Wednesday, 19 August 2026

ஏஐஎஸ்எப் 90வது ஆண்டு விழா --ஜந்தர் மந்தர் போராட்டம் பகுதி --2 (நிறைவுப் பகுதி

ஏஐஎஸ்எப் 90வது ஆண்டு விழா

ஜந்தர் மந்தர் போராட்டம்:

இளைஞர்கள் பயத்தை வெற்றி கொள்ள உதவிய AISF-AIYF

(கட்டுரைநிறைவுப் பகுதி)                                                                         

 -- அனில் ரஜீம்வாலே

தொழில்நுட்பம் சார்ந்த போராட்டங்கள்

இதனை ‘ஜென்சி’ தலைமுறை, அதனைத் தொடர்ந்து ‘ஆல்பா’ தலைமுறை போராட்டம் என வாதத்திற்காக அழைக்கலாம். ‘கரப்பான் பூச்சி’ என நீதித்துறை உறுப்பினர் ஒருவரின் அகந்தையான விமர்சனம், ஆட்சிநிர்வாகத்திற்கு எதிரான கூட்டம் கூட்டமாகக் ‘கரப்பான்களின்’ படையெடுப்பை நாடு முழுவதும் கொண்டு வந்தது (!). இவர்களில் தொழிலாளர்களும் விவசாயிகளும் அடங்குவர்; இவர்கள் 21-ஆம் நூற்றாண்டில் அலைபேசி, மடிக்கணினி மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றால் முன்னெடுக்கப்பட்ட தகவல் புரட்சியின் சூழலில் வளர்ந்தவர்கள். இது ஒரு வலைப்பின்னல் சார்ந்த தலைமுறையாகும்; வர்க்கம், பிரிவு மற்றும் கலாச்சாரம் சார்ந்த கோரிக்கைகள் இவர்களின் ஒரு பகுதியாக மாறியுள்ளன. ஓர் இணையான சமூக வலைப்பின்னலின் எழுச்சியால் அச்சம் தணிந்துள்ளது.

அவர்களைத் தேச விரோதிகள் மற்றும் வெளிநாட்டு ஏஜெண்டுகள் என்று சித்தரிப்பதற்கான முயற்சிகள் தோல்வியடைந்து விட்டன.

நாடு முழுவதும் பரவலாக நடைபெறும் போராட்டங்கள், போலி மதவாத மற்றும் வகுப்புவாதப் பிரச்சாரத் தடை சுவர்களை உடைத்து வெளியே வரும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதைக் காட்டுகின்றன.

. ஸ்ரீ ராமர் கோயில் அறக்கட்டளையில் நடந்துள்ள ‘காணிக்கை மோசடி’ மக்களின் உண்மையான மத நம்பிக்கையைச் சிதைத்துள்ளது; ஆளும் கட்சியால் வழிநடத்தப்படும் கோயில் பொருளாதாரத்தின் எதார்த்த நிலை, கண்மூடித்தனமான நம்பிக்கையின் பிடியை உடைத்து வருகிறது.

மேலும், இணையம் வழி இணைக்கப்பட்ட தலைமுறையினர், வகுப்புவாத-பாசிச அரசுக்கும் அதிகார அமைப்பிற்கும் எதிராக முதன்முறையாகத் தங்கள் நிலைப்பாட்டை உறுதியாக வெளிப்படுத்தியுள்ளனர்.

மக்கள் அச்சம் தவிர்த்து வருவது ஆட்சியாளர்களுக்கு அடுத்து வரவிருக்கும் நிகழ்வுகள் குறித்த ஒரு கடுமையான எச்சரிக்கை.

அதுமட்டுமின்றி, முற்போக்குக் கட்சிகள் தங்கள் வழிமுறைகளையும் உத்திகளையும் மறுசீரமைப்பதற்கான ஒரு வாய்ப்பாகவும் இது அமைகிறது. அவர்கள் சமூகத்தின் இணைய வலை பின்னலுடன் இணைக்கப்பட்ட பிரிவுகளுடன் இணக்கமாகச் செயல்பட வேண்டும்

AISF-AIYFன் சூழ்நிலைக்கு ஏற்ற செயல்பாடு 

அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் தனது 90வது அமைப்பு தினத்தை

கொண்டாடுகிறது. மாணவர் அமைப்பு சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் மாபெரும் ஜனரஞ்சகப் போராட்டங்களை முன்னெடுத்தும், பங்கேற்றும், சொல்ல முடியா எண்ணற்ற தியாகங்களைச் செய்தும் மாபெரும் புகழ்மிக்க வரலாற்றை உடையது. 1936 ஆகஸ்ட் 12 –13 தேதிகளில் லக்னோ, கங்கா பிரசாத் நினைவு ஹாலில் நடைபெற்ற அமைப்பு மாநாட்டில் நிறுவப்பட்டு இந்திய வரலாற்றில் ஆழமான அடையாளத்தை பதித்து உள்ளது

   ஸ்ரீ கங்கா பிரசாத் வர்மா அவர்களே ஒரு பெரும் விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் பிரபலமான காங்கிரஸ் தலைவர்; அவர் பெயரில்தான் ஹாலும் நூலகமும் நிறுவப்பட்டுள்ளது.

