Monday, 24 August 2026

வர்க்கப் போராட்டம் மூலம் சாதியை ஒழித்தல் --டாக்டர் அருண் மித்ரா

 

வர்க்கப் போராட்டம் மூலம் சாதியை ஒழித்தல் 

விடுதலைக்குச் சமூக கண்ணியமும் 

பொருளாதார நீதியும் தேவை

டாக்டர் அருண் மித்ரா


இந்தியச் சமூகம் வரலாற்றுக் காலம் தொட்டு தனிமனிதனின் திறமை, தகுதி அல்லது சாதனைகளின் அடிப்படையில் அடுக்குகளாகப் பிரிக்கப்படவில்லை; மாறாக ஒருவர் எந்தக் குடும்பம் மற்றும் சாதியில் பிறந்தவர் என்பதன்படி பெரிதும் பிரிக்கப்பட்டனர். ஒரு மனிதன் பிறந்த குடும்பம் அல்லது கோத்திரத்தின்படி அடையாளப்படுத்துவது ஒரு சமூக நோக்கத்திற்குப் பயன்படலாம் என்ற போதும், சாதியைப் பயன்படுத்தி (சமூகத்தைப்) படிநிலை அடுக்குகளாக நிறுவிடுவது ஆழமான, பிளவுபடுத்தும் அசமத்துவங்களை ஏற்படுத்துகிறது. மனுஸ்மிருதி, சாதி முறைமையைத்   தொகுத்து விதிகளாகியது; அது சமூகத்தை நான்கு வர்ணங்களாகப் பிரித்து தரப்படுத்தப்பட்ட சமத்துவமின்மைகளை நிறுவனப்படுத்தியது.

மேலும் செய்யும் தொழிலுடன் சாதி நெருக்கமாகத் தொடர்புபடுத்தப்பட்டது. உடல் உழைப்பு  மற்றும் “அசுத்தமான” பணிகள் என்றழைக்கப்படும் வேலையில் ஈடுபடுபவர்கள் தீண்டத்தகாதோர் என முத்திரை குத்தப்பட்டு –தவிர்க்க முடியாத அத்தியாவசியமான பங்களிப்பை அவர்கள் சமூகத்திற்கு அளித்த போதும் – அடிப்படை மனித உரிமைகள் அவர்களுக்கு மறுக்கப்பட்டது. கல்வி, பொது இடங்களைப் பயன்படுத்துவது ஊடாடும் சமூக உறவுகள் உட்பட மற்றவர்களுடன் உணவைப் பகிர்தல் மற்றும் குடும்ப உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளும் உரிமைகள் மறுக்கப்பட்டு கடுமையான சமூக விலக்கலை அவர்கள் சந்தித்தனர். நூற்றாண்டுகளாகத் தொடரும் அத்தகைய பழக்கங்கள், சமூக நிறுவன அமைப்புகள் மற்றும் சமூக உணர்வில்  ஆழமான சாதி பாகுபாடாகப் பொதிந்துள்ளன. 

இருப்பினும், சாதிய ஒடுக்குமுறை ஒருபோதும் எதிர்ப்பைச் சந்திக்காமல் போகவில்லை. பௌத்தம் மற்றும் பக்தி இயக்கம், பிறப்பு அடிப்படையிலான ஏற்றத்தாழ்வு படிநிலையை எதிர்த்து கேள்வி கேட்டன. பகவான் புத்தர் பிராமண மேட்டிமையை நிராகரித்தார்; மேலும் அவர், ஒரு மனிதனின் மதிப்பு அவனது நடத்தை மற்றும் செயல்களால் தீர்மானிக்கப்பட வேண்டுமே தவிர பிறப்பினால் அல்ல என்றார். பக்தி இயக்கத்தின் பல முனிவர்கள் சமயம் மற்றும் சமூக வாழ்வின் மீது சாதி அடிப்படையிலான மேலாதிக்க ஏகபோகத்தை எதிர்த்தனர்.

19ஆம் நூற்றாண்டில் ஜோதிராவ் புலே சக்தி மிக்க சாதி எதிர்ப்புச் சிந்தனையாளராக உருவானார். 1873 செப்டம்பர் 24ல் பூனாவில் அவர் நிறுவிய ‘சத்யசோதக் சமாஜ்’ ("உண்மை தேடுவோர் சங்கம்") அமைப்பின் மூலம் ஒடுக்கப்பட்ட சாதிகளின் உரிமைக்காக அவர்

