Thursday, 18 July 2024

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு –110 “கேஆர்” –கட்சி அமைப்பின் அச்சாணி அன்ன வித்தியாசமான அடித்தளம்

 கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு –110

          “கேஆர்” –கட்சி அமைப்பின் அச்சாணி அன்ன வித்தியாசமான அடித்தளம்

                                                         --அனில் ரஜீம்வாலே

       1904 ஜூன் 20ல் மகாராஷ்டிரா, இரத்தினகிரி மாவட்டம், சிப்லூன் தாலுக்கா, காகம்பரில் ‘கேஆர்’ என்று புகழுடன் அறியப்பட்ட லக்ஷ்மண் ஆத்மாராம் கத்தாரே பிறந்தார்.

பலவகைகளில் அவர் அசாதாரணமான தோழர். கட்சி அமைப்புக்கும் பாம்பே கட்சி மையத்திற்கும் மட்டுமல்ல, பிரிட்டிஷ் காலத்திலும் அதற்குப் பிறகும் அனைத்திந்திய அளவிலும் அவர் அசையா மலைபோல அடித்தளமாக இருந்தார். டாக்டர் ஜி அதிகாரி, எஸ்வி காட்டே, பிசி ஜோஷி, அஜாய் கோஷ், சி இராஜேஸ்வரராவ் போன்ற பல தலைச் சிறந்த தலைவர்களின் பெயர்கள் நன்கறிந்த பெயர்களான போழ்து, நியாயமாகவே, கட்சியின் பல வெற்றிகரமான சரித்திர நிகழ்வுகளுக்கும் தனிநபர் தலைவர்களுக்கும் கேஆர் முக்கிய காரணியாக இருந்தார். எப்போதும் உண்மையாகவும் நம்பிக்கைக்குரியவராகவும் அவர் இருந்தார்.

      தலைமறைவு காலத்தின்போது அவர் சூடிக்கொண்ட பல பெயர்களில் ஒன்று, கம்லாகர் ராவ் என்பது ஒன்று. 1949ல் அவர் கைது செய்யப்பட்டபோது கட்சி பத்திரிக்கை செய்தியில் “தோழர் கேஆர் கைது” என்று வந்தது. அப்போதிலிருந்து ‘கேஆர்’ அவருடன் நிரந்தரமாக ஒட்டிக் கொண்டது.

    வெறும் எட்டு வயதாக இருந்தபோது பாம்பேக்கு மாறியவர் கிர்காமில் தங்கினார். படிக்க அவருக்கு ஆர்வம் இருந்தபோதும், மோசமான குடும்பப் பொருளாதார நிலை காரணமாக ஆறாவது வகுப்புடன் பள்ளிப் படிப்பு நின்றது. குறிப்பாகப் பொறியியல் படிப்பு அவரை ஈர்த்தது. எனவே வீட்டிலேயே இருந்து படிக்கத் தொடங்கினார். 1935ல் பாம்பே (தற்போது மும்பை) வீர்மாதா ஜியாபாய் தொழில்நுட்பக் கல்வி நிறுவத்தில் (VJTI) ரேடியோ டிப்ளமாவில் தனித்தேர்வர் மாணவராகச் சேர்ந்து வெளியிலிருந்து தேர்வு எழுதிய கேஆர் தேர்வில் வெற்றி பெற்றார்.

      இரண்டாம் உலகப் போர் தொடங்கிய நேரத்தில் பிரபலமான கம்யூனிஸ்டாக ஆன கேஆர், தொழில்நுட்பப் பொறியியல் வல்லுநராகவும் ஆனார். அதோடு முடிந்ததாவெனில், போர் முயற்சி தொடர்பான தொழில்நுட்பப் பிரச்சனைகளில் உதவ பிரிட்டிஷ் அதிகாரி ஜென்கின்ஸ் அவரைப் பல முறை அழைத்தார். அந்த அதிகாரி ஜெர்மானியர்களுக்கு எதிரான இரகசியத் தகவல்களைத் திரட்டுவதற்காக மலாயா, சிங்கப்பூர், இந்தோனேஷியா முதலிய பல நாடுகளுக்குச் செல்லும் பிரிட்டிஷ் நீர்மூழ்கி கப்பல் பிரிவில் அவருக்குப் பணி வழங்கவும் முன் வந்தார். ஆனால் அந்த நேரத்தில் முழுமையாகக் கட்சிக்குத் தன்னை ஏற்கனவே அர்ப்பணித்துவிட்ட கேஆரிடம் கட்சியின் பல பொறுப்புகள் சுமத்தப்பட்டு விட்டன. எனவே அதிகாரி வழங்க முன்வந்த பணி வாய்ப்பை ஏற்க நாகரீகத்துடன் மறுத்து விட்டார்.

