Wednesday, 18 February 2026

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 131 -- அபானி முகர்ஜி– இந்தியப் புரட்சியாளர்களை வெளிநாட்டில் திரட்டியவர்

 

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 131

அபானி முகர்ஜி– 
இந்தியப் புரட்சியாளர்களை வெளிநாட்டில் திரட்டியவர்

–அனில் ரஜீம்வாலே 

 பீரங்கி இருந்த சிறை வாசலில் எச்சரிக்கை ஒலி ‘ஒரு கைதி தப்பி விட்டான்’ என்று அலறியபோது சிறை அமைந்த தீவில் இருள் கவியத் தொடங்கியிருந்தது. வெளியே தப்பிச் சென்ற அவன், எச்சரிக்கை தரப்பட்டு காவலர்கள் சுட்டபோது, கடலுக்குள் மூழ்கி போதுமான தொலைவுக்கு அப்பால் சென்று விட்டான். இருளும் நல்ல காலமும் அவனைக் காப்பாற்றின. ஒரு மீன்பிடி படகைப் பார்த்த அவன் உதவிக்கு அழைக்க, கை தூக்கி விடப்பட்டு போலீசிடமிருந்து மறைத்து அக்கரையில் விடப்பட்டான்; அங்கு தன் உருவத்தையும் பெயரையும் மாற்றிக் கொண்டு எதிரிக்கு எதிராகப் போரைத் தொடர முடிவு செய்தான்… –இது, ‘தி கவுண்ட் ஆஃப் மான்டே கிறிஸ்டோ’ நாவலின் ஒரு அத்தியாயம் அல்ல. இது 1917 இலையுதிர் காலத்தில் உண்மையில் நிகழ்ந்த ஒரு நிகழ்வு. 

["தி கவுண்ட் ஆஃப் மான்டே கிறிஸ்டோ" (The Count of Monte Cristo) என்பது அலெக்ஸாண்ட்ரே டுமாஸ் எழுதிய புகழ்பெற்ற பிரெஞ்சு சாகச மற்றும் பழிவாங்கல் நாவல் ஆகும். தவறுதலாகச் சிறையில் அடைக்கப்படும் எட்மண்ட் டான்டெஸ் என்ற இளைஞன், தப்பித்துப் பெரும் செல்வந்தராகி, தன்னைச் சூழ்ச்சி செய்தவர்களைப் பழிவாங்கும் கதை.]

1917 நிகழ்வின் காட்சியில் இடம்பெற்றது சிங்கப்பூரில் இருந்த பிரிட்டிஷ் சிறை. தப்பிய கைதி அபானி முகர்ஜி, ஓர் இந்தியப் புரட்சியாளர். “ஷாகீர் என்ற பெயரில் ஜாவாவுக்குப் பயணம் செய்த அவர், அங்கிருந்து ஹாலந்து பின்னர் ஜெர்மனி இறுதியில் 1920ல் மாஸ்கோவுக்குப் பற்றுறுதி கொண்ட ஒரு கம்யூனிஸ்ட்டாகச் சென்றார்”. (நியூ டைம்ஸ், இதழ் 14, 1967 மேற்கோளாகக் கௌதம்  சட்டோபாத்தியா  எழுதிய ‘அபானி முகர்ஜி, அசாத்திய துணிச்சல் மிக்க ஒரு புரட்சியாளரும் முன்னோடி கம்யூனிஸ்ட்டும்’ என்ற பிபிஹெச் பதிப்பக 1976 வெளியீடு, முன்னுரை முதல் பத்தியிலிருந்து)

அபானிநாத் முகர்ஜி இந்தியாவில் ஒரு முன்னோடியான கம்யூனிஸ்ட், பெரும்பான்மையான தனது வாழ்வை ஐரோப்பாவில், குறிப்பாகச் சோவியத் யூனியனில் வாழ்ந்தவர்–  அங்கேயே வரலாற்றின் முரண் நகையாக ஜோசப் ஸ்டாலினின் அடக்குமுறை  ஆட்சியால் அநீதியாகச் சுட்டுக் கொல்லப்பட்டவர். (1920ல்) தாஷ்கண்ட் நகரில் ‘இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி’யை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்களில் அபானியும் ஒருவர்.

அபானி (தற்போது மத்திய பிரதேசத்தில் உள்ள) மத்திய பிராந்தியத்தின் ஜபல்பூரில் 1891 ஜூன் 3ம் தேதி பிறந்தார். அவரது தந்தை ஸ்ரீதிருலோகநாத் முகர்ஜி, ஒரிஜினலாகச் சத்கிரா துணைக் கோட்டத்தின் பாபுலியா கிராமத்தைச் சேர்ந்தவர். அந்தக் கிராமம் (தற்போது பங்களாதேஷில் உள்ள) வங்கத்தின் கவுல்னா மாவட்டத்தில் உள்ளது. அவர்களுக்குக் கல்கத்தா நகரில்  56 பி, சுக்கியா தெருவில் ஒரு வீடும் உள்ளது.

