Monday 8 November 2021

திரிபுரா வன்முறை : வெறுப்பு மற்றும் வகுப்புவாதப் பிளவுபடுத்தலின் விளைவு

 

திரிபுரா வன்முறை :

வெறுப்பு மற்றும் வகுப்புவாதப்

பிளவுபடுத்தலின் விளைவு

--பேராசிரியர் ராம் புனியானி

         நிகழ்கால இந்தியச் சமூகம், தனது மதச் சிறுபான்மையினர் மீது அடுத்தடுத்து நடத்தப்படும் வன்முறைகளால் திகைத்து நிற்கிறது. வெளிநாட்டில் பிரதமர் போப் ஆண்டவரைத் தழுவி போஸ் கொடுக்கும்போது, திரும்பினால் அவரது தாய்நாட்டில் கிருஸ்துவர்களுக்கு எதிரான வன்முறை, தீவிரத்தில் குறைவாயினும், பரவலாக அதிகரித்தபடியே உள்ளது. பல இடங்களில் முஸ்லீம் சமுதாயம், அவர்களுக்கு எதிரான வன்முறைகளில், பிரதானமாகப் பாதிக்கப்படுபவர்களாக உள்ளனர். வகுப்புவாத வன்முறையின் சமூக இயக்கவியல் தாக்கத்தின் காரணமாக முஸ்லீம் சமூகம் தொடர்ச்சியாக ஒதுக்கப்படுவது எப்போதும் தீவிரமாக அதிகரித்தபடி உள்ளது.

         அப்படிப் புறக்கணிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட உணர்வோடு ஒரு பகுதியினர், பொருட்படுத்த முக்கியத்துவம் இல்லாத கிரிக்கெட் விளையாட்டில் பாக்கிஸ்தான் வெற்றபோது தாங்கள் ஒதுக்கப்பட்டதன் உணர்வை வெளிப்படுத்துவதாக எண்ணி பட்டாசுகளை வெடித்த சமீபத்திய நிகழ்வும் அதன் தீவிர வெளிப்பாடுதான். நம்நாட்டில் மட்டும் என்பதல்ல எல்லையை ஒட்டியுள்ள ஒரு நாட்டிலும் வகுப்புவாத வெறியாளர்களுக்குப் பஞ்சமில்லை; பாக்கிஸ்தான் அமைச்சர்களில் ஒருவர் அந்தக் கிரிக்கெட் விளையாட்டு  வெற்றியை இஸ்லாத்தின் வெற்றி என முட்டாள்தனமாக அறிவித்துள்ளார்; அதே குட்டையிலிருந்து இன்னொருவர் -- முன்னாள் கிரிக்கெட் வீரரும் இன்றைய பயிற்சியாளருமான வாக்கர் யூனிஸ்  பிதற்றி உள்ளார்: வென்றதும் பாக்கிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஒருவர் மைதானத்தில் ‘இந்து ஆட்டக்காரர்கள் முன்னிலை’யில் நமாஸ் செய்ததைப் பாராட்டியது மற்றொரு மேட்டிமை முட்டாள்தனத்தின் அடைளாளம்! “நீர் பிறக்குமுன் பார்மிசை மூடர் நேர்ந்ததில்லை என நினைந்தீரோ” என பாரதி கேட்பதுபோல முட்டாள்தனத்திற்குத் தேச எல்லைகள் கிடையாது போலிருக்கிறது.

         ஏறத்தாழ இதே காலகட்டத்தில் திரிபுரா மதவாத வன்முறையைச் சந்தித்துள்ளது. வங்கதேசத்தில் துர்க்கா பூசையின்போது நடந்த துரதிருஷ்டவசமான கண்டனத்திற்குரிய வன்முறையைச் சாக்காக வைத்து, திரிபுரா வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. திரிபுரா மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சி நடைபெறுகிறது. இதே திரிபுரா மாநிலத்தில் இடதுசாரி கட்சி சில பத்தாண்டுகள் ஆண்டபோது அம்மாநிலம் ஒரு வன்முறை நிகழ்வைக்கூட பார்த்ததில்லை.