செவ்வியல் இசை மேதை பலூஸ்ஹருடன் சந்திப்பு

    இந்தியச் செவ்வியல் இசை மீது பெரு விருப்பமுடைய கத்தாரே அதனுடன் ஆழமாக பிணைக்கப்பட்டார். குழந்தைப் பருவத்திலிருந்தே அந்த இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் எந்த வாய்ப்பையும் ஒருபோதும் அவர் தவறவிட்டதில்லை. இத்தகைய நிகழ்ச்சிகளின்போது செவ்வியல் இசையில் விற்பன்னரான புகழ்மிக்க பாடகர் பண்டிட் விஷ்ணு திகம்பர் பலூஸ்ஹர் நிகழ்ச்சி நடக்க இருப்பது அவருக்குத் தெரிய வந்தது. 1928ல் பாம்பேயில் அகில இந்திய இசை மாநாடு (ஆல் இன்டியா சங்கீத் பரிஷத்) நடத்தப்பட்டது. பலூஸ்ஹர் அந்நிகழ்ச்சிக்காகத் தன்னார்வத் தொண்டர் குழுக்களை அமைக்கும்படி கேஆரிடம் கேட்டுக் கொண்டார். அவரும் அப்பணியை மிக நன்றாக செய்து முடிக்க அவர் பெரிதும் பாராட்டப்பட்டார்.

   பிரபலமான பல பாடகர்கள் பாடிய செவ்வியல் பாடல்களின் ஒலி நாடாக்களின் மாபெரும் திரட்டை அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகக் கேஆர் திரட்டி வைத்திருந்தார். பாடகர்களின் விவரங்களையும் அவர்களின் பங்களிப்புகளையும் அவரால் விவரிக்க முடியும், நடைமுறையில் ஒவ்வொரு இசை நாடா குறித்தும் அவர் அறிந்திருந்தார்.

   1910 –20 ஆண்டு காலகட்டத்தில், குறிப்பாக கோவாவில் இசையிலும் பாடுவதிலும் பெண்கள் பங்கேற்பதில்லை. செல்வம்மிக்க மேல்மட்டப் பிரிவுகளிலிருந்து பெண்கள் அத்தகைய நிகழ்ச்சிகளில் பகெடுப்பதில்லை. அநேகமாக அனைத்துச் செவ்வியல் இசைப் பாடகர்களும் கோவாவிலிருந்து வருவது வழக்கம். இந்தப் பின்னணியில்தான் சாரதா பட் அவரது இசை வகுப்புகளைத் தொடங்கினார். அந்த வகுப்பில் பின்வரும் வார்த்தைகளுடன் ஒரு பெயர்ப்பலகை இருந்தது: “மேல்மட்ட வகுப்பைச் சேர்ந்த பணக்காரப் பெண்களுக்கு மட்டும்”! எனவே உயர் வகுப்பு குடும்பங்களிலிருந்தும் இசை வகுப்புகளில் பெண்கள் கலந்து கொள்ளத் தொடங்கியது மட்டுமல்ல, இசை நிகழ்ச்சிகளையும்கூட வழங்கினார்கள்.

1920, ஒத்துழையாமை இயக்கத்தில்

     1920ல் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் கேஆர் தீவிரமாகப் பங்கேற்றார். இந்த இயக்கத்தில் கலந்து கொண்டபோது அவருக்கு எஸ்வி காட்டேயுடன் தொடர்பு ஏற்பட்டது. ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்தை ஒருங்கிணைக்க பாம்பேயில் ஓர் அலுவலகம் அமைக்கப்பட்டது. கேஆர் அலுவலகத்தின் செயலாளராகப் பணியாற்றினார். தொடக்கத்தில் காட்டே காந்தியப் போராட்ட வழிமுறைகளில் பெரிய ஆர்வம் எதுவும் காட்டவில்லை; ஆனால் பின்னர் மெல்ல காந்திஜியையும் அவரது தத்துவத்தையும் மேலும் நன்றாகப் புரிந்து கொண்டார். ஒத்துழையாமை இயக்கம் கேஆரின் பள்ளிப் படிப்பைத் திடீரென்று முடிவுக்குக் கொண்டு வந்தது.