பிரிவினைக்கு எதிரான இயக்கம் 

புரட்சிகர இயக்கங்கள் எழுச்சி பெற்ற காலகட்டத்தின்போது, 1905ல் வங்கம் முழுதும் பிரிவினைக்கு எதிரான அலை வீசிய இயக்கத்தில் அபானி ஈர்க்கப்பட்டார். அவரது தாயார் திருமதி ஹரிமதி தேவி முழுமையாக இதில் அவரை ஆதரித்தார், அடக்குமுறை மற்றும் அடிமைத்தனத்தை எதிர்ப்பதில் அவரை எப்போதும் ஊக்குவித்தார். அவரது தாயார் புகழ் பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூருக்கு உறவினர் ஆவார்.

1905 கல்கத்தா மெட்ரோபாலிட்டன் நிறுவனம் அருகில் பந்தீர் மடத்தில் நடத்தப்பட்ட பிரம்மாண்டமான கூட்டத்தில் திலகரும் முக்கியப் பேச்சாளர்களில் ஒருவர். 

அரசின் இழிவான ‘கார்லைல் சுற்றறிக்கை’ (R.W. Carlyle வங்கத்தின் காவல்துறை அதிகாரி) அத்தகைய கூட்டங்களில் மாணவர்கள் கலந்து கொள்வதைத் தடை செய்தது. இருப்பினும் அபானி உள்பட மெட்ரோபாலிட்டன் நிறுவனத்தின் பல மாணவர்கள் கூட்டங்களில் கலந்து கொண்டது மட்டுமின்றி தன்னார்வத் தொண்டர்களாகவும் அதில் செயல்பட்டனர்.

இதை அறிந்த தலைமையாசிரியர் அபானியை பெஞ்சின் மீது நிற்க வைத்தார்! கோபமடைந்த அபானி பழைய பாணியிலான பங்காவின் (காற்றாடி) கயிற்றை அறுத்தார். பிறகு நடந்தது தெரிந்ததுதான் அவர் வெளியேற்றப்பட்டார். ஜபல்பூரைவிட்டு ஓடியவரை ஓர் உறவினர் மீண்டும் திரும்பக் கொண்டு வந்து விட்டார்!

முகர்ஜிக்களின் வீடு புரட்சியாளர்களின் மையமானது. தரைத்தளத்தில் புகழ்பெற்ற புரட்சியாளர் சாகரம் கணேஷ் தியோஸ்கர் மற்றும் சாலையின் மறுபுறத்தில் மற்றொரு புகழ்பெற்ற புரட்சியாளர் பிரமத நாத் தத்தா வசித்தனர். அபானியும் பிரமதாவும் நெருக்கமான நண்பர்களாகினர். அவர்களுக்குத் தியோஸ்கர் பயிற்சி அளித்தார். அங்கு பிபின் சந்திர பால் மற்றும் பிற பல புரட்சியாளர்கள் விஜயம் செய்தனர்.

அகமதாபாத் பின்னர் ஜப்பானில்

அவரைக் ‘காப்பாற்ற’ அபானியின் பெற்றோர் அவரைத் தொலைவில் உள்ள அகமதாபாத் டெக்ஸ்டைல் பயிற்சி நிறுவனத்தில் படிக்க அனுப்பினர். அவர் நன்றாகப் படித்தது மட்டுமின்றி அரசியல் தொடர்புகளையும் நன்கு ஏற்படுத்திக் கொண்டார்.

1908ல் பக்ஸா சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட பிபின் பால் ஹௌரா புகைவண்டி நிலையத்தில் அன்புடன் வரவேற்கப்பட்டார். [ஹிமாலய மலைத் தொடரில் பக்ஸா டைகர் ரிசர்வ் பகுதியில் உள்ள மேற்கு வங்காளத்தின் அலிபுர்துவார் மாவட்டத்தில் அமைந்துள்ள பக்ஸா கோட்டை சிறை (Buxa Fort Jail), அந்தமானின் செல்லுலார் சிறைக்கு அடுத்தபடியாகக் கொடுமை நிறைந்தது] பிபின் பாலுக்கு மரியாதை வரவேற்பளித்த சுதேசி தன்னார்வத் தொண்டர்கள் அணிவகுப்பில் அபானியும் இடம் பெற்றார் என்பதைச் சொல்லவும் வேண்டுமா? விரைவில் அவரைத் தொடர்பு கொண்ட சில தலைவர்கள் அவரைத் தீவிர அரசியலுக்குள் ஈர்த்தனர்.

