Saturday 15 January 2022

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாற்று வரிசை 56 -- பேராசிரியர் ஹிரேன் முகர்ஜி

 

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 56 


பேராசிரியர் ஹிரேன் முகர்ஜி
--

ஈடு இணையில்லா ஒப்பற்ற நாடாளுமன்ற ஆளுமை

– அனில் ரஜீம்வாலே

நியூஏஜ் (டிச.19 – 25)

             ஹிரேன் முகர்ஜி புரட்சிகர அறிவாற்றலின் ஒட்டுமொத்த உருவகம். அவர் மிகப் பெரும் சொற்பொழிவாளர், நாடாளுமன்றத்தில் அவருடைய பங்களிப்புகள் நினைவில் நீங்காதவை.

           ஹிரேந்திர நாத் முகர்ஜி 1907 நவம்பர் 23ல் கல்கத்தாவின் தால்தளா என்னுமிடத்தில் சச்சீந்திரநாத் முகர்ஜிக்குப் பத்து குழந்தைகளில் நான்காவதாகப் பிறந்தார். மிகப் பெரும் சொற்பொழிவாளராகவும் தேசியவாதிவாதியாகவும் விளங்கிய சசீந்திரநாத் பல வகைகளிலும் ஹிரேனின் ஆளுமை உருவாக்கத்தில் செல்வாக்கு செலுத்தினார்.

பள்ளி, கல்லூரி படிப்பு
            ஹிரேனுக்குக் குடும்ப வழக்கப்படி 13 வயதில் பூணூல் அணிவிக்கும் ‘உபநயனம்’ நடந்தது; அந்நிகழ்வு குறித்துப் பின்னாட்களில் பல முறை அவர் கேலி செய்திருக்கிறார். இராமாயணம் மற்றும் மகாபாரதக் காவியங்களிலிருந்து நீண்ட பத்திகளை அவர் பாடுவது வழக்கம்; அப்படி அதன் மூலம் தனது பாட்டியின் பிரியத்திற்கு உரியவரானார்! கீதை சுலோகங்கள் பல மனனம் செய்தார். புத்திசாலியான மாணவராகத் தொடர்ந்து விளங்கினார். தால்தளா உயர்நிலைப் பள்ளியிலிருந்து 1922ல் 80% (நட்சத்திர) மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் மெட்ரிகுலேஷன் தேர்வாகி, மேல் படிப்புக்குக் கல்வி உதவித் தொகையும் பெற்றார்.

            1924ல் இன்டர்மீடியட் ஆர்ட்ஸ் (IA) தேர்வில் முதல் வகுப்பில் சிறப்பாக வந்ததுபோல் பிஏ தேர்வுகளிலும் அச்சாதனையை 1926ல் மீண்டும் நிகழ்த்தினார். சரித்திரம் (ஹானர்ஸ்) தேர்வில் சாதனை மதிப்பெண்கள் பெற்று இஷான் கல்வி உதவித் தொகை வென்றார். 1928ல் முதுகலை எம்ஏ சரித்திரத்தில் தேர்வுக்கான எட்டு தாள்களிலும் அவரே முதலாவதாக வந்தார். காசி இந்து பல்கலைக் கழகம் (BHU) நடத்திய அனைத்திந்திய விவாதப் போட்டியில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வென்றார்.

உயர் படிப்புக்காக இங்கிலாந்தில்

            அரசு கல்வி உதவித் தொகை பெற்று ஹிரேன் 1929ல் இங்கிலாந்து சென்று செயின்ட் கேத்தரின் கல்லூரி, ஆக்ஸ்போர்டில் அனுமதிக்கப்பட்டார். 1932ல் பி.லிட் பட்டத்தையும் 1934ல் லிங்கன் இன் கல்வி நிறுவனத்திலிருந்து பார் அட் லா பட்டத்தையும் பெற்றார். அங்கே சையத் சாஜட் ஜாகீர் போன்ற கம்யூனிஸ்ட்களைச் சந்திக்க, அவர்களுடனும் கிரேட் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சி (CPGB) உடனும் தொடர்பு ஏற்பட்டது. ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகங்களில் மாணவர்களை அமைப்புரீதியாகத் திரட்ட அவர் உதவினார்.