         வங்கதேச வன்முறையைக் கண்டித்து விஸ்வஹிந்து பரிக்க்ஷித், ஆர்எஸ்எஸ் மற்றும் அவற்றோடு இணைந்த இந்து அமைப்புகள் தலைமையில் பேரணிகள் முழுவீச்சில் நடத்திய பிறகு திரிபுரா வன்முறை அரங்கேறியது. இந்தப் பேரணிகளில் எழுப்பப்பட்ட முழக்கங்கள் ‘உண்மையான இந்துகள் அவசியம் ஒன்றுபட வேண்டும், உடனடியாகச் செயல்பட வேண்டும்’ எனக் கோரின. உண்மையான இந்துகளாகிய அவர்களை ‘அரசியல் மற்றும் பிற வேறுபாடுகள் மறந்து’ ஒன்றுபடக் கோரின. இந்தப் பேரணிகள் இந்துகள் ஆபத்தில் உள்ளதாகப் பயஉணர்வைப் பரப்பி பிரச்சனையைத் தூண்டின. எல்லைக்கு அப்பால் உள்ள முஸ்லீம்கள் இந்துகளைத் துன்பப்படுத்த இயலுமானால், எல்லைக்குச் சில கிலோ மீட்டர் உள்ளே வந்து இங்கே உள்ள இந்துகளை அவர்கள் தாக்குவதிலிருந்து அவர்களை எது தடுக்க முடியும்? எனக் கற்பனையாக வினவி பய உணர்வை விதைக்கின்றனர்.

         இந்துகள் தங்களைத் தற்காத்துக் கொள்ள வங்க தேசத்தில் அவர்களுக்கு ஆயுதம் வழங்க வேண்டும் எனப் பேரணியில் முழங்கினர். பேரணிகளும் அதைத் தொடர்ந்து வன்முறைகளும் நிகழ்ந்தபோது மாநில அரசு நடவடிக்கை எடுப்பதாக நடித்தது; ஆனால் வன்முறைகள் தொடர அனுமதிக்கப்பட்டன; மசூதிகள் எரிப்பு, முஸ்லீம்கள் உடைமைகளைச் சேதப்படுத்தித் தாக்குவது கட்டுப்படுத்தப்படாது தொடர்ந்து நடந்தன. இதன் விளைவாய் சுமார் 20 வெறுப்பு சார்ந்த குற்றங்கள், சுமார் 15 மசூதிகள் மீது தாக்குதல் மற்றும் 3 மசூதிகளை முற்றுமாய் அழித்தது அரங்கேறின. வன்முறையைக் கட்டுப்படுத்த எல்லா நடவடிக்கைகளும் எடுத்தப்பட்டதாகக் மாநிலக் காவல் துறை சொல்லிக் கொண்டபோதே இவை அனைத்துமே நடந்தன. இந்த இடத்தில் முன்னாள் ஐபிஎஸ் மாநில உயர் காவல் அதிகாரியும் எழுத்தாளருமான டாக்டர் வீபூதி நரேன் ராய் கூறியதை நாம் நினைவுபடுத்திக் கொள்ளலாம்: அவரது கருத்து, ‘எந்த வகுப்புவாத வன்முறையும், அரசின் மறைமுக ஆதரவும் ஒப்புதலும் இல்லாமல், 48 மணி நேரத்திற்கு மேல் தொடர முடியாது.