அஹமதாபாத் திரும்பிய அபானி ‘ஒன்றுபட்ட வங்க இல்லம்’ என்ற சுதேசி அமைப்பை அமைத்தார். அவருக்குப் பங்கலக்ஷ்மி காட்டன் மில்லில் உதவி நெசவு மாஸ்டர் பணி கிடைத்தது.

சில காலத்திற்குப் பிறகு 1909ல் வெளிப்பார்வைக்குத் தனது தொழிற்சார்ந்த பணி நிமித்தம் என்று ஜப்பான் புறப்பட்டுச் சென்றார்; ஆனால் உண்மையில் அவர் புரட்சியாளர் ஜிதேந்திரநாத் முகர்ஜியால் அனுப்பப்பட்டார். ஜப்பானில் அபானி புரட்சியாளர்கள் பலரைச் சந்தித்தார், ஒரு சிறு குழுவை அமைத்தார். மௌலானா பர்கத்துல்லாவைச் சந்தித்த அவர், அவரது யோசனைபடி கடற்பயணமாக ஐரோப்பா சென்றார். ஜெர்மனி சென்ற அவருக்குச் சோசலிச இயக்கத்துடன் தொடர்பு ஏற்பட்டது. 

1912-ல் இந்தியா திரும்பிய அவருக்கு ஆண்ட்ரூ யூல் அண்ட் கோ நிறுவனத்தில் ஒரு வேலை கிடைத்தது. [இப்போது ஆண்ட்ரூ யூல் & கோ. லிமிடெட் என்பது இந்திய அரசின் கனரகத் தொழில்துறை அமைச்சகத்தின் உரிமையின் கீழ் உள்ள ஓர் இந்திய மத்திய பொதுத்துறை நிறுவனம்] அந்நிறுவனத்தில் ஒரு வேலை நிறுத்தம் நடந்தது. அபானி தொழிலாளர்களிடம் அனுதாபம் கொண்டார், வேலையை விட்டுவிட வேண்டியது ஆயிற்று. பின்னர் அவர் மதுராவிலிருந்த பிரேம் மகா வித்யாலயா நிறுவனத்தில் டெக்ஸ்டைல் துறையில் ஒரு டைரக்டராகப் பணியில் சேர்ந்தார். அந்த நிறுவனம் எதிர்காலத்தில் ஒரு புரட்சியாளராக ஆகிய ராஜா மகேந்திர பிரதாப்-ஆல் நடத்தப்பட்டது. அபானி மகேந்திர பிரதாபின் தனிச் செயலாளராகவும் ஆனார்.

முதலாவது உலகப் போர் வெடித்தபோது அபானி கல்கத்தா சென்றார்; இந்த முறை, மீண்டும் ஆயுதங்கள் வாங்கி வர, ஜெத்தின் முகர்ஜியால் அவர் ஜப்பான் அனுப்பப்பட்டார்.

டோக்கியோவில் அபானி, லாலா லஜ்பத் ராய், டாக்டர் சன் யாட் சென், ராஷ் பிஹாரி போஸ் முதலான புரட்சியாளர்களை சந்தித்தார்.

1916ல் இந்தியாவில் அப்போது எழுச்சி பெற்ற கிளர்ச்சிக்கு உதவிட அபானி இந்தியா திரும்ப எத்தனித்தார்.  ஆனால் பினாங்கில் கைது செய்யப்பட்டு சிங்கப்பூரில் இருந்த கேனிங் கோட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்து தப்புவது சாத்தியமற்ற ஒன்றாகக் கருதப்பட்டது; ஆனால் அபானி சாத்தியமற்றதைச் சாத்தியமாக்கினார்!

கேனிங் கோட்டையில் இருந்து (Fort Canning) இருந்து தப்புதல்

சில மாதங்களைக் கழித்த பிறகு அபானி (சிங்கப்பூரின் தென்கிழக்கு பகுதியில் 48 மீட்டர் (157 அடி) உயரமுள்ள ஒரு முக்கிய மலையான) கேனிங் கோட்டையில் இருந்து தப்பும் சாகசத்தைத் திட்டமிட்டார். ஒவ்வொரு நாளும் சிறைவாசிகள், பிரிட்டிஷ் காவலர்கள் சுற்றி நிற்க, கடலில் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். ஒரு கடல் பாதை இந்தியப் பெருங்கடலை இணைத்தது. அதில் பெரிய கப்பல்கள் வர முடியாது ஆனால் படகுகள் வர முடியும்.

