Thursday, 24 October 2024

ஹோமி தாஜி, முன்னுதாரணமான ஒரு கம்யூனிஸ்ட் அடையாளம்

 

ஹோமி தாஜி,  முன்னுதாரணமான 
ஒரு கம்யூனிஸ்ட் அடையாளம்
--திக்காராம் சர்மா 

    ஹோமி தாஜி 1926 செப்டம்பர் 5ம் நாள் பாம்பேயில் ஒரு பார்சி குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை ஃபராம் ரோஸ் தாஜி, தமிழ்நாட்டின் திருப்பூரில் ஒரு பஞ்சு பிரிப்பக ஆலையைச் சொந்தமாக நடத்தி வந்தார். நல்ல நிலையில் இருந்த அக்குடும்பம் 1930களின் பொருளாதாரத் தேக்கநிலை காரணமாகப் பெரும் நட்டங்களைச் சந்திக்க, அவர் திருப்பூரைவிட்டு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் ஒரு பணக்காரர் அவரைப் பஞ்சு தேர்வு செய்யும் பணியில் அமர்த்தினார். பணி என்பதைப் பொருத்து ஊதியம் எவ்வளவு என்பதை முடிவு செய்யவில்லை. ஊதியத்தை விரைவில் முடிவு செய்ய அவரது முதலாளி உறுதியளித்திருந்தார். எனவே தனது இரண்டு மகன்கள், ஹோமி மற்றும் காகி இருவரையும் தனியார் நடத்திய செயின்ட் ரஃபேல் பள்ளியில் சேர்த்தார். உறுதியளித்ததற்கு மாறாக முதலாளி பல மாதங்களுக்கு ஒரு பைசா கூட ஊதியம் வழங்கவில்லை. ஃபராம் ரோஸ் தாஜி வேறுவழியின்றி அந்த வேலையை விட்டுவிட்டார்.

இளமையில் வறுமையும் பள்ளிக் கல்வியும்

            இதன் விளைவாய் மகன்களின் பள்ளிக் கட்டணத்தைக் கட்ட இயலாது போக, அவர்கள் பள்ளியிலிருந்து இடைநின்றனர். அவரது குடும்பம் வாழ்க்கை நடத்த முடியாமல் மிகவும் சிரமப்பட்டது. இந்தச் சிரமங்களை அவரது மனைவிதான் சுமக்க நேரிட்டது. அவர் ஊறுகாய், தொக்கு முதலானவற்றைத் தயாரித்து விற்பது, சிறு குழந்தைகளுக்குப் பாடம் நடத்துவது, அண்மை வீடுகளின் துணி தைப்பது எனப் பல்வேறு பணிகளைச் செய்யத் தொடங்கினார். சுரண்டல் என்ன என்பதை ஹோமி முதன் முறையாக உணர்ந்தார், அது அவரது மனதில் கிளர்ச்சிப் பொறியை எழுப்பியது. ஹோமி, புத்திசாலித்தனமான, கடுமையாக உழைக்கும் மாணவர் என்பதை அறிந்த ஆசிரியர்களில் ஒருவர் அவர் மீது கருணை கொண்டார். எனவே சில நாட்களுக்குப் பின், வகுப்பறையில் கற்பிக்கப்படுவதை அறைக்கு வெளியே வராண்டாவில் அமர்ந்து கேட்க ஹோமி அனுமதிக்கப்பட்டார். தந்தை வாழ்வாதாரத்திற்காகத் தொடங்கிய உணவகத்தில் ஹோமியும் அவரது சகோதரரும் வேலை செய்தனர். ஆனால் துரதிருஷ்டம் இதுவும் கைகொடுக்கவில்லை. புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்களுக்கு ஆகும் செலவு ஹோமியின் முக்கிய பிரச்சனையாக இருந்தது. புத்தக விற்பனைக் கடையொன்றில் அவர் வேலை செய்தது அப்பிரச்சனையை ஓரளவு தீர்த்தது. அவர் வசித்த சிறிய வீட்டில் வெளிச்சத்திற்கு ஒரு சிறிய விளக்கு இருந்தது. தனது நண்பர்களிடமிருந்து இரவில் புத்தகங்களைப் பெற்று அடுத்த நாள் விடியலில் திரும்பத் தந்துவிடுவார். இந்தத் துயரகரமான நிலையிலும் அவர் தனது படிப்பைத் தொடர்ந்தார், நல்ல மதிப்பெண்களுடன் மெட்ரிகுலேஷன் தேர்வுகளில் வெற்றி பெற்றார்.

கல்லூரிப் படிப்பு

     தனது படிப்பைத் தொடர விரும்பினாலும் நிலைமைகள் அதை அனுமதிக்கவில்லை. எனினும் ஹோமியின் தந்தை பாம்பே பார்சிய சொசைட்டியிடம் வைத்த கோரிக்கையை ஏற்ற சொசைட்டி, கல்லூரி கட்டணங்களைக் கட்ட ஒப்புக் கொண்டது. கல்லூரியில் இடம் பெற்ற பிறகு அரசியல் மற்றும் கோச்சிங் தருவதில் பங்கெடுக்கத் தொடங்கினார். பிஏ பட்டப் படிப்பை முடித்த பிறகு சட்டம் பயில எல்எல்பி பாடத்தில் அனுமதி பெற்று சட்டப் படிப்பில் பட்டம் பெற்றார். வழக்கறிஞராகப் பயிற்சியைத் தொடங்கியபோதே எம்ஏ முதுகலைப் பட்டப்படிப்பிலும் சேர்ந்தார். அரசியலில் பங்கெடுத்ததற்காக, எம்ஏ இறுதித் தேர்வின்போது ஹோமி கைது செய்யப்பட்டார். அதற்குப் பிறகும், எம்ஏ தேர்வில் தேர்ச்சி பெற்றது மட்டுமல்ல, ஆக்ரா பல்கலைக்கழகத்தில் அவர் இரண்டாவதாக வந்தார்.

அரசியல் வாழ்வு

    ஹோமி தாஜி தனது 16வது வயதில், 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றபோது அரசியல் வாழ்வைத் தொடங்கினார். பின்பு அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தில் (AISF) இணைந்தார். பின்னர் சில காலத்திற்குப் பிறகு 1946 மே 1ம் நாள் ஆனந்த் லாகோ முன்னிலையில் அவருக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் தகுதி வழங்கப்பட்டது. 1951ல் குவாலியரில் தொடங்கப்பட்ட மாணவர் இயக்கத்தில் ஏஐஎஸ்எஃப் தீவிரமாகப் பங்கேற்றது; அதில் நடந்த போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் மூன்று மாணவர்கள் கொல்லப்பட்டனர். தாஜி கைது செய்யப்பட்டார், ஒரு வழக்கறிஞரை வைத்து வாதாடாத போதிலும், அவ்வழக்கில் வெற்றி பெற்றார். தேர்ந்த சொற்பொழிவாளராகவும் திறமையான அமைப்பாளராகவும் இருந்த அவருக்கு இந்தூரின் 30ஆயிரம் டெக்ஸ்டைல் தொழிலாளர்களை ஒன்று திரட்டும் பொறுப்பு அளிக்கப்பட்டது. அதனை வெற்றிகரமாக நிறைவேற்றி புகழ்பெற்ற தலைவராக ஆனார்.

சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராக

     31 வயது மட்டுமே ஆனபோது 1957ல் அவர் மத்தியப் பிரதேசச் சட்டமன்றத்திற்கு, எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் பெருந்தலைவர் கங்காராம் திவாரியைப் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வென்று, உறுப்பினராகத் தேர்வானார். மபி சட்டமன்றத்திற்கு 1972ல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அனைவரும் டெப்பாசிட் தொகை இழந்தனர். 1962ல் சிபிஐ ஆதரவுடன், சுயேச்சை வேட்பாளராக, நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பொருளாதார நிலைமை, டெப்பாசிட் தொகை கட்டுவதற்கும் பணம் இல்லாத அளவிற்கு, அப்போது மிகமோசமாக இருந்தது. அதற்காக அவரது தாயார் தனது திருமண மோதிரத்தை விற்றார். நாடாளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பு வகித்த காலத்தில், காங்கிரஸ் கட்சியையும் பிர்லா போன்ற முதலாளிகளையும் அவர்கள் அடிக்கும் கொள்ளைகளுக்காக அவர் அம்பலப்படுத்தினார்.

நாடாளுமன்றச் செயல்பாடு

    பண்டிட் ஜவகர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி மற்றும் இந்திரா காந்தி என மூன்று பிரதமர்களுடன் பணியாற்றும் வாய்ப்பினை அவர் பெற்றார். அப்போதைய நாடாளுமன்றத்தில் அவர்தான் வயதில் மிக இளைய உறுப்பினர்.

