Sunday 23 January 2022

உலகில் ஆண்டு தோறும் 20 லட்சம் தொழிலாளர்கள் மரணமடைகின்றனர்…

 

உலகத்தில் ஆண்டு தோறும்

20 லட்சம் தொழிலாளர்கள் மரணமடைகின்றனர்…

                                                                             --ஞான் பதக்

                                                               -- நன்றி : நியூஏஜ் (ஜன.16—22)

            பணி செய்வதால் எவரும் மரணமடையக் கூடாது; எனினும் உலகில் ஆண்டு தோறும் 20லட்சம் தொழிலாளர்கள் பணியால் மரணமடைகின்றனர். அவர்களது பணியிடங்களின் ஆபத்தான சூழல் காரணமாக –ஆபத்தான அப்பணிச்சூழல் அம்சங்களைக் கட்டுப்படுத்தி தடுக்கக் கூடியவை என்ற போதிலும்-- நோய்களுக்கும் கடுமையான காயங்களுக்கும் ஆட்படுகின்றனர். அது தொழிலாளர்களின் ஆரோக்கியத்திற்குக் கேடு பயப்பது மட்டுமல்ல உற்பத்தித் திறனைக் குறைத்துக் குடும்ப வருமானத்தின் மீது பேரழிவுத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

   பணி தொடர்பான மரணங்களில் பெரும்பான்மை சுவாச மற்றும் இதயப் பிரச்சனைகள் காரணமாக ஏற்படுவதாக உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு (ILO) இரண்டும் கூட்டாக நடத்திய ஆய்வின் முதலாவது உலகளாவிய மதிப்பீடுகளில் காணப்படுகிறது. 2021 செப்டம்பர் 20 –23ல் ‘பாதுகாப்பு மற்றும் உலன்நலன் மீதான உலக காங்கிரஸி’ன் 22வது கூட்டம் நடைபெற இருந்தது; அதற்கு முன் “2000 –2016 ஆண்டு காலத்தில் நோய்கள் மற்றும் காயங்களின் மீதான பணி தொடர்பான சுமைகள் பற்றிய WHO மற்றும் ILO அமைப்புகளின் கூட்டு மதிப்பீடு : உலகளாவிய கண்காணிப்பு அறிக்கை” வெளியிடப்பட்டது. அதில், பணிசார்ந்த நோய்கள் மற்றும் காயங்களின் காரணமாக 2016ம் ஆண்டில் 19 லட்சம் தொழிலாளர்கள் மரணம் அடைந்தனர், 9கோடி பேர் காயத்தால் உடல் ஊனமுற்றனர் எனக் கூறுகிறது. அந்த ஆய்வறிக்கையில் ஆபத்து அம்சம் மற்றும் உடல்நலன் மீதான அதன் விளைவு என 41 இணைகள் (pairs) பட்டியலிடப்பட்டுள்ளன (உதாரணமாக, பருத்தி ஆலை அல்லது சிமெண்ட் உற்பத்தி ஆலைகளில்  தூசினால் ஏற்படும் நுரையீரல் சுவாசப் பிரச்சனை என்று இரண்டையும் இணைத்துப் பட்டியலிடுதல்)

தென்கிழக்கு ஆசியா மற்றும் மேற்கு பசிபிக் பகுதி

            இந்தியா உட்பட தென்கிழக்கு ஆசியாவில் (மொத்த தொழிலாளர்கள்) விகிதத்திற்குப் பொருத்தமில்லாத வகையில் ஏராளமான எண்ணிக்கையில் பணி சார்ந்த இறப்பு விகிதம் –ஒரு லட்சம் பேருக்கு 45 என -- மரணங்கள் நிகழ்கின்றன. அந்த விகிதம் மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் 37 என உள்ளது. அதுபோல காயங்களால் உடல் ஊனமடைதல்  தென்கிழக்கு ஆசியப் பகுதியில் மட்டும் மற்ற பகுதிகளைவிட மிக உச்சபட்சமாக லட்சம் பேருக்கு 2100 என்றுள்ளது. பணிசார்ந்த நோய் சுமை இன்னும் அதிகமாகக் கூடும் என அறிக்கை சுட்டிக் காட்டுகிறது; காரணம் உடல்நலத்தைப் பாதிக்கக் கூடிய பணிசார்ந்த பல்வேறு பிற ஆபத்து அம்சங்கள் குறித்து இனிதான் வருங்காலத்தில் அளவிட வேண்டியுள்ளது. மேலும், கோவிட்19 பெருந்தொற்று பாதிப்பு விளைவித்த ஆகக் கூடுதலான பாதிப்புக்களின் சுமையை அவற்றோடு எதிர்கால மதிப்பீட்டு அறிக்கையில் சேர்க்க வேண்டியுள்ளது.