            1920ல் ஒத்துழையாமை இயக்கம் நடந்தபோதே தேசிய அரசியலுடன் ஹிரேன் தொடர்பு கொண்டிருந்தார். 1921 டிசம்பர் 24ல் வேல்ஸ் இளவரசரை வரவேற்க கல்கத்தா நகர் ஒளி அலங்காரம் செய்யப்பட்டிருந்தைப் பார்க்கப் பதின் பருவத்திலேயே மறுத்தார். கல்லூரி விழாவில் காஸி நஸ்ரூல் இஸ்லாம்இ ஷிகல் பரா சல்” பாடலைப் பாடும்போதெல்லாம் மிகவும் அவர் உணர்ச்சிவசப்படுவார். பிரிசிடன்சி கல்லூரி மாணவர்கள் சங்கத்திற்கு ஹிரேன் செயலாளரானார்.

            1934ல் அவர் இந்தியா திரும்பினார். புகழ்பெற்ற தத்துவவாதியும் அறிஞருமான டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவரிடம் ஆழமாக ஈர்க்கப்பட்டு வரலாற்றுப் பாடம் கற்பிக்க ஆந்திரா பல்கலைக் கழகத்திற்கு அழைத்தார். ஹிரேனும் அப்பல்கலைக்கழகப் பேராசியராகச் சேர்ந்தார். பின்னர் கல்கத்தா, ரிப்பன் கல்லூரியில் சேர்ந்து 1936ல் வரலாற்றுத் துறை தலைவராகி 1962வரை அப்பதவியில் நீடித்தார். கல்லூரியில் வரலாறு மற்றும் அரசியல் தத்துவம் பாடம் இரண்டையும் கற்பித்தார்.

சிபிஐ கட்சியில் இணைதல்     

            1936ல் சிபிஐ தடை செய்யப்பட்டிருந்தபோது ஹிரேன் கட்சியில் சேர்ந்தார். 1938 -39ல் அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகி, வங்கப் பிரிவு செயற்குழு உறுப்பினராகவும் செயல்பட்டார். முற்போக்கு எழுத்தாளர் சங்க நிறுவனத் தலைவர்களில் ஒருவர். அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்துடன் (AISF) நெருங்கி இருந்து அதன் வங்க மாநாடுபோல 1940ல் நாக்பூரில் நடைபெற்ற புகழ்பெற்ற நாக்பூர் அமர்வு உட்பட அனைத்திந்திய மாநாடுகளில் தலைமை வகித்துள்ளார். AISF அமைப்புக்குப்  பல தருணங்களில் ஆலோசனைகள் கூறி வழிநடத்தினார்.

            1941ல் நிறுவப்பட்ட சோவியத் நண்பர்கள் சங்கம் (FSU) அமைப்போடு முகர்ஜி தீவிரச் செயல்பாட்டுத் தொடர்பில் இருந்தார். கம்யூனிஸ்ட் இயக்க மாபெரும் ஆளுமை தலைவர்களான எஸ்ஏ டாங்கே, பிசி ஜோஷி, டாக்டர் ரனீன் சென், பவானிசென், சோமநாத் லாகிரி, ஜோதிபாசு, பூபேஷ் குப்தா போன்ற பலருடன் ஹிரேன் முகர்ஜி நெருக்கமாக இருந்தார்.

தலைச்சிறந்த கற்றறிவாளர் மற்றும் எழுத்தாளர்

            பேராசிரியர் ஹிரேன் முகர்ஜி ஏராளமான நூல்களை மலைபோல எழுதிக் குவித்த படைப்பாளி, கடல்போல கலைக் களஞ்சியமாய் ஞானம் ததும்பும் துறைசார்ந்த பேரறிஞர். அறிவார்ந்த அவருடைய சொற்பொழிவுகளைக் கேட்பது பேரானந்த அனுபவம் –பொருள் ஆழத்துடன் அறிவுச் சுடர் வீசும் உரைகள் நகைச்சுவை உணர்வு நிரம்பியதாயும் இருக்கும். அத்தகைய ஆழமான அறிவின் தாக்கத்தை, விரல் விட்டு எண்ணக்கூடிய அரசியல் தலைவர்கள் வேறு சிலர் மட்டுமே, கேட்போர் மனதில் பதிய வைக்க முடியும்.

