இந்திய தேசத்தைக் கட்டியமைப்பதில்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பங்களிப்புகள்
–அனில் ரஜீம்வாலே
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான காலனிய எதிர்ப்புப்
போராட்ட வரலாற்றுடன் இந்திய தேசம் உருவாகி வந்தது. அதன் வளமான கூட்டுப் பண்பாட்டுப்
பின்புல ஆதரவுடன், விடுதலைப் போராட்டத்தின்போது உருவான பொருளாதார தேசியத்தில் அது வேர்
கொண்டுள்ளது. தாதாபாய் நௌரோஜி தொடங்கி, சுரேந்திரநாத் பானர்ஜி, கோகலே, பந்தார்கர் மற்றும்
திலகர், காந்தி மற்றும் நேரு மூலம், பிரிட்டிஷ் ஆட்சியின் பொருளாதார, சமூக மற்றும்
அரசியல் மீது நடத்தப்பட்ட ஆழமான விமர்சனத்தில் உருவானது நமது விடுதலைப் போராட்டம்.
கம்யூனிஸ்டுகளின் வருகை
காலனியம் மீது விஞ்ஞானபூர்வ விமர்சனத்துடன் கம்யூனிஸ்டுகள்
நுழைந்தனர்; அந்த விமர்சனம், 19 மற்றும் 20ம் நூற்றாண்டின் பொருளாதாரத் தேசியப் பாரம்பரியங்களைத்
தொடர்ந்தது; மற்றும் அவற்றின் விஞ்ஞானபூர்வ பரிசீலனையில் இருந்த பற்றாக்குறையை விமர்சிக்கவும்
செய்தது. 1925ல் உழைக்கும் வர்க்கத்தின் கட்சியாகத் தங்களை அமைத்துக் கொண்ட கம்யூனிஸ்டுகளின்
வருகை, காலனியத்தின் பொருளாதார மற்றும் அரசியல் ஆட்சியின் மீது ஓர் ஆழமான புதிய பார்வையின்
தாக்கத்தை ஏற்படுத்தியது. இதில், இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தின் மற்ற போக்குகளில்
இருந்து அவர்கள் குணம்சரீதியில் வேறுபட்டார்கள்; அவர்கள் தரித்து வந்த ஆயுதம் --உலக
யுத்தம் மற்றும் ரஷ்யப் புரட்சியில் நிரூபிக்கப்பட்டதான-- உலக ஏகாதிபத்தியம் மீது விஞ்ஞானப்
பகுப்பாய்வு என்ற லெனின் ஆக்கித்தந்த ஆயுதம்.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், (அதே உலக ஏகாதிபத்திய முறையின்
ஒரு பகுதியான) பிரிட்டிஷ் மற்றும் ஐரோப்பிய பொருளாதாரங்களின் தேவைகளுக்கு உதவிடும்
தங்கள் காலனிய ஆட்சிமுறையின் துணை அமைப்பாக இந்தியப் பொருளாதாரத்தை மாற்றியது என கம்யூனிஸ்டுகள்
எடுத்துக் காட்டினர். காலனியப்படுத்தப்பட்ட நாடுகளின் பொருளாதார மேம்பாட்டில் ஏகாதிபத்தியம்
அக்கறைப்படவில்லை என்றும்; மற்றும் அதே வகையில் (காலனிய நாடுகளில் தேசிய) முதலாளித்துவ
வளர்ச்சியைத் தடுத்தது என்பதையும் மார்க்சிய விஞ்ஞான பகுப்பாய்வு நிரூபித்தது. எனவே,
பொதுவாகக் காலனியத்தை, குறிப்பாகப் பிரிட்டிஷ் காலனியத்தைத் தேசிய பூஷ்வாக்கள் (தேசிய
நடுத்தர வர்க்க முதலாளிகள்) எதிர்த்தனர் என்பது வரலாற்றுப் பூர்வமாக முற்போக்கானது,
மற்றும் புரட்சிகரமானதும் கூட. எதிரெதிர் சக்திகளின் போராட்டமான அது, இந்திய தேசியத்தின்
எழுச்சிக்கு வித்திட்டது.
அத்தகைய எதிர்ச் சக்திகளில் உழைக்கும் வர்க்கம், விவசாயிகள்,
பழங்குடிகள், அறிவாளிகள், படித்த நடுத்தர வர்க்கங்கள் மற்றும் பல தரப்பும்கூட அடங்கும்.
