Sunday 16 January 2022

திருவள்ளுவர் பற்றி திரு கோபால கிருஷ்ண காந்தி கட்டுரை -- தமிழாக்கம்


ஆடை வடிவம், வண்ணம், காலத்திற்கும் 
கட்டுப்படாதவர் திருவள்ளுவர்

--கோபால கிருஷ்ண காந்தி

(மேனாள் அரசு நிர்வாகி, தூதுவர் மற்றும் மாநில ஆளுநர்)

          திருவள்ளுவர் யாருக்கும் சொந்தமில்லை.

            அவரது பாரம்பரியத்தினர் என்று எவரும், “வள்ளுவர் எங்களுக்குச் சொந்தம்” என்று சொல்வதற்கு அவர் வாழ்ந்த பாதையில் சுவடு எதையும் விட்டுச் செல்லவில்லை; அல்லது எந்த எதிர்அணி சொந்தங்களும், “நாங்கள், நாங்கள்தான் அவரது இரத்த உறவு” என்று கூச்சலிடவும் முடியாது. எந்தக் குடியும், சாதியினரும் அவரை உரிமை கோரிவிட முடியாது. அது எப்படி முடியும்? யாரறிவார் எந்தக் குடிமரபில் அவர் பிறந்தார், வாழ்ந்தார், நீங்கினார் என்று சொல்ல? பட்டு நெசவு போன்ற நெருக்கமான பாரம்பரியத்தின் ஊடாக அவர் நழுவிச் செல்கிறார்; அதே போன்று பொய்யான பந்தப்படுத்தலையும் கடந்து செல்கிறார். புனிதமானதென்று வைதீக ஆடைகளை அவருக்கு அணிவிப்பதோ, புரட்சியாளரின் சீருடையை மாட்டி விடுவதோ பொருந்தாது. உறுதியாக அவர்தான் வல்லபாச்சாரியார் என்று சொல்பவர்களை, அவரது ஆக்கத்தில் அதற்கான பிராமணியக் கூறுகளின் ஆதாரத்தை ஒருவர் கேட்கலாம். அவர் ஒரு தலித் என்று கூறுபவர்களை, அவரது எழுத்துக்களில் தாழ்த்தப்பட்டவர்களின் நிலைகுறித்து அதனை ஏற்கவேண்டி நேர்ந்ததே என்ற ஏக்கப்பெருமூச்சோ அல்லது அதை எதிர்த்துக் குரல் எழுப்பும் எதிர்ப்பாளரின் வெளிப்பாடுகள் எதுவும் காணப்படுகிறதா என்றும் ஒருவர் ஆதாரம் கேட்கலாம்.

வள்ளுவர் மீது லேபிள் ஒட்டமுடியாது

            திருவள்ளுவர் எந்தவித அடையாள அட்டை குத்தப்படுவதிலிருந்தும் தப்பிவிடுகிறார் என்பதே உண்மை. எவ்வளவு புரிந்துகொள்ள முடியாதவராக இருக்கிறாரோ, அதற்கு மேலும் அவர் விரும்பப்படுபவராகி விடுகிறார். காலம் கடந்தும் நிற்கின்ற கருத்துக்களை எழுதியுள்ளார் என்பதை நாம் அனைவரும் அறிவோம்; ஆனால் அவற்றைச் சாதியால் ஆடை அணிவிக்கவோ, வர்க்கத்தால் வண்ணம் பூசவோ அல்லது அவற்றின் மீது சமயச் சடங்கு வாசத்தைலம் பூசிவிடவோ முடியாது. அவை பொதுவாகக் கருத்துகள், திகைக்க வைக்கும் மிகநெருக்கமான வடிவத்திலும், கட்டுடைக்க முடியாத வடிவத்திலும், எல்லையற்ற பொருள் தருவதாகவும் உள்ள அவருடை கருத்துகள்.

