Friday, 24 October 2025

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 112 -- ஷிவ் வர்மா –பகத்சிங்கின் சகா

 கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 112


ஷிவ் வர்மா –பகத்சிங்கின் சகா,
உ பி --யில் கட்சியைக் கட்டியவர்

அனில் ரஜீம்வாலே

ஷிவ் வர்மா, நாம் நன்கு அறிந்த சர்தார் பகத்சிங்கின் தோழர், ஹிந்துஸ்தான் சோஷலிஸ்ட் புரட்சிகர அமைப்பின் அமைப்பாளர், அந்தமான் செல்லுலார் சிறையில் நீண்ட காலம் கைதியாக இருந்தவர்,  உ.பி மற்றும் பிற இடங்களில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை வளர்த்தவர்களில் ஒருவராவார்.

ஷிவ் வர்மா உபி ஹர்தோய் மாவட்டம், கட்டேளி கிராமத்தில் 1904 பிப்ரவரி 9ம் நாள் பிறந்தார். தந்தை ஸ்ரீ கன்னையா லால் வர்மா, தாயார் திருமதி குந்தி தேவி. குழந்தைகள், ஷிவ் உள்ளிட்ட ஆறு பேர். அரசு ஊழியரான அவரது தந்தை பகுதிநேரம் விவசாயத்தில் ஈடுபட்டவர். அவர் அரசு வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஆயுர்வேத மருத்துவத் தொழிலை மேற்கொண்டார்.

ஷிவ் கான்பூர் டிஏவி கல்லூரி மாணவர். அவர் தனது தொடக்க அரசியல் உணர்வைப் பெற்றிட தந்தை வழி  சகோதரர் காரணமாக இருந்தார்.

சுதந்திரப் போராட்டத்தில் நுழைவு

15 வயது முதலே ஷிவ் அரசியல் இயக்கங்களின் பால் ஈர்க்கப்பட்டார். அப்போது அவர் எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார். அவரது மூத்த சகோதரனும் மூன்று நண்பர்களும், ஹர்தோய் பகுதியில் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்த, முதலாவது சத்யாகிரகிகள். அவர்களது உதாரணத்தைப் பின்பற்றி ஷிவ் வர்மாவும் படிப்பை விட்டு விட்டு 1920 ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்தார்.

அந்த இளம் வயதிலேயே ஷிவ், ஹர்தோய் காங்கிரஸ் அலுவலகப் பொறுப்பாளர் ஆனார். இறுதியில் அவர் மாவட்டக் காங்கிரஸ் செயலாளராக அறிவிக்கப்பட்டார்.

பகிஷ்கரிப்பு இயக்கத்தில் அவர் தீவிரமாகப் பங்கேற்றார். ஒத்துழையாமை இயக்கம் திரும்பப் பெறப்பட்டதும் பெரும் ஏமாற்றமடைந்த ஷிவ், முற்றாகக் காங்கிரசை விட்டு வெளியேறினார். அவரது மூத்த சகோதரர் ஒரு சன்னியாசியாக மாறினார். கயா பிரசாத் பிரம்மச்சாரி என்பவருடன் ஷிவ்வுக்குத் தொடர்பு ஏற்பட்டது. அவர் புரட்சிகரப் புத்தகங்களைத் தந்தார்.

1922--23ல் உ.பி அவந்த் பகுதியில் நடைபெற்ற ‘விவசாயிகளின் ஒற்றுமை இயக்கத்தில் (ஏகா மூமெண்ட்)  ஷிவ் தீவிரமாகப் பங்கேற்றார். ஹரிஜனத் தலைவர் மாதரி பாசி தலைமையில் நடைபெற்ற அந்த இயக்கம் ஹர்தோய், உனாவ், ஃபரூகாபாத் முதலிய பகுதிகளுக்கும் பரவியது. இதன் மத்தியில் ஷிவ் ஒரு புரட்சிகர குழுவை அமைக்க   பாசியும் உறுப்பினரானார். அந்த இயக்கம் முடிந்த பிறகு அவர் தனது படிப்பைத் தொடர்ந்தார்; 1925ல் ஜெய்தேவ் கபூர் உடன் அவர் கான்பூர் வந்தார்.

