Wednesday, 8 October 2025

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 138 கே பாலதண்டாயுதம்– தென்னிந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் கட்டியவர்

 கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 138

கே பாலதண்டாயுதம் 
தென்னிந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் கட்டியவர், தலைசிறந்த அறிவாளர்

அனில் ரஜீம்வாலே

பாலன் என்று பிரபலமாக அறியப்படும் கே பாலதண்டாயுதம், தமிழ்நாட்டின், பொதுவாகத் தென்னிந்தியாவில், கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்டிய தலைசிறந்த அமைப்பாளர். அவர் புகழ்பெற்ற மாணவத் தலைவரும், மாணவர் இயக்கங்களைக் கட்டியவரும் ஆவார்.

பாலதண்டாயுதம் 1918 ஏப்ரல் 2ல் தமிழ்நாடு பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டி கிராமத்தில் பிறந்தார். அவர் எம்ஆர் காளஹஸ்தி முதலியார் மற்றும் சுப்பாத்தாள் தம்பதியருக்கு நான்காவது குழந்தையாகவும் முதல் மகனாகவும் பிறந்தார். அவர்கள் நடுத்தர வர்க்க விவசாயிகள். 15வது வயதில் பள்ளிப் படிப்பைப் பொள்ளாச்சி உயர்நிலைப் பள்ளியில் முடித்தார். இறுதியில் குடும்பமும் கிராமத்திலிருந்து இரண்டு மைல் தொலைவில் உள்ள பொள்ளாச்சி நகரத்தில் குடிபெயர்ந்தது.

கிளர்ச்சி சுபாவம்

உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாவது படித்தபோது பாலனுக்கு 13 வயது. அந்தச் சமயத்தில் பகத்சிங், ராஜகுரு மற்றும் சுகதேவ் தூக்கிலிடப்பட்டனர். அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும் தூக்கிலிடப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும் இந்த இளம் பையன் தனது கைகளையும் கால்களையும் இரும்புச் சங்கிலியால் கட்டிக்கொண்டு பொள்ளாச்சி வீதிகளில் ஊர்வலமாகச் சென்றான்.

பள்ளியில் (மாணவர் சங்கமான) பாலர் சங்கத்தின் தலைவரானார். கள், சாராயம் மற்றும் அரிசி கடைகளின் முன் அவர் காங்கிரஸ் தன்னார்வத் தொண்டராக மறியலில் பங்கு பெற்றார். மகாத்மா காந்தி அறைகூவல்படி அயல்நாட்டு துணி பகிஷ்கரிப்பு இயக்கமும் நடத்தப்பட்டது. இளம் வயது காரணமாக அவரைச் சிறைக்கு அனுப்பப்பட இயலவில்லை.

குழந்தைகளாக அவர்கள் புகையிலை மற்றும் ஜவுளிக் கடைகளை மறியல் செய்தனர். தேசிய உணர்வு வித்துகள் ஏற்கனவே அங்கு விதைக்கப்பட்டு இருந்தன.  திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் இன்டர்மீடியட் படிப்பை முடித்த பிறகு அவர் பிஎஸ்சி இளங்கலை பட்டம் பயில அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.

பள்ளியில் படிக்கும்போது பாலன் புரட்சிகர இளைஞர் அமைப்பு ஒன்றைத் தொடங்கினார். பல்கலைக்கழகத்தில்தான் இடதுசாரி, கம்யூனிஸ்ட் கருத்தியல்களுடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. அப்போது அவர் ஒரு காந்தியராக இருந்தார். அந்த நேரத்தில் இளைஞர்கள் மத்தியில் காந்தியமும் மார்க்சியமும் இரு பெரும் போக்குகளாக இருந்தன; இந்தக் கருத்து மோதல் அவர் மாற்றமடைந்ததில் பிரதிபலித்தது.

சுப்பிரமணிய சர்மா அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பிரபலமான மாணவர் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர். அவருடன் பாலன் தொடர்பு கொண்டார். பல அரசியல் போக்குகளை உள்ளடக்கி ஒன்றுபட்ட மாணவர் பொது அமைப்பாக 1936ல் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (ஏஐஎஸ்எப்) ஏற்படுத்தப்பட்டிருந்தது. மாணவர் பெருமன்றத்தின் ஒரு கிளை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டது. அது தவிர 1937ல், பல்கலைக்கழக வளாகத்தில் ‘காம்ரேடுகள் கிளப் ஒன்றைக் கம்யூனிஸ்டுகள் அமைத்தனர். அந்தத் ‘தோழர்கள் மன்றத்தில் பி. மாணிக்கம், சுப்பிரமணிய சர்மா மற்றும் பாலன் உள்ளிட்டவர்கள் இருந்தனர்.

பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஸ்ரீனிவாச சாஸ்திரி இந்த நடவடிக்கைகளால் சீற்றமடைந்து பாலன் உட்பட ஆறு மாணவர்களை இடைநீக்கம் செய்தார். அதைக் கண்டித்து மாணவர்கள் இரண்டு மாதங்களுக்கு வகுப்புகளைப் புறக்கணித்தனர்.

நிகழ்வுகளின் இந்த வளர்ச்சி போக்குகள் பாலனைக் கம்யூனிஸ்டுகளுக்கு மேலும் நெருக்கமாகக் கொண்டு வந்தது.

ரிபப்ளிக் ஸ்பெயின் இயக்கத்திற்கு  ஆதரவாக

ஸ்பெயின் தேசத்தின் பாசிச ஜெனரல் பிரான்சிஸ் பிராங்கோவுக்கு எதிராகப் போராடும் ‘குடியரசு ஸ்பெயினுக்கு ஆதரவாக நாடு முழுதும் நிதி திரட்ட ஜவஹர்லால் நேரு அறைகூவல் விடுத்தார். நிதி திரட்டலுக்குப் பொறுப்பான ஒரு மாணவர் பாலனுக்கு எதிராகப் பொய்யான புகார் கொடுத்தார். பாலன் மற்றும் பிற ஐந்து மாணவர்கள் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்; பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்ட அவர்கள் சில தினங்கள் சிறையில்கூட அடைக்கப்பட்டனர்.

மாணவர்கள் வேலை நிறுத்தம்

தமிழ்நாட்டில் முதலாவது மாபெரும் மாணவர்கள் வேலை நிறுத்தம் 1938ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடந்தது. அந்த வேலைநிறுத்தம் இரண்டு மாதங்கள் நீடித்தது. அதுவரை அதுதான் மாணவர்களின் நீண்ட வேலை நிறுத்தப் போராட்டம். பாலனைத் தவிர மற்ற அனைவரும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். பாலன் மட்டுமே பழிவாங்கப்பட்ட ஒரே மாணவர். அப்போது அவருக்கு வயது 20 மட்டுமே. அவர் ஓர் அற்புதமான நல்ல மாணவர் மற்றும் அமைப்பாளர்.

மாணவர்கள் போராட்டத்தில் பாலன் ஈடுபட்டதன் காரணமாக அவரது தந்தை அவரை வீட்டுக்குள் நுழைய அனுமதிக்க மறுத்தார். அதன் விளைவாய் அவரது படிப்பு முழுமையாக நிறுத்தப்பட்டது. தனது நண்பர்களுடன் வசிக்கும் கட்டாயத்திற்கு அவர் ஆளானார்.

விரைவில் அவர் கேரளாவில் இருந்து வந்த ஆங்கிலோ இந்தியப் பெண்மணி கிளாடிஸ் வில்ஸ் காதலில் விழுந்தார். வேலைநிறுத்தக் காலத்தின்போதே அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

சிங்காரவேலருடன்

பாலதண்டாயுதம் மெட்ராஸில் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க இயக்கத்துடன் தொடர்பு கொண்டார். அவருக்குக் காட்டே, சிங்காரவேலர், கல்யாணசுந்தரம் போன்ற மற்ற பிற பிரபலமான தலைவர்கள் குறித்துத் தெரிய வந்தது. இரயில்வே தொழிலாளர் இயக்கத்தில் ஈடுபட்ட அவர் பொன்மலைப் பகுதி இரயில்வே தொழிலாளர்கள் தொழிற்சங்கத்துடன் பணியாற்றினார். புகழ்பெற்ற தலைவர் கல்யாணசுந்தரத்துடன் பாலன் ’தொழிலாளர் என்ற தொழிற்சங்க இதழின் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். தொழிலாளர் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டார்.

பலமுறை கைது செய்யப்பட்ட அவர் கோயம்புத்தூர் மற்றும் வேலூர் சிறைகளுக்கு அனுப்பப்பட்டார். இந்த நிகழ்வுகளால் அவரது தாயார் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு நோய்வாய்ப்பட்டார். விடுதலையாகி காயாரைச் சந்தித்த பிறகு விரைவில் தாயார் மரணமடைந்தார்.