            தூய்மையான கருத்தியல் வெளியில் அவர் ஒரு கருத்தியல்வாதி. கருத்துகளைப் பண்டமாக்கி விற்பனை செய்பவர்களிடம் பிடிபடவோ, பேழைக்குள் அகப்படவோ மாட்டார். பதிப்பாளர்கள், மறுபதிப்பாளர்கள், மொழிபெயர்ப்பாளர், மீண்டும் மொழிபெயர்ப்பவர்களுக்கு அறிவைக் கிளர்ந்தெழச் செய்யும் 1330குறட்பாக்களும் மறுஅச்சிட வசதியாக நேர்த்தியான எளிய வடிவத்தில் இருக்கும். மாறுதல் இல்லாது முதல்வரியில் நான்கு சீர்கள், அடுத்த வரியில் மூன்று என்று உயர்தரத்து  ஓசை நயத்திலும் இசை ஒழுங்கு வடிவத்திலும் அனைத்துக் குறட்பாக்களும் உள்ளன. சரியான, சுருக்கமான, கட்டுக்கோப்பான இந்த வடிவம் பதிப்பாளர்களின் கனவு. ஆனால் அவருடைய கருத்துகளை வகைத்தொகைப்படுத்தி வெளியிடுவதென்பது அவர்களைப் பயமுறுத்தக்கூடியது. அவர் கருத்துகளில் பொதிந்திருக்கும் உள்ளக்கிடக்கை பொருண்மையைக் கையாள்வது என்பது சிரமமான பணி. “எப்போதும் மதிப்புடையதாகக் கோரப்படும்” பொருளை அவர்களால் வகைத்தொகைப்படுத்த இயலாது.

அது அரசியல் செய்யுளா அல்லது தத்துவமா? மக்கள் தலைவனாகும் ஆர்வமுடையவர்க்கு வழிகாட்டும் ஆவணமா? காதல் தவிர வேறு சுவாசமற்ற காதலர்களுக்கு முதன்மைக் கைஏடோ? ஏற்றத்தாழ்வான வாழ்வின் முடிவுப் பொருளைத் தேடும் யூகங்களோ, அன்றி அதன் மிகத் தெளிவான ஒத்ததன்மை குறித்தத் தத்துவ விச்சாரமோ? 


வள்ளுவரின் படப்பிடிப்பு இயற்கை ஆர்வலர்கள் தங்கள் மனதைத் தொலைக்கும் காட்டு விலங்குகளின் வாழ்க்கை வர்ணிப்போ? ஒரு குறட்பாவில் முதலை சோம்பி உறங்கிக் கிடக்கும், மற்றொன்றில் யானைகள் வெற்றிக் கும்மாளமிட்டு பெரும் சப்தத்தோடு நடக்கும், இன்காத்திருக்கும்னொன்றிலோ மூச்சை அடக்கி, எதிர்பாராத இரை மீது தீடீர் தாக்குதல் நடத்தக்  சதுப்புநிலக் கொக்கு. சில நேரங்களில் வள்ளுவர் அறிவியலுக்குப் புறம்பாகப் பேசுவார், அவரும் சறுக்கி விழக்கூடிய மனிதர்தானே? பொதுவாக மனிதர்கள் நம்புவதுபோல அவரும் பகலில் ஆந்தைக்குக் கண்தெரியாது என மறுகேள்வியின்றி நம்பி விடுகிறார். ஒரே மேசையில் உண்ணும் மனிதர்களின் குணத்தை அவர் வீட்டுக் காகங்களிடம் கண்டு சொல்லும்போது புகழ்பெற்ற பறவையியல் ஆய்வாளர் சலீம் அலி அவரைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியிருப்பார். இதை எல்லாம் வைத்துப் பார்க்க திருக்குறள் “இயற்கை விஞ்ஞானம்’‘ என்பதன் கீழ் கொண்டுவந்து விடலாம்.