கான்பூரில்தான் சச்சீந்திரநாத் சன்யால், சுரேஷ் சந்திர பட்டாச்சாரியா மற்றும் பிறரால் ‘ஹிந்துஸ்தான் குடியரசு அசோசியேஷன் அமைக்கப்பட்டது. பின்னர் ஷிவ் வர்மா, சுரேந்திரநாத் பாண்டே, பிஜாய் குமார் சின்ஹா, ஜெய்தேவ் கபூர் மற்றும் பிறரும் அதில் இணைந்தனர். தலைமறைவு வாழ்வில்  ஷிவ் வர்மாவின் பெயர் ‘பிரபாத்

பிஜாய் குமார் சின்ஹா, ஷிவ் வர்மாவை ராதா மோகன் கோகுல்ஜியிடம் அறிமுகம் செய்து வைத்தார்; அவர், தீவிரமான இதழியல் செயல்பாட்டாளர், எழுத்தாளர் மற்றும் 1925 கான்பூரில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தொடக்க மாநாட்டிற்காகத் தீவிரமாகப் பணியாற்றியவர்களில் ஒருவராவார். அந்த நேரத்தில் நடத்தப்பட்ட அகில இந்தியக் காங்கிரஸ் கட்சி அமர்வில் ஷிவ் ஒரு தன்னார்வத் தொண்டராக இணைந்தார்.

கோகுல்ஜி உடன் ஷிவ்வின் சந்திப்பு 1926 டிசம்பரில் நடந்தது. ஒரு புத்தகத்தைத் திரும்பித் தர பிஜாய் தன்னுடன் அவரை அழைத்துச் சென்றிருந்தார். கோகுல் ஜி ஏழை மக்களும் தொழிலாளர்களும் நிறைந்த இடத்தில் வாழ்வது வழக்கம். ஷிவ் அவரை 1925ல் நடைபெற்ற காங்கிரஸ் அமர்வில் போகிற போக்கில் நொடிப் பொழுது பார்த்ததுதான்.

ராதா மோகன் ஜி, ஷிவ் வர்மாவைக் கருத்தியலில் பயிற்றுவித்தார். ’கம்யூனிசம் என்றால் என்ன?’ என்ற அவர் எழுதிய புத்தகத்தைப் படிக்கக் கொடுத்தார். புத்தகத்தைத் தரும்போது அவர் ஷிவ்விடம், ‘அப்புத்தகத்தை ஒருமுறை அல்லது இரண்டு முறை அல்ல, பலமுறை படிக்குமாறு’ கூறினார்.  அப்படி அதை முழுமையாகப் படிக்காமல் தன்னிடம் மீண்டும் திரும்ப வேண்டாம் என ஷிவ்விடம் கேட்டுக் கொண்டார்! மேலும், தனது கேள்விகளுக்குப் பதில் அளிக்க முழுமையான தயாரிப்புடன் அவர் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

அதைத்தான் ஷிவ் செய்தார். ஆழ்ந்து படித்த பிறகு அவர் புத்தகத்தைத் திரும்பக் கொடுத்தார்; கோகுல் ஜி கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் வெற்றிகரமாகப் பதில் அளித்தார்: கோகுல் ஜி, “சபாஷ், நீ தேர்வில் வென்று விட்டாய்!” என்றார். கோகுல் ஜி பெருமளவில் சேகரித்து வைத்திருந்த நூல்களைப் படிக்க ஷிவ் வர்மாவை ஊக்கப்படுத்தினார். அவரது நூலகத்திலிருந்து பல பல புத்தகங்களைப் படித்தார், அவர்கள் சோசலிசம் குறித்து விவாதித்தனர்.