      சோவியத் ரஷ்யாவில் நிலச் சீர்திருத்தங்கள் குறித்த ஒரு புத்தகத்தைப் படிக்கும் வாய்ப்பு அமைய, கேஆர் தனது மாமாவிடம் இந்தியாலும்கூட விரைவில் இது நடக்கும் என்று தெரிவித்தார். மேலும் தனது மாமாவிடம், குடும்பச் சொத்தான நிலபுலன்களைக் குத்தகைதாரர்களிடம் பிரித்துக் கொடுப்பது நல்லது; இல்லையெனில் சோவித் ரஷ்யாவில் நிகழ்ந்ததுபோல அவை எடுத்துக் கொள்ளப்பட்டுவிடும் என்று கூறினார்!

   பின்னர் அவர், “அப்புத்தகத்தில் எதைப் படித்தேனோ அதை முழுமையாகப் புரிந்து கொண்டேன் என நான் பாசாங்கு செய்ய முடியாது. ஆனால் ரஷ்யாவில் நடந்த நிகழ்வுகளால் நான் மிக மிக ஈர்க்கப்பட்டேன், இந்தியாவிலும்கூட அதேபோல நடக்கும் என்பதில் நான் முழுதும் உடன்பட்டு நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

எஸ்ஏ டாங்கே அவர்களால் ஊக்கம் பெறுதல்

       தொழிலாளர் வர்க்க மாபெரும் தலைவரும் கோட்பாட்டாளருமான எஸ்ஏ டாங்கே எழுதிய “காந்தி எதிர் லெனின்” என்ற தொடக்க கால மார்க்ஸியப் படைப்பிலிருந்து அவர் தனக்கு மிகவும் தேவைப்பட்ட ஊக்கத்தையும் உற்சாகத்தையும் பெற்றார். இந்த நூல்தான் ஒத்துழையாமை இயக்கத்தில் மேலும் தீவிரமாகப் பங்கேற்க அவரை ஊக்கப்படுத்தியது. பின்னர் அவர், டாங்கேவை ஆசிரியராகக் கொண்டு ‘தி சோஷலிஸ்ட்’ என்ற புகழ்பெற்ற வார இதழ் வெளியிடுவதில் உதவினார், கிர்னி காம்கர் யூனியனுக்கு (மில் தொழிலாளர்கள் சங்கம்) நிதி திரட்டினார், முதலில் செங்கொடிகளை ஏற்றி பெருமை கொண்டார். இளம் மார்க்சியர்களின் ‘மார்க்ஸிய லீக்’ அமைப்பில் கேஆர் சேர்ந்தார்.

டாக்டர் அதிகாரியுடன் சந்திப்பு

      டாக்டர் (கங்காதர்) அதிகாரியுடன் கத்தாரேவின் சந்திப்பு பெரும் அதிர்வை ஏற்படுத்தும் மிக முக்கியமான நிகழ்வு. டாங்கேதான் (கட்சியில் சேர விரும்பிய) கேஆரை அதிகாரியிடம் அறிமுகம் செய்தார். அதிகாரி கூறினார்: “கட்சியில் எந்தவித தலைமை பொறுப்பையும் பெற வேண்டும் என்ற அபிலாசைகள் இல்லாமல், முழுமையாகக் கட்சிப் பணியில் ஒப்படைக்க நீங்கள் தயாராக இருந்தால், பின்னர் வரலாம்”. புகழ் வெளிச்சத்தை விரும்பக் கூடிய அல்லது தலைமை போன்ற எந்த எதிர்கால ஆசைகளையும் வளர்த்துக் கொள்ளும் வகையிலான மனிதர் அல்ல கத்தாரே. மாறாக உண்மையில், எப்போதும் புகழ் வெளிச்சத்திலிருந்து ஒதுங்கி இருக்கும் தன்மை உள்ளவர்.