      ஹோமி தலைச்சிறந்த சொற்பொழிவாளர், பாராளுமன்ற விவாதங்களில் தீவிர ஆர்வமுடன் அவர் பங்கேற்பது வழக்கம். தாஜியின்பால் கவரப்பட்ட பண்டிட் நேரு, தாஜி உரையாற்றும்

போது தவறாது அவையில் அவரது உரைகளைக் கவனிப்பது வழக்கம். ஹோமி தாஜியின் நேர்மை, வெளிப்படைத்தன்மை, நீதிநெறி சார்ந்த கொள்கை உறுதி மற்றும் திறன் மீது நேரு முழு நம்பிக்கை வைத்திருந்தார். அது உண்மை என்பதை ஒரு நிகழ்வு நிரூபித்தது. சில சர்வதேசப் பிரச்சனைகள் மீது இந்தியாவின் நிலைபாட்டை எடுத்துக் கூறி ஸ்ரீலங்காவிடம் முன் வைக்க, நேரு தனது கட்சிக்காரருக்குப் பதிலாக தாஜியை ஸ்ரீலங்கா அனுப்பினார். அது பற்றி கடைசி நேரத்தில் தெரிவிக்கப்பட்டபோது, தாஜியிடம் பணம் இல்லாத காரணத்தால் தனது இயலாமையைத் தெரிவித்தார். உடனே செயலில் இறங்கிய அரசு, இரவு நேரத்தில் வங்கியைத் திறக்க உத்தரவிட்டு, அங்கே அப்போதே பணம் பட்டுவாடா செய்யப்பட்டது.

பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியுடன்

    லால் பகதூர் சாஸ்திரியும்கூட தாஜியின்பால் ஈர்க்கப்பட்டார். அவ்வவ்போது பல்வேறு பிரச்சனைகள் குறித்து அவர் கலந்து விவாதிப்பது வழக்கம். ஒருமுறை அரசு பொது பாதுகாப்பு மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது. அந்த மசோதாவை தாஜி மிகக் கடுமையாக எதிர்த்தார். அரசுக்குப் பெரும்பான்மை இருந்ததால், மசோதா நிறைவேற்றப்பட்டுச் சட்டமானது. சாஸ்திரிஜி தாஜியை அழைத்து மசோதாவை எதிர்க்கும் காரணத்தைக் கேட்டார். அந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படக் கூடும், மேலும் அப்பாவி மக்கள் அதற்குப் பலியாகவும் கூடும் என தாஜி பதில் அளித்தார். ஆனால் பிரதமர் அந்தப் பதிலில் திருப்தி அடையவில்லை.

       சில காலத்திற்குப் பிறகு இந்தூரில் சில பிரச்சனைகள் மீது நடத்தப்பட்ட மக்கள் போராட்ட இயக்கதில் தாஜியும் கைதானார். தான் கைது செய்யப்பட்டதையும், சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டதையும் குறித்துத் தாஜி பிரதமருக்கு ஓர் அஞ்சல் அட்டை அனுப்பினார். சாஸ்திரி உடனடியாக அவரை விடுவிக்கச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தாமதமின்றி தாஜி விடுதலை செய்யப்பட்டார்.

மக்கள் பிரதிநிதிகளுக்கு ஓய்வூதியம்

     சாஸ்திரியின் அகால மரணத்திற்குப் பிறகு இந்திரா காந்தி பிரதமரானார். 1967ல் தாஜியின் பதவிக் காலம் முடிவடைந்ததால், பிரதமர் இந்திராவுடன் பணியாற்ற அவருக்கு மிகக் குறைந்த வாய்ப்பே கிடைத்தது. எனினும், தனது 

 செயல்பாடுகளைத் தொடர்ந்தார். நாடாளுமன்ற லாபியில் பார்வைக்கு வைத்துள்ள செயல்துடிப்புள்ள பாராளுமன்றவாதிகள் பெயர் பட்டியலில் அவர் பெயரும் இடம் பெற்றதிலிருந்து இந்த உண்மை நிதர்சனமாகும். ஒரு முறை மேனாள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் கைம்பெண் மனைவி தன் வாழ்வாதாரத்திற்காகப் பிச்சை எடுத்துக் கொண்டிருந்ததை அவர் கவனித்தார். ஓர் அரசு ஊழியரின் கைம்பெண் மனைவி குடும்ப ஓய்வூதியம் பெற தகுதி பெற்றிருக்கும்போது, பிறகு எவ்வாறு இந்தப் பெண்மணிக்கு மட்டும் அது மறுக்கப்பட முடியும் என்று ஹோமி தாஜி எண்ணினார். இது குறித்து அரசு அதிகாரிகளுடன் கடிதப் போக்குவரத்தைத் தொடங்கினார், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அவரது கோரிக்கை நிறைவேறியது.

கட்சிப் பொறுப்புகள்

    ஹோமி தாஜி முதிர்ச்சி பெற்ற முதல் தரத்திலான அரசியல்வாதி. அவர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு, செயற்குழு மற்றும் செயலகத்தின் உறுப்பினராகப் பொறுப்பு வகித்துள்ளார். இது தவிர, அவர் மத்திய பிரதேச சிபிஐ மாநிலச் செயலாளராகப் பல ஆண்டுகளுக்கு இருந்தார். சீனா, சோவியத் யூனியன் மற்றும் பிற நாடுகளுக்கு அவர் பயணம் செய்துள்ளார். பொது இயக்கங்களைத் தலைமையேற்று நடத்தியதற்காக பல முறை அவர் சிறை செய்யப்பட்டார். அவரது அரசியல் எதிரிகளும்கூட அவர் மீது மிகப் பெரும் மரியாதை வைத்திருந்தனர். அவரது அரசியல் மற்றும் சமூகச் செயல்பாடுகளில் அவருடைய குடும்பம் முழுவதும் உடன் நின்றது.

நீதிமன்றங்களில் தாஜியின் போற்றத்தக்கச் செயல்பாடுகள்

   தாஜி போபால் உயர்நீதிமன்றத்தின் மரியாதைக்குரிய வழக்கறிஞர் ஆவார். அவர் வாதாடிய எல்லா வழக்குகளும் நன்கறிந்த புகழ்பெற்ற வழக்குகள் எனினும், இந்தூரில் 1952ல் நடத்திய ஒரு வழக்கு குறிப்பிடத்தக்க மிகவும் முக்கியத்தும் வாய்ந்தது. அது, பொதுமக்களை நோக்கி போலீஸ் 0.303 ரக துப்பாக்கிகளைப் பயன்படுத்தி சுட்டதில் பல மக்கள் கொல்லப்பட்ட துயரகரமான நிகழ்வு. சட்ட விதிகளின்படி இராணுவம் மட்டுமே அத்தகைய (துப்பாக்கியின் குழாய்முனை ஓர் அங்குலத்தில் ஆயிரத்தில் 0.303 அளவு விட்டமுள்ள) 0.303 ரக துப்பாக்கிகளைப் பயன்படுத்த அதிகாரம் அளிக்கப்பட்டவர்கள், போலீசுக்கு அதனைப் பயன்படுத்த அதிகாரமில்லை. எனவே அவ்வழக்கில் அப்போதைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியைத் தலைவராகக் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. பொதுமக்கள் சார்பாக வழக்கை முன்வைத்த வழக்கறிஞர்களில் தாஜியும் ஒருவர். விசாரணையின் முடிவு பொதுமக்களுக்குச் சாதகமாக அளிக்கப்பட்டது. தாஜியுடன் மிகப் பெரிதும் ஈர்க்கப்பட்ட அந்நீதிபதி பான்ஞ்சு (Banchu), உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றுமாறு அவருக்கு ஆலோசனை கூறினார்.  ஆட்கொணர்வு மனு வழக்குகளைக் கையாள இந்தூரில் தாஜியைத் தவிர வேறு வழக்கறிஞர்கள் இல்லை என்று அறியப்படுகிறது.

தொழிற்சங்கங்களில் தாஜி

    முன்பு கூறியதைப் போல தாஜி, இந்தூரின் டெக்ஸ்டைல் ஆலைத் தொழிலாளர்கள் மத்தியில் தொழிற்சங்கச் செயல்பாட்டாளராகத் தன் வாழ்வுப்பணியைத் தொடங்கியவர். அனைத்திந்தியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் (AITUC) பேரியக்கத்துடன் இணைப்புப் பெற்ற பல்வேறு பிற தொழிற்சங்கங்களில் தாஜி தலைமையேற்று செயல்பட்டுள்ளார். பெரும் வெற்றியுடன் நீதிமன்றங்களில் பல்வேறு தொழிலாளர் வழக்குகளை எடுத்துப் போராடினார். இறுதியில் தொழிற்சங்கங்களின் அனைத்திந்தியத் தலைவரானார். [தொலைபேசி ஊழியர்களின் (NFPTE சம்மேளத்தைச் சேர்ந்த E3) பொறியியல் மூன்றாம் பிரிவு சங்கத்தின் அனைத்திந்தியத் தலைவராக அவர் செயல்பட்டதை அந்த ஊழியர்கள் இன்றும் பெருமையுடன் நினைவு கூர்கின்றனர். –மொழிபெயர்ப்பாளர் இணைப்பு]

    பல ஆண்டுகளுக்கு ஏஐடியுசி பேரியக்கத்தின் துணைத் தலைவராக இருந்த தாஜி, 1984 முதல் 1988வரை அதன் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தூர் பல்கலைக் கழகத்தின் தலைவராக அவர் இரண்டு முறை இருந்தார். 3ம் பிரிவு மற்றும் 4ம் பிரிவு ஊழியர்களின் பணி நிலைமை, ஊதிய விகிதங்கள் மற்றும் பதவி உயர்வு கொள்கைகளை அவர் முடிவு செய்து மேம்படுத்தினார்.