மேலும் பல புரட்சிகர நடவடிக்கைகளிலும் ஷிவ் ஈடுபட்டார். விலை உயர்ந்த இரண்டு பிஸ்டல்களைப் பெற உதவியவர் கோகுல் ஜி. ஒரு பிஸ்டல் மணி பானர்ஜியாலும், மற்றொன்று அலகாபாத் சிஐடி-யான எஸ்.பி. பானர்ஜியாலும் பயன்படுத்தப்பட்டன. மற்றொன்று சாண்டர்சைச்  சுடுவதற்குப் பகத்சிங்  பயன்படுத்தியது.

    1925ல் புகழ்பெற்ற ககோரி (ரயில் கொள்ளை* ) நிகழ்வுக்குப் பிறகு சந்திரசேகர ஆசாத் ஜான்சியில் தங்கினார். அவர் கான்பூருக்கு வந்து ராதாமோகன் கோகுல் ஜியுடன் தங்கினார். இங்குதான் ஷிவ் வர்மா ஆஸாத்தை முதல் முறை சந்தித்தார். அவர்கள் அனைவரும் ராம் பிரசாத் பிஸ்மில் உடன் தீவிரத் தொடர்பு கொண்டிருந்தனர். 
 [*இது, 1925 ஆகஸ்ட் 9ல் இந்துஸ்தான் குடியரசு அமைப்பைச் சேர்ந்த ராம் பிரசாத் பிஸ்மில். சந்திரசேகர ஆசாத் முதலான இந்தியப் புரட்சியாளர்கள், ககோரி ரயில் நிலையத்தில் 8ம் எண் ரயிலை நிறுத்தி அதில் கொண்டு செல்லப்பட்ட பிரிட்டிஷ் அரசு நிதியை –தங்கள் புரட்சிகர நடவடிக்கைகளுக்காக – துணிச்சலாகக் கொள்ளையடித்த நிகழ்வு. பின்னர் முக்கிய புரட்சியாளர்கள் சிலருக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது –மொழிபெயர்ப்பாளர் கூடுதல் இணைப்பு]  

1927 ஜனவரியில் டிஏவி கல்லூரியில் ஷிவ் வர்மா பகத்சிங்கைச் சந்தித்தார். அப்போது பகத்சிங் புரட்சியாளர்கள் அனைவரையும் சந்திக்க ஒரு வாரம் கான்பூர் வந்திருந்தார். பகத்சிங் கற்றலில் மிக ஆர்வம் உடையவராகவும் ஏராளமான நூல்களைப் படிப்பவராகவும் ஷிவ் அவரைக் கண்டறிந்தார் அவர் பெரும்பாலும் ஷிவ் அறையில் தங்கினார். விக்டர் க்யூகோ, டால்ஸ்டாய், தஸ்தயேவ்ஸ்கி, கார்க்கி, பெர்னாட்ஷா, சார்லஸ் டிக்கன்ஸ் மற்றும் பலர் எழுதிய நூல்களைப் பகத்சிங் படித்தார். 1925ல் கணேஷ் சங்கர் வித்யார்த்தி வெளியிட்டு வந்த ‘பிரதாப்’ (புகழ்/ வலிமை) பத்திரிக்கையில் அவர் முன்பு பணியாற்றியுள்ளார். மௌலானா ஹஸ்ரத் மொஹானி அவர்களையும் சந்தித்த ஷிவ் அவர் குறித்து எழுதினார்.