         வதந்திகள் எப்படி மக்களைத் தூண்டுவதில் பங்காற்றுகின்றன என நாம் நன்கு அறிவோம். ‘கிசுகிசு பேச்சுகள் மூலம் வெறுப்பைப் பரப்பு’வதில் தற்போது சக்திமிக்க ஆயுதமாகச் சமூக ஊடகங்கள் இணைந்து கொண்டு, ’பிற வகுப்பைச் சார்ந்தவர் மீது வெறுப்பை’ தூண்டுகின்றன. இங்கே வெறுப்பைத் தூண்டும் முக்கியத் திறவுகோல், ‘சிறுபான்மையினரின் அதீத செயல்களால் பெரும்பான்மைச் சமூகம் பலியாகிறது’ என எடுத்துக் காட்டுவதில் உள்ளது. சமூக ஊடகத்தின் மீதான பிடிப்பு வலுவாக இருக்கும்போது, இந்தப் பிரச்சாரத் தந்திரம் வெற்றி பெறுகிறது. 24 மணி நேரமும் சூழலும் இச்சமூக ஊடகத்தின் பற்சக்கரங்களின் தீய பிடியிலிருந்து தப்புவது அத்தனை எளிதல்ல.

         அரசியல் விளையாட்டுகளை நோக்கமாகக் கொண்டவர்கள், தங்களுக்கான தகவல் தொழில் நுட்பப் பிரிவைப் (ஐடி செல்) பயன்படுத்தி சமூக ஊடகத்தைத் திறம்படக் கையாள்கிறார்கள். உண்மைபோல பொய்யையும் அரைகுறை உண்மைகளையும் வதந்திகளாகப் பரப்புகிறார்கள். சமூகத்தின் எளிய பிரிவினரிடையே உணச்ச்சியைத் தூண்டும் இவை, அவர்களை வன்முறையின் காலாட்படை வீரர்களாக (அடியாட்களாக) மாற்றி விடுகின்றன. வதந்தி வன்முறையாகத் தூல வடிவம் எடுக்கிறது. வெறுப்பு மேலிடும் பிற நிகழ்வுகளை அறிவது மிகவும் கடினமான ஒன்றல்ல; ஏனெனில் சமூகச் சிந்தனைப் போக்கில், “முஸ்லீம்கள்– கிருஸ்துவர்கள் மீது வெறுப்பு கொள்வது”  புதிய இயல்பான ஒன்றாக ஆக்கப்பட்டுவிட்டது. குஜராத் அகமதாபாத்தின் (இந்தியாவின் பால் உற்பத்தி தலைநகர் எனப் புகழ்பெற்ற) ஆனந்த் நகரில் ஒரு ஹோட்டலுக்கு முன்பிருந்த சாலை கழுவிவிடப் பட்டது, காரணம் அந்த ஹோட்டலின் பங்குதாரர்களில் ஒருவர் முஸ்லீமாம். வெறுப்பு வெவ்வேறு வடிவங்கள் எடுக்கிறது.

         அதிர்ச்சி அடையச் செய்யும் முந்தைய பெரும் வன்முறைகள், அவை 92 – 93மும்பையில் நடந்தது, குஜராத் 2002, கந்தமாலில் 2008 மற்றும் முஸாஃபர் நகர் 2013ல் நடந்தது போன்ற வன்முறைகள் பெரிய அளவில் திட்டமிடப்பட்டவையாகும். 2020 டெல்லி வன்முறை தவிர்த்து, 2014லிருந்து பெருமளவிலான வன்முறைச் சம்பவங்கள் இல்லை. டெல்லி வன்முறை, ஷாகின் பாக் இயக்கத்திற்காக அந்தச் சமூகத்திற்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்று திட்டமிட்டு நடத்தப்பட்டது. (2019 டிசம்பர் 14 முதல் 2020 மார்ச் 24 வரை) டெல்லியில் பெண்கள் நடத்திய ஷாகின் பாக் இயக்கம் சுதந்திர இந்தியாவில் நடந்த அமைதியான பிரம்மாண்ட ஜனநாயக இயக்கமாகும். 2014லிருந்து பெரும் வன்முறைகள் நிகழ்வதற்கான தேவை எழவில்லை. ஏனெனில் அதற்கு முன்பு நடந்தப்பட்ட பெரும் வன்முறை நடவடிக்கைகள் மூலம் மக்கள் மதவாத ரீதியில் துருவங்களாகப் பிளவுபடுத்தப்பட்டு, பெரும்பான்மை சமூகத்தினர் மதவாத சக்திகளிடம் ஒரு குழுவாக ஒன்று சேர்ந்துவிட, சிறுபான்மையினர் தனித்த முகாம் குடியிருப்புகளாக (ghettoes) புறநகர் சேரிகளில் தூக்கி எறியப்பட்டு விட்டனர். (இந்தப் பிளவுபடுத்தலால் டெல்லி வன்முறையின்போது முஸ்லீம் குடியிருப்புப் பகுதியில் வெறியாட்டம் நடத்துவது மதவெறியர்களுக்குச் சுலபமாகிப் போனது.)