அவருடைய புத்தகங்கள் மற்றும் உரைகளின் விரிந்த பன்முகத் தன்மையும் உண்மைத்தன்மையும் ஆச்சரியத்தில் ஒருவரை வாய் அடைக்கச் செய்யும், மகுடி இசை கேட்கும் பாம்புபோல கேட்போரை மயங்கச் செய்யும். தம் அறிவாற்றலைப் பயன்படுத்துவதில் சமூகத்திற்கு உண்மையாக இருந்தார். கல்லூரிகளில் அவர் ஆற்றும் உரைகள் மாணவர்களுக்குப் பெருவிருந்து, பெருந்திரள் கூட்டத்தில் பேசும் பேச்சுக்கள் கூட்டத்தினரை மயக்கிக் கட்டிப்போடும். அவர் உரையைக் கேட்க பண்டித நேரு நாடாளுமன்ற அவைக்கு விரைந்தோடி வருவார். அவர் எழுதிய சில புத்தகங்கள் உலகச் செவ்வியல் நூல்களாகப் போற்றப்படுகின்றன. நவீன வங்கக் கவிதைகளின் நீண்ட தொகுப்பொன்றை அவர் ஆசிரியராக இருந்து பதிப்பித்தார். சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு (போல்ஷ்விக்) என்ற நூலின் ஆசிரியர் அவர்.

            ஆங்கிலத்தில் அவரது பிற நூல்கள் சில :  சுதந்திரத்திற்கான இந்தியப் போராட்டங்கள்; சோஷலிசத்திற்கு ஓர் அறிமுகம்; காந்திஜி – ஓர் ஆய்வு; நேரு குறித்த ஓர் ஆய்வு; இந்தியாவும் நாடாளுமன்றமும்; நாடாளுமன்றம் பற்றிய ஒரு சித்தரிப்பு; தங்கமாய் ஜொலிக்கும் வில் (Bow of Burning Gold -சுபாஷ் சந்திரபோஸ் பற்றி ஓர் ஆய்வு) ; வகுப்புவாதப் பிரச்சனைகளும் சுதந்திரப் போராட்டமும் 1919 முதல் 1947வரை; காந்தி, அம்பேத்கர் மற்றும் தீண்டாமையை அடியோடு அகற்றலும் (Extirpation); இன்றைய தினத்திற்கான உங்கள் தாகூர்; மார்க்ஸை நினைவோம்; மார்க்சியப் பதாகையின் கீழ்;  கம்யூனிசத்தின் அடர் சிகப்பு வண்ணங்களின் கீழ் (Under Communism’s Crimson Colours;) முதலியன

            வங்க மொழியில் அவர் எழுதிய நூல்கள் : இந்தியாவில் தேசிய இயக்கம்;  இந்திய வரலாறு ( 2தொகுதிகள்); தேசியப் பாடல்கள்; நவீன வங்காளக் கவிதைகள்; முதலியன. அவர் ‘கல்கத்தா வீக்லி நோட்ஸ்’ மற்றும் ‘இந்திய – சோவியத் ஜஞ்சிகை’ முதலிய இதழ்களின் ஆசிரியராக இருந்தார். மேலும் அவர், ‘டோரி ஹோடே டீர்’ (படகிலிருந்து கரைக்கு) என்ற சுயசரிதை நாவலும் எழுதியுள்ளார்.

            அவர் ஆங்கிலம், வங்காளம் மற்றும் சமஸ்கிருதம் என மூன்று மொழிகளில் ஏராளமாக எழுதிக் குவித்தவர்.