            திருவள்ளுவர் சித்தரிக்கும் சமூகப் பழக்க வழக்கங்கள், மக்களின் மூடநம்பிக்கைகளின் சொல்லோவியங்களில் சமூக விஞ்ஞானிகள் மூழ்கிவிடுவர். இவற்றில் சிலவற்றை அதிர்ச்சியளிக்கும் வகையில் அவரே ஏற்று வழிமொழிவதுபோல இருக்கும். முரண்பாடாக, குடிமைச் சமூகத்தில் பெரும் மாற்றத்தை, அந்தச் சமூக மாற்றத்திற்கான வருவதுரைப்பது போன்ற கருத்துகளின் பக்கம் அவர் நிற்கவும் செய்வார். மனிதகுலத்தின் இத்தனைச் சிக்கலான ஒழுங்கமைத் திட்டமிடுதலில் அவர் தனது பெயரிடப்படாத சுதந்திரத்தோடு ஊடாடிச் செல்வார்.

         

  திறமைமிக்க நிர்வாகியான இராசகோபாலச்சாரி திருவள்ளுவரின் ஆட்சிக்கலை மேன்மையில் ஈர்க்கப்பட்டு, குறட்பாக்களைத் தனது மிகச்சிறப்பான ஆங்கிலத்தில் அழகானச் செய்யுளாக்கி உள்ளார். ஆனால் அவருள் இருந்த ஒழுக்கவாதி வள்ளுவரின் மூன்றாவது காதல் கவிதைகளோடு (காமத்துப்பால்) சமசரம் செய்துகொள்ளவிடவில்லை. அவ்வாறு அப்படி ஒன்று இருப்பதையே தெரியாமல் அதன் மீது திரைபோட்டு மூடிவிட்டார். அதுதான் இராஜாஜி. ஆனால் அதற்காக வள்ளுவரை ஒருவர், தமிழ் வாத்சாயனர் என நினைக்காதிருக்க முடியுமா? இன்பத்துப் பாலின் உடல் கவர்ச்சி எழுப்பும் உள்ளக் கிளர்ச்சி ஒன்றும், மகப்பேறுஇயல் மற்றும் பெண் நோயியல் மருத்துவத்திற்கான பாடமாகாது. அது, தலைமகனான காதலன் தலைமகளானத் தன் காதலியின் அழகில் ஈடுபடுவது தொடர்பானது மட்டுமே (தகை அணங்கு உறுத்தல், அதி.109; நலம் புனைந்துரைத்தல் அதி.112 போன்றவைதான்.) அது காதலின் உடலழகு மட்டுமே, அறிவியல் உடல் இயக்கவியல் அல்ல.

            (பௌதீக) உடலை ஆராதிப்பதில் திருவள்ளுவர் எடுத்துக் கொள்ளும் சுதந்திரத்தை மகிழ்வுடன் அங்கீகரித்தது வேறுயாரும் இல்லை, தந்தை பெரியார்தான். திருக்குறளைப் புகழ்வதில் யாருக்கும் சளைத்தவரில்லாத அவர்தான், அடக்க ஒடுக்கமாகப் பெண் இல்லத்தில் உறைய வேண்டும் என்ற அதன் கருத்தோவியத்தை நேருக்கு நேர் தலையால் மோதுகிறார். அதுதான் பெரியார்.


திருக்குறள் புத்தகத்தின் விற்பனை உலகளாவிய நிரந்தரமானது, ஆச்சரியமான அதன் கருத்துகளை ஏற்கவோ, மறுக்கவோ விற்பனையாளர்கள் ஆளில்லை, அவர்களுடைய கவலை அவர்களது விற்பனைப் பொருள் மற்றும் லாபம் மட்டுமே. திருவள்ளுவர் காப்புரிமை பெறவும் இல்லை, அன்றி அவரை யாரும் காப்புரிமைக்குள் அடைத்துவிடவும் முடியாது. திருக்குறள் நூலின் மறுஅச்சுப் பதிப்புகளையும் தாண்டி, சுலபமாக அதிகரிகரிக்கும் இத்தனையாவது பதிப்பையும் தாண்டி திருக்குறள் வாழும், காற்றில் மிதந்து தங்கும். எல்லா இடத்தும், தருணங்களிலும் குறளை மேற்கோள் காட்டுதல், திரும்பத் திரும்பப் பாடுதலுக்கும் அப்பால் வெள்ளமெனப் பாயும்.