    கேஆர் தலைமறைவு ‘தொழில்நுட்ப’ பணியில் சிறந்த திறமை உள்ளவர். பிரிட்டிஷ் ஆட்சியின்கீழ் தலைமறைவு நாட்களில் நிலவிய மிக மோசமான சூழ்நிலைகளின்போது --பெரும் நிதிப் பற்றாக்குறை இருந்தபோது-- கட்சிக்குத் தேவையான உட்கட்டமைப்புகளை ஏற்படுத்தித் தர முயன்றார். அந்நேரத்தில் தடை செய்யப்பட்டிருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ‘தலைமறைவாக’ச் செயல்பட்டது. அந்தத் தலைமறைவு கட்சி செயல்பாடுகளுக்குக் கேஆர் மிகக் கேந்திரமான முக்கிய தோழராக இருந்தார். அவரது பணிகளில் தலைவர்களை ஓரிடத்திலிருந்து பாதுகாப்பான வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்வது, முக்கிய இரகசிய ஆவணங்களைக் கொண்டு சென்று சேர்த்தல், தொழில்நுட்ப கருவிகளை அமைத்தல் முதலானவை அடங்கும். முன்பு VJTI தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் அவர் பெற்ற பயிற்சி, குறிப்பாக ரேடியோ தகவல் தொடர்பில் பெற்ற பயிற்சி காரணமாகத் தகவல் தொழில்நுட்பத்தில் நிபுணராகத் திகழ்ந்தார்.

      ஒளி சிதற கண்களை மினுக்கியபடி கேஆர் கூறினார்: “உங்களுக்குத் தெரியுமா, அனைத்து முக்கியமான ஆவணங்கள், ஆட்சி அதிகார வட்டாரத்தில் அபாய மணியை ஒலிக்கச் செய்த டாக்டர் அதிகாரியின் கம்யூனிஸ்ட் நம்பர் 1 முதலானவற்றை டைப் செய்ததும் அவற்றைச் சைக்ளோஸ்டைல் நகல்கள் அச்சிட்டதும் நான்தான். ஒரு பழைய டைப்-ரைட்டரை வைத்துக் கொண்டு, பிரிட்டிஷ் கிளப் ஒன்றில் இருந்த இயந்திரத்தில் நகல்கள் எடுத்து, அவை அனைத்தும் இரகசியமாகச் செய்யப்பட்டன. யாராலும் எங்களைப் பிடிக்க முடியவில்லை”.

     அவரது தந்தை இறந்த பிறகும் தொடர்ந்து தனது குடும்பத்தைக் கவனித்துக் கொண்டார். பல பகுதி நேர பணிகளை மேற்கொண்டார். அதிகாரி, ஜோஷி, டாங்கே மற்றும் பிற தலைவர்கள் தொடர்ந்து தங்கள் கட்சிப் பணிகளை ஆற்றுவதைக் கட்புலனுக்குத் தெரியாத கேஆரின் மாயக் கைகள் சாத்தியமாக்கின. 1930களில் பீஜப்பூர் சிறையிலிருந்து டாக்டர் அதிகாரி தப்பிச் செல்ல திட்டமிட்டு செயல்படுத்தியது கேஆர்தான்.

பணிப்பட்டறையில் செயல்பட்ட தலைமறைவு பதுங்கிடம்

   பாம்பே கிர்காமில் ரேடியோ பழுது பார்க்கும் கடை ஒன்றை கேஆர் திறந்தார். உண்மையில் அது தலைமறைவாகச் சந்திக்கும் இடமாகப் பயன்பட்டது. அங்கேதான் புகழ் பெற்ற ஆச்சார்ய நரேந்திர தேவ், ஜெயப்பிரகாஷ் நாராயணன், நர்கீஸ் பாட்லிவாலா, (பண்டிட் நேருவின் மைத்துனரான) ஹாதி சிங், பிரிதிவி சிங் ஆஸாத் மற்றும் பலர் சந்தித்துப் பேசுவது வழக்கம். ஒரு லேத் மிஷின், துரப்பணக் கருவி (டிரில்லிங் மிஷின்) வாங்கிய கேஆர், காயலான் கடை பழைய பொருட்களைப் பயன்படுத்தி அச்சடிக்கும் அச்சு இயந்திரத்தின் பாகங்களைத் தயாரித்தார்! ப்ரூஃப் பிரஸ் எனப்படும் அச்சு இயந்திரத்தைச் செய்து வங்காளம் மற்றும் ஆந்திராவுக்கும்கூட அவர் அனுப்பினார். அதன் விலை வெறும் ரூ80 மட்டுமே! கட்சி கடும் நிதி நெருக்கடியில் இருந்தபோது இவை கைக்கடக்கமாக இருந்தன. இவ்வாறுதான் அவர் பியூபிள் பப்ளிஷிங் ஹவுஸ் (PPH பதிப்பகம்) உருவாவதற்கும் உதவினார்.