ஒரு நாள் மாலை அபானி நீருக்கடியில் நீந்தி தப்பினார்; அவர் ஒரு ஜப்பானிய மீனவரின் படகைப் பிடித்துக் கொள்ள சத்தம் இல்லாமல் கடல் வெளிக்கு இழுத்துச் செல்லப்பட்டார். அவரது ஜெர்மன் நண்பர்கள் சப்தமாகப் பாடி காவலர்களின் கவனத்தைத் திசை திருப்பினர். கடல் திமிங்கலங்களால் அவர் உண்ணப்பட்டிருக்கலாம் அல்லது அப்படியே கடலில் மூழ்கி இருக்கலாம் என்று பிரிட்டிஷார்,முடிவு கட்டினர்! அவர் கைதி என்பதால் அவரை நீண்ட நேரம் வைத்திருக்க அஞ்சிய படகுக்காரர் அவரை மனிதர்களற்ற ஒரு தீவில் இறக்கி விட்டார். அபானி அங்கேயே ஒரு வார காலம் நிலக்கடலையை (குரங்குகள் உண்ணும் கொட்டை) உண்டும்  ஊற்று நீரைப் பருகியும் உயிர் தப்பினார்.

பிறகு வந்த ஓர் இந்தோனேசியப் படகுக்காரர் தந்த உணவுதான் ஒரு வாரத்திற்குப் பிறகு அவருக்குக் கிடைத்த ஒரு நாள் முழுமையான உணவு; சில உடைகளையும் தந்தவர், அவரைச் சுமத்ராவுக்கு அழைத்துச் சென்றார். அங்கே ஒரு வயதான டச்சு தோட்டக்காரரின் பங்களாவில் ‘ஷாகீர்’ என்ற பெயரோடு கூலி வேலையில் சேர்ந்தார். தோட்டத் தொழிலாளிகள் மத்தியில் பணியாற்றிய சில இந்தோனேசிய இடதுசாரிகளுடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது.

அப்போது ஷாங்காயில் இருந்த புகழ்பெற்ற தேசபக்தரும் சமூக இயலாளருமான பேராசிரியர் பினாய் சர்க்கார் கூறுகிறார்: “ஷாங்காயில் நாங்கள் அபானியின் நாடக பாணியிலான பெரும் தப்பித்தல் நிகழ்வை அறிந்தோம். இந்தத் தப்பித்தல் நிகழ்வைத் தினசரிகளும்கூட தலைப்புச் செய்தியாகப் பிரசுரித்தன.” அந்தத் தப்பித்தல் நிகழ்வின் முழுமையான விவரங்கள் இன்னும் தெரியவில்லை.

 முதல் உலகப் போருக்குப் பிறகு ‘ஷாகீர்’ போலி பாஸ்போர்ட் மூலம் (நெதர்லாந்தின் பெரிய துறைமுக நகரான) ராட்டர்டாம் சென்று டச்சு கம்யூனிஸ்டுகளைத் தொடர்பு கொண்டார். பிறகு பெர்லினுக்குச் சென்ற அவர் எம் என் ராய், வீரேந்திரநாத்  சட்டோபாத்தியாயா மற்றும் BN தத்தாவைச் சந்தித்தார். டச்சு கம்யூனிஸ்ட் தலைவர் ரட்கர்ஸ் (Rutgers) அபானிக்கு மாஸ்கோ செல்ல நற்சான்றுகள் கடிதம் தந்தார்.

பெர்லின் நகரில் வாழ்க்கை பல நேரங்களில் கொடுமையாக இருந்தது, உயிர் வாழ அபானி அங்கு ‘மசாஜ்’ (‘masseur’) செய்யும் பணியைக்கூட  மேற்கொண்டார். 

மாஸ்கோ செல்லும் வழியில் அபானி பெர்லினுக்கு வந்தபோது இந்தியப் புரட்சியாளர்களுக்கு அது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. ராய் அவரது மனைவி ஏவ்லின் மற்றும் அபானி, 1920 ஜூன் 24ல் “தி இந்தியன் கம்யூனிஸ்ட் அறிக்கை” கொள்கை அறிக்கை வரைவை தி கிளாஸ்கோ சோசலிஸ்ட் (the Glasgow Socialist) பிரசுரித்தது. [கிளாஸ்கோ சோசலிசம் என்பது ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரின் வலுவான தொழிலாள வர்க்க வரலாறு, தீவிரத் தொழிற்சங்கப் போராட்டங்கள் மற்றும் ஜான் மக்லீன் போன்ற புரட்சியாளர்களைக் கொண்ட சோசலிச இயக்கத்தைக் குறிக்கிறது.] அந்த அறிக்கை, இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியைத் தூக்கி எறிய இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட்கள், எல்லாத் தேசியப் போராட்டங்களையும் ஆதரிக்க வேண்டும் என  அறைகூவி அழைத்தது. 

இந்த அறிக்கை எம் என் ராயின் குழுவாதப் போக்கு (செக்டரியன்) பாதைக்கு ஒப்புதல் அளிக்கவில்லை.