காட்டே உடன் தொடர்பு

எஸ்வி காட்டே வருகையை அடுத்து மெட்ராஸ் நகரம் மற்றும் மெட்ராஸ் மாகாணத்தில் கம்யூனிஸ்ட் நடவடிக்கைகள் உத்வேகம் அடைந்தன. அமைப்புநிலை மற்றும் மாகாணம் முழுவதும் உள்ள பிரச்சினைகளில் அவர் வழி காட்டினார். பம்பாயில் இருந்த கட்சி அனைத்திந்திய மையத்துடன் அவர் தொடர்பு வைத்திருந்தார்.

50, தாத்தா முத்தியப்பன் தெரு மெட்ராஸ் என்ற முகவரியில் இயங்கிய தொழிலாளர் பாதுகாப்பு லீக் பின்னர் 2 / 65 பிராட்வேக்கு (பெயர்தான் பிராட்வே உண்மையில் குறுகலான சந்து!) இடம் பெயர்ந்தது. ‘வேலைநிறுத்த அலுவலகம்’ என அது அறியப்படலாயிற்று. அந்த அலுவலகத்திற்குக் காட்டேவின் நெருங்கிய நண்பரான நேரு விஜயம் செய்தார். மேலும் பல இளைய மற்றும் மூத்த தோழர்கள்கூட அங்கு வழக்கமாக வந்தனர். காட்டேவிடம் ஆலோசனை கேட்டு வந்த அவர்களில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து பாலதண்டாயுதம், இராமச்சந்திர ரெட்டி மற்றும் பலர் அடங்குவர். 

தோழர் சி எஸ் சுப்பிரமணியத்தை முதல் செயலாளராக் கொண்டு ஒரு கம்யூனிஸ்ட் கிளை அமைக்கப்பட்டது.

காங்கிரஸ் சோசலிசக் கட்சியில் (சி எஸ் பி)

பாலனுக்குத் திருச்சியில் குடியிருக்க தனி வீடு இருந்தது. அங்கே அவர் சிஎஸ்பி-யில் சேர்ந்தார். மேலும் அவரது சம்மதம் இன்றி அவர்கள் அவரை ‘ஃபார்வர்டு பிளாக்மாவட்டச் செயலாளராக ஆக்கினர். அந்த நேரத்தில் காங்கிரஸ் இயக்கத்திற்குள் இடதுசாரி ஒருங்கிணைப்பு தீவிரமாக நடைபெற்றது இதனால் அவரால் ஒரே நேரத்தில் இரண்டு அமைப்புகளிலும் இருக்க முடிந்தது.

ஃபார்வேர்ட் பிளாக் குறித்து

இக்காலகட்டத்தில் ஃபார்வேர்ட் பிளாக் தலைவர்களுடன் பாலனுக்குத் தொடர்பு ஏற்பட்டது. அதன் தலைவர் முத்துராமலிங்கத் தேவருடன் அவர் நட்பு பாராட்டினார். ஆனால் பாலன் ஃபார்வேர்ட் பிளாக்கில் இணைந்து விட்டதாக ஒரு தவறான கருத்து ஏற்பட்டது. இது சரியானது அல்ல. பின்னர் ஒரு கட்டுரையில் அவர், தான் ஒருபோதும் அதில் சேரவில்லை என விளக்கம் அளித்தார்.

இரண்டாம் உலகப் போரும் தொழிலாளர் இயக்கமும்

அவர் திருச்சியில் தற்காலிகமாக ஒரு எழுத்தராகப் பணியாற்றினார். இரண்டாம் உலகப் போர் நெருங்கவும் போருக்கு எதிரான மனநிலை உணர்வு தீவிரமாகப் பரவியது. 1938ல் போருக்கு எதிரான ஒரு கூட்டத்தில் பாலன் உரையாற்றினார். காலனிய ஆட்சியாளர்களான பிரிட்டிஷ் பார்வையில் இது மிகப் பெரிய ‘குற்றம்!’ இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டார். தனது மனைவியை மோசமான நிலையில் பரிதவிக்கவிட்டு அவர் பிரிய நேர்ந்தது. மனைவியை, ஃபார்வேர்ட் பிளாக் தலைவர் முத்துராமலிங்கத் தேவரின் நண்பரான, இரத்தினவேலு தேவர் பாதுகாப்பில்   இருக்கச் செய்து சென்றார்.