சமயங்களுக்கு மேலே

            எந்தச் சமயமும் தனது புனித இடத்தில் அல்லது நூல்களுக்குள் வள்ளுவரைப் பிடித்து அடைத்துவிட முடியாது. ஏதோ ஒரு குறட்பாவில் இங்கே அங்கே என்று மகாவிஷ்ணு இடம் பெற்றார் என்று ஒரு இந்து நினைப்பாரேயானால் அவர் மீண்டும் சிந்திக்க வேண்டும். பூடகமாகக்கூட எந்தக் கடவுள் உருவத்தையும், ஆணாக, பெண்ணாக அல்லது கொண்டாடப்படும் ஏராளமான இடம் மாறியத் தோற்றத்தோடு பாதி மனிதன் – பாதி மிருக உருவத்தோடானச் சித்தரிப்புகளைத் திருவள்ளுவர் பெயரிடவில்லை.

            ஜெயின் சமய அறிஞர்கள் ஏற்கத்தக்க உயரிய காரணகாரியங்களோடு உண்மையில் திருவள்ளுவர்தான் தங்கள் ஜெயின் சமய குருவான குந்தகுந்தாச்சாரியா எனும் பெயரில் இருந்தவர் என்று நினைக்கிறார்கள். பிரிட்டிஷ் அரசு நிர்வாகியான F.W. எல்லீஸ் பிரபு அறத்துப்பாலை மொழிபெயர்த்தபோது, அவர் திருக்குறளை ஒரு ஜெயின் அறிஞரின் படைப்பு என்றே கருதினார் என்பதைக் கொண்டும் ஜெயினர்கள் மேற்கண்ட தங்கள் கருத்தை வலியுறுத்துகிறார்கள். புலால் உண்ணல் மற்றும் கள் குடித்தலைத் திருவள்ளுவர் பேரார்வத்தோடு மறுக்கிறாரே (புலால் மறுத்தல் அதி.26; கள்ளுண்ணாமை அதி 93) அவர் எப்படி உடலை மறுத்தொதுக்கி வீடுபேறு பெறும் கொள்கை உடைய ஜெயின் சமயத்தைச் சேர்ந்தவராவார்?

            அவர்களது கூற்றை உடனடியாக ஏற்று ஒப்புக்கொள்ள நினைப்பவர்கள், அதற்கு முன் திருவள்ளுவர் தமது திருக்குறள் நூலை எப்படித் தொடங்கி எப்படி முடிக்கிறார் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். ’அகரமுதல எழுத்தெல்லாம் ஆதிபகவன்’ என்று உலகைப் படைத்தவனை வணங்கி, இறுதியில், ‘இன்பம் கூடி முயக்கப்பெறின்’ என உலகவாழ்வின் உந்து சக்தியாகிய காதல் உயிர் சக்தி, வாழும் பெருவிருப்பதைக் கூறி நிறைவு செய்கிறாரே, அது மாபெரும் தீர்த்தங்கரர்களின் போதனைகளோடு நன்கு பொருந்தவில்லையே!

          

  திருவள்ளுவர் சென்னை மயிலாப்பூர் கடற்கரையில் வாழ்ந்தவராக இருக்கக்கூடும் என்பது திருக்குறளின் புகழ்பெற்ற ஆங்கில மொழிபெயர்பாளராகிய ஜி யு போப் அவர்களின் புனிதமான நம்பிக்கை; அது, மலைப்பிரசங்கங்களால் ஆழமாக செல்வாக்கு பெற்று கடற்பயணமாக வரும் சமயப் பிரச்சாரகர்களின் கருத்து என ஒருவர் மெல்ல நகைத்து நகர்ந்துவிட வேண்டியதுதான். கடுமையான உழைப்பால் மொழிபெயர்த்த அவர், தமது தேவாலயம் மற்றும் அதன் மேல்நிலையில் உள்ளவர்களின் பெரும் ஆதரவாளர்.