2வது காமிண்டர்ன் மாநாட்டில் கலந்து கொள்ளல், 1920 

இரண்டாவது கம்யூனிஸ்ட் அகிலம் எனப்படும் இந்த மாநாட்டில் அபானி முகர்ஜி ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து மாற்றுப் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். தேசிய மற்றும் காலனியப் பிரச்சனையை விவாதிப்பதற்காக இந்த மாநாடு மாஸ்கோபில் 1920 ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 7 வரை நடைபெற்றது. லெனின் முக்கிய அறிக்கையை முன் வைத்தார். லெனின், துணைக் கோட்பாட்டு அறிக்கையை அளிக்க எம்என் ராயைக் கேட்டுக் கொண்டார்; ஆனால் எம் என் ராய் முன்வைத்த அறிக்கை அவரது அப்பட்டமான குழுவாதப் போக்கு (செக்டேரியன்) நிலைப்பாடுகளுடன் இருந்ததால் அவ்வறிக்கை குறித்து லெனின் பெரிதும் ஏமாற்றம் அடைந்தார். அந்த நிலைப்பாடுகளை லெனினும் காமின்டர்ன் மாநாடும் முழுமையாக நிராகரித்தது. 

அபானியின் நிலைப்பாடு அப்போது என்னவாக இருந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை; ஆனால் பின்னர் நிகழ்வுகள் அவர் லெனினை ஆதரித்தார் எனக் காட்டின. ராயும் அபானியும் தனிப்பட்ட நல்லதோர் நட்பில் இல்லை. அபானியால் எழுதப்பட்ட வாழ்க்கை வரலாறு நூல் மூலம் ராயின் வாழ்க்கை தவறாகச் சித்தரிக்கப்பட்டது என்பது பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்க காமின்டர்ன் அமைப்பு, ஒரு குழுவை கூட நியமித்தது. அந்த வாழ்க்கை வரலாறு நூல் அச்சு அசலாக அப்படியே அபானியின் கையெழுத்தில் ராய் அவரே எழுதியது என்பது கண்டறியப்பட்டது.!!! மாபெரும் முக்கிய அறிவாளிகளில் ஒருவரை அபானி சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றார், அது இரண்டாவது அகிலம் மாநாட்டில் மாமேதை லெனின். அபானி தனிப்பட்ட முறையிலும் கருத்தியல் ரீதியிலும் அவரால் ஆழமாக ஈர்க்கப்பட்டார்.

 இந்தியாவில் புரட்சிகர இயக்கம், தேசிய விடுதலை இயக்கத்துடன் எந்த ஒன்றையும் பொதுவாகக் கொள்ளவில்லை என்றார் ராய். இந்தக் கருத்தை லெனின் மிகக் கடுமையாகத் தாக்கினார்: லெனின் கூறினார், “ரஷ்யாவில் ஜார் இசத்திற்கு எதிராகத் தாராளவாதிகள் செயல்பட்டபோது, நாங்கள் தாராளவாதிகளின் விடுதலை இயக்கத்தை ஆதரித்தோம். இந்தியக் கம்யூனிஸ்டுகள் பூர்ஷ்வா ஜனநாயக இயக்கத்தை –அதனுடன் இணைந்து விடாமல்– கண்டிப்பாக ஆதரிக்க வேண்டும்”

அபானி 1921ல் மலபார் எழுச்சி குறித்த தனது கட்டுரையை லெனினுக்கு அனுப்பினார். அந்தக் கட்டுரையைப் புக்காரினுக்கு அனுப்பி அதை படித்துப் பார்க்கக் கூறிய லெனின், “இந்தியத் தோழர்களிடமிருந்து நாம் மேலும் பிரசுரங்களை வெளியிட வேண்டும்” என்று குறிப்பிட்டார் (ஆதாரம் லெனின் தேர்வு நூல்கள் 45, பக்கம் 376). அபானியின் மனைவி ரோசா ஃபிட்டிங்ஆப், (Rosa Fitingof) சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPSU) உறுப்பினராக 1918-லிருந்து இருந்தார் [அப்போது CPSUக்கு ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி (போல்ஷ்விக்) என்று பெயர்]; மற்றும் லெனினின் செயலாளர் லிடியா ஃபோட்டிவா-வின் (Lydia Fotieva) உதவியாளராக இருந்தார் மற்றும் அடிக்கடி லெனினைச் சந்திக்கும் வாய்ப்பையும் பெற்றார்

1920 தாஷ்கண்ட் கூட்டம் 

அபானி உட்பட 7 புரட்சியாளர்களின் கூட்டம் ’இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி’யை அமைக்க 1920 அக்டோபர் 17ல்  தாஷ்கண்ட் நகரில் நடைபெற்றது. ராய், முகமது ஷஃபிக், ரோசா ஃபிட்டிங்ஆப் முதலானவர்களும் அதில்  இடம்பெற்றனர். ஒரு வசதியான தேதியில் மாஸ்கோவில் அனைத்துக் கம்யூனிஸ்டுகளின் மாநாட்டை (காங்கிரஸ்) நடத்துவது என அவர்கள் முடிவு செய்தனர். இக்கட்சியின் செயலாளராக அபானி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது ஃபிட்டிங்ஆப் உரிமை கோரல்; ஆனால் அந்தக் கூற்று சர்ச்சைக்குரியது. 