         அரசு, வகுப்புவாதச் சக்திகளால் ஆளப்பட்டாலும் அல்லது (நிர்வாகம், காவல்துறை போன்ற அரசின் அங்கங்களில் ஊடுருவதன் மூலம்) செல்வாக்குச் செலுத்தினாலும் வகுப்புவாத வன்முறைகளின்போது அரசு அப்பாவிகள் கொல்லப்படுவதைத் தடுத்து நிறுத்த முறையான நடவடிக்கைகள் எடுக்காமல் அமைதியாக இருந்து பார்த்திருக்கும். அதற்கான காரணங்களில் ஒன்று, ஆளும் தரப்பு சிறுபான்மையினர் வாக்குகளை அதிகமாகச் சார்ந்து இருப்பதில்லை என்பதே; சிறுபான்மையினர் விலகிச் சென்றாலும் கவலையில்லை; பிளவுபடுத்தல் உத்தியால் பெரும்பான்மை வகுப்பினர்தாம் தங்களின் கற்பனையான மீட்பர்களாக அவர்களை ஆதரிக்கத் தொடங்கிவிட்டார்களே. அவர்கள் சிறுபான்மையினர் விலகியதால் ஏற்படக்கூடிய வாக்குகள் பற்றாக்குறையை ஆகக் கூடுதலாகச் சரிசெய்துவிடுவார்கள் என்ற தேர்தல் கணக்கு.

         இந்திய வகுப்புவாத வன்முறை குறித்து பெரும் அறிவார்ந்த ஆய்வுப் படைப்புகள் உள்ளன. (சர்வதேசப் புகழ்பெற்ற இந்தியச் சீர்திருத்த எழுத்தாளரும் சமூகச் செயற்பாட்டாளருமான) டாக்டர் ஆஸ்கார் அலி என்ஜினியர் மதவாத வன்முறைக்கும் சமயத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை எடுத்துக் காட்டுவதுடன் (மதவாத சக்திகளின்) அரசியல் விளையாட்டிற்கு மதம் ஒரு திரையாக, முகமூடியாகப் பயன்படுத்தப்படுகிறது என வலியுறுத்துகிறார்.  

         (வாஷிங்டன் பல்கலைக் கழக அரசியல் விஞ்ஞானம் மற்றும் சர்வதேச உறவுகள் துறை சிறப்புப் பேராசிரியரான) பால் ரிச்சர்டு பிராஸ் (Paul Richard Brass), ‘மதவாத வன்முறைகளில் “கலகத்தைத் தூண்டும் முறை நிறுவனப்படுத்தப்பட்டதா”க மிகப் பரவலாகக் காணப்படுகிறது; தேர்தல்களுக்கு முன்பு தேர்தல் ஆதாயத்திற்காக அது தீவிரமாகச் செயல்படுத்தப்படுகிறது’ எனக் கூறுகிறார்.

         (யேல் பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானத் துறை) பேராசிரியர் ஸ்டீவன் ஐ வில்கின்சன் அரசு நிர்வாக நடைமுறைகளின்படி வன்முறைகளைக் கட்டுப்படுத்த அரசு ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை என்ற புதிருக்கு விடையளிக்கிறார். இந்திய வன்முறைகளை ஆராய்ந்த ஆய்வுகளின் முடிவாக அவர் கூறுகிறார்: ‘வன்முறையில் பாதிக்கப்படுவோர் ஆளும் கட்சியின் தேர்தல் அடித்தளமாக இருப்பதில்லை; ஆளும் கட்சியின் வெற்றி அவர்களை நம்பி, அவர்களைச் சார்ந்து இருப்பதில்லை’ எனத் தெளிவாகச் சுட்டிக் காட்டுகிறார்.

