Thursday, 24 October 2024

ஹோமி தாஜி, முன்னுதாரணமான ஒரு கம்யூனிஸ்ட் அடையாளம்

 

ஹோமி தாஜி,  முன்னுதாரணமான 
ஒரு கம்யூனிஸ்ட் அடையாளம்
--திக்காராம் சர்மா 

    ஹோமி தாஜி 1926 செப்டம்பர் 5ம் நாள் பாம்பேயில் ஒரு பார்சி குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை ஃபராம் ரோஸ் தாஜி, தமிழ்நாட்டின் திருப்பூரில் ஒரு பஞ்சு பிரிப்பக ஆலையைச் சொந்தமாக நடத்தி வந்தார். நல்ல நிலையில் இருந்த அக்குடும்பம் 1930களின் பொருளாதாரத் தேக்கநிலை காரணமாகப் பெரும் நட்டங்களைச் சந்திக்க, அவர் திருப்பூரைவிட்டு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் ஒரு பணக்காரர் அவரைப் பஞ்சு தேர்வு செய்யும் பணியில் அமர்த்தினார். பணி என்பதைப் பொருத்து ஊதியம் எவ்வளவு என்பதை முடிவு செய்யவில்லை. ஊதியத்தை விரைவில் முடிவு செய்ய அவரது முதலாளி உறுதியளித்திருந்தார். எனவே தனது இரண்டு மகன்கள், ஹோமி மற்றும் காகி இருவரையும் தனியார் நடத்திய செயின்ட் ரஃபேல் பள்ளியில் சேர்த்தார். உறுதியளித்ததற்கு மாறாக முதலாளி பல மாதங்களுக்கு ஒரு பைசா கூட ஊதியம் வழங்கவில்லை. ஃபராம் ரோஸ் தாஜி வேறுவழியின்றி அந்த வேலையை விட்டுவிட்டார்.

இளமையில் வறுமையும் பள்ளிக் கல்வியும்

            இதன் விளைவாய் மகன்களின் பள்ளிக் கட்டணத்தைக் கட்ட இயலாது போக, அவர்கள் பள்ளியிலிருந்து இடைநின்றனர். அவரது குடும்பம் வாழ்க்கை நடத்த முடியாமல் மிகவும் சிரமப்பட்டது. இந்தச் சிரமங்களை அவரது மனைவிதான் சுமக்க நேரிட்டது. அவர் ஊறுகாய், தொக்கு முதலானவற்றைத் தயாரித்து விற்பது, சிறு குழந்தைகளுக்குப் பாடம் நடத்துவது, அண்மை வீடுகளின் துணி தைப்பது எனப் பல்வேறு பணிகளைச் செய்யத் தொடங்கினார். சுரண்டல் என்ன என்பதை ஹோமி முதன் முறையாக உணர்ந்தார், அது அவரது மனதில் கிளர்ச்சிப் பொறியை எழுப்பியது. ஹோமி, புத்திசாலித்தனமான, கடுமையாக உழைக்கும் மாணவர் என்பதை அறிந்த ஆசிரியர்களில் ஒருவர் அவர் மீது கருணை கொண்டார். எனவே சில நாட்களுக்குப் பின், வகுப்பறையில் கற்பிக்கப்படுவதை அறைக்கு வெளியே வராண்டாவில் அமர்ந்து கேட்க ஹோமி அனுமதிக்கப்பட்டார். தந்தை வாழ்வாதாரத்திற்காகத் தொடங்கிய உணவகத்தில் ஹோமியும் அவரது சகோதரரும் வேலை செய்தனர். ஆனால் துரதிருஷ்டம் இதுவும் கைகொடுக்கவில்லை. புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்களுக்கு ஆகும் செலவு ஹோமியின் முக்கிய பிரச்சனையாக இருந்தது. புத்தக விற்பனைக் கடையொன்றில் அவர் வேலை செய்தது அப்பிரச்சனையை ஓரளவு தீர்த்தது. அவர் வசித்த சிறிய வீட்டில் வெளிச்சத்திற்கு ஒரு சிறிய விளக்கு இருந்தது. தனது நண்பர்களிடமிருந்து இரவில் புத்தகங்களைப் பெற்று அடுத்த நாள் விடியலில் திரும்பத் தந்துவிடுவார். இந்தத் துயரகரமான நிலையிலும் அவர் தனது படிப்பைத் தொடர்ந்தார், நல்ல மதிப்பெண்களுடன் மெட்ரிகுலேஷன் தேர்வுகளில் வெற்றி பெற்றார்.