    அவரது தலைமறைவு இரகசியத் தொழில்நுட்பம் எவ்வளவு திறன்மிகுந்ததென்றால், பிரிட்டிஷ் உளவு நடவடிக்கை மீதே தொடர்ந்து கண்காணிக்குமளவு இருந்தது; அதனால், கட்சியின் பெருந்தலைவர்களுக்கு எந்த ஊறு நேரும் வாய்ப்புக்களையும் தடுக்க முடிந்தது.

  பிரதி எடுக்கும் பல டூப்ளிகேட்டிங் இயந்திரங்கள் மற்றும் பிரதிகள் அச்சடிக்கும் சைக்ளோஸ்டைல் கருவிகள் மற்றும் பிற கருவிகளைப் பழுது பார்ப்பதற்காக அவற்றைக் கேஆர் சோதித்தார். ஆங்கில, ஜப்பானிய, ஜெர்மன் முதலான மொழிகளை அச்சடிக்கும் அக்கருவிகளைக் கட்சி ஆவணங்களை அச்சடிக்கவும், பிரதி எடுக்கவும் பயன்படுத்தினார். அந்நாட்களில் ஜெஸ்ட்னர் மற்றும் ரெமிங்டன் இயந்திரங்கள் பிரபலமானவைகளாகவும் நம்பிச் சார்ந்திருக்கக்கூடியவைகளாகவும் இருந்தன. அவற்றின் பல வகைகளைப் பலவேறு இடங்களில் தேடிச் சேகரித்த கேஆர், அவற்றைச் சரியாகக் கவனமுடன் பயன்படுத்தினார்.

1943 முதலாவது கட்சிக் காங்கிரஸ்

     இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதலாவது கட்சிப் பேராயம் பாம்பேயில் 1943 மே –ஜூனில் நடைபெற்றது. கலந்துகொள்ள வந்து செல்லும் போக்குவரத்தில் இருந்த ஏராளமான பிரச்சனைகளில் பலவற்றிற்குக் கேஆர் தீர்வு காண வேண்டியிருந்தது. அவற்றில், பயணத்திற்குக் கார் ஏற்பாடு செய்துதர வேண்டியதும் ஒன்று. பல பழமையான வின்டேஜ் கார்கள் (பழைய மாடல் கார், குறிப்பாக 1919 –30 காலகட்டத்தில் உற்பத்தியானவை) பரிசோதிக்கப்பட்டன. இறுதியாக அவற்றில் ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டது! எல்லா நேரங்களிலும் ஆபத்பாந்தவனாக கேஆரின் தொழில்நுட்ப அறிவு கைகொடுத்தது!

நியூஏஜ் இதழுக்கான பிரிண்டிங் மெஷின்

  சிபிஐ மீது விதிக்கப்பட்ட தடை இரண்டாம் உலகப் போரின்போது விலக்கிக் கொள்ளப்பட்டது. அந்தத் தருணத்தில் கட்சிக்கு ஒரு நியூஸ்பேப்பரின் தேவை எழுந்தது. கேஆர் அதற்காக எவையெல்லாம் இருந்ததோ அனைத்தையும் விற்றார் –அவ்வளவு ஏன், தனது ஒர்க் ஷாப் மற்றும் பிற சொத்துக்களையும் விற்றார். இவ்வாறு அவரால் ரூ7,000 திரட்ட முடிந்தது, அது அந்தக் காலத்தில் மிகப் பெரிய தொகை. அந்தத் தொகையைக் கொண்டு கேஆர், “டபுள் ராயல் அளவு, ஸ்டாப் சிலிண்டர் பெடல் மெஷின்” (காலால் மிதித்துப் பெடல் செய்து அச்சடிக்கும் மாடல் அச்சு இயந்திரம்) ஒன்று வாங்கினார். இவ்வாறுதான் ‘நியூஏஜ் பிரிண்டிங் பிரஸ்’ உருவாகி பயன்பாட்டுக்கு வந்தது.

     இத்தகைய நேர்த்தியான திறன்மிகு அச்சடிக்கும் இயந்திரம் செயல்படுவதைப் பார்த்து மக்கள் வியப்படைவது வழக்கம். அமெரிக்கன் டைம் மற்றும் லைஃப் இதழின் செய்தியாளர் மார்க்கிரெட் பர்க் வொய்ட் (அம்மையார்) இவற்றைக் காண தானே நேரில் வந்து புகைப்படங்கள் எடுத்துச் சென்றார். பின்னர் அவை அந்த இதழில் வெளி வந்தன.