போராடினார். அவரது மனைவி சாவித்திரிபாய் புலே அவருடன் இணைந்து பூனாவில் 1948ல் ‘பிடே வாடா’வில் இந்தியாவின் பெண்களுக்கான முதல் பள்ளியை நிறுவினார். (குறிப்பு: ‘வாடா’ எனில் மராத்தியில் பெரிய பாரம்பரியமான குடியிருப்பு அல்லது மாளிகை என்று பொருள். பள்ளி தொடங்கப்பட்ட கட்டடத்தின் உரிமையாளர் தத்யாசாஹேப் பிடே. எனவே அவரது பெயரால் இது 'பிடே வாடா' என்று அழைக்கப்பட்டது). சாவித்திரிபாய் புலே மற்றும் ஃபாத்திமா ஷேக் இருவரும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் 19ஆம் நூற்றாண்டின் முன்னணி இந்தியக் கல்வியாளர்களும், சமகாலச் சமூகச் சீர்திருத்தவாதிகளும் ஆவர். அவர்கள் பூனாவில் கடுமையான சமூக எதிர் விளைவுகளை ஒன்றாகச் சந்தித்துப் பெண்கள் மற்றும் விளிம்பு நிலை சமூகத்தினர்களுக்கு இந்தியாவின் முதல் பள்ளிகளை நிறுவி பெண் கல்விக்கு அடித்தளம் அமைத்தனர்.

அண்ணல் டாக்டர் பி ஆர் அம்பேத்கர் சாதிக்கு எதிரான போராட்டத்திற்கு வரலாற்றுப் புகழ்மிக்க, சமரசமற்ற திசை வழியை வழங்கினார். அவரது ஆகச்சிறந்த முதன்மை படைப்பான

‘சாதியை அழித்தொழித்தல்’ (Annihilation of Caste) சமூகச் சமத்துவமின்மைகள் மீதான கடுமையான விமர்சனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. உழைக்கும் மக்களைச் சாதி பிளவுபடுத்துகிறது என்பதை அவர் உணர்ந்தார். அதே நேரத்தில் இந்தியாவின் விடுதலை, வரலாற்று ரீதியில் ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு அரசியல் அமைப்புப் பாதுகாப்பு மற்றும் முற்போக்கான சட்டங்களை நிறைவேற்றுவதற்கான அரசியல் வெளியை ஏற்படுத்தியது. அரசியலமைப்புச் சட்டம், சமூகப் பொருளாதாரச் சமத்துவத்திற்கான போராட்டத்தைத் தொடர்வதற்கான முக்கியமான அடித்தளத்தை வழங்கியது. இந்திய
அரசியல் காட்சிகளில், பிறப்பு அடிப்படையிலான பாகுபாட்டிற்கு எதிரான கருத்துக்களுக்கு முக்கிய இடமளித்த பெருமை
மகாத்மா காந்தியடிகளைச் சாரும். பண்டிட் ஜவஹர்லால் நேரு அறிவியல் மனப்பான்மையை ஊக்குவித்தார்; மற்றும் மதம், பிரதேசம், சாதி மற்றும் பாலினம் உள்ளிட்ட எந்த வகையான பாகுபாட்டிற்கும் எதிராகப் போதித்தார்.

சாதிப் பாகுபாட்டிற்கு எதிராகப் போராடியதில் கம்யூனிஸ்டுகள் மற்றும் பிற முற்போக்கு சக்திகள் முக்கியப் பங்காற்றின. வர்க்கமற்ற மற்றும் சுரண்டலற்றச் சமூகம் குறித்த பார்வையால் வழிகாட்டப்பட்ட கம்யூனிசச் செயல்பாட்டாளர்கள், “தீண்டத்தகாதோர்” என்று கருதப்பட்டவர்கள் வீடுகளுக்குள் நுழைந்து அவர்களுடன் உணவைப் பகிர்ந்து உண்டனர்; அவர்கள் மத்தியில் வாழ்ந்து ஒருமைப்பாட்டு பந்தங்களை ஏற்படுத்தினர். இதன் காரணமாக அவர்களில் பலர் தங்கள் சமூகத்தில் இருந்து தள்ளி வைக்கப்படுவதைச் சந்தித்தனர்.

அறிவியல் மற்றும் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் சாதிய ஒடுக்குமுறை, பொருளாதாரச் சுரண்டல் முறைகளுடன் நெருக்கமாகப் பின்னிப் பிணைந்த ஒன்று. வரலாற்று ரீதியாக, சாதியானது நிலப்பிரபுத்துவ மற்றும் முதலாளித்துவ ஆதிக்கத்தின் கட்டமைப்பாகச் செயல்பட்டு வந்துள்ளது. எனவே பொருளாதாரச் சுரண்டலுக்கு எதிரான போராட்டம், சாதிய ஒடுக்குமுறையையும் எதிர்கொள்கிறது.  வர்க்கப் போராட்டத்தின் மூலம் உழைக்கும் மக்களின் விடுதலை, சாதியின் பொருள் சார்ந்த (பௌதிக) அடித்தளங்களைப் பலவீனப்படுத்தி இறுதியில் அதனை அழித்து ஒழிப்பதற்கான சூழல்களை ஏற்படுத்துகிறது.