பிஸ்மில் உடன் சந்திப்பு

ராம் பிரசாத் பிஸ்மில் 1927 டிசம்பர் 19 தூக்கிலிடப்பட இருந்தார். அதற்கு ஒரு நாள் முன்பு கோரக்பூர் மாவட்டச் சிறைக்கு அவரது தாயார் மூல் ராணி தேவி மகனை இறுதி முறையாகப் பார்க்க வந்தார். ஏற்கனவே அங்கே இருந்த ஷிவ், மூல் ராணியை நெருங்கி பிஸ்மில்லைச் சந்திக்கத் தனக்கு உதவும்படி வேண்டினார். உடனே அதற்கு ஒப்புக் கொண்டவர் அவரை பிஸ்மில் ஒன்றுவிட்ட சகோதரன் ஷங்கர் பிரசாத் போல நடிக்கக் கூறி, தன்னை அவரது ‘மௌசி (தாயின் சகோதரி) எனக் குறிப்பிட்டார்! தாய்க்கும் மகனுக்குமான இறுதி சந்திப்பு அது என்பதால் சிறிது நேரம் அவர்கள் தனியே விடப்பட்டனர். அதன் பிறகு அந்தத் தாய் ஷிவ் வர்மாவை இந்துஸ்தான் குடியரசு அமைப்பின் (HRA) உறுப்பினர் என்று குறிப்பிட்டு அவருடன் பிஸ்மில்லைப் பேசக் கூறினார். பிஸ்மில்லும் ஷிவ் வர்மாவும் சிறிது நேரம் உரையாடினர்.

அந்தமான் சிறையில் கடுமையான சித்திரவதைகள் மற்றும் கட்டாய உணவு புகட்டல் உள்பட பல கொடூரங்களின் காரணமாக மரணமடைந்த மகாவீர் சிங் ஒரு பெரும் புரட்சிகர கைதி. 1928 ஜூனில் ஷிவ் வர்மாதான் அவரை ஹிந்துஸ்தான் குடியரசு அமைப்பில் (HRA) உறுப்பினராகச் சேர்ந்தார்.

1928 நவம்பரில் நூரிகேட்டுக்கு அருகில் ஆக்ராவில் அமீர் சந்த் என்ற புனைப் பெயரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தபோது ஷிவ் வர்மா வெடிகுண்டுகள் தயாரிப்பதில் பயிற்சி பெற்றார்.

புகழ்பெற்ற ககோரி சதி வழக்கில் (ரயில் கொள்ளை) ஜோகேஷ் சந்திர சாட்டர்ஜி 1927-ல் ஃபதேக்ஹர்க் மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சாட்டர்ஜியைச் சிறையிலிருந்து வெளியே கொண்டு வர அவரது ஒப்புதலைப் பெறுவதற்கான பொறுப்பு ஷிவ் வர்மா மற்றும் விஜய் குமார் சின்ஹாவிடம் அளிக்கப்பட்டிருந்தது. அவர்கள் ஃபதேக்ஹர்க் விட்டு புறப்பட்ட பிறகு 1928 மார்ச் 3ல் போலீஸ்காரர்கள் இந்த இருவரையும் தேடி வந்தனர். இதையறிந்த இருவரும் உடனடியாக அந்த இடத்தை விட்டு நீங்கி கான்பூர் செல்ல முடிவு செய்தனர். கான்பூருக்கு ரயில் புறப்பட்டதும் இரண்டு போலீஸ்காரர்கள், ஷிவ் மற்றும் பிஜாய் முன்பதிவு செய்த அதே பெட்டியில் வந்தமர்ந்தனர். இதை மோப்பம் பிடித்து ஜலாலாபாத் ஸ்டேஷனுக்கு அடுத்து அவர்கள் ரயிலில் இருந்து குதித்துத் தப்பி சென்றனர். அவர்களைப் பிடிக்கத் தொடர்ந்து ஓடிய  போலீஸ்காரர்கள் அந்த முயற்சியில் விழுந்து காயமடைந்ததுதான் மிச்சம்.

HSRA அமைப்பில்

ஷிவ் விரைவாக சோசலிசம் நோக்கி நகரத் தொடங்கினார். அவர் தனது படிப்பை விட்டு விட்டு புரட்சிகரப் பணியில் ஆழ்ந்தார். (பின்னர் ஹிந்துஸ்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு, HSRA, என்று மாற்றப்பட்ட) ஹிந்துஸ்தான் குடியரசு அமைப்பில் (HRA) இணைந்தார். விரைவில் ஷிவ் வர்மா, 1928 செப்டம்பர் 8 மற்றும் 9ல் டெல்லி பெரோஷா கோட்லா கோட்டை இடிபாடுகளில் புரட்சியாளர்களால் அமைக்கப்பட்ட HSRA மத்தியக் குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டார். அவர் உ பி கிளையின் அமைப்பாளர். ‘சந்த்(‘Chand’) இதழுக்காக வர்மா பல்வேறு கட்டுரைகளை எழுதினார்.

