Friday 28 January 2022

அதிபணக்காரர்கள் மீது சமத்துவமின்மை வரி விதித்திடுக!

                                                                     

                   


 பட்ஜெட்டில் ஏழைகளுக்குக்

        குறைந்தபட்ச வருமானம் கிடைக்கச் செய் 

           

             அதிபணக்காரர்கள் மீது  சமத்துவமின்மை வரி விதித்திடுக!

                                                                               --நித்தியா சக்ரவர்த்தி

          தேவோஸில் உலகப் பொருளாதார ஃபோரத்தின் மெய்நிகர் கூட்டம் நடைபெறும் அதே நேரம் ஆக்ஸ்பாம் சர்வதேச ஆய்வு அமைப்பின் சமத்துவமின்மை குறித்த அறிக்கை வெளியாகி ஓர் உண்மையை அம்பலப்படுத்திவிட்டது. அது, இந்தியா உட்பட உலகத்தில் கரோனா பெருந்தொற்றின் இரண்டாண்டு காலம் எவ்வாறெல்லாம் சமத்துவமின்மை என்னும் ஏழை –பணக்காரர்கள் இடையே உள்ள இடைவெளியை மேலும் அகலப்படுத்தியதை மிகத் தெளிவாக வெளியிட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில், தற்போதைய அரசிடம் ஏழைகளைப் பாதுகாக்கும் சமூகப் பாதுகாப்பு வழங்கு முறைக்குப் பற்றாக்குறை இருப்பதால், நிலைமை இருள் சூழ்ந்து ஏழைகளின் வாழ்வாதாரத்தை மேலும் மோசமாக்கி உள்ளது.

             தற்போது நிதியமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலக விவாதங்களில் 2022—23ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் வடிவமைப்பது எப்படியெனத் தொழிலதிபர்கள், பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்ட சமூகத்தின் பல்வேறு பிரிவுகளின் யோசனைகள் பரிசீலிக்கப்படுகின்றன. பிப்ரவரி 1ல் பட்ஜெட் தாக்கலான பிறகு வழக்கம்போல பிரதமரும் நிதியமைச்சரும் புதிய பட்ஜெட்டில் முன்மொழியப்பட்ட திட்டங்கள் இந்தியாவைப் புதிய உச்சத்திற்கு, கவண்கல் எறிவதுபோல  நாட்டை வளர்ச்சி பெற்ற நாடுகளின் பெரும் அணிவகுப்பில் கொண்டுபோய்விடும் என மார்தட்டுவார்கள் என்பதையும் எதிர்பார்க்கலாம்.

ஏழாண்டுகள் ஆட்சியில் ஏழைகளின் நிலை

            கடந்த ஏழாண்டு கால நரேந்திர மோடி தலைமையிலான என்டிஏ அரசு பின்பற்றிய வளர்ச்சிப் பாதை (?) சமத்துவமின்மை இடைவெளியை மட்டுமே அகலப்படுத்தியது; ஒவ்வொரு பொருளாதார நெருக்கடியும் பணக்காரர்களுக்கு அனுகூலமானது; ஏழைகள் மற்றும் இந்தியச் சமூகத்தின் குறைந்த வருமானப் பிரிவினரின் வாழ்வை விலைபேசி பணக்காரர்கள் லாபத்தைக் குவிக்கின்றனர். கடந்த இரண்டாண்டு பெருந்தொற்று காலத்தில் இந்நிகழ்முறைப் போக்கு மேலும் தீவிரமடைந்தபோதெல்லாம் அல்லற்படுபவர்களுக்கு அரசு நிவாரண உதவி சலுகைகளைத் தொடர்ந்து வழங்குவதாக அறிவிப்புகளை மட்டும் வெளியிடத் தவறவில்லை.