1940 இறுதியில் அவர் விடுதலை செய்யப்பட்டாலும் சிறை வாயிலில் மீண்டும் கைது செய்யப்பட்டார்!. அவரது மனைவி கிளாடிஸ் அவருக்காகப் பொறுமையின்றி காத்திருந்தார். பின்னர் இறுதியில் 1942ல் விடுதலை செய்யப்பட்டார்.

பெருந்திரள் நடவடிக்கைகள் மற்றும் இதழியல்

1939ல் இரண்டாம் உலகப் போர் வெடித்ததும் சிபிஐ சட்ட விரோதமாக்கப்பட்டது. பாலனும் கைது செய்யப்பட்டு 1939 முதல் 1942 வரை வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். 1942 ஜூனில் விடுதலை செய்யப்பட்ட பிறகு இரயில்வே தொழிலாளர்கள் மத்தியில் பணியாற்றினார். அவர்களது தொழிற்சங்கத்தின் ‘இரயில்வே ஒர்க்கர்ஸ் இதழின் ஆசிரியரானார். கட்சியின் ஜனசக்தி இதழ் ஆசிரியர் குழுவிலும் அவர் இருந்தார். 1943ல் ‘சோவியத் நண்பர்கள் அகாடமி அமைப்பைத் தொடங்கி அதன் செயலாளர் ஆனார். இதழ்களில் ஏராளமாக எழுதினார்; பொதுக் கூட்டங்கள் பலவற்றில் உரையாற்றினார். கட்சிக்கு நிதி திரட்ட அவர் நாடகங்களில்கூட நடித்தார்.

1945 மதுரையில் நடத்தப்பட்ட சோவியத் யூனியன் நண்பர்கள் அமைப்பின் (FSU) முதலாவது மாகாண மாநாட்டில், இராஜாஜி முக்கிய விருந்தினராகக் கலந்து கொண்டார்.

பாலன் 1945 இறுதி வரை மெட்ராஸில் தங்கியிருந்து ஜனசக்தி இதழில் பணியாற்றினார். 1945ல் கட்சி வேலைக்காக அவர் திருநெல்வேலி அனுப்பப்பட்டார். சிபிஐ மத்தியக் குழுவின் சார்பாகத் தமிழ்நாடு பிரதேசக் கமிட்டியின் பொறுப்பாளராக இருந்த தோழர் என்கே கிருஷ்ணன், பாலதண்டாயுதம் செயல்பாடுகளால் மிகவும் ஈர்க்கப்பட்டார்.

1942 –43 காலகட்டத்தில் அமைக்கப்பட்ட ‘சோவியத் யூனியன் நண்பர்கள் (பிரண்ட்ஸ் ஆப் சோவியத் யூனியன்) குழுவின் செயலாளராகப் பாலதண்டாயுதமும், அதன் தலைவராகத் திரு வி க (திரு வி கல்யாணசுந்தரம்) அவர்களும் இருந்தனர்.

இக்காலகட்டத்தின் இந்த அனைத்து எழுச்சிகளின் மத்தியில் அவர் மனைவி மனம் சலித்துப் போனார். முற்றாக அரசியலைக் கைவிடுமாறு கிளாடிஸ் அவரிடம் கூறினார். முன்பு சிறை வாயிலில் அவர் காத்திருந்தபோது பாலன் உடனடியாக மீண்டும் கைது செய்யப்பட்டார். எனவே அவரைக் கேரளா அழைத்துச் சென்று அங்கே பணியாற்ற மனைவி விரும்பினார். ஆனால் பாலன் அரசியலைக் கைவிட மறுத்துவிட்டார். கிளாடிஸ் திருமண உறவை ரத்து செய்து, மறுமணம் செய்து கொண்டார். அவரது மறுமணம் குறித்த செய்தி தன்னை மகிழ்வடையச் செய்தது என பாலன் கூறினார்.

1942 முதலாக பாலன் பொன்மலை இரயில்வே யார்டில் பணியாற்றி வந்தார்.