பகத்சிங் மற்றும் பட்டுகேஷ்வர் மத்திய அசெம்பிளியில் குண்டுகளை வீசுவதற்கு முன்பு, சந்திரசேகர் ஆசாத் ஷிவ்விடம் அவர்களை நன்கு கவனித்துக் கொள்ளும்படி அறிவுறுத்தினார்.

ஜெய்தேவ் கபூர், கயா பிரசாத் மற்றும் ஷிவ் வர்மாவிடம் சஹாரன்பூரில் குண்டு தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கும் பொறுப்பு தரப்பட்டது. அவர்கள் டிஸ்பென்சரி நடத்தும் பெயரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தனர். அவர்களிடம் பணம் இல்லாததால் பணத்தைத் திரட்ட காலம் எடுத்துக் கொண்டனர்; மேலும் பணத்துக்கு ஏற்பாடு செய்ய கயா பிரசாத் கான்பூர் சென்றார். அவர்களின் நடவடிக்கைகளைச் சந்தேகித்த போலீஸ் அந்த இடத்தைச் சோதனை நடத்தி வெடிகுண்டுகள் மற்றும் சில பொருட்களுடன் அவர்களைக் கைது செய்தனர். பின்னர் கயா பிரசாத்தும் கைது செய்யப்பட்டார், அது மே 1929. 

லாகூர் மத்தியச் சிறைக்கு அனுப்பப்பட்ட அவர்களுக்கு எதிராக விசாரனை நடத்தப்பட்டு 1930ல் லாகூர் சதி வழக்கின் கீழ் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அரசியல் செயல்பாட்டாளர்களுக்குச் சிறையின் நிலைமைகளை மேம்படுத்தக் கோரி சரித்திர புகழ் பெற்ற 63 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஷிவ் வர்மா பங்கேற்றார்; அதில் யதீந்திர நாத் தாஸ்  (‘ஜத்தின் தாஸ்’ என்ற ஜதீந்திர நாத் தாஸ்) மரணமடைந்தார்.

         உண்ணாவிரதம் காரணமாக விரைவில் தாஸின் உடல்நிலை பலவீனமடைந்தது. 15 நாட்களுக்குப் பிறகு உணர்விழந்த நிலையில் அதிகபட்ச காய்ச்சலுடன் சிறை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சிறையில் காய்ச்சல் நிமோனியா ஆனது. கூடுதல் ஜுரத்தில் பல நாட்கள் படுக்கையில் புரண்டு தவித்தார். மார்பில் தைக்கும் வலியால் துடித்தவர் ஒரு வினாடி கூட இமை மூடி தூங்க முடியவில்லை. சில மருந்துகளை உட்கொள்ள மருத்துவர்கள் கெஞ்சியபோது மறுத்தார். பலகீனமான குரலில் அவர், ‘எல்லா மருந்துகளையும் மறுக்க அவர்கள் முடிவெடுத்துள்ளதாகவும், அந்த முடிவிலேயே தானும் உறுதியாக நிற்கப் போவதாக பதில் அளித்தார்.

ஷிவ் வர்மா அதில் பிழைத்தது, ஓர் அதிசயம். அவர் எப்பொழுதும் அமைதியாகத் துணிச்சலை வெளிப்படுத்துவார். ஒருமுறை நீதிமன்றத்தில் போலீசால் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்ட அவர் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