            தொற்றின் முதல் அலையின்போது 2020 மார்ச் 24ல் திடீரென்று நாடு முழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அன்றிலிருந்து தினக் கூலிகள், சிறு குறு நடுத்தர நிறுவனங்களின் ஊழியர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் தனியார் சிறுநிறுவனங்களில் பணியாற்றும் லட்சக் கணக்கான ஊழியர்கள் வேலை இழந்து, கதவடைப்புகளைச் சந்தித்து, குறைக்கப்பட்ட வருமானத்தில் மிகக் கடுமையான வறுமையில் உழன்றனர். இதே உழைக்கும் மக்கள்தான் இந்தியா மந்தநிலைப் பொருளாதாரத் பிடியில் பாதிக்கப்பட்டிருந்த 2017முதல் துன்ப துயரத்தில் வாழ்ந்து வந்தவர்கள். அதே காலகட்டத்தில் இந்தியப் பணக்காரர்களின் நிலை என்ன? நாட்டின் பொருளாதாரம் முழுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தபோது அப்பணக்காரர்கள் சாதனை அளவாகத் தங்கள் செல்வத்தை அதிகரித்து வந்தார்கள்.

            இந்தியச் சமத்துவமின்மை மீதான ஆக்ஸ்பாம் ஆண்டறிக்கை, மோடி அரசின் ஆட்சி முறை ஒரு சிலர் செல்வம் குவிக்கப் பெரும் ஆதரவு தந்ததையும், பிற மக்கட் பகுதியினருக்குப் பாதுகாப்பு வழங்குவதில் தோல்வியடைந்ததையும் மையப்படுத்தி சுட்டிக்காட்டியுள்ளது. அவ்வறிக்கையில் “சமத்துவமின்மை கொல்கிறது” என்ற தலைப்பில் கோவிட்19 பெருந்தொற்று ஏழைகள் மீதும் பணக்காரர்கள் மீதும் எத்தகையப் பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை வலியுறுத்தி எடுத்துக் காட்டியுள்ளது.

அதிபணக்காரர்கள் மீது ஒரு சத வீத வரி விதித்திடுக

            அந்த அதிபணக்காரக் குடும்பங்களின் செல்வத்தின் மீது வெறும் ஒரு சதவீதம் வரி விதிப்பதன் மூலம் 130 கோடி மக்கள் தொகை உடைய இந்திய மக்கள் அனைவருக்கும் ரூ50கோடி மதிப்பிலான (6.8 பில்லியன் டாலர்) தடுப்பூசி திட்டத்தை நிறைவேற்றிவிடலாம் என அந்த அறிக்கை கூறுகிறது. “அதற்கு மாறாக இந்தியாவில் வரிவிதிப்பின் சுமை, இந்திய நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் ஏழைகளின் தோள்களின் மீது தற்போது சுமத்தப்பட்டுள்ளது. ‘கோவிட் 19 தொற்றிலிருந்து மீண்டு வருவதற்காக அதிபணக்காரர்கள் மீது ஒரே ஒரு முறை வெறும் ஒரு சதவீதம் வரி விதியுங்கள்’ என்ற யோசனையை இந்திய அரசு பரிசீலிக்கவே இல்லை. அதனால், மீதமுள்ள ஒரே வாய்ப்பு மறைமுக வரிவருமானம் மூலம் நிதிதிரட்டுவதை அரசு பயன்படுத்துகிறது –அது மீண்டும் ஏழைகளையே தண்டிக்கிறது” என ஆக்ஸ்பாம் அறிக்கை கூறுகிறது.

            கோவிட்19க்கு முன் 2019 செப்டம்பரில் மோடி அரசு உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்குக் 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாகக் கார்ப்பரேட் வரி விகிதத்தைக் குறைத்தது; புதிய உற்பத்தி நிறுவனங்கள், வேறு எந்த விலக்குச் சலுகைகள் கோராத பட்சத்தில், அவைகளுக்கு 25லிருந்து 15 சதவீதமாகவும் வரியைக் குறைத்தது. இம்முடிவை அமல்படுத்த அரசுக்கு வெறும் 36மணி நேரம் போதுமானதாக இருந்தது; முடிவெடுத்த பிறகு அமைச்சரவையின் ஒப்புதலைப் பெறலாம் என்று பிரதமருக்குச் சிறப்பு அதிகாரம் வழங்கும் விதி 12 அதற்காகப் பயன்படுத்தப்பட்டது. நாடுகளின் கடன்பெறும் அந்தஸ்து தரத்தைப் பட்டியலிடும் எஸ் அண்ட் பி வோர்ல்டு என்னும் அமெரிக்காவிலிருந்து செயல்படும் முகமை, அந்த வரிக் குறைப்பு நடவடிக்கை “கடன்பெறும் தரத்தில் எதிர்மறை அந்தஸ்து” (கிரிடிட் நெகடிவ்) என்று வர்ணித்தது. இந்தக் கார்ப்பரேட் வரி குறைப்பு மொத்தமாக 1.5 லட்சம் கோடி நட்டத்தை ஏற்படுத்தி இந்திய நிதிப் பற்றாக்குறையையும் அதிகரித்துவிட்டது.