எனவே சிபிஐ, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக வளர்ந்து வரும் இளம் முதலாளித்துவம்
மற்றும் தேசியத்தின் முரண்படும் சக்திகளின் ஒற்றுமைக்கு, காலனியத்திற்கு எதிரான ‘தேசிய
முன்னணி’யில் ஒன்றுபட அறைகூவல் விடுத்தது. முதலாளித்துவ
வளர்ச்சியைத் தடை செய்யும் அனைத்துச் சங்கிலிகளையும் உடைத்து முழுமையாக விடுதலை செய்யும் கடமைகளை நிறைவேற்றுவதால், இந்திய விடுதலைப் போராட்டம் மட்டுமின்றி பிற காலனிய
தேசங்களிலும் நடைபெறும் தேசிய விடுதலை சுதந்திரப் போராட்ட இயக்கத்தை மாமேதை லெனின்,
அவற்றின் பொருளாதார மற்றும் அரசியல் உள்ளடக்கத்தில் அவை “பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சி”
என்றழைத்தார்.
தேசியப் போக்குகள் மீது ஆழமான தாக்கம்
இந்திய அரசியல் அரங்கில் கம்யூனிஸ்ட்களின் உதயம், ஆற்றல்மிகு
செயலூக்கி- யின் தாக்கத்தைக் கொண்டிருந்தது. தேசிய இயக்கத்தின் பல்வேறு போக்குகளின்
மீது அது ஓரளவு அல்லது பெருமளவில் தாக்கத்தைச் செலுத்தியது; அவற்றில் முதன்மையானதும்
முக்கியமானதும் இந்திய தேசிய காங்கிரஸ், (சீக்கியர்களின் ஓர் ஆயுதக் குழுவான) பாபர்
அகாலி மற்றும் (உருதுமொழியில் ‘கிளர்ச்சி‘ என பொருள்படும் Gadar) காதர் இயக்கங்கள், தலைமறைவு புரட்சிகர தேசிய இயக்கம், சோசலிஸ்ட்கள்
மற்றும் பிறர் அடங்குவர். குறிப்பாக உழைக்கும் வர்க்கம், விவசாயிகள், இளைஞர்கள் முதலானோர்
மார்க்சியத்தால் ஈர்க்கப்பட்டனர்.
அதனால்தான் நாட்டின் தேசிய விடுதலை இயக்கத்தில் சோசலிச மற்றும்
மார்க்ஸிய கோட்பாடுகள் பரவலாகப் புகழ் பெற்றிருந்ததை நாம் காண முடிகிறது. சுவாமி விவேகானந்தர்
உலகம் முழுவதும் சோசலிசம் குறித்துப் பேசினார். இங்கிலாந்தின் லேபர் கட்சி போல தொழிலாளர்களின்
கட்சியை அமைக்க திலகர் விரும்பினார். 1920ல் பம்பாயில் இந்தியாவின் முதல் தொழிற்சங்கமான
ஏஐடியுசி அமைப்பின் தொடக்க மாநாட்டில் தலைமை வகித்த லாலா லஜபதிராய் தனது தலைமை உரையில்
சோசலிசம் மற்றும் சோவியத் யூனியன் குறித்த தெளிவான நேர்மறை கருத்துக்களைத் கூறினார்.
இந்திய மற்றும் உலக நிகழ்வுகளைப் பகுப்பாய்வு செய்ய, விஞ்ஞான சோசலிசம் மற்றும் வரலாற்றுப்
பொருள்முதல்வாத முறையை ஒப்புக் கொண்டவர்களில் முதலானவர் பண்டிட் நேரு. அவர், மார்க்ஸ்
மற்றும் லெனின் படைப்புகளைத் தீவிரமாக ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார்; பல புரட்சியாளர்கள்
மார்க்சியத்துடன் அறிமுகம் பெறுவதற்கு உதவினார். பிசி ஜோஷி, ஆர்டி பரத்வாஜ், எஸ் காட்டே
மற்றும் பல கம்யூனிஸ்டுகளுடன் நேரு இணைந்து பணியாற்றினார்.
வெளிநாட்டில் லாலா ஹர்தயாள் மற்றும் எண்ணற்ற பிற காதர் இயக்கவாதிகள்
மார்க்சிய ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்தனர்.
HSRA மீது மார்க்சியத்தின் தாக்கம்
தலைமறைவு தேசியப்
புரட்சிகர இயக்கத்தில் மார்க்சியக் கோட்பாடுகளை முதலில் கற்றறிந்தது பகத்சிங் மற்றும்
அவரது குழுவினரும்தான். இந்த இயக்கத்தில் அராஜகவாத கோட்பாடுகள் பெரிதும் மலிந்திருந்தது:
அந்த இயக்கம், பிரிட்டிஷ் காலனிய ஆட்சியைச் சில துணிச்சலான புரட்சியாளர்களின் ஆயுத
நடவடிக்கைகளால் சுலபமாகத் தூக்கி எறிய முடியும் எனத் தவறாகக் கருதியது. அவர்களது பல
சாகசங்கள் மற்றும் தியாகங்கள் இருந்த போதும், அவர்கள் எதார்த்தத்தில் இருந்து வெகு
தூரம் விலகி இருந்தனர்; மற்றும் உண்மையில் விடுதலைக்காகத் தேசம் தழுவிய வலிமையான பெருந்திரள்
இயக்கத்தைக் கட்டுவதில் தோல்வி அடைந்தனர். இந்தியச் சமூகம் மற்றும் அதன் வர்க்கங்களைப்
பகுப்பாய்வு செய்வதற்கு விஞ்ஞான முறைகளைப் புரிந்து கொண்டு பயன்படுத்த அவர்கள் எந்த
முயற்சியும் செய்யவில்லை.