 ஏஐஎஸ்எப்  அமைப்பு, பல்வேறு தேசியப் போக்குகளின் விளைவு; அந்தக் கருத்து பிசி ஜோஷி, நேரு, போஸ் போன்ற தலைவர்களின் இணைந்த கருத்தால் உருவானது. இவ்வாறு மாணவர் பெருமன்றம், சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் ஆகச் சிறந்த பாரம்பரியத்தை முன்னெடுத்துச் சென்றது. இங்கு நாம் ஏஐஎஸ்எப் நடத்திய முக்கிய இயக்கங்கள் சிலவற்றைக் காண்போம்:

வரலாற்றுச் சிறப்புமிக்க முதலாவது அனைத்திந்திய மாணவர்கள் தினம்

1937 நவம்பர் 20ல் ஒரே நேரத்தில் நாடு முழுவதும் மாணவர்கள் தினம் அனுசரிக்கப்பட்டது. 

1937 அந்தமான் சிறைக் கைதிகள் விடுதலை இயக்கம்:

மாணவர் பெருமன்றம் அமைக்கப்பட்ட பிறகு விரைவில் அது அறிவித்த நாடு தழுவிய இயக்கம் 1937 ஆகஸ்டில் தொடங்கியது; அந்த இயக்கம், அந்தமான் தீவு செல்லுலார் சிறைகளில் அடைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கைதிகளைத் தீவிலிருந்து பிரதான நிலப்பகுதிக்கு உடனடியாக மாற்றவும் அவர்களை விடுதலை செய்யவும் கோரியது.

கல்விச் சீர்திருத்தங்களுக்கான போராட்டம்: 

அறிவியல், தொழில்நுட்பம், சமூகவியல் சார்ந்த மானுடவியல் படிப்புகள், தேர்வுகள்,

கல்வி நிறுவனங்கள் மற்றும் சேர்க்கை முதலான விஷயங்களை ஒருங்கிணைந்த முறையில் விவாதிப்பதற்காக நாக்பூரில் 1946 ஜூன் 6ஆம் தேதியிலிருந்து 9ம் தேதி வரை ஏஐஎஸ்எப் அனைத்திந்தியக் கருத்தரங்கு ஒன்றை நடத்தியது. அந்தக் கருத்தரங்கு, அதுவரை எந்த அமைப்பாலும்  ஒருங்கிணைந்த தீர்மானங்களை முன்மொழிந்த வகையில் முதலாவது நடவடிக்கையாகும்.

1942 இயக்கத்தில் தீவிரப் பங்கேற்பு:

ஏஐஎஸ்எப் தலைவர்களும் செயல்பாட்டாளர்களும் 1942 ஆகஸ்ட் புரட்சி எனப்படும்

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பீகார், உ பி, மகாராஷ்டிரா, மேற்குவங்கம் மற்றும் பல்வேறு பிற மாகாணங்களில் நடைபெற்ற அதன் தொடக்கக் கட்டங்களில் பேரணிகள், கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி தீவிரமாகப் பங்கேற்றனர். சிந்துப் பிரதேச மாணவர் பெருமன்றத்தைச் சேர்ந்த ஹேமு கலானி பிரிட்டிஷ் போலீசாரிடம் பிடிபட்டு தூக்கிலிடப்பட்டார். அப்போது அவருக்கு வயது 17 மட்டுமே.

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய எழுச்சி:

விடுதலைப் போரின் போருக்குப் பிந்தைய எழுச்சியில் (1945 –47) ஏஐஎஸ்எப் முன்னணி பங்கு வகித்தது. ஏதோ ஒரு நடவடிக்கை இல்லாமல் ஒரு நாளும் கடந்து போனதில்லை. ஏஐஎஸ்எப் அணியினர் பலர் களப்பலி தியாகிகள் ஆகினர்.

விடுதலையை வரவேற்றல்: 

1947 ஆகஸ்ட் 15-ல் இந்தியா அடைந்த சுதந்திரத்தை ஏஐஎஸ்எப் கூட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்தி ஆர்வமுடன் வரவேற்றது. விடுதலைப் போராட்ட இயக்கத்தில் அதன் வெற்றிக்காக ஏஐஎஸ்எப் பெரும் தியாகங்களைச் செய்தது.