ஏழைகளுக்கு மாத வருமானம் வழங்கும் திட்டம் (யுபிஐ)

            அவ்வறிக்கையில் திகைக்க வைக்கும் செய்தி, 142 இந்திய பில்லியனர்கள் (100 கோடிக்கும் மேல் சொத்துடைய அதிகோடீஸ்வரர்கள்) ஒட்டு மொத்தமாக 719 பில்லியன் (53லட்சம் கோடிக்கும் மேல்) சொத்துகளை வைத்துள்ளனர். அதில் முதலில் உள்ள 98பேர் சொத்து மட்டும் இந்தியாவின் அடித்தட்டில் மிக ஏழ்மையில் உள்ள 55.5 கோடி ஏழைகளின் மொத்த செல்வத்தில் 40 சதவீதம் (657பில்லியன் டாலர் அல்லது சுமார் 49 லட்சம் கோடி ரூபாய்.) இவர்கள் மீது 4 லிருந்து 5 சதவீத வரி விதித்தாலே போதும் அனைவருக்குமான அடிப்படை வருமானம் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்திவிட முடியும். அந்த (யுனிவர்சல் பேசிக் இன்கம் ஸ்கீம்) திட்டத்தின்படி நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கு மாதத்திற்கு  நாலாயிரம் முதல் ஐந்தாயிரம் வரை, குறிப்பாக வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு அளிக்க முடியும்.

            நாடு சந்திக்கும் அசாதாரண சூழ்நிலை, நமது சமூகத்தின் எளிதில் பாதிப்படையக் கூடிய நலிந்த பிரிவு மக்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கைகளைக் கோருகிறது. ஏற்கனவே ஏழைகளும் திரட்டப்படாத தொழிலாளர்களும் 2020ன் முதல் அலையில் மிக மோசமாகத் துன்பப்பட்டார்கள். அதே நிலை தொடர 2021ன் இரண்டாம் அலையிலும் இப்போது தொற்றின் மூன்றாம் அலையின் பிடியிலும் அவர்கள் சிக்கியுள்ளனர். இதனால் நான்கு கோடி மக்களுக்கும் மேல் ஏழைகள் எண்ணிக்கையில் மீண்டும் சேர்ந்து விட்டார்கள் என்று இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் (CMIE) ஏற்கனவே  தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

பொருளாதார நிபுணர்களின் அறிவுரை

            எனவே இந்த அசாதாரண சூழ்நிலையில் மேற்கொள்ள வேண்டிய சிறந்த தேர்வு யாது? புகழ்பெற்ற வளர்ச்சிக்கான பொருளாதார நிபுணர்கள் குறைந்தபட்ட அடிப்படை வருமானம் வழங்கும் திட்டமே இந்தியச் சமூகத்தின் எளிய பிரிவினருக்குப் பொருத்தமாதெனத் தற்போது கூறி வருகிறார்கள். பெரும்பான்மை சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த இதுவே ஒரே வழி. அப்படி அவர்கள் கையில் குறைந்தபட்ட வருமானத்தை வழங்கினால் அடிப்படைத் தேவைகளை வாங்க அவ்வருமானத்தைப் பயன்படுத்துவார்கள் என்பதால் சந்தையில் பொருட்களுக்கான தேவை அதிகரிக்கும்; அந்தத் தேவையை நிறைவேற்ற உற்பத்தி கூடும், இது நாட்டின் பொருளாதாரத்தின் மீது நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும்.

