Friday, 23 October 2026

‘நவி’ பிள்ளையின் நோபல் செய்தி

 

–சி ஆதிகேசவன்

2026 அக்டோபர் 10 அன்று நார்வே நோபல் கமிட்டி இந்தியத் தமிழ் வம்சாவளியில் வந்த 85 வயதான தென்னாப்பிரிக்க நீதிபதி, நவநீதம் “நவி” பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் சமாதான விருதை வழங்கியது. (நவநீதம் அவரது முழு பெயர்; அன்புடன் ‘நவி என்றழைப்பர்). விரிவான உலகளாவிய சட்ட ஒழுங்கை முன்னெடுத்துச் செல்வதிலும்; போர்க் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகள் மீது வழக்கு விசாரணை தொடரப்படுவதை உறுதி செய்வதிலும், அவர் காட்டிய அசாதாரணமான துணிச்சலையும் நேர்மையும் சுட்டிக்காட்டி, சர்வதேசச் சட்டத்தின் மூலம் சமாதானத்தை மேம்படுத்த வாழ்நாள் முழுவதும் அவர் மேற்கொண்ட முயற்சிகளை நோபல் கமிட்டி அங்கீகரித்தது.

விருது வழங்கப்படும் செய்தி பிள்ளைக்குக் கிடைத்தபோது அவர், வரலாற்றுப் புகழ்பெற்ற ஜெர்மனியின் நூரெம்பெர்க் நீதியின் அரண்மனை கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொண்டிருந்தார்; அரண்மனையின் அதே

நீதிமன்ற அறையில்தான் 80 ஆண்டுகளுக்கு முன்பு நவீனக் குற்றவியல் பொறுப்பேற்புச் சர்வதேசச் சட்டமுறையின்படி விசாரணைகள் தொடங்கின. அந்தத் தருணம் அடையாளபூர்வமானது. அவர் தனது சுருக்கமான ஏற்புரையில் சர்வதேசக் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் (குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்குத்) தண்டனையின்மை நிலவுவதைத் தடுக்கும் பணியில் ஈடுபடும் சர்வதேச நீதியைப் பயில்பவர்கள் மற்றும் அதை ஆதரிப்பவர்களுக்கு இந்த விருதை அர்ப்பணித்தார்.

சர்வதேசச் சட்டம் மற்றும் மனித உரிமைகள் குறிப்பிடத்தக்க அரசியல் தாக்குதல்களைச் சந்திக்கின்றன; குறிப்பாகச் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தை நோக்கி அழுத்தம் தரப்படுகிறது என எச்சரித்தார். இந்த அமைப்புகளைப் பலவீனப்படுத்துவது, நூரெம்பெர்க் விசாரணை காலத்திலிருந்து ஏற்படுத்தப்பட்ட முன்னேற்றத்தைப் பின்னடைய செய்து, யாருடைய துன்பம் பொருட்படுத்தப்பட வேண்டும் என்பதைச் சட்டத்திற்குப் பதில், அதிகாரம் முடிவு செய்யும் ஓர் அமைப்பு முறைக்கு உலகத்தைத் திரும்பச் செய்யும் ஆபத்துக்கு உள்ளாக்கும் என அவர் கூறினார்.

தமிழ் வம்சாவளியில் பிறந்த பிள்ளை இன ஒதுக்கல் ஆட்சியின் கீழ் வளர்ந்தார். அவரது தாத்தா பாட்டி தென்னாப்பிரிக்காவின் நட்டால் பகுதி கரும்புத் தோட்டங்களில் பணியாற்ற ஒப்பந்தத் தொழிலாளிகளாக வந்தவர்கள். அவரது தந்தை நாராயணசாமி பஸ் ஓட்டுநர் (தாய் சாந்தம்மா நாயுடு). வெள்ளையரல்லாத தென்னாப்பிரிக்கர்களுக்கு வாய்ப்புகள் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தது; இருப்பினும், சட்டம் பயின்று, 1967-ல் நட்டாலில் (Natal) சொந்தமாகச் சட்ட அலுவலகத்தைத்

