்றை முற்போக்காளராக விளங்கியவர். பல்வேறு தருணங்களில் இந்தியக் கம்யூனிஸ்ட்களுக்காக அவர் வாதாடியுள்ளார்.

பெருந்திரள் அமைப்புகளில் 

ஏஎஸ்ஆர் சாரி, ஆப்பிரிக்க ஆசியன் சமாதான மற்றும் ஒருமைப்பாட்டு அமைப்பு (AAPSO), அனைத்திந்தியச் சமாதானக் குழு, ஜனநாயக வழக்கறிஞர்கள் சர்வதேச அசோசியேஷன், தொழிற்சங்கங்கள் முதலிய பல்வேறு பெருந்திரள் அமைப்புகளில் பணியாற்றினார்.

சாரி அவர்களுடைய குடும்பம் கட்சி சார்ந்த குடும்பம்; அவரது மனைவி தில்ஷாத் ஒரு

கட்சி உறுப்பினர் மற்றும் பெண்களின் சர்வதேச ஜனநாயக சம்மேளனத்தின் (WIDF) செயலாளர்; பம்பாயில் பணியாற்றும் அவரது மகன் லலித் கட்சி உறுப்பினர்; ஏஎஸ்ஆர்–இன் சகோதரர் ஏஎஸ்கே ஐயங்கார் தமிழ்நாடு சிபிஐ கட்சியின்  தலைவராகத் திகழ்ந்தவர்.

ஏஎஸ்ஆர் சாரி 1972 ஆகஸ்ட் 29 அன்று ஹைதராபாத்தில் தீவிர இதய பாதிப்பான வென்ட்ரிகுலர் ஃபைப்ரிலேஷன் காரணமாக மரணமடைந்தார். அதற்கு முன் அவர் பல்வேறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டார்.

கற்றறிந்த வழக்கறிஞரான தோழர் ஏஎஸ்ஆர் நினைவைப் போற்றுவோம்!

–நன்றி : நியூ ஏஜ் (2025, மே 18 –24)

தமிழில்: நீலகண்டன், 

என்எப்டிஇ, கடலூர்

 

 

 

 

 

 

 

 

    .

 

 

 

  

 

No comments:

Post a Comment