யுபிஐ – அமெரிக்க அனுபவம்

            அமெரிக்கா பொருளாதாரத்தில் உச்சத்தில் இருக்கும் முதலாளித்துவ நாடு. அந்நாட்டில்கூட அதிபர் ஜோபிடன் அமெரிக்கச் சமூகத்தின் அடித்தட்டு பிரிவினர்களுக்குக் கூடுதல் வருவானத்தை உறுதிசெய்து வழங்கும் வகையில் மீட்புத் தொகுப்புத் திட்டங்களை வடிவமைத்தார். மேலும் தொழிலாளர் வர்க்கத்திற்கு ஆதரவான பிற நடவடிக்கைகளையும் முன் வைத்துள்ளார்.

சாரமற்ற ஜிகினா உரைகள்

            சமீபத்தில் ஜனவரி 17ல் உலகப் பொருளாதார ஃபோரம் உட்பட கூட்டங்களில் பிரதமர் ஆற்றும் உரைகள் எப்போதும்போல சாரத்திற்குப் பதில் பார்வைக்குப் பகட்டாகக் காட்சி தருகின்றன. அவருடைய புதிய காட்சி படப்பிடிப்பு மலர்ந்து வரும் துடிப்பான டிஜிடல் புதிய இந்தியா – அந்தப் புதிய இந்தியாவில் எளியவர்களுக்கு எந்த இடமுமில்லை. பொருளாதார டிஜிடல்மயமாக்கலும் பிற நடவடிக்கைகளும் வரவேற்கத் தக்கன, சந்தேகமில்லை; ஆனால் அந்தத் திட்டங்களில் எளிய பிரிவு மக்களும் பங்குபெறும் வகையில் உறுதியான நடவடிக்கைகள் வேண்டும்; மாறாக அவை சமூகத்திற்குள் டிஜிடல் பிளவை –டிஜிடல் வசதி வாய்ப்புகளைப் பெற்றவர்கள் மற்றும் பெறாதவர்கள் என்ற பிளவை – ஊக்கப்படுத்தி உண்டாக்கிவிடக் கூடாது.

            புகழ் வாய்ந்த பெரும் பொருளாதார நிபுணர்கள் அமர்தியா சென், அபிஜித் பானர்ஜி மற்றும் ரகுராம் ராஜன் போன்றவர்கள் கூறிய புதுமையான யோசனைகளை ஒன்றிய அரசு ஏற்க மறுத்தது; மாறாக, உறுதியற்று நிலைதடுமாறும் பெரும் வங்கிக் கடன்கள் அடிப்படையிலான மீட்புத் திட்டங்களைத் தேர்ந்தெடுத்தது: ஆனால் எதார்த்த உண்மை நிலைமையோ மங்கலாக இருள் சூழ, அந்நிலையில் எந்த ஒருவரும் --கையில் மூலதன நிதி வைத்திருப்பவரும்கூட-- (தொழிலில்) செலவு செய்யும் மனநிலையில் இல்லை. திகைக்க வைக்கும் பெரும் எண்ணிக்கையில் உள்ள ஏழைகளையும் வேலையற்றவர்களையும் செலவு செய்யத் தூண்ட முடியும், அப்படித்தான் நுகர்ச்சிக்கு ஊக்கம் அளிக்க முடியும். அது எப்படிச் சாத்தியம்? அதற்குத்தான் நேரடியாக நிதியளிப்பதன் வாயிலாக அனைவருக்கும் குறைந்தபட்ச அடிப்படை வருவாய் திட்டத்தைச் (UBI)செயல்படுத்துவதன் மூலம் சாத்தியம்.