என்றும் நம் நினைவில் தாஜி

    ஹோமி தாஜி வாழ்க்கை முழுவதும் போராட்டங்களும் துயரங்களும் நிரம்பியது. அவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள். புத்திசாலியான அவரது மகன் வெற்றிகரமான வழக்கறிஞரானார். ஆனால் மிக இளம் வயதில் அவர் இறந்தது பெரும் சோகம். மகள் தொழில் ரீதியாக ஒரு மருத்துவர். தொழிலாளர் காலனி ஒன்றில் இருந்த அவரது மருத்துவ மனையில் தொழிலாளர்கள், ஏழைகள், மிக பிற்பட்ட நிலையில் இருந்த மக்களுக்கு அவர் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளித்தார். இதைத் தவிர இதனுடன் கூட ஏழைகள், உழைப்பாளர்களின் குழந்தைகள் கல்வி பெறுவதற்கு ஒரு வாய்ப்பாகப் பள்ளிக்கூடம் ஒன்றையும் அவர் திறந்தார். அந்த மகளும்கூட இளம் வயதிலேயே மரணமடைந்தார். தாஜி மூளையில் இரத்தக் கசிவு காரணமாக, பக்கவாதத்தாலும் தண்டுவட எலும்பு முறிவாலும பாதிக்கப்பட்டார். இவற்றை எல்லாம் மீறி அவர் தன் போராட்டங்களைத் தொடர்ந்தார்.

    முன்னுதாரணக் கம்யூனிஸ்ட்டின் அடையாளமான ஹோமி தாஜி 2009 மே 14ம் நாள் இம்மண்ணுலகை நீத்து, தோழர்களின நினைவுகளில் நீங்காது வாழ்கிறார்.

         தாஜியின் புகழ் நீடு வாழ்க!

--நன்றி : நியூஏஜ் (அக்.20 --26)

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர் 


Wednesday, 21 August 2024

நாட்டின் சுதந்திரம் – இன்றைய சவால்கள் --தோழர் -டி ராஜா

 


     நாட்டின் சுதந்திரம் – இன்றைய சவால்கள்


--டி ராஜா

   சிபிஐ பொதுச் செயலாளர்

            இந்திய மக்கள் நீண்ட வரலாற்றுப் போராட்டங்களுக்குப் பிறகு 1947 ஆகஸ்ட் 15ல் காலனிய ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்தனர். இந்தப் போராட்ட இயக்கங்களில் கம்யூனிஸ்ட்கள் புகழார்ந்த பெரும் பங்கை ஆற்றினர்.

         20ம் நூற்றாண்டின் இரண்டாவது பத்தாண்டில் அர்ப்பணிப்பு- மிக்க, அறிவுக் கூர்மை உடைய தேச பக்த இளைஞர்கள் குழு ஒன்றிணைந்து, தேசம் தழுவிய ஓர் அமைப்பைத்

தொடங்கினர். 1920ல் அனைத்திந்திய தொழிற் சங்கக் காங்கிரஸ் (ஏஐடியுசி) பேரமைப்பை நிறுவியது அவர்களின் முதலாவது பெரும் வெற்றி; அது நாடெங்குமிருந்த தொழிலாளர் வர்க்கத்தின் முற்போக்கான தேசியத் தலைவர்களை ஒன்றாகக் கொண்டு வந்தது. ஏஐடியுசி பிரிட்டிஷ் அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளை எதிர்த்துப் போராடியதுடன், தேச விடுதலை உட்பட நீண்ட கால அரசியல் கோரிக்கைகள் மீது தொழிலாளர்களுக்கு உணர்வூட்டி அரசியல்படுத்தியது.

அக்காலக்கட்டம், 2வது உலகப் போர் முடிவுக்கு வந்து, ரஷ்யாவில் லெனின் தலைமையில் போல்ஷ்விக் புரட்சி வெற்றி, இந்திய அரசியல் அரங்கில் மகாத்மா காந்தியின் வருகை என முக்கிய நிகழ்வுகள் நடந்தேறின. விடுதலை இயக்க நிகழ்ச்சி நிரலைத் தீவிரப்படுத்தும் பொறுப்பை முன்வந்து ஏற்ற கம்யூனிஸ்ட்கள், இந்திய தேசியக் காங்கிரஸ் அமைப்பின் உள்ளும் புறமும் இருந்து செயல்பட்டனர்;அதில் அடைந்த குறிப்பிடத்தக்க வெற்றிகள் நமது நாட்டிற்குக் கேந்திரமான முக்கியத்துவம் உடையதாக நிரூபித்தது.

       கான்பூரில் 1925 டிசம்பர் 26ம் நாள் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது. துணைக் கண்டத்தின் குறுக்கிலும் நெடுக்கிலும் இருந்து கம்யூனிஸ்ட்கள் ஒன்று திரண்டு சக்திமிக்க மேடையமைத்தது, முற்போக்கான கோரிக்கைகளை அழுத்தமாக முன்

வைக்க உதவி, விடுதலை இயக்கத்தில் கம்யூனிஸ்ட்களைத் தவிர்க்க முடியாத அங்கமாக்கியது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கான்பூர் அமைப்பு மாநாட்டின் வரவேற்புக் குழு தலைவரான மௌலானா ஹஸ்ரத் மொஹானி, பிரிட்டிஷ் ஆட்சியிடமிருந்து “பூரண சுதந்திரம்” கோரிக்கையை முதன்முதலாக எழுப்பியவர்! அந்தக் கோரிக்கை முழக்கம், (டொமினியன் அந்தஸ்து போன்ற) வரையறுக்கப்பட்ட தன்னாட்சி என்ற முந்தைய கோரிக்கை- களிலிருந்து குறிப்பிடத்தக்க வகையில் விலகியதை அடையாளப்படுத்தியது. மேலும், நமது தேசத்திற்கு அரசியல் அமைப்பு நிர்ணய சட்டமன்றம் வேண்டும் என்ற கோரிக்கையை முதன் முதலாக எழுப்பியதும் கம்யூனிஸ்ட்களே!

           ‘அனைத்திந்திய கிசான் சபா’ (1936) மூலம் விவசாயிகளையும், ‘அனைத்திந்திய மாணவர் பெருமன்றம்’ (1936) மூலம் மாணவர்- களையும், ‘முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம்’ (1936) மூலம் நாட்டின் எழுத்தாளர்களையும் அறிஞர்களையும் மற்றும் ‘இந்திய மக்கள் நாடக மன்றம்’ (IPTA, 1943) மூலம் கலைஞர்களையும் அமைப்பு ரீதியில் ஒன்று திரட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முன்முயற்சி எடுத்தது.

         இதன் மத்தியில், முகிழ்ந்து மலர்ந்துவரும் கம்யூனிஸ்ட் இயக்கத்தை நசுக்க பிரிட்டிஷ் அரசு தீவிரமாக முயன்றும், கம்யூனிஸ்ட்கள் மக்களிடமிருந்து பெற்ற ஆதரவு காரணமாகவும் விடுதலைப் போராட்டத்தில் அவர்கள் ஆற்றிய பங்காலும், அரசு அதில் தோல்வியே அடைந்தது. இவை அனைத்தும், ‘இந்திய விடுதலையின் இறுதிப் போர்’ என்று மிகச் சரியாக அழைக்கப்படும் 1946ன் ‘இராயல் இந்திய கப்பற்படை எழுச்சி’ என்ற உச்சநிலையை அடைந்தது.

      நேதாஜி சுபாஷ் சந்திர போசின் ‘இந்திய தேசிய இராணுவம்’ (ஆஸாத் ஹிந்த் ஃபவுஜ்) அமைப்பால் உற்சாகமும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவையும் பெற்ற கப்பற்படை வீரர்கள், பிரிட்டிஷ் மேலதிகாரிகள் உத்தரவைப் புறக்கணித்து, வேலை நிறுத்தத்தில் இறங்கினர். அதற்கு ஆதரவாக சிபிஐ பம்பாயில் வேலைநிறுத்தம் செய்ததில் இலட்சக் கணக்கானோர் பங்கேற்றனர். பிரிட்டிஷ்காரர்களிடமிருந்து தொடங்கிய வன்முறை எதிர்மறை விளைவாய் முடிந்தது; வெளிநாட்டு ஆட்சியாளர்கள் இந்தியாவில் தஙகளின் நாட்கள் எண்ணப்பட்டு வருவதையும், இந்திய மக்கள் இதற்கு மேலும் அன்னிய அடிமை நுகத்தடியைச் சுமக்கத் தயாராக இல்லை என்பதையும்  உணரச் செய்தது.