கல்லூரிப் படிப்பு

     தனது படிப்பைத் தொடர விரும்பினாலும் நிலைமைகள் அதை அனுமதிக்கவில்லை. எனினும் ஹோமியின் தந்தை பாம்பே பார்சிய சொசைட்டியிடம் வைத்த கோரிக்கையை ஏற்ற சொசைட்டி, கல்லூரி கட்டணங்களைக் கட்ட ஒப்புக் கொண்டது. கல்லூரியில் இடம் பெற்ற பிறகு அரசியல் மற்றும் கோச்சிங் தருவதில் பங்கெடுக்கத் தொடங்கினார். பிஏ பட்டப் படிப்பை முடித்த பிறகு சட்டம் பயில எல்எல்பி பாடத்தில் அனுமதி பெற்று சட்டப் படிப்பில் பட்டம் பெற்றார். வழக்கறிஞராகப் பயிற்சியைத் தொடங்கியபோதே எம்ஏ முதுகலைப் பட்டப்படிப்பிலும் சேர்ந்தார். அரசியலில் பங்கெடுத்ததற்காக, எம்ஏ இறுதித் தேர்வின்போது ஹோமி கைது செய்யப்பட்டார். அதற்குப் பிறகும், எம்ஏ தேர்வில் தேர்ச்சி பெற்றது மட்டுமல்ல, ஆக்ரா பல்கலைக்கழகத்தில் அவர் இரண்டாவதாக வந்தார்.

அரசியல் வாழ்வு

    ஹோமி தாஜி தனது 16வது வயதில், 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றபோது அரசியல் வாழ்வைத் தொடங்கினார். பின்பு அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தில் (AISF) இணைந்தார். பின்னர் சில காலத்திற்குப் பிறகு 1946 மே 1ம் நாள் ஆனந்த் லாகோ முன்னிலையில் அவருக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் தகுதி வழங்கப்பட்டது. 1951ல் குவாலியரில் தொடங்கப்பட்ட மாணவர் இயக்கத்தில் ஏஐஎஸ்எஃப் தீவிரமாகப் பங்கேற்றது; அதில் நடந்த போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் மூன்று மாணவர்கள் கொல்லப்பட்டனர். தாஜி கைது செய்யப்பட்டார், ஒரு வழக்கறிஞரை வைத்து வாதாடாத போதிலும், அவ்வழக்கில் வெற்றி பெற்றார். தேர்ந்த சொற்பொழிவாளராகவும் திறமையான அமைப்பாளராகவும் இருந்த அவருக்கு இந்தூரின் 30ஆயிரம் டெக்ஸ்டைல் தொழிலாளர்களை ஒன்று திரட்டும் பொறுப்பு அளிக்கப்பட்டது. அதனை வெற்றிகரமாக நிறைவேற்றி புகழ்பெற்ற தலைவராக ஆனார்.

சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராக

     31 வயது மட்டுமே ஆனபோது 1957ல் அவர் மத்தியப் பிரதேசச் சட்டமன்றத்திற்கு, எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் பெருந்தலைவர் கங்காராம் திவாரியைப் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வென்று, உறுப்பினராகத் தேர்வானார். மபி சட்டமன்றத்திற்கு 1972ல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அனைவரும் டெப்பாசிட் தொகை இழந்தனர். 1962ல் சிபிஐ ஆதரவுடன், சுயேச்சை வேட்பாளராக, நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பொருளாதார நிலைமை, டெப்பாசிட் தொகை கட்டுவதற்கும் பணம் இல்லாத அளவிற்கு, அப்போது மிகமோசமாக இருந்தது. அதற்காக அவரது தாயார் தனது திருமண மோதிரத்தை விற்றார். நாடாளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பு வகித்த காலத்தில், காங்கிரஸ் கட்சியையும் பிர்லா போன்ற முதலாளிகளையும் அவர்கள் அடிக்கும் கொள்ளைகளுக்காக அவர் அம்பலப்படுத்தினார்.