தொடக்கத்தில் அராஜகம் மற்றும் அராஜக அரசின்மை வாதம் (அராஜகத்தவ
சிண்டிகலிசம்) அவர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தது. ஒரு பிரிவு க்ரோபோட்கின் மற்றும்
பகுனின் (Kropotkin and Bakunin) கருத்தைப் பின்பற்றியது.
அதைத் தொடர்ந்து இயக்கத்திற்குள் கருத்தியல் போராட்டம் ஏற்பட்டது; உதாரணத்திற்கு அனுசீலன்,
ஜுகாந்தர் மற்றும் ஹிந்துஸ்தான் ரிபப்ளிக் அமைப்பில் (HRA) அதன் பிரதிபலிப்பைக் காணலாம்.
சிபிஐ கட்சி அமைக்கப்பட்டதானது, கருத்தியல் விவாதங்களைக்
கூர்மைப்படுத்த இட்டுச் சென்றதை ஏனைய பிற சான்றுகளுக்கு மத்தியில் பகத்சிங் மற்றும்
மற்றவர் எழுத்துக்களின் ஆவணங்கள் பிரதிபலித்தது. அவை அராஜகத்துடன் உடன்பாடு இன்மையும்,
மற்றும் மார்க்சியத்தை நோக்கி ஈர்ப்பும் வளர்ந்து வந்ததைக் காட்டியது. ‘HRA’ அமைப்பை HSRA (ஹிந்துஸ்தான்
சோசலிசக் குடியரசு அசோசியேஷன்) என மாற்றியதில் வெற்றியடைந்த பகத்சிங், தனிநபர் தீவிரவாதம்
குறித்த கருத்தியல் விவாதத்தைத் கட்டவிழ்த்து விட்டார்.
1920களின் பிற்பகுதி மற்றும் 1930களின் முற்பகுதி வாக்கில்
அவரது குழுவினர் ஏறத்தாழ கம்யூனிஸ்டுகளுடன் அடையாளப்படுத்தப்பட்டனர். ‘கம்யூனிஸ்ட்
கட்சியின் திட்டம்’ ஒன்றையும்கூட பகத்சிங் தயாரித்தார் மற்றும்
தன்னை ஆயுதப் போராட்டத்தில் இருந்து தெளிவாகப் பிரித்து வரையறுத்தார். இப்போது அவர்,
போராட்டத்தின் பிரதான வடிவம் கருத்தியல்– அரசியல் வகைப்பட்ட
ஒன்று என வற்புறுத்தினார்.
1930கள் –40கள் வாக்கில் HSRA, சிட்டாகாங் குழு, பஞ்சாப் புரட்சியாளர்கள், மெட்ராஸ் மாகாணம் மற்றும் பிற இடங்களில்
இருந்தவர்கள் விஞ்ஞான சோசலிசம் மற்றும் மார்க்சியத்திற்கு வந்துவிட்டனர்.
அந்தமானில் கம்யூனிஸ்டுகள் வலிமையாக ஒருங்கிணைப்பு
நூற்றுக்கணக்கான கைதிகளைக் கம்யூனிசத்திற்கு மாற்றியதில்
அது தீர்மானகரமான பங்காற்றியது. அவர்களில் பட்டுகேஸ்வர் தத், விஜயகுமார் சின்ஹா, ஷிவ்
வர்மா, சிட்டஹாங் குழு உறுப்பினர்கள் மற்றும் எண்ணற்ற பிற புரட்சியாளர்கள் அடங்குவர்.
சுமார் 400 பேர் கம்யூனிஸ்ட் கன்சாலிடேஷன் அமைத்தனர் மற்றும் அந்தமான் தீவுகளிலிருந்து
நாட்டின் முக்கிய நிலப்பகுதிக்குத் திரும்பியதும் அவர்களின் பெரும்பான்மையோர் கம்யூனிஸ்ட்
கட்சியில் இணைந்தனர்.