1946ல் போராட்டங்கள்

பம்பாயில் 1946 பிப்ரவரியில் ராயல் இந்தியக் கடற்படை (RIN) கிளர்ச்சி நடைபெற்றது. அதற்கு ஆதரவாக மெட்ராஸ் மாகாணத்தில் தொழிலாளர் வர்க்கம் ஒரு மாபெரும் மனிதனாகத் திரண்டு எழுந்து மாகாணத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலும் வேலைநிறுத்தத்தில் இறங்கியது. பாலன் அப்பொழுது கட்சியின் அமைப்பாளராகத் திருச்சியில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் கப்பற்படை எழுச்சிக்கு ஒருமைப்பாட்டு நடவடிக்கைகளில் ஜீவானந்தம், கல்யாணசுந்தரம், இராமமூர்த்தி மற்றும் பிறருடன் இணைந்து பெரும் பங்காற்றினார்.

1946ல் இரயில்வே வேலை நிறுத்தத்திற்குப் பாலன் ஆதரவு திரட்டினார். அவருக்கு எதிராக வாரண்ட் பிறப்பிக்கப்பட அவர் தலைமறைவானார். 1947 ஆகஸ்ட் 15 நாடு விடுதலை அடைந்த பிறகு வாரண்ட் ரத்து செய்யப்பட, அவர் வெளியே வந்தார். தூத்துக்குடியில் உணவுக்கான போராட்ட இயக்கத்தையும் அவர் தலைமையேற்று நடத்தினார். மேலும் படகுத் தொழிலாளர்கள் போராட்டத்தை நடத்தினார். அந்தத் தொழிலாளர்கள் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையில் படகுகளை இயக்குவதில் பணியாற்றினார்; அப்போது அந்த நேரத்தில் அங்கு எதார்த்தமான ஒரே போக்குவரத்து சாதனமாகப் படகுகள் மட்டுமே இருந்தன. மேலும் பாலன் விக்ரமசிங்கபுரம் ஜவுளி ஆலைத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை, போலீஸ் மற்றும் கருங்காலிகளை எதிர்த்துப் போராடி நடத்தினார்.

பாலன் திருநெல்வேலி மாவட்டத்தில் மிகவும் தீவிரமாகப் பணியாற்றி தொழிலாளர் வர்க்கம் மற்றும் மாணவர்கள் போன்ற சமூகத்தின் பிற பகுதிகளிலும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலிமைமிக்க சக்தியாக வளர உதவினார்.

மதுரை சதி வழக்கு

1943ல் நிர்வாகத்திற்கு விசுவாசமாக இருந்தவர்களில் இருந்து வேறுபட்ட தனியான தொழிற்சங்கத்தைக் கம்யூனிஸ்டுகள் அமைத்தனர். 1946ல் நிர்வாகம் 27 தொழிலாளர்களை, அவர்களது நடவடிக்கைகள் நிர்வாக விரோதமானது என்ற அடிப்படையில் குற்றம் சாட்டி, வேலைநீக்கம் செய்தது. இறுதியில் தொழில் தகராறு மத்தியஸ்தர் தொழிலாளர்களையும், கம்யூனிஸ்டுகளால் வெல்லப்பட்ட தொழிற்சங்க தேர்தல்களையும் மீண்டும் நியமிக்க நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.

பிரிட்டிஷ் அரசு கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக புனைந்த பொய் வழக்கே மதுரை சதி வழக்கு என அறியப்படுகிறது. பாலகண்டாயுதம் உள்ளிட்ட சிபிஐ மாகாணத் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அந்த வழக்கில் அமைதியின்மையை ஏற்படுத்துதல் மற்றும் தொழிலாளர் தலைவர்களைக் கொல்ல சதி செய்தது (!) என்ற குற்றச்சாட்டில் அவர்கள் விசாரிக்கப்பட்டனர். அப்போது தலைமுறைவாகச் சென்ற பாலன், 1947 ஆகஸ்ட் 15ல் இந்தியா விடுதலையைச் சாதித்த பிறகே வெளியே வந்தார்

பி டி ஆர் காலம்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பி.டி ரணதிவே தலைமையின் கீழ் அதிர்ச்சிகரமான காலத்தைக் கடந்தது; பிடிஆர், நேரு அரசை ஆயுதப் போராட்டம் மூலம் தூக்கி எறிதல் என்ற சாகச மற்றும் சுய அழிவுப் பாதையைப் பின்பற்றினார். கெடுதல் நிறைந்த இந்தப் பாதை, கட்சி செயல்பாடுகளை மெட்ராஸ் மாகாணத்திலும் தமிழ்நாட்டிலும்கூட தீவிரமாகப் பாதித்தது. கட்சி ஒழுங்கற்று சீர்குலைந்தது, கட்சி அணிகள் தலைமறைவாகின அல்லது அடக்குமுறைகளிலும் சுய அழிவு சாகச நடவடிக்கைகளிலும் கொல்லப்பட்டனர்.

