Sunday 9 January 2022

சாவித்திரிபாய் புலே : இந்தியப் பெண் கல்விக்குப் பாதையமைத்தப் பெண்மணி

மாணவர் உலகம் – கல்வி மற்றும் போராட்டம்                                                            

                                                                                                                சாவித்திரிபாய் புலே :

               இந்தியப் பெண் கல்விக்குப்
              பாதையமைத்தப் பெண்மணி

--சி ஆதிகேசவன்

--நன்றி: நியூஏஜ் (ஜன.9 – 15)

            இந்திய ஆணாதிக்கச் சமூகம் அந்நாட்களில் பெண் கல்வியை மறுத்தது. பழமைவாத, மத அடிப்படைவாதிகள் மற்றும் உயர் சாதியினரின் சாதி நம்பிக்கைகள் பெண்களுக்குக் கல்வி கிடைப்பதைத் தடுத்தது. பெண்கள் மீது அடுக்குமுறை ஒடுக்குமுறை மிகுந்த காலத்திலேயே பல இலட்சக்கணக்கான பெண்களை உற்சாகப்படுத்தியவர் சாவித்திரிபாய் புலே. புகழ்பெற்ற கல்வியாளரும் சமூக சீர்திருத்தவாதியுமான அவர் மராட்டிய மண்ணின் கவிஞருமாவார். பெண்கள் உடன்கட்டை ஏறும் சதி வழக்கம், குழந்தைத் திருமணம் மற்றும் சாதிய பாகுபாடுகளை ஒழிக்க தமது வாழ்வை அவர் அர்ப்பணித்தார்.

முதன்மை பெண் சாதனையாளர்

            இந்தியப் பெண்களிடம், குறிப்பாகப் பிற்படுத்தப்பட்ட சாதிகளிலிருந்து வரும் மக்களைப் பாடசாலைக்குப் “போ, கல்வி பெறு…” என்றழைத்தார். சமூகம் கட்டமைத்த ஏறத்தாழ்வான பாரபட்ச பாகுபடுத்தல் தளைகளிலிருந்து விடுதலை பெற அவர்கள் கல்வி பெறுவதே சிறந்த வழியாகும் என அவர்களிடம் எடுத்துக்கூறி வற்புறுத்தினார்.

            சாவித்திரிபாய் புலே இந்தியாவில் பெண் கல்விக்கு இயக்கம் தொடங்கிய முதல் இந்தியப் பெண் புரட்சியாளர். இந்தப் பெண் புரட்சியாளரையும் அவரது வாழ்வையும் அவருடைய சமூகப் பணிகளின் தாக்கம் மற்றும் இந்தியக் கல்விக்கு அவரது பங்களிப்பு முதலியவற்றைத் தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம்.

            சாவித்திரிபாய் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர், நவீனப் பெண்ணியல்வாதி மற்றும் சமூகச் சீர்திருத்தவாதி. கல்வி மற்றும் எழுத்தறிவு தளங்களில் பெண்கள் நிலையை மேம்படுத்த பெண்கல்வியை முன்னெடுத்துச் செல்வதில் அவரிடம் புரட்சிக் கனல் கனன்று கொண்டிருந்தது. பெண்கள் கல்விக்கான போராட்டத்தில் அவரும் அவரது கணவரும் சேர்ந்து கருத்தொருமித்தத் தோழர்களாகக் களம் கண்டனர். இந்தத் தலைமுறையில் கல்வி கற்று வரும் பெண்கள் அனைவருக்கும் சாவித்திரிபாய் புலேவின் பிறந்த நாள் கொண்டாட்டம் மிக முக்கிய நாளாகும்; ஏனெனில் அந்தக் கல்வி ஜோதி --காட்டிடை வைத்த அக்னிக் குஞ்சு-- புரட்சி வீராங்கனை (கிராந்திவீர்) சாவித்திபாய் புலே  தொடங்கி வைத்தது.