    தோழர்கள் பல குழுக்களாக, விக்டோரியா டெர்மினஸ்  (தற்போது சத்திரபதி சிவாஜி டெர்மினஸ்) மற்றும் சர்ச் கேட் ஸ்டேஷன் முதலான முக்கிய இடங்களுக்குச் சென்று, கட்சியின் செய்திப் பத்திரிக்கையை விற்பனை செய்வது வழக்கம்.

நேதாஜி சுபாஷ் போஸ் தப்புவதற்கு உதவுதல்

   நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இறுதியில் சோவியத் யூனியன் மற்றும் ஜெர்மனிக்குச் செல்வதற்காக வழியில் ஆப்கானிஸ்தானத்திற்குத் தப்பிச் செல்ல உதவியதில் கம்யூனிஸ்ட்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. (நேதாஜியுடன் கம்யூனிஸ்ட்களுக்குக் கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும் உதவினார்கள்.) இந்தச் செயல்திட்டத்திற்காகச் சுபாஷின் தூதுவர்கள் பம்பாய் சிபிஐ தலைமையகத்தைத் தொடர்பு கொண்டபோது கட்சி அதனை ஏற்றது. ஆச்சார் சிங் சீனா, தேஜா சிங் சுதந்திரா, பகத் ராம் தல்வார் மற்றும் தலீப் போன்ற கம்யூனிஸ்ட்கள் இந்தச் சாகசப் பெரும் பயணத் திட்டத்தில் ஈடுபட்டனர்.

    இத்திட்டச் செயல்பாடுகளின் பின்னணியில் கேஆரும் கூட தீவிரமாக ஈடுபட்டார். தல்வாரின் நெருங்கிய நண்பனான கேஆர் பல விஷயங்களை அவருடன் விவாதிப்பார். பிந்தைய காலங்களில் அவரது குடும்பத்தினருடன்கூட கேஆர் தங்கினார். தல்வார் மற்றும் பாம்பே கட்சித் தலைமையகம் இடையே தகவல் தொடர்பை ஏற்படுத்துவது கேஆரின் வழக்கம்; பாம்பே,பெஷாவர் மற்றும் காபுல் இடையே பலமுறை பயணம் செய்தார்.

1947, சுதந்திரதினக் கொண்டாட்டம்

    பாம்பே சிபிஐ அலுவலகமான ராஜ் பவனில் இந்தியாவின் விடுதலை 1947 ஆகஸ்ட் 15 அன்று மிகப் பிரம்மாண்டமான அளவில் கொண்டாடப்பட்டது. தோரணங்களாலும், கொடிகள் மற்றும் விளக்குகளாலும் கட்டடம் ழுழுவதும் அலங்கரிக்கப்பட்டது. கூட்டங்கள் கூட்டி சொற்பொழிவுகள் ஆற்றப்பட்டன. அவை அனைத்தின் மத்தியிலும் கேஆர் இருந்தார். எல்லா இடத்திலும் நியான் விளக்குகள் ஒளிர்ந்தன. அமர் ஷேக்கின் பாடல்கள் எதிரொலித்தன.  ராஜ் பவனத்திலிருந்து வீதிகள் எல்லாம் ஆயிரக் கணக்கான மக்களால் அடைபட்டு இருந்தன. உண்மையில் நெஞ்சில் என்றும் நினைவிருக்கும் நாளானது அது.

மிகக் கடுமையான சித்தரவதைகளைச் சந்தித்தல்

  பிரிட்டிஷ் காலத்திலும், விடுதலை பெற்ற பிறகும்கூட கேஆர் மிகக் கடுமையான சித்தரவதைகளை அனுபவித்தார். 1949ல் அவர் கைது செய்யப்பட்டார், போலீஸ் அவர் மீது‘மூன்றாம் தர’ தாக்குதல்களை நடத்தினர். தோழர் பிடிஆரும் மற்ற தலைவர்களும் எங்கிருக்கினறனர் என்ற தகவலைக் கேஆரிடமிருந்து எப்படியாவது பெற்றுவிட போலீஸ் விரும்பினர். அவர் மீதான சித்தரவதைகள் மாலை 7 மணிக்குத் தொடங்கி மறுநாள் விடியற் காலை 3மணி வரை தொடரும். போலீஸ் குழுவிற்கு ஓர் அதிகாரி நகர்வாலா தலைமை வகித்தார். கேஆரின் வயிற்றின் மீது மிகக் கடுமையாக அடி விழுந்தது; ஆனால் அவரது யோகப் பயிற்சி அதனை எதிர்கொள்ள அவருக்கு உதவியது: அடி விழும்போது அவர் தன் வயிறை உட்பக்கமாக இழுத்துக் கொண்டு அந்த அடிகளை எதிர்கொள்வார். நகர்வாலா இதனைப் புரிந்து கொண்டு கேஆரை அடிப்பதை நிறுத்தினார்.