நீதிமன்ற விசாரணை நிகழ்வுகளைக் கூர்ந்து கவனமுடன் பார்ப்பது அவர் வழக்கம். பின்னர் குறுக்கு விசாரணையின்போது அவற்றைப் பயன்படுத்தி அரசு தரப்பு வழக்கறிஞர் வாதங்களையும் சாட்சிகளையும் நார்நாராகக் கிழித்தெறிவார். குறிப்பாக அவர் அப்ரூவர் ஆன பிறழ் சாட்சிகளிடம் கடுமையான கேலி கிண்டலுடன் வினாக்களைத் தொடுப்பார்; அப்போது அவர்கள் உடல் நடுங்கி கண்கள் பட படக்க தங்கள் முந்தையக் கூற்றுடன் முரண்பட பதிலளிக்க வைத்து விடுவார். நீதிமன்ற அறையில் குழுமிய பார்வையாளர்கள் மத்தியில் இது சிரிப்பலைகளை எழுப்பும்.

உண்ணாவிரதப் போராட்டம்போது அரசு அதிகாரிகள் அளித்த உறுதி மொழிகளில் இருந்து அரசு பின் வாங்கியது. லாகூர் வழக்கின் அனைத்துக் கைதிகளும் ‘சிவகுப்பு சிறையில் அடைக்கப்பட்டு கடும் மிருகத்தனத்துடன் நடத்தப்பட்டனர்.

ஷிவ் மெட்ராஸ் சிறைகளுக்கு மாற்றப்பட்டார். ராஜமுந்திரி சிறையில் இருந்தபோது அவரும் ஜெய்தேவ் கபூரும் ஐந்தரை மாதங்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். அது அல்லாமலும் எண்ணற்ற சண்டைகளும் நடப்பதுண்டு.

அந்தமானில்

இறுதியாக ஷிவ் வர்மாவும் பிற கைதிகளும் இழிவுப் பெயர் பெற்ற, மனிதத்தன்மை அற்ற அந்தமான் செல்லுலார் சிறைக்கு அனுப்பப்பட்டனர். அங்கே நிலைமைகள் படுமோசம். ஷிவ் அங்கே கம்யூனிஸ்ட் ஒருங்கிணைப்பு குழுவின் அங்கமானார், பிஜாய் குமார் சின்ஹா அதன் நிறுவனர்களில் ஒருவர். அந்தமானில் இருந்தபோது கம்யூனிசத்திற்கு மாறிய ஷிவ் உண்மையில் அதன் முன்னணி அமைப்பாளர்கள், தலைவர்களில் ஒருவர்.

1938 வரை ஜெய் தேவ் உடன் ஷிவ் வர்மா அந்தமானில் இருந்தார். பிற கைதிகளில் பெரும்பான்மையோர் விடுதலை செய்யப்பட்டனர்; ஆனால் அந்தமான் தீவில் இருந்து இந்திய நிலப் பகுதிக்குக் கொண்டுவரப்பட்ட பின்பும் ஷிவ் மற்றும் ஜெய்தேவ் விடுதலை செய்யப்படவில்லை. 1946-ல்தான் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். 1929 மற்றும் 1946 இடைப்பட்ட காலத்தில் ஷிவ் வர்மா பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டு, மொத்தம் 16 ஆண்டுகள் 9 மாதங்கள் மற்றும் ஒரு வாரம் சிறைவாசத்தில் கழித்தார். நாடு விடுதலையான பிறகும் பலமுறை அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையிலிருந்து விடுதலை குறித்து

சில நிபந்தனைகளை ஏற்றால், ஷிவ் வர்மா மற்றும் ஜெய் தேவ் கபூர் இருவரையும் விடுவிக்க பிரிட்டிஷ் அரசு முன் வந்தது. ஆனால் அந்நிபந்தனைகளை ஏற்க அவர்கள் மறுத்து விட்டனர். இது, அந்தமானிலிருந்து விடுவிக்க வேண்டுகோள் மனுக்களை எழுதி; அரசியலில் இருந்து விலகி இருக்க எல்லாவிதமான வாக்குறுதிகளையும் அளித்து; வெளியே வந்த, சவார்க்கர் போன்ற சில கைதிகளின் செயல்களில் இருந்து முற்றிலும் மாறான தன்மை உடையது!