சிட்டஹாங் குழு
சிட்டஹாங் ஆயுதக் குழுவின் பெரும் எண்ணிக்கையிலானவர்கள்,
மார்க்சியம் மற்றும் கம்யூனிசத்தில் உடன்பட்ட பிறகு, இரகசிய தனிநபர் சார்ந்த ஆயுதப்
போராட்டத்தைக் கைவிட்டு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தனர். கல்பனா தத், சூர்யா
சென், கணேஷ் கோஷ் போன்ற மற்றும் பிற பெயர்கள் அவர்களில் அடங்கும்.
‘தேசிய முன்னணி’ முழக்கமும் காங்கிரஸ் கட்சிக்குள் பணியாற்றலும்
தேசிய முன்னணி அமைக்க
PC ஜோஷி விடுத்த அறைகூவல், உடனடி உத்தி சார்ந்த தேவைகளைத் தாண்டி,
நீண்ட காலச் செயல் திட்ட நோக்கத்தை ஏற்படுத்தித் தந்தது; அது காங்கிரஸ்காரர்கள், சோசலிஸ்ட்கள்
மற்றும் பிறருக்கும் கூட நட்சத்திரமாக வழிகாட்டும் ஒளி வழங்கியது. அதன் பின் விளைவுகளை
இந்தியச் சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்திலும் காணலாம்.
சுதந்திரப் போராட்ட வீரர்கள் மத்தியில் அது ஆழமான மன அதிர்வுகளை
ஏற்படுத்தியது. மேலும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஒன்றுபட்ட தடுப்பு அரண்
கோட்டையாகக் காங்கிரஸை மாற்றுவதில் அது செயல்திட்ட உத்தி நடவடிக்கையாகவும் இருந்தது.
மேலும் பல்வேறு உடனடி விளைவுகள் மற்றும் நீண்ட காலப் பின்விளைவுகள் கொண்டிருந்தது.
அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டியில் சுமார் இரண்டு டஜன் கம்யூனிஸ்ட்கள்
இருந்தனர். பஞ்சாப் பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டிக்கு ஒரு கம்யூனிஸ்ட் தலைமை வகித்தார்;
பம்பாய் பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டியில் ஒரு சமயம் கம்யூனிஸ்ட்கள் பெரும்பான்மையினராக
இருந்தனர்; மெட்ராஸ் பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டியில் பெரும் எண்ணிக்கையிலான கம்யூனிஸ்டுகள்
இருந்தனர்.
கம்யூனிஸ்ட் தலைவர் டாக்டர் ZA அகமத், AICCன் விவசாயக் குழுவுக்குத் தலைமை ஏற்றார்; மற்றும் பிற குழுக்களில்
கம்யூனிஸ்டுகள் இடம் பெற்றனர். எஸ் ஜி சர்தேசாய், எஸ்வி காட்டே, ஆர்டி பரத்வாஜ் போன்ற
பிற கம்யூனிஸ்டுகள் பலரும் AICCல் தீவிரமாகப்
பணியாற்றினர்.
காங்கிரஸ் கொள்கைகளில் கம்யூனிஸ்டுகளின் தாக்கம்
விவசாயம், தொழில் துறை, திட்டமிடல், பொதுத்துறை, அரசமைப்பு
அமைப்புகள், தேர்தல்கள் முதலானவை தொடர்பான காங்கிரஸ் கொள்கைகளில் கம்யூனிஸ்டுகள் ஆழமான
செல்வாக்கு செலுத்தினர். சிபிஐ மத்திய செயற்குழு 1928லேயே அரசியலமைப்பு நிர்ணய சபை
அமைப்பது தொடர்பாக, அனைவருக்கும் வாக்குரிமை அடிப்படையில், முன்மொழிவுகளை முன் வைத்தது.
அந்த நேரத்தில் AICC சார்பாக முதலாவது இந்திய அரசியலமைப்பை மோதிலால் நேரு வடிவமைத்தார்.
முதன் முதல் ‘பூரண சுதந்திரம்’ கோரும் தீர்மானத்தை ஹஸ்ரத் மொகானி மற்றும் சுவாமி குமாரானந்த்
ஆகிய இரு கம்யூனிஸ்ட்களே முன்வைத்தனர் என்பதை அனைவரும் அறிவர்; 1921ல் நடைபெற்ற அகில
இந்திய காங்கிரஸ் கமிட்டி அகமதாபாத் அமர்வில் அவர்கள் முன்வைத்த அந்தத் தீர்மானம் அப்போது
நிராகரிக்கப்பட்டது. மீண்டும் அது கம்யூனிஸ்ட்களால் காங்கிரசின் மெட்ராஸ் அமர்வில்
(1927) முன்மொழிக்கப்பட்டது; நேருவின் ஆதரவுடன்
தீர்மானம் நிறைவேறியது. 1928 கல்கத்தா அமர்வில் தீர்மானத்தை உடனடியாக ஏற்று
அமலாக்கக் கோரி, காங்கிரஸ் மாநாட்டுப் பந்தல் அமைந்த இடத்தில், கம்யூனிஸ்டுகள் பெரும்
ஆர்ப்பாட்டம் நடத்தினர். இறுதியில் 1929ல் அந்தக் கோரிக்கை காங்கிரசால் ஏற்கப்பட்டு
அமலாக்கப்பட்டது.