அமெரிக்கத் தலைவர்கள் கூறியது

            அனைவருக்கும் வருவாய் கிடைக்கச் செய்யும் யுபிஐ பிரச்சனை மேற்கத்திய உலகில் பெரும் விவாதங்களை உண்டாக்கியது. குறிப்பாக அமெரிக்காவில் சமத்துவமின்மை பிரச்சனை பெருமளவில் கடந்த அதிபர் தேர்தலின்போது அங்கே விவாதத்தில் முன் வந்தது. அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் முன்னணித் தலைவர் பெர்னி சான்டர்ஸ் ஒரு சதவீதத்தினர் நலனுக்காக நடைபெறும் பொருளாதாரம்’ பற்றி விமர்சிக்கும்போது, ‘பொருளாதார முறைமையை 99 சதவீதத்தினர் சார்புடையதாக மாற்ற’ வாக்குறுதி அளித்தார். முகநூலின் இணை நிறுவனர்கள் மார்க் ஜுக்கர் பெர்க் மற்றும் கிரிஸ் ஹியூக்ஸ் போன்ற இளம்தலைமுறை (கேப்பிடலிஸ்ட்) முதலாளிகள்கூட யுபிஐ திட்டத்திற்கு ஆதரவாக வாதாடினர். ‘அத்திட்டம் ஒருங்கிணைந்த முழுமையான தீர்வு வழங்கும் திட்டமாக இல்லாமல் இருக்கலாம்; ஆனால் வருமானத்தில் கடுமையான சமத்துவமின்மையும் ஏழ்மையும் உள்ள நாடுகளில், ஏன் உலக அதிகாரச் சக்தியாகத் திகழும் அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளிலும், நிச்சயம் குறைந்தபட்சம் ஒரு சராசரி வலிநிவாரணியாக அத்திட்டம் இருக்கும்’ என வாதிட்டனர்.

            2019 மக்களவை தேர்தலின்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வறுமைநிலைக்குக் கீழுள்ள குடும்பங்களுக்கு மாதம் குறைந்தபட்சம் அடிப்படை வருமானம் ரூ6000/- அளிப்பதையும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சேர்த்திருந்தார். இப்போது அவர் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைகள் அனைவருக்கும் மாதம் ரூ7000/- வழங்கக் கோருகிறார். பொருளாதாரம் சீர்கெட்ட நிலையில் மக்கள் துன்பப்படும்போது, அவரது கோரிக்கையின் மாற்றம் நியாயமே. ஒருக்கால் அத்தொகையை மாதத்திற்கு ரூ5000 அல்லது ரூ4000 என்றுகூட குறைத்துக் கொள்ளலாம், ஏனெனில் இப்போதைய பிரதான தேவை மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவது மற்றும் நுகர்ச்சிக்கு வழிசெய்வதன் மூலம் இந்தியப் பொருளாதாரத்திற்கும் ஊக்கமளிப்பது.

பட்ஜெட் நிவாரணம் அளிக்குமா?

          

  இப்போதுகூட பிரதமர் நரேந்திர மோடி குறைந்தபட்ச அடிப்படை வருமானம் வழங்கும் திட்ட யோசனையைத் தீவிரமாக எடுத்துக் கொண்டு ஏழைகளுக்கு உதவி இந்தியப் பொருளாதாரத்தையும் அழிவிலிருந்து மீட்டுப் பாதுகாக்க முடியும். அதற்குத் தேவைப்படும் நிதியாதாரத்தைத் திரட்ட அதிபணக்காரர்கள் மீது வரி விதித்துச் சுலபமாகத் திட்டத்தைச் செயல்படுத்த முடியும். அதிபணக்காரர்கள் மீது கூடுதல் வரி விதிக்கும் கோரிக்கையை எதிர்த்தரப்பு அரசியல் கட்சிகள் வற்புறுத்தி தங்கள் குரலை ஒலிக்க வேண்டும். கரோனா பெருந்தொற்றால் பெரும் பாதிப்புக்கு உள்ளான கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைகளின் துன்ப துயரங்களைக் குறைப்பதற்கான ஒரே வழி இதுதான். அதே நேரம் நுகர்வால் சந்தையில் பொருட்களின் தேவை அதிகரித்து உற்பத்தியும் நம் பொருளாதாரமும் ஊக்கம் பெறும்.

            எதிர்வரும் மத்திய பட்ஜெட் நிபுணர்களின் அறிவுரையைப் பிரதிபலிக்குமா? மில்லியன்

டாலர் கேள்வி.

--நன்றி : நியூஏஜ் (ஜன.23 –29)

--தமிழில் : நீலகண்டன்,

                                                                                                                     என்எப்டிஇ, கடலூர்  



            

No comments:

Post a Comment