பிடிஆர் காலத்தின்போது

பிடிஆர் காலத்தின்போது தலைமறைவு இரகசியப் பணிகளைப் பெருமளவில் ஏற்று கேஆர் நிறைவேற்றினார். பல தலைவர்களும் அணித் தோழர்களும் அவரால் மட்டுமே போலீசாரிடமிருந்து காப்பாற்றப்பட்டனர் எனில் மிகையில்லை. 1949ல் கைதான கேஆர், பாம்பே ஆர்த்தர் ரோடு சிறையிலும், பிற சிறைகளிலும் அடைக்கப்பட்டார். 1952ல்தான் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

மதுரை, அமிர்தசரஸ் போன்ற பல்வேறு கட்சி காங்கிரஸ் மாநாடுகளுக்கான தொழில்நுட்ப ரீதியான தயாரிப்புப் பணிகளில் அவர் உதவினார்.

ஆக்கபூர்வப் பணிகளைச் செய்தல்

     1952ல் விடுதலையான பின், கேஆர் வேலையோ, முறையான வசிப்பிடமோ, நிறைவேற்ற வேண்டிய பொறுப்போ ஏதுமின்றி இருந்தார். நீண்ட பல பத்தாண்டுகள் பாம்பே போன்ற பெருநகரங்களிலும் டெல்லியிலும்கூட வாழ்ந்தார். எனவே இப்போது அமைதியான கிராமப்புறச் சூழலுக்குத் திரும்பச் சென்று அதன் பச்சை பெருவெளிகள் மற்றும் சலசலத்து ஓடும் ஆற்றின் அருகிலும் வசிக்க விரும்பினார்.

   எனவே, பாம்பேக்கு அருகில், அம்பர்நாத் செல்லும் வழியில் குல்கான் பத்லபூர் என்ற இடத்திற்குக் குடிபெயர்ந்தார். உண்மையிலேயே இல்லம் திரும்பிவருவது போன்று உணர்ந்தார் அவர்.

   இங்கு அவர் ஏராளமான ஆக்கபூர்வமான மற்றும் சீர்திருத்தப் பணிகளைச் செய்தார். சுற்றியிருந்த10 கிராமங்களுக்குக் குடிநீர் உட்பட தண்ணீர் வழங்கச் செய்தார். மக்கள் தொகை அதிகரிப்பால் இரயில் நிலையம் மற்றும் பிற வசதிகள் குறித்து கோரிக்கைகளை எழுப்பி அவற்றிற்கு அனுமதி கிடைக்கச் செய்தார். நீர்நிலை தொட்டிகள் கட்டப்பட்டன. பல்வேறு குடியிருப்புகள் திட்டமிடப்பட்டு கட்டி உருவாக்கப்பட்டன. பூச்சியியல் நிபுணரான உள்ளூர் தோழர் ஹட்டன்காடி உதவிட, விவசாயத்திற்கான பூச்சிக் கட்டுப்பாடு செயல் திட்டங்கள் தயாரிக்கப்பட்டன.

     கேஆர் தனது பழைய நண்பர்களைத் தொடர்பு கொண்டு தொடக்கத்தில் ரூ50 திரட்டினார்; ஆதிவாசிகள் குடுமபங்களுக்குச் சென்று 50 பையன்களையும் திரட்டினார். பின்னர் அவருக்கு மேலும் பணம் கிடைத்தது. அந்தச் சொற்ப முதலீட்டுத் தொகையை வைத்து கட்டணமில்லாத பள்ளியைத் தொடங்கினார். விரைவில் அப்பள்ளி பிரபலமானது.

 1960களின் தொடக்கத்தில் அப்பள்ளி ஒரு கல்லூரியாக உருவானது. இந்த முயற்சிகளின் பலனாய்க் குல்கானில் ஆதர்ஷ் வித்யா ப்பிரசாரக் சன்ஸ்தா (மாதிரி கல்வி நிறுவனம்) எழுந்து நின்று விளங்குகிறது. 1970களில் மாஸ்கோ செல்வதற்கு முன் கேஆர் அக்கல்வி நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார்.