            மேலும் ஜார்ஜ் டிமிட்ரோவ் மற்றும் (கீழ்த் திசை ஆய்வாளரும் ஹங்கேரிய தத்துவவியலாளருமான) இந்தியவியலாளர் அலெக்ஸாண்டர் க்சோமா டி கோரொஸ் (Alexander Csoma De Koros.) ஆகியோரின் வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளார்.

பத்ம பூஷண் மற்றும் பிற விருதுகள்

        பொதுவாழ்வில் தலைச்சிறந்த பங்களிப்புக்காக 1990ல் பத்ம பூஷண், 1991ல் இந்தியாவின் இரண்டாவது குடிமை விருதான பத்ம விபூஷண் அளித்துப் பேராசிரியர் ஹிரேன் முகர்ஜி கௌரவிக்கப்பட்டார். 2001ல் முஸாஃபர் அகமத் ஸ்மிரிதி புரஸ்கார் விருது பெற்றார். கௌரவ டாக்டர் பட்டங்களை ஆந்திரா, கல்கத்தா, வடக்கு வங்கம், கல்யாணி மற்றும் வித்யாசாகர் பல்கலைக்கழகங்கள் வழங்கின. 1992ல் (ஈஸ்வர் சந்திர) வித்யாசாகர் விருது, 1994ல் மௌலானா ஆஸாத் விருது மற்றும் 2000ல் நஸ்ரூல் விருது என பல விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டன. மேலும் அவருக்குச் சோவியத் லாண்டு நேரு விருது 1977லும், இரண்டாம் உலகப் போர் பற்றிய அவருடைய புத்தகத்திற்காகச் சோவியத் விருது மற்றும் 1980ல் பல்கேரியா அரசு டிமிட்ரோ நினைவு விருதினையும் வழங்கிச் சிறப்பித்தது.

ஈடு இணையில்லா அசாதரண நாடாளுமன்றவாதி

        1952ல் நடந்த முதல் பொதுத் தேர்தலில் மேற்கு வங்கத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பேராசிரியர் ஹிரேன் முகர்ஜியும் ஒருவர்.  கல்கத்தா வடகிழக்குத் தொகுதியிலிருந்து முதலாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது மக்களவை தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராகவும், மீண்டும் 1967 மற்றும் 1971லும் தேர்ந்தெடுக்கப்பட்டார். கல்கத்தா மத்திய தொகுதிலிருந்து மக்களவைக்கு 1957 மற்றும் 1967ல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  

        1952 முதல் 1964வரையிலும் பின்னர் 1967லிருந்து 1971வரையிலும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மக்களவை உறுப்பினர்கள் குழுவின் துணைத் தலைவராகப் பொறுப்பு வகித்தார். 1964 முதல் 1967வரை மக்களவை சிபிஐ கட்சிக் குழுவின் தலைவராக இருந்தார். இவ்வாறாக 1952 முதல் தொடர்ந்து 25 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார்.

        இந்திய தேசத்தில் பாராளுமன்ற ஜனநாயகம் மலர்ந்து வரும் நிகழ்முறையிலும் அதற்கான நடைமுறைகள் வகுக்கப்பட்டுவரும் தொடக்கநிலையில் இருந்தபோது பேராசிரியர் ஹிரேன் முகர்ஜி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். நாடாளுமன்றத்தில் மக்களின் பிரதிநிதியாக, அந்தப் பதத்திற்கு மிக உண்மையாக, அவர் எல்லா வகையிலும் விளங்கினார். நாடாளுமன்றத்தில் அவரது செயல்பாடு ஜனநாயக அமைப்புக்களை ஒரு கம்யூனிஸ்ட் எவ்வாறு பயன்படுத்த முடியும் என்றும் ஒரு கம்யூனிஸ்ட் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் எடுத்துக்காட்டியது.

        பாராளுமன்ற நடைமுறைகள் மற்றும் விதிகளை வகுப்பதில் பெரும் விற்பன்னராகத் திகழ்ந்து, நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பை உறுதியாகப் பாதுகாத்த, பன்முக ஆற்றல் பெற்ற மேதை ஹிரேன் பாபு நாடாளுமன்ற வட்டத்தில் அனைவராலும் மிகப் பெரிதும் மதிக்கப்பட்டார்.