ஹர்தோய் மத்திய சிறையில் இருந்து பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு,  1946 பிப்ரவரி 4ல் ஷிவ் மற்றும் ஜெய்தேவ், ‘நாங்கள் ஏன் இன்னும் பிடித்து வைக்கப் பட்டிருக்கிறோம் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லைஎன்று எழுதினர். 1920களின் தொடக்கத்திலிருந்து பஞ்சாப், இராணுவச் சட்ட கைதிகள் மற்றும் பிற ஆயுள் தண்டனை பெற்ற கைதிகள் விடுவிக்கப்பட்டு விட்டனர். மொத்தம் ஏறத்தாழ 20 ஆண்டுகளை அவர்கள் சிறையில் கழித்து விட்டனர். இருந்தும் அவர்கள் எந்த மன்னிப்பையும் கோரவில்லை. இந்திய விடுதலை நாள் நெருங்கி வர, தாங்கள் எந்தவித நிபந்தனையும் இன்றி விடுவிக்கப்படுவோம் என்று அவர்கள் உறுதியாக நம்பினர்.

இறுதியாக, பிரிட்டிஷ் அரசு அவர்களை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டி வந்தது. நாட்டின் பல மூலைகளில் இருந்த லாகூர், ராஜமுந்திரி, அந்தமான், ஹர்தோய், நைனி, (கல்கத்தா அருகே) டம் டம், லக்னோ முதலிய பல்வேறு சிறைகளில் அவர்கள் அடைக்கப்பட்டனர். சிறைவிட்டுச் சிறை என ஆர்வத்தை தூண்டும் பயணம் அல்லவா இது!

விடுதலைக்குப் பிந்தைய காலம்

(அந்தமான் தீவில் இருந்து) இந்திய மண்ணிற்கு வந்த பிறகு ஷிவ் வர்மா இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாட்டாளர் ஆனார். அந்தமானில் அவர், கம்யூனிஸ்ட் ஒருங்கிணைப்புக் குழுவில் வகுப்புகளை நடத்துவது மற்றும் கையெழுத்துப் பிரதி இதழ் நடத்துவதில் உதவுவது உள்ளிட்ட ஏராளமான பணிகளை ஆற்றினார். உத்திரப் பிரதேசத்தில் அவர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரபல தலைவரானார்.

1948ல் சிபிஐ உ.பி. மாநிலக் குழுவின் செயலாளராக ஷிவ் வர்மா தேர்ந்து எடுக்கப் பட்டார். அது சிபிஐ-யில் பிடிஆர் பாதையின் காலம். மற்றவர்களைப் போலவே உ.பி. கட்சி குழுவும் தன்னைத் தானே அரித்து அழிக்கும் ஆழமான உட்கட்சி போராட்டத்தில் ஈடுபட்டது. கட்சியில் நிலவிய சூழ்நிலையை ஷிவ் விரும்பாவிட்டாலும் தொடர்ந்து பணி செய்தார்.

1951ல் உ.பி. கட்சிப் பொறுப்புகளில் இருந்து அவர் நீக்கப்பட்டார். அந்தத் தருணத்தில் கட்சியில் நிகழ்ந்துவந்த தேவையில்லாத மயிர் பிளக்கும் கூர்மையான விவாதங்களுடன் அல்லது அதன் பிறகும்கூட அத்தகைய விவாதங்களில் ஒருபோதும் அவர் மகிழ்ச்சியாக இல்லை.

சிபிஐ-யின்  நயா சவேரா (“புதிய விடியல்) என்ற கட்சி பத்திரிக்கையின் ஆசிரியராக ஷிவ் வர்மா இருந்தார்.