டெல்லி கட்சி மையததிற்கு உதவி

                     கேஆர், மையத்தின் PPH எனும் பியூபிள்ஸ் பப்ளிஷிங் ஹவுஸ் அமைப்பிற்கு அதன்

கணக்குகளை ஒழுங்கு செய்து பராமரித்தும் அச்சகம் சம்பந்தமான விஷயங்களிலும் உதவினார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றின் ஆவணங்களை டாக்டர் அதிகாரி திரட்டிக் கொண்டிருந்தபோது அவருக்கு உதவி செய்து கொண்டு கேஆர் நீண்ட பல ஆண்டுகள் தங்கியிருந்தார். அந்த ஆவணங்கள், தகவல்களுக்காக வெளிநாடுகளில் வசித்தவர்கள் உட்பட பழைய தோழர்களையும் புரட்சியாளர்கள் பலரையும் தொடர்பு கொள்ள முக்கிய பங்காற்றியவர் கேஆர். டாக்டர் அதிகாரிக்குக் கேஆர் ஒத்த நண்பராக இருந்தார். சிபிஐ வரலாறு மீதான தரவுகள் திரட்டப்பட்டபோது, நியூடெல்லி அஜாய் பவனில் சிபிஐ-யின் மைக்ரோ ஃபிலிம் பிரிவைக் கேஆர் கவனித்துக் கொண்டார்.

    கேஆர் வசம் சொல்வதற்குப் பெரும் எண்ணிக்கையிலான உண்மை சம்பவங்களின் கதைகள் உண்டு: நடைமுறையில் அவர் சிபிஐ வரலாற்றின் தலைமறைவு வாழ்வு மற்றும் பிற நிகழ்வுகளின் சைக்ளோஸ்டைல் பிரதியாக இருந்தார். அந்நிமிடம் வரை கடுமையாகப் பின்பற்றிய வழக்கமான தினசரி ஒழுங்குடன் மிக உயர்ந்த கட்டுப்பாடான வாழ்க்கையை அவர் நடத்தினார்.

  கேஆரும் டாக்டரும் (டாக்டர் அதிகாரி) அடிக்கடி இமாலய மலைகளுக்கு மலை ஏற்றத்திற்காகவும், சுற்றுலா மற்றும் ஆய்வுக்காகவும் செல்வது வழக்கம். அப்போது  மத்திய கட்சியின் (கட்சிக் கல்வி) பள்ளியின் காளிதாஸ் சிக்தரும் கிருஷ்ணாவும் அவர்களுடன் இணைந்து சென்று எளிதில் செல்ல முடியா தொலைவிடங்களுக்குச் செல்வது வழக்கம்.

  1970களில் PPHன் ஒரு கிளையாக மும்பையில் ‘லோக் வாங்மாயா க்ருஹா’ (மராத்தி மொழியில் ‘மக்கள் இலக்கியத்தின் இல்லம்’) என்ற பதிப்பகம் நிறுவப்பட்டது. ஏக்நாத் பகத் உடன் அதன் இரண்டு இயக்குநர்களில் ஒருவராகக் கேஆர் நியமிக்கப்பட்டார். 1966 முதல் 1982வரை கட்சியின் மத்திய தணிக்கை குழுவின் உறுப்பினராகப் பணியாற்றினார். தரணி கோஸ்வாமி ஒருங்கிணைப்பாளர். வேறு வேறு காலங்களில் கே முருகேசனும் கிஷோரி பிரசன்னா சிங்கும் பணியாற்றினர். அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் கட்சி மற்றும் PPHன் தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளின் அறிக்கைகளைத் தாக்கல் செய்வது வழக்கம்.

     ‘கேஆர்’ என்று புகழுடன் அறியப்பட்ட தோழர் லக்ஷ்மண் ஆத்மாராம் கத்தாரே தமது 88வது வயதில் 1997 ஏப்ரல் 23ல் காலமானார்.

     தன்னை ஒருபோதும் புகழ்வெளிச்சத்தில் காட்டிக்கொள்ள விரும்பாத கட்சியின் தன்னலமற்ற தொண்டர் ‘கேஆர்’ (கம்லாகர் ராவ்) புகழ் நீடு வாழ்க!

-- நன்றி : நியூஏஜ் (2024, ஜூன் 9—15)

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்  

 

 

No comments:

Post a Comment