         மதவாத வன்முறை தொடர்ச்சியாக வடிவங்களை மாற்றிக் கொள்கிறது; அதன் நிகழ்ச்சி நிரல் இலக்கும் செயலூக்கத்துடன் தொடர்ந்து மாறுகிறது. மதவாதமயமாதல் ஆழமாக இப்பகுதிகளில், முன்பு அசாமிலும் தற்போது திரிபுராவிலும், ஊடுருவியதைக் கண்டோம். தனது ஆட்சியின்போது மிகப் பெரிய மதவாதக் கலகங்கள் நடைபெறவில்லை என ஆளும் கட்சி பெருமை பேசலாம்; ஆனால் உண்மையான காரணம் சமூகத்தை மத உணர்வின்படி (இனியும்) பிளவுபடுத்துவதற்கான தேவை எழவில்லை என்பதே: பிளவுபடுத்தும் அந்த இலக்கைத்தான் மிகப்பெரும் அளவில் ஏற்கனவே சாதித்தாகி விட்டதே. (தண்ணீர் எதிர்பார்த்த அளவு நன்கு கொதித்த பிறகு யாராவது மேலும் விறகை எரிப்பார்களா? – விறகு இப்போது எரிவில்லை பார் என மார்தட்டலாம் –மொழிபெயர்ப்பாளர் இணைத்தது)

       மதவாதமயமாக்கல் நிகழ்முறையில் தற்போது மதவாத வன்முறைக்கான தேவை,  பராமரிப்பதற்குத் தரப்படும் மருந்து டோஸ் அளவு போலத்தான். வன்முறை நடவடிக்கைகளுக்குப் பிறகு சமூகத்தில், மக்களிடையே (மத நம்பிக்கைகளுக்கு ஏற்ப) புதிய உறவுச் சமன்பாடுகள் உருவாவதை நாம்கூடப் பார்க்கலாம். தனித்த முகாம் குடியிருப்புகளுக்கு விரட்டியடிக்கப்பட்ட சிறுபான்மையினர் தங்களது தாழ்வுநிலையை ஏற்கவும், சமூகத்தில்  இரண்டாம் தர அந்தஸ்து இழிவை (வேறுவழியின்றி) ஏற்கவும் முன்வருகிறார்கள். (குடிமைச் சமூகத்தில் இது ஏற்க முடியாதது. ‘எல்லாரும் ஓர் குலம், எல்லாரும் ஓர் இனம், எல்லாரும் இந்திய மக்கள்; எல்லாரும் ஓர் நிறை, எல்லாரும் ஓர் விலை – எல்லாரும் இந்நாட்டு மன்னர்’ என்பது நமது விடுதலைக் கனவு).

         இச்சூழ்நிலைகளின் பின்னணியில்தான் சில உதிரிகள், தாங்கள் சோர்வடைந்து மனம் புழுங்கி உயிர்வாழும் சமூகத்தில் தங்கள் மனக்குறையை வெளிப்படுத்துவதாக எண்ணி பட்டாசுகளை வெடித்துள்ளனர். அவர்கள் வெடி வெடித்தது தேச விரோதச் செயல்களில் ஒன்று என முத்திரை குத்துவது, சமூக நிகழ்வுகளை மிகவும் மேம்போக்கான வழியில் பார்ப்பதாகும்; இது ஏற்கனவே மதவாத வன்முறைகளால் பாதிக்கப்பட்ட சமூகத்தினரின் உணர்வுகளைச்  சரிசெய்ய மருந்திடுவதற்கு மாறாக சமூகப் பிளவை மேலும் மோசமாக்கும்.   

           

நன்றி : Communalism Watch இணையதளம்

ஆங்கிலக் கட்டுரைப் பார்க்க https://communalism.blogspot.com

தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

 

                                                                                                                                                                                                                                                                                     

No comments:

Post a Comment