            WHO அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ராஸ் அதநோம் கேப்ரியிசஸ் கூறினார்: “இத்தனை மனிதர்கள் பணிச் சுமையால் பச்சையாகக் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்ற உண்மையைப் பார்க்க அதிர்ச்சியாக உள்ளது. எங்களுடைய அறிக்கை அனைத்து நாடுகள் மற்றும் தொழிலதிபர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை அழைப்பாகும்; இப்போதாவது அவர்கள் பணிசார் அபாயங்களிலிருந்து எல்லா தொழிலாளர்களுக்கும் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை வழங்க வேண்டிய தங்கள் கடப்பாட்டை நிறைவேற்றும் நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும் என்பதற்கான நினைவூட்டல் எச்சரிக்கை.”

           உலகச் சுகாதார அமைப்பின் சுற்றுச் சூழல், பருவ மாற்றம் மற்றும் ஆரோக்கியத்திற்கான துறையின் இயக்குநர் டாக்டர் மரியா நெய்ரா கூறுகிறார் : “ஏறத்தாழ இந்த 20 லட்சம் பேர்களின் அகால மரணங்கள் தடுக்கப்பட்டிருக்கக் கூடியவை. பணி தன்மையால் விளையும் உடல்நல ஆபத்துகள் குறித்த ஆய்வுகள் அடிப்படையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. எந்தத் தொழிலாளரையும் விட்டு விடாமல் அனைத்துத் தொழிலாளர்களின் உடல்நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வது, சுகாதாரம் மற்றும் தொழிலாளர் துறைகள் பகிர்ந்திட வேண்டிய கூட்டுப் பொறுப்பாகும். ஐநா மன்றம்  நிறைவேற்றிய ‘நிலைத்த வளர்ச்சி இலக்குகள்’ தீர்மானத்தின் மேலான உணர்வுடன் சுகாதாரம் மற்றும் தொழிலாளர் துறைகள், மிகப்பெரும் நோய்களின் சுமையை நீக்க ஒன்றாகப் பணியாற்ற வேண்டும்”

நீண்ட பணி நேரமும் சாகடிக்கும்

    இவ்விடத்தில் குறிப்பிடுவது மிகப் பொருத்தமானது யாதெனில், WHO மற்றும் ILO முதன் முதலாக வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் தொழிலாளர்களை மிக நீண்ட வேலை நேர பணிகளில் ஈடுபடுத்துவது இதய நோய்களும் பக்கவாதமும் ஏற்படுத்தும் காரணியாகிறது என அளவிட்டு சுட்டிக் காட்டியுள்ளது; அதன்படி நீண்ட வேலைநேரம் 7 லட்சத்து 50 ஆயிரம் தொழிலாளர்களைக் கொன்றிருக்கிறது. பெரும்பான்மை பணிசார் நோய்களின் சுமைக்கு நீண்ட பணிநேரம் மிகப் பெரிய ஆபத்து அம்சம் என்பதைத் தற்போதைய அறிக்கை உறுதியாக நிரூபித்திருக்கிறது.

தொற்றா நோய்கள், நீண்ட பணிநேரம் மற்றும் பணியிடச் சுகாதாரமின்மை

            மரணங்களில் 81 சதவீதம் பரவாத தொற்றாநோய்கள் காரணமாக ஏற்படுவதாக சமீபத்திய அறிக்கை கூறுகிறது. அதில் மிகப் பெரிய காரணியாக, 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் மரணத்திற்குக் காரணமானது நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் என்னும் சுவாசப் பிரச்சனையும், 4 லட்சம் தொழிலாளர்களைக் கொன்ற பக்கவாதம் மற்றும் 3 லட்சத்து 50 ஆயிரம் பேர்களைக் கொன்ற இஸ்கீமியா (இரத்த ஓட்டக் குறைபாடு) தொடர்பான இதய நோய் காரணமாகின்றன. மேலும் பணிசார்ந்த (விபத்தால் ஏற்படும்) காயங்கள் காரணமாக 19 சதவீதம் அதாவது 3 லட்சத்து 60 ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