    சமூகத்தை அறிவியல் ரீயில் புரிந்து கொண்டு, மிகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளைக் கையில் எடுத்து நிகழ்ச்சி நிரலை வகுத்துக் கொண்டதால், மக்கள் திரள்

மத்தியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அவர்களின் பேரன்பிற்கு உரித்தானது. சிபிஐ எப்போதும் மக்களுடன் நின்றது, ஆலைகளிலும் வயல்களிலும் அவர்கள் சுரண்டப்படும் தன்மையை அவர்களுக்கு விளக்கி மக்களைத் திரட்டியது. இந்தியக் கம்யூனிஸட் கட்சியின் கான்பூர் அமைப்பு மாநாட்டிலேயே மாநாட்டின் தலைவர் சிந்தனை சிற்பி ம சிங்காரவேலு செட்டியார் மனிதத்தன்மையற்ற தீண்டாமை வழக்கத்தை எதிர்த்தார். சாதி முறைக்கு எதிரான முன்னோடிகளில் ஒன்றாக சிபிஐ எழுந்தது. நவீன, விஞ்ஞான கருத்தியலான மார்க்ஸிய தத்துவம் என்ற ஆயுதம் தரித்து, சமூக சீர்திருத்தவாதிகளின் செழுமையான பங்களிப்புச் சிந்தனைகளுடன் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
பெண்களைத் திரட்டுவதில் முன்கை எடுத்து, ஆணாதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் முனையிலே முன் நிற்கிறது. வர்க்க, சாதியப் படிநிலைகள் மற்றும் ஆணாதிக்கம் இல்லாத சுதந்திரமான அறிவார்ந்த இந்தியா என்ற சிபிஐ-யின் கருத்து, இலட்சக் கணக்கான மக்களை ஈர்த்து அவர்களைச் சமூகத்தில் நீதி மற்றும் சமத்துவத்திற்கான போராட்டத்தில் இணையச் செய்துள்ளது.

நமக்கு முன் இருக்கும் சவால்கள் என்ன?

    சுதந்திரத்தின் எட்டாவது பத்தாண்டையும் நமது கட்சியின் நூற்றாண்டையும் நாம் நெருங்கும்போது, மக்களுடன் நம்மை நெருக்கமாகக் கொண்டு வந்தது எது? நாம் உயர்த்திப் பிடிக்கும் விழுமியங்களுக்காகத் தொடரும் நமது சமரசமற்ற போராட்டத்தில் நமக்கு முன் இருக்கும் சவால்கள் என்ன? மற்றும், நாம் கட்டி எழுப்ப கனவு காணும் சமூகத்தில் --நமது அனைத்துக் குடிமக்களுக்கும் சமூக, அரசியல், பொருளாதார நீதியை உறுதி செய்யும் சமூகத்தில்- வர்க்கமற்ற, சாதியற்ற தேசமாகக் கட்டியெழுப்ப உறுதி பூண்டவற்றைச் சுட்டிக்காட்டி குறிப்பிடுவது கட்டாயமாகும்.

       சிபிஐ போல, ஆர்எஸ்எஸ் அமைப்பும் அதே 1925ம் ஆண்டில் அமைக்கப்பட்டது. பிரிட்டிஷ் அரசை எதிர்த்துப் போரிடுவதற்குப் பதில், சிறுபான்மை இனத்தவர்களையும் கம்யூனிஸ்ட்களையும் நாட்டின் விரோதிகளாக ஆர்எஸ்எஸ் அடையாளப்படுத்தியது; அவர்களின் 100வது ஆண்டின் பிரச்சாரம் நேர்மறை விழுமியங்களை இழந்து பரிதாபமாக இருக்கிறது. கம்யூனிஸ்ட்கள் உச்சபட்சத் தியாகங்களை செய்தபோது, ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் தலைமை பிரிட்டிஷ் காலடியில் அடிமைச் சேவகம் செய்து கிடந்தது; அரசியல் சூழலை ஆர்எஸ்எஸ் விஷமாக்கியது, மகாத்மா காந்தி படுகொலையில் முடிந்தது; மேலும் அன்றைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல் ஆர்எஸ்எஸ் அமைப்பைத் தடை செய்வதில்போய் அது முடிந்தது.

            விடுதலை அடைந்த நாளிலிருந்தும் ஆர்எஸ்எஸ் மீதான தடை ரத்து செய்யப்பட்ட பிறகும் அந்த அமைப்பு, மேல் கீழாக அடுக்கப்பட்ட படிநிலைச் சமூகம், மற்றும் மதச்சார்பு இந்து ராஷ்ட்ரா அமைக்கும் இலட்சியத்தை நோக்கி இரகசியமாக மறைந்தும் மறையாமலும் வேலை செய்தது; அதன் பல்வேறு இணைப்பு அமைப்புகள் வாழ்வின் எல்லா களங்களிலும் அதைச் சுற்றி காளானாக முளைத்தன –அவை அனைத்தும் கூட்டாக ‘சங்க் பரிவார்’ என்றழைக்கப்படுகிறது.

        ஒன்றியத்தில் ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சி, ஆர்எஸ்எஸ் அமைப்பின் அரசியல் பிரிவேயன்றி வேறில்லை; மேலும் பாஜக அதே சாதிய, சுரண்டல், பெண் இன வெறுப்புக் கொள்கைகளையே இரகசியமாகத் தன்னுள் நீண்ட காலமாகப் பாதுகாத்துப் பின்பற்றி வருகிறது.

முக்கியமான கேள்வியும் புகழார்ந்த வரலாறும்

இச்சூழலில், இந்தத் தத்துவார்த்தச் சவாலைச் சிபிஐ எவ்வாறு எதிர்கொள்ளப் போவது என்பதும்; முற்போக்கான, சோஷலிச நிகழ்ச்சி நிரலை நாட்டின் முன் மீண்டும் எப்படி வலியுறுத்தப் போகிறோம் என்பதும், இன்று நாம் அக்கறை கொள்ளும் முக்கியமான கேள்வியாகும்.

           பிரிட்டிஷ் அரசை எதிர்த்துப் போராடிய புகழார்ந்த வரலாறும், விடுதலை அடைந்த பிறகு நமது தேசத்தை வடிவமைப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்த வரலாறும் நமக்கு உண்டு; அந்தப் புகழ்பெற்ற வரலாற்றைப் பழங்காலக் கலைப் பொருள் போலக் கருதிவிடாது, கூடுதல் உற்சாகத்துடன் போராட்டங்களில் முன்நோக்கிச் செல்ல அவை நமக்கு ஊக்கம் தருபவைகளாகக் கருதுவோம். நம்முடைய கடமையும் கவலையும் எப்போதும் ஒன்றே – அது, இந்திய மக்களின் நலவாழ்வு மட்டுமே! ஆர்எஸ்எஸ் –பாஜக கூட்டின் மோசமான ஆட்சியின் கீழ் மக்கள் அவதிப்பட்டு தவிக்கும்போதும், பிளவுபடுத்தும் வகுப்புவாதக் கருத்தியல் நமது சமூகத்தை உடைத்துச் சீரழிக்க அச்சுறுத்தும்போதும், நம்முடைய பணி, மக்களின் அன்றாட வாழ்வில் அவர்களை நோக்கி நெருக்கமாகச் செல்வதுதான்.

            இன்று இது சாதாரண எளிய பணி அன்று; அதுவும், ஆர்எஸ்எஸ் – பாஜகவின் அதிகாரச் செல்வாக்கு மற்றும் அவர்களின் வேவு பார்த்துக் கண்காணிக்கும் ஆயுதத் திரட்டு மற்றும்

பொய்யான தகவல்களைப் பரப்பும் திறன் இவற்றை வைத்துப் பார்க்கும்போது இப்பணிகள் எளிதானவை அல்ல. ஆர்எஸ்எஸ், அரசு நிர்வாக அதிகார அமைப்பிலும் அரசின் அத்தனைப் பிரிவுகளிலும் ஊடுருவி விட்டது. இது நமது மதசார்பற்ற ஜனநாயகக் குடியரசை மதிப்பிழக்கச் செய்யும் அச்சுறுத்தலையும், மதவாத இந்து ராஷ்ட்டிரத்தைத் திணிக்கும் ஆபத்தையும் முன் நிறுத்துகிறது. அண்ணல்  அண்ணல் டாக்டர் அம்பேத்கர் எச்சரித்ததைப் போல அத்தகைய அசம்பாவித பேரழிவு எதுவும் நிகழும் முன், சுதந்திரத்தையும் நமது மதசார்பற்ற ஜனநாயகக் குடியரசையும் நாம் பாதுகாக்க வேண்டும்!