திருமணம்   

சாவித்திரிபாய் புலே  1831 ஜனவரி 3ம் நாள் மாராட்டியத்தின் சதாரா மாவட்டம் நைகான் சிற்றூரில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். குழந்தைத் திருமணம் சாதாரண வழக்கமான அந்நாட்களில் அவருக்கு 9 வயதாகும்போதே 13 வயதுடைய இளம் சமூகச் செயற்பாட்டாளரும் சீர்திருத்தவாதியுமான ஜோதிராவ் புலே என்பவருடன் திருமணம் நடந்தது. அவரது கணவர்தான் அவருக்கு எழுதவும் படிக்கவும்என கல்வி கற்பித்தார். அது மட்டுமல்ல, இந்தியாவிலேயே பெண் குழந்தைகளுக்கான முதலாவது பள்ளியை 1948 ஜனவரி 1ல் புனாவுக்கு அருகே பிடே வாடாவில் இருவருமாக த் தொடங்கினர்.

            ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் பெண்கள் அதிகாரம் பெறுவதற்கும் சமூகத்தில் பிறருடன் சமமாக நிற்பதற்கான ஒரே வழி கல்விதான் என அவர்கள் நம்பினர்.     அக்காலத்தில் கல்வி ஒரு  சிலருக்கே என வரையறுக்கப்பட்டதால் அனைவருக்குமான (கிருஸ்துவ) மிஷினரிப் பள்ளிகள் ஒருசிலவே இருந்தன. ஆசிரியருக்கான பயிற்சியை அகமதாபாத்தில் இருந்த ‘அமெரிக்கன் மிஷினரிகள்’ கல்வி நிறுவனத்திலும் பூனா  (திருமதி மிட்செல்) நார்மல் பள்ளியிலும் சாவித்திரிபாய் நிறைவு செய்தார். பெண்களுக்கான பள்ளியைப் பூனாவில் 1948ல் தொடங்கியபோது ஜோதிபா வயது 21, சாவித்திரிக்கு 17மட்டுமே. பெண் கல்விக்கு இந்தியர்களால் பள்ளிகளைத் தொடங்கும் முதலாவது முன்முயற்சி அதுவாகும்.

முதல் அனைவருக்குமான பள்ளி

            பள்ளிகளைத் தொடங்கி நடத்துவது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. பெண்கள் கல்விக்காக அவர்கள் ஆற்றிய பணி சமூகப் பழக்க வழக்கக் கட்டுப்பாடுகளுக்கு எதிரானது என்ற உறவினர்கள் எதிர்ப்பால் 1849ல் ஜோதிபாவும், சாவித்திரியும் அவர்களது மூதாதையர் வீட்டைவிட்டு வெளியேறினர்.

            அவர்கள் இருவரும் மியான் உஸ்மான் ஷேக் என்பவரது இல்லத்தில் தங்கினர். அங்கே உஸ்மானின் சகோதரியும் இந்தியாவின் முதலாவது முஸ்லீம் பெண் ஆசிரியருமான பாத்திமா பேகம் ஷேக்கைச் சந்தித்தனர். (1831 ஜனவரி 9ல் பிறந்த பேகம் பாத்திமா கொண்டாடப்பட வேண்டிய மற்றொரு ஆளுமை பெண் கல்வியாளர்.)  அவருடன் இணைந்து தங்கள் கல்விப் பணிகளைத்தொடர்ந்த புலே இணையர்கள் இரண்டு கல்வி அறக்கட்டளைகளை நிறுவினர்; ஒன்று, பூனாவின் பூர்வீகப் பெண்களுக்கான ‘நேட்டிவ் பெண்கள் பள்ளி’; மற்றொன்று “மகர்கள், மாங்க்ஸ் முதலிய சமூக மக்களின் கல்வியை மேம்படுத்துவதற்கான சங்கம்” அமைப்பை 1850லும் அமைத்தனர்.

            1851 வாக்கில் 150 பெண் மாணவிகளுடன் பூனாவில் மூன்று பள்ளிகளைத் தொடங்கினர். அவர்கள் பின்பற்றிய திறன்சார் கற்பிக்கும் நுட்பங்கள் அரசுப் பள்ளிகளைவிட மேம்பட்டதாக இருந்தது; பின்னர் மாணவிகளின் எண்ணிக்கை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களைவிட அதிகமாக இருந்தது.