மேலும் அந்தக் ‘கம்யூனிஸ்ட் கட்சி’ ஒருபோதும் செயல்பாட்டிற்கு வரவில்லை மற்றும் விரைவிலேயே மறைந்தும் போனது. அபானியும் மாஸ்கோவில் இருந்த இந்தியன் இராணுவப் பள்ளியில் சேர்ந்தார்.

இந்தியாவுக்குத் திரும்பல் 

1922 டிசம்பரில் அபானி கடல் பயணமாக (ஜெர்மனியின் இரண்டாவது பெரிய துறைமுக நகரமான) ஹம்பர்கில் இருந்து வார்டன்ஃபெல்ஸ் என்ற ஜெர்மன் நீராவி கப்பல் மூலம் இந்தியா புறப்பட்டார். 25ம் தேதி மெட்ராஸ் வந்து சேர்ந்த அவர், முன்பே தகவல் தெரிவித்தபடி வேலாயுதத்தை இருள் மறைவில் சந்தித்தார்; பின்பு 27ம் தேதி அதே படகில் ரங்கூன் வழியாகக் கல்கத்தாவுக்குப் புறப்பட்டார். வேலாயுதம் மற்றும் சிங்காரவேலரைச் சந்திக்க அவர் மீண்டும் திரும்ப மெட்ராஸ் வந்தார்; தொழிலாளர் விவசாயிகள் கட்சிக்கும் (லேபர் கிசான் பார்ட்டி) அக்கட்சியின் அறிக்கை தயாரிப்பிலும் உதவினார்.

‘இந்தியன் விடுதலைக் கட்சி’யை அமைத்த வீரேந்திரநாத், பர்கத்துல்லா மற்றும் பி என் தத்தா முதலிய இரண்டாவது புரட்சியாளர்கள் குழுவின் பிரதிநிதியாகவே நடைமுறையில் அபானி செயல்பட்டார். மூன்றாவது கம்யூனிஸ்ட் அகிலம் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அவர் பணிக்கப்பட்டார். 

டாக்காவில்  பாதுகாப்பாகத் தங்குதல் 

அபானி தங்குவதற்காகவும் மேற்கொண்டு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கவும், அனுசீலன் மற்றும் ஜுகாந்தர் (அல்லது யுகாந்தர்) குழுக்களின் தலைவர்களைச் சந்தித்தார். சுபாஷ் சந்திர போஸும்கூட அவரைப் பற்றி தெரிந்து கொண்டு அவருக்குப் பாதுகாப்பான தங்கும் இடத்தை வேண்டினார். அனுசீலன் அவருக்கு டாக்காவில் தங்க ஓர் இடத்தை ஏற்பாடு செய்தனர். (திரிபுராவில் வழக்கறிஞரான) திரிபூர் சந்திரா சென் கூறுகிறார், “1923ல் நான் அவரது காவல்காரராகவும், சமையல்காரராகவும் உதவியாளராகவும் இருந்தேன்.” ஆனால் அபானியின் கடிதங்கள் –அபானிக்குத் தெரியாமலேயே– அனுசீலன் தலைவர் பிரதுல் கங்குலி மூலம் செல்ல வேண்டியிருந்தது. அவ்வாறு செயல்பட திரிபூர் அறிவுறுத்தப்பட்டிருந்தார்.

அபானியின் தலைக்கு விலை வைக்கப்பட்டு இருந்ததால் அவர் எங்கேயும் தங்குவது ஆபத்தாக இருந்தது எனப் பிரபல அறிஞர் டாக்டர் சுனிதி குமார் சாட்டர்ஜி கூறியுள்ளார். அபானி, சுபாஷ் போஸின் நெருங்கிய நண்பரான திலீப் ராய், பேராசிரியர் சத்யன் போஸ் மற்றும் வேறு சிலரையும் கூட சந்தித்தார்.

ஏற்கனவே தீர்மானகரமான கம்யூனிஸ்ட்டான அபானி, அனுசீலன் ஜுகாந்தர் மற்றும் பிற இயக்கங்களில் இருந்து கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குச் செயல்பாட்டாளர்களைக் கொண்டுவர கருதினார். ஆனால் இந்த அமைப்புகள் அபானி மற்றும் நளினி குப்தாவைத் தங்களின் சொந்த நோக்கங்களுக்குப் பயன்படுத்த விரும்பின. அனுசீலனால் அவர்கள் இருவருக்கும் டாக்காவில் அதே கட்டிடத்தில் தங்க இடமளிக்கப்பட்டது. அந்த இடத்திலேயே சதீஷ் பிரகாசியும் கூட தங்கினார்.

