Wednesday, 26 August 2026

நியூ ஏஜ் தலையங்கம் --சமூக ஊடகங்கள் மீது அரசின் கிடுக்கிப்பிடி

நியூ ஏஜ் தலையங்கம் (ஆக. 23 –29)

சமூக ஊடகங்கள் மீது 

அரசின் கிடுக்கிப்பிடி

சமூக ஊடகங்கள் மீது அரசின் கட்டுப்பாடு குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையின் சமீபத்திய அறிக்கை தீவிரமான கேள்வியை எழுப்புகிறது. அந்த அறிக்கையின்படி மார்ச் மற்றும் ஜூலை இடைப்பட்ட காலத்தில் ஒன்றிய அரசு சுமார் ஒவ்வொரு 68 வினாடிகளுக்கும் சமூக ஊடகத் தளங்களை முடக்கும் உத்தரவுகளை வெளியிட்டது– அதாவது சராசரியாக நாள் ஒன்றுக்கு சுமார்

1275 தளங்களை முடக்கியது. கடந்த ஐந்து ஆண்டுகளில் அத்தகைய உத்தரவுகள்  சுமார் 1.95 லட்சம் எண்ணிக்கையைத் தொட்டது; அதில்  பெரும்பான்மை  இன்ஸ்ட்டாகிராம் ஊடகம் தொடர்பானவை எனக் கூறப்படுகிறது. இது வெறும் புள்ளி விபரங்கள் தொடர்பான விஷயம் அல்ல. அது பாசிச அதிகாரம் மற்றும் டிஜிட்டல் யுகத்தில் தகவல் இடையேயான முரண்பாட்டின் திசைவழியைச் சுட்டிக் காட்டுகிறது.

சட்ட விரோத, வன்முறை அல்லது தீவிரக் கெடுதல்கள் நிறைந்த (தகவல்) உள்ளடக்கத்திற்கு எதிரான நடவடிக்கை அவசியம் என்பது உண்மையே. ஆனால் ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கம் மற்றும் அரசின் மீதான விமர்சனம் இவற்றிற்கு இடையேயான எல்லைக் கோடுகள் தெளிவற்று மங்கலாகும் போது பிரச்சனை எழுகிறது. இந்த முழு நிகழ்வின் வளர்ச்சிப் போக்கையும்,  ஜனநாயகம் மற்றும் அதிகாரம் சார்ந்த பரந்த கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்.

வலதுசாரி மற்றும் பாசிசப் போக்குடன் கூடிய அரசுகள் வரலாற்று ரீதியாக, அதிகாரத்தின் மீதான கட்டுப்பாட்டை  மட்டுமல்லாமல், (சமூகத்தில் வந்து) குவியும் தகவல்கள் மற்றும் கருத்துக்கள் மீதும் கட்டுப்பாட்டை நிறுவ முயன்று வந்துள்ளன. நாஜி ஜெர்மனி மற்றும் பாசிச இத்தாலியில் சுதந்திரப் பத்திரிக்கை ஊடகம் ஒடுக்கப்பட்டு, ஒரு பிரச்சாரக் கட்டமைப்பு நிறுவப்பட்டது. அதே சூழல் இன்று இல்லை; ஆனால் அதிகாரம் மற்றும் தகவல் இடையிலான அடிப்படை முரண்பாடு தொடர்கிறது.

தகவல் ஊடகம் இன்று, செய்தித்தாள்கள், வானொலி மற்றும் தொலைக்காட்சி இவற்றுடன் மட்டுப்படுத்தப்படவில்லை என்பதுதான் வித்தியாசம். தகவல் உருவாக்கம் மற்றும் தகவல் பரவல் கட்டமைப்பை இணைய வலைத்தளங்கள் (இன்டர்நெட்) மற்றும் சமூக ஊடகங்கள் முழுமையாக மாற்றி அமைத்துள்ளன.