தொடங்கிய முதல் வெள்ளை அல்லாத நிறத்து இனப் பெண்மணி (first woman of colour) ஆனார். தென் ஆப்பிரிக்க இனவெறி கொள்கைக்கு எதிராகப் போராடியவர்களை அவர் ஆதரித்தார்; 1973ல் அவர் ராபன் தீவில் –நெல்சன் மண்டேலா உட்பட– அரசியல் கைதிகளுக்கு, அவர்களது வழக்கறிஞர்களைச் சந்திக்க உரிமைகளைப் பெற்றுத்தர உதவினார். இனவெறி ஆட்சி ஒழிக்கப்பட்ட பிறகு, அதிபரான நெல்சன் மண்டேலா 1995ல் நவி பிள்ளையைத் தென் ஆப்பிரிக்க உயர் நீதிமன்றத்தின் முதல் கறுப்பினப் பெண் நீதிபதியாக நியமித்தார்.  

பின்னர் அவரது பணி சர்வதேச அரங்கிற்கு மாறியது. (1994ல் ருவாண்டா நாட்டில் நடந்த இனப்படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்களை விசாரிக்க ஐநா மன்றம்   ஏற்படுத்திய) ருவாண்டாவுக்கான சர்வதேசக் குற்றவியல் தீர்ப்பாய நீதிபதியாகப் பணியாற்றிய அவர், பின்னர் அதன் தலைவராகவும் பணியாற்றினார்.

(ருவாண்டாவின் ‘தபா’ கம்யூனின் மேனாள் மேயரான) ஜீன்-பால் அகயேசு-வுக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க வழக்கில், பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் வன்முறை ஆகியவை இனப்படுகொலை செயல்களாக அமையும் என்று சர்வதேசக் குற்றவியல் தீர்ப்பாயம் நிலைநாட்டியது. சட்டவியலில்  ஏற்பட்ட இந்த முன்னேற்றம், மேற்கண்ட குற்றங்களைப் போரின் தவிர்க்க முடியாத பக்க விளைவுகளாகக் கருதாமல், அவை சமூகங்களை அழிப்பதற்காகத் திட்டமிட்டு பயன்படுத்தப்படும் ஆயுதங்களாக அங்கீகரித்த முதலாவது தீர்ப்பு என்று புகழ்பெற்றது.

2003 முதல் 2008 வரை தி ஹேக் நகரில் அமைந்த சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதியாக அமர்ந்தார். 2008– 2014 இடைப்பட்ட ஆண்டுகளில்

அவர் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையராக (ஹை கமிஷனர்) பணியாற்றி, மனித உரிமைகள் மீறப்படும் இடங்களில் எல்லாம் பாதிக்கப்பட்டவர்களின் குரலாக அந்த அமைப்பை நிலை நிறுத்தினார்.

மிகச் சமீபத்தில் அவர் சர்வதேச நீதிமன்றத்தின் அட்ஹாக் நீதிபதியாகப் பணியாற்றியதுடன், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகள் குறித்த ஐநா சபையின் சுதந்திரமான விசாரணை ஆணையத்திற்குத் தலைமை தாங்கினார். 2025ல் வெளியிடப்பட்ட அந்த ஆணையத்தின் அறிக்கை, காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலைகள் செய்ததாகக் குறிப்பிட்டது. மேலும் இதற்கு ஆதாரமாகப் படுகொலைகள், கடுமையான பாதிப்புகள், மக்கள் குழுவை அழிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட வாழ்க்கைச் சூழல்கள் மற்றும் இனப்படுகொலை நோக்கத்தை வெளிப்படுத்தும் அறிக்கைகள் போன்றவை அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டு உள்ளன. இஸ்ரேல் இந்த முடிவுகளை ஒருதலைச் சார்புடையது எனக் கூறி நிராகரித்தது; எனினும் இந்த அறிக்கை பொறுப்பேற்க வைத்தல் குறித்த உலகளாவிய விவாதத்தைத் தூண்டி உள்ளது.