ஆபத்தை உணர்ந்த அபானி டாக்காவில் தங்கி இருந்த இடத்தில் இருந்து அவசரமாகப் புறப்பட்டு கல்கத்தா சென்றார், யுகாந்தர் தலைவர்களைத் தேடினார். ஆனால் யுகாந்தர் அமைப்பு அபானியை நடைமுறையில் வீட்டுக் கைதியாக வைத்திருந்து அவரை ஆயுதங்கள்  சேகரிக்கப் பயன்படுத்தியது. அங்கிருந்து தப்ப யுகாந்தர் அமைப்பின் ஓர் இளம் கலகக்காரர் சந்தோஷ் மித்ரா தான் அவருக்கு உதவினார்.

  1923 மே தினத்தில் ஓர் அறிக்கை (மேனிபெஸ்டோ) வெளியிடப்பட்டது; அது, மணிலால், எம் டாக்டர், அபானி முகர்ஜி மற்றும் சிங்காரவேலர் சேர்ந்து கூட்டாக எழுதியது. காமின்டர்ன் தலைவர் ஜினோ வீவ் (Zinoviev) அவர்களுக்கு அபானி இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பதன் கஷ்டங்கள் குறித்து எழுதினார்.

என்றென்றைக்குமாக இந்தியாவை விட்டு புறப்படுதல்

1924 ஏப்ரலில் அபானி, ஜெர்மனியர்களால் கைப்பற்றப்பட்ட அம்போய்ஸ் என்ற பெயரிலான பிரெஞ்சு கப்பலில் (பிரான்ஸ் தேசத்தின் துறைமுக நகரான) மர்சேய் வழியாகப் பெர்லின் சென்றவர், அதன் பிறகு ஒருபோதும் இந்தியா திரும்பவில்லை. புகழ்பெற்ற கலைஞரான அதுல் போஸ், மர்சேய் பயணம் குறித்து விரிவான தகவல்களைத் தந்துள்ளார்.

இங்கிலாந்தில் 1924 தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது, பொதுவான மன்னிப்பு அளிக்கப்படும் என்ற நம்பிக்கை  எழுந்தது. அபானி லேபர் கட்சி பிரதமருக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினார்; அதில் அவரது சமீபத்திய நடவடிக்கைகள் குறித்த சிறு குறிப்பை எழுதி, அகிம்சை மற்றும் பாராளுமன்ற நடவடிக்கை கோட்பாடுடன்  தான் அமைக்கும் ஹிந்துஸ்தான் தொழிலாளர் மற்றும் விவசாயிகள் கட்சியைப் பற்றி விளக்கினார்.

ஆனால் பிரிட்டிஷ் அரசு அபானி முகர்ஜி அல்லது நாடு கடத்தப்பட்ட வேறு பிற புரட்சியாளர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்க மறுத்துவிட்டது.  

மீண்டும் சோவியத் யூனியன் திரும்பல் 

1925ல் அபானி முகர்ஜி சோவியத் யூனியனுக்குத் திரும்பச் சென்று சோவியத் பிரஜை ஆகி, வரலாறு மற்றும் பொருளாதாரம் படிக்க நேரத்தைச் செலவிட்டார். சௌமிந்திரநாத் தாகூர் மற்றும் சௌகத் உஸ்மானி அவரது அறிவாற்றல் கண்டு  மிகப் பெரியதும் ஈர்க்கப்பட்டனர். 

அபானி (தென்கிழக்கு உஸ்பெஸ்கிஸ்தான் பெரிய நகரான) சமர்க்கண்டின் சிறப்புத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்; மற்றும் (கிர்கிஸ்தான் எனப்படும் சோவியத் யூனியனுடன் இணைந்து இருந்தபோது) கிர்கிசியாவின் பழங்குடியினர் புனர்வாழ்வுக்கான கமிஷனில் இடம்பெற்றார். 1928ல் சிவப்புப் பேராசிரியர்கள் கல்வி நிறுவனத்திலிருந்து (ரெட் ப்ரொபசர்ஸ் இன்ஸ்டிட்யூட்) அவர் பட்டம் பெற்றார். இந்திய வரலாறு மற்றும் விவசாயப் பிரச்சனைகள் குறித்து அபானி சிறப்பு நிபுணத்துவம் பெற்றார். 1930ல் இருந்து 1932 வரை அவர் லெனின்கிராட் ஓரியண்டல் நிறுவனத்தில் சீனியர் சிறப்பாசிரியராகப் பணியாற்றினார். மேலும் “கீழை நாடுகளின் பண்பாட்டு ஆய்வாளர்களின் அனைத்து யூனியன் கூட்டமைப்பின் தலைவர்” (president of All Union Association of Orientologists) என்றும் அவர் வர்ணிக்கப்பட்டார்.