            19 வகையான பணிசார் ஆபத்து அம்சங்களையும், நீண்ட வேலை நேரம் மற்றும் பணிஇடங்களில் நிலவும் காற்று மாசு, ஆஸ்துமாவை ஏற்படுத்தும் (ஆஸ்துமாஜென் என்னும்) துகள்கள், புற்றுநோயை ஏற்படுத்தும் (ஆஸ்பெடாஸ், நிக்கல் போன்ற) தூசிகள், கடுமையான சப்தம் போன்ற பணிச்சூழலியல் மிகப்பெரிய ஆபத்து அம்சங்களாக உள்ளதாக இந்த ஆய்வில் பரிசீலித்துக் கூறியுள்ளது.  மிகப் பெரிய ஆபத்தான நீண்ட பணிநேரம், சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் மரணத்தோடு தொடர்புடையது. காற்று மாசு (துகள்கள், வாயுக்கள் மற்றும் புகை) 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் சாவுக்குக் காரணமாகியுள்ளது. (சமீபத்தில் டெல்லியில் கடுமையான காற்று மாசுபாடு காரணமாகப் பள்ளி, கல்லூரி, தொழிற்சாலைகள் மூடப்பட்டதைக் காண்க)

பணிசார் மரண விகிதம்

            உலக அளவில் பணி சார்ந்த மரணங்கள் 2000 – 2016 ஆண்டு காலகட்டத்தில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 14 சதவீதம் குறைந்துள்ளது. இது பணியிட சுகாதாரம் மற்றும் பாதுகாப்பில் ஏற்பட்ட மேம்பாடுகளைப் பிரதிபலிக்கிறது என அறிக்கை கூறுகிறது. இருந்த போதிலும் பணியிடச் சூழலால் இதயநோய் மற்றும் பக்கவாதம் காரணமான மரணங்கள் 41 சதவீதமும் நீண்ட பணி நேரம் காரணமான மரணங்கள் 19 சதவீதமும் அதிகரித்துள்ளதைச் சுட்டிக் காட்டுகிறது. பணி தொடர்பாகப் புதியதாக எழுந்துள்ள சமூக உளவியல் போக்கின் பணிசார் ஆபத்து அம்சம் அதிகரித்துள்ளதை இது பிரதிபலிக்கிறது.

தீர்வு உண்டு

            (எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வு இருப்பதைப் போல) ஒவ்வொரு ஆபத்து அம்சமும் தனித்துவமான முன்தடுப்பு நடவடிக்கை தொகுப்பைக் கொண்டிருக்கிறது; அவற்றைப் பணிஅமர்த்துநர்கள் மற்றும் பணியாளர்களுடன் கலந்து பேச அரசுகளுக்கு இந்தக் கண்காணிப்பு அறிக்கை வழிகாட்டுகிறது. உதாரணமாக, நீண்ட பணி நேரத்திற்கு ஆட்படும் பிரச்சனைக்குத் தீர்வு, ஆரோக்கியமான அதிகபட்ச பணி நேரத்தை நிர்ணயிப்பது குறித்த உடன்பாட்டைக் கோருகிறது. அதேபோல, பணியிட காற்று மாசு பிரச்சனைக்கு, தூசுகளைக் கட்டுப்படுத்துவது, காற்றோட்ட வசதியை ஏற்படுத்துவது மற்றும் தனிநபர் பாதுகாப்பு கருவிகளை வழங்கவும் சிபார்சு செய்கிறது.

ஐ நா SDG ஆய்வறிக்கைகள்

            ஐநா மன்றம் 2015ல் நிர்ணயித்த (உலகளாவிய இலக்குகள் என்று அறியப்படும்) ‘நிலைத்த வளர்ச்சிக்கான இலக்குகள்’ (SDGs) 2030க்குள் சாதிக்க உலகத்தினருக்கு அழைப்பு விடுத்தது: இப்பூமிப் பந்தில் வாழும் மக்கள் அனைவரும் சமாதானத்தையும் வளர்ச்சியையும் அனுபவிப்பதை உறுதிப்படுத்த உலக நாடுகளே நடவடிக்கை எடுக்க முன்வாருங்கள் என்று அழைத்தது; குறிப்பாக SDG3 அறிக்கை மற்றும் SDG8 அறிக்கையும் பணிசார் ஆபத்து அம்சங்கள், உடல்நலக் கேடு விளைவிக்கும் காரணிகளைக் குறைக்கவும் ஏன், முற்றிலும் அகற்றவும், நாடுகள், பிராந்தியங்கள் மற்றும் உலக மட்டத்தில் அவற்றைக் கண்காணிக்க வேண்டிய தேவையை வற்புறுத்தியது. அந்த அறிக்கைகளின் நோக்கம், நாடுகளின் கொள்கை வகுப்பாளர்கள் தேவையானவற்றைச் செய்ய உதவுவதே. இதனால் பிரச்சனைகள்பால் மேலும் கவனத்தைக் குவிக்கவும், திட்டமிடவும், நிதி ஒதுக்கீடு செய்யவும், அவற்றை அமல்படுத்தவும், மறுமதிப்பீடு செய்யவும் முடியும்; அனைத்துத் தொழிலாளர் பெருங்கூட்டத்தின் உடல்நலம் மற்றும் தேசத்தின் சுகாதாரப் பங்கிட்டின் பலனை அவர்களும் சமமாகப் பெறுவதை மேம்படுத்தத் தேவையான கொள்கைசார் தலையீடுகளைச் செய்ய முடியும். மேலும் ஆரோக்கியம், பாதுகாப்பு, நெகிழ்வுப் போக்கு மற்றும் சமூகரீதியில் இன்னும் நியாயமான பணியிடங்களை உறுதிசெய்ய தீவிரமான நடவடிக்கைகள் தேவை என அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. அத்தகைய கொள்கை செயல்திட்டத்தின் நடுநாயகமாகப் பணியிட சுற்றுச்சூழல், சுகாதார மேம்பாடு மற்றும் பணிசார் உடல்நலச் சேவை வசதிகள் திகழ வேண்டும்.