இவ்வாறு பிள்ளையின் சட்டத்துறை சார்ந்த பணி வாழ்வு தென்னாப்பிரிக்கச் சர்வாதிகார ஆட்சியின் கீழ் இருந்த தேசிய நீதிமன்றங்கள், பேரழிவிலான கொடூரங்களுக்குப் பின் அமைக்கப்பட்ட தற்காலிகத் தீர்ப்பாயங்கள், நிரந்தரமான சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் மற்றும் ஐநாவின் உயர்ந்த மனித உரிமைகள் பதவி என பல்வேறு தளங்களில்  விரிவானது. தான் பொறுப்பு வகித்த பல்வேறு மட்டங்களிலும் அவர், அதிகாரம் படைத்தவர்களுக்கும் அதிகாரம் அற்றவர்களுக்கும் ஒரே மாதிரியான சட்டத் தரவுகளே  பொருந்த வேண்டும் என்பதை வலியுறுத்தி வந்துள்ளார். ஐநா தீர்மானத்தின் கீழ் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் போரைத் தவிர்ப்பதற்கும் அரசியல் தலைவர்களும் நாடுகளும் சட்டப்பூர்வ கடமைகள் கொண்டுள்ளன என்பதை நூரெம்பெர்க்கில் அவர் மீண்டும் வலியுறுத்தினார். ஒவ்வொரு நாடும் அந்தக் கடமை பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டுமென அவர் அறைகூவல் விடுத்தார்; மேலும் சுதந்திரமான நீதிமன்றங்களைச் சீர்குலைக்கும் வகையிலான ஒரு தலைபட்சமான நடவடிக்கைகளுக்கு எதிராக அந்நாடுகளை எச்சரித்தார்.

தற்போது சர்வதேச சட்ட நிறுவனங்கள் வெளிப்படையான எதிர்ப்பைச் சந்திக்கும் தருணத்தில் இந்தத் தீர்ப்பு வந்தது. சக்திமிக்க நாடுகள் சர்வதேசக்

குற்றவியல் நீதிமன்றம் மீது தடைகளை விதித்ததுடன், அதன் சட்டப்பூர்வத் தன்மையைக் கேள்விக்கு உட்படுத்துகின்றன. உலகளாவிய அளவில் இராணுவச் செலவினங்கள் அதிகரிக்கும் போது, உக்ரைன், சூடான், காசா மற்றும் பிற இடங்களில் ஆயுத மோதல்கள் தொடர்கின்றன. 

இந்தச் சூழலில் நோபல் கமிட்டியின் தேர்வு ஓர் எளிய உண்மையை அடிக்கோடிட்டு வற்புறுத்துகிறது: அமைதி என்பது தற்காலிகமாகத் துப்பாக்கிச் சூடுகள் ஓய்ந்திருப்பதைத் தாண்டி மேலதிகமானது. 

மோதல்களின்போது பாலியல் வன்முறையில் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட ஒவ்வொரு மனிதருக்கும்  சமமான கண்ணியத்தைப் பாதுகாக்கவும், குற்றம் இழைத்தவர்களைப் பொறுப்பேற்க வைக்கக் கூடிய வல்லமை உடைய அமைப்புகள் அதற்குத் தேவைப்படுகிறது.

நவி பிள்ளை அவர்களே வழக்கமான நிதானத்துடனும் நகைச்சுவை உணர்வு மிளிரவும் எதிர்வினை ஆற்றினார். அந்தச் செய்தி வந்தபோது தொடக்கத்தில் அவர் அதை ஒரு கிண்டல் கேலி நகைச்சுவையாக இருக்கக்கூடும் என்று எண்ணினார். ஆனால் விடாது கைத்தட்டல் தொடர்ந்தபோது, உடனே அவர் கூறினார்: “நீங்கள் இன்னும் சிறிது கூடுதலாகக் கைதட்டினால், நான் இந்தப் பரிசை டிரம்புடன் பகிர்ந்து கொண்டு விடுவேன்”. அவர் இப்படிக் கூறியதும், ‘வாழ்நாள் முழுவதும் அமைதியாகச் செய்யும் சட்டப் பணிக்கும், அதே கௌரவத்திற்காக மேற்கொள்ளப்படும் பொதுப் பிரச்சாரங்களுக்கும் இடையிலான வேறுபாட்டை’ எடுத்துக்காட்டும் வகையில், இந்தக் கிண்டல் பேச்சு பரவலாகப் பரவியது.