            இதனால் வள்ளுவர் கடவுளைப் பற்றிக் கவலைப்படாதவர் அல்லது கடவுள் மறுப்பாளர் என்று அவரை அனைத்துச் சமயங்களையும் மறுத்துரைப்போர் முகாமைச் சேர்ந்தவர் என்று அர்த்தப்படுத்திவிட முடியுமா? திருக்குறளின் தொடக்கத்தில்‘ஆதி--பகவன்’ எனக் குறிப்பிட்டதை மதச்சார்பற்றதாகவோ, அன்றி ‘ஆதாம் – ஏவாள்’ என்று பொருள் கொள்வதும் கருத்தியல் ரீதியில் துணிவான முயற்சியாகவும் திருக்குறள் சொற்கள்படி நம்பக்கூடியதென ஒருவர் விரும்பலாம்.

            நமது உள்ளுணர்வு திருவள்ளுவர் முகபாவத்தைத் தாடியுடன் கூடிய ஒரு முனிவராக, தமிழ் வியாசராக, விஸ்வாமித்ரர், வால்மீகியாகக் கற்பனை செய்கிறது. புகழ்பெற்ற ஓவியச் சித்தரிப்புகள் அதனை அனுமதிக்கிறது. ஆனால் அவர் அப்படித்தான் இருந்தாரென எந்த அனுபவ, சோதனைச் சாட்சியத்தின்படி சொல்ல முடியும்? அப்படித் தோற்றமளித்திருக்கலாம், ஆனால் எவரும் அதிகாரத்துடன் நிரூபிக்க முடியாது. அன்றி ஒருக்கால், எல்லீஸ் பிரபு வள்ளுவரின் முகத்தை ஒரு ஜெயின் முனிவரின் தோற்றத்தில் தங்க நாணயமாக வார்க்க எண்ணி, காலகாலத்திற்கும் நிரந்தரப்படுத்த விரும்பினாரே அப்படியும் இருந்திருக்கலாம். அமைதியாக அமர்ந்த நிலையில் தாடி, மணி மாலை இன்றி தலைக்கவசம் அல்லது ஒளிவட்டத்தோடு திட்டமிடப்பட்ட அந்த உருவத்திற்கு எல்லீஸ் எந்தப் பெயரையும் சூட்டவில்லை என்பது மிகவும் முக்கியமான மதிப்புடையது. யார் அடைவதற்கு அப்பால் இருக்கிறாரோ, அவரை எட்டிப்பிடிக்க விரும்பிய மனிதர்களின் உச்சபட்ச  முயற்சிகளே வள்ளுவரின் உருவமாக, ஓவியமாக அல்லது சிலையாக வடித்த அனைத்து வெளிப்பாடுகளும்.

            முழுமையாக எந்தச் சார்பும் இல்லாதவரை அபகரித்து எடுத்துக் கொள்ளுதல் சாத்தியமாகக் காரணம், அவை அங்கே அப்படியே உள்ளன என்பதுதான்; கலாச்சாரச் சொந்தம் கொண்டாடுபவர்கள் இரைமீது பாய்ந்து கொத்தத் தயாராக இருக்கும் வல்லூறாகக் கவர்ந்திடக் காத்திருக்கிறார்கள். சார்புடையவர்களையும் நம்பமுடியாதபடி அபகரித்துக் கொள்வதும் போதுமான அளவு நடக்கின்றன; காரணம், அப்படி அபகரிக்கப்படுபவர்கள் இறந்தவர்களாக இருப்பதால், அவர்களால் நம்பமுடியாத ஆச்சரித்துடன் கத்த முடியாதல்லவா! 