பொதுத்துறை, தொழில்மயம், தேசியமயமாக்கல் மற்றும் திட்டமிடல்
தொடர்பான கொள்கைகளின் தொடக்கங்கள் 1930கள் மற்றும் 1940களில் மேற்கொள்ளப்பட்டன; அதில்
காங்கிரஸில் இருந்த கம்யூனிஸ்டு உறுப்பினர்கள் முக்கியப் பங்காற்றினர்.
ஏகாதிபத்திய எதிர்ப்பு
கம்யூனிசக் கருத்தியல், பொதுவாக விடுதலை இயக்கத்தின் மற்றும்
குறிப்பாகக் காங்கிரஸ் கட்சியின் ஏகாதிபத்திய எதிர்ப்புத் திசை வழியை வலிமைப்படுத்தியது.
ஏகாதிபத்தியம் மற்றும் காலனியம் குறித்த மார்க்சிய அணுகுமுறையின் ஆழமான தாக்கத்தைச்
சுதந்திரப் போராட்ட வரலாறு மற்றும் குறிப்பாகக் காங்கிரஸ் கட்சி பெற்றது. பண்டிட் ஜவஹர்லால்
நேரு ‘ஏகாதிபத்தியத்திற்கு எதிரான லீக்’ அமைப்பின் உயர்ந்த செயல்பாட்டாளர் ஆனார். ஸ்பெயின் குடியரசு இயக்கம் மற்றும்
சீனாவில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான மக்கள் விடுதலை இயக்கத்துக்கு ஆதரவான
ஒருமைப்பாட்டு இயக்கங்களுடன் அவர் முக்கிய முன்னணி பங்கெடுத்தார். அவரது முன்முயற்சியில்தான்
1935ல் டாக்டர் கோட்னீஸ் தலைமையிலான மருத்துவ மிஷன் குழு ஒன்று சீனாவுக்கு அனுப்பப்பட்டது.
இரண்டாம் உலகப் போருக்கு முன்பும், போர் நடந்த போழ்திலும்
காங்கிரஸ் தொடர்ச்சியான பாசிச எதிர்ப்பு நிலைப்பாட்டை வெளிப்படுத்தியது; மேலும் சோவியத்
யூனியன் மற்றும் பாசிசத்தை எதிர்த்துப் போரிட்ட மக்களோடு காங்கிரஸ் உறுதியாக நின்றது.
உண்மையில் காங்கிரஸ் பாசிசத்திற்கு எதிரான மற்றும் நாசிசத்திற்கு எதிரான பெரும் தடுப்புச்
சுவர் அரண் ஆனது. அத்துடன் கம்யூனிஸ்டுகள் பெரும் பங்கு ஆற்றினர்
காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி (CSP)
ஒரு தனித்துவமான அமைப்பான CSP, காங்கிரஸுக்குள் இடதுசாரி சிந்தனை மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு உள்ளவர்கள்
மற்றும் சோசலிசச் சக்திகளை ஒன்று திரட்டியது. கம்யூனிஸ்டுகள், சோசலிஸ்டுகள், நேருவியர்கள்,
இடதுசாரி காங்கிரஸ்காரர்கள் மற்றும் சிலர் அடங்கிய முன்னணியாக அது இருந்தது. அது
1930களில் ‘தி காங்கிரஸ் சோஷலிஸ்ட்’ வார இதழை வெளியிட்டது. மேலும் மார்க்சியக் கோடைக் காலப் பள்ளியையும் பல ஆண்டுகள் நடத்தியது.
அதில் காட்டே, ஜெயப்பிரகாஷ் நாராயணன், ஆச்சாரிய நரேந்திர தேவ் முதலானோர் பாடம் நடத்தினர். 1938ல் காங்கிரஸ் தலைவர் பொறுப்புக்கு
நடந்த தேர்தலில் சுபாஷ் சந்திர போஸ் வெற்றி
பெற்றதில் CSP முக்கிய காரணியாக இருந்தது.