புதிய தகவல் தொழில்நுட்பப் புரட்சி, இதழியல் மீது குறிப்பிட்ட அளவு பெரும் ஊடக நிறுவனங்களின் ஏகபோகத்தைப் பலவீனப்படுத்தியுள்ளது. கைபேசி வைத்திருக்கும் ஒரு சாதாரண குடிமகனும்கூட  ஒரு நிகழ்வு குறித்த சுதந்திரச் செய்தியாளராக ஆக முடியும். பல நேரங்களில் ஒரு புகைப்படம் அல்லது ஒரு வீடியோவே முழுமையான செய்தி ஆகிறது. பாரம்பரிய ஊடகங்களில் தகவல் வழக்கமாக மேலிருந்து கீழ் நோக்கிப் பாய்கிறது; சமூக ஊடகத்தில் மக்களே தகவல் உருவாக்குபவர்களாகவும் மற்றும் தகவல் நுகர்வோர்- களாகவும்  உள்ளனர். இதுவே அதன் ஜனநாயக ஆற்றலாகும்.

தற்போதுள்ள தகவல் சேவை தளங்கள் மீது அரசுகளின் கட்டுப்பாடு அதிகரிக்கும் எனில்,

வெப்3, மையப்படுத்தப்படாது பரவலாக்கப்பட்ட வலைப்பின்னல்கள்  மற்றும் ஒருவரோடு ஒருவர் (மைய சேவை வழங்குநர் இல்லாமல் தங்களுக்குள்) தகவல் பரிமாற்றம் ['பியர்-டு-பியர்' peer-to-peer (p2p)] போன்ற தொழில்நுட்ப மாடல்கள் விரைவாக முக்கியத்துவம் பெறுகின்றன.

வெப்3 என்பது, சுதந்திரத்திற்கான பாதுகாப்பு உத்திரவாதம் அல்ல; ஆனால் மையப்படுத்தப்படாது பரவலாக்கப்பட்ட (வலைப்பின்னல்) எந்த தனி ஒரு நிறுவனமோ அல்லது அரசோ தகவலின் முழு பாய்ச்சலைக் கட்டுப்படுத்துவதைக் கடினமாக்கும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், சென்சார் தணிக்கை கட்டுப்பாடு எந்தளவுக்கு அதிகமாக இருக்கிறதோ, அந்தளவுக்கு, மாற்றுத் தொழில் நுட்ப வாய்ப்புகளுக்கான தேடலும் அதிகமாகும். இந்த வளர்ச்சிப் போக்கு முழுவதிலும் அதிகாரத்தின் இரட்டை மனப்பான்மை அணுகுமுறையும் வெளிப்படையாகத் தெரிகிறது. ஒரு புறம் அரசு சமூக ஊடகங்கள் மீது, குறிப்பாக இன்ஸ்டாகிராம் மீது, பரந்த பேரளவிலான கட்டுப்பாட்டைக் கொண்டுவர விரும்புகிறது; மறுபுறம், பிரதமர் நரேந்திர மோடியே அதே தளத்தின் மூலம் ஜென்’சி’ (Gen-Z) தலைமுறை இளைஞர்களை நெருங்க முயற்சிக்கிறார். சமூக ஊடகங்களின் ஆற்றலை ஆட்சியாளர்கள் நன்கு உணர்ந்துள்ளனர் என்பதையே இது காட்டுகிறது. 

இன்ஸ்டாகிராம் வெறும் பொழுதுபோக்குக்கான தளம் மட்டுமல்ல, மாறாக இளைஞர்களின் உரையாடல், அரசியல் கருத்து வெளிப்பாடு மற்றும் அணிதிரட்டு- வதற்கான ஓர் ஊடகமும் கூட என்பதை அவர்கள் அறிவார்கள்.