நமது மாபெரும் விடுதலைப் போராட்ட இயக்கத்திலிருந்து நாம் மரபுரிமையாகப் பெற்ற விழுமியங்களைப் பாதுகாக்க       எப்போதும் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்!

உடனடி கோரிக்கைகளுக்காக மட்டுமின்றி, நமது நாட்டில் சோஷலிசச் சமூகத்தை அமைக்கும் இறுதி இலட்சியத்திற்காகவும் கட்சி அதன் போராட்டங்களையும் பிரச்சார இயக்கங்களையும் தீவிரப்படுத்த வேண்டும்!

            அனைவருக்கும் சுதந்திர தின தோழமை நல்வாழ்த்துகள்!

--நன்றி : நியூஏஜ் (ஆக.18 –24)

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

 

Thursday, 18 July 2024

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு –110 “கேஆர்” –கட்சி அமைப்பின் அச்சாணி அன்ன வித்தியாசமான அடித்தளம்

 கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு –110

          “கேஆர்” –கட்சி அமைப்பின் அச்சாணி அன்ன வித்தியாசமான அடித்தளம்

                                                         --அனில் ரஜீம்வாலே

       1904 ஜூன் 20ல் மகாராஷ்டிரா, இரத்தினகிரி மாவட்டம், சிப்லூன் தாலுக்கா, காகம்பரில் ‘கேஆர்’ என்று புகழுடன் அறியப்பட்ட லக்ஷ்மண் ஆத்மாராம் கத்தாரே பிறந்தார்.

பலவகைகளில் அவர் அசாதாரணமான தோழர். கட்சி அமைப்புக்கும் பாம்பே கட்சி மையத்திற்கும் மட்டுமல்ல, பிரிட்டிஷ் காலத்திலும் அதற்குப் பிறகும் அனைத்திந்திய அளவிலும் அவர் அசையா மலைபோல அடித்தளமாக இருந்தார். டாக்டர் ஜி அதிகாரி, எஸ்வி காட்டே, பிசி ஜோஷி, அஜாய் கோஷ், சி இராஜேஸ்வரராவ் போன்ற பல தலைச் சிறந்த தலைவர்களின் பெயர்கள் நன்கறிந்த பெயர்களான போழ்து, நியாயமாகவே, கட்சியின் பல வெற்றிகரமான சரித்திர நிகழ்வுகளுக்கும் தனிநபர் தலைவர்களுக்கும் கேஆர் முக்கிய காரணியாக இருந்தார். எப்போதும் உண்மையாகவும் நம்பிக்கைக்குரியவராகவும் அவர் இருந்தார்.

      தலைமறைவு காலத்தின்போது அவர் சூடிக்கொண்ட பல பெயர்களில் ஒன்று, கம்லாகர் ராவ் என்பது ஒன்று. 1949ல் அவர் கைது செய்யப்பட்டபோது கட்சி பத்திரிக்கை செய்தியில் “தோழர் கேஆர் கைது” என்று வந்தது. அப்போதிலிருந்து ‘கேஆர்’ அவருடன் நிரந்தரமாக ஒட்டிக் கொண்டது.

    வெறும் எட்டு வயதாக இருந்தபோது பாம்பேக்கு மாறியவர் கிர்காமில் தங்கினார். படிக்க அவருக்கு ஆர்வம் இருந்தபோதும், மோசமான குடும்பப் பொருளாதார நிலை காரணமாக ஆறாவது வகுப்புடன் பள்ளிப் படிப்பு நின்றது. குறிப்பாகப் பொறியியல் படிப்பு அவரை ஈர்த்தது. எனவே வீட்டிலேயே இருந்து படிக்கத் தொடங்கினார். 1935ல் பாம்பே (தற்போது மும்பை) வீர்மாதா ஜியாபாய் தொழில்நுட்பக் கல்வி நிறுவத்தில் (VJTI) ரேடியோ டிப்ளமாவில் தனித்தேர்வர் மாணவராகச் சேர்ந்து வெளியிலிருந்து தேர்வு எழுதிய கேஆர் தேர்வில் வெற்றி பெற்றார்.

      இரண்டாம் உலகப் போர் தொடங்கிய நேரத்தில் பிரபலமான கம்யூனிஸ்டாக ஆன கேஆர், தொழில்நுட்பப் பொறியியல் வல்லுநராகவும் ஆனார். அதோடு முடிந்ததாவெனில், போர் முயற்சி தொடர்பான தொழில்நுட்பப் பிரச்சனைகளில் உதவ பிரிட்டிஷ் அதிகாரி ஜென்கின்ஸ் அவரைப் பல முறை அழைத்தார். அந்த அதிகாரி ஜெர்மானியர்களுக்கு எதிரான இரகசியத் தகவல்களைத் திரட்டுவதற்காக மலாயா, சிங்கப்பூர், இந்தோனேஷியா முதலிய பல நாடுகளுக்குச் செல்லும் பிரிட்டிஷ் நீர்மூழ்கி கப்பல் பிரிவில் அவருக்குப் பணி வழங்கவும் முன் வந்தார். ஆனால் அந்த நேரத்தில் முழுமையாகக் கட்சிக்குத் தன்னை ஏற்கனவே அர்ப்பணித்துவிட்ட கேஆரிடம் கட்சியின் பல பொறுப்புகள் சுமத்தப்பட்டு விட்டன. எனவே அதிகாரி வழங்க முன்வந்த பணி வாய்ப்பை ஏற்க நாகரீகத்துடன் மறுத்து விட்டார்.

செவ்வியல் இசை மேதை பலூஸ்ஹருடன் சந்திப்பு

    இந்தியச் செவ்வியல் இசை மீது பெரு விருப்பமுடைய கத்தாரே அதனுடன் ஆழமாக பிணைக்கப்பட்டார். குழந்தைப் பருவத்திலிருந்தே அந்த இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் எந்த வாய்ப்பையும் ஒருபோதும் அவர் தவறவிட்டதில்லை. இத்தகைய நிகழ்ச்சிகளின்போது செவ்வியல் இசையில் விற்பன்னரான புகழ்மிக்க பாடகர் பண்டிட் விஷ்ணு திகம்பர் பலூஸ்ஹர் நிகழ்ச்சி நடக்க இருப்பது அவருக்குத் தெரிய வந்தது. 1928ல் பாம்பேயில் அகில இந்திய இசை மாநாடு (ஆல் இன்டியா சங்கீத் பரிஷத்) நடத்தப்பட்டது. பலூஸ்ஹர் அந்நிகழ்ச்சிக்காகத் தன்னார்வத் தொண்டர் குழுக்களை அமைக்கும்படி கேஆரிடம் கேட்டுக் கொண்டார். அவரும் அப்பணியை மிக நன்றாக செய்து முடிக்க அவர் பெரிதும் பாராட்டப்பட்டார்.

   பிரபலமான பல பாடகர்கள் பாடிய செவ்வியல் பாடல்களின் ஒலி நாடாக்களின் மாபெரும் திரட்டை அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகக் கேஆர் திரட்டி வைத்திருந்தார். பாடகர்களின் விவரங்களையும் அவர்களின் பங்களிப்புகளையும் அவரால் விவரிக்க முடியும், நடைமுறையில் ஒவ்வொரு இசை நாடா குறித்தும் அவர் அறிந்திருந்தார்.

   1910 –20 ஆண்டு காலகட்டத்தில், குறிப்பாக கோவாவில் இசையிலும் பாடுவதிலும் பெண்கள் பங்கேற்பதில்லை. செல்வம்மிக்க மேல்மட்டப் பிரிவுகளிலிருந்து பெண்கள் அத்தகைய நிகழ்ச்சிகளில் பகெடுப்பதில்லை. அநேகமாக அனைத்துச் செவ்வியல் இசைப் பாடகர்களும் கோவாவிலிருந்து வருவது வழக்கம். இந்தப் பின்னணியில்தான் சாரதா பட் அவரது இசை வகுப்புகளைத் தொடங்கினார். அந்த வகுப்பில் பின்வரும் வார்த்தைகளுடன் ஒரு பெயர்ப்பலகை இருந்தது: “மேல்மட்ட வகுப்பைச் சேர்ந்த பணக்காரப் பெண்களுக்கு மட்டும்”! எனவே உயர் வகுப்பு குடும்பங்களிலிருந்தும் இசை வகுப்புகளில் பெண்கள் கலந்து கொள்ளத் தொடங்கியது மட்டுமல்ல, இசை நிகழ்ச்சிகளையும்கூட வழங்கினார்கள்.