சதி வழக்குகளைச் சந்தித்ததும் வெஞ்சிறை வாசங்களும்
கம்யூனிஸ்டுகள் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான தங்கள் போராட்டத்தில்
கடுமையான சூழல்களைச் சந்தித்தனர், மிக மோசமாக ஒடுக்கப்பட்டனர். மீரட் சதி வழக்கு
(1929-33) பிரபலமாக அனைவரும் அறிந்த ஒன்று. அவர்களுக்கு எதிராகப் புனையப்பட்ட பல்வேறு
பிற வழக்குகளில் கான்பூர் சதி வழக்கு, மெட்ராஸ் சதி, பெஷாவர் வழக்கு, வேலூர் வழக்கு,
கோயம்புத்தூர் வழக்கு முதலானவை சில.
கம்யூனிஸ்டுகள் ‘காலாபானி’ (அந்தமான் தனிமைச் சிறை; காலாபானி,
‘கறுப்பு நீர்’ மற்றும் ‘மரணம்’ என்பதைக் குறிக்கும்), தியோலி, புக்ஸா (Buxa) ஹிஜிலி
முதலான இடங்களின் சிறைகளுக்கு அனுப்பப்பட்டனர். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தைக் கட்டாயப்படுத்தி
கம்யூனிஸ்டுகளின் சக்தியை ஒப்புக்கொள்ள வைத்ததில் தீயோலி தடுப்புக்காவல் முகாம் சரித்திர
ரீதியான பங்கு வகித்தது; அது இறுதியில் அவப்பெயர் எடுத்த தடுப்புக்காவல் முகாமையே கலைத்திட
வழிகோலியது
புக்ஸா, ஹிஜிலி,
வேலூர், மெட்ராஸ், கோயம்புத்தூர், லாகூர் கோட்டை மற்றும் எண்ணற்ற பிற தடுப்புக் காவல்
மையங்கள் கம்யூனிஸ்டுகளின் மன உறுதி மற்றும் ஊக்க உணர்வைக் குலைப்பதில் தோல்வி அடைந்தன.
ஆயுதப் போராட்டத்தில் பங்கேற்பு
தெலுங்கானா, தேபகா, புன்னப்புரா– வயலார் உள்ளிட்ட வரலாற்றுப் புகழ்பெற்ற பல்வேறு ஆயுதப் போராட்டங்களைக்
கம்யூனிஸ்டுகள் தலைமை ஏற்று நடத்தி கலந்து
கொண்டனர்; மேலும் ராயல் இந்தியக் கடற்படை கிளர்ச்சி (RIN revolt) மற்றும் நிஜாமின் ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு சமஸ்தான பகுதிகளில்
விவசாயப் போராட்டங்கள் மற்றும் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான போராட்டங்கள் முதலானவற்றில்
கலந்து கொண்டனர். கட்சி தனது அணிகளின் ஆயிரக்கணக்கான தோழர்களின் இன்னுயிரை இப்போராட்டங்களில்
இழந்து தியாகம் செய்தது.
தேர்தல்களின் பங்கேற்பு
பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் என்னவெல்லாம் சட்டப்படியான, அரசியலமைப்புக்கு
உட்பட்ட மற்றும் தேர்தல் கள வாய்ப்புகளோ அவற்றைச் சிபிஐ, போராட்டங்களைப் போலவே சமமாக, திறமையாகப் பயன்படுத்தியது. பிரிட்டிஷ் ஆட்சியின்
கீழ் வாக்குரிமை மக்கள் தொகையில், சொத்து மற்றும் கல்வி அடிப்படையில், 12 முதல் 14
சதவீதம் அளவே இருந்தது. 1937ல் மிகவும் கடினமான சூழ்நிலைகளில் கம்யூனிஸ்டுகள் தேர்தல்களில்
போட்டியிட்டனர். அப்போது கட்சி தடை செய்யப்பட்டு இருந்தது, எனினும் அதன் வேட்பாளர்கள்
சுயேச்சைகளாக அல்லது காங்கிரஸின் பகுதியாக போட்டியிட்டனர். பஞ்சாப் சட்டமன்றத்தில்
ஐந்து இடங்கள் மற்றும் வேறு சில பகுதியில் சில இடங்களிலும் சிபிஐ வென்றது. பொதுவாகக்
கட்சி காங்கிரசுக்காகப் பணியாற்றியது.
அப்போது தொழிலாளர் தொகுதிகள் என்று இருந்தது பெரும் உதவியாகும்.
அவற்றில் ஆலைத் தொழிலாளர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். 1946ல் மாகாண தேர்தல்களில்
சிபிஐ பல இடங்களில் வென்றது. அவர்களில் எஸ்ஏ டாங்கே பம்பாய் சட்டமன்ற உறுப்பினராகத்
தேர்வானார். அரசியலமைப்பு நிர்ணய சபையில் சிபிஐ ஓர் இடத்தை வென்று, சோமநாத் லாகிரி
அரசியலமைப்பு நிர்ணய சபை உறுப்பினரானார்.