எல்லைகள் அற்றவர்

            ஆனால் வள்ளுவர் முற்றிலும் வேறுவகையினர். ஒன்றை அபகரிக்க வேண்டுமானால், அது பௌதீகப் பொருளாக இருக்க வேண்டும். வள்ளுவரோ தொட்டுணர முடியாதபடிச் செறிவு உள்ளவர்; உள்வாங்க முடியாத கற்பனையான உயர் மின்அழுத்தம் உடையவர்; அவரோ வரையறுத்துச் சொல்ல முடியாத கருத்துகள், சித்தரிப்புகள், ஆலோசனை, இடித்துரைத்தல் என்ற மெய்ம்மைகளின் என்றுமுள உண்மைகள்; அவற்றை எவரும் ஒரு பையில் அடைத்து வீட்டிற்குத் தூக்கிச் சென்றுவிட முடியாது. மனிதர்களைத்தான் அபகரிக்கலாமே தவிர, கருத்துகளை அல்ல. கருத்துகளை எதிர்த்து ஒருவர் எதிர்வாதம் புரியலாம். அவற்றிற்குக் கூட்டு படைப்பாளியாகிவிட முடியாது.

            நான் உறுதியாகக் கூறுகிறேன், வள்ளுவரை எவரும் உரிமையாக்கிக் கொள்ள முடியாது. அதனை நான் மேலும் வரையறுக்க வேண்டும். சந்தேகத்திற்கு இடமின்றி தனித்துவமாகத் தமிழ் நிச்சயமாக உரிமை கோரும். ஆனால் வேறுயாரும், எதுவும் முடியாது. அவர் எதனையாவது சொந்தம் கொண்டாடினாரா? ஆமாம், உதாரணத்திற்கு இல்வாழ்வு குறித்த கருத்து. இல்லத்தின் மழலைகளைப் பற்றிய சித்தரிப்பு, அவருக்கே உரித்த தனித்துவமானது. அடுத்து தேசம் பற்றிய கருத்து, நாடு, அரண், அரசன், அமைச்சர்கள், அரசியல்கலை இப்படி. ஒரு நல்ல தேசம் பற்றிய அவரது படப்பிடிப்பு, நமது அரசியல் அமைப்புச் சட்ட முகப்புரையின் தெறிப்புகளால் ஆனது, அதற்குச் சற்றும் குறைவில்லாதது. நமது சொந்த குடியரசின் 70வது ஆண்டு கொண்டாட்டத்தில் அந்த அத்தியாயத்தை / அதிகாரத்தை நாம் வணங்குவோம்!

         

   (காவி ஆடை பூண்ட) உருவத்தோடு காவிகள் ஊதிவிட்டு மெல்ல ஆழம் பார்க்கும் வடிவத்தால் அவரைத் தொட்டுவிட முடியாது. அசைவற்ற காற்றுவெளியில் விருப்பத்திற்கு உயர்த்திய பட்டம் போல அவரது பெயரின் மீது அது (வாசம்போல) மிதக்குமே தவிர அவருக்கு வெளியே சென்றுவிட முடியாது. இந்தச் சம்பவம் குறித்து வீணே நினைத்துத் திருவள்ளுவரின் வாசகர்கள் நேரத்தை விரயமாக்க வேண்டாம். ஓவியச் சீலைகளில் வண்ணம் படியலாம், ஆனால் கருத்துகளின் மீது அல்ல. பலரும் ஞாபகப்படுத்தி விட்டார்கள் –அப்படிப்பட்ட நினைவூட்டல்கள் தேவையே இல்லை – திருக்குறளுக்குப் பின்னால் உள்ள அறிஞர் யாரென்ற முடிவை. (அது திருவள்ளுவரைத் தவிர வல்லபாச்சாரியாரோ, குந்தகுந்தாச்சாரியாரோ வேறு எவருமோ அல்ல).

            வண்ணம் பூசப்படுவதை எந்தக் காலத்திலும் திருவள்ளுவர் பொருட்படுத்தத் தேவை இல்லை. திருக்குறளின் மெய்ம்மையில் வண்ணப் பூச்சுகள் கரைந்து காணாது போகும்!         

--தமிழில் : வெ. நீலகண்டன், கடலூர்

ஓய்வுபெற்ற தொலைத்தொடர்பு ஊழியர்

நன்றி : தி இந்து 2019 நவம்பர் 25 இதழ் 

No comments:

Post a Comment