1948 கல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது கட்சிப் பேராயத்தில் பாலன் கலந்து கொண்டார். மீண்டும் வாரண்ட் பிறப்பிக்கப்பட தலைமறைவானார்.  அவர் மிகவும் சிக்கல் நிறைந்த கடுமையான பாதை வழியே அகமதாபாத், பம்பாய், மத்திய இந்தியா, மெட்ராஸ் மாகாணத்தின் சில இடங்கள் இவற்றைக் கடந்து வந்தார்.  பாலன் உள்ளிட்ட பலரும் தலைமறைவாயினர். 1948 --50ல் திருநெல்வேலியிலும், 1950 --1952ல் மெட்ராஸிலும் அவர் தலைமறைவாகத் தங்கி இருந்தார். 1952 பிற்பகுதியில் அவர் கைது செய்யப்பட்டு மீண்டும் ஒன்பது ஆண்டுகள், 1962ன் தொடக்கத்தில் விடுதலை செய்யப்படும் வரை, சிறையில் காலம் கழித்தார்.

தனது வழிகாட்டியும் நண்பருமான பொன்னு மறைந்ததை அறிந்து அவர் மிகவும் வருந்தினர்; கைது செய்யப்படுவதற்கு முன்பு அவர் தூத்துக்குடியில் பொன்னு இல்லத்தில் தான் தங்கி இருந்தார்.

திருநெல்வேலி, மதுரை, மெட்ராஸ், நாக்பூர் மற்றும் கோயம்புத்தூர் என பல்வேறு சிறைகளுக்குப் பாலன் மாற்றப்பட்டார். திடீரென்று அவர் நாக்பூர் சிறைக்கு மாற்றப்பட்டு அங்கே நீண்ட காலம் இருந்தபோது மருத்துவச் சிகிச்சையும் எடுக்க வேண்டியதாயிற்று.

திருமணம்

1952ல் சிறிது காலம் அவர் விடுதலையானார். விடுதலைக்குப் பிறகு அவர் 1953ல் கட்சித் தோழர் ஒருவரின் சகோதரியான துல்க்க ராணி என்பவரை இரண்டாம் முறையாகத் திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டி வந்த அவர், 9 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பி வந்தார்.

இரண்டாவது திருநெல்வேலி சதி வழக்கு, 1954

கே பாலதண்டாயுதம் மற்றும் பி மீனாட்சிநாதன் இருவருக்கும் 1954 நவம்பர் 2ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் 1948–49 தொடர்பான ‘குற்றங்களில் அருணாச்சலம் என்ற மில் தொழிலாளியுடன் விசாரிக்கப்பட்டனர். சிறைவாசிகள் கைவிலங்கு மாட்ட மறுத்தனர். இதன் விளைவாய் அவர்களைப் போலீஸ்காரர்கள் 100 மைல் தொலைவு டிரக் பயணம் முழுதும் மிருகத்தனமாகத் தாக்கினர். வலுக்கட்டாயமாக அவர்கள் கைகளில் விலங்கை மாட்டி அவர்கள் தூக்கி எறியப்பட்டனர்.

அனைத்து அரசியல் கட்சிகளின் ஒன்றுபட்ட நடவடிக்கைகளால் அவர் விடுதலை ஆனார்.

சிறையில் அவர் நேரத்தை ஒருபோதும் வீணடித்ததில்லை. தனது முழுமையான எதிர்கால வாழ்வை ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் திட்டமிட்டார். ஏராளமாக ஆழ்ந்து தீவிரமாகப் படித்தார்; முறையான வகையில் மொழிபெயர்ப்புகளைச் செய்தார்; நிரம்ப தோட்ட வேலைகளில் ஈடுபட்டு தாவரவியலில் (பாட்டனி) சோதனைகளை மேற்கொண்டார்!