பாண்டிச்சேரி மற்றும் கோவாவில் விடுதலைப் போராட்டங்கள்: 

பிரெஞ்சு பாண்டிச்சேரி 1954லும் போர்த்துக்கீசிய கோவா 1961லும் விடுதலை பெற்றன. இந்தப் போராட்ட இயக்கங்களிலும் ஏஐஎஸ்எப் மீண்டும் முன்னணியில் இருந்தது. 1955ல் நிகழ்ந்த கோவா சத்தியாகிரகத்தில் பலர் களப்பலி தியாகிகள் ஆயினர்.

இளைஞர் இயக்கம் பின்னர் முக்கியமாக அனைத்திந்திய இளைஞர் பெருமன்றமாக

(AIYF, 1959) வடிவெடுத்தது. தேச மறு கட்டமைப்புக்காக ஏஐஎஸ்எப் உடன் இணைந்து ஏஐஓய்எப் நினைவில் நிற்கும் பல போராட்டங்களை நடத்தியது.

SFI, AISA போன்ற பிற இடதுசாரி அமைப்புகளுடன் இணைந்து ஏஐஎஸ்எப் மற்றும் ஏஐஒய்எப் அமைப்பு ரீதியான வலிமையையும் கருத்தியல் திட்பத்தையும் வழங்கியது –அவையின்றி எந்த இயக்கமும் நீடிக்க முடியாது. அவர்களைக் கலைக்க போலீஸ் எடுத்த முயற்சிகளையும் மீறி அவர்கள் நூலகங்களைத் திறந்து நீண்ட நேரத்திற்கு நடத்தினர்.

அவர்களின் சிறந்த வரலாற்றுப் பாரம்பரியத்தில் ஏஐஎஸ்எப் மற்றும் ஏஐஒய்எப் அமைப்புகளின் அர்ப்பணிப்புள்ள குழுக்கள் கூட்டங்கள், விவாதங்கள், உணவு, குடிநீர், மேடை முதலியவற்றை அமைத்துத் தந்து அரசியல் தந்திர உத்திகளையும் வகுத்தளித்தனர். மேலும் அவர்கள் தேவையற்ற விளம்பரங்களையும் நாடிச் செல்லவில்லை.

பங்கேற்ற இளைஞர்களின் மனங்களில் இருந்த ஆளும் தரப்புக் குறித்த எந்த அச்சத்தையும் விரட்டி அடிக்க ஏஐஎஸ்எப் மற்றும் ஏஐஒய்எப் கடுமையாகப் பாடுபட்டன.

பிற முக்கிய இயக்கங்களில் பங்கேற்றல்: 

ஏஐஎஸ்எப் பங்கேற்ற அல்லது தலைமையேற்று நடத்திய அனைத்து முக்கிய இயக்கங்கள் பற்றி விரிவான தகவல்களை இங்கு தருவது சாத்தியமல்ல. ஆனால் 1959 உணவு இயக்கம், வரலாற்றுச் சிறப்புமிக்க அனைத்திந்திய டெல்லிப் பேரணிகள், பாட்னா துப்பாக்கிச் சூட்டுக்கு எதிரான 1955 மாணவர்கள் இயக்கம், பல்வேறு பந்த் போராட்டங்கள், மாணவர்கள் உரிமைக்காகவும் கட்டண உயர்வுக்கு எதிராகவும் 1960களில் நடத்தப்பட்ட பல்வேறு போராட்டங்கள், ஏகபோகங்கள் மற்றும் வங்கிகளைத் தேசியமயம் ஆக்குவதற்கான  போராட்டம், கல்வியை ஜனநாயகப்படுத்தல், கல்வியைக் காவிமயமாக்குவதற்கு எதிரான போராட்டங்கள், ஜெயப்பிரகாஷ் நாராயணனின் ‘முழு புரட்சி’க்கு எதிரான இயக்கம், அவசர நிலைக்கு எதிரான போராட்டம், வகுப்புவாத பாசிச மற்றும் வலதுசாரிகளின் அதிகாரப் போட்டிக்கு எதிரான போராட்டங்கள் போன்றவற்றில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் பங்கேற்றது என்பதை இங்கு கூறினால் போதுமானது. வியட்நாம் விடுதலைப் போராட்டத்துடன் ஒருமைப்பாடு, பங்களாதேஷ் விடுதலை, அணிசேரா இயக்கம், அமெரிக்கா 7வது கப்பற்படைக்கு எதிரான போராட்டம் போன்ற அனைத்து முக்கிய ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களிலும் ஏஐஎஸ்எப் தீவிரமாகப் பங்கேற்றது.

மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் பிரச்சனைகள் ஒட்டுமொத்த பொருளாதாரக் கொள்கைகளுடன் நெருக்கமாகத் தொடர்புடையது என ஏஐஎஸ்எப் மற்றும் ஏஐஒய்எப்

எப்போதும் வலியுறுத்தின. கூடுதல் உற்பத்தி மற்றும் சமத்துவமான விநியோகம் இவற்றை நோக்கமாகக் கொண்ட மக்கள் நலன் சார்ந்த பொருளாதாரக் கொள்கைகள் மட்டுமே கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு ஏற்படுத்தல், வீட்டு வசதி முதலிய அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்ய முடியும்.

முற்போக்கான மதசார்பற்ற பாடத் திட்டங்களுக்காகவும் மற்றும் எளிய,  ஆழமான உள்ளடக்கத்துடன் கூடிய சீரான இலவசக் கல்விக்காகவும் ஏஐஎஸ்எப் எப்போதும் உறுதியாக நின்றது.

நவீன தேசம் குறித்த கருதுகோள், அனைத்துச் சாதிகள், இனங்கள், மதங்கள், வகுப்புகள் முதலியவற்றின் இடையேயான ஒற்றுமையில் அமைந்துள்ளது என ஏஐஎஸ்எப் மற்றும்

ஏஐஒய்எப் தொடர்ச்சியாக வலியுறுத்தின. அவை இந்திய அரசியலமைப்புக்காகத் தொடர்ச்சியாக போராடின. ஏஐஎஸ்எப் மற்றும் இளைஞர் அமைப்புகள் போன்ற சக்திகள் விடுதலைக்காகப் போராடி தியாகம் செய்தன; அதே நேரத்தில் தீவிர வலதுசாரி பிற்போக்கு வகுப்புவாத சக்திகள் ஒருபோதும் விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெறவில்லை.

வகுப்புவாதப் பாசிசச் சக்திகளின் வருகையைத் தேச ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் என வெகு காலம் முன்பே ஏஐஎஸ்எப்– ஏஐஒய்எப் எச்சரித்தன.

அதே நேரத்தில், சாதிப் பிரச்சனை மற்றும் சாதியவாதத்திற்கான தீர்வை உறுதியாக ஆதரித்த ஏஐஎஸ்எப் தலைமையிலான மாணவர் இயக்கம், சமூக கலாச்சார நீதியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது. பொருளாதார உறவுகள் பிற அனைத்து உறவுகளின் அடிப்படையாக அமைந்தாலும், சமூக நீதிக்குத் தனித்த கூடுதல் அணுகுமுறையை அளிக்க வேண்டியது அவசியம். ஒடுக்கப்பட்டவர்கள் மேம்பாட்டுக்குப் பொருளாதாரத் தீர்வைத் தவிர, இட ஒதுக்கீடு  முக்கிய நடவடிக்கையாகும்.

மாணவர் பெருமன்றமும் பெருந்திரள் மாணவர் இயக்கமும் 

மாணவர் மற்றும் பொதுவான இயக்கங்களில் ஆழமான தாக்கத்தைப் பதித்துள்ள ஏஐஎஸ்எப், கருத்தியல் தெளிவை வழங்கியதுடன் இயக்கங்களை நிலை நிறுத்தும் பங்கை ஆற்றுகிறது.

டிசம்பர் 1965 –ஜனவரி 1966ல் இளைஞர் பெருமன்றத்துடன் முதல் முறையாக இணைந்து பாண்டிச்சேரியில் நடத்திய தனது கருத்தரங்கில் ஏஐஎஸ்எப், தேசிய ஜனநாயகம் மற்றும் விஞ்ஞான சோசலிசத் திசைவழி நோக்கு நிலை தீர்மானத்தை நிறைவேற்றியது. அதிலிருந்து ஜனநாயகம் குறித்த தனது கருதுகோளை மேம்படுத்தி விரிவுபடுத்தியுள்ளது.

இன்று அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், மாணவர்களைப் பாதுகாக்க வேண்டியும், கல்விச் சீர்திருத்தம் மற்றும் பிற பிரச்சனைகள் தொடர்பாகப் போராடுவதற்கும் வேண்டி ஜனநாயகம் மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கப் போராடுவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.


           மாணவர் பெருமன்றம் வாழ்க! 

மாணவர்கள் போராட்டம் வெல்க!                                 

                                                    –நன்றி : நியூ ஏஜ் (ஆக.9 –15)

                             –தமிழில் : நீலகண்டன் 

என் எஃப் டி இ, கடலூர்

[நிறைவுப் பகுதி முற்றும்]  

No comments:

Post a Comment