1920, ஒத்துழையாமை இயக்கத்தில்

     1920ல் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் கேஆர் தீவிரமாகப் பங்கேற்றார். இந்த இயக்கத்தில் கலந்து கொண்டபோது அவருக்கு எஸ்வி காட்டேயுடன் தொடர்பு ஏற்பட்டது. ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்தை ஒருங்கிணைக்க பாம்பேயில் ஓர் அலுவலகம் அமைக்கப்பட்டது. கேஆர் அலுவலகத்தின் செயலாளராகப் பணியாற்றினார். தொடக்கத்தில் காட்டே காந்தியப் போராட்ட வழிமுறைகளில் பெரிய ஆர்வம் எதுவும் காட்டவில்லை; ஆனால் பின்னர் மெல்ல காந்திஜியையும் அவரது தத்துவத்தையும் மேலும் நன்றாகப் புரிந்து கொண்டார். ஒத்துழையாமை இயக்கம் கேஆரின் பள்ளிப் படிப்பைத் திடீரென்று முடிவுக்குக் கொண்டு வந்தது.

      சோவியத் ரஷ்யாவில் நிலச் சீர்திருத்தங்கள் குறித்த ஒரு புத்தகத்தைப் படிக்கும் வாய்ப்பு அமைய, கேஆர் தனது மாமாவிடம் இந்தியாலும்கூட விரைவில் இது நடக்கும் என்று தெரிவித்தார். மேலும் தனது மாமாவிடம், குடும்பச் சொத்தான நிலபுலன்களைக் குத்தகைதாரர்களிடம் பிரித்துக் கொடுப்பது நல்லது; இல்லையெனில் சோவித் ரஷ்யாவில் நிகழ்ந்ததுபோல அவை எடுத்துக் கொள்ளப்பட்டுவிடும் என்று கூறினார்!

   பின்னர் அவர், “அப்புத்தகத்தில் எதைப் படித்தேனோ அதை முழுமையாகப் புரிந்து கொண்டேன் என நான் பாசாங்கு செய்ய முடியாது. ஆனால் ரஷ்யாவில் நடந்த நிகழ்வுகளால் நான் மிக மிக ஈர்க்கப்பட்டேன், இந்தியாவிலும்கூட அதேபோல நடக்கும் என்பதில் நான் முழுதும் உடன்பட்டு நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

எஸ்ஏ டாங்கே அவர்களால் ஊக்கம் பெறுதல்

       தொழிலாளர் வர்க்க மாபெரும் தலைவரும் கோட்பாட்டாளருமான எஸ்ஏ டாங்கே எழுதிய “காந்தி எதிர் லெனின்” என்ற தொடக்க கால மார்க்ஸியப் படைப்பிலிருந்து அவர் தனக்கு மிகவும் தேவைப்பட்ட ஊக்கத்தையும் உற்சாகத்தையும் பெற்றார். இந்த நூல்தான் ஒத்துழையாமை இயக்கத்தில் மேலும் தீவிரமாகப் பங்கேற்க அவரை ஊக்கப்படுத்தியது. பின்னர் அவர், டாங்கேவை ஆசிரியராகக் கொண்டு ‘தி சோஷலிஸ்ட்’ என்ற புகழ்பெற்ற வார இதழ் வெளியிடுவதில் உதவினார், கிர்னி காம்கர் யூனியனுக்கு (மில் தொழிலாளர்கள் சங்கம்) நிதி திரட்டினார், முதலில் செங்கொடிகளை ஏற்றி பெருமை கொண்டார். இளம் மார்க்சியர்களின் ‘மார்க்ஸிய லீக்’ அமைப்பில் கேஆர் சேர்ந்தார்.

டாக்டர் அதிகாரியுடன் சந்திப்பு

      டாக்டர் (கங்காதர்) அதிகாரியுடன் கத்தாரேவின் சந்திப்பு பெரும் அதிர்வை ஏற்படுத்தும் மிக முக்கியமான நிகழ்வு. டாங்கேதான் (கட்சியில் சேர விரும்பிய) கேஆரை அதிகாரியிடம் அறிமுகம் செய்தார். அதிகாரி கூறினார்: “கட்சியில் எந்தவித தலைமை பொறுப்பையும் பெற வேண்டும் என்ற அபிலாசைகள் இல்லாமல், முழுமையாகக் கட்சிப் பணியில் ஒப்படைக்க நீங்கள் தயாராக இருந்தால், பின்னர் வரலாம்”. புகழ் வெளிச்சத்தை விரும்பக் கூடிய அல்லது தலைமை போன்ற எந்த எதிர்கால ஆசைகளையும் வளர்த்துக் கொள்ளும் வகையிலான மனிதர் அல்ல கத்தாரே. மாறாக உண்மையில், எப்போதும் புகழ் வெளிச்சத்திலிருந்து ஒதுங்கி இருக்கும் தன்மை உள்ளவர்.

    கேஆர் தலைமறைவு ‘தொழில்நுட்ப’ பணியில் சிறந்த திறமை உள்ளவர். பிரிட்டிஷ் ஆட்சியின்கீழ் தலைமறைவு நாட்களில் நிலவிய மிக மோசமான சூழ்நிலைகளின்போது --பெரும் நிதிப் பற்றாக்குறை இருந்தபோது-- கட்சிக்குத் தேவையான உட்கட்டமைப்புகளை ஏற்படுத்தித் தர முயன்றார். அந்நேரத்தில் தடை செய்யப்பட்டிருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ‘தலைமறைவாக’ச் செயல்பட்டது. அந்தத் தலைமறைவு கட்சி செயல்பாடுகளுக்குக் கேஆர் மிகக் கேந்திரமான முக்கிய தோழராக இருந்தார். அவரது பணிகளில் தலைவர்களை ஓரிடத்திலிருந்து பாதுகாப்பான வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்வது, முக்கிய இரகசிய ஆவணங்களைக் கொண்டு சென்று சேர்த்தல், தொழில்நுட்ப கருவிகளை அமைத்தல் முதலானவை அடங்கும். முன்பு VJTI தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் அவர் பெற்ற பயிற்சி, குறிப்பாக ரேடியோ தகவல் தொடர்பில் பெற்ற பயிற்சி காரணமாகத் தகவல் தொழில்நுட்பத்தில் நிபுணராகத் திகழ்ந்தார்.

      ஒளி சிதற கண்களை மினுக்கியபடி கேஆர் கூறினார்: “உங்களுக்குத் தெரியுமா, அனைத்து முக்கியமான ஆவணங்கள், ஆட்சி அதிகார வட்டாரத்தில் அபாய மணியை ஒலிக்கச் செய்த டாக்டர் அதிகாரியின் கம்யூனிஸ்ட் நம்பர் 1 முதலானவற்றை டைப் செய்ததும் அவற்றைச் சைக்ளோஸ்டைல் நகல்கள் அச்சிட்டதும் நான்தான். ஒரு பழைய டைப்-ரைட்டரை வைத்துக் கொண்டு, பிரிட்டிஷ் கிளப் ஒன்றில் இருந்த இயந்திரத்தில் நகல்கள் எடுத்து, அவை அனைத்தும் இரகசியமாகச் செய்யப்பட்டன. யாராலும் எங்களைப் பிடிக்க முடியவில்லை”.

     அவரது தந்தை இறந்த பிறகும் தொடர்ந்து தனது குடும்பத்தைக் கவனித்துக் கொண்டார். பல பகுதி நேர பணிகளை மேற்கொண்டார். அதிகாரி, ஜோஷி, டாங்கே மற்றும் பிற தலைவர்கள் தொடர்ந்து தங்கள் கட்சிப் பணிகளை ஆற்றுவதைக் கட்புலனுக்குத் தெரியாத கேஆரின் மாயக் கைகள் சாத்தியமாக்கின. 1930களில் பீஜப்பூர் சிறையிலிருந்து டாக்டர் அதிகாரி தப்பிச் செல்ல திட்டமிட்டு செயல்படுத்தியது கேஆர்தான்.

பணிப்பட்டறையில் செயல்பட்ட தலைமறைவு பதுங்கிடம்

   பாம்பே கிர்காமில் ரேடியோ பழுது பார்க்கும் கடை ஒன்றை கேஆர் திறந்தார். உண்மையில் அது தலைமறைவாகச் சந்திக்கும் இடமாகப் பயன்பட்டது. அங்கேதான் புகழ் பெற்ற ஆச்சார்ய நரேந்திர தேவ், ஜெயப்பிரகாஷ் நாராயணன், நர்கீஸ் பாட்லிவாலா, (பண்டிட் நேருவின் மைத்துனரான) ஹாதி சிங், பிரிதிவி சிங் ஆஸாத் மற்றும் பலர் சந்தித்துப் பேசுவது வழக்கம். ஒரு லேத் மிஷின், துரப்பணக் கருவி (டிரில்லிங் மிஷின்) வாங்கிய கேஆர், காயலான் கடை பழைய பொருட்களைப் பயன்படுத்தி அச்சடிக்கும் அச்சு இயந்திரத்தின் பாகங்களைத் தயாரித்தார்! ப்ரூஃப் பிரஸ் எனப்படும் அச்சு இயந்திரத்தைச் செய்து வங்காளம் மற்றும் ஆந்திராவுக்கும்கூட அவர் அனுப்பினார். அதன் விலை வெறும் ரூ80 மட்டுமே! கட்சி கடும் நிதி நெருக்கடியில் இருந்தபோது இவை கைக்கடக்கமாக இருந்தன. இவ்வாறுதான் அவர் பியூபிள் பப்ளிஷிங் ஹவுஸ் (PPH பதிப்பகம்) உருவாவதற்கும் உதவினார்.