தொழிலாளர்களும் ஒடுக்கப்பட்ட மக்களும் சாதி மற்றும் மத எல்லைகளைக் கடந்து ஒன்றிணைய வேண்டும். தொழிலாளர் வர்க்கத்துக்குள் சாதி அல்லது மத அடிப்படையிலான பிளவுகள் அவர்களின் கூட்டுச் சக்தி வலிமையை வலுவிழக்கச் செய்து சுரண்டலின் உண்மையான கட்டமைப்புகளில் இருந்து அவர்களின் கவனத்தைத் திசை திருப்பவும் கூடும். துரதிஷ்டவசமாக, சில அரசியல் தலைவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில் மக்களைப் பிரதானமாகச் சாதி ரீதியில் அணி திரட்டுகிறார்கள். அத்தகைய அரசியல், சமத்துவமின்மையைத் தொடர்ந்து நிலை நிறுத்தும் பொருளாதார மற்றும் சமூக கட்டமைப்புகள் பிரச்சனைக்குத் தீர்வு காணாமல், அடையாள அடிப்படையிலான பிரிவினைகளை வலிமைப்படுத்தக் கூடும். உண்மையான விடுதலைக்குச் சமூக கண்ணியமும் பொருளாதார நீதியும் ஆகிய இரண்டும் தேவை.

எனவே, வர்க்க ஒற்றுமை, அறிவியல் பூர்வ சிந்தனை மற்றும் சுரண்டலுக்கு எதிரான நிலைப்பாடு அடிப்படையில் அனைத்து ஒடுக்கப்பட்ட பிரிவினர்களையும் ஒன்றிணைக்க கம்யூனிச இயக்கம் முயன்று வருகிறது.

சுரண்டப்படும் மக்கள் அனைவரும் பகிர்ந்து கொள்ளும் அடிப்படை வர்க்க நலன்களை, சாதி முரண்பாடுகள் கவிழ்ந்து மறைத்திட அனுமதிக்கக் கூடாது. நம்முன் உள்ள பணி, சாதியைக் கட்டிக் காக்கும் சமூகப் பிளவுகளை வலுவிழக்கச் செய்வதுடன், சுரண்டலுக்கு எதிரான நமது  போராட்டத்தையும் கூர்மைப்படுத்த வேண்டும் என்பதாகும்.

எனவே பகுத்தறிவு மற்றும் முற்போக்கு சக்திகள் இரட்டைப் பொறுப்பைச் சந்திக்கின்றன: வர்க்கப் போராட்டத்தை மேலெடுத்துச் செல்வது மற்றும் சாதி பாகுபாட்டையும் சமூகப்பாகுபாட்டையும் எதிர்த்துப் போரிடுவது. மூடநம்பிக்கை மற்றும் வழிவழியாக வந்த பரம்பரை தப்பெண்ணங்களுக்குப் பதிலாக அறிவியல் மனப்பான்மையை இடம்பெறச் செய்ய வேண்டும். சாதி ரீதியில் ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் பொருளாதார ரீதியில் சுரண்டப்பட்டவர்களைக் கல்வி அறிவு, கண்ணியம் மற்றும் கூட்டாக இணைந்த அமைப்பு இவற்றைக் கொண்டு அதிகாரப்படுத்தி வலிமை பெறச் செய்ய வேண்டும்.

சாதி மோதல்கள் மூலமாகச் சாதியை அழித்து ஒழிப்பது நடந்து விடாது. அதற்குச் சுரண்டப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரின்  ஒற்றுமை, சமூக சீர்திருத்தம், அறிவியல் மனப்பான்மை உணர்வு மற்றும் பொருளாதாரச் சுரண்டலுக்கு எதிராக நிலைத்த தொடர்ச்சியான போராட்டமும் தேவைப்படுகின்றன. இந்தச் சக்திகளை ஒன்றிணைப்பதன் மூலமாக மட்டுமே நாம் உண்மையான சமத்துவமிக்க, சாதியற்ற மற்றும் சுரண்டலற்ற சமூகத்தை நோக்கி முன்னேற முடியும். தொழிற்சங்கங்கள் தலைமையிலான தொழிலாளர் இயக்கங்களுக்கு இந்த விஷயத்தில் பெரும் பொறுப்பும் முக்கியப் பங்கும் உள்ளன.

–நன்றி : நியூ ஏஜ் (ஆக. 23 –29) 

தமிழில் : நீலகண்டன், 

என் எஃப் டி இ, கடலூர்

 

 

No comments:

Post a Comment