இவ்வாறு நம் நாடு விடுதலை அடைந்த நாடாக ஆவதற்கு நடத்திய நமது
போராட்டங்களின் பல்வேறு பரிணாமங்களில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பங்களித்தது.
சிபிஐ மற்றும் சுதந்திர தேசம்
ஜனநாயகம், அரசியலமைப்புச் சட்டம், பேச்சுரிமை மற்றும் செயல்படும்
உரிமை முதலியன சுதந்திரம் நமக்கு வழங்கிய சில பயன்கள். கடினமான வழியில் ஜனநாயகத்தின்
முக்கியத்துவத்தை மக்கள் புரிந்து கொண்டனர். பிரிட்டிஷ் ஆட்சியில் மிகக் குறைந்த சிறுபான்மை
அளவில் மட்டுமே வாக்குரிமை இருந்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் வயது, பாலினம்,
வர்க்கம், சாதி, வகுப்பு, பணக்காரரோ ஏழையோ, கற்றவரோ கல்லாதவரோ என வேறுபாடு கருதாது
வயதுவந்தோர் அனைவருக்கும் வாக்குரிமையை வழங்கியுள்ளது.
ஜனநாயகம், அரசியலமைப்புச் சட்டம் மற்றும் வாக்குரிமைகள் இந்தியாவில்
சமூக அரசியல் மாற்றத்திற்கான புதிய ஆயுதங்களாயின. கம்யூனிஸ்டுகள், ஜனநாயகத்திற்கான
தங்கள் போராட்டங்களில் பெருமளவு பங்களித்தும் மற்றும் ஜனநாயக அனுபவங்களில் இருந்து
கற்கவும் செய்தனர். இந்தியா விடுதலை அடைந்த பிறகுள்ள காலச் சூழலில் கம்யூனிஸ்டுகளின்
பங்கு இரண்டு பிரதான விஷயங்களில் வெளிப்பட்டு முன்னிற்கின்றன.
ஒன்று, ஒரு காலனிய தேசத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்கான புதிய
பாத்திரம். ஒரு கம்யூனிஸ்ட் கட்சி புரட்சிக்காகப் பணியாற்றி –முதலாளித்துவ முறையை தூக்கி
எறிவதாகிய– புரட்சியை நடத்த இயல்பாக எதிர்பார்க்கப்படுகிறது.
மரபார்ந்த இந்த செவ்வியல் கோட்பாடு, இந்தியாவிலும் பிற காலனிய நாடுகளிலும் உள்ள கம்யூனிஸ்ட்களுக்கு
அப்படியே பொருந்தவில்லை. ஏகாதிபத்தியக் காலனியத்தால் சுரண்டப்பட்ட ஒரு காலனிய நாடு,
மறு கட்டமைக்கப்படவும் முன்னேற்றப்படவும் வேண்டிய தேவை உள்ளது. இங்கே முன்னேற்றம் என்பதன்
பொருள் அடிப்படையில் –தங்களுக்கு ஏகாதிபத்தியத்தால் மறுக்கப்பட்ட– முதலாளித்து உறவுகள் மற்றும் உற்பத்திச் சக்திகளை முன்னேற்றுவது என்பதாம்.
அப்போது முதலாளித்துவம் வளர்ச்சி குன்றிய நிலையில் இருந்தது.
எனவே தொழில்மயம் மற்றும் விவசாய வளர்ச்சியை மேம்படுத்த வேண்டி,
அடிப்படை கட்டுமானங்கள் மற்றும் கனரக ஆலை வடிவத்தில் உற்பத்திச் சாதனங்கள் அத்தியாவசியத்
தேவையானது. அதற்கேற்ப இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தனது பொருளாதார மற்றும் அரசியல் செயல்திட்ட
உத்திகளை உருவாக்கியது.
எனவே இந்தச் சூழலில் சிபிஐ, இந்திய தேசத்தைக் கருத்தியல்,
அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் வலிமைப்படுத்தும் நேர்மறை பங்கை ஆற்ற வேண்டி இருந்தது.
மைய அரசில் ஒரு போதும் சிபிஐ அதிகாரத்தில் இல்லாத போதும், தேசத்தின் கொள்கைகளை வகுப்பதில்
ஆக உயர்ந்த முக்கிய பங்கை ஆற்றியது; மற்றும் நேருவின் திட்டச் செயல்பாடு வரைபடச் சட்டகத்தை
ஆதரிக்கவும் செய்தது, விமர்சிக்கவும் செய்தது.