வெள்ளி நாக்கு படைத்தவர், சொல்லின் செல்வர்

        நாடாளுமன்றத்தில் அவரது உரைகள் உயரிய தேசியக் கண்ணோட்டத்தையும் நாட்டின் மீது அவருக்கிருந்த பேரன்பையும் பிரதிபலித்தன. அவரது மிகச் சிறந்த மொழி ஆளுமையும் அவர் தேர்ந்தெடுக்கும் வார்த்தைகளும் மிக உயரிய தரத்தில் அமைந்திருந்தன. அவருடைய உரைகளை ஆளும் தரப்பு மற்றும் எதிர் தரப்பு இரண்டும் மிகுந்த அமைதியோடு இருந்து அக்கறையாகக் கேட்பார்கள். அவருடைய குரல் ‘தங்கக் குரல்’ அல்லது வெள்ளி நாக்கு படைத்தவர்’ என்று கூறுவர். (அவர் நாக்கில் கலை மகள் சரஸ்வதி நர்த்தனம் ஆடினாள் எனலாம்)

        ஒரு நாட்டியப் பெண்மணி மேடையின் ஒரு புறத்திலிருந்து எல்லா இடத்திற்கும் எப்படிச் சென்றார் என வியக்கும் வகையில் அவருடைய உரைகளில் ஹோமரின் இலியட் மற்றும் ஒடிசி கிரேக்கப் பேரிலக்கியங்களிலிருந்து நமது இராமாயணம் மற்றும் மகாபாரதத்திற்கும்; கிருஸ்வது புதிய ஏற்பாட்டிலிருந்து பகவத் கீதைக்கும், குரானுக்கும்; மார்க்சுக்கும் லெனினுக்கும் வெகு சுலபமாக நீந்திச் சென்று நம்மையும் உடன் அழைத்துச் செல்வார். சொற்பொழிவுகளில் விவேகானந்தர், காந்திஜி, நேரு, புத்தர் எனப் பல பேராளுமைகள் தென்றலின் சுகமாய் மிதந்து வருவார்கள். மிகச் செவ்விய முறையிலான சமஸ்கிருதத்தில் அவரால் பேசவும் எழுதவும் முடியும்.  மக்களவையில் தொல்லியல் குறித்த அவரது உரைகள் ஒப்புயர்வற்றன – ஏனெனில், அவற்றில் இந்திய வரலாறு குறித்த பெரும் ஆய்வாளர்கள் சர் லியோனார்டு உல்லே மற்றும் சர் மார்ட்டிமர் வீலர் அகியோரின் அரிய ஆராய்ச்சித் தகவல்கள் நிரம்பி இருக்கும்.

        நாடாளுமன்றத்தில் அரசுக்கு எதிராகக் கொண்டு வந்த வெட்டுத் தீர்மானத்திற்கு ஆதரவாக நூறு ஓட்டுகளுக்கு மேல் பெறுவது என்பது மிகவும் அரிதான சாதனை. எந்த விஷயம் குறித்துப் பேசுவதற்கு முன்பு பேராசிரியர் ஹிரேன் முகர்ஜி அவ்விஷயங்களில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள்/ சிக்கல்கள் பற்றி ஆழமாக ஆய்வுகளை மேற்கொள்வார். நாடாளுமன்றத்தின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்காகப் பல முக்கிய ஆலோசனைகளைத் தந்த அவர் கேள்வி நேரத்தின் முக்கித்துவத்துவத்தை வலியுறுத்துவார். தனது “பாராளுமன்றச் சித்தரிப்பு” (‘Portrait of Parliament’) என்ற புத்தகத்தில் புறநிலை எதார்த்த நோக்கில் நாடாளுமன்றச் செயல்பாடுகளின் அணுகுமுறையை விவரித்திருப்பார்.  