இதுதான் இன்றைய நாளின் வலதுசாரிகளின் அப்பட்டமான இரட்டை வேடம் –தனது சொந்த இமேஜை கட்ட அதே ஊடகத்தைப் பயன்படுத்தும்போது, (அதன்) விமர்சனக் குரல்களைக் கட்டுப்படுத்துகிறது. ஆனால் கவர்ந்து ஈர்க்கும் வீடியோ பதிவுகள் மூலம் மட்டும் நீண்ட காலம் இளைஞர்கள் மீது செல்வாக்கு செலுத்த முடியாது. நம்பிக்கை என்பது ஊடகத் தளங்களை மாற்றுவதன் மூலம் ஏற்படுத்துவது அல்ல; மாறாக கொள்கைகளையும் நோக்கங்களையும் மாற்றுவதன் மூலம் ஏற்படுத்தப்படுவது. வேலைவாய்ப்பு, கல்வி, சமூகப் பாதுகாப்பு மற்றும் ஜனநாயக உரிமைகள் தொடர்பான நடைமுறை உண்மை அனுபவங்கள், அரசு உரிமை கோரும் கூற்றுகளுடன் பொருந்தவில்லை எனில், அந்த இடைவெளியை டிஜிட்டல் பிரச்சாரங்களால் நிரப்பி இணைக்க முடியாது.

சமூக ஊடகம், ஒரு வழி தகவல் ஒலிபரப்பு ஊடகம் அல்ல. (அந்த ஊடகத்தில்) பிரதமர் பேசினால், குடிமக்கள் எதிர்வினை ஆற்றி பதில் அளிப்பார்கள்; அரசு அதன் தரப்புக் செய்தியைக் கூறினால், மக்களும் தங்கள் (சொந்த அனுபவத்தின்) கதையை முன்வைப்பார்கள். இதுவே அதனது உண்மையான ஆற்றலாகும்.

எனவே எதிர்காலத்தின் போராட்டம் எந்தச் சமூக ஊடகத் தளம் நீடிக்கும் என்பது குறித்து வெறுமே முடிவு செய்வது அல்ல. மாறாக தகவல் யாருடைய உடமையாகவும் மற்றும் யார் கட்டுப்பாட்டிலும் இருக்கப் போகிறது –அரசின் வசமா, பெரு நிறுவன மூலதனங்கள் வசமா அல்லது மக்களின் வசமா?– என்பதே உண்மையான கேள்வியாக இருக்கும்.

ஜனநாயகத்தின் உண்மையான சோதனை என்பது, ஓர் அரசு அதனது 

ஆதரவாளர்கள் குரலுக்கு எவ்வளவு சுதந்திரம் அளிக்கிறது என்பதில் இல்லை. மாறாக, அதனை விமர்சிப்பவர்களுக்கு அரசு எவ்வளவு சுதந்திரம் அளிக்கிறது என்பதுதான் உண்மையான சோதனை.

சட்டவிரோத தகவல் உள்ளடக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் உரிமை அரசுக்கு உள்ளது; ஆனால் ஒரு ஜனநாயகத்தில் எந்த அரசுக்கும் விமர்சனத்தை ஒரு குற்ற நடவடிக்கையாக மாற்றும் உரிமை இல்லை. ஆன்லைன் உள்ளடக்கத்தை நீக்கும் அரசின் அதிகாரம் அதிகரிப்பதுடன், வெளிப்படைத் தன்மை, நீதிமன்றப் பரிசீலனை மற்றும் குடிமக்களின் அடிப்படை உரிமைகள்  பாதுகாப்பு இவையும் சமமாகத் தேவை. 

இறுதியில், தொழில்நுட்பத்தை முழுமையாக மூடிவிட முடியாது மற்றும் என்றென்றைக்குமாகத் தகவலையும் சிறைப்படுத்த முடியாது. ஓர் ஊடகத்தின் மீது கட்டுப்பாடு

ஏற்படுத்தப்படும் எனில், மற்றொரு ஊடகம் உருவாகும். கட்டுப்பாடும் அழுத்தமும் சில காலத்திற்குத் தகவல் பாய்ந்தோடுவதைக் குறைக்கலாம்; ஆனால் மக்கள் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தும் விருப்பத்தை அவை ரத்து செய்து விட முடியாது. இறுதியில் வெற்றி என்பது செய்தித் தணிக்கைக்கோ, அதிகாரத்திற்கோ உரியதாக இருக்காது; மாறாக, வெற்றி சுதந்திரத்திற்கும் மக்களுக்கும் உரியதாக அமையும்! 

தமிழில் : நீலகண்டன், 

என்எப்டிஇ, கடலூர்

No comments:

Post a Comment