1948, 1962 மற்றும் 1965 ஆண்டுகளின்போது அவர் பலமுறை சிறை சென்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1964ல் பிளவுபட்டது. பிளவுக்குப் பிறகு ஷிவ் வர்மா சிபிஐ (எம்) கட்சியில் சேர்ந்தார். தேர்தல் டிக்கெட்டுக்காக நடந்த உட்கட்சி மோதல்களில் மெல்ல மெல்ல அவர் எதிர்ப்பையும் அவமானங்களையும் சந்தித்தார். 1971 தேர்தலில் எப்படியோ ஷிவ் வர்மாவுக்குக் கான்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து போட்டியிட டிக்கெட் கிடைத்தது; ஆனால் அவரை எதிர்த்துச் சுயேச்சையாகப் போட்டியிட்ட அதிருப்தி கம்யூனிஸ்ட் வேட்பாளர் எஸ் எம் பானர்ஜி அவரைத் தோற்கடித்தார்.

அவர் லோக் லஹர் (மக்கள் அலை அல்லது மக்கள் இயக்கம்) என்ற சிபிஎம் கட்சி ஹிந்தி

நாளிதழின் ஆசிரியராக அவர் நியமிக்கப்பட்டார். மேலும் ‘நயா பாத் (புதிய பாதை)  என்ற ஹிந்தி இதழின்ஆசிரியரும் ஆவார். HSRA இயக்கத்தின் புகழ்பெற்ற பெண் புரட்சியாளர், ‘துர்கா பாபி (மதினி)’ என்று மரியாதையுடன் அழைக்கப்பட்ட துர்காவதி தேவியால் தொடங்கப்பட்ட லக்னோ மாண்டிசோரி சொசைட்டியின் வாழ்நாள் அறங்காவலர் அவர். மேலும் லக்னோவில் ‘தியாகிகள் நினைவு மற்றும் சுதந்திரப் போராட்ட ஆய்வு மையம்ஒன்றை அவர் நிறுவினார்.

புரட்சியாளர்கள் பற்றிய கட்டுரைகள், புகைப்படங்கள் போன்றவற்றைத் திரட்ட அவர் விரிவாகப் பயணம் செய்தார் –அதற்காக அவர் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம் நூலகத்திற்கும் கூட சென்றார்.

முதுமை பிரச்சனைகள் காரணமாக ஷிவ் வர்மா 1997 ஜனவரி10ல் இயற்கை எய்தினார்.

ஹர்தோய் முனிசிபல் கவுன்சில், இந்தியப் புரட்சியாளர்களுக்கு அர்ப்பணித்து ‘ஷாஹீத் உத்தியான் (ஷாஹீத் பூங்கா)வில் ஷிவ் வர்மா, ஜெய்தேவ் கபூர் மற்றும் ஹரி பகதூர் ஸ்ரீவஸ்தவ் மூவருக்கும் சிலைகள் நிறுவ தீர்மானம் நிறைவேற்றியது.

தி லெஜெண்ட் ஆப் பகத்சிங் திரைப்படத்தில் ஷிவ் வர்மா பாத்திரத்தைக் கபில் சர்மா ஏற்று நடித்தார்.

எழுத்துப் படைப்புகள்

அவரது நூல்கள் சுதந்திரப் போராட்ட வரலாற்றின் முக்கியமான ஆதார ஊற்று. அவரது ‘நினைவலைகள் (‘ஸ்மிருத்தியான்’) நூலில் பகத்சிங், சந்திரசேகர ஆசாத், ராஜகுரு, சுக் தேவ், மகாவீர் சிங், யதீந்திரநாத் தாஸ் மற்றும் பகவதி சரண் வோரா குறித்த மதிப்புமிக்க, நேரடியாக

அறிந்து உணர்ந்த தகவல்களை ஷிவ் வர்மா அளித்துள்ளார். அந்த நூல் எல்லா வகையிலும் ஹிந்துஸ்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு மற்றும் அந்தமானில் கம்யூனிஸ்ட்கள் ஒருங்கிணைப்பு குறித்த வரலாற்று நூலாகத் திகழ்கிறது!

புரட்சியாளர் ஷிவ் வர்மா புகழ் வாழ்க!

--நன்றி : நியூ ஏஜ் (2024 ஜூலை 7 –13)

தமிழில் : நீலகண்டன்,

என் எஃப் டி இ, கடலூர்.

No comments:

Post a Comment