        நாடாளுமன்றப் பொதுக் கணக்குக் குழு (PAC) தலைவராக இரண்டு முறை அவர் இருந்தார். (1976ல் தொடங்கப்பட்ட BPST எனும்) மக்களவைச் செயலகத்தின் ‘பாராளுமன்ற ஆய்வு மற்றும் பயிற்சி அமைப்பின் முதலாவது கவுரவ ஆலோசகராகவும் இருந்து, பல கருத்தரங்குகள், பயிற்சி செயல்திட்டங்கள் மற்றும் பிற செயல்பாடுகளுக்கும்  ஏற்பாடு செய்தார்.  நாடாளுமன்றக் குழுக்கள் பலவற்றில் உறுப்பினராக இருந்து ஆக்கபூர்வமான மாபெரும் பங்களிப்புகளைச் செய்தார்.

        பார்வையாளர்களுக்காக நடித்து நடப்பது, தொலைக்காட்சி போன்றவற்றின் கண்காட்சி  வெளிப்பகட்டு போன்ற காட்சி அரசியல் நடத்துவதை அவர் விமர்சித்தார். (அரசியல் என்பது தேர்ந்தெடுத்த மக்களுக்கு விஸ்வாசமாக, உண்மையாக இருப்பது). வேறுபட்ட பல தரப்பு அரசியல் கருத்தோட்டம் உள்ளவர்களோடு அவருக்கு மிக நல்ல நெருக்கமான உறவு இருந்தது.

பல்வேறு அமைப்புகளில் பங்களிப்பு

        விரிவான பல தளங்களின் அமைப்புகளில் அவர் உறுப்பினராக இருந்தார்; தொல்லியல் துறையின் மத்திய ஆலோசனை போர்டு (1952), கல்விக் குழு, திட்டக்குழு, பண்டித ஜவகர்லால் நேரு நினைவு அறக்கட்டளை, லால்பகதூர் சாஸ்திரி நினைவு அறக்கட்டளை, அனைத்திந்திய விளையாட்டுகள் கவுன்சில் போன்றவை அவற்றில் சில. 

தஞ்சாவூர் பெருவுடையார் எனும் பிரகதீஸ்வரர் கோவிலின் பழங்காலச் சுவரோவியங்கள் (மூலிகை வண்ணங்களைக் கொண்டு வரையப்பட்ட frescosecco panels) பாதுகாப்புக்கு அவரையே வழிகாட்டியாகக் கொண்டிருந்தனர். 

                             

கம்யூனிஸ்ட்களும் காங்கிரஸ்காரர்களும் அக்குழுக்களில் சுலபமாக இணைந்து பணியாற்றினர். “ஹிரேன் பாபு அவர்களுக்கு வாழ்க்கை மற்றும் மனித நாகரீகத்தின் நீடித்த மதிப்பீடுகள் அனைத்து வகையான குறுகிய மனப்பாங்கு வித்தியாசங்களைத் தாண்டி பாரம்பரியமாகக் கடந்து வருவது” என கோபால் (கிருஷ்ண) காந்தி எழுதுகிறார். 

        பாராளுமன்றத்தில் அசாதாரணமான எல்லா வசதிகளும் நிரம்பிய அரிய பெரிய நூலகத்தை ஏற்படுத்த முன்முயற்சி எடுத்த ஒருசிலருள் பேராசிரியர் ஹிரேனும் ஒருவர். அவர் விரிவான பல்துறைகளைச் சார்ந்த நூல்களைப் பெரும் ஆர்வத்தோடு படிப்பவர். நாடாளுமன்றத்தின் தற்போதைய நூலகம் அவருக்குப் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறது.

ஹிரேன் பாபுவின் இதயம்

        சாதாரண மனிதனின் நலமே ஹிரேன் முகர்ஜியின் நெஞ்சிற்கு மிகவும் நெருக்கமானது என்பதை விவரிக்கும் சோமநாத் சாட்டர்ஜி,ஒரு நோக்கத்திற்கான செயல்பாடுகளில் மகாத்மா காந்திஜியுடன் ஒருசிறிதும் குறைவுபடாத வகையில் அவர் பகிர்ந்து கொள்ளும் கருத்து அது” எனக் கூறுகிறார். 