நாடாளுமன்றச் செயல்பாடு

    பண்டிட் ஜவகர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி மற்றும் இந்திரா காந்தி என மூன்று பிரதமர்களுடன் பணியாற்றும் வாய்ப்பினை அவர் பெற்றார். அப்போதைய நாடாளுமன்றத்தில் அவர்தான் வயதில் மிக இளைய உறுப்பினர்.

      ஹோமி தலைச்சிறந்த சொற்பொழிவாளர், பாராளுமன்ற விவாதங்களில் தீவிர ஆர்வமுடன் அவர் பங்கேற்பது வழக்கம். தாஜியின்பால் கவரப்பட்ட பண்டிட் நேரு, தாஜி உரையாற்றும்

போது தவறாது அவையில் அவரது உரைகளைக் கவனிப்பது வழக்கம். ஹோமி தாஜியின் நேர்மை, வெளிப்படைத்தன்மை, நீதிநெறி சார்ந்த கொள்கை உறுதி மற்றும் திறன் மீது நேரு முழு நம்பிக்கை வைத்திருந்தார். அது உண்மை என்பதை ஒரு நிகழ்வு நிரூபித்தது. சில சர்வதேசப் பிரச்சனைகள் மீது இந்தியாவின் நிலைபாட்டை எடுத்துக் கூறி ஸ்ரீலங்காவிடம் முன் வைக்க, நேரு தனது கட்சிக்காரருக்குப் பதிலாக தாஜியை ஸ்ரீலங்கா அனுப்பினார். அது பற்றி கடைசி நேரத்தில் தெரிவிக்கப்பட்டபோது, தாஜியிடம் பணம் இல்லாத காரணத்தால் தனது இயலாமையைத் தெரிவித்தார். உடனே செயலில் இறங்கிய அரசு, இரவு நேரத்தில் வங்கியைத் திறக்க உத்தரவிட்டு, அங்கே அப்போதே பணம் பட்டுவாடா செய்யப்பட்டது.

பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியுடன்

    லால் பகதூர் சாஸ்திரியும்கூட தாஜியின்பால் ஈர்க்கப்பட்டார். அவ்வவ்போது பல்வேறு பிரச்சனைகள் குறித்து அவர் கலந்து விவாதிப்பது வழக்கம். ஒருமுறை அரசு பொது பாதுகாப்பு மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது. அந்த மசோதாவை தாஜி மிகக் கடுமையாக எதிர்த்தார். அரசுக்குப் பெரும்பான்மை இருந்ததால், மசோதா நிறைவேற்றப்பட்டுச் சட்டமானது. சாஸ்திரிஜி தாஜியை அழைத்து மசோதாவை எதிர்க்கும் காரணத்தைக் கேட்டார். அந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படக் கூடும், மேலும் அப்பாவி மக்கள் அதற்குப் பலியாகவும் கூடும் என தாஜி பதில் அளித்தார். ஆனால் பிரதமர் அந்தப் பதிலில் திருப்தி அடையவில்லை.

       சில காலத்திற்குப் பிறகு இந்தூரில் சில பிரச்சனைகள் மீது நடத்தப்பட்ட மக்கள் போராட்ட இயக்கதில் தாஜியும் கைதானார். தான் கைது செய்யப்பட்டதையும், சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டதையும் குறித்துத் தாஜி பிரதமருக்கு ஓர் அஞ்சல் அட்டை அனுப்பினார். சாஸ்திரி உடனடியாக அவரை விடுவிக்கச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தாமதமின்றி தாஜி விடுதலை செய்யப்பட்டார்.