நூலாசிரியர்

            கல்வியின் முக்கியத்துவம் குறித்து அவரிடம் குடிகொண்டிருந்த கனல் பல நூல்களை எழுத அவரைத் தூண்டியது; அவற்றில் கல்வியின் முக்கியத்துவம் குறித்து அவரது எண்ணங்களை வடித்தார், அனுபவங்களை நூல்களாக எழுதினார். (அவ்வாறு அவர் எழுதாது போயிருந்தால், அவருடன் பங்காற்றிய பாத்திமா பேகம் செயல்பாட்டுத் தரவுகள் கிடைக்காது மறக்கப்பட்ட வரலாற்றைப்போல, பிற்காலச் சரித்திரம் புலேகளையும்  மறந்து போயிருக்கும்). அவர் எழுதிய புலே காவியம் மற்றும் ‘பவன் காசி சுபோத் ரத்னாகர்’ கவிதை நூல்கள் முறையே 1854 மற்றும் 1892ல் வெளியாயின. அவை ஒடுக்கப்பட்ட மக்களைக் கல்வி பெறவும் ஒடுக்குமுறையின் அடிமைத் தளைகளை உடைத்து நொறுக்கவும் வற்புறுத்தின.

சமூகச் செயல்பாடுகளுக்கான அமைப்புகள்

            பெண்களின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 1852ல் சாவித்திரிபாய் ‘மகிளா சேவா மண்டல்’ என்ற மையத்தை நிறுவினார். அனைத்து சாதியினரும் ஒரே விரிப்பில் அமர வைக்கப்பட்டு அந்த அமைப்பில் சமத்துவம் நிலவச் செய்தார். குழந்தைத் திருமணத்திற்கு எதிராகத் தலைமையேற்று பிரச்சாரம் நடத்தியவர் கைம்பெண்கள் மறுமணத்தையும் ஆதரித்தார்.

            தாய்மைநிலையில் உழைப்புச் சுரண்டப்படும் பிராமண விதவைகள் மற்றும் அவர்களது குழந்தைகள் பாதுகாப்பிற்காகவும், சிசுக் கொலைகளைத் தடுப்பதற்காகவும் 1863ல் தனது வீட்டில் ஒரு காப்பகம் செயல்படச் செய்தார்.

1890 நவம்பர் 28ல் ஜோதிராவ் மறைந்தபோது சமூகப் பழக்க வழக்கக் கட்டுப்பாடுகளை மீறி கணவரின் சிதைக்கு அவரே எரியூட்டினார். துணைவர் மறைவு சாவித்திரிபாயைச் சமூகச் சீர்திருத்தப் பணிகளை நிறுத்தச் செய்யவில்லை; அப்பணிகளை மேலும் தொடர்ந்து முன்னோக்கி நடத்த 1893ல் சாஸ்வத் என்ற இடத்தில் ‘சத்திய சோதக் சமாஜ்’ ஆண்டு அமர்வு நிகழ்வுகள் நடந்தபோது அதற்குச் சாவித்திரிபாய் தலைமை வகித்தார். [“சத்திய சோதக் சமாஜ்”, (சத்தியத்தைத் தேடும் சமூகம்) என்ற சமூகச் சீர்திருத்த அமைப்பு ஜோதிபா புலே 1873 செப்டம்பர் 24ல் புனாவில் தொடங்கியதாகும்]

            மேலும் வரதட்சிணையற்ற, பிராமணப் புரோகிதர்கள் அல்லது பிராமணத் திருமணச் சடங்குகள் இல்லாத, முதலாவது சத்திய சோதக் திருமணத்தை 1873ல் அவர் தொடங்கி வைத்தார்.

            யஷ்வந்த் என்ற அவர்களின் தத்தெடுத்த மகனும்கூட சத்திய சோதக் – அதாவது கலப்புத் திருமணமே -- (சாதி மறுப்புத் திருமணம்) செய்து கொண்டார். (பின்பு அவர் மருத்துவராகி பிளேக் கொள்ளை நோயின்போது மருத்துவச் சேவையாற்றினார்.)