             (அது, மகாத்மா காந்தி தந்த மந்திரத் தாயத்து : “நான் உங்களுக்கெல்லாம் ஓர் மந்திரத் தாயத்து அளிக்கிறேன். முடிவெடுக்கையில் அது சரியா, தவறா என்கிற ஐயப்பாடு எழும்போதோ, அல்லது அகந்தையோ சுயநலமோ தலைதூக்கும்போதோ, இச்சோதனையைப் பயன்படுத்துங்கள். நீங்கள் பார்த்துள்ள, மிக மிக நலிவுற்ற ஏழையின் முகத்தை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் செய்யவிருக்கும் காரியம், அந்தப் பரம ஏழைக்கு எவ்விதத்திலாவது பயன்படுமா? அவன்  அன்றாட வாழ்க்கையையும், வருங்கால வாழ்வையும் வளமாக்க வகைசெய்யுமா? என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். அதன்பின் உங்களது ஐயங்களும் சுயநலமும் கரைந்து மறைந்து போவதைக் காண்பீர்கள்.'' – மகாத்மா காந்திஜி)


       
டாக்டர் கே ஆர் நாராயணன் இந்தியக் குடியரசுத் தலைவரானவுடன் ஹிரேன் பாபுவை அவரது இல்லத்தில் சந்திக்க கல்கத்தா சென்றார்: அதுதான் அந்த நகருக்கு அவரது முதல் விஜயம்.

        ‘பொருத்தமற்ற பல்துறைகளில் ஈடுபட்டவன்’ (a jack of several incompatible trades’) என (நகைச்சுவையாக) ஹிரேன் முகர்ஜி தன்னைப் பற்றி குறிப்பிடுவார். 1948லும் 1949லும் இரண்டு முறை அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

சீனா ஆக்கிரமிப்பு குறித்து:

        சீனா குறித்து அவர், “இந்தியாவைச் சீனா நடத்திய விதத்தில் அது மிகக் கொடுமையான தாக்குதல் என்றும்; மேலும் அதன் மூலம் (சீனா) சோஷலிசத்தின் நிகழ்முறையை மதிப்பிழக்கச் செய்து அதன் புகழைக் குலைக்கிறது’ என்றும் ஐயத்திற்கு இடமின்றி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாகக் கண்டிக்கிறது” என மிகத் தெளிவாகக் கூறினார்.

கட்சி மற்றும் வெகுஜன அமைப்புக்களில்

        ஹிரேன் முகர்ஜி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தேசியக் குழுவின் உறுப்பினராக இருந்தார். 1964 கட்சி பிளவிற்குப் பிறகு நீடித்தாலும், பிளவால் ஆழமாகப் பாதிக்கப்பட்டு பிளவை எதிர்ப்பவராக இருந்தார். (‘ஹிரேன் பாபு சிபிஐ – சிபிஐ(எம்) உறவிற்குப் பாலமாக இருந்தார்’ என மேற்கு வங்க மேனாள் நிதியமைச்சர் அசோக் மித்ரா கூறுகிறார்.) அஞ்சல், காப்பீடு மற்றும் வங்கி ஊழியர்கள் போராட்டத் தொழிற்சங்க இயக்கங்களில் நெருக்கமாக இருந்தார். வங்கத்தின் தொழிற்சங்கக் கவுன்சிலின் துணைத் தலைவராகவும், 1946ல் வங்காளத்தில் ‘மோஷன் பிக்சர்ஸ் (சினிமா) தொழிலாளர்கள் சங்கம்’ அமைக்கப்பட்டதிலிருந்து அதன் தலைவராகவும் இருந்தார். சோவியத் யூனியன் நண்பர்கள் (FSU) அமைப்பு தவிர ‘இந்தியா – சீனா நட்புறவு அஸோசியேஷன்’ நிறுவுவதில் உதவியதுடன் அதில் தீவிரமாக ஈடுபட்டார்.