1962க்கு பிறகு

1962ல் விடுதலையான பின் மீண்டும் தீவிர நடவடிக்கைகளில் இறங்கினார். மெட்ராஸ் மாவட்டக் கட்சி செயலாளர் ஆனார். சொற்பொழிவாற்றுவதிலும் பேச்சின் மூலம் மற்றவர்களை இணங்கச் செய்யும் ஆற்றலிலும் திறன்மிக்க அவருக்கு நிகர் வெகு சிலரே. பலமுறை அவர் கைது செய்யப்பட்டார். கடைசியாக அவர் கைதானது 1970 நில உரிமைப் போராட்டம். சுருங்கச் சொல்லி விளங்கச் செய்யும் தெள்ளிய தமிழில் அவர் எழுதுவது வழக்கம்.

கட்சி மற்றும் பொதுவாழ்வில் பதவிப் பொறுப்புகள்

1964 பம்பாய் கட்சி காங்கிரஸில் சிபிஐ தேசியக் குழு உறுப்பினராகப் பாலன் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாட்னா (1968) மற்றும் கொச்சின் (1971) கட்சி காங்கிரஸ்களில் அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சியைப் பாதுகாக்க பிளவு நடவடிக்கைகளுக்கு எதிராக அவர் ஏராளமாகப் பாடுபட்டார்

1971ல் கோயம்புத்தூர் தொகுதியில் இருந்து அவர் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்து எடுக்கப்பட்டார். திறமையான பாராளுமன்றவாதி என அவர் தனது முத்திரையைப் பதித்தார்.

அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது ‘சிபிஐ குறித்த இசை ஆல்பம்ஒன்றைக் கொண்டு வந்தார். கேஜே யேசுதாஸ், ஏஎல் ராகவன் மற்றும் எல்ஆர் ஈஸ்வரி போன்ற பிரபல சினிமா பாடகர்கள் இசைத்த பாடல்கள் அடங்கிய இசை தொகுப்பு அது.

எழுத்துப் படைப்புக்கள்

பாலன் ஏராளமாக எழுதிக் குவித்தவர். அவரது படைப்புகளில், 1. பி ஜீவானந்தம் வரலாறு 2. ஆயுள் தண்டனை சிறைவாசம் –எனது நினைவுக் குறிப்புகள். 3. நாம் ஏன் வங்கி தேசியமயம் கோருகிறோம்? 4. மார்க்சியம் என்றால் என்ன? 5. ஜவுளி தொழிலில் நெருக்கடிகள் 6 அக்டோபர் புரட்சியும் நமது சுதந்திரப் போராட்டமும் நூல்களும் மற்றும் பலவும் அடங்கும். பெரும்பான்மையாக அந்த நூல்கள் தமிழில் எழுதப்பட்டன.

மரணம்

கே பாலதண்டாயுதம் மிக துரதிஷ்டமான இறப்பைச் சந்தித்தார். அவர் 1973 மே 31 ல் ஏஐடியுசி பொதுச் செயலாளர் சதீஷ் லூம்பா, ஒன்றிய அமைச்சர் மோகன் குமாரமங்கலம் மற்றும் பாரதிய கெத்மஸ்தூர் யூனியன் (BKMU) தலைவர் பான் சிங் பௌரா முதலானவர்களுடன் இந்திய ஏர்லைன்ஸ் விமானம் 440ல் டெல்லிக்குத் திரும்பி கொண்டு இருந்தார். எதிர்பாரா விதமாக விமானம் விபத்துக்குள்ளாகி மோதிச் சிதற, முதல் மூவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். நான்காவதான பௌரா விமானத்திலிருந்து தூக்கி எறியப்பட்டதால் தீக்காயங்களுடன் தப்பினார்.

பாலதண்டாயுதம் அப்பொழுது ஸ்ரீலங்காவில் சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு, ஐஎல்ஓ, ‘மக்கள் தொகை பிரச்சினைகள்என்ற பொருளில் நடத்திய கருத்தரங்கில் ஏஐடியுசி பிரதிநிதியாகக் கலந்து கொண்டுவிட்டு டெல்லி திரும்பிக் கொண்டிருந்தார். மரணம் அடைந்தபோது அவருக்கு வயது 55 மட்டுமே.

(தோழர் பாலதண்டாயுதம் நினைவைப் பறைசாற்றியபடி சென்னையில் உயர்ந்தோங்கி நிற்கிறது, அவரது பெயரால் அமைந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் கட்சி அலுவலகக் கட்டிடம் “பாலன் இல்லம்)

வாழ்க பாலன் புகழ்!

நியூ ஏஜ் (2025, அக்.  5 – 11)
தமிழில் : நீலகண்டன்,
என்எப்டிஇ, கடலூர்

 

No comments:

Post a Comment