ஜோதிபாவின் பண்பு நலன்

            சமூகரீதியில் பிற்படுத்தப்பட்ட மாலி சமூக இனத்தைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்த சாவித்திரிபாய் தனது 9வது வயதில் ஜோதிபாவுக்கு மணம் செய்து கொடுக்கும்போது கல்வி அறிவில்லாதவராக இருந்தார். நல்லதொரு அதிருஷ்டம் ஜோதிபா சமூகச் சமத்துவமின்மையைப் போக்கிட கல்வியின் சக்தியை உறுதியாக நம்புவராக இருந்தார்; தனது புரட்சிகர கருத்தைத் தனது வீட்டிலிருந்தே தொடங்குவதாக முடிவு செய்தார். குடும்ப உறுப்பினர்களின் எதிர்ப்பையும் மீறி தனது மனைவிக்கு அவரே எழுதவும் படிக்கவும் கல்வியைக் கற்றுக் கொடுக்கவும் செய்தார். தொடக்கத்தில் வயல்வெளியில் அவர் வேலைசெய்து கொண்டிருந்தபோது அவருக்கு உணவு கொண்டுவந்த மனைவிக்கு வயல்வெளியிலேயே கற்றுக் கொடுத்தார்.

            மாணவிகள் சேர்க்கை எண்ணிக்கை கூடியதால் உற்சாகமடைந்த தம்பதியினர் 1848ல் இருந்து 1952வரை மகாராஷ்டிரா முழுவதும் பெண்களுக்கான மொத்தம் 18 பள்ளிகளைத் திறந்தனர். இவர்களின் செயல்பாடுகளை அங்கீகரிக்கும் வகையில் பிரிட்டிஷ் அரசு அவர்களுக்கு மரியாதை செய்தது. பின் உழைக்கும் வர்க்கச் சமுதாயத்தின் குழந்தைகள் மற்றும் பெண்களுக்காக இரவுப் பள்ளியைத் தொடங்கினர். 1870 பஞ்சத்தின்போது ஏழை மாணவர்களுக்காக மராட்டியம் முழுவதும் 52 இலவச விடுதிகளையும் அமைத்தனர்.

ஜோதிபாவின் பங்களிப்பு

            அந்த காலத்திலேயே 1890ல் கணவர் சிதைக்கு எதிர்ப்புக்களை மீறி அவரே எரியூட்டி புதிய புரட்சிகர முன்னுதாரணத்தை ஏற்படுத்தினார். நாடு முழுவதும் இது போன்ற எவ்வளவோ நிகழ்வுகள் நடைபெற்றாலும் பெண்கள் முழுமையான அதிகாரம் பெறுவது இன்னும் இந்தியாவில் நீண்டகாலக் கனவாகவே உள்ளது. அவருடைய மரபுகளைப் போற்றி நாம் கொண்டாடுவது போலவே அவரது கணவர் ஜோதிபாவின் பங்களிப்புகளையும் நினைவு கொள்ள வேண்டும்; பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட சாதி மக்களின் சமத்துவத்தையும் கனவு கண்டவர் அவர்; அவர்களைப் போலவே செயல்பாடுகளுக்குச் சொந்தக்காரர்களாகி உடன் நின்ற நண்பரும் தோழியுமான பாத்திமா பேகம் ஷேக் மற்றும் ஜோதிபாவின் ஆளுமையை உருவாக்கிய ஆதர்சமான சகுணாபாய் போன்றவர்கள் காட்டிய முழுமனதான ஆதரவையும் போற்ற வேண்டும்.