    அவரது தலைமறைவு இரகசியத் தொழில்நுட்பம் எவ்வளவு திறன்மிகுந்ததென்றால், பிரிட்டிஷ் உளவு நடவடிக்கை மீதே தொடர்ந்து கண்காணிக்குமளவு இருந்தது; அதனால், கட்சியின் பெருந்தலைவர்களுக்கு எந்த ஊறு நேரும் வாய்ப்புக்களையும் தடுக்க முடிந்தது.

  பிரதி எடுக்கும் பல டூப்ளிகேட்டிங் இயந்திரங்கள் மற்றும் பிரதிகள் அச்சடிக்கும் சைக்ளோஸ்டைல் கருவிகள் மற்றும் பிற கருவிகளைப் பழுது பார்ப்பதற்காக அவற்றைக் கேஆர் சோதித்தார். ஆங்கில, ஜப்பானிய, ஜெர்மன் முதலான மொழிகளை அச்சடிக்கும் அக்கருவிகளைக் கட்சி ஆவணங்களை அச்சடிக்கவும், பிரதி எடுக்கவும் பயன்படுத்தினார். அந்நாட்களில் ஜெஸ்ட்னர் மற்றும் ரெமிங்டன் இயந்திரங்கள் பிரபலமானவைகளாகவும் நம்பிச் சார்ந்திருக்கக்கூடியவைகளாகவும் இருந்தன. அவற்றின் பல வகைகளைப் பலவேறு இடங்களில் தேடிச் சேகரித்த கேஆர், அவற்றைச் சரியாகக் கவனமுடன் பயன்படுத்தினார்.

1943 முதலாவது கட்சிக் காங்கிரஸ்

     இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதலாவது கட்சிப் பேராயம் பாம்பேயில் 1943 மே –ஜூனில் நடைபெற்றது. கலந்துகொள்ள வந்து செல்லும் போக்குவரத்தில் இருந்த ஏராளமான பிரச்சனைகளில் பலவற்றிற்குக் கேஆர் தீர்வு காண வேண்டியிருந்தது. அவற்றில், பயணத்திற்குக் கார் ஏற்பாடு செய்துதர வேண்டியதும் ஒன்று. பல பழமையான வின்டேஜ் கார்கள் (பழைய மாடல் கார், குறிப்பாக 1919 –30 காலகட்டத்தில் உற்பத்தியானவை) பரிசோதிக்கப்பட்டன. இறுதியாக அவற்றில் ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டது! எல்லா நேரங்களிலும் ஆபத்பாந்தவனாக கேஆரின் தொழில்நுட்ப அறிவு கைகொடுத்தது!

நியூஏஜ் இதழுக்கான பிரிண்டிங் மெஷின்

  சிபிஐ மீது விதிக்கப்பட்ட தடை இரண்டாம் உலகப் போரின்போது விலக்கிக் கொள்ளப்பட்டது. அந்தத் தருணத்தில் கட்சிக்கு ஒரு நியூஸ்பேப்பரின் தேவை எழுந்தது. கேஆர் அதற்காக எவையெல்லாம் இருந்ததோ அனைத்தையும் விற்றார் –அவ்வளவு ஏன், தனது ஒர்க் ஷாப் மற்றும் பிற சொத்துக்களையும் விற்றார். இவ்வாறு அவரால் ரூ7,000 திரட்ட முடிந்தது, அது அந்தக் காலத்தில் மிகப் பெரிய தொகை. அந்தத் தொகையைக் கொண்டு கேஆர், “டபுள் ராயல் அளவு, ஸ்டாப் சிலிண்டர் பெடல் மெஷின்” (காலால் மிதித்துப் பெடல் செய்து அச்சடிக்கும் மாடல் அச்சு இயந்திரம்) ஒன்று வாங்கினார். இவ்வாறுதான் ‘நியூஏஜ் பிரிண்டிங் பிரஸ்’ உருவாகி பயன்பாட்டுக்கு வந்தது.

     இத்தகைய நேர்த்தியான திறன்மிகு அச்சடிக்கும் இயந்திரம் செயல்படுவதைப் பார்த்து மக்கள் வியப்படைவது வழக்கம். அமெரிக்கன் டைம் மற்றும் லைஃப் இதழின் செய்தியாளர் மார்க்கிரெட் பர்க் வொய்ட் (அம்மையார்) இவற்றைக் காண தானே நேரில் வந்து புகைப்படங்கள் எடுத்துச் சென்றார். பின்னர் அவை அந்த இதழில் வெளி வந்தன.

    தோழர்கள் பல குழுக்களாக, விக்டோரியா டெர்மினஸ்  (தற்போது சத்திரபதி சிவாஜி டெர்மினஸ்) மற்றும் சர்ச் கேட் ஸ்டேஷன் முதலான முக்கிய இடங்களுக்குச் சென்று, கட்சியின் செய்திப் பத்திரிக்கையை விற்பனை செய்வது வழக்கம்.

நேதாஜி சுபாஷ் போஸ் தப்புவதற்கு உதவுதல்

   நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இறுதியில் சோவியத் யூனியன் மற்றும் ஜெர்மனிக்குச் செல்வதற்காக வழியில் ஆப்கானிஸ்தானத்திற்குத் தப்பிச் செல்ல உதவியதில் கம்யூனிஸ்ட்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. (நேதாஜியுடன் கம்யூனிஸ்ட்களுக்குக் கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும் உதவினார்கள்.) இந்தச் செயல்திட்டத்திற்காகச் சுபாஷின் தூதுவர்கள் பம்பாய் சிபிஐ தலைமையகத்தைத் தொடர்பு கொண்டபோது கட்சி அதனை ஏற்றது. ஆச்சார் சிங் சீனா, தேஜா சிங் சுதந்திரா, பகத் ராம் தல்வார் மற்றும் தலீப் போன்ற கம்யூனிஸ்ட்கள் இந்தச் சாகசப் பெரும் பயணத் திட்டத்தில் ஈடுபட்டனர்.

    இத்திட்டச் செயல்பாடுகளின் பின்னணியில் கேஆரும் கூட தீவிரமாக ஈடுபட்டார். தல்வாரின் நெருங்கிய நண்பனான கேஆர் பல விஷயங்களை அவருடன் விவாதிப்பார். பிந்தைய காலங்களில் அவரது குடும்பத்தினருடன்கூட கேஆர் தங்கினார். தல்வார் மற்றும் பாம்பே கட்சித் தலைமையகம் இடையே தகவல் தொடர்பை ஏற்படுத்துவது கேஆரின் வழக்கம்; பாம்பே,பெஷாவர் மற்றும் காபுல் இடையே பலமுறை பயணம் செய்தார்.

1947, சுதந்திரதினக் கொண்டாட்டம்

    பாம்பே சிபிஐ அலுவலகமான ராஜ் பவனில் இந்தியாவின் விடுதலை 1947 ஆகஸ்ட் 15 அன்று மிகப் பிரம்மாண்டமான அளவில் கொண்டாடப்பட்டது. தோரணங்களாலும், கொடிகள் மற்றும் விளக்குகளாலும் கட்டடம் ழுழுவதும் அலங்கரிக்கப்பட்டது. கூட்டங்கள் கூட்டி சொற்பொழிவுகள் ஆற்றப்பட்டன. அவை அனைத்தின் மத்தியிலும் கேஆர் இருந்தார். எல்லா இடத்திலும் நியான் விளக்குகள் ஒளிர்ந்தன. அமர் ஷேக்கின் பாடல்கள் எதிரொலித்தன.  ராஜ் பவனத்திலிருந்து வீதிகள் எல்லாம் ஆயிரக் கணக்கான மக்களால் அடைபட்டு இருந்தன. உண்மையில் நெஞ்சில் என்றும் நினைவிருக்கும் நாளானது அது.

மிகக் கடுமையான சித்தரவதைகளைச் சந்தித்தல்

  பிரிட்டிஷ் காலத்திலும், விடுதலை பெற்ற பிறகும்கூட கேஆர் மிகக் கடுமையான சித்தரவதைகளை அனுபவித்தார். 1949ல் அவர் கைது செய்யப்பட்டார், போலீஸ் அவர் மீது‘மூன்றாம் தர’ தாக்குதல்களை நடத்தினர். தோழர் பிடிஆரும் மற்ற தலைவர்களும் எங்கிருக்கினறனர் என்ற தகவலைக் கேஆரிடமிருந்து எப்படியாவது பெற்றுவிட போலீஸ் விரும்பினர். அவர் மீதான சித்தரவதைகள் மாலை 7 மணிக்குத் தொடங்கி மறுநாள் விடியற் காலை 3மணி வரை தொடரும். போலீஸ் குழுவிற்கு ஓர் அதிகாரி நகர்வாலா தலைமை வகித்தார். கேஆரின் வயிற்றின் மீது மிகக் கடுமையாக அடி விழுந்தது; ஆனால் அவரது யோகப் பயிற்சி அதனை எதிர்கொள்ள அவருக்கு உதவியது: அடி விழும்போது அவர் தன் வயிறை உட்பக்கமாக இழுத்துக் கொண்டு அந்த அடிகளை எதிர்கொள்வார். நகர்வாலா இதனைப் புரிந்து கொண்டு கேஆரை அடிப்பதை நிறுத்தினார்.