மக்கள் பிரதிநிதிகளுக்கு ஓய்வூதியம்

     சாஸ்திரியின் அகால மரணத்திற்குப் பிறகு இந்திரா காந்தி பிரதமரானார். 1967ல் தாஜியின் பதவிக் காலம் முடிவடைந்ததால், பிரதமர் இந்திராவுடன் பணியாற்ற அவருக்கு மிகக் குறைந்த வாய்ப்பே கிடைத்தது. எனினும், தனது 

 செயல்பாடுகளைத் தொடர்ந்தார். நாடாளுமன்ற லாபியில் பார்வைக்கு வைத்துள்ள செயல்துடிப்புள்ள பாராளுமன்றவாதிகள் பெயர் பட்டியலில் அவர் பெயரும் இடம் பெற்றதிலிருந்து இந்த உண்மை நிதர்சனமாகும். ஒரு முறை மேனாள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் கைம்பெண் மனைவி தன் வாழ்வாதாரத்திற்காகப் பிச்சை எடுத்துக் கொண்டிருந்ததை அவர் கவனித்தார். ஓர் அரசு ஊழியரின் கைம்பெண் மனைவி குடும்ப ஓய்வூதியம் பெற தகுதி பெற்றிருக்கும்போது, பிறகு எவ்வாறு இந்தப் பெண்மணிக்கு மட்டும் அது மறுக்கப்பட முடியும் என்று ஹோமி தாஜி எண்ணினார். இது குறித்து அரசு அதிகாரிகளுடன் கடிதப் போக்குவரத்தைத் தொடங்கினார், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அவரது கோரிக்கை நிறைவேறியது.

கட்சிப் பொறுப்புகள்

    ஹோமி தாஜி முதிர்ச்சி பெற்ற முதல் தரத்திலான அரசியல்வாதி. அவர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு, செயற்குழு மற்றும் செயலகத்தின் உறுப்பினராகப் பொறுப்பு வகித்துள்ளார். இது தவிர, அவர் மத்திய பிரதேச சிபிஐ மாநிலச் செயலாளராகப் பல ஆண்டுகளுக்கு இருந்தார். சீனா, சோவியத் யூனியன் மற்றும் பிற நாடுகளுக்கு அவர் பயணம் செய்துள்ளார். பொது இயக்கங்களைத் தலைமையேற்று நடத்தியதற்காக பல முறை அவர் சிறை செய்யப்பட்டார். அவரது அரசியல் எதிரிகளும்கூட அவர் மீது மிகப் பெரும் மரியாதை வைத்திருந்தனர். அவரது அரசியல் மற்றும் சமூகச் செயல்பாடுகளில் அவருடைய குடும்பம் முழுவதும் உடன் நின்றது.

நீதிமன்றங்களில் தாஜியின் போற்றத்தக்கச் செயல்பாடுகள்

   தாஜி போபால் உயர்நீதிமன்றத்தின் மரியாதைக்குரிய வழக்கறிஞர் ஆவார். அவர் வாதாடிய எல்லா வழக்குகளும் நன்கறிந்த புகழ்பெற்ற வழக்குகள் எனினும், இந்தூரில் 1952ல் நடத்திய ஒரு வழக்கு குறிப்பிடத்தக்க மிகவும் முக்கியத்தும் வாய்ந்தது. அது, பொதுமக்களை நோக்கி போலீஸ் 0.303 ரக துப்பாக்கிகளைப் பயன்படுத்தி சுட்டதில் பல மக்கள் கொல்லப்பட்ட துயரகரமான நிகழ்வு. சட்ட விதிகளின்படி இராணுவம் மட்டுமே அத்தகைய (துப்பாக்கியின் குழாய்முனை ஓர் அங்குலத்தில் ஆயிரத்தில் 0.303 அளவு விட்டமுள்ள) 0.303 ரக துப்பாக்கிகளைப் பயன்படுத்த அதிகாரம் அளிக்கப்பட்டவர்கள், போலீசுக்கு அதனைப் பயன்படுத்த அதிகாரமில்லை. எனவே அவ்வழக்கில் அப்போதைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியைத் தலைவராகக் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. பொதுமக்கள் சார்பாக வழக்கை முன்வைத்த வழக்கறிஞர்களில் தாஜியும் ஒருவர். விசாரணையின் முடிவு பொதுமக்களுக்குச் சாதகமாக அளிக்கப்பட்டது. தாஜியுடன் மிகப் பெரிதும் ஈர்க்கப்பட்ட அந்நீதிபதி பான்ஞ்சு (Banchu), உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றுமாறு அவருக்கு ஆலோசனை கூறினார்.  ஆட்கொணர்வு மனு வழக்குகளைக் கையாள இந்தூரில் தாஜியைத் தவிர வேறு வழக்கறிஞர்கள் இல்லை என்று அறியப்படுகிறது.