கடந்த ஆண்டுகளில் முன்பு பரிசை வென்றவர்களும் மற்றும் அரசியல் பிரமுகர்களும் வெளிப்படையாக (அமைதி விருதுக்கு) வேறு சிலரை ஆதரித்தனர்; இருந்தபோதிலும் தேர்வுக்குழுவினர், விளம்பரப் பிரச்சார வெளிச்சத்தை விட  நீதிமன்ற அறைகளில் ஆற்றிய சட்டப்பணிகளேயே தனது சாதனைகளாகக் கொண்டு கம்பீரமாக உயர்ந்து நிற்கும் ஒரு சட்ட அறிஞரைத் தேர்ந்தெடுத்தது

அவரது தேர்வை விமர்சித்தவர்கள், குறிப்பாக இஸ்ரேலைச் சேர்ந்தவர்கள், அந்த முடிவு ஒரு விருதை ஆயுதமாகப் பயன்படுத்துவது என்று கூறி கடுமையாகக் கண்டித்தனர். மனித உரிமைகள் சமூகத்தைச் சேர்ந்த ஆதரவாளர்கள், அந்த முடிவை –நூரெம்பெர்க் பாரம்பரியத்தின் மையக்  கோட்பாடான– சட்டத்திற்கு மேல் யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் ஓர் அவசியமான நடவடிக்கை என்று வர்ணித்தனர். தான் பணியாற்றிய நிறுவனங்கள் குறைபாடற்றவை என்று பிள்ளை  ஒருபோதும் கூறியதில்லை. 'மீண்டும் ஒருபோதும் இது நடக்காது' என்ற வாக்குறுதிக்கு அர்த்தம் இருக்க வேண்டுமென்றால், அந்த நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று மட்டுமே அவர் வலியுறுத்தியுள்ளார்.

தற்போது 85 வயதிலும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார். காம்பியா– மியான்மர் வழக்கில் சர்வதேச நீதிமன்றத்திலும்; மற்றும் சர்வதேச நூரெம்பெர்க் கோட்பாடுகள் அகாடமி  உறுப்பினராகவும் தொடர்ந்து  பணியாற்றுகிறார். இனவெறிக் கொள்கையின் கீழ் ஒரு பேருந்து ஓட்டுநரின் மகளாக இருந்து, சர்வதேச நீதியின் உலகளாவிய பாதுகாவலராக அவர் அடைந்த வளர்ச்சிப் பயணம், கல்வியாலும் உறுதிப்பாட்டாலும் உருவாக்கப்படும் சாத்தியக் கூறுகளையும்; நலிவடைந்தோரைப் பாதுகாக்கும் ஒரு சட்ட அமைப்பைக் கட்டியெழுப்பும் இன்னும் நிறைவடையாத பணியையும் ஒருங்கே எடுத்துக்காட்டுகிறது.

2026ம் ஆண்டிற்கான நோபல் அமைதி பரிசு அந்தப் பணியை அங்கீகரிக்கும் அதே நேரத்தில், பொறுப்பேற்றலைச் சாத்தியமாக்கும் அமைப்புகளைப் பாதுகாக்கும் புதிய கடப்பாடுகளை நாடுகள் மற்றும் குடிமக்கள் மீது  சுமத்துகிறது. 

நோபல் அமைதி விருதைப் பெற்ற தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட திருமதி நவநீதம் ‘நவி’ பிள்ளைக்கு மீண்டும் நமது வாழ்த்துக்களை உரித்தாக்குவோம்! 

–நன்றி: நியூஏஜ் (அக்.18 – 24)
–தமிழில் : நீலகண்டன்,
என் எஃப் டி இ, கடலூர்





No comments:

Post a Comment