1931ல் இராமானந்த் சட்டர்ஜியால் தொகுத்துப் பதிப்பிக்கப்பட்ட ‘பிரபாஸி’ (நாடு கடத்தப்பட்டவர்கள்/ புலம்பெயர்ந்தவர்கள்) என்ற இதழில் அபானி குறித்த ஓர் அறிக்கை, “ரஷ்யாவில் ஒரு பெங்காலியின் சாதனை” என்ற தலைப்பில் வெளியானது. அதில் அவர், லெனின்கிராடின் ‘கீழை நாடுகள் இயல் நிறுவன’த்தின் பேராசிரியர் என்றும், 1930ல் அறிவியல் அகாடமியின் கல்விச் செயலாளர் மற்றும் சர்வதேச வேளாண் அறிவியல் நிறுவனத்தின் உறுப்பினர் என்றும் வர்ணிக்கப்பட்டார்.

(கம்யூனிஸ்ட் தலைவரும் 1919 முதல் 1946 வரை) சோவியத் அதிபருமான மைக்கேல் இவனோவிச் கலினின் அவரை நன்கு அறிவார்.

1932 டிசம்பரில் லெனின் கிராண்ட் கீழை நாடுகள் நிறுவனத்தின் இயக்குநர் ஓல்டன்பர்க் (Oldenburg) இந்தியா பற்றிய அபானியின் அறிவு அபாரமானது என வர்ணித்தார். ரஷ்ய ஆவணக். காப்பகங்களில் அபானியின் பெயர், ‘அபானி திருலோகவிச் முகர்ஜி’என்று விவரிக்கப்பட்டது.

அபானியின் எழுத்துப் பணிகள்

அபானி முகர்ஜி, வேளாண் இந்தியா, இங்கிலாந்தும் இந்தியாவும், மலபார் எழுச்சி, விவசாய நிலை மற்றும் இந்தியாவில் விவசாயிகள் இயக்கம் உள்ளிட்ட எண்ணற்ற நூல்கள் மற்றும் கட்டுரைகளை எழுதியுள்ளார். 

ஸ்டாலினிய ஒடுக்கு முறையில் களபலி 

1933 நவம்பர் 4 தேதியிட்ட ஒரு சுற்றறிக்கை, அபானி கல்வி நிறுவனத்தின் சேவையில் இனிமேல் இல்லை மற்றும் அவர் “மிக நீண்ட சுற்றுப்பயணத்தில் தொலைவில் உள்ளார்” என்று தெரிவித்தது. அது உண்மையில் முடிவற்ற பயணமானது!

தொடக்கத்தில் அவரது விதி மர்மப் புதிரால் சூழப்பட்டது, ஆனால் வெகு காலம் பின்புதான், 1930களின் ஸ்டாலினிய இழிவான களையெடுப்பு/ தூய்மைப்படுத்தல் நடவடிக்கைகளில் அவர் கைது செய்யப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார் எனக் கண்டறியப்பட்டது. [ஜோசப் ஸ்டாலின் தனக்கு எதிரான கருத்து உடையவர்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட அடக்கு முறைகளில் மாபெரும் தூய்மைப்படுத்தல், நாடு கடத்தல், தேசத் துரோகிகள் என முத்திரை குத்தி பல லட்சம் மக்களைக் கொன்றொழித்தது, சைபீரிய ‘குலாக்’ தொழிலாளர் முகாம்களுக்கு அனுப்பப்பட்டது முதலியன அடங்கும்] 

1937ல் அவர் வீரேந்திரநாத் சட்டோபாத்தியா உடன் சுட்டுக் கொல்லப்பட்டார் –நம்பிக்கை அளிக்கும் ஒரு கம்யூனிஸ்ட் அறிவாளர் மற்றும் புரட்சிகரப் பிரச்சனைகளுக்கு ஆபத்தும் சாகசங்களும் நிறைந்த வாழ்வில் ஓய்வின்றி தீர்வு தேடியதுடன், ஒரு கல்வியாளருமான ஒருவருக்கு நேர்ந்த துயரகரமான முடிவு அது!

1957ல் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அளித்த தகவல்படி அபானி முகர்ஜி 1937 அக்டோபர் 28ல் மரணம் அடைந்தார்.

அடுத்து வந்த சோவியத் தலைமையால் சில காலத்திற்குப் பிறகு அபானி முகர்ஜி, அவரது மரணத்திற்குப் பிந்தைய வகையில், வரலாற்றில் உரிய மறுவாழ்வு இடம் அளிக்கப்பட்டார்.

புரட்சியாளர் அபானி புகழ் ஓங்குக!

– நன்றி : நியூ ஏஜ் (2024 ஜூன் 15– 21)

தமிழில் : நீலகண்டன்

 என் எஃப் டி இ, கடலூர்

 

  

 

 

 

 

 

 

   

 

 

 

         

 

No comments:

Post a Comment