பேராசிரியர் மறைவு

        (அஞ்சலி என்பவருடன் திருமணம் நடந்து அவர்களுக்குச் சந்தீப் என்றொரு மகன் இருந்தான்; திருமண வாழ்வைவிட தனியே இருப்பது அவருக்குச் சிரமமானதாக இல்லை என ஓர் இணையப் பதிவில் காண முடிந்தது – மொழிபெயர்ப்பாளர் இணைப்பு).  கல்கத்தா பாலிகவுன்ஜ் அவருடைய குடியிருப்பில் கீழே விழுந்து 2004ல் அவர் இடுப்பில் பாதிப்பு ஏற்பட்டது. கல்கத்தா SSKM மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். (பிரிஜிடென்சி பொது மருத்துவமனை பெரும் நன்கொடையாளர் சேத் சுக்லால் கர்னானி நினைவு மருத்துவமனை என 1954ல் பெயரிடப்பட்டது.) ஆனால் மாரடைப்பு காரணமாகப் பேராசிரியர் ஹிரேன் முகர்ஜி 2004 ஜூலை 30ல் மரணமடைந்தார். 

        இந்திய அரசு மிகப் பொருத்தமாக அவரது பிறந்த நூற்றாண்டான 2008லிருந்து “பேராசிரியர் ஹிரேன் முகர்ஜி நினைவு நாடாளுமன்ற சொற்பொழிவு”களை அமைத்தது. அந்நினைவுச் சொற்பொழிவுளைப் பேராசிரியர் அமர்தியா சென் மற்றும் ஜெகதீஷ் பகவதி போன்ற ஆளுமைகள் நிகழ்த்தியுள்ளனர்.

      கோபால கிருஷ்ண காந்தி அவரைக் “கம்யூனிச ரிஷி” எனப் புகழ்ந்தார்.

காந்திஜி குறித்து ஹிரேன் பாபு கூறியது மிகவும் அற்புதமானது. “ஒரு கம்யூனிஸ்ட்டாக இப்படி இருப்பதற்காக வருத்தப்படாத நான், என் வழியில் காந்தியின் பக்தனாக இருந்தேன். ( I have been in my own way a Gandhi devotee, inspite of my unrepentant communism) ‘தி நியூ ஸ்டேட்ஸ்மன் மற்றும் நேஷன்’ (சுமார் 1935ல்) வெளியான, சாகிட்டரியஸ் எழுதிய கவிதையின் சிறிய பகுதியை என் நினைவிலிருந்து உங்களுக்கு நான் வழங்குகிறேன்:

‘டி வலீரா மற்றும் அவனது பச்சை சட்டை (அணி)கள் சுவரில் முட்டி நின்றன             

 ஹிட்லர் பிரவுன் சட்டை படையினரோடு வீழ்ச்சியை நோக்கிப் பயணம்

முஸோலினி  கருஞ்சட்டைப் படையினரோடு அனைத்தையும் தாண்டி மோதிச் சென்றான்        

 மகாத்மா காந்திக்கு, சட்டை இல்லா வெற்று உடம்பு அரையாடை பக்கிரிக்கு,

(உலகம்) வாழ்த்திசைத்துச் செல்கிறது”

(De Valera and his Green Shirts with their back to the wall/ Hitler with his Brown Shirts riding for a fall/ Mussolini with his Black Shirts lording over it all/ Three cheers for Mahatma Gandhi with no shirt at all”’!!)

            உண்மைதான், மாற்ற முடியாத கம்யூனிஸ்ட்டாக இருந்த பேராசிரியர் ஹிரேன் பாபு முகர்ஜி காந்திஜியை ஆராதிப்பவராகவும் திகழ்ந்தார். 

         வாழ்க ஹிரேன் பாபு புகழ்! அவர் படைத்தளித்த எண்ணற்ற நூல்களில் அவரைத் தரிசிப்போம் வாருங்கள்!  ஹிரேன் பாபு ஜிந்தாபாத்!

--தமிழில் : நீலகண்டன்,

  என்எப்டிஇ, கடலூர் 

 

                                                                              

No comments:

Post a Comment