தொழிற்சங்கங்களில் தாஜி

    முன்பு கூறியதைப் போல தாஜி, இந்தூரின் டெக்ஸ்டைல் ஆலைத் தொழிலாளர்கள் மத்தியில் தொழிற்சங்கச் செயல்பாட்டாளராகத் தன் வாழ்வுப்பணியைத் தொடங்கியவர். அனைத்திந்தியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் (AITUC) பேரியக்கத்துடன் இணைப்புப் பெற்ற பல்வேறு பிற தொழிற்சங்கங்களில் தாஜி தலைமையேற்று செயல்பட்டுள்ளார். பெரும் வெற்றியுடன் நீதிமன்றங்களில் பல்வேறு தொழிலாளர் வழக்குகளை எடுத்துப் போராடினார். இறுதியில் தொழிற்சங்கங்களின் அனைத்திந்தியத் தலைவரானார். [தொலைபேசி ஊழியர்களின் (NFPTE சம்மேளத்தைச் சேர்ந்த E3) பொறியியல் மூன்றாம் பிரிவு சங்கத்தின் அனைத்திந்தியத் தலைவராக அவர் செயல்பட்டதை அந்த ஊழியர்கள் இன்றும் பெருமையுடன் நினைவு கூர்கின்றனர். –மொழிபெயர்ப்பாளர் இணைப்பு]

    பல ஆண்டுகளுக்கு ஏஐடியுசி பேரியக்கத்தின் துணைத் தலைவராக இருந்த தாஜி, 1984 முதல் 1988வரை அதன் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தூர் பல்கலைக் கழகத்தின் தலைவராக அவர் இரண்டு முறை இருந்தார். 3ம் பிரிவு மற்றும் 4ம் பிரிவு ஊழியர்களின் பணி நிலைமை, ஊதிய விகிதங்கள் மற்றும் பதவி உயர்வு கொள்கைகளை அவர் முடிவு செய்து மேம்படுத்தினார்.

என்றும் நம் நினைவில் தாஜி

    ஹோமி தாஜி வாழ்க்கை முழுவதும் போராட்டங்களும் துயரங்களும் நிரம்பியது. அவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள். புத்திசாலியான அவரது மகன் வெற்றிகரமான வழக்கறிஞரானார். ஆனால் மிக இளம் வயதில் அவர் இறந்தது பெரும் சோகம். மகள் தொழில் ரீதியாக ஒரு மருத்துவர். தொழிலாளர் காலனி ஒன்றில் இருந்த அவரது மருத்துவ மனையில் தொழிலாளர்கள், ஏழைகள், மிக பிற்பட்ட நிலையில் இருந்த மக்களுக்கு அவர் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளித்தார். இதைத் தவிர இதனுடன் கூட ஏழைகள், உழைப்பாளர்களின் குழந்தைகள் கல்வி பெறுவதற்கு ஒரு வாய்ப்பாகப் பள்ளிக்கூடம் ஒன்றையும் அவர் திறந்தார். அந்த மகளும்கூட இளம் வயதிலேயே மரணமடைந்தார். தாஜி மூளையில் இரத்தக் கசிவு காரணமாக, பக்கவாதத்தாலும் தண்டுவட எலும்பு முறிவாலும பாதிக்கப்பட்டார். இவற்றை எல்லாம் மீறி அவர் தன் போராட்டங்களைத் தொடர்ந்தார்.

    முன்னுதாரணக் கம்யூனிஸ்ட்டின் அடையாளமான ஹோமி தாஜி 2009 மே 14ம் நாள் இம்மண்ணுலகை நீத்து, தோழர்களின நினைவுகளில் நீங்காது வாழ்கிறார்.

         தாஜியின் புகழ் நீடு வாழ்க!

--நன்றி : நியூஏஜ் (அக்.20 --26)

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர் 


No comments:

Post a Comment