இயக்கங்களின் ஆதர்சமாக என்றும் திகழ்வார்

            இந்தியா உருவாக்கிய பல செயல்மறவர்களில் சாவித்திரிபாய் புலே மறக்க முடியாது பலர் மனங்களிலும் எதிரொலிக்கும் பெயர். ‘இந்தியப் பெண்ணினத்தின் அன்னை’ எனக் கருதப்படும் அவர் பிறந்த நாளைப் ’பாலிகா தின்’ (பெண்குழந்தைகளின் நாள்) என மராட்டியத்திலும் பெண்கள் பள்ளிகள் பலவற்றிலும் அனுசரிக்கப்படுகிறது. குழந்தை மணம் நடந்தபோது படிக்காதவராக இருந்தவர், கணவரே ஆசிரியராக இருந்து கற்பிக்க, தொடக்கக் கல்வி மட்டுமின்றி உயர்நிலைக் கல்வி மற்றும்ஆசிரியர் பயிற்சியும் பெற்றார்; இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் மட்டுமல்ல அவரே முதலாவது பெண் தலைமையாசியரும்கூட.

(அவுரங்காபாத் நகரில் உள்ள சிலை)

            கல்வியில் மட்டுமின்றி, சமுதாயப் பணிகளிலும் சாதித்த சாவித்திரிபாய் “பாலினச் சமத்துவத்திற்கான போராளி” என்றறியப்படுகிறார். பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளை வேட்டையாடும் மனிதத்தன்மையற்ற நியாமற்ற வழக்கங்களைக் கண்டித்து எப்போதும் எதிர்த்து உரத்துக் குரல் எழுப்புபவர்; பெண்களை உடன்கட்டை ஏற்றி எரிக்கும் சதி மற்றும் குழந்தைத் திருமணங்களுக்கு எதிராகப் போராடியவர். தனது கணவர் மறைந்த பிறகு, அவர் மொட்டை அடித்துக் கொள்ள வேண்டும் என வற்புறுத்தியவர்களை மறுத்தவர். அது மட்டுமின்றி மற்ற இளம் விதவைகளுக்கும் அந்தக் கொடுமை நிகழ்த்தப் பெறாது தடுக்க, முடி திருத்தும் தொழிலாளர்களைத் திரட்டி 1863ல் போராடச் செய்தவர். இன்றும் நம் நாட்டில் நிலவும் சாதிய பாகுபாடுகளை எதிர்த்தவர். விதவைகளுக்கு ஆதரவாக நின்று குரல் தந்த கவிஞர். 1897ல் (அணில் போன்ற பிராணிகள் உடலில் இருக்கும் ஒட்டுண்ணிகள் மூலம் பரவும் பாக்டீரியா வகை நோயான) புபோனிக் பிளேக் கொள்ளை நோய் தாக்கியவர்களை ஊருக்கு வெளியே அமைக்கப்பட்ட அதற்கான மருத்துவமனையில் சேர்க்க உதவியவர். அப்படி ஒரு சிறுவனை அவரே சுமந்து சென்றபோது அவரும் நோய்வாய்ப்பட்டார்.

            (பெண் சமூகச் சீர்திருத்தவாதிகளைச் சிறப்பிக்க மகாராஷ்டிர அரசு சாவித்திரிபாய் புலே பெயரில் ஒரு விருதினை ஏற்படுத்தியது. 2015ல் புனே பல்கலைக் கழகத்தின் பெயர் ‘சாவித்திரிபாய் புலே பல்கலைக் கழகம்’ எனப் பெயர் சூட்டி சிறப்பித்தது. 1998ல் அவரது 100வது நினைவு நாளில் இந்திய அஞ்சல்துறை இவர் நினைவைப் போற்றி ஓர் அஞ்சல் தலை வெளியிட்டது. )

            இந்தியாவின் அந்த மாபெரும் பெண்ணரசி சாவித்திரிபாய் புலே தமது 66வது வயதில் 1897 மார்ச் 10ம் நாள் இம்மண்ணுலக வாழ்வை நீத்தார். வரலாற்றில் மட்டுமல்ல, பெண்கள் போராட்டங்களில் இன்றும் சாவித்திரிபாய் புலே நிலைத்து வாழ்வார்! அவர்களது கனவை நனவாக்க நாளும் பாடுபடுவோம்!  சாவித்திரிபாய் பாரம்பரியம் நம்மை உற்சாகப்படுத்தி முன்நடத்தட்டும்!

--தமிழில்: நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்


No comments:

Post a Comment