ILO இயக்குநர் ஜெனரல் கய் ரீடர்

            “இந்த மதிப்பீடுகள் பணிசார் நோய்களின் சுமையைக் குறித்த முக்கியமான தகவல்களை வழங்குகிறது; இத்தகவல்கள் ஆரோக்கியமான, பாதுகாப்பான பணியிடங்களை ஏற்படுத்தத் தேவையான கொள்கைகள் மற்றும் வழக்கங்களை வடிவமைக்கப் பெரிதும் உதவும்” என்று கூறுகிறார் சர்வதேசத் தொழிலாளர்கள் அமைப்பின் (ILO) இயக்குநர் ஜெனரல், கய் ரீடர். மேலும் அவர், “அரசுகள், பணி அமர்த்துநர்கள் மற்றும் தொழிலாளர்கள் அனைவரும் பணியிடங்களின் ஆபத்து அம்சங்களைக் குறைக்க நடவடிக்கைகள் எடுக்க முடியும். பணித்தன்மையின் போக்கு (ஒர்க் பேட்டர்ன்) மற்றும் முறைமைகளை மாற்றுவதன் மூலம் அந்த ஆபத்து அம்சங்களைக் குறைக்கவும், முற்றிலும் நீக்கவும் முடியும். அத்தகைய ஆபத்தான சூழல்களில் கட்டாயம் பணியாற்ற வேண்டிய, அவற்றைத் தவிர்க்கவே முடியாத தொழிலாளர்களின் பாதுகாப்புக்குத் தேவையான தனிநபர் பாதுகாப்பு கவசங்கள் மற்றும் கருவிகள், கடைசி வாய்ப்பாக உதவ முடியும்” என்று விரிவாக விளக்கியுள்ளார்.

இன்றைய நிலையும் நமது கடமையும்

            [இந்தச் சர்வதேச வழிகாட்டல்களை நமது அரசுகள் பொருட்படுத்தவில்லை என்பதையே தொழிலாளர் நலச் சட்டங்களின் மீது அவசரமாக நிறைவேற்றப்பட்ட திருத்தங்கள் அம்பலப்படுத்துகின்றன; போராடிப் பெற்ற பல்வேறு தொழிலாளர் நலச் சட்டங்களின் பலன்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பை –ஒன்றிய அரசின் புதிய நான்கு தொழிலாளர் குறுங்குறிகள் (லேபர் கோடு) – குறிப்பாக, சமூகப் பாதுகாப்புக் கோடு மற்றும் பணிசார்ந்த பாதுகாப்பு, உடல் நலம் மற்றும் பணியிட நிலைமை குறித்தான கோடு கேள்விக்கு உள்ளாக்கியுள்ளன.

            இந்த அராஜகத்தைக் கண்டித்து இந்தியத் திருநாட்டின் தொழிலாளர் வர்க்கம் போர் முழக்கம் செய்கிறது :


“எதிர்வரும் பிப்ரவரி 23, 24ல் 

நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம்!”

                  வெற்றிபெறச் செய்வோம், 

       ஒன்றிணைந்து வாருங்கள் தோழர்களே! ]

-- நன்றி : நியூஏஜ் (ஜன.16—22)

--தமிழில் : நீலகண்டன்,

தொலைத்தொடர்புத் துறை, கடலூர்  

 

No comments:

Post a Comment