பிடிஆர் காலத்தின்போது

பிடிஆர் காலத்தின்போது தலைமறைவு இரகசியப் பணிகளைப் பெருமளவில் ஏற்று கேஆர் நிறைவேற்றினார். பல தலைவர்களும் அணித் தோழர்களும் அவரால் மட்டுமே போலீசாரிடமிருந்து காப்பாற்றப்பட்டனர் எனில் மிகையில்லை. 1949ல் கைதான கேஆர், பாம்பே ஆர்த்தர் ரோடு சிறையிலும், பிற சிறைகளிலும் அடைக்கப்பட்டார். 1952ல்தான் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

மதுரை, அமிர்தசரஸ் போன்ற பல்வேறு கட்சி காங்கிரஸ் மாநாடுகளுக்கான தொழில்நுட்ப ரீதியான தயாரிப்புப் பணிகளில் அவர் உதவினார்.

ஆக்கபூர்வப் பணிகளைச் செய்தல்

     1952ல் விடுதலையான பின், கேஆர் வேலையோ, முறையான வசிப்பிடமோ, நிறைவேற்ற வேண்டிய பொறுப்போ ஏதுமின்றி இருந்தார். நீண்ட பல பத்தாண்டுகள் பாம்பே போன்ற பெருநகரங்களிலும் டெல்லியிலும்கூட வாழ்ந்தார். எனவே இப்போது அமைதியான கிராமப்புறச் சூழலுக்குத் திரும்பச் சென்று அதன் பச்சை பெருவெளிகள் மற்றும் சலசலத்து ஓடும் ஆற்றின் அருகிலும் வசிக்க விரும்பினார்.

   எனவே, பாம்பேக்கு அருகில், அம்பர்நாத் செல்லும் வழியில் குல்கான் பத்லபூர் என்ற இடத்திற்குக் குடிபெயர்ந்தார். உண்மையிலேயே இல்லம் திரும்பிவருவது போன்று உணர்ந்தார் அவர்.

   இங்கு அவர் ஏராளமான ஆக்கபூர்வமான மற்றும் சீர்திருத்தப் பணிகளைச் செய்தார். சுற்றியிருந்த10 கிராமங்களுக்குக் குடிநீர் உட்பட தண்ணீர் வழங்கச் செய்தார். மக்கள் தொகை அதிகரிப்பால் இரயில் நிலையம் மற்றும் பிற வசதிகள் குறித்து கோரிக்கைகளை எழுப்பி அவற்றிற்கு அனுமதி கிடைக்கச் செய்தார். நீர்நிலை தொட்டிகள் கட்டப்பட்டன. பல்வேறு குடியிருப்புகள் திட்டமிடப்பட்டு கட்டி உருவாக்கப்பட்டன. பூச்சியியல் நிபுணரான உள்ளூர் தோழர் ஹட்டன்காடி உதவிட, விவசாயத்திற்கான பூச்சிக் கட்டுப்பாடு செயல் திட்டங்கள் தயாரிக்கப்பட்டன.

     கேஆர் தனது பழைய நண்பர்களைத் தொடர்பு கொண்டு தொடக்கத்தில் ரூ50 திரட்டினார்; ஆதிவாசிகள் குடுமபங்களுக்குச் சென்று 50 பையன்களையும் திரட்டினார். பின்னர் அவருக்கு மேலும் பணம் கிடைத்தது. அந்தச் சொற்ப முதலீட்டுத் தொகையை வைத்து கட்டணமில்லாத பள்ளியைத் தொடங்கினார். விரைவில் அப்பள்ளி பிரபலமானது.

 1960களின் தொடக்கத்தில் அப்பள்ளி ஒரு கல்லூரியாக உருவானது. இந்த முயற்சிகளின் பலனாய்க் குல்கானில் ஆதர்ஷ் வித்யா ப்பிரசாரக் சன்ஸ்தா (மாதிரி கல்வி நிறுவனம்) எழுந்து நின்று விளங்குகிறது. 1970களில் மாஸ்கோ செல்வதற்கு முன் கேஆர் அக்கல்வி நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார்.

டெல்லி கட்சி மையததிற்கு உதவி

                     கேஆர், மையத்தின் PPH எனும் பியூபிள்ஸ் பப்ளிஷிங் ஹவுஸ் அமைப்பிற்கு அதன்

கணக்குகளை ஒழுங்கு செய்து பராமரித்தும் அச்சகம் சம்பந்தமான விஷயங்களிலும் உதவினார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றின் ஆவணங்களை டாக்டர் அதிகாரி திரட்டிக் கொண்டிருந்தபோது அவருக்கு உதவி செய்து கொண்டு கேஆர் நீண்ட பல ஆண்டுகள் தங்கியிருந்தார். அந்த ஆவணங்கள், தகவல்களுக்காக வெளிநாடுகளில் வசித்தவர்கள் உட்பட பழைய தோழர்களையும் புரட்சியாளர்கள் பலரையும் தொடர்பு கொள்ள முக்கிய பங்காற்றியவர் கேஆர். டாக்டர் அதிகாரிக்குக் கேஆர் ஒத்த நண்பராக இருந்தார். சிபிஐ வரலாறு மீதான தரவுகள் திரட்டப்பட்டபோது, நியூடெல்லி அஜாய் பவனில் சிபிஐ-யின் மைக்ரோ ஃபிலிம் பிரிவைக் கேஆர் கவனித்துக் கொண்டார்.

    கேஆர் வசம் சொல்வதற்குப் பெரும் எண்ணிக்கையிலான உண்மை சம்பவங்களின் கதைகள் உண்டு: நடைமுறையில் அவர் சிபிஐ வரலாற்றின் தலைமறைவு வாழ்வு மற்றும் பிற நிகழ்வுகளின் சைக்ளோஸ்டைல் பிரதியாக இருந்தார். அந்நிமிடம் வரை கடுமையாகப் பின்பற்றிய வழக்கமான தினசரி ஒழுங்குடன் மிக உயர்ந்த கட்டுப்பாடான வாழ்க்கையை அவர் நடத்தினார்.

  கேஆரும் டாக்டரும் (டாக்டர் அதிகாரி) அடிக்கடி இமாலய மலைகளுக்கு மலை ஏற்றத்திற்காகவும், சுற்றுலா மற்றும் ஆய்வுக்காகவும் செல்வது வழக்கம். அப்போது  மத்திய கட்சியின் (கட்சிக் கல்வி) பள்ளியின் காளிதாஸ் சிக்தரும் கிருஷ்ணாவும் அவர்களுடன் இணைந்து சென்று எளிதில் செல்ல முடியா தொலைவிடங்களுக்குச் செல்வது வழக்கம்.

  1970களில் PPHன் ஒரு கிளையாக மும்பையில் ‘லோக் வாங்மாயா க்ருஹா’ (மராத்தி மொழியில் ‘மக்கள் இலக்கியத்தின் இல்லம்’) என்ற பதிப்பகம் நிறுவப்பட்டது. ஏக்நாத் பகத் உடன் அதன் இரண்டு இயக்குநர்களில் ஒருவராகக் கேஆர் நியமிக்கப்பட்டார். 1966 முதல் 1982வரை கட்சியின் மத்திய தணிக்கை குழுவின் உறுப்பினராகப் பணியாற்றினார். தரணி கோஸ்வாமி ஒருங்கிணைப்பாளர். வேறு வேறு காலங்களில் கே முருகேசனும் கிஷோரி பிரசன்னா சிங்கும் பணியாற்றினர். அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் கட்சி மற்றும் PPHன் தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளின் அறிக்கைகளைத் தாக்கல் செய்வது வழக்கம்.

     ‘கேஆர்’ என்று புகழுடன் அறியப்பட்ட தோழர் லக்ஷ்மண் ஆத்மாராம் கத்தாரே தமது 88வது வயதில் 1997 ஏப்ரல் 23ல் காலமானார்.

     தன்னை ஒருபோதும் புகழ்வெளிச்சத்தில் காட்டிக்கொள்ள விரும்பாத கட்சியின் தன்னலமற்ற தொண்டர் ‘கேஆர்’ (கம்லாகர் ராவ்) புகழ் நீடு வாழ்க!

-- நன்றி : நியூஏஜ் (2024, ஜூன் 9—15)

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்