சிபிஐ, பொருளாதாரத்தின் அதிகாரம் செலுத்தும் உச்சத்தில் பொதுத்துறை
பிரிவை வைத்து, ஆக்கபூர்வ தேசியமய செயல் திட்டத்தை மேம்படுத்தியது; இந்தியப் பொருளாதாரத்தை
வலிமைப்படுத்துவதன் ஒரு பகுதியாக, வலிமையான சுயசார்புள்ள இந்தியப் பொருளாதாரத்தைக்
கட்ட நிலச் சீர்திருத்தங்களையும் மேம்படுத்தியது –அந்தச் செயல் முறையை ஆளும் பூர்ஷ்வா
வட்டத்திற்குள் உள்ள ஏகபோக ஆதரவு மற்றும் நில உடமை ஆதரவு சக்திகளுக்கு எதிராகப் போராடியும்
முன்னெடுத்துச் சென்றது.
‘ஒன்றுபடுதல் போராடுதல்’ கொள்கையைத் தொடர்ந்து சுதந்திர இந்தியாவில் சிபிஐ தொடர்ந்து
எப்போதும் வலதுசாரி பிற்போக்குச் சக்திகளைக் கட்டுப்படுத்தி தடுத்து நிறுத்தப் போராடி
வந்தது.
14பெரும் ஏகபோக வங்கிகள் 1969ல் தேசியமயமாக்கப் பட்டதும்
மற்றும் அதைச் சுற்றி நிகழ்ந்த அரசியல் நிகழ்வுகளும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்
மிகப் பெரிய சாதனை: அதுவும் நிலப்பிரபுத்துவ மற்றும் ஏகபோக சக்திகள் திருப்பி அடிக்கப்பட்டபோது,
இந்தியப் பொருளாதார நலனுக்காகச் சிபிஐ நிகழ்த்திய சாதனை அது.
வலதுசாரி பிற்போக்குக்கு எதிரான போராட்டம்
அரசியல் மற்றும் பொருளாதாரச் சீர்திருத்தங்களை உறுதியாகவும்
தொடர்ச்சியாகவும் மேற்கொள்ளப்படாவிடில், வலதுசாரி வகுப்புவாத சக்தி அதிகாரத்தைக் கைப்பற்றும்
ஆபத்துகள் சூழ்ந்து இருப்பதைச் சிபிஐ தொடர்ச்சியாகச் சுட்டிக் காட்டியது. அதன் எச்சரிக்கைகள்
இன்று உண்மையாகிவிட்டது.
இந்த இறுதி நோக்கத்திற்காக, காங்கிரஸ் மற்றும் பிற அரசியல்
கட்சிகளின் அரசுகளின் மக்கள் விரோதக் கொள்கைகளையும்; மற்றும் ஒன்றியத்தில் பிற அரசுகளையும்
மாநிலங்களிலும் எதிர்த்துச் சிபிஐ பெரும் மக்கள் திரளைத் திரட்டி நினைவில் நிற்கும்
பல போராட்டங்களை நடத்தியது.
நாடாளுமன்றத்தை நோக்கி முதலாவது பேரணி
அந்தப் போராட்டங்களில் உதாரணத்திற்கு ஒன்றைக் குறிப்பிட்டால் போதுமானது. இந்திய வரலாற்றில் முதன் முதலாக மக்களைத் திரட்டிப் பாராளுமன்றத்தை நோக்கி பேரணியை நடத்தியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான்! ஒரு கோரிக்கை சாசனத்தைத் தொகுத்து நாடு முழுதும் மக்களிடம் ஒரு கோடியே 25 லட்சம் கையெழுத்துக்களைப் பெற்று அந்தக் கோரிக்கை சாசனத்தைச் சிபிஐ வெகுகாலம் முன்பே-- 1963 செப்டம்பர் 13ல் பாராளுமன்றத்திடம் சமர்ப்பித்தது. அது குணாம்ச ரீதியில் புது வகையான, பல லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்புடன் நடத்தப்பட்ட ஆதரவு திரட்டல். இன்று டெல்லிப் பேரணி (டெல்லி மார்ச்) மாதிரி போராட்டம் பொதுவான முறையானது.
இப்பெருந்திரள் போராட்டங்கள் இந்திய தேசத்தின் ஜனநாயக உள்ளடக்கத்தைப்
பலப்படுத்தி பாதுகாத்தது. வகுப்புவாதப் பாசிசச் சக்திகளால் இன்று அரசியலமைப்புச் சட்டம்
மற்றும் ஜனநாயகம் தாக்கப்படுவதில் இருந்து அவற்றை பாதுகாக்க நாம் போராட்டங்களில் ஈடுபட்டு
வருகிறோம்.
நமது போராட்டம் தொடரும்!
நமது லட்சியம் நிறைவேறும்!
–நியூ ஏஜ் செப்டம்பர் (21 –27)
–தமிழில் : நீலகண்டன்
என்எப்டிஇ, கடலூர்
No comments:
Post a Comment